Saturday, August 13, 2011

நோன்பு என்பது …




ரமலான் மாதம் பிறந்து பத்து நாட்கள் பறந்துவிட்டன. நோன்பு காலச் சிந்தனைகள் என்பது தனித்துவமான ஒன்று. முதலில் சிந்தனை ஓட்டத்தின் விசையே மாறிவிடுவதைச் சொல்ல வேண்டும். நானும் இந்தப் பத்து நாட்களாக வலைப்பூவில் ஏதாவது இட்டுவைப்போம் என்று அவ்வப்போது எண்ணிக்கொள்கிறேனே தவிர ஒரு வார்த்தையாவது டைப் செய்வதற்கு வந்த பாடில்லை. சஹர்- தொழுகை- குட்டித் தூக்கம்- கல்லூரி- மதியம் கொஞ்சம் குர்ஆன் ஓதல்/வாசிப்பு- மாலை நேரம் ஆன்மிகப் பேச்சுக்கள் கேட்டல்- நோன்பு திறப்பது- கடைகண்ணிக்குப் போய் வருவது- இரவுத் தொழுகை- தூக்கம் என்று இந்தச் சுழற்சி கொஞ்சம் வேகமாகவே சுழல்கிறது என்று உணர்கிறேன். நேற்றுகூட உறவினர் ஒருவர் சிறப்பு இஃப்தார் ஏற்பாடு செய்திருந்தார். மாலை முழுவதும் அதில் கழிந்தது. 

காலத்தின் ஓட்டம் இப்படி விசையேறி உள்ளது ஒருபக்கம். சிந்தனையின் வேகம் அதற்கு நேர் முரண். அதாவது மனதின் வேகம் குறைந்து விட்டது. பல திசைகளில் பக்கியாய்ப் பறக்கும் மனம் நோன்பு நேரங்களில் தன் திசைகளைச் சுருட்டிக் கொண்டு நிதானமாகி விடுகிறது. மனதின் காலடி வைப்பு சீராக இருப்பதாக ஓர் உணர்வு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சகோ.கரிகாலன் எங்கள் வீட்டில் தங்கியிருந்து கடைசி மூன்று நோன்புகள் வைத்துப் பெருநாளும் கொண்டாடினார். அப்போது தன் நோன்பு அனுபவத்தை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒவ்வொரு மணித்துளியும் பிரக்ஞையோடு நகர்கிறது.”

இந்த அனுபவத்தை குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் இட்டுப் பார்த்தேன். மனம் ஏன் பல திசைகளில் திரிகிறது? அதை உண்டாக்குவது யார்? என்ற கேள்விகள் பிறந்தன. “யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ்” – “அவன் (ஷைத்தான்) மனிதர்களின் நெஞ்சங்களில் ஊசலாட்டத்தை உண்டாக்குகிறான்” (114:5) என்று விடை கிடைத்தது. அவன் எங்கே இருக்கிறான்? என்ற கேள்வி எழுந்தது. “மினல் ஜின்னத்தி வன் நாஸ்” – ”ஜின்களிலும் மனிதர்களிலும் இருந்து” (114:6) என்று விடை கிடைத்தது. மனிதர்களில் எங்கே இருக்கிறான்? என்னும் கேள்வி தோன்றிற்று. “அன்னஷ் ஷைத்தான யஜ்ரீ நஜ்ரத் தமி ஃபிப்னி ஆதம் - ஆதமுடைய மகனின் (மனிதனின்) ரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான்” என்று நபிமொழி அதற்கு விடை பகர்ந்தது. (பாருங்கள், கெட்ட சைத்தான் ஓடி ஓடி உழைக்கிறான்!) 

இறைவனின் ’பேரண்மை’ (அக்ரபிய்யத்) பற்றிய திருவசனம் இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. “வ லகத் ஃகலக்னல் இன்சான – நிச்சயமாக மனிதனை நாம்தான் படைத்தோம், வ நஃலமு மா யுவஸ்விசு பிஹீ நஃப்சுஹு – அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிகிறோம் – வ நஹ்னு அக்ரபு இலைஹி மின் ஹப்லில் வரீத் – அவனிடம் நாம் பிடரி நரம்பைவிட மிக நெருக்கமாக இருக்கிறோம்” (50:16). இந்த வசனத்தை, மேற்குறிப்பிட்ட (114:5)-ஆம் வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வஸ்வாஸ்- ஊசாட்டத்தைப் போடுபவன் ஷைத்தான் என்று அந்த வசனம் சொல்கிறது, நஃப்ஸ்- மனம் என்று இந்த வசனம் சொல்கிறது. மேலும், மனம் மனிதனிடம் ஊசாடுகிறது என்று இந்த (50:16) வசனம் காட்டுவதால் மனம் வேறு நான் வேறு என்பதும் தெளிவாகிறது. இந்த இரண்டு வசனங்களும் நான்கு பேரை முன்வைத்து அவர்களிடையே உள்ள தொடர்புகளைக் கூறுகின்றன: ஷைத்தான், மனம், மனிதன், இறைவன். ஷைத்தான் ஊசாட்டங்களை மனதில் போடுகிறான். மனம் அதை அப்படியே மனிதனிடம் ஒப்பிக்கிறது. அதை இறைவன் அறிகிறான்.

ஷைத்தான் – ஊசாட்டத்தைப் போடுபவன்.
மனம் (நஃப்ஸ்) – ஊசாட்டம் போடப்படும் இடம், ஸ்தலம்.
மனிதன் (இன்சான்) – மனத்தை வைத்திருப்பவன்.
இறைவன் – ஊசாட்டத்தை அறிபவன்.

அந்த ஷைத்தானைப் படைத்தது யார்? அதே இறைவன்தான்.
அந்த மனதைப் படைத்தது யார்? அதே இறைவன்தான்.
அந்த மனிதனைப் படைத்தது யார்? அதே இறைவன்தான்.

எனினும் மேற்கண்ட திருவசனத்தில் (50:16) மனிதனைத் தான் படைத்ததைச் சொல்லித்தான் வசனத்தை ஆரம்பம் செய்கிறான், “லகத் ஃகலக்னல் இன்சான்” என்பதாக. “மனிதனிடம் அவன் மனம் பேசுபவற்றை நாம் அறிகிறோம், (அதற்குக் காரணம்) அவனிடம் பிடரி நரம்பை விடவும் மிக நெருங்கியுள்ளோம்” என்று மட்டும் சொன்னாலே கருத்து வந்துவிடும்தான். எனினும், மனிதனைத் தான் படைத்ததைச் சொல்லித் தொடங்கியிருப்பது ஏன்? அதில் என்ன தகீக் – ஞான நுட்பம் பொதிந்து கிடக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் யாருக்கு எவ்வளவு திறக்கிறானோ அவ்வளவுதான் காட்சி. அந்த வகையில் எனக்குத் திறந்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். “மனிதனின் பிடரி நரம்பை விட அவனிடம் நான் மிக நெருங்கியிருக்கிறேன், ஏன் தெரியுமா? அவனை நான்தான் படைத்தேன்!” என்று இறைவன் சொல்கிறான். இதனால் அவன் உணர்த்த வருவது என்ன? “அடியானே அறிந்துகொள். என்னால் படைக்கப்பட்டது என்று ஒரு பொருள் இருக்குமேயானால், அதனுடன் நிச்சயமாக நானும் இருக்கிறேன்” என்பதுதான்!

அப்படியானால், மனதையும் அதில் ஊசாட்டம் போடும் ஷைத்தானையும் அவன்தானே படைத்தான். குறிப்பாக மனிதனைப் படைத்ததை ஏன் சொல்ல வேண்டும்? மனிதனுடன் இருப்பதை மட்டும் ஏன் குறிப்பிட்டுக் கூறவேண்டும்? என்னும் கேள்விகள் எழுகின்றன. ஷைத்தான், மனம் மற்றும் மனிதன் ஆகிய இந்த மூவரில் இறைவன் மனிதனுக்கு ஆதரவாக இருக்கிறான் என்பதை இந்தத் திருவசனம் இஷாரா – குறிப்புக் காட்டுகிறது. இல்லையெனில் தஹவ்வுத் (தூக்கியெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆகிறேன் – ’அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று) ஓதுவதே அர்த்தமில்லாமல் போய்விடும். இதிலும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள், “ஷைத்தானை விட்டும் நஃப்சை (மனதை) விட்டும் அல்லாஹ்வின் பாதுகாவலில் ஆகிறேன்” என்று சொல்வதில்லை. ஏனெனில் மனம் என்பது ஷைத்தான் ஊசாட்டத்தைப் போடும் தலமாக மட்டுமே இருக்கிறது. (எனினும் அது ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கும்போது ‘தீமையின் பக்கம் தூண்டும் மனம்’ (நஃப்சுன் அம்மாரா பிஸ்ஸூஇ) (12:53) என்று அதன் பக்கம் செயலை இணைத்துச் சொல்லப்படுகிறது.) 



மனதில் ஊசாட்டம் ஷைத்தானால் போடப்படுகிறது என்பது இன்னொரு விசயத்தையும் உணர்த்துகிறது. அதாவது மனதின் இயல்பு நிலை ஊசாட்டம் அல்ல, தடுமாற்றம் அல்ல, பதற்றம் அல்ல, கொந்தளிப்பு அல்ல, அழுத்தம் அல்ல, குழப்பம் அல்ல. இவையெல்லாம் ஊசாட்டத்தின் அறிகுறிகள், விளைவுகள். மனதின் இயல்பு நிலை அமைதிதான். மனம் இறைவனின் பக்கம் சார்ந்துவிடும் போது அதில் அமைதியும் பரவசமும் நிறைந்துவிடுகிறது. அப்போது அது ”நிம்மதி அடைந்த மனம்” (நஃப்சுன் முத்மஇன்னா) (89:27) என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு முக்கியமான திருவசனங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்:

1.   “அலா பிதிக்ரில்லாஹி தத்மஇன்னுல் குலூப் - அறிக, அல்லாஹ்வின் ஞாபகத்தில் இதயங்களின் நிம்மதி உள்ளது” (13:28)
2.   “ஹுவல்லதீ அன்ஸலஸ் சகீனத்த ஃபீ குலூபில் முஃமினீன லியஸ்தாதூ ஈமானம் மஅ ஈமானிஹிம் – அவன் (அல்லாஹ்) எத்தகையோன் எனில் நம்பிக்கையாளரின் இதயங்களில் அமைதியை இறக்கினான், அவர்களின் இறைநம்பிக்கையுடன் இறைநம்பிக்கை அதிகமாவதற்காக” (48:4)

எனவே, தன்னிலையில் நல்ல வஸ்தாகப் படைக்கப்பட்ட மனத்தைவிட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடவேண்டும் என்று தஹவ்வுதில் வரவில்லை. ஆனால், அந்த மனதில் கெடுதியை விதைக்கும் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுமாறு பணிக்கப்படுகிறது.

இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்களின் அற்புதமான துஆ (ப்ரார்த்னா) ஒன்றும் ஞாபகம் வருகிறது. “அல்லாஹும்ம லா தகில்னீ இலா நஃப்சீ தர்ஃபத்த ஐன் -  அல்லாஹ்வே! கண்ணிமைக்கும் நேரம்கூட என்னை என் மனதின்வசம் ஆக்கிவிடாதே!”

நாம் நம் மனதிற்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது இதிலிருந்து தெரிகிறது. (திருவிழாவிற்குத் தன் பிள்ளையை அழைத்துச் செல்லும் தந்தை அது சொல்கிறபடி எல்லாம் ஆடிக்கொண்டிருந்தால் சொத்தை அழித்து மிட்டாயும் ஐஸ்க்ரீமும் பொம்மைகளும் வாங்கவேண்டி வரும்.) மனம் நம் வசம் இருக்கவேண்டும். நாம் இறைவசம் இருக்கவேண்டும்.

”நோன்பு என்பது என்ன? என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்துவிட்டு இது என்ன என்னைப் பற்றிய ஆராய்ச்சி?” என்று என் மனம் கேட்கிறது. இவ்வளவும் சொன்னது எதற்காக என்று இனி சொல்லிவிடுகிறேன். நோன்பு காலங்களில் மனம் வேகம் குறைந்து ஒரு நிதானிப்பில் செயல்படுகிறது என்று சொன்னேன் அல்லவா? அது ஏன் என்பதை பின்வரும் நபிமொழியைக் கொண்டு நாம் விளங்கலாம்.
“இதா ஜாஅ ரமளானு – ரமளான் மாதம் வரும்போது
ஃபுத்திஹத் அப்வாபல் ஜன்னத்தி – சொர்க்க வாயில்கள் திறக்கப்படுகின்றன
வ குல்லிகத் அப்வாபுன் நார் – நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன
வ ஸுஃப்ஃபிதத்திஷ் ஷையாத்தீன் – ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றன”
(நூல்: சஹீஹ் முஸ்லிம், எண்: 1956)

ஷைத்தான்கள் செயல்பட முடியாமல் தடுக்கப்படுவதால் மனதில் ஊசாட்டங்கள் இல்லாமல் ஆகிறது. அத்துடன் மனதை வழிபாடுகளில் அதிகம் தோய வைப்பதால் அது அமைதியாலும் பரவசத்தாலும் நிறைகிறது. அதாவது ரமளானில் மனம் அதன் இயல்பு நிலையை அடைகிறது. இதை நோன்பு சாத்தியமாக்குகிறது. (சாத்தியம் ஆக்கினால்தான் நோன்பு சரியாக வைக்கப்படுகிறது என்று அர்த்தம்.)



இந்த இடத்தில் எனக்கு இது சம்பந்தமாக ஒரு விளக்கம் நினைவு வருகிறது. அது சூஃபி ஞானி அலீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் சொன்னது. மிகவும் ரஸமான அந்த விளக்கத்தை தனிப்பட்ட மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தருகிறேன்:
“ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறான். அதனால் என்ன? அல்லாஹ்தான் நம் பிடரி நரம்பைவிட நெருங்கி இருக்கிறானே! ஷைத்தான் தூரத்தில் இருக்கிறான், அல்லாஹ் நம் அருகில் இருக்கிறான் எனும்போது என்ன கவலை? கல்புல் முஃமின் அர்ஷுல்லாஹ் – ’இறைநம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் ஆசனம்’. ஷைத்தான் ரத்த நாளங்களில்தான் இருக்கிறான். ஆனால் அல்லாஹ் நம் இதயத்தில் இருக்கிறான். ஷைத்தான் நம் பகைவனாக இருக்கிறான் – இன்னஷ் ஷைத்தான லகும் அதுவ்வுன் ஃபத்தஃகிதூஹு அதுவ்வா – “நிச்சயமாக ஷைத்தான் உங்கள் எதிரியாக இருக்கிறான், நீங்கள் அவனைப் பகைவனாகவே எடுத்துக்கொள்க” (35:6). ஆனால் அல்லாஹ் நம் நண்பனாக இருக்கிறான் – அல்லாஹூ வலிய்யுல்லதீன ஆமனூ – “அல்லாஹ் இறைநம்பிக்கையாளரின் நண்பன்” (2:257). நம் பகைவன் தூரத்தில் இருக்கிறான், நம் நண்பன் அருகில் இருக்கிறான் எனும்போது நமக்கு என்ன கவலை? அதுவும் ஷைத்தான் எப்படிப்பட்ட பகைவன்? இன்ன கைதஷ் ஷைத்தானி கான ளயீஃபா – திண்ணமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானது (4:76). அல்லாஹ் எப்படிப்பட்ட நண்பன்? – அன்னல் குவ்வத்த லில்லாஹி ஜமீஆ – நிச்சயமாக சக்தி முழுமையும் அல்லாஹ்வுக்கே (2:165) ; துல் குவ்வத்தில் மதீன் – பலம் மிக்கவன் உறுதியானவன் (51:58) ; இன்னல்லாஹ அலா குல்லி ஷைஇன் கதீர் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் மிக்கவன் (3:165). பலஹீனமான பகைவன் தூரத்தில் இருக்கிறான், பலமிக்க நண்பன் நம் அருகிலேயே இருக்கிறான் எனும்போது அந்தப் பகைவனுக்குப் பயப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை உணர்ந்து கொள்ளுங்கள்.”

இந்த விளக்கங்களின் ஆரம்பப் புள்ளிக்கே மீண்டும் வருகிறேன். ரமளான் மாதத்தில் நம் சிந்தனைகளின் தன்மை மாற்றம் அடையத்தான் செய்கிறது. அது ஏன் என்பதற்கான விளக்கமாகத்தான் இவ்வளவு நேரம் பேசியது. பத்து நாட்களாக ஒரு அடிப்படையான கேள்வியும் என் மனதில் விடை கேட்டபடி நிற்கிறது. அதைக் கொஞ்சம் சிந்தனை (தஃபக்குர்), ஆராய்ச்சி (தஹ்கீக்) செய்து பார்ப்போம். அந்தக் கேள்வி மிகவும் எளிமையானது, ஆதாரமானது: “நோன்பு என்பது என்ன?”

ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர ஃபல்யஸும்ஹு – எவர் அந்த ரமளான் மாதத்தை அடைந்தாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்” (2:185) என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நோன்பு என்பது என்ன?



அடிப்படையான இந்தக் கேள்விக்கு ஒரு எளிமையான விடையாக “உண்ணாமல் பருகாமல் தாம்பத்யம் செய்யாமல் இருப்பது” என்று விடை சொல்லலாம். நோன்பு என்றால் அப்படித்தானே இருக்கிறோம்? ஆனால் இந்த விடையின் போதாமையை ஒரு நபிமொழி காட்டுகிறது:
”இதா நசிய ஃப அகல வ ஷரப ஃபல்யுதிம்ம ஸவ்மஹு – ஒருவர் மறந்து உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும் – ஃப இன்னமா அத்அமஹுல்லாஹு வ சகாஹு – நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்கு ஊட்டினான் புகட்டினான்.” (நூல்: சஹீஹ் புஹாரி. எண்: 1933.)

இந்த நபிமொழி உள்ள பாடத்தில் (அத்தியாயம் 30 கிதாபுஸ் ஸவ்ம் பாடம் எண்:26) இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் பின்வரும் குறிப்பையும் தருகிறார்கள்: “வ காலல் ஹஸனு வ முஜாஹிதுன் இன் ஜாமஅ நாசியன் ஃபலா ஷைஅ அலைஹி – ஹஸன் (ரஹ்) மற்றும் முஜாஹித் (ரஹ்) ஆகியோர் சொல்கின்றனர் ‘மறதியாக மனைவியுடன் கூடினால் அதில் எந்தத் தவறும் இல்லை’ (நோன்பு முறியாது)”

மறதியாக உண்டால் நோன்பு முறியாது. மறதியாகப் பருகினால் நோன்பு முறியாது. மறதியாகக் கலவி செய்தால் நோன்பு முறியாது. எனில், நோன்பு என்பது என்ன?

உண்ணாமல் பருகாமல் வீடு கூடாமல் இருப்பது என்பது நோன்பிற்கான அடிப்படை முன் தேவைகள் (PRE-REQUISITES). அவையே எப்படி நோன்பாகும்? உதாரணமாக, ஓவியம் வரைவதற்கு அழுக்குக் கறையில்லாத தூய வெண்திரை (CANVAS) தேவை. அழுக்குத் திரையை சவுக்காரமிட்டுக் கழுவித் தூய்மையாக்கி வைப்பது போன்றது உண்ணாமல் பருகாமல் இருப்பதெல்லாம். நோன்பு என்பது அந்தத் திரையில் ஓவியம் வரைவதைப் போன்றது. திரையை வெளுத்து வைத்துக்கொண்டு அதுதான் ஓவியம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஓவியம் என்பது திரைதான் என்று சொல்வது மடத்தனம் அல்லவா? திரையில்தான் ஓவியம் உருவாக வேண்டும். ஆனால் திரை வேறு ஓவியம் வேறு. அதுபோல் உண்ணாமல் பருகாமல் கலவாமல் இருப்பது நோன்பை உருவாக்கத்தான் என்றாலும் நோன்பு என்பது வேறு! இப்போது சொல்லுங்கள், நோன்பு என்பது என்ன?

நாம் வெறும் திரை. நோன்பு என்பது ஓவியம். எனில் ஓவியன் யார்?

சிப்கதல்லாஹி – அல்லாஹ்வின் வண்ணம், வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா – அல்லாஹ்வினும் வண்ணம் கொடுப்பதில் அழகன் யார்?, வ நஹ்னு லஹு ஆபிதூன் – நாம் அவனுக்கே அடிமை செய்கிறோம்” (2:138)

’சிப்கதல்லாஹ்’ – அல்லாஹ்வின் வண்ணம் என்பதற்கு மார்க்கம் என்றும் ஞானம் என்றும் விளக்கங்கள் உள்ளன. விரிவுரையாளர்களிடையே (முஃபஸ்ஸிரீன்) இன்னும் இவையன்ன பிற விளக்கங்கள் இருக்கலாம். இறைஞானிகளான சூஃபிகள் இதற்குத் தரும் விளக்கம் ‘இறைப்பண்புகள்’ (சிஃபாத்துல்லாஹ்) என்பதாகும்.

இறைவனின் வண்ணத்தில் தோய்தல் என்பது இறைப்பண்புகளில் தோய்வதுதான். “தஃகல்லகு பி அஃக்லாக்கில்லாஹ் – அல்லாஹ்வின் குணங்களில் உன்னை அமைத்துக்கொள்” என்னும் நபிமொழியும் இக்கருத்தையே உணர்த்துகிறது.

சரி, இதற்கும் நோன்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. உண்ணாமல் பருகாமல் இருப்பது இறைவனின் பண்பு அல்லவா? நோன்பில் அப்பண்பை மனிதன் பிரதிபலிக்கின்றான்.

ஜீவித்திருத்தல், அறிவு, சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை, பேச்சு ஆகியவை எல்லாம் இறைவனின் பண்புகள்தான் என்றாலும் அப்பண்புகள் மனிதனில் மட்டுமே பிரதிபலிக்கின்றன என்று சொல்ல முடியாது. இவை எல்லாம் மனிதனில் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன எனலாம். பிற ஜீவராசிகளில் குறைவாகவும் ஒன்று அல்லது ஒன்று வெளிப்படாமலும் இருக்கலாம். கல் மண் போன்ற தாது வர்க்கத்திற்கும் (ஜமாதாத்) ஜீவன் (ஹயாத்) உண்டு, அறிவு (இல்ம்) உண்டு!

மேலும், இந்த இறைப்பண்புகள் மனிதன் உண்ணும்போதும் பருகும்போதும் உலவும்போதும்கூட அவனில் பிரதிபலித்துக் கொண்டுதான் உள்ளன. அதாவது நோன்பில் இல்லாத நிலையிலும் இவை மனிதனில் பிரதிபலிக்கின்றன. மற்ற ஜீவராசிகளிலும் பிரதிபலிக்கின்றன. எனில், மனிதன் இறைவனின் பிரதிநிதி (ஃகலீஃபத்துல்லாஹ்) என்று காட்ட அவன் சிறப்பாக இறைப்பண்பு எதையாவது பிரதிபலிக்க வேண்டும் அல்லவா? அது நோன்பில் நிறைவேறுகிறது. உண்ணாமல் பருகாமல் துணையுறவு கொள்ளாமல் இருப்பது என்பது இறைவனின் பண்பு (அல்லாஹுஸ் ஸமது – அல்லாஹ் தேவைகள் அற்றவன் (112:2). இதைப் பின்வரும் ’ஹதீஸ் குத்ஸி’யும் குறிப்பிடுகிறது:
அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹீ – நோன்பு என்னுடையது. அதற்கு நானே நற்கூலி தருகிறேன்” (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், முவத்தா மாலிக், திர்மிதி, நசாயீ, இப்னு மாஜா)

இங்கே கொஞ்சம் சிந்தனையை செலுத்துவோம். நோன்பிற்கு அல்லாஹ்வே நற்கூலி தருகிறான் என்று ஏன் சொல்ல வேண்டும்? எல்லா வழிபாடுகளுக்கும் அவன்தானே நற்கூலி தருகிறான்? அப்படி இருக்க நோன்பிற்கு மட்டும் அதற்கு அவனே நற்கூலி வழங்குவதாகச் சொல்லப்பட்டிருப்பது ஏன்? அப்படியானால் நோன்பிற்கும் அல்லாஹ்வுடைய உள்ளமை- ஜாத்திற்கும் சிறப்பான ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அது என்ன? அதைச் சுட்டிக்காட்டித்தான் ஞானவான்கள் “அனா அஜ்ஸீ பிஹீ – அதற்கு நானே கூலி தருகிறேன்” என்பதன் உள்ளர்த்தம் ”அனா உஜ்ஸா பிஹீ- அதற்கு நானே கூலியாகிறேன்” என்று சொல்கிறார்கள்!

நோன்பில் மறதி ஏற்படுவது பற்றிய ஹதீசுக்கு மீண்டும் நம் கவனத்தைத் திருப்புவோம். “ஒருவர் மறந்து உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும். நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்கு ஊட்டினான் புகட்டினான்.” (நூல்: சஹீஹ் புஹாரி. எண்: 1933.)

’ஒருவர் மறந்து உண்ணவோ பருகவோ செய்தால்’ – மறப்பவர் யார்? நோன்பாளி. எதை மறந்தார்? நோன்பைத்தான், உணவை அல்ல. அதாவது அவருடைய கவனம் இப்போது உணவின் பக்கமும் பானத்தின் பக்கமும் உள்ளது. ஆனால் நோன்பை மறந்துவிட்டார்.

நோன்பாளி நோன்பை மறந்துவிடுகிறார். ஆனால் நோன்பு முறியவில்லை. மறந்தது மட்டுமல்ல, உண்ணவும் பருகவும் வேறு செய்கிறார். ஆனாலும் நோன்பு முறியவில்லை! இது ஆச்சரியமாக இல்லையா? இந்த இடம் சிந்தனைக் களம் இல்லையா?

தன்னுணர்வுடன் ஒருவர் கால் பருக்கையை உட்கொண்டாலும் அல்லது ஒரு துளி நீரைத் தானே பருகினாலும் நோன்பு முறிந்துவிடும். (சமையலில் சுவை பார்க்கும் சகதர்மினிகள்கூட சுவைத்து விழுங்கிவிடக் கூடாது.) ஆனால் மறந்த நிலையில் ஒருவர் ஒரு தேக்சா பிரியாணி சாப்பிட்டாலும் நோன்பு முறியாது! இதிலிருந்து என்ன தெரிகிறது? உண்மையில் நோன்பை முறிப்பது உணவோ பானமோ அல்ல. இஃக்தியார் - தன்னுணர்வுதான்! பிரக்ஞைதான்!

மறதி – நோன்பாளிக்கு ஏற்படுவது.
மறக்கச் செய்பவன் – இறைவன்.
நினைவு – இறைவனிடம் இருப்பது (அவனுக்கு மறதி என்பது இல்லை)

எனவே, என் நோன்பைப் பேணுவது நான் அல்ல, இறைவன்தான்!

நான் நோன்பாளி என்பதை நான் மறந்தாலும், என் நோன்பை இறைவன் ஞாபகம் வைத்திருக்கும் நிலையில், அதாவது என்னை நோன்பாளியாக அவன் தன் அறிவில் காணும் நிலையில் என் நோன்பு முறிவதில்லை.

கணவனும் மனைவியும் மறதியாகக் கூடினாலும் இதே நிலைதான். (ஒருவர் நோன்பை மறந்துவிடுகிறார் என்பது சரி, அது எப்படி இருவர் ஒரே சமயத்தில் அதுவும் தாம்பத்ய உறவு கொள்ளும் வரை அத்தனை நேரம் நோன்பை மறப்பார்கள்? என்று கேட்கத் தோன்றலாம். மறதி என்பதும் ஞாபகம் என்பதும் நம் வசத்தில் இல்லை. அதாவது, ஒருவர் ‘நான் நோன்பாளி’ என்று சொன்னால் அவர் நோன்பை மறக்கவில்லை என்று அர்த்தம். ஒருவர் ‘நான் இப்போது நோன்பை மறந்திருக்கிறேன்’ என்று சொன்னாலும் அவர் நோன்பை மறக்கவில்லை என்றுதான் அர்த்தம்! ஞாபகம் ஊட்டுபவனும் மறக்கச் செய்பவனும் அல்லாஹ்தான். அவன் நினைத்தால் ஒரு விஷயத்தை சர்வ கோடி சிருஷ்டிகளும் மறந்துபோகும்படிச் செய்ய முடியும் எனும்போது இரண்டு பேர் ஏககாலத்தில் நோன்பை மறக்கும்படிச் செய்ய அவனால் முடியாதா என்ன?)

மறதியாகச் செய்தாலும் நினைவுடன் செய்தாலும் நோன்பைப் பாழாக்குகின்ற ஒரு விஷயம் உண்டு: கீபத் – புறம் பேசுதல். ஏன் தெரியுமா?
மறந்து உண்ணவும் பருகவும் கலவவும் வைப்பவன் – இறைவன்.
ஆனால் புறம் பேச வைப்பவன் – ஷைத்தான்.

நோன்பு வைத்த நிலையில், தாங்கள் நோன்பாளிகள் என்று நினைத்துக் கொண்டு இரண்டு பெண்கள் புறம்பேசிக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட நபி(ஸல்), அந்தப் பெண்கள் இருவரையும் வாந்தி எடுத்துப் பார்க்குமாறு கட்டளை இட்டார்கள். அவர்களின் வாந்தியில் ரத்தமும் சதைத் துண்டுகளும் வந்து விழுந்தன. யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவர்களின் மாமிசம் அது என்றும், அந்தப் பெண்டிரின் நோன்பு புறம் பேசத் தொடங்கிய போதே முறிந்துவிட்டது என்றும் நபி(ஸல்) சொன்னார்கள். இது பிரபலமான ஒரு நபிமொழி. 

இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன:
# மறந்து உண்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்து விட்டார். ஆனால் அவரின் நோன்பு முறிவதில்லை. புறம் பேசுபவர் தான் நோன்பாளி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நோன்பு முறிந்துவிட்டது.

# உணவும் பானமும் நோன்பை பாதிக்கவில்லை. அது குடலுக்குச் சென்று செரித்து அவரின் ரத்தமு சதையுமாக மாறும். அவர் சாப்பிட்டதில் சிக்கன் மட்டன் இருந்திருக்கலாம். மறந்த நிலையில் மாமிசத்தையே சாப்பிட்டிருந்தாலும் நோன்பு முறியவில்லை. ஆனால் புறம் பேசியவர்கள் வெளிப்படையில் மாமிசத்தை உட்கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் பேச்சே மாமிசமாகி நோன்பை முறித்துவிடுகிறது. ஆமாம், வார்த்தை மாம்சம் ஆகிறது!

புறம் பேசி நோன்பைப் பாழாக்கிக் கொள்ளாதிருக்க நபி(ஸல்) அவர்கள் ஒரு வழி சொல்லியிருக்கிறார்கள்: “அந்நவ்முஸ் ஸாயிமி இபாதத்துன் வ சும்துஹு தஸ்பீஹுன் – நோன்பாளியின் தூக்கமும் வழிபாடாகும். அவரின் மௌனமும் நாமதியானம் ஆகும்”

இந்த நபிமொழியின் விளக்கத்தில் என் குருநாதர் சொன்ன கருத்து ஒன்று ஞாபகம் வருகிறது: “வேறு எந்த வழிபாட்டையும் நீங்கள் தூங்கிக் கொண்டே செய்ய முடியாது. தூங்கிக் கொண்டே தொழ முடியுமா? ஜகாத் கொடுக்க முடியுமா? ஹஜ் செய்ய முடியுமா? தவாஃப் செய்ய முடியுமா? ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியுமா? தொங்கோட்டம் ஓட முடியுமா? ஆனால் நோன்பாளி தூங்கும்போதும் நோன்பில்தான் இருக்கிறார். இந்த ஒரு வழிபாட்டிற்கு உரிய சிறப்பு இது. அதுமட்டும் அல்ல, நோன்பாளி வாயைத் திறந்து ஓத வேண்டும் என்ற தேவைகூட இல்லை. புறம் பேசாமல் மௌனமாக இருக்கிறானா? அதுவே போதும், அல்லாஹ் அதை தஸ்பீஹ் என்றே எழுதிவிடுகிறான்!” (நோன்பாளி சோர்ந்து வாய் காய்ந்து மௌனமாக அமர்ந்திருப்பான் அல்லவா? எனவே வாய் திறந்து தஸ்பீஹ் செய்யும் சிரமத்தைக் கூட அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எத்தனை அளப்பரிய கருணை!)

அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியவற்றைச் சொல்வார்கள். இதில் உணவு என்னும் தளத்தில் இணை விழைச்சும் சேரும். நோன்பு என்பது உணவைத் துறப்பதாக அமைந்துள்ளது. உடையை அல்லது உறையுளைத் துறப்பதாக அல்ல. இது ஏன்? எல்லா உயிர்களும் எதைத் துறக்கவில்லையோ அந்த பொதுவான ஒன்றைத் துறப்பதாக நோன்பு அமைக்கப்பட்டுள்ளது. மனிதன் மட்டும்தான் உடை அணிகிறான். இதர ஜீவராசிகளுக்கு உடை இல்லை. சில உயிரினங்களுக்குக் குறிப்பிட்ட உறையுள் எதுவும் கிடையாது. அவை நாடோடிகள் போல் திரிகின்றன. ஆனால் உணவு இல்லாத ஜீவராசி கிடையாது. காமத்தின் நிலையும் அப்படியே. அதனை “எல்லா உயிர்க்கும் இன்பம்” என்பார் தொல்காப்பியர். நோன்பில் அதையும் மனிதன் விலக்கி வைக்கிறான்.

இதன் தாத்பரியம் இதுதான்: சர்வ கோடி சிருஷ்டிகளை (மஃக்லூக்குகளை) விட்டும் மனிதன் தன் சுயத்தை விலக்கி அவற்றின் தேவை இல்லாத இறைவனின் பக்கம் சார்ந்து அவனது அந்தத் தன்மையைத் தன்னில் பிரதிபலித்துக் காட்டி அவனது பிரதிநிதியாய் ஸ்தாபிதம் பெற வேண்டும்.

நிறைய பேசியாச்சு. நான் கொஞ்ச நேரம் வழிபாட்டில் மூழ்குகிறேன். ஐ மீன், ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொள்கிறேன்!

4 comments:

  1. சகோ உங்க கால காட்டுங்க

    தயவு செய்து வாரத்துக்கு நாலு பதிவாவது
    போடுங்க

    ReplyDelete
  2. என்ன எழுதுவதென்றே தெரியவில்லை என்ற நிலை தான் எனக்கும் இதை படித்த பிறகு ஏற்பட்டது...

    செத்த நேரம் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை..

    அற்புதமான பதிவு இது... பகிர்ந்தமைக்கு நன்றி..

    உங்களுக்கு நன்றி சொல்வதன் மூலமாக எனது இறைவனுக்கும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.. அல்ஹம்துலில்லாஹ்..

    ஒரு வகையில் என் இபாதத்தை கெடுத்து விட்டது இந்த பதிவு என்று கூட சொல்லலாம்... ஆமாம், நோன்பை பற்றிய ஆழமான செய்திகளை வெளியிட்டு என் தூக்கத்தை கலைத்து விட்டீர்கள்..!

    இனி இதே தான் எனக்கு இந்த நோன்பு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும்...!

    உங்களுக்காக துவா செய்கிறேன்..

    உங்களை சந்திக்க ஆவல் கொள்கிறேன்...

    ReplyDelete
  3. ஒரு மாத ஓய்வுக்குப் பின் வருகிறேன்
    அருமையானக் கருத்துக்கள் பொதிந்த பதிவு
    ஜசாக்கல்லாஹு கைரன்

    ReplyDelete
  4. ///நாம் வெறும் திரை. நோன்பு என்பது ஓவியம். எனில் ஓவியன் யார்?///

    ராஜா ரவி வர்மாவின் புராண ஓவியங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. அவ‌ர் தூரிகையில் பட்டு ஓவியமாகும் அந்தக்காட்சி அவருடைய மனத்திரையில் இறைவனால் ஓவியமாக எழுதப்பட்டுவிடும்.அந்த அக ஓவியத்தின் புற வெளிப்பாடே நாம் காணும் ரவி வர்மா ஓவியங்கள்.
    நல்ல பதிவு. நோன்பு வைத்த உணர்வு வந்துவிட்டது படித்து முடிக்கும் போது.

    ReplyDelete