Monday, October 1, 2012

ரகசியத் தோட்டம்




உன் மென்மை வேண்டி
மலர்களும் மருகும்

உன் பார்வை தீண்டி
பரிதியும் உருகும்

காற்றில் மறைந்த விரல்களால்
தலைகோதுகின்றாய் புற்களை

அழகின் மின்னல்கள் பாய்ச்சி
அதிரச் செய்கிறாய் கற்களை

வலை வீசும் கடல்
உன் கண்

உன் மூச்சில்
பூவனம் ஆகிறது மண்

ஒவ்வொரு அணுவும்
உன் புகழ் சொல்லும்

உன் பித்தில் சுழன்றபடி
உன்னிடமே செல்லும்

அனைத்துமே உன்னுடைய சாயை
இருப்பினும் அத்தனையும் மாயை

இருளொளி விளையாட்டுக்களில்
உன் மீது ஆனேன் பித்தம்

கண்ணிரண்டில் இனி கசிவது
நீரல்ல, நிறமற்ற ரத்தம்

ஒருகணம் காதலில் வசமானது
பொய் போலத் தோன்றினும் நிசமானது

ஐம்புலன் உன்னில் அகப்பட்டது
அப்போது என்னுயிர் சுகப்பட்டது

உனக்காக உடைந்தது என் உள்ளம்
உடைந்த பின்பே ஆனது உன் இல்லம்

என் எல்லாக் கவிதைக்கும்
நீயே தலைப்பு

என் பேச்சின் உள்ளுறை
உனக்கான அழைப்பு


குறிப்பு: உன் மூச்சில் பூவனம் ஆகிறது மண்” என்பது முதல் மனிதர் அதம் (அலை) அவர்களின் உடலைக் களிமண்ணால் செய்த பின் அதில் இறைவன் தன் ஜீவனிலிருந்து ஊதி உயிர் கொடுத்ததைக் குறிக்கும். “ஸ ஃபைஸஷ் ஃகாக்கெ ஆதம் ரோஷன் கஷ்த்” (அவனின் அருட்கொடையால் ஆதமின் மண் பூவனமாய் மாறியது) என்று சூஃபி ஞானி மஹ்மூத் ஷபிஸ்தரி அவர்கள் ”குல்ஷனெ ராஸ்” (ரகசியத் தோட்டம்) என்னும் காவியத்தில் பாடியுள்ளார். அதன் மொழிபெயர்ப்பே இவ்வரி எனலாம். அவரின் காவியத் தலைப்பையே இக்கவிதைக்குச் சூட்டியுள்ளேன். 

a

No comments:

Post a Comment