Wednesday, August 31, 2011

அமீர்சாப்


( சிறுகதை)

 
சூரியன் மேற்கில் இன்னும் முக்கால் மணி நேரத்தில் சாய்ந்துவிடுவான். நான் தெருவில் இறங்கி நடந்தபோது கமர்பாய் வந்துகொண்டிருந்தார். அஜானுபாகுவான சரீரத்தை எடுத்துக்காட்டுவது போல் சல்லிசான வெண்ணிற ஜிப்பா வியர்வையில் நனைந்து மேட்டுப்பாங்கான இடங்களில் எல்லாம் ஒட்டிக்கொண்டிருந்தது. (அவர் எப்போதும் உள்-பனியன் அணிவதில்லை.) கவர்ச்சி உடை! கமர்பாய்க்கு அதிகமாக வியர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அல்லும் பகலும் மார்க்க உழைப்பு செய்பவர். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வதற்குப் பதிலாக நாளொரு மேனியும் (அவருடைய மேனிதான்!) பொழுதொரு வண்ணமுமாக (அதே அட்டைக் கரி வண்ணம்தான்!) ஊதிக்கொண்டு போகிறார். இருக்காதா பின்னே? தீனுக்காக உழைப்பதில் பரக்கத் உண்டல்லவா?பத்தடி தூரம் இருக்கும்போதே கமர்பாய் என்னை நோக்கிப் புன்னகைத்து சலாம் உரைத்தார். நான் அனிச்சையாக பதில் சொன்னேன். வெளுத்த தாடிக்கு மருதாணி இட்டு ஆரஞ்ச் நிறம் ஆக்கியிருந்தார். காற்றில் கலைந்து, நார் மாம்பழக் கொட்டையைச் சப்பியது போல் அது அவரின் முக விளிம்பில் பரவியிருந்தது. ’சிங்கம் பிடரி சிலிர்த்தது போல்’ என்றும் உவமை சொல்லலாம். ஆனால் கறுப்புச் சிங்கம் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. (கறுப்பு மாம்பழக் கொட்டை மட்டும் இருக்கிறதா என்ன? என்று கேட்காதீர்கள். கதையைக் கவனியுங்கள்.) அந்த நிறத்தில், அதாவது பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வானலியில் வதக்கும் போது ‘பொன் நிறப் பதம்’ என்று சொல்வார்களே, அந்த நிறத்தில் அவருடைய தாடியை மாலை வெயிலில் பார்க்கும்போது போது மூசா நபி தரிசித்த ’எரியும் புதர்’தான் எனக்கு ஞாபகம் வந்தது. நல்லவேளையாக மீசையை மழித்துவிட்டிருந்தார். அதனால் வாய் தெரிந்தது. ஓஷோ பாணியில் அங்கேயும் புதர் மண்ட விட்டிருந்தார் எனில் பேசுவது அவரா இல்லை அல்லாஹு தஆலாவா என்று நான் நிச்சயம் குழம்பியிருப்பேன்.

“வாஙக் மவ்லானா, ஃகைரிய்யத் தானே?” என்றேன்.

“அல்ஹம்துலில்லாஹ், எப்படி இருக்கீங்க சூஃபிஜி?” என்றார்.

அவரை நான் மவ்லானா (எங்கள் தலைவரே / நேசரே) என்பதும் அவர் என்னை சூஃபி என்பதும்… நல்ல தமாஷ் போங்கள். வாழ்க்கையில் ஏதாவது சுவாரஸ்யம் வேண்டுமல்லவா? நாங்கள் இருவரும் டீக்கடையை நோக்கி நடந்தோம். டீக்கடை மாஸ்டரை எடுத்துக்கொள்ளுங்கள், ஹைதர் காலத்துக் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடம்பில் ஒரு நார்த்துண்டுடன் நின்று பாய்லரின் சன்னிதானத்தில் வேகுபவர். “தலைவரே! ஸ்ட்ராங்கா மூனு டீ” என்று ஒரு நாளில் பத்து பேராவது அவரிடம் சொல்கிறார்கள். வாழ்க்கை சிங்கிள் டீக்குச் சிங்கி அடிக்கும் நிலையிலும் நம்மைப் பார்த்து தலைவரே என்று நாலு பேர் சொல்வது எல்லாம் ஒரு ‘இது’க்காகத்தானே? அந்த ஊக்கம் இல்லையென்றால் விண்ணில் குவளையும் மண்ணில் க்ளாஸுமாக டீ ஆத்த முடியுமா?

தேநீர் பருகிக் கொண்டிருக்கும் போது கமர்பாய் விஷயத்தை ஆரம்பித்தார்.

“சூஃபிஜி, மானா.சானா.கரீம்பாயோட மகன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓடிப் போனானே, ஞாபகமிருக்கா?”

“கலந்தர்தானே அவன் பேரு?”

“அல்லாஹு, அவன் மூத்த பையன். ரொம்ப நல்ல புள்ள. யூகேல இருக்கான். நான் சொல்றது ரெண்டாவது மகன். சிக்கந்தர்”

“அடடே, ஆமாமாம். நீங்க சில்லாவுக்குக் கூட்டிட்டுப் போனப்ப ஓடிப்போய்ட்டானே. அவந்தானே?"

கமர்பாய் தர்ம சங்கடமாக “இஹ்ஹிஹி” என்று சிரித்தார். அவனேதான்!

“அவன் போன வாரம் வீடு வந்து சேந்துட்டான்”

“அப்பிடியா? நல்ல விஷயந்தான்.”

”என்னத்த நல்ல விஷயம், றப்புதான் காப்பாத்தணும்”

“ஏன்? என்னாச்சு?”

“பையன் சினிமாத்துறையில குப்பை கொட்டிட்டு வந்திருக்கான்னு சொன்னாங்க”

“அப்பவே அவன் சினிமாப் பைத்தியமாத்தான் திரிஞ்சிக்கிட்டிருந்தான்”

“இப்ப நெஜம் பைத்தியமாவே ஆயிடுச்சு”

“என்ன பாய் சொல்றீங்க?”

கமர்பாய் தொண்டையைச் செருமினார். நான் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு நீண்ட கதையாகச் சொல்லி முடித்தார். இரண்டாம் டீ அவர் வாங்கிக் கொடுத்துவிட்டார். சுவாரஸ்யமான கதையும் அதைக் கேட்பதற்கு ஒரு டீயும். பரவாயில்லை, அல்லாஹுவோட கருணை எப்படியெல்லாம் இலவச இணைப்புடன் வருது பாருங்க! அவர் சொன்ன அந்தச் சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். டீ கிடையாது, அல்லாஹ்வுக்காக ஸபுர் செய்யுங்கள்.நேற்றுதான் வெளியூர் ஜமாத் ஒன்று எங்கள் மொஹல்லாவுக்கு வந்து இறங்கியிருக்கிறது. இன்று காலை, அதாவது காலங்காத்தால, பகுதிவாசிகளைச் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் அழைப்புக் கொடுப்பதற்காக அவர்களை கமர்பாய் தன் ‘சாத்திகள்’ சகிதமாக அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்களாகவே அவருக்கு அந்தப் பையன் சிக்கந்தரை நினைத்து ஏகப்பட்ட மன உளைச்சல். தில்லி மர்கஸுக்கு என்று சில்லா கிளம்பி வந்தவன் இடையில் காணாமல் போய்விட்டான். ரயில் முழுக்கத் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் பதறிப்போய் போலீசில் சொல்லலாம் என்று நினைத்தபோதுதான் அவனுடைய தோஸ்த் முனீர் விஷயத்தைச் சொன்னான். ஷாருக் கானைப் பார்ப்பதற்காக அவன் மும்பைக்குச் சென்றுவிட்டானாம். அப்படியே பாலிவுட்டில் கால் பதித்து வளர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் தகித்துக் கொண்டிருந்ததாம். நிஜாமுத்தீனுக்குப் போய் என்ன கவ்வாலியா பாடப் போகிறோம் என்று எண்ணிக் கம்பி நீட்டிவிட்டான். மானா.சானாவுடன் பெரிய தகராறாகிப் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏறி இறங்கி நாய்பட்ட பாடாகிவிட்டது. மார்க்க உழைப்பு என்றால் சோதனைகளும் தியாகமும் இல்லாமல் சும்மாவா? இல்லை இந்தத் தருதலைப் பயல் இப்படி ஷாருக் கானைப் பார்க்கக் கிளம்புவான் என்றுதான் அவர் கண்டாரா? முஹல்லாவில் எல்லாப் பசங்களும் எவ்வளவு அதபாக இருக்கிறார்கள். தொப்பியும் தாடியும் இல்லாத ஒரு வயசுப் பையன் எங்கள் முஹல்லாவில் உண்டா? இதுக்கெல்லாம் யாருடைய உழைப்பு காரணம்? எவனுக்காவது பதினாலு பதினைந்து வயசு வந்துவிட்டாலே கமர்பாய் அவனை அழைத்து தாடி என்னும் சுன்னத்தின் அருமை பெருமைகளை அவசியங்களை அன்பொழுக அவன் மோவாய்க் கட்டையைத் தடவித் தடவி எடுத்துச் சொல்லித் தூண்டுவார். அவருடைய கையின் பரக்கத்தால்தான் பதினாறு பதினேழு வயசுக்கெல்லாம் தேன்கூடு போல் தாடி வளர்ந்துவிடுவதாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் இந்தச் சிக்கந்தர் பயல் மட்டும் சண்டி மாடாக வளர்ந்து வந்தான். மழுக்கச் சிரைத்து யூடிக்கொலோன் பூசி, கமர்பாய் தன் வாழ்நாளில் அணிந்திராத உள்-பனியன் போன்ற கலர்பனியனை மட்டும் அணிந்து கொண்டு தொழுகைக்கு வருவான். அவனை எப்படியாவது திருத்தி அல்லாஹ்வாலாவாக ஆக்கிவிட வேண்டும் என்பது கமர்பாயின் சங்கல்ப்பமாக இருந்தது. இல்லையெனில் நாளை மஹ்ஷரில் அவனையும் தன்னையும் நிற்க வைத்து ‘நீ ஏன் அவன் மீது சரியாக உழைப்புச் செய்யவில்லை?’ என்று அல்லாஹ் கேள்விக்கணக்கு கேட்கும்போது என்ன பதில் சொல்ல முடியும்?

அந்த சிக்கந்தர்தான் இரண்டு வருடங்கள் கழித்து இப்போது வீடு திரும்பியிருக்கிறான். பாலிவுட்டில் ஷாருக்கான் அவனைக் கண்டுகொள்ளாததால் தன் அதிஷ்டத்தைக் கோலிவுட்டில் தேடி அங்கே ஒன்றரை வருடம் லோல் பட்டு இப்போது புத்தி பிசகி வந்திருக்கிறான் என்று பேச்சு. எப்படியாவது அவனை நல்லாக்கி அதபான பிள்ளையாக மாற்றி அவனது பெற்றோர்களின் மனதில் பால்வார்க்க வேண்டும் என்பது கமர்பாயின் மனதில் இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. நேற்று மாலை அஸருக்குப் பின் எல்லோரும் அமர்ந்து ’கவலை’ செய்தபோதுகூட கமர்பாய் தன் மனதின் மென்னியைத் திருகிக் கொஞ்சம் அதிகமாகவே கவலை செய்தார்.

இன்று காலை ஜமாத் மானா.சானா வீட்டிற்கும் சென்று பார்த்தது. காலிங் பெல்லை அடித்துவிட்டு எல்லோரும் மௌனமாக நின்றனர். கதவைத் திறந்தது சிக்கந்தர்தான். என்ன என்பது போல் பார்த்தான். ”குசூசி முலாக்காத் வந்திருக்கோம். இவங்கள்லாம் கார்கூன்கள், முக்கியஸ்தர்கள்” என்று கமர்பாய் சொன்னார். அதற்குள்ளாக உள்ளேயிருந்து “சிக்கு, யாருப்பா அங்க?” என்று ஒரு பெண் குரல் கேட்டது. “கார்டூன்கள்லாம் வந்திருக்காங்கம்மா” என்று சிக்கந்தர் பதில் சொன்னான்.

“கார்டூன் இல்ல தம்பி, கார்கூன் கார்கூன்” என்றார் கமர்பாய்.

”இவர் யார்?” என்றான் சிக்கந்தர், மாநிறமாக இருந்த நடுத்தர வயதுக்காரரைக் காட்டி.

”இவர்தான் அமீர்சாப்” என்று கமர்பாய் அறிமுகப் படுத்தி வைத்தார்.

பையன் அவரை தின்றுவிடுவது போல் சிறிது நேரம் பார்த்தான். என்ன நினைத்தானோ, சட்டென்று அவன் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. அவர் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

“அமீர்சாப், ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டீங்க. நிச்சயமா என்னைத் தேடிக்கிட்டு ஒருநாள் வீட்டுக்கு வருவீங்கன்னு எனக்குத் தெரியும். கடைசியா உங்கள யோகி சூட்டிங்குல பாத்தது. உள்ள வாங்க” என்று சொல்லி அவரை இழுத்துச் சென்றான். அவர் அவன் பிடியிலிருந்து உதறி விலகப் பெரும்பாடு பட்டார். முடியவில்லை. உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.“இவரு டைரக்டர் அமீர் இல்லடா, ஜமாத்தோட அமீரு. அவர விட்ரு” என்று ஒரு பையன் பதறினான். பயனில்லை. அவன் காதில் எதுவுமே விழவில்லை. அதற்குள்ளாக அவரை இழுத்துச் சென்று அவன் சோஃபாவில் தள்ளிப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். கைப்பிடி விலகவில்லை. அமீர்சாப் தன் ஜேப்பிலிருந்த மிஸ்வாக் குச்சியை எடுத்து அவன் கையில் குத்தினார். (அன்று ஒரு நாள் பார்த்தேன், பயானில் மெய்மறந்து போயிருந்த ஒருவர் அனிச்சையாக மிஸ்வாக் குச்சியால் தொடைக்கு அருகில் சொறிந்து கொண்டிருந்தார். இப்போது ஒருவர் அதைத் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். என்ன இருந்தாலும் நாம் நாம்தானே? ரசூலுல்லாஹ் சொல்லித் தந்த மிஸ்வாக் குச்சி நம் கையில் மல்டி-பர்போஸ் குச்சியாகிவிடுகிறது!)

அமீர்சாப் வலியில் துடித்தார். பைத்தியத்தின் பிடி என்றால் இவ்வளவு உறுதியாகவா இருக்கும்? சிக்கந்தர் அவருடைய நீண்ட தாடியைத் தடவிப் பார்த்தான், “என்னங்க அமீர்ஜி, இம்புட்டுப் பெரிய தாடி? புரட்சிக் கலைஞர் படத்துல தீவிரவாதி ரோல் எதுவும் பண்றீங்களா?” 

அவர் பரிதாபமாக கமர்பாயைப் பார்த்து “ஈ இப்லீஸ் கா பச்சா க்யா கெஹ்தா?” என்றார். இதைக் கேட்டவுடன் சிக்கந்தர் உற்சாகமடைந்தான்.

“அமீர்ஜி, ஹிந்திப் பக்கம் போய்ட்டீங்களா? என்னையும் சேத்துக்கங்க. நான் ஓரளவு ஹிந்தி பேசுவேன். த்ரீ இடியட்ஸ். ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்? ரங் தே பஸந்தீ…”

அமீர்சாபுக்கு முகம் வெளிறிப் போனது. “ஷப் குஜாரி கூ புலானா ஆயே…” என்று அவர் பீதியில் ஏதோ சொன்னார்.

“ஷப் குஜாரி. படத்தோட பேரே ரொம்ப குஜாலா இருக்கே! ஷப்குஜாரி…குல்ஷன் பஜாரி... ஆகா, இதையே பல்லவியா போட்டு ஏயார் ரகுமான்ட்ட ஒரு கலக்கல் பாட்டு வாங்குங்க. ஷாருக்கான வச்சுப் படம் எடுங்க. சூப்பர் ஹிட் ஆகும். என்னை அசிஸ்டெண்ட்டா சேத்துக்கங்க அமீர்ஜி…”

சிக்கந்தர் கள் குடித்தவன் உளறுவது போல் பேசிக்கொண்டே இருந்தான். கமர்பாய் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், “அம்மா, வந்து ஒங்க புள்ளகிட்ட சொல்லுங்க.”

”ம்க்கும், ஒழுங்கா இருந்த எம்புள்ளய கெடுத்துக் குட்டிச்சுவராக்கியாச்சு. ஏதோ உசிரு பொழச்சு வூடு வந்து சேந்திருக்கான்னு சந்தோசப் படலாம்னா நசீபு இல்லியே…. இப்பிடி லூசுப் பயலாக்கிட்டீங்களே எல்லாருமா சேந்து” என்று உள்ளே இருந்து அந்தம்மா பிலாக்கணம் வைத்தது. கமர்பாய்க்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. வந்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவர் வெகு நேரமாக முக்கிக்கொண்டே இருந்தார். அவர் கடைசியில் ஒரு பெருவெடிப்பை நிகழ்த்தி குஸூசி முலாக்காத்திற்கு ஒரு புதிய அர்த்த பாவத்தைக் காற்றில் எழுதினார். “பொஹுத் அர்ஜண்ட் ஹே பாய், பைஃகானா ஜாத்தா ஹூன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே ஓடினார். நெய் குஸ்கா, புளிச்ச தால்ச்சா, இருபது டீ, வெண்ணப்புட்டு ஹல்வா, ஹலீம், சுரைக்காய் கஜூர்,  இத்தியாதி இத்தியாதி வஸ்துக்களின் கலவரமான ரசவாதத்தின் வாயு அனைவரின் குடலையும் பிறட்டியது. சிக்கந்தர் அமீர்சாபின் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினான். விடுதலையை சுவாசிக்க ஜமாத் சட்டென்று வெளியேறியது.

டீயை மெல்ல உறிஞ்சிக் குடித்துக் கொண்டே இச்சம்பவத்தைக் கமர்பாய் என்னிடம் சொன்னார். அவருக்குத் தொண்டை கமறிக் கமறிக் கண்கள் கலங்கிவிட்டன.

“எல்லாத்துக்கும் நான்தான் காரணம் சூஃபிஜி. என்னாலதான் இதெல்லாம் நடந்திச்சு”
”அப்படியெல்லாம் மனச போட்டு அலட்டிக்காதீங்க மௌலானா. அல்லாவோட நாட்டம். நாம என்னா செய்யமுடியும்?”

“இல்லங்க. எல்லாம் என்னாலதான். நான் அந்தப் பையன சரியாக்காம விடப் போறதில்ல. அதுவரைக்கும் சில்லா கில்லான்னு கெளம்புறதில்லன்னு முடிவு பண்ணீருக்கேன். துவா செய்யிங்க.”என் மனதில் அப்போது ஒரு சிந்தனை சட்டென்று விரிந்தது. இந்த இடத்தில் ஒரு பச்சை அவ்லியா தோன்றி சிக்கந்தரின் மீது பவர்ஃபுல்லாக ஒரே ஒரு ‘நஜர்.’ அவன் இன்ஸ்டன்ட்டாக ஆளே மாறி ஒரு ‘வலி’ ஆகிவிடுகிறான்! ப்செ, நப்பாசைதான். மனம் எதைத்தான் நடக்குற காரியமா நெனைக்குது சொல்லுங்க. 

கைலாகு கொடுத்துவிட்டு கமர்பாய் தளர்வாக நடையைக் கட்டினார். எல்லாம் தன்னால்தான் என்கிறார் அவர். நம்ம சிந்தனையே வேறு. நம்மால எதுவும் செய்யமுடியாது. ஆண்டவன் விட்ட வழி. நாம கேக்குறோம், அவன்தான் செய்யணும். மக்ரிப் தொழுது துவாவிற்குக் கையேந்தினேன். கமர்பாய்க்காகவும் சிக்கந்தருக்காகவும் என் கண்கள் கலங்கின.3 comments:

 1. சரியான காமெடி கதை
  சிரிச்சு சிரிச்சுவயிறு வலிக்குது
  எங்களுக்கு டீ எல்லாம் வேண்டாம்
  வயித்து வலி மாத்திரை வாங்கி மறக்காம
  அனுப்பிடுங்க ஜி

  ReplyDelete
 2. என் மனதிலும் ஒரு சிந்தனை இப்போது விரிகிறது.
  ரஹ்மானின் 'நZAர்' இடம் தராவிட்டால் பச்சை அவ்லியாக்களென்ன‌
  'உலுல் அZம்' அன்பியாக்களே ஒன்றும் செய்யவியலாது என்பதுதானே
  'இன்னக்க லா தஹ்தீ மன் அஹ்பப்த' சொல்லும் பாடம்,பகுத்தறிவு... etc..

  தவ்ஹீத்,தப்லீக்,தரீக்கா என்று ஒருவரையொருவர் கேலி செய்து
  கொள்ளும்போது தடம் புரண்டு விடுகிறோமே ஆசானே :)

  இப்பதிவு சிரிக்க வைத்தாலும், தங்களிடமிருந்து அறிவை நாடிக் காத்திருக்கிறேன்,
  இது போன்ற கேலிகளையல்ல.

  ReplyDelete
 3. /// கமர்பாய்க்கு அதிகமாக வியர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அல்லும் பகலும் மார்க்க உழைப்பு செய்பவர். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வதற்குப் பதிலாக நாளொரு மேனியும் (அவருடைய மேனிதான்!) பொழுதொரு வண்ணமுமாக (அதே அட்டைக் கரி வண்ணம்தான்!) ஊதிக்கொண்டு போகிறார். இருக்காதா பின்னே? தீனுக்காக உழைப்பதில் பரக்கத் உண்டல்லவா?///
  இவ்வளவு பகடி கூடாது பேராசிரியரே.நான் மார்க்கக்காரன் இல்லாததால் உங்கள்
  பேச்சுக் குறிப்புக்கள் பலதும் புரியவில்லை.இருந்தாலும் வயிறு குலுங்க‌ச்சிரித்தேன்.

  இதைப் பார்த்து உங்கள் மேல் ஃபத்வா எதுவும் வராதே?!

  ReplyDelete