வைகறை சுவாசிக்கும்
மந்திரப் பொழுது
சோலைக்குப் போ – அது
சொர்க்கத்தின் நிழல்
காலணியோடு
கவலை கழற்று
புல்லின் இதழ்கள்
உள்ளங்கால் வருட
மெல்ல நட
இலைகளில் நிரம்பும்
இளவெயில்
விழிகள் பருகும்
பச்சைத் தேநீர்
ஒவ்வொரு மரமும்
போதி மரம் – இதை
உணரா மனிதன்
பாதி மரம்
பச்சைக் கிளைகளில்
பறவையின் பாடல்
உச்சிக் கிளைகளில்
காற்றின் ஊஞ்சல்
ஆலங் கிளைகளில்
அணில் விளையாடல்
சோம்பல் முறிக்கும்
மூங்கிலின் சப்தம்
கண்கள் மூடு
காதுகள் திற
மண்வாசம்
மனது தடவ
காற்றின் விரல்கள்
தலை கோதும்
வரம்
வேறென்ன வேண்டும்?
இது போதும்.
//ஒவ்வொரு மரமும்
ReplyDeleteபோதி மரம் – இதை
உணரா மனிதன்
பாதி மரம்//
ஆஹா! என்ன ஒரு 'ரைமிங்'!
இப்படி ரைமிங் எல்லாம் போட்டா நாங்க புதுக்கவிதையின்னு ஏத்துக்கிட மாட்டோம். ஆமா! சொல்லிப்புட்டேன்!