Thursday, July 21, 2011

அரச மரம்




சூரிய ஒளியில்
ஆயிரம் இலைகள்
இதயங்களாய்த் துடிக்க
நிற்கிறது அரச மரம்

தன்னுள் எல்லாம் அசைய
தான் அசையாது நிற்கும்
பேருண்மையின்
குறியீடு போல்.

இலையொன்றில் தொடங்கி
கொப்பென்றும் கிளையென்றும்
பார்வை ஓடி
எவ்வொரு இலைக்கும் போகும்

காற்றில் நடனமிடும்
ஒவ்வொரு இலைக்கும்
நட்சத்திர வானமாய்
நிற்கிறது அது

மனிதன் கற்பனித்த
பிரதிமைகள்
தன் காலடியில் இருக்க
விராட் சொரூபமாய்
நிற்கிறது அது

பிரதிமைகளை
வழிபட்டு நகரும்
விழிகளை விலக்கி
ஒரு மூன்றாம் கண்ணின்
தரிசனத்திற்கு
தவம் செய்கிறது அது

நிலவின் பால் ஒளியில்
நனைந்து மின்னி
கர்ப்ப இருளில்
மோனச் சிலையாய்
நிற்கிறது அரச மரம்

சின்ன விதையாய்
என்னுள் உருளும்
இறை நம்பிக்கை
அரச மரமாய்
ஆவது எக்காலம்?

சேதி கொணரும்
பறவைகள்
என் கிளைகளில்
கீதம் இசைப்பது
எக்காலம்?



1 comment:

  1. //தன்னுள் எல்லாம் அசைய
    தான் அசையாது நிற்கும்
    பேருண்மையின்
    குறியீடு போல்///

    அட! இது நல்லாயிருக்கே!

    ReplyDelete