Friday, October 19, 2012

தீண்டும் இன்பம்



தோண்டும் தோறும் நீர் ஊறும் மணற் கேணி போல் மீண்டும் மீண்டும் கேட்கும்போதும் புதிதாய் ஏதேனும் தரிசனம் தருவதே நல்ல இசை.

‘நவில் தோறும் நூல் நயம்’ என்பது நூலுக்கு மட்டுமான இலக்கணம் அன்று. எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்.


பாரதியின் ’காக்கைச் சிறகினிலே’ என்ற பாடலுக்குப் பல மெட்டுக்களில் இசை வடிவம் உண்டு. அவற்றுள் எல்.வைத்தியநாதன் இட்ட மெட்டு மட்டுமே என் மனதைக் கவர்ந்து நின்றது. (’ஏழாவது மனிதன்’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்)

உருவில் அது சிறிய பாடல்தான் என்றாலும் கருத்தில் பெரிய பாடல்.

“பெரிதினும் பெரிது கேள்” என்பான் பாரதி. அது எது என்பது அவரவர் அறிவும் அளாவி அடையுமாறு அனுமானத்திற்கு விடப்பட்ட ரகசியம். அதற்கான விடை இந்தப் பாடலில் இருக்கிறது என்றுதான் என் உள்ளம் எனக்கு உரைக்கிறது.

வலிக்காமல் செதுக்கியது போல் காட்சி தரும் அந்தக் கச்சிதக் கவிதை:
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் மொழிகளெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

குயில் பாட்டு தந்தவன் இப்பாடலைக் காக்கையைக் குறிப்பிட்டுத் தொடங்குகிறான்.

மரங்கள், முற்றம், புழக்கடை, மாடி என எவ்விடத்தும் தென்படும் எளிய பறவை அது. “எத்தித் திருடும் அந்தக் காக்காய்” என்று பாரதியே வேறொரு இடத்தில் எள்ளிய பறவை அது!

அவ்வாறு நகை ஆடிய அந்த வரிக்கும் அடுத்த வரியிலேயே உணர்வின் மாற்றத்தைப் பாருங்கள்: “அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா”


காக்கை எத்தி எத்தி எத்தைத் திருடும்? அதற்கான விடையாகச் சொல்லி வைத்தார்கள் ஒரு பாலர் கதையில், வடை என்று!

வாய்க்கு உணவு வாய்க்காத சூழலில் வயிற்றில் எழும் பசிதான் கன்னம் வைக்கும் எண்ணம் தோன்றுவதற்குத் தோற்றுவாய்!

“எத்தித் திருடும் அந்தக் காக்காய் – அதற்கு
  இரக்கப் படவேணும் பாப்பா”

ஏனெனில், பறவைகளில் காக்கை ஏழை வர்க்கம். எனவே இல்லாதவன் பசிக் கொடுமையால் திருடினால் அவன்மேல் காட்டத்தான் வேண்டும் இரக்கம்!

காக்கை மீது இரக்கம் காட்டச் சொன்ன அவனே இன்னொரு இடத்தில் இப்படிப் பாடுகிறான்: “காக்கை குருவி எங்கள் ஜாதி”

இரக்கம் சுரக்கும் இதயத்தில் அல்லவோ இறைஞானம் பிறக்கும்? அந்த ஞானத்தில்தான் இப்பாடலை ஆரம்பம் செய்கிறான்:
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா”

பொதுக் கருத்தில் காக்கை என்பது அழகற்ற பறவை ஆகலாம். ஆனால் அகப் பார்வைக்கு அதுவும் ஆண்டவனின் அழகைக் காட்டும் ஓர் ஆடி ஆகிறது. ஏகத்தில் நிலைக்கும் பிரபஞ்ச ஆகத்தில் கரிய காகமும் ஒரு பாகம் அல்லவா?


“கங்கை நதியில் நீ காணும் தெய்விகத்தைச் சாக்கடை நீரிலும் நீ காணும் நிலை சாத்தியம் ஆகாத வரை ஞானம் சித்திக்காது” – விவேகானந்தருக்கு இப்படி அருளுரை வழங்கினார், பரத்தையின் வடிவிலும் பரம்பொருளையே பார்த்த பரமஹம்சர் என்னும் ஆன்மிக அன்னம்.

நீர் நீக்கிப் பால் பருகும் அன்னம் என்பர். அந்த அன்னம் அன்ன இறை அன்பர், படைப்பின் குறை பாராது படைத்தவனின் நிறை நோக்குவர்.

’நின்றன் கரிய நிறம்’ என்று சொல்லப்பட்டதில் ஆழ்ந்திருக்கும் பொருள் ஒன்று உண்டு. கறுமை என்பது இருள். கருமை என்பது புதிர். படைப்புக்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் இருந்த நிலை அது. அந்த ஆதி நிலையைத்தான் காக்கைச் சிறகின் கரிய நிறம் தனக்கு நினைவூட்டுவதாக பாரதி பகர்கிறான்.

பாரதியின் பார்வை அடுத்து மரங்களின் மீது அளாவுகிறது. முன்னினும் விசாலமான பார்வை என்பது குறிப்பு.
“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா”


பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்.

கரிய நிறம் என்பது ’நிற்குணம்’ என்னும் நிலையையும் பச்சை நிறம் என்பது ’சற்குணம்’ என்னும் நிலையையும் குறிக்கின்றன.

அடுத்து அவனின் கவனம் இன்னும் நுட்பமான ஒன்றை நோக்கி நகர்கிறது. கண்ணிலிருந்து காதுக்கு. காட்சியில் இருந்து ஓசைக்கு.
“கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா”

ஓசையைக் கேட்பார் பலருண்டு. கீதம் கேட்பார் சிலரே.

ரசனை இல்லை எனில் இசையும் வெறும் ஓசை அன்றி வேறல்ல.

ஓசை என்பது மண் போல். பானை மண்ணால் ஆகிறது. மண் இன்றிப் பானை இல்லை. எனினும் பானை வெறும் மண் அல்ல.

அதுபோல், இசை ஓசையால் ஆகிறது. ஓசை இன்றி இசை இல்லை. எனினும் இசை வெறும் ஓசை அல்ல.


செவி ஓசை கேட்கும். இசை கேட்க இதயம் செவியில் ஒன்றும் செவ்வி வேண்டும். ”சிலரதன் செவ்வி தலைப்படுவார்” என்று வள்ளுவன் வாய்மொழிந்த காமம் போன்றதே நல்ல இசையும். அது விஷமாவதும் அமிர்தமாவதும் அவரவர் நிலைப்படி.

ஆன்ம கீதம் என்பது அதனினும் நுட்பமானது. அதற்கு உட்செவி திறக்க வேண்டும். அகப்பார்வை என்பதும் அகக்கேள்வி என்பதும் வேறு வேறு அல்ல. அவை ஒன்றின் பெயர்களே.

”காதால் காணவும்
கண்ணால் கேட்கவும்
கற்றுத் தந்தது
காதல்”
என்கிறான் லெபனான் தந்த கவிஞன் கலீல் ஜிப்ரான்.

முன்னினும் நுட்பமான இந்தத் தளத்தில் ஒரு மாற்றத்தை அடையாளம் காட்டுகிறான் பாரதி. இறைவனுக்குத் தொண்டனாய் மட்டும் இருந்தவன் இங்கே நேசனாக உயர்ந்திருக்கிறான். அதனால்தான் முன்பு ‘தோன்றுது ஐயே’ (எஜமானே) என்று பாடியவன் இங்கே தோன்றுதடா என்று பாடுகிறான். இது நெருக்கத்தின் அடையாளம் என்பதைக் காதலர் அறிவர்.

இறையடிமை என்பது பொதுநிலை.
இறைநேசம் என்பது சிறப்பு நிலை.

அடுத்த அடி ஆன்மிகத்தின் உச்சத்தை உரைக்கிறது.
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

’நின்றன்’ என்று முன்னம் சொன்ன நிலை இங்கே ’நின்னை’ என்று மாறிவிட்டதை ஓர்க.

’கண்டு கொண்டேன்’ என்னும் நிலை காதலின் ஆரம்பம் எனில் ’கட்டிக் கொண்டேன்’ என்னும் நிலை அதன் முற்றாத முடிவல்லவா?

ஒளியாய்ப் பிறங்கும் ஒன்றைத் திரையிலாது தீண்டும் இன்பம் தரும் அந்தத் தீ எந்தத் தீ? அது கடவுள் மீது கட்டற்றுப் பெருகும் காதல்!


“நண்பனைப் பின்பற்று
காதலின் கட்டளையை நிறைவேற்று
உன் வலையில்
இறைவனைப் பிடிப்பவனாவாய்”
என்று பாடுகிறார் அல்லாமா இக்பால்.

அந்த வலை எந்த வலை என்று அறியார்க்கு அடையாளம் காட்டுகிறது நாயன்மாரின் நாவில் பூத்த தமிழ்: “அன்பெனும் வலையில் படுவோன் காண்க”

ஆண்டவனே நமக்கு அகப்படுவதினும் நாம் சுகப்படுவதற்குச் சிறந்த வழி வேறுண்டோ? அந்த அனுபவத்தில் தன் பாடலை முடிக்கிறான் பாரதி.

எல்.வைத்தியநாதன் இந்த வரியின் தனிச்சிறப்பை நன்றாக உணர்ந்திருக்கிறார். முன்னைய மூன்று வரிகளுக்கும் கீழ்ஸ்தாயியில் மெட்டமைத்தவர் இந்த இறுதி அடிக்கு மட்டும் மேல்ஸ்தாயியில் இசை அமைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, முன்னைய மூன்று அடிகளிலும் நந்தலாலா என்னும் சொல் பாரதி எழுதியிருப்பது போன்றே ஒருமுறை மட்டும் உச்சரிக்கப்பட, இவ்வடியில் மட்டும் அது மூன்று முறை – முடிவின்மையைக் காட்ட முப்புள்ளிகள் வைத்தது போல் – உச்சரிக்கப் படுகின்றன.

உச்சரிப்பு வேறுபாடு வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல, உச்சரிக்கும் முறையிலும் தொனிக்கின்றது. கலவிக் கணத்தில் தன் கர்வம் அழியும் ஒருவன் இணையாளின் பெயரை உச்சரிப்பது போல் உள்ளது.

மனிதக் காதலின் தீண்டும் இன்பம் புனிதக் காதலின் சாயை அன்றோ?

விட்டில் ஒன்று விளக்கில் வீழ்ந்து உயிர் விடும் கணத்தில் தன் சக விட்டில்களுக்கு அதனை விளக்க எத்தனித்து ஏதோ முனுமுனுத்து விட்டு மரித்ததாம். இறையனுபவம் பெற்றவர்கள் அதனை விளக்க முற்படுவது இவ்வாறே ஆகிறது என்று சொல்வார் சூஃபி ஞானி அத்தார்.

இப்பாடலின் முடிவில் ’நந்தலாலா’ என்னும் பெயர் விளக்கினுள் புகுந்து வந்த விட்டிலின் முனுமுனுப்பாய் ஒலிக்கிறது.

6 comments:

  1. //கரிய நிறம் என்பது ’நிர்குணம்’ என்னும் நிலையையும் பச்சை நிறம் என்பது ’சற்குணம்’ என்னும் நிலையையும் குறிக்கின்றன.//

    //இறையடிமை என்பது பொதுநிலை.
    இறைநேசம் என்பது சிறப்பு நிலை.//

    // அடுத்த அடி ஆன்மிகத்தின் உச்சத்தை உரைக்கிறது.
    “தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
    தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”//

    //விட்டில் ஒன்று விளக்கில் வீழ்ந்து உயிர் விடும் கணத்தில் தன் சக விட்டில்களுக்கு அதனை விளக்க எத்தனித்து ஏதோ முனுமுனுத்து விட்டு மரித்ததாம். இறையனுபவம் பெற்றவர்கள் அதனை விளக்க முற்படுவது இவ்வாறே ஆகிறது என்று சொல்வார் சூஃபி ஞானி அத்தார்.//

    மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கிறேன் இந்த பதிவை. பாரதி,ராமகிருஷ்ணர்,கலீல் ஜிப்ரான்,ஸூபி ஞானி-புள்ளிகள் இணைந்து எளிய இனிய வரிகளோடு சுய அனுபவத்தின் தாக்கத்துடன் அருமையான கோலமாய் வந்திருக்கிறது.




    ReplyDelete
  2. அப்படி ஒன்றும் ஆழமான ஆன்மீக கருத்துக்கள் இந்த பாடலில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை....இது ஒரு எளிமையான, சுவையான கண்ணன் பாடல் அவ்வளவே என்று கருதுகிறேன்.... உருவகப்படுத்தபட்டிருக்கும் கண்ணனின் நிறம் கருமை கலந்த பசுமை .......அந்த கருமை (நிர்குணம்) மற்றும் பச்சை (சற்குணம்) கரிய காகத்தையும், பசுமை நிற மரங்களையும் பார்க்கும் போது கண்ணன் பக்தனாகிய பாரதிக்கு வருவதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை ...கண்ணன் இசையில் வல்லவனாக சித்திகரிக்கப்பட்டிருப்பதால் கேட்க்கும் மொழியில் எல்லாம் உந்தன் கீதம் என்கிறார் அம்புட்டுதேன் .....கண்ணன் மீது காதல் வயப்பட்ட நிலையில் தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் என்று சொல்வதும் காதல் வயப்பட்ட நிலையில் எல்லா ரோமியோக்களும் சொல்வதுதான் .......ஒரு புலவன் + கண்ணன் பக்தனாகிய பாரதியின் இந்த எளிமையான ஒரு கண்ணன் பாடலுக்கு இத்தனை பெரிய ஆன்மீக விளக்கம் கொடுத்திருக்கும் Rameez Bilali யை பாராட்ட முடிகிறதே தவிர இந்த பாடலை பாடிய பாரதியை ஏனோ ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவோ அல்லது மெய்ஞானியாகவோ பாவிக்க முடியவில்லை .....ஒரு சிறந்த கண்ணன் பக்தனாக மட்டுமே உணர முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. அருமை. சரியான விளக்கம்

      Delete
  3. உங்க கால் எங்க பாஸ்? சான்ஸே இல்ல.

    ReplyDelete
  4. நந்தலாலா பொருள் என்ன?

    ReplyDelete
  5. நந்தலாலா பொருள் என்ன?

    Reply

    ReplyDelete