Monday, August 22, 2011

மலைப் பாதை


பிரபஞ்சம் என்பது தெளிவான நூல். இறைவனின் குறிப்புக்கள் கொண்ட நூல் அது.
இயற்கையில் இறைவன் வெளிப்படுகிறான். எனினும் அவன் மறைவானவன். எனவே, அது ரகசிய நூல்; ரகசியங்களின் நூல்.

‘அவன் ஒவ்வொரு கணமும்
புதுப்புது தோற்றங்களில் ஒளிர்கிறான்’
(55:29)
என்று இறைவனைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே, பிரபஞ்சமே இறைவனின் பழைய ஏற்பாடாகவும் புதிய ஏற்பாடாகவும் இருக்கிறது.

அரபு மொழியில் அவன் பேசும் குர்ஆன் அழகு மொழியில் அவன் படைத்துள்ள பிரபஞ்ச நூலைக் கண்களால் வாசிக்கச் சொல்கிறது.

‘ஒட்டகை எப்படிப் படைக்கப் பட்டுள்ளது?
வானம் எப்படி உயர்த்தப் பட்டுள்ளது?
மலை எப்படி நடப் பட்டுள்ளது?
பூமி எப்படி விரிக்கப் பட்டுள்ளது?
அவற்றின் மீது அவர்கள்
அகப்பார்வை செலுத்த வேண்டாமா?’
(88:17-20)



மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போல் அமைந்துள்ளது மலை. வானம், மலை, பூமி என்னும் வரிசை முறையில் இறைவன் தன் வசனங்களைப் பேசுகிறான்.

மலைச் சாரல் வானத்தை உள்வாங்கி மண்ணுக்குத் தருகிறது. வான் அளவு உயர்ந்து நிற்கும் மலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் உள்ளத்தின் சிறகுகள் வளரும், மனம் மலரும்.

ஹஜ்ரத் மூசா நபி (அலை) மலை முகட்டில்தான் இறைவனுடன் பேசினார்கள்; இறைவனின் ஒளிச்சுடர்களைத் தரிசித்தார்கள்.

ஹஜ்ரத் ஈசா நபி (அலை) மலை மீது அமர்ந்து தன் சீடர்களுக்கு ஞானங்களை வழங்கினார்கள்.

விண்ணிலிருந்து முதல் மனிதராம் ஆதம் நபி (அலை) பூமிக்கு இறக்கப்பட்ட இடம் மலைதான்.

வானம் உயிரின் குறியீடாகவும், மண் சடப்பொருளின் குறியீடாகவும் உள்ளன. உயிர் சடத் தத்துவ உலகைத் தொடும் இடமாக மலை இருக்கிறது.

உலகமே வெள்ளத்தில் மூழ்கி அழிந்தபோது ஹஜ்ரத் நூஹ் நபி (அலை) கட்டிய கப்பல் மலை முகட்டில்தான் தரை தட்டி நின்றது. அவருக்கு ‘இரண்டாம் ஆதம்’ என்று பெயருண்டு. பூமியில் மனித இனம் மீண்டும் மலையிலிருந்தே தொடங்கியது.

நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை மலை மீது ஏறி நின்று மக்களை அழைத்தார்கள். ‘இந்த மலைக்குப் பின்னால், உங்களைத் தாக்க ஒரு படை வருகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் ‘நீங்கள் உண்மையாளர். நீங்கள் கூறுவதை நம்புவோம்’ என்று சொன்னார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) தான் இறைத்தூதர் என்று கூரியபோது அந்த மக்கள் அவர்களைப் பலவாறு ஏசிவிட்டுக் கலைந்து சென்றுவிட்டனர்.

புற உலகின் உயர்நிலையை உதாரணம் காட்டி அக உலகின் உயர்நிலையை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியதை அந்த மக்கள் உணரவில்லை. பிரக்ஞையின் படி நிலைகள் பல உண்டு. இறைத்தூதர்கள் உட்சபட்சமான பிரக்ஞை நிலையில் வாழ்பவர்கள். மலை அந்த உன்னத நிலைக்குக் குறியீடு. எனவே, நமக்குப் புலப்படாத விஷயங்கள் அவர்களுக்குப் புலப்படும்.



மலைச் சாரல் வானத்தைக் காதலோடு தழுவிக் கொண்டுள்ளது. பரந்த வானில் பறந்து உலவும் ஈரக்காற்று அதன் இலைகளையும் புற்களையும் நனைக்கின்றன. மண் குவியும் மலை முகட்டில் மனம் குவியும். தியானம் எளிதாகும்.

‘நீ ஒரு ராஜாளி
மலை முகட்டில்
கூடு கட்டு’
என்று மகாகவி இகபால் பாடுகிறார். பிரக்ஞையின் உயர்வான விழிப்புணர்வில் வாழ் என்பதே அதன் பொருள்.

பல்லாயிரம் அடிகள் உயர்ந்து நிற்கும் மலைச் சாரல்களில் தியானம் செய்வதைச் சீன தேசத்து தாவோ ஞானிகளும், ஜப்பான் நாட்டின் ஜென் ஞானிகளும் மரபாக வளர்த்து வந்தார்கள். மலைகளின் மடியில், மரங்களின் மறைவில் ரகசியமாகக் கிடக்கும் ஒற்றையடிப் பாதைகளை அமைத்தார்கள். பொது மக்கள் செல்ல முடியாத மலை உச்சிகளில் அவர்கள் தியான மடங்களைக் கட்டினார்கள்.



மலைச் சாரலை ‘தாவோ’ மரபின் மூலவர் லாஓ-ஸூ ‘ஆன்மிகப் பெண்மை’ என்று அழைத்தார்.

ஜென் ஹைகூவின் பிதாமகரான பாஷோ ஒருமுறை மலைப் பாதையில் தனியாக ஏறிச் சென்றார். காலையில் துவங்கிய பயணம் அந்தி வரை நீடித்தது. மெல்ல மெல்ல காலடிகள் வைத்து மலை உச்சிக்கு அவர் வந்து சேர்ந்தார். மடாலயம் பூட்டியிருந்தது. மணி அசைவற்று உறைந்து போயிருந்தது. வானில் இருள் பரவிக் கொண்டிருந்தது. செடிகளில் பூச்சிகள் சிர்ர்ர்ரிட்டுக் கொண்டிருந்தன. திண்ணையில் அமர்ந்து பாஷோ ஒரு ஹைகூ எழுதினார்.

‘பூச்சிகளின் பாடல்
மலைப் பாறைகளில்
எங்கும் மௌனம்’

அகப்பார்வையோடு மலையை வாசியுங்கள். உங்கள் மனப்பறவை மலையில் வசிக்கட்டும்; மலைவாசி ஆகட்டும்.

(‘ஆமிர் கலீமி’, ஜூலை 2011)


3 comments:

  1. மலைத்து போய் விட்டேன்...

    ‘வஹி’ என்றால் என்ன?

    அதில் வகைகள் அல்லது நிலைகள் உண்டா?

    குரான் ஷரீஃபில் அத்தியாயம் 4ல் 163வது வசனத்தில் எல்லா நபிமார்களுக்கும் வஹி அனுப்பியதாக சொல்கிறான்.(தாவுது நபியை பற்றி குறிப்பிடும் போது ஜபூர் வேதம் கொடுத்ததாக சொல்கிறான்)

    வசனம் 164ல் தனியாக மூஸா நபியோடு இறைவன் பேசியுமுள்ளான் என்கிறான்.

    இது ’வஹி’யின் அடுத்த நிலையா இந்த பேச்சு...

    இன்னும் நிறைய இடங்களில் குறிப்பாக 42:51ல் வஹியல்லாமல் (இன்னும் சில முறைகள்) பேசமாட்டான் என்கிறான்.

    21:79ல் சுலைமான் நபிக்கு (ஃபஹ்ஹம்)விளங்க வைத்தோம் என்கிறான்.

    இப்படி இன்னும் பல வழிகளில் இறைவனின் பேச்சு அமைகிறதே.

    இதை பற்றி கோர்வையாக விளக்கமாக (உங்களுக்கு நேரம் அமைந்து) அல்லாஹ் நாடினால் எழுத இயலுமா?

    ReplyDelete
  2. இந்தப் பதிலைக் கண்டு நானும் மலைத்துவிட்டேன்!
    வஹி என்பது என்னவோ தபால்காரரிடம் கடிதம் பெற்றுக்கொள்வது போன்ற விசயம் என்பதாகச் சிலர் விளங்கி வைத்துள்ளார்கள்.
    வஹியின் தாத்பரியம் பற்றி இன்ஷா அல்லாஹ் எழுதுவேன், அவன் எந்த அளவு விளங்க வைக்கிறானோ அந்த அளவு. இல்லையெனில் வஹி பற்றியெல்லாம் எழுத எனக்கு என்ன தகுதி உள்ளது சொல்லுங்கள்.
    உங்கள் பதிலைப் படித்தவுடன் குர்ஆனில் சுட்டப்பட்டுள்ள மேலும் இரண்டு செய்திகள் என் மனதில் பளிச்சிட்டன:
    மூசா (அலை) நபியின் தாயாருக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் என்பதும், தேனீக்களுக்கு அல்லாஹ் வஹி அறிவிக்கிறான் என்பதும்.
    வஹி என்பதன் நேரடிப் பொருள் அகத்தூண்டுதல் (INSPIRATION) என்பதுதான்.
    மேலும் யோசிப்போம்.

    ReplyDelete
  3. ///‘நீ ஒரு ராஜாளி
    மலை முகட்டில்
    கூடு கட்டு’
    என்று மகாகவி இகபால் பாடுகிறார். பிரக்ஞையின் உயர்வான விழிப்புணர்வில் வாழ் என்பதே அதன் பொருள்.///

    மந்திரம் போல ஒலிக்கிறது.

    நல்ல பதிவு. வாழ்க!

    ReplyDelete