Thursday, June 26, 2025

பாஸ் கஷ்த் (மீளுதல்; திரும்புதல்)

 


பாஸ் கஷ்த் என்பது நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ஆறாவது கோட்பாடாக அமைகிறது. இதன் நேரடிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.

பாஸ் கஷ்த் என்னும் ஃபார்சி சொல்லுக்கு இணையாக அவ்பா என்னும் அறபிச் சொல் அமையும். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படும் திரும்புதல் என்பது ஷரீஅத் விதிக்கும் கடமைகளை நிறைவேற்றிய உடன் சாதகன் இறைவனிடம் தன் கவனம் முழுவதையும் திருப்பி விடுவதைக் குறிக்கிறது.

அறபியில் திரும்புதல் என்பதைக் குறிக்க மூன்று சொற்கள் உள்ளன: தவ்பா, இனாபா, மற்றும் அவ்பா. இவை மூன்றும் தனித்தனிப் படித்தரங்கள் ஆகும். அவற்றின் விளக்கமாவது:

1.      தவ்பா – இது பொதுவாக பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) என்னும் அர்த்தத்தில் மக்களின் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். இது பாவத்தை விட்டும் நன்மையின் பக்கம் திரும்புவதைக் குறிக்கும்.

2.      இனாபா – இது இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதுடன் நில்லாது அடியான் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி அவனைத் திருப்தி படுத்துவதற்காகப் போராடும் நிலையாகும்.

3.      அவ்பா – இது என்பது முழுமையாக இறைவனிடம் திரும்பி விடுவதாகும். படைப்புக்களை விட்டு விலகியும் இறைவனிடம் நெருங்கியும் இருக்கும் நிலைக்குத் திரும்புதல் ஆகும்.

மேற்காணும் மூன்றில் அவ்பா என்னும் நிலையே பாஸ் கஷ்த் என்பதைக் குறிக்கிறது.

நஃபீ மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்யும் முரீது, இலாஹி அன்த மக்ஸூதீ வ ரிளாக்க மத்லூபீ – ‘என் இறைவா! நீயே என் இலட்சியம், உன் பொருத்தமே என் இலக்கு’ என்று நபி (ஸல்) கூறியிருப்பதைப் புரிந்து கொள்ளும் நிலை இது” என்று ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்.

 இத்தகைய நிலையில் உள்ள அடியான் எங்கு நோக்கினும் இறைவனையே தன் அகக் கண்ணால் காண்பவன் ஆகிறான். அதாவது முஷாஹதா என்னும் நிலையில் நிலைக்கிறான்.

நீங்கள் எத்திசை நோக்கினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115)

என்னும் திருவசனத்தின் ரகசியம் இத்தகையோருக்கே திறக்கப்படுகிறது. இந்த அகப்பார்வையை எட்டிய பாக்கியவான்களே

”கண்களைத் திறந்திட நிறை முகம்

கண்களை மூடிட இறை மயம்

கண்களைத் திறந்ததும் அவன் அவன்

காட்சியில் வந்ததும் அவன் அவன்

அல்லாஹு அல்லாஹ்”

என்று ஸூஃபி ஞானி ஃபாரூக்கி ஷாஹ் ஃபள்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் பரவசமுற்றுப் பாடுவது போல் பாட இயலும்.

            பாஸ் கஷ்த் என்பது இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது என்றும் நக்ஷ்பந்திய்யா நெறியினர் விளக்கம் தருகின்றனர். முழுமையான பணிவுடன் இறைவனின் நாட்டத்திற்கு நாம் சரணடைந்து நம்மை ஒப்படைத்துவிட வேண்டும். அதுவே நபிவழியாக உள்ளது. அது ஏனெனில், இறைவனை நாம் எவ்வளவுதான் தியானித்தாலும் புகழ்ந்தாலும் அவனின் தகுதிக்குத் தக்கபடி நம்மால் அதை நிறைவேற்ற முடியாது. இதனால்தான் நபி (ஸல்) சொன்னார்கள்:

“நினைவுகூரப்படுவோனே! நீ நினைவுகூரப்பட வேண்டிய

தகுதிக்குத் தக யாம் உன்னை நினைவுகூரவில்லையே!”

            நபி (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பதைக் கொண்டு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் தரும் விளக்கமாவது:

            ”அல்லாஹ் தன் அடியானை நினைவு கூர்தலும் அல்லாஹ்வின் உதவியும் இருந்தாலே தவிர அடியான் தன் திக்ரில் அல்லாஹ்வின் பிரசன்னத்திற்கு வந்து சேர முடியாது, அடியான் தன் திக்ரில் அல்லாஹ்வின் ரகசியங்களையும் திருப்பண்புகளையும் வெளியாக்க முடியாது. அபூ யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) சொன்னது போல், ‘நான் அல்லாஹ்வை அடைந்தபோது அவன் என்னை நினைவு கூர்வது நான் அவனை நினைவு கூர்வதை முந்தியிருக்கக் கண்டேன்.’ அடியான் தன் தானே சுயமாக திக்ரு செய்ய முடியாது. தன் வழியாக அல்லாஹ்தான் திக்ரு செய்கிறான் என்பதை அவன் உணரவேண்டும்.”

            பாஸ் கஷ்த் என்பது இறைவனிடம் மீளுதல் என்பதைக் குறிக்கும் என்று கண்டோம். அதாவது படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் மீளுதல் என்று இதனை அர்த்தப்படுத்தும்போது அந்தப் படைப்புக்களில் சாதகனும் இருக்கிறான். எனவே, உண்மையான மீளுதல் என்பது ஒருவர் தன்னை விட்டுமே இறைவனிடம் மீளுதலாகும். எனவே, பாஸ் கஷ்த் என்பது இறை நினைவில் மூழ்கியிருத்தல் என்னும் இஸ்திக்ராக் நிலையைக் குறிக்கிறது என்று ஸுஃபிகள் சொல்கின்றனர். இதனை விளக்க சுவையான நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது:

            ஸூஃபி ஒருவருக்கு இறை தியானத்தின்போது மனத்தில் பல்வேறு ஊசாட்டங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் தூய்மையற்ற எண்ணங்களும் இருந்தன. தன் மனம் இப்படி அழுக்காக இருக்கிறதே என்று அவர் பெரிதும் கவலைப் பட்டார். தான் ஸூஃபித்துவத்தில் நேர்மையாக இல்லை என்று அவர் வெட்கினார். எனவே, அவரின் ஷைஃகு அவரை வேறொரு ஸூஃபியிடம் அழைத்துச் சென்றார். அந்த ஸூஃபி இஸ்திக்ராக் என்னும் நிலையில் இருப்பவர். அதாவது இறை நினைவில் தன்னை மறந்து மூழ்கியிருப்பவர். தன்னிடம் ஆலோசனை கேட்டு வந்த சாதகரிடம் அந்த ஸூஃபி சொன்னார், ‘உன் பிரச்சனைக்குத் தீர்வு இறை தியானத்தில் மூழ்குவதுதான், மயிர் பிளக்கும் அறிவு விவாதங்கள் அல்ல.’ அப்போது அந்த சாதகர் ஒன்றை உணர்ந்து கொண்டார். அதாவது தனது நேர்மையின்மை, அவமானம், தேவைகள், ஆசைகள் என்று சிந்தித்துக் கொண்டிருந்ததில் தன் நினைவிலேயே மூழ்கி இருந்துவிட்டார். அதுவே இறை நினைவுக்குத் தடையாகி விட்டது.


            
மேற்சொன்ன கருத்தை மல்வானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் தன் மஸ்னவி ஷரீஃபில் ஒரு சிறிய கதை மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள்:

            விஷக் குளவிகள் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தன.

            சட்டென்று அவன் நதியில் குதித்துவிட்டான்.

            இந்தக் குறியீட்டின் அர்த்தம்தான் என்ன? கேள்.

            தண்ணீர்தான் திக்ரு – இறைவனை நினைவு கூர்தல்.

            லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வை அன்றி தெய்வமில்லை.

            உள்ளமையில் இறைவன் மட்டுமே இருக்கிறான்.

            அந்தக் குளவிகள் என்ன? அவனின் காம எண்ணங்கள்

            இவள் அவள் இவன் அவன் இது அது.

            தலை மேலே எழுகிறது. குளவிகள் கொட்டுகின்றன.

            அவன் சட்டென்று மீண்டும் முழுகுகிறான்.

            தண்ணீரே உன் மூச்சாகி விடட்டும்.

            தலை முதல் பாதம் வரை நதியாகிவிடு.

            அப்போதுதான் குளவிகள் உன்னை விட்டுவிடும்.

            நீ நதியை விட்டு விலகிப் போனாலும்

            அப்போது அவை உன்னை கவனிக்காது.

            சூரியன் வந்துவிட்ட பின்னர்

விண்மீன்களை எவரும் தேடுவதில்லை.

            இறைவனில் மூழ்கிப் போகும் ஒருவர் மறைந்து விடுவதில்லை.

            அவர் இறைப் பண்புகளில் ஊறிப் போய்விடுகிறார்.

            குர்’ஆனில் இருந்து சான்று வேண்டுமா?

            ’வ இன் குல்லுல் லம்மா ஜமீஉல் லதைனா முஹ்ளரூன்’

                        ’அவர்கள் அனைவரும் நிச்சயமாக

நம்மிடமே கொண்டுவரப் படுவார்கள்’ (36:32)

            அந்தப் பயணிகளுடன் இணைந்துவிடு.

            நாம் எரிக்கும் விளக்குகள் அணைந்து விடுகின்றன,

            சில வெகு சீக்கிரமே, சில விடியல் வரை.

            மங்கலானவை சில, பிரகாசமானவை சில,

            எல்லா விளக்குக்கும் ஒரே எண்ணெய்தான்!

            ஒரு வீட்டில் விளக்கு அணைந்தால்

            பிற வீடுகளை அது பாதிப்பதில்லை.

            அதுதான் மிருக ஆன்மாவின் உதாரணம்.

            புனித ஆன்மா அப்படிப்பட்டதன்று.

            சூரியன் எல்லா வீடுகளின் மீதும் பிரகாசிக்கிறது.

            அது சாயும்போது எல்லா வீடுகளும் இருள்கின்றன.

            உன் குருவின் திருவுருவம் ஒளியாகும்.

            உன் பகைவர்களோ இருளை நேசிக்கின்றனர்.

            சிலந்தி தன்னிலிருந்தே வலை பின்னி

            ஒளியின் மீது திரையிட்டுக் கொள்கிறது.

            காட்டுக் குதிரையை அதன் காலைப் பிடித்து

            அடக்கி விடலாம் என்று எண்ணாதே.

            கழுத்தைப் பிடி, கடிவாளம் இடு.

            அறிவுடன் செயல்படு, அப்புறம் சவாரி செய்.

            சுய நிராகரிப்பு உனக்குத் தேவையாக உள்ளது.

            பழைய ஒழுக்கங்களின் மீது அலுத்துக் கொள்ளாதே,

            அவை பேருதவி புரிகின்றன, இப்போதும்.*

            உலகத் தேவைகள் மற்றும் கடமைகளுக்கான காரியங்களை நிறைவேற்றிய பின்னர் முற்றிலுமாம இறைவனிடம் மீண்டு அவனின் நினைவில் மூழ்கி இருத்தல் என்னும் கருத்துள்ள பாஸ் கஷ்த் என்னும் இந்தக் கோட்பாட்டினைச் நாம் நிறைவேற்ற நபி (ஸல்) அவர்களே அழகிய முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களை நோக்கி இறைவன் இப்படிச் சொன்னான்:

 நிச்சயமாக நுமக்குப் பகலில் நீண்ட வேலைகள் உள்ளன” (73:7)

”உம் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பீராக,

மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக” (73:8)

            இந்த நிலை “தபத்துல்” என்று சொல்லப்படுகிறது. ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு இறைவனின் நினைவில் மூழ்குதல் வேண்டும் என்று இது காட்டுகிறது. இந்த இறைக் கட்டளை இன்னுமோர் இடத்திலும் வருகிறது:

’எனவே, நீங்கள் ஓய்ந்ததும் (இறைவனிடம்) ஈடுபட்டு முனைவீராக’ (94:7)

’மேலும், முழுமையாக நும் இறைவனிடம் சார்ந்துவிடுவீராக’ (94:8)

            ”தபத்துல்” என்னும் இந்த நிலையை அடையும்படியான கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது, அதை நாம் செய்ய வேண்டியதில்லை என்று எவரேனும் நினைத்தால் அது தவறான சிந்தனையும், வழிகேடும் ஆகும். அப்படி நினைப்பவர் படைப்புக்களுடனான தொடர்புகளில் மூழ்கி உழன்று தன் இறை நம்பிக்கையைப் பழுதாக்கிக் கொள்வார் என்பதில் ஐயமில்லை.

இந்த நிலையை நபியின் வழிகாட்டுதல்படி நபித்தோழர்கள் அடைந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து இன்று வரை அடுத்தடுத்த தலைமுறையின் இறைநேசர்கள் இந்த நிலையை அடைந்து வருகின்றனர். இந்த நிலையை மிக ஆழமாக அடைந்திருந்த காரணத்தால் அருமை நபியின் திருமகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு “பதூல்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டாயிற்று.


            
இந்த நிலை குறித்து இறைஞானி அல்லாமா ஷுஹூதி ஷாஹ் ஃபைஜி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் தரும் நீண்ட விளக்கங்களில் இருந்து சில கருத்துக்கள் பின்வருமாறு:

            தபத்துல் என்றால் அனைத்தை விட்டும் துண்டித்துக் கொண்டு அல்லாஹ்விடம் ஒன்றித்துவிடுதல். எல்லா உறவுகளையும் எவன் துண்டித்தானோ அவன்தான் அல்லாஹ்வுடன் ஒன்றிக்க முடியும். இல்லை என்றால் அல்லாஹ்வுடன் ஒன்றித்து லயிப்பது – வஸ்லு – கிடைக்காது. அவரை ’வாசில் ப ஹக்’ என்று சொல்ல முடியாது. அவர் ’வாஸில் ப துன்யா’ – உலகத்துடன் ஒன்றித்தவராகவே இருப்பார். எல்லாவற்றையும் துண்டித்துக் கொண்டு அல்லாஹ்வுடன் ஒன்றித்துவிடுவது என்றால் என்ன அர்த்தம்? காட்டுக்குப் போய்விடுவதா? காடும் மா சிவல்லாஹ் (அல்லாஹ் அல்லாதவை)தானே? ஒருவன் காட்டுக்குப் போய் மலைக் குகையில் உட்கார்ந்துவிட்டான். காடும் மா சிவல்லாஹ், மலையும் மா சிவல்லாஹ், குகையும் மா சிவல்லாஹ். அவையும் கைருல்லாஹ் (அல்லாஹ்வுக்கு வேறானவை)தானே? அவற்றை விட்டு எப்படி அல்லாஹ்விடம் ஓடுவாய் நீ? எனவே, தபத்துல் என்றால் எல்லா சிருஷ்டிகளை விட்டும் கல்பை (இதயத்தை)ப் பிடுங்கி அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவது! அவை நம் கல்பில் உட்கார்ந்திருந்தால் நாம் அல்லாஹ்வை நினைத்தோம் என்று சொல்லவே முடியாது.

            ஜோ ஹே சப் கோ பூல் ஜாத்தா ஒ ஃகுதா கோ யாத் கர்த்தா  - ’எவர் அனைத்தையும் மறந்து விடுகிறானோ அவர்தான் இறைவனை நினைவு கூர்கிறார்’ என்று ஞானிகள் பாடுகின்றனர். ஆனால் இந்த நிலையை அவ்வளவு லேசாக அடைய முடியாது. தொழுகைக்குத் தலைமை தாங்கும் இமாம் பதவியில் இருக்கும் ஒரு மார்க்க அறிஞருக்கும்கூட, தொழுகையின் நிலையிலும் இந்த நிலை உண்டாவதில் தடை வந்துவிடுகிறது. ‘ஜோ இமாம் பன் கயா ஹே உசே ஃபிக்ரே முப்ததீ ஹே’ – எவர் இமாம் ஆகிவிட்டாரோ அவருக்கு தன் பின்னால் நின்று தொழுபவரைப் பற்றிய சிந்தனை உண்டாகி விடுகிறது’ என்று மகான் பாடுகிறார்கள்.”

            எனவே பாஸ் கஷ்த் அல்லது தபத்துல் என்னும் இந்த நிலை உண்டாவதற்கு தனியான கால அவகாசமும், ஓர்மையுடன் பயிற்சியில் ஈடுபடுவதும் அவசியமாகும்.

            இந்த நிலையை பீரானே பீர் சய்யிதுனா கவ்ஸுல் அஃ’ழம் முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் அடைந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “மா ஃபில் அர்ளி ஃபில் அர்ளி, லைச ஃபில் கல்பி இல்லல்லாஹ்” – ’மண்ணின் மீது உள்ளவை மண்ணின் மீதே உள்ளன, என் மனத்தில் அல்லாஹ்வை அன்றி யாரும் இல்லை.’ இத்தகைய நிலையை நாம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!

 

 

* தி எஸ்ஸென்ஷியல் ரூமி” என்னும் நூலில் கோல்மன் பார்க்ஸ் “திக்ரு” என்னும் தலைப்பில் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

Monday, June 23, 2025

யாத் கர்த் (இறைநினைவில் மூழ்கியிருத்தல்)

(நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஐந்தாவது ஸூஃபிக் கோட்பாடு)










திக்ரு (அறபி), யாத் (ஃபார்சி) ஆகிய சொற்கள் நினைவு கூர்வது, நினைப்பது, ஞாபகம் செய்வது என்று அர்த்தப்படும்.

            திக்ருல்லாஹ் என்றால் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்று அர்த்தம். அது இறை தியானத்தைக் குறிக்கிறது.

            இறைவனை நினைவு கூர்வதே வழிபாடுகள் அனைத்தின் சாராம்சமும் உயிருமாக உள்ளது. இறை தியானம் இல்லை எனில் எந்த ஒரு வழிபாடும் உயிரற்ற உடல் ஆகிவிடும்.

            தொழுகை, நோன்பு, ஈகை, புனிதப் பயணம் முதலிய வணக்க வழிபாடுகளின் எல்லா வடிவங்களும் உடல்தான். அவற்றில் உயிராக இருப்பது இறை தியானமே ஆகும்.

            எனவே, வழிபாட்டு வடிவங்களுக்கு இடம், காலம் என்னும் எல்லைகளை வைத்த இறைவன், திக்ரு என்னும் இறை தியானத்திற்கு எல்லை வகுக்கவில்லை.

            அதாவது, நாளொன்றுக்கு ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒரு மாதத்தில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு, செல்வந்தர்களுக்கு ஓராண்டின் சேமிப்பில் 2.5 விழுக்காடு தூயவரி, இயலுவோருக்கு ஆயுளில் ஒரு முறை ஹஜ் என்னும் புனிதப் பயணம் என்று எல்லை உண்டு. ஆனால், இறை தியானத்திற்கு இவ்வளவு போதும் என்று வரம்பு இல்லை. அதனை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பது இறைநம்பிக்கையாளர் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக் கடமை (ஃபர்ளு) ஆகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! அதிகமான நியாபகமாக

அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (33:41)

என்று இறைவன் கட்டளை இடுகிறான். ”திக்ரன் கஸீரா” (அபரிதமான அதிகமான நியாபகம்) என்று சொல்லியிருப்பதன் பொருள் “இடை விடாது தியானித்தல்” என்று சொல்லப்படுகிறது. எனவே இது எப்போதும் இறைவனின் நினைவிலேயே மூழ்கி இருப்பதைக் கோருகிறது. அதனை ஸூஃபிகளே நிறைவேற்றுகின்றனர்.

            குரு ஒருவரிடம் ”பைஅத்” என்னும் தீட்சை அடைந்து அவரின் சீடராகி அவரின் வழிகாட்டுதல் படி பயிற்சிகள் செய்வதால் இந்நிலை அடையப்படுகிறது. தீட்சையின் நோக்கம் (மக்ஸதே பைஅத்) என்பது யாதே ஹக் அலத் தவாம், வ யாஃப்த்தே ஹக் – அதாவது சதா காலமும் இறைவனை நினைவு கூர்வதும், இறைவனை அடைவதும் ஆகும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர். ஒரு குருவின் நேரடித் தொடர்பில் இப்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியம். குருவின் தொடர்பின்றி தானாக முயல்வோருக்கு இந்த நிலை ஒருபோதும் வாய்க்காது.



            









இறைவனை சதா காலமும் நினைவு கூரும் நிலையை அடைந்த பின்னரே அவனை அடைகின்ற நிலை கிடைக்கிறது. இறைவனை அடைந்த பின்னரே அவனை அகக் கண்ணால் தரிசிக்கும் ஷுஹூத் என்னும் நிலை கிடைக்கும்.

            இறைவனை நினைவுகூர்தல் என்பது இரண்டு நிலைகளில் உள்ளது.

1.      இறைவனை அவனின் அழகிய திருநாமங்கள் கொண்டு நினைவு கூர்தல். இது அவனின் ருபூபிய்யத் என்னும் ரட்சகத் தன்மையில், அவனின் சிஃபாத் என்னும் திருக்கல்யாண குணங்களின் படித்தரத்தில் நினைவு கூர்வதாகும்.

நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்க. மேலும்,

அனைத்தையும் விட்டு ஒதுங்கி அவனுடன் சேர்ந்துவிடுக” (73:8)

2.      அழகிய திருநாமங்களுக்கு உரியவனான அந்த இறைவனையே நினைவு கூர்வதாகும். இது அவனின் சுயத் திருநாமம் (இஸ்மு ஜாத்) ஆன “அல்லாஹ்” என்னும் திருநாமத்தால் நிகழ்த்தப்படும். மேலும், அவனின் உலூஹிய்யத் (தெய்வத்தன்மை) பற்றிய பிரகடனம் ஆன ”லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவைக் கொண்டும் நிகழ்த்தப்படும்.

“என்னை நினைவு கூருங்கள், உங்களை நினைவு கூர்கிறேன்” (2:152)

என்னும் திருவசனத்தில் அவனையே நினைவு கூரும்படியாகக் கட்டளை உள்ளது.

            ”திக்ரு என்பதன் உண்மையான அர்த்தம் இறைவனைப் பற்றிய அக விழிப்பாகும். திக்ரின் நோக்கம் இந்த பிரக்ஞையை (உணர்வை) அடைவதுதான்” என்கிறார் ஃகாஜா உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.

            ஆரம்ப நிலையில் சாதகன் நாவால் திக்ரு செய்கிறான். இது திக்ரே ஜலி என்று சொல்லப்படும். அவன் பக்குவம் அடையும்போது அடுத்தடுத்து திக்ரே கல்பி என்னும் இதயத்தின் தியானம், திக்ரே அஃக்ஃபா அல்லது திக்ரே ரூஹி என்னும் உயிரின் தியானம், திக்ரே ஃகஃபிய்யுல் அஃக்ஃபா அல்லது திக்ரே சிர்ரி என்னும் ரகசியத்தின் தியானம் முதலிய அகவயமான தியானங்களுக்கு முன்னேறுகிறான்.

            இது பற்றி சய்யிதுனா முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: “ஆரம்ப நிலையில் ஒருவர் இறைவனின் திருப்பெயரைத் தன் நாவால் உச்சரிக்கிறார். இதயம் உயிர் பெற்றதும் அவர் அதனை அந்தரங்கமாக உச்சரிக்கிறார். ஆரம்பத்தில் ஒருவர் தான் நினைவு கூரும் வார்த்தைகளை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும். அப்புறம் படிப்படியாக அந்த தியானம் ஒருவரின் சுயம் வரை பரவிவிடுகிறது. முதலில் அது இதயத்தில் இறங்குகிறது. அப்புறம் ஆன்மாவுக்கு ஏறுகிறது. அப்புறம் அது மேலும் நகர்ந்து ரகசியங்களின் ஸ்தானத்தை அடைகிறது. மேலும் முன்னேறி மறைவையும், மறைவின் மறைவையும் அடைகிறது.”



            











திக்ரு என்னும் இறை நினைவுதான் மனிதனைப் புனிதனாக்கும் ஆன்மிக ரசவாதத்தின் அடிப்படை ஆகும். இறைக் காதலையே ரசவாதம் என்று மவ்லானா ரூமி போன்ற ஸூஃபி மகான்கள் சொல்லுகின்றனர். இரண்டும் முரணான கருத்துக்கள் அல்ல. ஏனெனில், இறைவனைக் காதலிக்காமல் நீங்கள் அவனை எப்போதும் திக்ரு செய்யும் நிலையை அடைய முடியாது. “ஒருவன் ஒன்றை நேசிக்கும்போது அதனை அதிகமதிகம் நினைவு கூர்கிறான்” (மன் அஹப்ப ஷைஅன் அக்ஸர திக்ரஹு) என்பது ஓர் அறபி முதுமொழியாகும். 

            சதா இறைவனை நினைவு கூர்வதால் மனிதன் எப்படிப் புடம் போடப் படுகிறான் என்பதை உஸ்மான் நூரீ தோப்பாஷ் இப்படி விளக்குகிறார்:

            ”இதயத்தில் இருந்து கிளம்பும் திக்ரின் சூக்குமமான சூடு முழு உடலிலும் பரவும்போது மனிதனின் உப நினைவு மனத்தில் மறைந்து கிடக்கும் உணர்ச்சிகள் யாவும் உயிர் பெற்றுவிடுகின்றன. அவை செயல்படும் பிரக்ஞையாக மாறி விடுகின்றன. அது ஒருவரின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. தன் எண்ணங்கள் முழுவதும் இறைவனைப் பற்றிய நினைப்பாகவே ஆகிவிட்ட ஒருவர் கருணை, பொறுமை, தாராளம், மன்னிப்பு முதலிய புனிதப் பண்புகளை விட்டும் நீக்கப்பட்டவராக இருப்பார் என்று கற்பனை செய்யவும் இயலாது. இவை அனைத்தும் ஒருவர் பக்குவமான மனிதர் ஆவதற்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். திக்ரின் மூலம் இதயத்தை உயிருள்ளதாக்குவது என்பது தஸவ்வுஃபில் (ஸூஃபித்துவத்தில்) மிக முக்கியமான நியதிகளில் ஒன்றாகும்.”

            திக்ரு செய்யும் முறைகள் பல இருக்கின்றன. மூச்சில் இறை நினைவை இணைத்துச் செய்யப்படும் பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சு திக்ரு எல்லா ஞான நெறிகளிலும் பொதுவானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மகானும் வெளிரங்கத்தில், செய்முறை வடிவத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் தியானப் பயிற்சிகளை நடைமுறைப் படுத்துகின்றனர். நக்ஷ்பந்திய்யா நெறியில் திக்ரு முறை அமைந்திருக்கும் முறையை ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் பின்வருமாறு விளக்குகிறார்:

            ”சாதகன் தன் இதயத்தில் (முராக்கபா) என்னும் தியானநிலையை அடையும் வரை தன் நாவால் நஃபீ (மறுத்தல்) மற்றும் இஸ்பாத் (உறுதிப்படுத்தல்) ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்ய வேண்டும்.

            ”அந்த நிலையை அடைய அவர் ஒவ்வொரு நாளும் லா இலாஹ என்னும் நஃபி மற்றும் இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் ஆகியவற்றை ஐயாயிரம் முதல் பத்தாயிரம் தடவைகள் தன் நாவால் சொல்லி, தன் இதயத்தில் இருந்து அதனைத் துருவேற வைத்து மழுங்கடிக்கும் விடயங்களை எல்லாம் நீக்க வேண்டும்.

            ”இந்த திக்ரு இதயத்தை மெருகூட்டி சாதகனை ஜுஹூர் என்னும் வெளிப்பாட்டின் நிலைக்கு இட்டுச் செல்லும்.

            ”அவர் அந்த அன்றாட திக்ரை தன் உள்ளத்தாலோ நாவாலோ செய்து வர வேண்டும். அல்லாஹ் என்னும் சுயத்திருநாமத்தை (இஸ்மு ஜாத்) உச்சாடனம் செய்ய வேண்டும். அந்தத் திருநாமம் ஏனைய அனைத்து நாமங்களையும் பண்புகளையும் தன்னுள் அடக்கியதாகும். அல்லது, லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லி நஃபி மற்றும் இஸ்பாத் செய்தபடி திக்ரு செய்ய வேண்டும்.

            ”இந்த அன்றாட திக்ரு சாதகனை அந்த திக்ரு செய்யப்படுவோனின் பூரணமான பிரசன்னத்திற்கு இட்டுச் செல்லும்.

            ”நக்‌ஷ்பந்தி ஸூஃபி குருமாரின் வழிமுறைப்படி நஃபி மற்றும் இஸ்பாத் திக்ரு செய்வதற்குப் பின்வரும் நியதிகளை ஒருவர் பேண வேண்டும்

-        சாதகர் தன் கண்களை மூடியிருக்க வேண்டும்.

-        வாயை மூடியிருக்க வேண்டும்.

-        பற்களை இறுக கெட்டித்து வைக்க வேண்டும்.

-        தன் நாக்கை மேலண்ணத்தில் ஒட்ட வைத்திருக்க வேண்டும்.

-        மூச்சைப் பிடித்து வைக்க வேண்டும்.

”நஃபி மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு தன் இதயத்தில் திக்ரு செய்ய வேண்டும். இதற்காக அவர் லா என்னும் சொல்லைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இதை அவர் தன் நாபியிலிருந்து தன் மூளைக்கு உயர்த்த வேண்டும்.

லா என்னும் சொல் மூளையை அடைந்ததும் இலாஹ என்னும் சொல்லினை வெளிக்கொண்டு வருகிறது. அதனை மூளையில் இருந்து வலது பக்கத் தோளுக்கு நகர்த்த வேண்டும்.

“அங்கிருந்து இல்லல்லாஹ் என்னும் சொல் கொண்டு இதயத்தில் அடிக்க வேண்டும்.

“அச்சொல் இதயத்தை அடித்தவுடன் அதன் சக்தியும் சூடும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவுகிறது. லா இலாஹ என்னும் நஃபி கொண்டு சாதகன் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் மறுத்துத் தள்ளுகிறான். அப்புறம், இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் கொண்டு அவை அனைத்தும் அல்லாஹ்வின் தெய்வீகப் பிரசன்னத்தில் அழிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறான்.

”இதை அவன் ஒவ்வொரு மூச்சிலும் – உள் மூச்சிலும் வெளி மூச்சிலும் – மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறான். எப்போதும் அது தன் இதயத்திற்கு வருமாறு பேணுகிறான். தனக்குத் தன் குருநாதர் பரிந்துரைத்த எண்ணிக்கைப்படி இதனைச் செய்கிறான்.

”இவ்வழியில் ஒரே மூச்சில் இருபத்து மூன்று தடவைகள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும் நிலையைச் சாதகன் படிப்படியாக அடைகிறான்.

“பூரணமான ஷைஃகு ஒருவர் ஒவ்வொரு மூச்சிலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை எண்ணற்ற தடவைகள் சொல்ல முடியும்.

“அல்லாஹ் மட்டுமே நம் இலக்கு, நமக்கு வேறு இலக்கு இல்லை என்பதே இந்தப் பயிற்சியின் அர்த்தம் ஆகும்.

“இந்தப் பயிற்சின் விளைவாக, இறைவனின் பிரசன்னம் மட்டுமே ஒரே உள்ளமை என்று காண்பது முரீதின் இதயத்தில் இறைத்தூதரின் காதலை உண்டாக்குகிறது. அப்போது அவர் ’முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொல்கிறார். அது இறைப் பிரசன்னத்தின் இதயத்தில் உள்ளதாகும்.”

இஸ்லாமின் அல்-கலிமத்துத் தய்யிபா என்னும் பரிசுத்தக் கொள்கை வாசகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை என்னும் முற்பகுதி உலூஹிய்யத் (தெய்வநிலை) என்பதைப் பிரகடனம் செய்கிறது. முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளார்கள் என்னும் பிற்பகுதி ரிசாலத் (தூதுத்துவம்) என்பதைப் பிரகடனம் செய்கிறது.

எனவே, நபியை நினைவு கூராமல் இறை தியானம் நிறைவு பெறாது. எதார்த்தத்தில் திக்ரு என்னும் காரியம் நடைபெற நினைப்பவன் (தாக்கிர்) மற்றும் நினைக்கப்படுபவன் (மத்கூர்) ஆகிய இருவர் வேண்டும் என்பது நியதி. இறைவன் மத்கூராகவும் அடியான் தாக்கிர் ஆகவும் இருப்பதில், அடியானின் பலகீனத்தைக் கருதி அல்லாஹ் தன் திருத்தூதரை தனக்கும் அடியானுக்கும் இடையில் முதக்கிர் (நினைவூட்டக்கூடியவர்) ஆக வைத்திருக்கிறான்.

”(நபியே!) நினைவூட்டுவீராக. நிச்சயமாக நீவிர் நினைவூட்டக் கூடியவரே” (88:21)



Wednesday, June 18, 2025

ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்)

 











நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஆன்மிகக் கோட்பாடுகளுள் நான்காவது “ஃகல்வத் தர் அஞ்சுமன்” என்பதாகும். இதன் நேரடியான அர்த்தம் “கூட்டத்தில் தனித்திருத்தல்” என்பதாகும்.

            ஃகல்வத் என்றால் தனிமை என்று பொருள். அஞ்சுமன் என்றால் சமுதாயம், குழு என்று பொருட்படும்.

            ஃகல்வத் என்பது அறபிச் சொல். ஃபார்சி, உருது மொழிகளில் இதற்கு தன்ஹாப்பன், தன்ஹாயி என்னும் சொற்கள் உள்ளன.

            தனித்திருத்தல் என்பதன் பொருள் வேறு எவருமே நம்முடன் இல்லாமல் ‘தான் மட்டும் இருப்பது’ என்று விளங்கி விடக்கூடாது. ஏனெனில், தான் மட்டும் தனித்திருக்கும் நிலை எந்தப் படைப்புக்கும் கிடையாது. அது இறைவனுக்கு உரிய நிலை ஆகும்.

            இறைவனுடன் தனித்திருக்கும் நிலை நபி (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். ஏனைய படைப்புக்களை விட்டும் நபி (ஸல்) அவர்களால் விலகி இருக்க இயலும். ஏனைய படைப்புகள் அனைத்துக்கும் இறைவனுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் இருந்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நிலையே ஃகல்வத் என்னும் தனிமை நிலையாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்னும் திருவசனத்தின்படியும்,

உங்களுக்குள் அல்லாஹ்வின் திருத்தூதர் இருக்கிறார் என்பதை அறிக” (49:7)

என்னும் திருவசனத்தின்படியும், நம்முடன் அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் இருக்கின்றனர். குருநாதர் (முர்ஷித்) தன் சீடர்களுக்கு இந்த உடனிருப்பின் உணர்வு நிலையை உண்டாக்கித் தருகிறார்கள்.



    

எனவேதான், “நமது ஞானவழியில் தன்ஹாப்பன் (தான் மட்டும் தனித்திருத்தல்) என்பது கிடையாது. அல்லாஹ்வுடனும் ரசூலுடனும் இருக்கும் நிலைதான் உண்டு” என்று அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் சொன்னார்கள்.

            உருது இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கவிதை அடி ’ஃகல்வத் தர் அஞ்சுமன்’ என்னும் கருத்தினைத் தருகிறது. அதனை முஃ’மின் ஃகான் முஃ’மின் எழுதியுள்ளார்:

(தும் மேரே பாஸ் ஹோத்தே ஹோ கயா / ஜப் கோயீ தூஸ்ரா நஹீன் ஹோத்தா)

”நீ என்னுடன் எப்போதும் இருந்து விடுகின்றாய்

இரண்டாம் நபர் எவரும் இல்லாத போதெல்லாம்”

            ஃகல்வத் தர் அஞ்சுமன் என்பது வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் இறைவனுடன் இருப்பதுமாகும்” என்று நக்‌ஷ்பந்திய்யா நெறியின் குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் கூறுகிறார்.



            








தனித்திருத்தல் என்பது இரண்டு வகைப்படும்:

1.      புறத் தனிமை

2.      அகத் தனிமை

மக்கள் இல்லாத ஓர் இடத்தில் சாதகன் அமர்ந்து கொள்வது புறத் தனிமை ஆகும். இது ஆரம்ப நிலைச் சாதர்களுக்கு அமயம் சமயம் தேவைப்படுவதாகும். அப்போதுதான் அவர்கள் மன ஓர்மையுடன் இறை தியானத்தில் ஈடுபட முடியும். இதில் முதிர்ச்சி அடையும்போது அகத் தனிமை என்னும் நிலை அருளப்படும்.

திக்ருல்லாஹ் என்னும் இறைதியான நிலை ஒருவரை மிகைத்துவிடும் போது அகத் தனிமை உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம். அப்போது அவரின் இதயபூர்வமான தியானம் (திக்ரே கல்பீ) எந்த அளவுக்கு இருக்கும் என்றால் ”மக்கள் குழுமியுள்ள இடத்தில் அவர் நுழையும்போதும் அவருக்குத் தன் இதயத்தின் திக்ருடைய குரலே கேட்கும், மக்களின் பேச்சுக் குரல் கேட்காது” என்று சொல்லப்படுகிறது. இது அகத் தனிமை முழுமை அடைந்துவிட்டதன் அடையாளம் எனப்படுகிறது.

வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும்

அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்” (24:37)

என்று குர்’ஆன் இத்தகைய நிலையை அடைந்தோரைச் சுட்டுவதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இந்தத் திருவசனத்தை நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாட்டின் ஆதாரம் என்று காட்டிய சுவையான நிகழ்வு ஒன்று உள்ளது:

            பஹாவுத்தீன் அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் வழியில் ஹிரத் என்னும் ஊரினை அடைந்தபோது அவ்வூரின் அமீர் (ஆணையர்) ஆன ஹுசைன் என்பார் மகான் அவர்களை வரவேற்று கண்ணியப்படுத்தும் நோக்கில் ஒரு சபை கூட்டினார்.

சபையில் அவர் மகானிடம் கேட்டார்: “உங்களிடம் சப்தமுள்ள திக்ரு, அல்லது பயண ஆரவாரம், அல்லது ஸூஃபிகளின் இசையும் கவிதையும் என்று எதுவுமே இல்லையே? உங்கள் பாதைதான் என்ன?” 

ஷாஹ் பஹாவுத்தீன் (ரஹ்) அவர்கள் பதில் சொன்னார்கள், “அப்துல் ஃகாலிக் குஜ்தவானி அவர்களது கூட்டத்தாரின் மிகத் தூய்மையான வார்த்தைகள் ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்) என்பதாகும். யாம் அவர்களின் வழியையே பின்பற்றுகிறோம்.”

“கூட்டத்தில் தனித்திருத்தல் என்றால் என்ன?” என்று அமீர் வினவினார்.

“வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் அல்லாஹ்வுடன் இருப்பதுமாகும்” என்று மகான் சொன்னார்கள்.

இதைக் கேட்டு அமீர் பெரிதும் வியப்படைந்தார். அப்படி இருப்பது நடைமுறையில் சாத்தியம்தானா என்று கேட்டார்.

மகான் பதில் சொன்னார்கள்: “அப்படி இருப்பது சாத்தியம் இல்லை என்றால் அல்லாஹு த’ஆலா அதனைத் தன் குர்’ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். ஆனால் அதை அவன் இவ்வாறு சுட்டியுள்ளான்: வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்’ (24:37). இதுவே எமது வழியாகும்.”

            ஞான வழியில் தனிமைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சகவாசத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதிவிடக்கூடாது. தனிமையும் சகவாசமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவற்றுக்குச் சம மதிப்பு உண்டு. இதனால்தான், நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வர் ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ”சகவாசமே நமது வழியாகும், நன்மை சேர்ந்திருப்பதில் உள்ளது(தரீக்கத்துனா அஸ்-ஸுஹ்பத் வல் ஃகைரு ஃபில் ஜமிய்யத்) புறத் தனிமையில் பிரபல்யம் உண்டாகிவிடுகிறது. பிரபல்யத்தில் இருந்து சீர்கேடு உண்டாகிறது. நமது நலம் நம் சபையிலும் சகவாசத்திலும் இருக்கிறது. ஆனால் ஒன்றுக்கு ஒன்றில் சுயத்தின் அழிவு (ஃபனா) இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.”

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) சொன்னதாவது: “குருநிலையின் சடங்கு என்னும் கதவை மூடிவிடு, தோழமையின் கதவைத் திறந்துவிடு. ஃகல்வத்தின் (தனிமையின்) கதவை மூடிவிடு, ஸுஹ்பத்தின் (சகவாசத்தின்) கதவைத் திறந்துவிடு.”



            









மக்களை விட்டு ஒதுங்கித் தனிமையில் இருத்தல் என்பது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒன்றுதான். பக்குவம் அடைந்தோர் மக்களுடன் இருக்கும்போதே இதயத்தால் தனித்து இறைவனுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் இக்கோட்பாடு. அதனால்தான் இது வெறுமனே ஃகல்வத் என்று சொல்லப்படாமல் ஃகல்வத் தர் அஞ்சுமன் எனப்படுகிறது. இக்கருத்தில் சய்யித் அல்-ஃகர்ராஸ் (ரஹ்) சொல்வதாவது:

            ”பூரணத்துவம் என்பது அற்புத சக்திகளை வெளிப்படுத்துவதில் இல்லை. ஆனால், மக்களுடன் அமர்ந்திருப்பது, கொடுக்கல் வாங்கல் செய்வது, திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது என்று எல்லாம் செய்தபடி ஒரு கணம் கூட அல்லாஹ்வின் பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதே பூரணத்துவம் ஆகும்.”

            இது எப்படிச் சாத்தியப்படும்? என்று வினா எழலாம். உங்களின் அனைத்துக் காரியங்களிலும் வெளியில் ஈடுபடும் அதே நேரத்தில் அகத்தில் அதை விட்டும் விடுதலையாகி இருக்க வேண்டும். அதாவது தாமரை இலை மீது உருளும் தண்ணீரைப் போல் நீங்கள் படைப்புக்களில் மனத்தை ஒட்டாமல் வைத்திருக்க வேண்டும். எது ஒன்றிலும் உங்களை அடையாளப்படுத்தாமல் இருங்கள் என்று ஞானியர் கூறுகின்றனர்.

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களின் ஃகலீஃபாக்களில் ஒருவரான ஃகாஜா அவ்லியா கபீர் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாடு பற்றி இப்படி விளக்கினார்கள்: “கூட்டத்தில் தனித்திருத்தல் என்பதாவது நீ சந்தையில் நடந்து போனாலும் ஒரு வார்த்தையையும் கேட்காத அளவுக்கு இறை தியானத்தில் மூழ்கியிருப்பதாகும்.”

            அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் தோளைப் பிடித்து அவரிடம் நபி (ஸல்) சொன்னார்கள்:

“இவ்வுலகில் ஒரு அந்நியனைப் போல் இரு, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இரு.” (ஸஹீஹுல் புஃகாரி #6416).

            ”இவ்வுலகில் அந்நியனைப் போல் இரு” என்பது மக்களுக்கு மத்தியில் இருந்தபோதும் இறைவனுடன் தனித்திருக்கும் நிலையைக் குறிப்பதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இக்கருத்தில் ஷைஃகு அபூ சயீத் அஹ்மத் இப்னு ஈசா அல்-ஃகர்ராஸ் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்:

            ”உன்னுள் காதலியுடன் உவந்தே இருப்பதில்

            உலகிற்கு நீ ஓர் அந்நியன் ஆகிவிடு!

            அத்தகைய அழகு அருளப்பட்ட நபர்கள்

            அரிது அரிது இவ்வுலகில் அரிதே!”

            இத்தகைய மகான்களின் இதயம் என்பது மிகவும் விரிவடைகிறது. எந்த அளவுக்கு என்றால், “கல்புல் முஃமினி அர்ஷுல்லாஹ்” – இறை நம்பிக்கையாளனின் இதயம் அல்லாஹ்வின் சிம்மாசனம் என்னும் நபிமொழிக்கு அவர்களே உதாரணங்கள் ஆகின்றனர். இந்த நபிமொழியை, “இறைவனின் அர்ஷு இறைநம்பிக்கையாளனின் இதயம் ஆகிவிடுகிறது” என்றும் அர்த்தப் படுத்தலாம். அதாவது, இறைநேசர்களின் இதயமும் அர்ஷும் வேறு வேறு அல்ல என்னும் நிலை உண்டாகிவிடுகிறது.