”நாவு ருசி தேடுதற்கு ஆவி கெட்டு அலையாமல்….” என்று குணங்குடி மஸ்தான் சாகிபு ஒரு காப்பு வேண்டுவார். நாலைந்து நாட்களாக அது அவ்வப்போது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. சாப்பாட்டு ருசியைத் தேடி அனுபவிப்பது பெரும்பாவமா என்ன? ஆனால் அதிலும் ’அடிக்ட்’ ஆகி மனம் பேதலித்து வாழ்வின் லட்சியத்தைத் தொலைத்துவிடக் கூடிய அபாயம் இருக்கத்தானே செய்கிறது, என்ன சொல்கிறீர்கள்?
இத்தனைக்கும் நான் நன்றாகச் சாப்பிடக்கூடிய பேர்வழி அல்ல. ஒரு ரமலான் மாதத்தில் என்னைச் சந்தித்த சுப்பிரமணி நான் நோன்பு வைத்திருப்பதை அறிந்து, அதுவும் முப்பது நாட்கள் ‘ரோஸா’ வைப்பேன் என்பதை அறிந்து கலவரமாகி, “அதெல்லாம் மூக்குப் புடிக்க வெட்றவாளுக்குச் சொல்லீருப்பாங்க. நீ சும்மாவே அரை வயிறு கால் வயிறுன்னு சாப்பிடற ஆளு. உனக்கெல்லாம் விரதம் கெடயாதுப்பா, நீ இருக்கிற ஸ்திதியப் பாரு” என்று ஒரு ’ஃபத்வா’ கொடுத்தான்!
ரமலான் மாத முப்பது நாள் நோன்பில் ஒரு சுற்று பெருத்துவிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கானால் மூஞ்சியெல்லாம் வத்திப்போய் எலும்பு துருத்திக் காட்டும். நோன்பு வைக்க வேண்டுமே என்று அரக்கப் பரக்க அள்ளிப் போட்டு வண்ணாந்தாழி போல் வயிறு வீங்க ரெண்டு நாள் சாப்பாடு சாப்பிடுபவர்களை என்னால் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். ரெண்டு சப்பாத்தி அல்லது கொஞ்சம் சோறு, ஒரு பூவன் அல்லது ரஸ்தாளிப் பழம் மற்றும் ஒரு க்ளாஸ் பால். இதுவே எனக்கு ரொம்ப அதிகம் என்ற கணக்கில்தான் நோன்பு பிடிப்பேன்.
வெள்ளைச் சோறும் கொழுப்பு மிதக்கும் தாழியாணமுமாகக் களை கட்டும் கந்தூரி விழாவில் இரவு இரண்டு மணி வாக்கில் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலும் வியப்புத்தான் வருகிறது. அரைத் தூக்கத்தில் மல்லாந்தும் ஒருக்களித்தும் கிடக்கும் துப்பட்டிகள் நடுசாமத்தில் விருந்துப் பந்தி ஆரம்பமானதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்வதும், காயசண்டிகை போல் வெளுத்து வாங்குவதும் பெரியம்மாவின் வருணனையுடன் என் நினைவுப் பரப்பில் பதிந்துபோன அதிசயக் காட்சிகள். “மூட்டுவலி, பெரடிவலின்னு புலம்பிக்கிட்டுக் கிடக்குறாங்க. சாப்பாடு போட்டதும் ஒவ்வொருத்தரு எலயிலயும் சோத்தப் பாக்கணுமே, சின்னப் புள்ள கபுறு மாதிரி!”
படிக்கும் காலம் வரை சாப்பாட்டு ருசியில் ஈடுபாடு இல்லாமல் இருந்தநிலை (ஒருவேளை நான் இப்படி நினைப்பது தவறாகவும் இருக்கக் கூடும்) பிற்பாடு மெல்ல மெல்ல மாறிவிட்டது. அறுசுவைகளின் மேலோட்டமான ருசியைத் தாண்டி அவற்றின் நுட்பங்களை (NUANCES) அவதானிக்கும் ரசனை சித்தித்தது. (சரியாகச் சொல்வதென்றால் ஐஞ்சுவை. கசப்பையும் அதீதமாய் நேசித்து ருசிக்கிறோமா என்ன? என் தங்கை ஒருத்தி குழந்தைப் பருவத்தில் கொத்துக் கொத்தாக மாத்திரைகளை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு கடக் முடக் என்று நிதானமாகக் கடித்துச் சுவைப்பாள்!)
உணவின் சுவையில் நுட்பங்கள் தேடும் ரசனை சித்தித்தது என்றுதான் சொன்னேன். மற்றபடி சாப்பிடும் அளவு என்னவோ மாறவேயில்லை. உணவு ரசனை சித்தித்தது எப்படி? எப்போது? என்னும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் திட்டவட்டமான விடை கூற என்னால் இயலவில்லை. ஞாபக அடுக்குகளுக்குள் துழாவிப் பார்த்தால் விடை என்று குறிக்கத்தக்க நாலைந்து சம்பவங்கள் தேறக் கூடும். அவற்றை உங்களுக்குச் சொல்வதில் தடை என்ன இருக்கிறது?
1
பள்ளிச் சிறுவனாக நான் இருந்த காலங்களில் மதியமும் இரவும் சோறுதான். காலை வேளைக்கு மட்டும் இட்லி, தோசை, ஆப்பம், உப்புமா, பூரி, பாம்பே டோஸ்ட் என்ற வரிசை முறையில் ஏதாவது ஒன்று மேசைக்கு வரும். இரவில் மீந்து ஆறிப்போகும் சோற்றில் (அதாவது மீந்துபோகும்படி அளவு பார்த்துக் குக்கரில் வைப்பதால்!) தண்ணீர் ஊற்றி வைத்துவிட வேண்டும். காலையில் ’பழைய சோறு’ என்ற நாமகரணத்துடன் அது என் தந்தைக்காக மேசையில் காத்திருக்கும். சில்லென்ற காவிரித் தண்ணீரில் குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டே வரும் அத்தா அதே புத்துணர்ச்சியுடன் காலை ஆறு மணிக்குப் பழையதை உண்ணும் அழகே தனி. சிலநேரங்களில் அதில் கொஞ்சம் தயிர் விட்டுச் சாப்பிடுவார். தொட்டுக்கொள்வதற்குத் தொலி உரித்த சின்ன வெங்காயம் நாலைந்தும், பச்சை மிளகாய் இரண்டும் எடுத்துக்கொள்வார். பச்சை மிளகாயை அத்தனை ஆதூரமாக அவர் கடிப்பதைப் பார்க்கவே எனக்கு விந்தையாக இருக்கும். இந்த எளிமையான உணவுக் காம்பினேஷனில் அப்படி என்ன அதீத ருசி கொட்டிக்கிடக்கிறது என்று கேள்வி தோன்றும்.
2
கே.கே.நகரில் நாங்கள் இருந்தபோது அந்தப் பகுதியில் ஒரு எக்ஸ்-செர்வீஸ்மேன் இருந்தார். மிலிட்டரியில் கெட்டித்துப் போன அவரின் உடல் என்னவோ இரும்பால் செய்யப்பட்டது மாதிரி கிச்சென்று இருக்கும். உவமைக்கேற்ப அவர் ஆளும் இரும்பு நிறத்தில்தான் இருப்பார். முகத்தில் அப்பியது போன்ற தாடியும், தலையின் வளைவைப் போர்த்தியது போன்ற முடியும், எடுப்பான மூக்குமாக இருந்த அவரை எனக்கு இன்ஸ்டண்ட்டாகப் பிடித்துப் போனது. கரகரப்பான குரலில் ஓர் உறுதியும் லேசான அதிகாரத் தொனியும் கொண்டவர். மனதின் இமேஜ் மேப்பிங்கில் அவர் இந்தி நடிகர் நானா படேகர் சாயலில் இருப்பதாகப் பட்டது. அவரைப் பிடித்துப் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.
அப்போது ரமலான் மாதமும் வந்தது. ஒருநாள் தராவீஹ் தொழுகை முடிந்தவுடன் எல்லோரும் கலைந்து சென்று கொண்டிருந்தபோது யாருடனோ அவர் பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசுவதைக் கவனித்தபடி நான் பக்கவாட்டில் நடந்து வந்தேன். “சரியாச் சாப்பிட முடியலீங்க. நோம்பு நாள்ல சாப்பாடே எறங்காது இல்லீங்களா?” என்று அந்த நபர் இவரிடம் சொல்கிறார். இவர் சிரித்துக்கொண்டே, “அட என்னங்க பாய் நீங்க இப்படிச் சொல்றீங்க. நல்லாச் சாப்பிடுங்க. நோம்புங்கறது பின்னே எதுக்கு? நல்லாப் பசியறிஞ்சு ருசிச்சுச் சாப்பிடறதுக்குத்தானே?” என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார். சாலமன் பாப்பையா கணக்கில் பட்டிமன்ற தீர்ப்பைப் போல் அவர் சொன்ன அந்த வாசகம் ருசித்துச் சாப்பிடுவது பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை என் மனதில் உருவாக்கியிருக்க வேண்டும் என்று இப்போது எண்ணுகிறேன். ஆனால் நோன்பைப் பற்றிய அவருடைய தத்துவம் சரியானது என்று இப்போது என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது சம்மந்தமாக இன்னொரு சம்பவத்தையும் சொல்லிவிடுகிறேன்.
“ரமலான் நோன்பு என்பதே பசிக்கொடுமையை நாம் அறிந்து கொள்வதற்குத்தான். பசியின் கொடுமையை அறிந்தால்தான் ஏழைகள் படும் பாடு நமக்குத் தெரியும். அப்போதுதான் அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உருவாகும். ரமலான் நோன்பு அதற்கு வழி திறக்கிறது” என்று என் நண்பர் ஒருவர் நோன்பின் மாண்புகள் பற்றிப் பிரசங்கம் செய்தார். முடித்துவிட்டு நேராக என்னிடம் வந்து “எப்பிடிஜீ நம்ம பயான்? நல்லாயிருந்துச்சா?” என்று கேட்டார். சும்மா இருந்த சங்காகிய என்னை ஊதிக் கெடுத்துவிட்டாரா? என் அபிப்பிராயத்தை நான் சொல்லித்தானே ஆகவேண்டும். அப்போது நல்ல மூடில் வேறு இருந்து தொலைத்திருக்கிறேன் போல. நான் அவரிடம் ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தேன்! அதன் சாரம் இதுதான்:
“தோழரே! உங்கள் பயானில் கம்யூனிஸ நெடி கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது. இஸ்லாம் என்ற மோஸ்தரில் நீங்கள் மார்க்சிய-லெனினிய சித்தாந்தங்களை விதைக்கிறீர்கள் என்று படுகிறது. நோன்பின் நோக்கம் ஏழைகளின் பசித்துயரை அகற்றுவதுதான் என்று நீங்கள் சொன்னீர்கள். நோன்பில் அப்படி ஒரு விளைவு வருமென்றால் எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் நோன்பின் நோக்கமே அதுதான் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொருத்தவரை நோன்பு என்பது ஓர் ஆன்மிகப் பயிற்சி. முழுக்க முழுக்க ஆன்மிக நோக்கில் வகுக்கப்பட்ட ஒன்று என்றே கருதுகிறேன். “நோன்பு என்னுடையது, அதற்கு நானே கூலி தருகிறேன்” என்ற ஹதீஸ் குத்ஸியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அது மட்டுமல்ல, நீங்கள் சொல்வது போல் நோன்பின் நோக்கம் ஏழைகளின் பசிக்கொடுமையைப் போக்குவதற்குத்தான் என்றால் வருடமெல்லாம் உணவுத் தட்டுப்பாட்டால் வாடி வதங்கிய ஏழையின் மீதும் நோன்பு கடமையாவது ஏன்? அவனும் முப்பது நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லவா? வருடமெல்லாம் அரைகுறை உணவு மட்டுமே கிடைக்கும் அவனது லைஃப் ஸ்டைலால் நோன்பு வைப்பதற்கான சக்தி அவனிடம் இல்லாமல் போகக்கூடும். அந்த நிலையில் அவன் நோன்பு வைக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகையை அவன் தர்மம் செய்ய வேண்டும். ஆனால் அவன் பணத்திற்கு எங்கே போவான்? பணம் இருந்திருந்தால்தான் இப்படியொரு தரித்திர நிலையில் அவன் இருக்கவே மாட்டானே? இது ஒரு பக்கம் இருக்கட்டும் நண்பரே, முப்பது நாட்கள் நோன்பு வைக்கும் வசதி படைத்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது? நோன்பு வைப்பது, பசியை உணர்வது, ‘அம்மாடியோவ், பசின்னா இதுதானா?’ என்று கேட்டபடி வகை வகையான பழங்கள், ஜூஸ்கள், ஸ்வீட்கள் இத்தியாதிகளோடு நோன்பு திறப்பது. ஏப்பம் விட்டபடி வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்வது. இதில் ஏழைகளின் வறுமை நீங்குவதற்கான வழி எங்கே இருக்கிறது? நன்றாகப் பாருங்கள், நோன்பில் ஒருவர் உணர்வது தன் பசியைத்தான், ஏழையின் பசியை அல்ல. நம் சமுதாய நிலையைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.”
அதாவது, மேலே பார்த்த, ‘நானா படேகர்’ சாயல் கொண்ட பாயின் நோன்புத் தத்துவம்தான் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.
3
என் பள்ளிப் பருவத்தில் நாங்கள் கிராமத்தில் வசித்தபோது நாங்கள் இருந்த தெருவில் மூன்று குடும்பங்கள் மட்டுமே முஸ்லிம்கள். ஒரு கிறித்துவக் குடும்பமும் இருந்தது. ஆர்சி. மற்றவர்கள் இந்துக்கள்தான். யார் யார் என்ன ஜாதி என்றெல்லாம் நினைவில்லை. மூப்பனார், வன்னியர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இங்கே பிரஸ்தாப நோக்கம் ஓர் ஐயங்கார் குடும்பம். அவர்கள் அந்தத் தெருவிற்குக் குடி வந்த சில மாதங்களிலேயே எங்கள் குடும்பத்துடம் நெருங்கிவிட்டார்கள். நானும் தம்பியும் தங்கையும் பாதி நாள் அவர்கள் வீட்டில்தான் சாப்பிட்டோம். சில வருடங்கள் அவ்வளவு அந்யோன்யமாகப் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் வளர்ந்த பிறகு மனதில் அன்னியத் தன்மை படிந்துவிட்டது. நட்பின் எல்லைகள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன.
கல்யாணி மாமியின் கைப்பக்குவத்தில் உருவான அனேக பதார்த்தப் பட்சணங்களில் ஒன்று மட்டும் என் நினைவில் முட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கிறது. இந்நாள் ரசனையை வைத்துப் பார்க்கும்போது நியாயமாகக் ’காஃபி’தான் வந்து நிற்க வேண்டும். ஆனால் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது சர்க்கரைப் பொங்கல். வருடா வருடம் தைப்பொங்கல் வரும்போதெல்லாம் டிஃபன் கேரியர்களிலும் தூக்குகளிலும் பல வீடுகளில் இருந்து சக்கரை+வெண் பொங்கல், கரும்புத் துண்டங்கள் மற்றும் வேறு சில பட்சணங்கள் எங்கள் வீடு வந்து சேரும். உண்ண முடியாமல் திண்டாடுவோம். நான் கல்லூரியில் மாணவனாக இருந்த காலம் வரை அப்படி வந்துகொண்டிருந்தது. தீபாவளிக்கென்றால் ரவா லாடு, நெய்யுருண்டை போன்றவை வரும். இனிப்புக் கொழுக்கட்டை இன்னொரு மாதத்தில். அரிசி வெல்லம், காரச் சுண்டல் போன்றவை வேறொரு மாதத்தில். இப்படியாகப் பண்டிகைக்கு ஒரு ஸ்பெஷல் வந்துவிடும். இவற்றுக்கெல்லாம் தக்க கைம்மாறு செய்யவேண்டும் என்பது அம்மாவின் கொள்கை. எனவே ஆள் வைத்து பெரிய சட்டியில் பிரியாணி சமைத்து தயிர்சட்னி, கோழிப் பொறியல் மற்றும் ஒரு ஸ்வீட் சகிதம் தெரிந்தவர் வீடுகளுக்கெல்லாம் கொடுத்து அனுப்புவார், பெருநாட்கள் இரண்டிலும்.
எத்தனையோ பேர்களிடமிருந்து சர்க்கரைப் பொங்கல் வந்திருந்தாலும் கல்யாணி மாமி அனுப்பும் சர்க்கரைப் பொங்கல் மட்டும் தனியே தூக்கலாகத் தெரியும். அதன் அலாதியான ருசிக்காக ஆளாய்ப் பறப்போம். மூடியைத் திறந்ததுமே மூக்கைத் துளைக்கும் வாசனை அதன் முதல் ப்ளஸ் பாய்ண்ட் என்றால் ஒரு கை அள்ளினால் அதில் அரை முட்டை நெய் வழிவது அதன் இரண்டாம் கூட்டல் புள்ளி!
4
“ஆன்மிகத்தில் ஈடுபாடு இருக்குதுன்னு சொல்றீங்க, அப்பறம் ஏன் இவ்வளவு மேம்போக்காச் சாப்பிடறீங்க?” என்று என்னை அவர் கேட்டபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன், இது என்ன, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இந்த மனிதர் முடிச்சு போடுகிறாரே என்று. ”நாவு ருசி தேடுதற்கு ஆவி கெட்டு அலையாமல்” என்ற மஸ்தானப்பா வரிகள்தான் அப்போதும் என் மனதில் ஓடியிருக்க வேண்டும். “ஆஹா, தால்ச்சா செம டேஸ்ட்டா இருக்கு. இன்னுங் கொஞ்சம் ஊத்துங்க பாய்” என்று பந்தியில் உரத்தக் குரலில் உரிமையோடு கேட்டு அப்படியே தால்ச்சாவுக்காக ரெண்டு அன்னக்கை பிரியாணியும் வினயமாகப் பெற்றுக்கொண்டு ருசிப்பவர்கள் எல்லாம் ஆன்மிகத்திற்குள் நுழையாதவர்கள் என்ற அபிப்பிராயம் அப்போது இருந்தது உண்டு. அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது நஸ்ருல்லாஹ் சாகிப் சொன்ன விளக்கம்:
”உங்க நெனப்பு வேற திசையில இருக்கு. சோத்துப் பக்கியா அலையறது வேற. அல்லாஹ் கொடுத்த ரிஜ்க்ன்னு பாத்து அந்த இத்ராக்கோட சாப்பிடறது வேற. ’அத்அமனா வ அன்அமனா’ – அவனே புகட்டினான், அவனே குடிப்பாட்டினான்னு ஓதிப்பிட்டு நான் எடுத்துச் சாப்பிடறேன் நான் எடுத்துக் குடிக்கிறேன்னு நெனச்சா எப்பிடி? அவந்தான் ஊட்டுறான் அவந்தான் குடிப்பாட்டுறாங்கற உணர்வோட சாப்பிடனும். நாக்குல ரிஜ்க்கை வச்சதும் அதோட சுவைய அவந்தான் காட்டித்தர்றான்னு பாக்கணும். ஆகுமான சுத்தமான உணவை இந்த விதமா நெறயா சாப்பிட்டாலும் தப்பில்ல. கொஞ்சமாச் சாப்பிடறது நபிவழிதான். அதுக்காக நெறயா சாப்பிடறவங்களுக்கு ஆன்மிகம் வராதுன்னு நெனக்கிறது சரியில்ல. நான் சொன்ன கணக்குல திக்ரோட சாப்பிடறவங்களுக்கு ஆன்மிக அந்தஸ்த்து கெடைக்குமா கெடைக்காதா சொல்லுங்க?”
சொன்னது மட்டுமல்ல, தான் சொன்னதைச் செயலிலும் காட்டினார் நஸ்ருல்லாஹ் சாகிப். மேஜையில் தேநீரும், ஒரு தட்டில் சில பழங்களும், ஒரு கிண்ணத்தில் புட்டரிசி ஹல்வாவும் வைத்தேன். ஒவ்வொன்றையும் நாவில் கரைய விட்டுச் சுவை பார்த்து நிதானமாகச் சாப்பிட்டார். உண்பது ஓர் உயர்ந்த தியானம் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.
o
இந்தக் கட்டுரையைத் தட்டிக்கொண்டிருப்பதற்கு உந்துதலாய் அமைந்த நிகழ்ச்சியை இப்போது சொல்கிறேன். நாலு நாட்களுக்கு முன் நடந்தது. பணி முடித்து வீடு திரும்பினேன். வாசலில் காலணியைக் கழற்றிக் கொண்டிருக்கும்போதே உறவினர்கள் ஊரிலிருந்து வரும் விஷயத்தையும் வீட்டில் ஸ்நாக்ஸ் ஒன்றுமே இல்லை என்னும் விஷயத்தையும் என் சகதர்மினி தெரிவித்தாள். வடை வாங்கி வருகிறேன் என்றேன்.
“முந்தாநாளு வாங்கிட்டு வந்த வடைன்னா வேண்டவே வேண்டாம். மொந்து மொந்துன்னு வாய்ல வைக்க வெளங்கல. யாருமே தொடல. அப்படியே தூக்கிக் குப்பையில போடறாப்ல ஆயிடுச்சு” என்றாள்.
ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு நான் (என் வாழ்க்கைக்கு) வடை தேடி ஒரு புதிய திசையில் பயணித்தேன். வாய்க்கு ருசியாக ஒரு வடைகூட வாய்க்காத எங்கள் ஏரியாவை விட்டு வெளியேறினேன். சுப்ரமணியபுரம் போனால் நல்ல வடை கிடைக்கக்கூடும் என்று ஒரு யோசனை வரவே வண்டியைக் கல்லூரிக்குள் விட்டேன். ஒரு மனிதன் இதயச் சுத்தியுடன் வடை தேடி அலையும்போது இறைவன் அவனுக்கொரு வழி காட்டாமலா போய்விடுவான்? அரபிப் பேராசிரியர் காஜா மொய்தீன் கண்ணில் பட்டார். முதல்வர் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்தவரை மடக்கிக் குசலம் விசாரித்துவிட்டு என் பிரச்சனையைத் தெரிவித்தேன்.
”பருப்பு வடைதான் சார் வேணும். சின்ன வடையா இருக்கணும் சார். அப்பத்தான் முழுசா பொறிஞ்சிருக்கும். பெரிய வடைலாம் உள்ளே வெந்தும் வேகாமயும் இருக்கு.”
“இங்கயே கிடைக்குதே, க்ரிஷ்ணா ஸ்டோர் பக்கத்துல. ஒரு கிழவி ஐம்பது காசுக்குப் போடுது. நல்ல டேஸ்ட்டா வேணும்னா இன்னும் கொஞ்ச தூரம் தள்ளிப் போங்க. சகாயமாதா க்ளினிக்கல் லேப் இருக்கே, அந்தச் சந்துக்கு முன்னாடி ஒருத்தர் வண்டியில வச்சுப் போடுறார், ஒர்ருவான்னு.”
புன்முறுவலுடன் அவர் என்னை ஆற்றுப்படுத்தியபோதே என் மனதில் நம்பிக்கை பிறந்துவிட்டது, நல்ல முறுவலான பருப்பு வடை கிடைத்துவிடும் என்று. வண்டியைக் கிளப்பும் முன் அவரிடம் சொன்னேன்:
“ருசியா வேணும்னு வந்துட்டா இப்படித்தான் தேடித் தேடி அலையணும் சார்”
o
”துலுக்கன் தின்னு கெட்டான்” என்று ஒரு சொலவடை உண்டு. முஸ்லிம்களின் வாழ்வியல் சம்மந்தமான பல சொலவடைகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் உருதுச் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியைப் பார்த்த போது மேற்படிச் சொலவடைக்குத் தமிழக முஸ்லிம்கள் தகுதியானவர்கள் அல்ல என்று தோன்றியது. அதில், காஷ்மீர் ச்செஃப் ஒருவர் பிரியாணி ஆக்கிக் காட்டினார். பாஸ்மதி அரிசி, கோஷ்த் (ஆட்டிறைச்சி), தயிர், புதினா, முந்திரிப் பருப்பு, பாதாம் துருவல், உலர் திராட்சை, பட்டை, ஏலக்காய் போன்ற பொருட்கள் எல்லாம் நாமும் இங்கே பயன்படுத்துபவைதான் என்றாலும் அவர் நீட்டிக் கொண்டே போன பட்டியலில் நான் கேள்வியே பட்டிராத பொருட்களும் இருந்தன. நிறத்திற்காக ஒரு கொத்து குங்குமப் பூவைத் தூவினார். கேவ்டா துளிகள் கொஞ்சம் தெளித்தார். ஜாவித்ரிப் பொடி என்று சொல்லி அந்த வஸ்து கொஞ்சம் தூவினார்.(இது நம்மூரில் கிடைக்கும் ஜாதி பத்ரி போலும்.) ரோஜா எஸ்ஸென்ஸ் ரெண்டு சொட்டு விட்டுக்கொண்டார். ஏதோ ஒரு இலையை இடையிடையே செருகி வைத்தார். ”தம்” போட்டு முடித்து மூடியை அவர் திறந்த போது ஆவி பறந்தது. அன்னக்கையால் அள்ளி எடுத்துத் தட்டில் வைத்தார். மூன்று நிறங்களில் இருந்தது பிரியாணி. பார்த்துக் கண்கள் கலங்கி விசித்தேன்!
சொலவடை இப்படி இருக்கிறதே என்பதற்காக நாவு ருசிக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் வேறு சமயத்தவர்கள் சோடை போனவர்கள் என்று சொல்ல முடியுமா? அதுவும் தி.ஜானகிராமனைப் படித்த பிறகு?
சைவ உணவு ரசனைக்கு என் வாத்தியார் என்று தி.ஜாவைத்தான் சொல்வேன். “நளபாகம்” என்று பெயர் வைத்து அவர் எழுதிய நாவல் அவர் எழுதிய கடைசி நாவலாக அமைந்ததில்கூட ஓர் அர்த்தம் இருக்கிறதோ என்னவோ? கடுகு உலுத்தம்பருப்பு தாளிப்பதை வைத்தே பதினைந்து பக்கங்களில் ஒரு சிறுகதையை உருவாக்கி விடக்கூடிய அபாரமான எழுத்துத் திறமை கொண்டவர் அவர். தஞ்சை ஜில்லாவின் கிராமத்து நெய்க் கத்திரிக்காயை அவர் அரிந்து காட்டும் போது அதில் சொர்க்கத்தின் சுவையைக் காட்டிவிடுவார். கீரைக் கடைசலை நம் மனதில் கடைந்து நாவில் நீர் சொட்ட வைத்துவிடுவார்.
பி.ஏ.கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை” நாவலுக்கு யாரோ எழுதிய விமரிசனத்தில் அந்த நாவலின் முக்கியமான அம்சமாக வைணவ பிராமணர்களின் கலாச்சாரக் கூறாக இருக்கும் உணவு ரசனையை அவர் குறிப்பிட்டிருந்தார். அதை இலக்கியப் பதிவாக்கிய முன்னோடி எழுத்தாளர் தி.ஜாதான் என்று நினைக்கிறேன். லா.ச.ராமாமிருதம் அதே சமூகம் பற்றி இவ்வளவு எழுதியிருந்தும் அன்னபூரணி பற்றி எழுதியிருக்கும் அளவு அவர் அன்னத்தைப் பற்றி எழுதவில்லை.
“குழந்தைகள் பாலை விரும்புகின்றன
வளர்ந்தவர்கள் பாலூட்டுபவளைக் காதலிக்கிறார்கள்”
என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்!
//“குழந்தைகள் பாலை விரும்புகின்றன
ReplyDeleteவளர்ந்தவர்கள் பாலூட்டுபவளைக் காதலிக்கிறார்கள்”
என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்!//
excellent sir
//அத்அமனா வ அன்அமனா’ //
ReplyDeleteஇது போல் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஹக்கை பார்ப்பது மிக பெரிய விஷயம்
நஸ்ருல்லாஹ் சாகிப் - இவங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா
ReplyDeleteபேராசிரியரே நீங்கள் பரம ரசிகர் ஐயா! உணவு, இலக்கியம் இரண்டையும் நன்கு ரசிக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
ReplyDelete///அரைத் தூக்கத்தில் மல்லாந்தும் ஒருக்களித்தும் கிடக்கும் துப்பட்டிகள் நடுசாமத்தில் விருந்துப் பந்தி ஆரம்பமானதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்வதும்,///
'அன்ன விசாரம் அதுவே விசாரம்..'!
///சாப்பாடு போட்டதும் ஒவ்வொருத்தரு எலயிலயும் சோத்தப் பாக்கணுமே, சின்னப் புள்ள கபுறு மாதிரி!”///
கபுறு என்பது என்ன? அது தெரிந்தால் தான் ஜோக் பிடிபடும்.
///நீங்கள் சொல்வது போல் நோன்பின் நோக்கம் ஏழைகளின் பசிக்கொடுமையைப் போக்குவதற்குத்தான் என்றால் வருடமெல்லாம் உணவுத் தட்டுப்பாட்டால் வாடி வதங்கிய ஏழையின் மீதும் நோன்பு கடமையாவது ஏன்? ///
நல்ல கேள்வி. காந்திஜியின் உண்ணாநோன்பைப்பற்றிய விமர்சனத்தில்
" நோன்பு முடிந்தவுடன் உணவு கிடைத்துவிடும் என்று அறிந்தவனின் நோன்பைக் காட்டிலும், அடுத்த வேளை உணவு எப்படி கிடைக்கும் என்று ஏங்குபவனின் நோன்பே பெரியது." என்ற வாசகம் உண்டு.
///ஓர் ஐயங்கார் குடும்பம். அவர்கள் அந்தத் தெருவிற்குக் குடி வந்த சில மாதங்களிலேயே எங்கள் குடும்பத்துடம் நெருங்கிவிட்டார்கள். நானும் தம்பியும் தங்கையும் பாதி நாள் அவர்கள் வீட்டில்தான் சாப்பிட்டோம்.///
சாதாரணமாக முஸ்லிம்களும் அய்யஙார்களும் நட்புறவு அதிகம்.சராணாகதி தத்துவம் காரணமோ?
சிவ வழிபாட்டை இருவருமே கண்டுக்காதது காரணமோ? தெரியலையே!
/// கல்யாணி மாமி அனுப்பும் சர்க்கரைப் பொங்கல் மட்டும் தனியே தூக்கலாகத் தெரியும். அதன் அலாதியான ருசிக்காக ஆளாய்ப் பறப்போம். மூடியைத் திறந்ததுமே மூக்கைத் துளைக்கும் வாசனை அதன் முதல் ப்ளஸ் பாய்ண்ட் என்றால் ஒரு கை அள்ளினால் அதில் அரை முட்டை நெய் வழிவது அதன் இரண்டாம் கூட்டல் புள்ளி!///
மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்...!
//ஒவ்வொன்றையும் நாவில் கரைய விட்டுச் சுவை பார்த்து நிதானமாகச் சாப்பிட்டார். உண்பது ஓர் உயர்ந்த தியானம் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.//
ஜென் மதத்தில் தேனீர் அருந்துதல் போலவா?
//“ருசியா வேணும்னு வந்துட்டா இப்படித்தான் தேடித் தேடி அலையணும் சார்//”
சாப்பாடுல மட்டுமா எல்லாத்தலயும் தான்.உங்களைத் தேடிக்கண்டதைப்போல!
//துலுக்கன் தின்னு கெட்டான்” என்று ஒரு சொலவடை உண்டு.//
இங்கே பாப்பான் தின்னுகெட்டான் என்றுதான் சொல்வார்கள்.
//தஞ்சை ஜில்லாவின் கிராமத்து நெய்க் கத்திரிக்காயை அவர் அரிந்து காட்டும் போது அதில் சொர்க்கத்தின் சுவையைக் காட்டிவிடுவார். கீரைக் கடைசலை நம் மனதில் கடைந்து நாவில் நீர் சொட்ட வைத்துவிடுவார்.//
அடடா! திஜா வை இந்த கோணத்தில் கூடப் பார்க்கலாமா?
எண்ணைக் கத்திரிக்காய் என்றுதான் சொல்லுவோம்
கபறுக்குப் பொருள் தெரியாமல் இருந்தது.இப்போது தெரிந்து விட்டது. அப்பா! நினைத்தாலே பயங்கரமாக இருக்கே! cruel joke தான்!
ReplyDelete