Monday, August 29, 2011

குழந்தைகளின் பிரார்த்தனை


பத்து வருடங்களுக்கு முன் நடந்தது. என் குருநாதர் உரையாற்றிய ஒரு சபையில் அமர்ந்திருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் தங்களுக்கு வசதியான இடத்தை அந்த ஹாலில் தேடி இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு இடத்தை நானும் பிடித்து, சாய்வதற்கு வசதியாக சுவரின் அருகில் அமர்ந்திருந்தேன். தரையில் வெகு நேரம் சப்பளமிட்டு அமரும் பழக்கம் இல்லாதவன் என்பதால் முன்னெச்சரிக்கையாக அப்படிச் செய்தேன். என் பின்னால் பழுத்த முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். என் தோளை மெல்லத் தொட்டு “தம்பீ, அப்படி முன்னாடி போய் உட்காருங்க” என்றார். “நீங்க பெரியவங்க, நீங்கதான் முன்னாடி உட்காரணும்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே பின்வரும் அற்புதமான விளக்கத்தைச் சொன்னார்:

”தம்பீ, நான் வயசுல பெரியவன்கிறது உண்மைதான். ஆனால் அதை மட்டுமே ஒரு தகுதின்னு நான் நெனக்கல. ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு வியாபாரி இருந்தார். அடிக்கடி வெளியூருக்குப் போய் சரக்கு கொள்முதல் பண்ண வேண்டி இருந்தது. சரக்கு சரியில்லைன்னா வியாபாரத்துல பெரிய நஷ்டம் வந்து நொடிச்சுப் போற அபாயம் இருந்திச்சு. அது அவரு மனச வாட்டிக்கிட்டே இருக்கும். அதுனால அவரு ஒரு உபாயத்தக் கையாண்டாரு. கெளம்புறப்ப தன்னோட மூனு வயதுக் குழந்தையைக் கூப்பிட்டு முன்னாடி நிறுத்தி, ’அத்தா வியாபாரத்துக்குப் போறேன்ம்மா கண்ணு. காரியம் வெற்றியாகுந்தானே?’ன்னு கேப்பாரு. அந்தப் புள்ள, ‘கவலப்படாம போய்ட்டு வாங்க அத்தா. அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான்’னு சொல்லும். புள்ளைய முத்தங் கொஞ்சிட்டு அவரு புறப்பட்டுப் போவாரு. இப்படியே ஒவ்வொரு முறையும் நடந்துக்கிட்டிருந்திச்சு. இத கவனிச்ச அவரோட நண்பர் காரணம் கேட்டாரு. அதுக்கு இவரு சொன்னாரு, ‘அது வந்துப்பா, நானும் அல்லாகிட்ட துவா செய்யிறேந்தான். ஆனால் நான் ஒரு பாவி. அல்லாஹ் என் துவாவ ஏத்துக்காமலும் போயிடலாம். அனால் என் புள்ள பச்ச மண்ணு. அது மனசுல சூது வாது கெட்ட எண்ணம் எதுவும் கெடயாது. அந்தப் புள்ளயோட வார்த்தைய அல்லாஹ் பொய்யாக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை.’ பாத்தீங்களா தம்பி, இதுல ஒரு விசயத்த கவனிக்கணும். பெரியவங்க சிறியவங்களப் பாக்கும்போது ‘நம்ம வயசுக்கு நாம நெறயா பாவம் பண்ணீட்டம். இவுங்கள்லாம் நம்மளவிட பாவம் கம்மியா உள்ளவுங்க. அதனால நம்மள விட மேலானவுங்க’ன்னு நெனக்கணும். சிறியவங்க பெரியவங்களப் பாக்கும்போது, ‘இவங்க வயசுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள செஞ்சிருப்பாங்க. நம்மள காட்டிலும் அதிகமான புண்ணியம் உள்ளவங்க’ன்னு நெனக்கணும்.”பிரார்த்தனைக்கு எது எதுவெல்லாம் முக்கியமோ இல்லையோ, அகத்தூய்மை –இஃக்லாஸ் என்பது மிகவும் முக்கியமானது. உணர்ச்சி – இஹ்சாஸ் என்பது அதன் அடையாளம் என்று நான் விளங்கி வைத்திருக்கிறேன். வார்த்தைக் கோர்வைகள், தெளிவான உச்சரிப்புக்கள் என்பதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான் என்பது என் புரிதல். முன்னது இல்லாமல் பின்னது இருந்து பயனில்லை என்பதுதான் எப்போதும் என் அபிப்பிராயமாக இருந்து வந்துள்ளது.

”பிரார்த்தனை என்பது அடிமைத்தனத்தின் சாரம் – அத்துஆ முஃக்குல் இபாதத்” என்று நபி(ஸல்) அவர்கள் அருளியிருக்கிறார்கள். அதனால்தான் பாருங்கள் திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்திலேயே “உனக்கே அடிமை செய்கிறோம், உன்னிடமே உதவி வேட்கிறோம் – இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” (1:4) என்று நம் அடிமைத்தனத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து உடனே “எம்மை நேர்வழியில் ஆற்றுப்படுத்துக - இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்” (1:5) என்று பிரார்த்தனை வந்துள்ளது. தொடர்ந்து அதன் விளக்கமும் பிரார்த்தனையாக வந்துள்ளது. அந்த மூன்று திருவசனங்களும் அடியார்களுக்கே உரியவை என்று ’ஹதீஸ் குத்சி’யில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். 

’அல்ஹம்துலில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே’ (1:1) என்று அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். ( ‘இஹ்மதுல்லாஹ – அல்லாஹ்வை புகழுங்கள் என்று அடியார்களிடம் அவன் கட்டளையிடவில்லை. மாறாக அல்ஹம்துலில்லாஹ் என்று தன் புகழைத் தானே துவக்கிவிட்டான். அடியார்களின் ஞாபகத்தை அதில் அவன் கொண்டுவரவே இல்லை. உள்ளமையில் இல்லாதிருந்து புதிதாக உருவான படைப்புக்களிடத்தில் தேவை ஏதும் இல்லாத அல்லாஹ் புகழைக் கேட்பானா என்ன?’ என்று சூஃபி ஞானி அலீமி ஷாஹ் ஆமிரி (ரஹ்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் விளக்கம் தந்தார்கள்.)

‘அர்ரஹ்மானிர்ரஹீம் – அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
மாலிக்கி யவ்மித்தீன் – தீர்ப்பு நாளின் அதிபதி’ (1:2,3) என்று அவன் தன்னைத் தானே அறிமுகம் (தஃரீஃப்) செய்து கொண்டான். வேறு ஒன்று தன்னை அறிமுகம் செய்யும் நிலையில் திருமறையை அவன் திறக்கவில்லை.

எனவே, தன் ஹம்த், தஃரீஃப் ஆகியவற்றில் படைப்புக்களைச் சேர்க்காமல் துவங்கிய அல்லாஹ், அவற்றைத் தன்னுடையவை என்று ஹதீஸ் குத்சியில் குறிப்பிட்ட அல்லாஹ், அடிமைத்தனத்தையும் தேவைகளையும் பிரார்த்தனையையும் மனிதர்களுக்கு உரியவை என்று சொல்லிவிட்டான்.பிரார்த்தனை செய்வதற்கு அறிவும் ஞானமும் அவசியம்தான். “நபிமார்கள் கோர்வை செய்ததைப் போன்ற துஆ வாசகங்களை வேறு யாருமே கோர்வை செய்ய முடியாது” என்று ஒருமுறை சூஃபி மகான் ஹகீமி ஷாஹ் ஃபைஜி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். சொல்லிவிட்டு யூனுஸ் (அலை) நபியின் பிரார்த்தனையை எடுத்து வைத்து விளக்க ஆரம்பித்தார்கள். நான் வியப்பில் வாய் அங்காந்து கேட்டிருந்தேன்!

ஆனால் அத்தகைய உச்சகட்ட ஞானம் இல்லாதவர்கள், என்னைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது? ஒரே வழி உணர்ச்சிப் பெருக்கு மட்டுமே. இவ்விடத்தில் ’மஸ்னவீ’ காவியத்தில் மௌலானா ரூமி (ரஹ்) சொல்லியுள்ள ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது:

“நபி மூசா (அலை) வனந்தாந்திரத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஓர் இடையன் தன் ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு பாறையின் நிழலில் ஒதுங்கி அமர்ந்து கணகளை மூடி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். அவன் மெய் மறந்து பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்துலவி மூசா நபியின் காதில் விழுந்தன. அவர்கள் அவனருகில் சென்று நின்று கேட்டார்கள். அவன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தான்: ‘என் இறைவா! என் எஜமானே! நீ என்னை உன் அடிமையாக, வேலைக்காரனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாயா? நான் உனக்கு விசுவாசமாக இருப்பேன். உன் ஆடுகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன். உனக்குத் தாகம் எடுத்தால் ஆட்டில் பால் கறந்து உனக்குக் கொடுப்பேன். என் இறைவா! நீ உறங்குவதற்கு உன் படுக்கையைத் துப்புறவாக்கி வைப்பேன். நீ தூங்கும்போது உனக்குக் கால் அமுக்கி விடுவேன். என் இறைவா! உன் கூந்தலுக்குப் பேன் பார்த்து எண்ணெய் தடவிச் சிக்கெடுத்துச் சீவி விடுவேன்… என் எஜமானே! நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?...’

இந்த வார்த்தைகள் மூசா நபிக்கு ஆத்திரத்தைத் தூண்டின. ‘இவன் இடையனா இல்லை மடையனா? நான் போதித்துக் கொண்டிருக்கும் ஏகத்துவத்துக்கு இதோ இங்கே ஒருவன் உட்கார்ந்து வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று எண்ணி அவனை ஒரு அதட்டு போட்டார்கள். அவன் அலறிக்கொண்டு எழுந்தான்.
‘நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்?’

‘இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’

’உன் பிரார்த்தனையைப் பார்த்தால் ஏதோ உன் மாமனிடம் அரட்டை அடிப்பது போல் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு எங்கிருந்து கை கால்கள் முளைத்தன? அல்லாஹ்வுக்கு ஏது கூந்தல்? அதில் பேன் வேறு! சரி, நீ தஷ்பீஹ் (குறியீடு) முறையில் பேசுகிறாய் என்று சொன்னாலும் அல்லாஹ்வுக்குப் பசி தூக்கம் ஏது? இதெல்லாம் என்ன அபத்தமான உளறல்?’ என்று கூறிய மூசா நபி அந்த இடையனின் பிடறியில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள்.

அவன் அழுதுகொண்டே பாலை வனத்தில் தாறுமாறாக நடந்து சென்றான். அவன் உள்ளத்தை இறைக்காதல் எரித்துக் கொண்டிருந்தது. சரியாகப் பிரார்த்தனை செய்யத் தெரியாததால் எங்கே இறைவன் தன்னை ஏற்காமல் போய்விடுவானோ என்ற ஏக்கம் அவனை அணு அணுவாகத் தின்று கொண்டிருந்தது.

அந்நேரத்தில் மூசா நபியிடம் அல்லாஹ் பேசினான்:
“என் நபியே! என் பிரியமான பக்தனை ஏன் அப்படி அடித்து விரட்டினீர்கள்? அவன் செய்த பிரார்த்தனையில் நான் அப்படியே சொக்கிப்போய் அதை ரசித்துக் கொண்டிருந்தேனே! நீங்கள் ஏன் அவன் பேசிய ‘வார்த்தைகளை’ கவனித்தீர்கள்? அவன் மனநிலையை ஏன் கவனிக்கவில்லை? அதில் எனக்காகக் கொந்தளித்துக் கொண்டிருந்த காதலை ஏன் நீங்கள் பார்க்கவில்லை? என் நபியே! கிப்லாவின் சட்டம் கஃபாவிற்கு வெளியே மட்டுமே. கஃபாவின் உள்ளே வந்துவிட்டால் திசை ஏது? அவன் என் உள்ளே வந்துவிட்டவன் அல்லவா? அவனை ஏன் தண்டித்தீர்கள்? வெள்ளத்தால் பாழான கிராமத்தின் மீது வரி விதிக்கப் படுவதில்லை. அவன் என் காதல் வெள்ளத்தில் மூழ்கியவன் அல்லவா?
என் நபியே! நீங்கள் அடியானை என்னுடன் இணைக்க வந்தவர் அல்லவா? அடியானை என்னை விட்டுப் பிரிக்க வந்தவர் அல்லவே?
(தூ பராயே வஸ்ல் கர்தன் ஆமதீ
ந பராயே ஃபஸ்ல் கர்தன் ஆமதீ)

பிரார்த்தனை உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பிரார்த்தனை என் மனதைக் கவர்வதில்லை என்பது என் அனுபவம். ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பிரார்த்தனை ஓதப்பட்டது. ஓதியவர் தொண்டை பெருத்து மண்டை பாழான ஒரு பிரபல மார்க்கப் பேச்சாளி. துஆவை சிம்மக் குரலில் கர்ஜித்துக் கொண்டிருந்தார். கழக நெடி வீசிய அந்த அடித்தொண்டைப் பிரார்த்தனையை ஒவ்வொரு வரி முடிந்ததும் செந்தமிழில் மொழிபெயர்த்தும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தூக்கியிருந்த கையை நான் சட்டென்று கீழே போட்டுவிட்டேன். பெரும்பான்மை தீனோருக்கு அது புளகாங்கிதமாக இருந்ததோ என்னவோ? கைக்குழந்தையின் அழுகை இறைவனைப் புகழ்வதாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது என்னும் கருத்து ஒரு நபிமொழியில் வந்துள்ளது. பாருங்கள், கைக்குழந்தைக்கு மொழியே தெரியாது. ஆனால் அதன் சுத்தமான உணர்ச்சியே பிரார்த்தனையாக அங்கீகரிக்கப் படுகிறது. உடனே இறைவனின் கருணை தாயின் முலைகளில் பாலாகச் சுரக்கிறது, கரங்களில் அரவணைப்பாய் மலர்கிறது. ஒரு குழந்தையைப் போல் பிரார்த்தித்தாலே வாழ்க்கையில் ஈடேற்றம் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.

”குழந்தைகளின் பிரார்த்தனை” (பச்சே கீ துஆ) என்னும் ஓர் அருமையான பிரார்த்தனையை மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) எழுதியுள்ளார்கள். அதன் தமிழாக்கம் இது:
”பிரார்த்தனை ஆகி என் உதட்டில் வருகிறது
என் ஆர்வம், என் ஏக்கம்.
என் இறைவா! என் வாழ்க்கை
ஒரு மெழுகுவத்தி போல் ஆகட்டும்.
என் மூச்சில் என் தாய்நாடு
பொலிவு பெறட்டும்
பூவைக் கொண்டு ஒரு
பூங்கா பொலிவது போல்.
என் ரட்சகனே! என் வாழ்க்கை
ஒரு விட்டில் பூச்சி போல் ஆகட்டும்.
அறிவு எனும் விளக்கின் மீது
எனக்கு நேசம் உண்டாகட்டும்.
ஏழைகளின் சேவையே என் பணி ஆகட்டும்
வேதனைப் படுவோரையும்
வலிமை இழந்தோரையும்
அது நேசிப்பதாகட்டும்.
என் அல்லாஹ்வே!
தீமைகளை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!
நேர்வழி எதுவோ
அவ்வழியில் என்னை நடத்துவாயாக!

(இந்தப் பிரார்த்தனையை ஜக்ஜித் சிங் அவர்கள் உருக்கமான பாடலாக மெட்டமைத்து சிஸா ராய் என்னும் சிறுமியைப் பாட வைத்து “CRY FOR CRY” என்னும் ஆல்பத்தில் இடம்பெறச் செய்தார். கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=yvBd_F-Fn3w

5 comments:

 1. எங்க ஹஜ்ரத் அவர்களும் சொல்வார்கள், ஆசை தான் துவா - அல்லாட்ட துவாங்குற பேர்ல வசனம் படிக்க கூடாது என்று.

  உடலும் உள்ளமும் கலக்காத எந்த ஒன்றையும் அல்லாஹ் தன் அடியாரிடமிருந்து ஏற்றுக் கொள்வதில்லை என்ற ஹதீது கூட நினைவிற்கு வருகிறது

  ReplyDelete
 2. Machan.. such a great experience...reading this ..! :)

  ReplyDelete
 3. ///(இந்தப் பிரார்த்தனையை ஜக்ஜித் சிங் அவர்கள் உருக்கமான பாடலாக மெட்டமைத்து சிஸா ராய் என்னும் சிறுமியைப் பாட வைத்து “CRY FOR CRY” என்னும் ஆல்பத்தில் இடம்பெறச் செய்தார். கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=yvBd_F-Fn3ந் )///

  கேட்டேன் . மனம் உருகினேன். சுட்டிக்கு நன்றி!

  ReplyDelete
 4. // கிப்லாவின் சட்டம் கஃபாவிற்கு வெளியே மட்டுமே. கஃபாவின் உள்ளே வந்துவிட்டால் திசை ஏது?//

  பல கேள்விகளுக்கான ஒற்றை விடை. நன்றி

  ReplyDelete
 5. // கைக்குழந்தையின் அழுகை இறைவனைப் புகழ்வதாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது என்னும் கருத்து ஒரு நபிமொழியில் வந்துள்ளது. //

  கிடைக்க வேண்டுவது பிரார்த்தனை; வேண்டியது கிடைத்தால் புகழ்ச்சி. தனியாய் நிற்கும்வரை இருமை; தனிமை இழந்தபின் ஒருமை... விளைவது முழுமை; ஏதும் அற்ற செழுமை.

  ReplyDelete