அதிகாலைப் பனியில்
அங்கம் கழுவி
ஆக்சிஜன் தழுவி
வெயில் நுழையும்
காட்டில்
ஈர நைப்பின் வீச்சமுள்ள
சருகு மெத்தையில்
பசுஞ்சுடர் போல் நிற்கிறது
அந்தச் சின்னஞ்சிறு செடி.
வாழ்வும் மரணமும்
கண்ணாமூச்சி ஆடும்
கருத்த கானகத்தில்
அடுத்த கணமே கூட
அந்தச் செடி…
யானையின் காலடியில் அல்லது
எருமையின் குளம்படியில்
நசுங்கிப் போகக் கூடும்
வீழ்ந்து உருளுமொரு
வெடித்த பலாவின் கீழ்
நைந்து போகவும் கூடும்
கொட்டித் தீர்க்கும் மழையொன்றின்
நீர்ச்சிறைக்குள் ஊறி
அழுகிவிடவும் வாய்ப்புண்டு
மேய்ந்து வரும் மான்கன்றின்
பால் பற்களின் இடையே
அரைபடவும் நேரலாம்
ஆனாலும் ஆனாலும்...
உயிர் நிரம்பி நிற்குமதை
அவதானிக்கையில்
சமைதலின் பேரில்
கரிந்து போய்விடாத
பச்சை வாழ்வின்
பரவசம்
வேர்விடுகிறது என்னுள்.
//ஆனாலும் ஆனாலும்...
ReplyDeleteஉயிர் நிரம்பி நிற்குமதை
அவதானிக்கையில்//
அவதானிக்கத் தோன்றுவதே ஒரு கவிஞனுக்கு மட்டும்தான்.சாதாரணன் தானும் அதை மிதித்துவிட்டுப் போவான். நல்ல கவிதை.