Sunday, July 24, 2011

மீன் வித்தை

(சிறுகதை)
 

காவிரி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுதல் சொல்லிக்கொள்வது போன்ற நீரோட்டம். பாதி மணலும் பாதி நீருமாய் விரிந்த காட்சி. ‘வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்’ என்றார் இளங்கோ. இப்போதெல்லாம் வருடத்தில் பல மாதங்கள் இப்படி மடி வற்றிய கோலம்தான். கோடையில் முழுதாக வரண்டு கிடப்பதும் உண்டு. நுரை மிதக்கச் சுழித்துக்கொண்டு ஓடும்  வெள்ளோட்டத்தை ஆடிப்பெருக்கில் பார்க்கலாம்.

நதி தனக்கென்று தானே உருவாக்கிக்கொண்ட பாதையில் வேறு எதுவும் ஓடுதற்கில்லை. தன் அழகை உலகம் கண்டு ரசிக்க மட்டுமல்ல, இரண்டு கரைகளும் ஒன்றை ஒன்று ரசிப்பதற்காகவும் நதி நடுவில் ஓடுகிறது போலும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். இங்கே இரண்டு கரைகளுமே பச்சைதான்.

பொன்னாவரைக்குப் போகும் படுகைப் பாதை நெடுக வாழைத் தோப்புகளும் மூங்கிற் புதர்களும் மரங்களுமாகத்தான் இருக்கும். இடையில் ஒரு படித்துறை மண்டபம் உண்டு. படிகள் உடைந்து பாதி தண்ணீருக்குள் சாய்ந்து கிடந்தன.
நடுக்கடைக்கும் திருவையாற்றுக்கும் இடையில் நிற்கும் பாலம் தூரத்தில் தெரிந்தது. அரசர் கல்லூரிப் படித்துறை, செவ்வாய்க்கிழமைப் படித்துறை, தியாகராஜ சுவாமி மண்டபப் படித்துறை என்று அந்தக் கரையில் வீடுகளும் மண்டபங்களும் நெட்டுக்கு. தியாகராஜர் சமாதிக்கு அடுத்தாப்ல சுடுகாடு. அப்புறம் தோப்புகள்.



சூரியன் சாயத் தொடங்கியிருந்த நேரம். முழங்கால் அளவிலிருந்து வயிறு வரை மட்டுமே ஆழமுள்ள அந்த நீரோட்டத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மணலே தென்படாமல் நதி முழுவதும் தண்ணீராக ஓடினாலும் சரி, தண்ணீரே இன்றி முழுவதும் மணலாகக் கிடந்தாலும் சரி, அதிலே விளையாட்டு சுவைப்பதில்லை. மணற்பரப்பின் ஊடாக வளைந்து வளைந்து ஓடும் இந்த அளவு தண்ணீரில்தான் விதவிதமாக விளையாட முடிகிறது. குளித்துக்கொண்டே விளையாடுவது அல்லது விளையாடிக்கொண்டே குளிப்பது. பள்ளிக்கூட வியர்வையின் கசகசப்பை நீரின் குளுமையால் நீக்கும் விளையாட்டு, கசப்பை நீக்கும் இனிமை.

கல்யாணபுரம் அக்ரஹாரத்தின் விளிம்பில் படுகை ரோட்டின் ஓரத்தில் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து ஓடிவந்தான் அவன். காலிலும் கையிலும் தாடையிலும் துருத்திக் கொண்டிருந்த கணுக்கள் அவன் விளிம்பு நிலை மக்களின் வாரிசு என்பதை, சத்துணவுத் திட்டத்தின் ஆதரவில் வளரும் சோனிப் பிள்ளை என்பதைக் காட்டின. படுகைச் சரிவில் நாணல்களின் ஊடாக லாவகமாக பாய்ந்திறங்கி ஆற்று மணலில் குதித்தான். பாதங்கள் செருகச் செருக நடந்தான். பகலெல்லாம் சூடேறிக்கிடந்த மணல் இன்னமும் தகித்தது. தண்ணீரில் இறங்கி ஏறி நடந்தான். ஆற்றின் நடுவில் அவனது சகாக்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உடையாத பிள்ளைக் குரலில் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியாகக் கத்தினான். அவர்கள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“டேய், ஒங்கப்பாரு ஊட்ல இல்லியா?”
“இன்னிக்குத் தேர்முட்டில மீட்டிங்கு. எங்கப்பா ராத்திரி ஒரு மணிக்குத்தான் வருவாரு”
“வீட்டுப்பாடம் முடிச்சுட்டியா?”
“இல்ல. வெளயாடிட்டுப் போயி படிச்சுக்கலாம்”
“ஒங்கம்மா எப்படிடா விட்டாங்க?”
“தெரியாம ஓடியாந்துட்டேன்”
“மீனு புடிக்க வர்றியா?”
“ம்… நல்ல ஐடியாதான். பெரிய கெண்டையா ரெண்டு மூனு மாட்டிச்சுன்னா கொண்டுபோய் அம்மாட்ட குடுத்தா அடி உளுவாது”
“பெரிய கெண்டையெலாம் இங்கிட்டு வராதுடா. அதையெலாம் புடிக்க நரம்பு வச்ச தூண்டி வேணும். இங்க அயிரக் குஞ்சுதான் வருது. நான் இப்பயே பத்து புடிச்சுட்டேன். என்னை ஜெயிக்க முடியுமா ஒன்னால?”
“ம்.. ஜெயிப்பேன்”
”போடா புளுகு மூட்ட. நீ எப்பயாச்சுந்தான் வர்ற. ஒன்னால முடியாதுடா”

அவன் அவர்களைப் பார்த்தான். வேகமாக நடந்து வந்த இரைப்பு இன்னும் அடங்கவில்லை. சூரியனின் ஒளியில் தேன் நிறமாக மின்னிய பூனை முடியில் நெற்றி வியர்வை ஓரமாக வழிந்தது. புறங்கையால் துடைத்துக்கொண்டே அவர்களைப் பார்த்தான். நீரோட்டத்தை ஒட்டிய மணல்மேட்டில் ஆளுக்கொரு ஊற்று தோண்டி வைத்திருந்தார்கள். பிடிபட்ட அயிரை மீன்கள் அவற்றினுள் திகிலுடன் திரிந்து கொண்டிருந்தன. ஓடும் நீர் விடுதலை. தேங்கும் நீர் சிறை. ஆற்றோட்டத்தில் ஓடியிருந்த மீன்களுக்கு இப்போது நீர்ச்சிறை. 



ஒரு பையன் பெரிய கண்ணாடி பாட்டில் ஒன்று கொண்டுவந்திருந்தான். அதனுள்ளும் நான்கு மீன்கள் சுற்றிச் சுற்றி வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவன் ஓர் இடத்தில் அமர்ந்து வேகவேகமாக மணலைத் தோண்டினான். அரையடி ஆழத்திலேயே, அள்ளிய மணலில் நீர் வழிந்தது. சரியும் மணலை ஒதுக்கி ஒதுக்கி ஒரு சின்ன ஊற்று தோண்டினான். நீர் ஊறி வந்து தெளிந்து நின்றது. மீன் பிடித்துப்போட வேண்டும். விளையாட்டுதான். போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போவதும் உண்டு. பாட்டிலில் எடுத்துக் கொண்டும் போகலாம். ஆனால் பொன்ராசு எப்போதும் அப்படியே மணலைத் தள்ளி மூடிவிட்டுப் போவான்.

”அதெல்லாம் சாவாதுறா. அப்படியே கொடஞ்சுக்கிட்டு தண்ணிக்குப் போயிரும்”
“நெசமாவா?”
“வேணும்னா நாளக்கி வந்து தோண்டிப் பாரு. இருக்காது”

அவன் சொல்வது உண்மையாகவே பட்டது. மறுநாள் ஊற்று தோண்டும்போது மீன்கள் இருப்பதில்லை. மணலடியாகச் சுரங்கம் குடைந்து தப்பித்துவிடும் வித்தை அறிந்த வீரர்களாகவே அந்தச் சின்ன மீன்கள் மனதில் பதிந்துவிட்டன.
அவன் ஆற்றுநீரில் இறங்கினான். கால் பாவிய இடத்தில் மணல் பதிந்து எழுந்தது. நீரோட்டத்தில் நீண்டு அடங்கியது. புருவங்களை நெறித்துக் கண்களைச் சுருக்கிக் கொண்டு குனிந்து நீரில் தேடினான். கைகள் குடமிட்டுத் தயாராக இருந்தன. அயிரை மீன்கள் பொடி மீன்கள். நீருக்குள் இருக்கும்போது கண்ணில் படுவதும் லேசில்லை. வேகமாக நகர்ந்து மாயமாய் மறைந்துவிடக் கூடியவை. அலக்காக அள்ளி உள்ளங்கையில் எடுத்து வந்து தோண்டி வைத்த ஊற்றுக்குள் போடுவது ஒரு தனிக் கலைதான்.



சூரியன் உக்கிரம் குறைந்து வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் பளபளக்க, காற்றில் மாலை நேரத்தின் லேசான குளுமை வெளிப்பட்டது. அதில் ஒரு புதிய விசையும் இருந்தது. மண்டபத்திலும், தேக்கு மரங்களிலும் காகங்கள் கரைந்தபடி அலைந்து கொண்டிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரத்தில் அந்தி சாய்ந்துவிடும்.
அவன் ஐந்து மீன்கள் பிடித்திருந்தான். ஆறாவதைத் தேடி நீரில் நகர்ந்து கொண்டிருந்தான்.



கூச்சலும் சிரிப்புமாக ஒரு கும்பல் படுகை ரோட்டிலிருந்து இறங்கி மணலில் நடந்து வந்துகொண்டிருந்தது. இளைஞர்கள், சிறுவர்கள். ஆண்கள், பெண்கள். மீன் பிடிப்பதை விட்டுவிட்டு அவர்கள் அந்தப் புதிய கும்பலைப் பார்த்தார்கள். வெளியூர்க்காரர்கள். அக்ரஹாரத்திலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்தது. ஒருவன் காதில் ஏர்ஃபோன் மாட்டியிருந்தான். என்ன இசை கேட்கிறானோ தெரியவில்லை, அவன் கைகளும் கால்களும் விலுக் விலுக்கென்று இழுத்துக் கொண்டிருந்தன. தியாக பிரும்மத்தின் சமாதி மண்டபத்தைப் பார்த்ததும் அவர்களில் ஒரு பெண் ‘ஜகதானந்(ந்ந்ந்ந்ந்)தகாரகா…” என்று நடுவில் அழுத்தி இழுத்து ‘கா’வில் நீட்டி முகத்தில் அழகு காட்டினாள். கீர்த்தனையை ஏதோ பஜ்ஜியாக்கி சாப்பிடுவது போல் இருந்தது அதை அவள் அஞ்சலி செய்தவிதம். அவர்களுக்கு இடையில் சில பொடிசுகளும் ஓடியபடி வந்தன.

“யாருடா இவுங்க?”
“தெரியலடா. கல்யாணபுரத்துக்கு வந்திருக்காங்கன்னு நெனக்கிறேன்”
“ஆமாண்டா. அய்யிருங்கதான். அந்தம்மா சாமி பாட்டு பாடுறாங்க”
“டேய், எங்கம்மா வேல செய்யிற வூட்டுக்கு வந்திருக்கற விருந்தாளிங்கடா. பர்சன்னா வர்றான் பாரு”

சொல்லிக்கொண்டே அவன் தண்ணீரை விட்டு மேலேறினான். தன் எசமானின் உறவுக்காரர்கள் என்ற உரிமையில் தேங்காச் சில்லு போன்ற பல்லைக் காட்டி ஒரு சல்யூட் போட்டான். அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒற்றை நாடியாக நெடு நெடு என்றிருந்த ப்ரஸன்னா என்ற அந்தச் சிவப்புப் பையன் தன் குரலில் சற்றே அதிகாரம் தொனிக்கப் பேசினான்.

“இங்க என்னடா பண்ற?”
“விளையாடறேன். மீன் புடிச்சிருக்கேன்”



தான் தோண்டியிருந்த ஊற்றுக்கு அருகில் குத்தவைத்து அதனுள் இருந்த மீன்களைக் காட்டினான். கையின் நிழல் நீரில் விழுந்ததும் ஐந்து அயிரை மீன்களும் கலைந்து ஓடி அலைந்தன. சூரியன் செம்பழமாய்ச் சாய்ந்து கொண்டிருந்தது.
ப்ரஸன்னாவின் பின்னால் நின்றிருந்த ஒரு பெண்பிள்ளை ஆர்வமாக முன்னால் வந்து முழங்காலில் முட்டுக்கொடுத்துக் குனிந்து ஊற்றினுள் பார்த்தாள். தங்க சரிகையிட்ட வெண்பட்டுப் பாவாடை உடுத்திய அந்தச் சிறுமியின் கண்கள் அவனைப் பார்த்தன. வெயில் பட்டு வெண்பட்டு மின்னிற்று.

“இந்த மீன என்ன செய்வ?”
“ஆக்கித் திம்போம்”

அருகிலிருந்த பசங்க சிரித்தார்கள். அந்தச் சிறுமியின் பேதைமை தோன்றிய கேள்வியை எள்ளிய சிரிப்பு. கேள்வியின் சொற்களில் அல்ல, அதன் தொனியில் பேதைமை இருந்தது. அந்தத் தொனியை உருவாக்கிய குரலில். அந்தக் குரலுக்கு பாவம் காட்டிய முகத்தில். அதன் பெரிய விழிகளில்.

ஒரு கணம் மௌனமாக இருந்தாள். சட்டென்று முழங்காலிட்டு அமர்ந்து ஆற்று நீரின் பக்கமாக ஊற்றை உடைத்தாள். முழங்கைகள் வரை ஒட்டிய ஈர மணல் அவளின் வெண்பட்டாடையில் தெறித்து நனைத்தது. ப்ரஸன்னா அவளைப் பிடித்து இழுத்துத் தூக்கினான். அவள் தன் பாதத்தை நீருக்குள் வைத்து மணலை எற்றித் தள்ளினாள். ஊற்று நீருடன் அயிரை மீன்கள் விடுதலை அடைந்து ஆற்றுக்குள் ஓடிப்போயின. பசங்களின் கைத்தட்டல்களும் ஆரவாரச் சிரிப்பும் வேடிக்கையாய் இருந்தன. திமிரிக்கொண்டு ப்ரஸன்னாவின் கைகளைத் தட்டிவிட்டாள் அவள். நீர் துளித்த கண்களில் ஒருவித உக்கிரத்துடன் உதடுகளில் புன்னகை துடிக்க ‘அவனை’ ஒரு பார்வை பார்த்துச் சென்றாள். அந்தக் கும்பல் மெல்ல அப்பால் நகர்ந்தது. சூரியச் செம்பழத்தின் கனற்சாறு முகத்தில் வழிய அவன் செய்வதறியாது அமர்ந்திருந்தான்.

ஊற்று காலியாகியிருந்தது. ஆற்று நீர் அதனுள் அலையடித்தது. மீன்கள் ஓடிவிட்டன. மனதில் ஒன்றுமே தோன்றாத வெறுமை கவிந்திருந்தது. பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவனது சகாக்கள் அவனைக் கேலி பேசத் தொடங்கினர். கண்ணாடி பாட்டிலில் இருந்த மீன்களைக் காட்டி அவன் முகத்தின் முன் ஒருவன் ஆட்டினான். பெண்பிள்ளையிடம் இவன் அவமானப் பட்டுவிட்டதாகக் கிண்டல்கள் விளையாடின. சிறுவனின் ரோசத்தைக் கிள்ளும் பகடிகள். சூரியன் மறைந்து இருள் பூசத் தொடங்கியிருந்தது.
அவன் சட்டென்று கையில் மணலை அள்ளி அவர்கள் மீது வீசினான். எழுந்து அவர்களின் சட்டையைப் பிடித்துத் தள்ளினான். முகம் சுருக்கி அழுதபடி ஒருவனை எட்டி உதைத்தான். மண்ணில் விழுந்து புரண்டெழுந்தான். சக்தி அவனுக்குள் ஊற்றெடுத்துப் பொங்க ருத்ர தாண்டவம் ஆடினான். சுடுகாட்டுக் காளி அவன்மீது ஏறிவிட்டதாகக் கிண்டல் செய்தபடி அவர்கள் ஓடினார்கள். சிறிது தூரம் துரத்திக்கொண்டு போய் மணலை அள்ளி வீசிவிட்டு தொப்பென்று அமர்ந்தான்.

மூச்சிரைத்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சினான். உடலெல்லாம் மணலாகியிருந்தது. கண்களை மூடினான். மூச்சின் சப்தமும் இருதயத் துடிப்பும் அவனுக்கே இரைந்து கேட்டது. மனதில் அவளின் முகம், அந்த உக்கிரமான பார்வை நிழலாடிற்று. அந்த முகத்தில் அவனது மனம் குவிந்திருந்தது. கிணற்றுக்குள் ஆழிருட்டில் பளிச்சிடும் மீன்களைப் போல் அவளின் கண்கள் மின்னின. “போடி சுடுகாட்டுக் காளி” என்று அவளைத் தன் மனதினுள் வைதான். கண்கள் திறந்து வானத்தைப் பார்த்தான். அவள் முகம் கறுப்பாகி விரிந்து இப்போது ஆயிரம் கண்களுடன் அவனைப் பார்ப்பதாகப் பட்டது.

 

1 comment:

  1. ///ப்ரஸன்னாவின் பின்னால் நின்றிருந்த ஒரு பெண்பிள்ளை ஆர்வமாக முன்னால் வந்து முழங்காலில் முட்டுக்கொடுத்துக் குனிந்து ஊற்றினுள் பார்த்தாள். தங்க சரிகையிட்ட வெண்பட்டுப் பாவாடை உடுத்திய அந்தச் சிறுமியின் கண்கள் அவனைப் பார்த்தன. வெயில் பட்டு வெண்பட்டு மின்னிற்று.

    “இந்த மீன என்ன செய்வ?”
    “ஆக்கித் திம்போம்”

    அருகிலிருந்த பசங்க சிரித்தார்கள். அந்தச் சிறுமியின் பேதைமை தோன்றிய கேள்வியை எள்ளிய சிரிப்பு. கேள்வியின் சொற்களில் அல்ல, அதன் தொனியில் பேதைமை இருந்தது. அந்தத் தொனியை உருவாக்கிய குரலில். அந்தக் குரலுக்கு பாவம் காட்டிய முகத்தில். அதன் பெரிய விழிகளில்.///

    அடடா! என்ன ஒரு innocence. அந்தக் காட்சி அப்படியே புகைப்படம் போல வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள் ஐயா! நன்றி!

    ReplyDelete