பால்ய
பருவத்தில்
கற்பனித்ததுண்டு
அணில்கள்
விளையாடும்
தென்னை
மரத் தலையில்
என் வீடு
எறும்பின்
கூட்டிற்குள்
என் வீடு
இருப்பதாய்
எண்ணிச்
சிலிர்த்தேன்
கோழிகள்
அடைகாக்கும்
கொடாப்பின்
மாய இருள்
உள்ளத்தை
அடைகாத்து
உயிர்த்தேன்
கரையான்
புற்றெனும்
காலனியில்
பாதாளப்
பிரிவின்
பத்தாம்
அடுக்கில்
வாடகை
கொடுத்து
வசித்திருந்தேன்
மேகத்
திரள்கள்
மலை அடுக்குகளாய்
மாற
உச்சியில்
குடில் கொண்டு
ரசித்திருக்கின்றேன்
கானக
மரமொன்றில்
கதவு
வைத்த
கார்டூன்
வீடுகளே
பிரதிபலித்தன
என்
கனவு
இல்லத்தை
வீட்டில்
ஒரு நூலகம்
வைத்த
நாட்களில்
ஒவ்வொரு
நூலும்
என் வீடாய்
இருந்தது
என் வீடு
என்னும்
எண்ணத்திலும்
இருந்ததில்லை
எனது
என்னும் த்வனி
அப்படியாய்
அது
பிரபஞ்சத்தினும்
சிறிதாகாமல்
இருந்தது
நதிக்கரையில்
கிடக்கும்
கல் வீடு
மழைக்காலம்
வளர்க்கும்
புல்
வீடு
விளக்கிட்டது
போன்ற
பூ வீடு
நிலா
என்னும்
பால்
வீடு – என்
நெஞ்சுக்கு
வாய்த்த
மேல்
வீடு
நாளும்
புதுப்புது
பிரதேசங்கள்
நடத்தியிருந்தேன்
கிரகப்
பிரவேசங்கள்
இப்படியாய்
எப்பொருளும்
இறையில்லமாய்
இருந்தன
எனக்கு
முத்தும்
பவழமும்
முற்றிழைத்த
சொத்து
வீடுகள் எனும்
சொர்க்கத்து
வருணனைகள்
ஈர்த்ததில்லை
என்
இதயத்தை
ஒருபோதும்
அப்போது
தொட்டே
அறிந்ததில்லை
மனிதர்கள்
வீடு கட்டும்
கதைகளையும் நான்
a
No comments:
Post a Comment