Saturday, October 20, 2012

எருமை தியானம்




”எருமைமாடு”

பெயர்ச்சொல் மட்டுமல்ல. நம் புழக்கத்தில் இது ஒரு வசைச்சொல்.

யாரேனும் உங்களை இச்சொல்லால் அர்ச்சனை செய்ய நீங்கள் மகிழ்ச்சி அடைந்ததுண்டா?

எருமை மாட்டின் மேல் மழை பேஞ்சாப்ல’ என்று ஒரு சொலவடை உண்டு. சுரணை இல்லாதவன் என்று சுட்டிக் காட்டவாம். ஏனெனில் பெய்யெனப் பெய்யும் மழையில் சுகமாக நனைந்தபடி எந்தப் பதற்றமும் இல்லாமல் எருமை நடந்து செல்கிறதாம்.
எறுமைகளுக்குச் சுரணை இல்லை என்பது மனிதனின் கணக்கு. அது தப்புக் கணக்கு என்றே தோன்றுகிறது.

தன்னை வைத்தே எல்லாவற்றையும் எடை போட்டுப் பார்ப்பது மனிதனின் இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அதுதான் மனிதனுக்கு இலகுவாக இருக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை கொண்டு ’உண்மை’யை அடைவது சாத்தியம் இல்லை.

மனிதன் தன்னை மையப்படுத்தியே சிந்திப்பது போல் எருமையும் அதன் கோணத்தில் இருந்து எண்ணக்கூடும் அல்லவா?

அதாவது, மனிதனுக்கு ரசனையே இல்லை என்று! சுரணை கெட்டது என்று நாம் நினைக்கும் எருமை நம்மைப் பற்றி ’மனிதன் ரசனை கெட்டவன்’ என்றொரு அபிப்பிராயம் வைத்திருக்கக் கூடும்!

எப்பக்கம் நியாயம் உள்ளது என்பது உங்களின் மனநிலையைப் பொருத்து மாறும். எருமையின் கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தபோது அதன் பார்வையும் சரிதான் என்றே படுகிறது!

”மழைத்துளிகள் தம்மைப் படைத்த இறைவனிடம் இருந்து புதிதாய் வருகின்றன” – தூரலுக்கு முகத்தைத் தூக்கிக் காட்டியபடி நபிகள் நாயகம் நவின்ற வாக்கில் மழை ரசனையின் மணம் வீசுகிறது!


மழையில் நனைதல் என்பது மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மழலைக்கும் மனத்தில் இயல்பாய் மலரும் ரசனை. பூப்பிளந்து பூமிக்கு வரும் குழவியும் மழைத்துளி போல் இறைவனிடமிருந்து புதிதாய் வரும் கொடைதானே?

ஆனால் பிள்ளைப் பருவம் மெல்லத் தேயும்போது மழையை ரசிக்கும் பார்வையும் மழுங்கிப் போய்விடுவது ஏன்?

மழை இறைவனின் அருட்கொடை. அதில் நனைந்து ஆனந்தம் அடைவது பக்தியின் அடையாளம் அல்லவா? மனிதனோ நனைவதை விட்டும் தப்பித்து ஓடுகிறான். ஆனால் எருமைகள் அந்த பக்திச் சுவையில் திளைக்கின்றன!

’மனிதன் அவசரக் காரனாகப் படைக்கப் பட்டிருக்கிறான்” (21:37) என்று சான்று வழங்குகிறது திருக்குர்ஆன்.

”நிதானம் என்பது இறைவனிடம் இருந்து வருகிறது; அவசரம் என்பது சாத்தானிடம் இருந்து வருகிறது” என்பது நபிமொழி.

அந்த அவசரம் மனிதனிடம் கூடிக்கொண்டே போகிறது. நிதானம் எருமைகளிடம் உள்ளது! சொல்லுங்கள், இறைவனின் அருளை அடைந்து கொண்டது யார்?

எருமை எமனின் வாகனம் என்பது இந்து ஞான மரபில் ஒரு குறியீடு. ஏனெனில் மரணம் என்பது மெல்ல மெல்ல வந்து சேர்கிறது! பொருத்தமான குறியீடுதான்.

ஆனால் எருமையின் பொறுமையை, அதன் அருமையை உணராத மனிதன் அதன் நிதானத்தைச் சோம்பேறித்தனம் என்று இகழ்கிறான். வாழ்க்கை எருமையின் கதியில் செல்லக்கூடாது என்றும் அது குதிரையின் வேகத்தில் விரைய வேண்டும் என்றும் விரும்புகிறான். ’மரணமே விரைந்து வா’ என்று தன்னையே அறியாமல் அழைக்கிறான்!

விரைவு என்பது விஞ்ஞானத்தின் பாதைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நிதானம் என்பதே மெஞ்ஞானப் பாதையின் நியதி.

ஞானிகளிடம் நிதானம் இருக்கும்.

அரபுப் பகுதியில் தோன்றிய இறைத்தூதர்களின் வாகனம் கோவேறு கழுதைகளும் சாதாக் கழுதைகளும்தான். அவற்றிடம் நிதானம் இருக்கும்.

ஆனால் பாருங்கள், ‘சோம்பேறிக் கழுத’ என்ற வாசகமும் நம்மிடம் வசையே அன்றி இசை அல்ல.


சீன தேசத்து ஞானி – முதிய குரு என்னும் பொருள் கொண்ட லாவ்சூ (LAO TZU) எருமையின் மீது இவர்ந்து வரும் காட்சி பிரசித்தமான ஒன்று.

கீழை ஆன்மிகப் பயணம் என்றுமே புரவியின் வேகம் கொண்டதல்ல. மனம் வேகமானது. அதற்கு பிடரி சிலிர்த்தோடும் குதிரைதான் பொருத்தமான குறியீடு என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஜென் தத்துவத்தில் மனம் ஓர் எருது என்றே உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

“ஜென்னின் பத்து எருதுகள்” என்று ஓர் ஓவியம் உண்டு. சுயத்தைக் கண்டறிதல் என்னும் தத்துவத்தை விளக்கும் பத்துப் படங்கள் அவை. பனிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜென் குரு கூவன் ஷீயுஆன் என்பவரால் வரையப்பட்டவை என்று சொல்லப்படும் அப்படங்கள் ஆன்மிகத் தேடலையும் ஞானம் அடைதலையும் பின்வரும் பத்து நிலைகளில் விளக்குகின்றன:

எருதைத் தேடுதல் (பூச்சிகளின் பாடல் மட்டுமே கேட்கிறது; எந்த இலக்கும் தெரியவில்லை)
எருதின் குளம்புத் தடங்களைக் காணல் (பாதை தெரிதல்)
எருதைக் காணல் (அதன் பின்னால் இருந்து; முன் பக்கம் அல்ல)
எருதைப் பிடித்தல் (மிகவும் சிரமமான காரியம் இது; மீண்டும் மீண்டும் தப்பித்து ஓடும் எருதைக் கைவசம் ஆக்குதல் எளிதல்ல)
எருதைப் பழக்குதல் (நம் சொற்படி அது அடங்கி வருதல்)
எருதின் மேல் அமர்ந்து அதை வீட்டிற்கு ஓட்டிச் செல்வது (ஆன்மிக அனுபவங்கள்)
எருதைக் கடந்து போதல் (எருதை மறத்தல்; சாட்டைக்கு இனி வேலை இல்லை)
எருதையும் தன்னையும் கடந்து போதல் (உடலும் மனமும் மறக்கப்பட்ட நிலை)
மூலத்தை அடைதல் (ஞானம் அடைதல்; பூச்சிகளின் பாடல் மட்டுமே கேட்கிறது)
ஊருக்குள் வருதல் (ஞானத்தை மக்களுக்கு போதிக்க வருதல் - குரு நிலை)


இந்தப் பத்து நிலைகளையும் ஓஷோ விளக்கியிப் பேசியிருக்கிறார். ‘THE SEARCH’ என்னும் நூலாக வெளிவந்துள்ளது. ஓஷோவின் உரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பத்து நிலைகள் பற்றி உளவியல் பார்வையில் மனநல மருத்துவர் ருத்ரன் எழுதிய நூலின் தலைப்பு “தேடாதே”!

சமீபத்தில் ’தி ஹிண்டு’ நாளிதழில் ஒரு கட்டுரை வாசித்தேன். மெதுவாக வாழும் கலையை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது. அதுதான் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் சூடு பிடித்து வரும் ட்ரெண்ட் என்று சொல்லியிருந்தது. SLOW-PARENTING போன்ற வார்த்தைகள் அக்கட்டுரையில் தென்பட்டன. எல்லாம் கீழை நாடுகளின் தொல் சரக்குகள்!

வாழ்க்கை ஒரு வசந்தப் பயணமாக வேண்டும் எனில்-
மனதில் நல்ல ரசனை நிரம்பியிருக்க வேண்டும்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உறுதி இருக்க வேண்டும்
செயல்களில் நிதானம் இருக்க வேண்டும்

மூன்றும் எறுமையிடம் உள்ளன!

எருமையாய் நடந்து வந்து கொண்டிருந்த மனித இன நாகரிகம் விஞ்ஞானத்தின் ரசவாதத்தில் குதிரையாய் மாறி வாயில் நுரை தள்ள இருபத்தோராம் நூற்றாண்டின் வாசலுக்கு வந்து மூச்சிளைத்து நிற்கிறது.

அது மீண்டும் எருமை ஆகி நடக்கக் கடவதாக!


(குறிப்பு: பத்து எருதுகள் படத்தை ஓவியமாக வரைவது என்பது ஜென் நெறியில் ஓவியர்களுக்கு ஒரு முக்கியமான தியானம். அதைப் பல ஓவியர்கள் மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்திருக்கிறார்கள். டொக்கூரிக்கி டொமிக்கிச்சிரோ (1902-1999) என்பவர் வரைந்த படங்கள் இது)

4 comments:

  1. 'எறுமை' என்றே எழுதியிருக்கிறீர்கள்...எழுத்துப்பிழை படிக்கையில் தொந்தரவு செய்கிறது. 'எருமை' என்பதுதானே சரி!

    ReplyDelete
  2. உடனே நான் டவுன்லோடு செய்துவிட்டேன் ஓஷோவின் the search புத்தகத்தை.

    உண்மைதான்..அமைதியான பயணம் மெதுவாகத்தான் இருக்கும்.விஞ்ஞான வளர்ச்சி போட்டியை அதிகப்படுத்தி இருக்கிறது. இன்று உணவு கூட விதவிதமாய் உண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கிறதே அன்றி ரசித்து சாப்பிடும் மனநிலையை வாழ்க்கை முறை பறித்துக்கொண்டுவிட்டது.

    .ஆனால் வெளியேயும் உள்ளேயும் நிதானமாய் இருப்பதுதான் உண்மையான அமைதியான பயணம் என்று நினைக்கிறேன்.சில பேர் வெளியே எருமைபோல் மெதுவாய் இருந்து உள்ளே பொங்கிக் கொண்டிருப்பார்கள்.ஆக மொத்தத்தில் இதற்குத் தீர்வு என்பதை விட the search தான் நல்ல பாதையை தேடித்தரும்.

    ReplyDelete
  3. எழுத்துப் பிழையைச் சுட்டிக்காட்டிய மாயனுக்கு நன்றி!
    என்ன மாயம் பாருங்கள்! எறும்பின் கண் என்னும் தலைப்பில் எழுபது பக்கத்தை எட்டுமொரு நீண்ட கட்டுரை எழுதி ஏழு பாகங்களாய் ஏற்றினேன் அல்லவா? அப்போது அதில் எறும்பு எறும்பு என்று எக்கச்சக்க முறை தட்டச்சு செய்ததில் அனிச்சமாக எகரத்தைத் தொடரும் ரு என்பதற்கு ஷிஃப்ட் போட்டே அடித்திருக்கிறேன். எனவே எறுமை என்று தவறாக இடம்பெற்று விட்டது. கருத்திலேயே கவனம் வைத்து அடித்ததில் இந்தப் பிழை என் கண்ணில் படாமலே போய்விட்டது. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஏனெனில் எப்பொருளின் பெயரை அடிக்கின்றேனோ அப்பொருளின் உருவே மனச்சித்திரத்தில் தெரிந்து கொண்டிருக்கும். கவனம் என் மனத்தில் இருந்தால் காகிதத்தில் -அதுவும் மடிக்கணினியில் விரிந்த டிஜிட்டல் காகிதம் – இருக்காது.

    ReplyDelete
  4. கருத்திலேயே கவனம் வைத்து அடித்ததில் இந்தப் பிழை என் கண்ணில் படாமலே போய்விட்டது. - புரிந்துகொண்டேன்.

    சும்மா ஒரு suggestion.. தமிழ்நெட்99 டைப்பிங் கற்றுக்கொள்ளுங்கள்.15 நாள்போதும்.தினம் ஒருமணிநேரத்தில். அது இப்போது டைப் செய்வதை விட 50%குறைவான key அழுத்தல்களையே கோருகிறது. அபார வேகம்.முதலில் சிரமமாய் இருக்கும்.பிறகு கருத்துவேகம் இன்னும் அதிகரிக்கும்.ஆண்டோ பீட்டரின் ebook ஒன்று கிடைக்கிறது.தமிழ்நெட்டில் டைப் கற்றுக்கொள்ள.15நாள் மட்டுமே.டைப்பிங்கில் ஆற்றல் வீணாகாது.

    நானும் முதலில் transliteration முறையில்தான் டைப் அடித்துக்கொண்டிருந்தேன். இப்போது தமிழ்நெட்99...

    ReplyDelete