முகவரி
‘முகம் பார்க்க வேண்டும்
கண்ணாடி தா’
என்றேன் இறைவனிடம்
‘முகமூடியைக் கழற்று’
என்றான்
‘முகமூடியைக் கழற்றினால்
என் முகம் தெரியுமா?’
என்றேன்
’நீ கண்ணாடி ஆவாய்
என் முகம் தெரியும்’
என்றான்
‘முகமூடி எது?’
என்று கேட்டேன்
‘கண்ணாடியின் மீது
படியும் தூசினை
உன் முகம் என்று நினைக்கிறாய்’
என்றான்
‘தூசை எப்படித்
துடைப்பது?’
என்றேன்
இறைவன் சொன்னான்:
‘கண்ணீரால் கழுவு’
~~~~~~~~~~~~
காதல் ரோஜா
விண்ணைக் காதலிக்கும்
நிர்வாண நிலத்தின் மீது
நடந்து சென்றேன்
‘என் நெஞ்சில்
உறுத்துகிறது ஒரு முள்’
என்று
விண்ணிடம் சொன்னது மண்.
மண்டியிட்டுத் தலைசாய்த்து
கண்ணீரால் நிலம் நனைத்தேன்
‘அன்பே!
உன் மார்பில்
என் காதல் ரோஜா’
என்று
நிலத்திடம் சொன்னது வான்
~~~~~~~~~~~~~~~~~~
பேச்சுக் கலை
‘பேசாதிருப்பது எப்படி?’
இறைவனிடம் கேட்டேன்
இறைவன் சொன்னான்:
‘பேசுவது எப்படி என்று கேள்
பேசத்தெரியுமா உனக்கு?
மொழிகளை நான் படைத்தேன்
அந்த மொழிகளில்
நீங்கள் உளறுகிறீர்கள்.
உங்கள் பேச்சு
விடலைப் பையனின்
கனவு ஸ்கலிதம் போல்
உள்ளது.
நீங்கள்
செறிக்காமல் பேசுவது
வாந்தியாகவும்
செறித்துப் பேசுவது
மலமாகவும்
உள்ளன.
வேதச் சுடரையே
ஏற்றி வைத்தாலும்
புகை மட்டுமே கக்கும்
திரிகளாக இருக்கிறீர்கள்.
உங்கள் உள்ளத்தின் விதைகளே
அபூர்வமாகப்
பாறை பிளந்து முளைக்கின்றன.
தலை காட்டும் வார்த்தைகளே
தலை கட்டும் வார்த்தைகள்
ஆகட்டும்.
நான் பேசினால் வேதம்
நீ பேசினால் சேதம்.
அதனால்
பேணுக போதம்’
இவ்வாறு
இறைவன் பேசி என்
செவ்வாய் மூடினான்.
‘உலைமூடி போல் திறக்கட்டும்
உன் உள்ளத்தின் வாய்’
மூன்றுமே முத்துக்கள்..
ReplyDeleteரமலான் முபாரக்..
அருமை
ReplyDeleteஉங்கள் கவிதையிலும்
ஞானக் கருத்துக்கள்
//வேதச் சுடரையே
ReplyDeleteஏற்றி வைத்தாலும்
புகை மட்டுமே கக்கும்
திரிகளாக இருக்கிறீர்கள்//
'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடுதிரியா...'
'வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யக்கதிரோன் விளக்காக...'
ஏற்றிவைத்த விளக்காக 3 கவிதைகள் அருமை. பாராட்டுக்கள்.