கனவு நெய்யப்படும்
கணத்தின் மௌனத்தில்
நினைவுப் பரப்பின்
விளிம்புச் சுவரில்
சட்டென்று திறந்தது
கதவு
இதற்கும் அதற்கும்
இடையில்
ஒளியாலானது போல்
நின்றது அது.
வசீகரிக்கும் ஒளி
அப்பக்கம் வருமாறு
அழைக்கிறது.
கோடை வசந்தம்
மழை பனியாய்
இந்தப் பருவ காலங்கள்
ஐவகை நிலங்களில்
அள்ளித் தெளித்த
ஆயிரம் வகை அழகுகள்
வான் மண்
வளி நீர் தீ எனும்
ஐம்பூதம் சுமந்து தரும்
உயிரின் சுவை
ஆண்மை பெண்மை என்னும்
இந்த முரணாத முரண்
சொட்டிச் சொட்டி
ஒவ்வொரு துளியிலும்
கடல் காட்டும்
இந்தக் காலம்
இப்பால் உள யாவும்
அப்பாலும் உண்டோ?
இழந்து போவேனோ
என்ற அச்சத்தின் மீதும்
மெல்ல பரவுகிறது
ஒளிரும் கதவின்
ஆகர்ஷணம்.
///சட்டென்று திறந்தது
ReplyDeleteகதவு
இதற்கும் அதற்கும்
இடையில்
ஒளியாலானது போல்
நின்றது அது.///
கதவு நடுவில் நிற்பதுதான்= மாயையைப் போல. மாயை விலகினால் அதுவும் இதுவும் ஒன்றாகும்.
அருமையான கவிதை