Monday, June 23, 2025

யாத் கர்த் (இறைநினைவில் மூழ்கியிருத்தல்)

(நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஐந்தாவது ஸூஃபிக் கோட்பாடு)










திக்ரு (அறபி), யாத் (ஃபார்சி) ஆகிய சொற்கள் நினைவு கூர்வது, நினைப்பது, ஞாபகம் செய்வது என்று அர்த்தப்படும்.

            திக்ருல்லாஹ் என்றால் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்று அர்த்தம். அது இறை தியானத்தைக் குறிக்கிறது.

            இறைவனை நினைவு கூர்வதே வழிபாடுகள் அனைத்தின் சாராம்சமும் உயிருமாக உள்ளது. இறை தியானம் இல்லை எனில் எந்த ஒரு வழிபாடும் உயிரற்ற உடல் ஆகிவிடும்.

            தொழுகை, நோன்பு, ஈகை, புனிதப் பயணம் முதலிய வணக்க வழிபாடுகளின் எல்லா வடிவங்களும் உடல்தான். அவற்றில் உயிராக இருப்பது இறை தியானமே ஆகும்.

            எனவே, வழிபாட்டு வடிவங்களுக்கு இடம், காலம் என்னும் எல்லைகளை வைத்த இறைவன், திக்ரு என்னும் இறை தியானத்திற்கு எல்லை வகுக்கவில்லை.

            அதாவது, நாளொன்றுக்கு ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒரு மாதத்தில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு, செல்வந்தர்களுக்கு ஓராண்டின் சேமிப்பில் 2.5 விழுக்காடு தூயவரி, இயலுவோருக்கு ஆயுளில் ஒரு முறை ஹஜ் என்னும் புனிதப் பயணம் என்று எல்லை உண்டு. ஆனால், இறை தியானத்திற்கு இவ்வளவு போதும் என்று வரம்பு இல்லை. அதனை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பது இறைநம்பிக்கையாளர் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக் கடமை (ஃபர்ளு) ஆகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! அதிகமான நியாபகமாக

அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (33:41)

என்று இறைவன் கட்டளை இடுகிறான். ”திக்ரன் கஸீரா” (அபரிதமான அதிகமான நியாபகம்) என்று சொல்லியிருப்பதன் பொருள் “இடை விடாது தியானித்தல்” என்று சொல்லப்படுகிறது. எனவே இது எப்போதும் இறைவனின் நினைவிலேயே மூழ்கி இருப்பதைக் கோருகிறது. அதனை ஸூஃபிகளே நிறைவேற்றுகின்றனர்.

            குரு ஒருவரிடம் ”பைஅத்” என்னும் தீட்சை அடைந்து அவரின் சீடராகி அவரின் வழிகாட்டுதல் படி பயிற்சிகள் செய்வதால் இந்நிலை அடையப்படுகிறது. தீட்சையின் நோக்கம் (மக்ஸதே பைஅத்) என்பது யாதே ஹக் அலத் தவாம், வ யாஃப்த்தே ஹக் – அதாவது சதா காலமும் இறைவனை நினைவு கூர்வதும், இறைவனை அடைவதும் ஆகும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர். ஒரு குருவின் நேரடித் தொடர்பில் இப்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியம். குருவின் தொடர்பின்றி தானாக முயல்வோருக்கு இந்த நிலை ஒருபோதும் வாய்க்காது.



            









இறைவனை சதா காலமும் நினைவு கூரும் நிலையை அடைந்த பின்னரே அவனை அடைகின்ற நிலை கிடைக்கிறது. இறைவனை அடைந்த பின்னரே அவனை அகக் கண்ணால் தரிசிக்கும் ஷுஹூத் என்னும் நிலை கிடைக்கும்.

            இறைவனை நினைவுகூர்தல் என்பது இரண்டு நிலைகளில் உள்ளது.

1.      இறைவனை அவனின் அழகிய திருநாமங்கள் கொண்டு நினைவு கூர்தல். இது அவனின் ருபூபிய்யத் என்னும் ரட்சகத் தன்மையில், அவனின் சிஃபாத் என்னும் திருக்கல்யாண குணங்களின் படித்தரத்தில் நினைவு கூர்வதாகும்.

நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்க. மேலும்,

அனைத்தையும் விட்டு ஒதுங்கி அவனுடன் சேர்ந்துவிடுக” (73:8)

2.      அழகிய திருநாமங்களுக்கு உரியவனான அந்த இறைவனையே நினைவு கூர்வதாகும். இது அவனின் சுயத் திருநாமம் (இஸ்மு ஜாத்) ஆன “அல்லாஹ்” என்னும் திருநாமத்தால் நிகழ்த்தப்படும். மேலும், அவனின் உலூஹிய்யத் (தெய்வத்தன்மை) பற்றிய பிரகடனம் ஆன ”லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவைக் கொண்டும் நிகழ்த்தப்படும்.

“என்னை நினைவு கூருங்கள், உங்களை நினைவு கூர்கிறேன்” (2:152)

என்னும் திருவசனத்தில் அவனையே நினைவு கூரும்படியாகக் கட்டளை உள்ளது.

            ”திக்ரு என்பதன் உண்மையான அர்த்தம் இறைவனைப் பற்றிய அக விழிப்பாகும். திக்ரின் நோக்கம் இந்த பிரக்ஞையை (உணர்வை) அடைவதுதான்” என்கிறார் ஃகாஜா உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.

            ஆரம்ப நிலையில் சாதகன் நாவால் திக்ரு செய்கிறான். இது திக்ரே ஜலி என்று சொல்லப்படும். அவன் பக்குவம் அடையும்போது அடுத்தடுத்து திக்ரே கல்பி என்னும் இதயத்தின் தியானம், திக்ரே அஃக்ஃபா அல்லது திக்ரே ரூஹி என்னும் உயிரின் தியானம், திக்ரே ஃகஃபிய்யுல் அஃக்ஃபா அல்லது திக்ரே சிர்ரி என்னும் ரகசியத்தின் தியானம் முதலிய அகவயமான தியானங்களுக்கு முன்னேறுகிறான்.

            இது பற்றி சய்யிதுனா முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: “ஆரம்ப நிலையில் ஒருவர் இறைவனின் திருப்பெயரைத் தன் நாவால் உச்சரிக்கிறார். இதயம் உயிர் பெற்றதும் அவர் அதனை அந்தரங்கமாக உச்சரிக்கிறார். ஆரம்பத்தில் ஒருவர் தான் நினைவு கூரும் வார்த்தைகளை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும். அப்புறம் படிப்படியாக அந்த தியானம் ஒருவரின் சுயம் வரை பரவிவிடுகிறது. முதலில் அது இதயத்தில் இறங்குகிறது. அப்புறம் ஆன்மாவுக்கு ஏறுகிறது. அப்புறம் அது மேலும் நகர்ந்து ரகசியங்களின் ஸ்தானத்தை அடைகிறது. மேலும் முன்னேறி மறைவையும், மறைவின் மறைவையும் அடைகிறது.”



            











திக்ரு என்னும் இறை நினைவுதான் மனிதனைப் புனிதனாக்கும் ஆன்மிக ரசவாதத்தின் அடிப்படை ஆகும். இறைக் காதலையே ரசவாதம் என்று மவ்லானா ரூமி போன்ற ஸூஃபி மகான்கள் சொல்லுகின்றனர். இரண்டும் முரணான கருத்துக்கள் அல்ல. ஏனெனில், இறைவனைக் காதலிக்காமல் நீங்கள் அவனை எப்போதும் திக்ரு செய்யும் நிலையை அடைய முடியாது. “ஒருவன் ஒன்றை நேசிக்கும்போது அதனை அதிகமதிகம் நினைவு கூர்கிறான்” (மன் அஹப்ப ஷைஅன் அக்ஸர திக்ரஹு) என்பது ஓர் அறபி முதுமொழியாகும். 

            சதா இறைவனை நினைவு கூர்வதால் மனிதன் எப்படிப் புடம் போடப் படுகிறான் என்பதை உஸ்மான் நூரீ தோப்பாஷ் இப்படி விளக்குகிறார்:

            ”இதயத்தில் இருந்து கிளம்பும் திக்ரின் சூக்குமமான சூடு முழு உடலிலும் பரவும்போது மனிதனின் உப நினைவு மனத்தில் மறைந்து கிடக்கும் உணர்ச்சிகள் யாவும் உயிர் பெற்றுவிடுகின்றன. அவை செயல்படும் பிரக்ஞையாக மாறி விடுகின்றன. அது ஒருவரின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. தன் எண்ணங்கள் முழுவதும் இறைவனைப் பற்றிய நினைப்பாகவே ஆகிவிட்ட ஒருவர் கருணை, பொறுமை, தாராளம், மன்னிப்பு முதலிய புனிதப் பண்புகளை விட்டும் நீக்கப்பட்டவராக இருப்பார் என்று கற்பனை செய்யவும் இயலாது. இவை அனைத்தும் ஒருவர் பக்குவமான மனிதர் ஆவதற்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். திக்ரின் மூலம் இதயத்தை உயிருள்ளதாக்குவது என்பது தஸவ்வுஃபில் (ஸூஃபித்துவத்தில்) மிக முக்கியமான நியதிகளில் ஒன்றாகும்.”

            திக்ரு செய்யும் முறைகள் பல இருக்கின்றன. மூச்சில் இறை நினைவை இணைத்துச் செய்யப்படும் பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சு திக்ரு எல்லா ஞான நெறிகளிலும் பொதுவானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மகானும் வெளிரங்கத்தில், செய்முறை வடிவத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் தியானப் பயிற்சிகளை நடைமுறைப் படுத்துகின்றனர். நக்ஷ்பந்திய்யா நெறியில் திக்ரு முறை அமைந்திருக்கும் முறையை ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் பின்வருமாறு விளக்குகிறார்:

            ”சாதகன் தன் இதயத்தில் (முராக்கபா) என்னும் தியானநிலையை அடையும் வரை தன் நாவால் நஃபீ (மறுத்தல்) மற்றும் இஸ்பாத் (உறுதிப்படுத்தல்) ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்ய வேண்டும்.

            ”அந்த நிலையை அடைய அவர் ஒவ்வொரு நாளும் லா இலாஹ என்னும் நஃபி மற்றும் இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் ஆகியவற்றை ஐயாயிரம் முதல் பத்தாயிரம் தடவைகள் தன் நாவால் சொல்லி, தன் இதயத்தில் இருந்து அதனைத் துருவேற வைத்து மழுங்கடிக்கும் விடயங்களை எல்லாம் நீக்க வேண்டும்.

            ”இந்த திக்ரு இதயத்தை மெருகூட்டி சாதகனை ஜுஹூர் என்னும் வெளிப்பாட்டின் நிலைக்கு இட்டுச் செல்லும்.

            ”அவர் அந்த அன்றாட திக்ரை தன் உள்ளத்தாலோ நாவாலோ செய்து வர வேண்டும். அல்லாஹ் என்னும் சுயத்திருநாமத்தை (இஸ்மு ஜாத்) உச்சாடனம் செய்ய வேண்டும். அந்தத் திருநாமம் ஏனைய அனைத்து நாமங்களையும் பண்புகளையும் தன்னுள் அடக்கியதாகும். அல்லது, லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லி நஃபி மற்றும் இஸ்பாத் செய்தபடி திக்ரு செய்ய வேண்டும்.

            ”இந்த அன்றாட திக்ரு சாதகனை அந்த திக்ரு செய்யப்படுவோனின் பூரணமான பிரசன்னத்திற்கு இட்டுச் செல்லும்.

            ”நக்‌ஷ்பந்தி ஸூஃபி குருமாரின் வழிமுறைப்படி நஃபி மற்றும் இஸ்பாத் திக்ரு செய்வதற்குப் பின்வரும் நியதிகளை ஒருவர் பேண வேண்டும்

-        சாதகர் தன் கண்களை மூடியிருக்க வேண்டும்.

-        வாயை மூடியிருக்க வேண்டும்.

-        பற்களை இறுக கெட்டித்து வைக்க வேண்டும்.

-        தன் நாக்கை மேலண்ணத்தில் ஒட்ட வைத்திருக்க வேண்டும்.

-        மூச்சைப் பிடித்து வைக்க வேண்டும்.

”நஃபி மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு தன் இதயத்தில் திக்ரு செய்ய வேண்டும். இதற்காக அவர் லா என்னும் சொல்லைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இதை அவர் தன் நாபியிலிருந்து தன் மூளைக்கு உயர்த்த வேண்டும்.

லா என்னும் சொல் மூளையை அடைந்ததும் இலாஹ என்னும் சொல்லினை வெளிக்கொண்டு வருகிறது. அதனை மூளையில் இருந்து வலது பக்கத் தோளுக்கு நகர்த்த வேண்டும்.

“அங்கிருந்து இல்லல்லாஹ் என்னும் சொல் கொண்டு இதயத்தில் அடிக்க வேண்டும்.

“அச்சொல் இதயத்தை அடித்தவுடன் அதன் சக்தியும் சூடும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவுகிறது. லா இலாஹ என்னும் நஃபி கொண்டு சாதகன் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் மறுத்துத் தள்ளுகிறான். அப்புறம், இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் கொண்டு அவை அனைத்தும் அல்லாஹ்வின் தெய்வீகப் பிரசன்னத்தில் அழிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறான்.

”இதை அவன் ஒவ்வொரு மூச்சிலும் – உள் மூச்சிலும் வெளி மூச்சிலும் – மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறான். எப்போதும் அது தன் இதயத்திற்கு வருமாறு பேணுகிறான். தனக்குத் தன் குருநாதர் பரிந்துரைத்த எண்ணிக்கைப்படி இதனைச் செய்கிறான்.

”இவ்வழியில் ஒரே மூச்சில் இருபத்து மூன்று தடவைகள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும் நிலையைச் சாதகன் படிப்படியாக அடைகிறான்.

“பூரணமான ஷைஃகு ஒருவர் ஒவ்வொரு மூச்சிலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை எண்ணற்ற தடவைகள் சொல்ல முடியும்.

“அல்லாஹ் மட்டுமே நம் இலக்கு, நமக்கு வேறு இலக்கு இல்லை என்பதே இந்தப் பயிற்சியின் அர்த்தம் ஆகும்.

“இந்தப் பயிற்சின் விளைவாக, இறைவனின் பிரசன்னம் மட்டுமே ஒரே உள்ளமை என்று காண்பது முரீதின் இதயத்தில் இறைத்தூதரின் காதலை உண்டாக்குகிறது. அப்போது அவர் ’முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொல்கிறார். அது இறைப் பிரசன்னத்தின் இதயத்தில் உள்ளதாகும்.”

இஸ்லாமின் அல்-கலிமத்துத் தய்யிபா என்னும் பரிசுத்தக் கொள்கை வாசகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை என்னும் முற்பகுதி உலூஹிய்யத் (தெய்வநிலை) என்பதைப் பிரகடனம் செய்கிறது. முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளார்கள் என்னும் பிற்பகுதி ரிசாலத் (தூதுத்துவம்) என்பதைப் பிரகடனம் செய்கிறது.

எனவே, நபியை நினைவு கூராமல் இறை தியானம் நிறைவு பெறாது. எதார்த்தத்தில் திக்ரு என்னும் காரியம் நடைபெற நினைப்பவன் (தாக்கிர்) மற்றும் நினைக்கப்படுபவன் (மத்கூர்) ஆகிய இருவர் வேண்டும் என்பது நியதி. இறைவன் மத்கூராகவும் அடியான் தாக்கிர் ஆகவும் இருப்பதில், அடியானின் பலகீனத்தைக் கருதி அல்லாஹ் தன் திருத்தூதரை தனக்கும் அடியானுக்கும் இடையில் முதக்கிர் (நினைவூட்டக்கூடியவர்) ஆக வைத்திருக்கிறான்.

”(நபியே!) நினைவூட்டுவீராக. நிச்சயமாக நீவிர் நினைவூட்டக் கூடியவரே” (88:21)



Wednesday, June 18, 2025

ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்)

 











நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஆன்மிகக் கோட்பாடுகளுள் நான்காவது “ஃகல்வத் தர் அஞ்சுமன்” என்பதாகும். இதன் நேரடியான அர்த்தம் “கூட்டத்தில் தனித்திருத்தல்” என்பதாகும்.

            ஃகல்வத் என்றால் தனிமை என்று பொருள். அஞ்சுமன் என்றால் சமுதாயம், குழு என்று பொருட்படும்.

            ஃகல்வத் என்பது அறபிச் சொல். ஃபார்சி, உருது மொழிகளில் இதற்கு தன்ஹாப்பன், தன்ஹாயி என்னும் சொற்கள் உள்ளன.

            தனித்திருத்தல் என்பதன் பொருள் வேறு எவருமே நம்முடன் இல்லாமல் ‘தான் மட்டும் இருப்பது’ என்று விளங்கி விடக்கூடாது. ஏனெனில், தான் மட்டும் தனித்திருக்கும் நிலை எந்தப் படைப்புக்கும் கிடையாது. அது இறைவனுக்கு உரிய நிலை ஆகும்.

            இறைவனுடன் தனித்திருக்கும் நிலை நபி (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். ஏனைய படைப்புக்களை விட்டும் நபி (ஸல்) அவர்களால் விலகி இருக்க இயலும். ஏனைய படைப்புகள் அனைத்துக்கும் இறைவனுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் இருந்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நிலையே ஃகல்வத் என்னும் தனிமை நிலையாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்னும் திருவசனத்தின்படியும்,

உங்களுக்குள் அல்லாஹ்வின் திருத்தூதர் இருக்கிறார் என்பதை அறிக” (49:7)

என்னும் திருவசனத்தின்படியும், நம்முடன் அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் இருக்கின்றனர். குருநாதர் (முர்ஷித்) தன் சீடர்களுக்கு இந்த உடனிருப்பின் உணர்வு நிலையை உண்டாக்கித் தருகிறார்கள்.



    

எனவேதான், “நமது ஞானவழியில் தன்ஹாப்பன் (தான் மட்டும் தனித்திருத்தல்) என்பது கிடையாது. அல்லாஹ்வுடனும் ரசூலுடனும் இருக்கும் நிலைதான் உண்டு” என்று அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் சொன்னார்கள்.

            உருது இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கவிதை அடி ’ஃகல்வத் தர் அஞ்சுமன்’ என்னும் கருத்தினைத் தருகிறது. அதனை முஃ’மின் ஃகான் முஃ’மின் எழுதியுள்ளார்:

(தும் மேரே பாஸ் ஹோத்தே ஹோ கயா / ஜப் கோயீ தூஸ்ரா நஹீன் ஹோத்தா)

”நீ என்னுடன் எப்போதும் இருந்து விடுகின்றாய்

இரண்டாம் நபர் எவரும் இல்லாத போதெல்லாம்”

            ஃகல்வத் தர் அஞ்சுமன் என்பது வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் இறைவனுடன் இருப்பதுமாகும்” என்று நக்‌ஷ்பந்திய்யா நெறியின் குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் கூறுகிறார்.



            








தனித்திருத்தல் என்பது இரண்டு வகைப்படும்:

1.      புறத் தனிமை

2.      அகத் தனிமை

மக்கள் இல்லாத ஓர் இடத்தில் சாதகன் அமர்ந்து கொள்வது புறத் தனிமை ஆகும். இது ஆரம்ப நிலைச் சாதர்களுக்கு அமயம் சமயம் தேவைப்படுவதாகும். அப்போதுதான் அவர்கள் மன ஓர்மையுடன் இறை தியானத்தில் ஈடுபட முடியும். இதில் முதிர்ச்சி அடையும்போது அகத் தனிமை என்னும் நிலை அருளப்படும்.

திக்ருல்லாஹ் என்னும் இறைதியான நிலை ஒருவரை மிகைத்துவிடும் போது அகத் தனிமை உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம். அப்போது அவரின் இதயபூர்வமான தியானம் (திக்ரே கல்பீ) எந்த அளவுக்கு இருக்கும் என்றால் ”மக்கள் குழுமியுள்ள இடத்தில் அவர் நுழையும்போதும் அவருக்குத் தன் இதயத்தின் திக்ருடைய குரலே கேட்கும், மக்களின் பேச்சுக் குரல் கேட்காது” என்று சொல்லப்படுகிறது. இது அகத் தனிமை முழுமை அடைந்துவிட்டதன் அடையாளம் எனப்படுகிறது.

வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும்

அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்” (24:37)

என்று குர்’ஆன் இத்தகைய நிலையை அடைந்தோரைச் சுட்டுவதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இந்தத் திருவசனத்தை நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாட்டின் ஆதாரம் என்று காட்டிய சுவையான நிகழ்வு ஒன்று உள்ளது:

            பஹாவுத்தீன் அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் வழியில் ஹிரத் என்னும் ஊரினை அடைந்தபோது அவ்வூரின் அமீர் (ஆணையர்) ஆன ஹுசைன் என்பார் மகான் அவர்களை வரவேற்று கண்ணியப்படுத்தும் நோக்கில் ஒரு சபை கூட்டினார்.

சபையில் அவர் மகானிடம் கேட்டார்: “உங்களிடம் சப்தமுள்ள திக்ரு, அல்லது பயண ஆரவாரம், அல்லது ஸூஃபிகளின் இசையும் கவிதையும் என்று எதுவுமே இல்லையே? உங்கள் பாதைதான் என்ன?” 

ஷாஹ் பஹாவுத்தீன் (ரஹ்) அவர்கள் பதில் சொன்னார்கள், “அப்துல் ஃகாலிக் குஜ்தவானி அவர்களது கூட்டத்தாரின் மிகத் தூய்மையான வார்த்தைகள் ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்) என்பதாகும். யாம் அவர்களின் வழியையே பின்பற்றுகிறோம்.”

“கூட்டத்தில் தனித்திருத்தல் என்றால் என்ன?” என்று அமீர் வினவினார்.

“வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் அல்லாஹ்வுடன் இருப்பதுமாகும்” என்று மகான் சொன்னார்கள்.

இதைக் கேட்டு அமீர் பெரிதும் வியப்படைந்தார். அப்படி இருப்பது நடைமுறையில் சாத்தியம்தானா என்று கேட்டார்.

மகான் பதில் சொன்னார்கள்: “அப்படி இருப்பது சாத்தியம் இல்லை என்றால் அல்லாஹு த’ஆலா அதனைத் தன் குர்’ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். ஆனால் அதை அவன் இவ்வாறு சுட்டியுள்ளான்: வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்’ (24:37). இதுவே எமது வழியாகும்.”

            ஞான வழியில் தனிமைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சகவாசத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதிவிடக்கூடாது. தனிமையும் சகவாசமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவற்றுக்குச் சம மதிப்பு உண்டு. இதனால்தான், நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வர் ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ”சகவாசமே நமது வழியாகும், நன்மை சேர்ந்திருப்பதில் உள்ளது(தரீக்கத்துனா அஸ்-ஸுஹ்பத் வல் ஃகைரு ஃபில் ஜமிய்யத்) புறத் தனிமையில் பிரபல்யம் உண்டாகிவிடுகிறது. பிரபல்யத்தில் இருந்து சீர்கேடு உண்டாகிறது. நமது நலம் நம் சபையிலும் சகவாசத்திலும் இருக்கிறது. ஆனால் ஒன்றுக்கு ஒன்றில் சுயத்தின் அழிவு (ஃபனா) இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.”

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) சொன்னதாவது: “குருநிலையின் சடங்கு என்னும் கதவை மூடிவிடு, தோழமையின் கதவைத் திறந்துவிடு. ஃகல்வத்தின் (தனிமையின்) கதவை மூடிவிடு, ஸுஹ்பத்தின் (சகவாசத்தின்) கதவைத் திறந்துவிடு.”



            









மக்களை விட்டு ஒதுங்கித் தனிமையில் இருத்தல் என்பது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒன்றுதான். பக்குவம் அடைந்தோர் மக்களுடன் இருக்கும்போதே இதயத்தால் தனித்து இறைவனுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் இக்கோட்பாடு. அதனால்தான் இது வெறுமனே ஃகல்வத் என்று சொல்லப்படாமல் ஃகல்வத் தர் அஞ்சுமன் எனப்படுகிறது. இக்கருத்தில் சய்யித் அல்-ஃகர்ராஸ் (ரஹ்) சொல்வதாவது:

            ”பூரணத்துவம் என்பது அற்புத சக்திகளை வெளிப்படுத்துவதில் இல்லை. ஆனால், மக்களுடன் அமர்ந்திருப்பது, கொடுக்கல் வாங்கல் செய்வது, திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது என்று எல்லாம் செய்தபடி ஒரு கணம் கூட அல்லாஹ்வின் பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதே பூரணத்துவம் ஆகும்.”

            இது எப்படிச் சாத்தியப்படும்? என்று வினா எழலாம். உங்களின் அனைத்துக் காரியங்களிலும் வெளியில் ஈடுபடும் அதே நேரத்தில் அகத்தில் அதை விட்டும் விடுதலையாகி இருக்க வேண்டும். அதாவது தாமரை இலை மீது உருளும் தண்ணீரைப் போல் நீங்கள் படைப்புக்களில் மனத்தை ஒட்டாமல் வைத்திருக்க வேண்டும். எது ஒன்றிலும் உங்களை அடையாளப்படுத்தாமல் இருங்கள் என்று ஞானியர் கூறுகின்றனர்.

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களின் ஃகலீஃபாக்களில் ஒருவரான ஃகாஜா அவ்லியா கபீர் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாடு பற்றி இப்படி விளக்கினார்கள்: “கூட்டத்தில் தனித்திருத்தல் என்பதாவது நீ சந்தையில் நடந்து போனாலும் ஒரு வார்த்தையையும் கேட்காத அளவுக்கு இறை தியானத்தில் மூழ்கியிருப்பதாகும்.”

            அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் தோளைப் பிடித்து அவரிடம் நபி (ஸல்) சொன்னார்கள்:

“இவ்வுலகில் ஒரு அந்நியனைப் போல் இரு, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இரு.” (ஸஹீஹுல் புஃகாரி #6416).

            ”இவ்வுலகில் அந்நியனைப் போல் இரு” என்பது மக்களுக்கு மத்தியில் இருந்தபோதும் இறைவனுடன் தனித்திருக்கும் நிலையைக் குறிப்பதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இக்கருத்தில் ஷைஃகு அபூ சயீத் அஹ்மத் இப்னு ஈசா அல்-ஃகர்ராஸ் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்:

            ”உன்னுள் காதலியுடன் உவந்தே இருப்பதில்

            உலகிற்கு நீ ஓர் அந்நியன் ஆகிவிடு!

            அத்தகைய அழகு அருளப்பட்ட நபர்கள்

            அரிது அரிது இவ்வுலகில் அரிதே!”

            இத்தகைய மகான்களின் இதயம் என்பது மிகவும் விரிவடைகிறது. எந்த அளவுக்கு என்றால், “கல்புல் முஃமினி அர்ஷுல்லாஹ்” – இறை நம்பிக்கையாளனின் இதயம் அல்லாஹ்வின் சிம்மாசனம் என்னும் நபிமொழிக்கு அவர்களே உதாரணங்கள் ஆகின்றனர். இந்த நபிமொழியை, “இறைவனின் அர்ஷு இறைநம்பிக்கையாளனின் இதயம் ஆகிவிடுகிறது” என்றும் அர்த்தப் படுத்தலாம். அதாவது, இறைநேசர்களின் இதயமும் அர்ஷும் வேறு வேறு அல்ல என்னும் நிலை உண்டாகிவிடுகிறது.

Monday, June 16, 2025

சஃபர் தர் வதன் (ஆன்மிகத்தின் உள்முகப் பயணம்)

 (நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகளில் மூன்றாவது கோட்பாடு பற்றிய விளக்கங்கள்.)











நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் மூன்றாவது கோட்பாடு “சஃபர் தர் வதன்” என்பதாகும். ”சொந்த ஊர் நோக்கிப் பயணித்தல்” என்பது இதன் நேரடியான அர்த்தமாகும் [சஃபர் = பயணம்; வதன் = சொந்த ஊர் /  நாடு].

            எனினும், இத்தொடரை ஸூஃபிகள் ஆன்மிகத்தின் உள்முகப் பயணம் என்றே பொருள் கொள்கின்றனர்.

            வெளிப்படையில் மனிதர்கள் அனைவரும் அவ்வப்போது தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதும் மீண்டும் கிளம்புவதுமாகப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தப் புறப் பயணத்தைதான் இந்தத் தொடர் குறிக்கும் என்றால் அவர்கள் எல்லோருமே ஸூஃபிகள் என்று கூற வேண்டி வரும் அல்லவா? அது பொருந்தாது என்பது விளக்கிச் சொல்லாமலே புரியும்.

            வதன் என்னும் சொல் நேரடிப் பொருளில் ஒருவரின் சொந்த ஊரை அல்லது நாட்டைக் குறிக்கும் என்று பார்த்தோம். இந்தச் சொல் “ஹதீஸ்” என்று பிரபலமாகி உள்ள ஒரு வாசகத்தில் இடம் பெறுகிறது.

ஹுப்புல் வதன் மினல் ஈமான்

”தன் நாட்டின் / ஊரின் மீதான நேசம் இறை நம்பிக்கையில் உள்ளதாகும்”

            இது நபிமொழி அல்ல. நபிகள் நாயகம் சொன்னதாகப் பரப்பப்பட்டுள்ள ஒரு வாசகம் (ஹதீஸே மவ்ளூ) என்று இமாம் அல்-சகானீ (ரஹ்), அல்லாமா முல்லா அலீ காரீ (ரஹ்) முதலிய ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். அல்லாமா முல்லா அலீ காரீ (ரஹ்) சொல்கிறார்கள்: “ஒருவேளை இந்தச் சொற்றொடர் ஆதாரமான நபிமொழியே என்று நிரூபிக்கப்படும் எனில் இதில் உள்ள ‘வதன்’ (தாய் நாடு / சொந்த ஊர்) என்பது ஜன்னத் (சொர்க்கத்)தைக் குறிக்கும் அல்லது மக்கா நகரைக் குறிக்கும்.” (நூல்: அல்-அஸ்ராருல் மர்ஃபு’ஆ).



            






இந்தச் சொற்றொடருக்கு மவ்லானா ரூமி (ரஹ்) மிக அற்புதமான விளக்கம் தருகிறார்கள்: “வதன் என்பது இந்தப் பூமியில் நீ வசித்துக் கொண்டிருக்கும் ஊரையோ நாட்டையோ குறிக்காது. இதெல்லாம் அழிந்து போகக்கூடிய உலகில் பகுதிகள். அதை நேசிப்பதை இறை நம்பிக்கையின் பகுதி என்று கூறுவது பொருந்தாது. வதன் என்பது நீ இந்த உலகத்தை விட்டுச் சென்ற பின்னர் நிர்ந்தரமாக எங்கே தங்கிவிடப் போகிறாயோ அந்த இடத்தைக் குறிக்கும். இறை நம்பிக்கையாளருக்கு அது சொர்க்கம் ஆகும். எனவே சொர்க்கத்தை நேசிப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே அதன் சரியான பொருத்தமான அர்த்தம்.”

            தமிழில் வீடு என்று ஒரு சொல் இருக்கிறது. இந்த மண்ணுலக வாழ்வில் நாம் எங்கே அதிக நிம்மதியுடனும், அதிக காலங்களும் தங்குகிறோமோ அந்த இடம் வீடு என்று சொல்லப்படுகிறது. தற்காலிகமாகத் தங்கும் இடங்கள் அலுவலகம், விடுதி, சத்திரம் போன்றவையாகும். அவற்றை வீடு என்று நாம் சொல்ல மாட்டோம்.

            ஆனால், வீடுபேறு என்று சொல்லும்போது அது சொர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த பூமியில் உள்ள வீட்டை அல்ல. சொர்க்கத்துடன் ஒப்பிடும்போது இந்த உலகம் ஒரு அலுவலகமாகவும், சத்திரமாகவும், விடுதியாகவும் இருக்கிறது. அறபியிலும் சொர்க்கத்தை தார் (வீடு) என்று அழைப்பது உண்டு. அது தாருல் பகா (நிரந்தர வீடு) என்று சொல்லப்படுகிறது.

            நாம் சொர்க்கத்திற்குச் செல்வது எதற்காக? அங்கே கிடைக்கும் மிக உச்சமான நற்பேறு, அருள் எது? அது இறைவனின் தரிசனம் (லிகாஉல்லாஹ்) ஆகும். இந்த உலகில் இறைவனை அகக் கண்ணாலும் மறுமையில் இறைவனை அகக் கண்ணாலும் புறக் கண்ணாலும் தரிசிக்க வேண்டும் என்று பீரானே பீர் முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

            எனவே, சொர்க்கத்தை நோக்கிப் பயணித்தல் என்பது அகமியத்தில் இறைவனை நோக்கிப் பயணித்தல் ஆகும். நாம் இறைவனிடம் மீண்டு கொண்டுள்ளோம் என்கிறது குர்’ஆன்:

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 “நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள்; நிச்சயமாக அவனிடம் மீள்கிறோம்” (2:156)

            இறைவனிடம் மீளும் இந்தப் பயணம் ஆன்மிக ரீதியானது. ருஜூ இலல்லாஹ் (அல்லாஹ்விடம் மீளுதல்) அல்லது ருஜூ இலல் ஆஃகிரா (மறுமைக்கு மீளுதல்) என்பது இதயத்தால் செய்யப்பட வேண்டிய அகப் பயணம் ஆகும். இதற்கு நபி (ஸல்) அழகிய மும்மாதிரியாக இருக்கின்றார்கள் என்பதை குர்’ஆன் சொல்கிறது:

உங்களில் எவர் அல்லாஹ்விடமும் மறுமை நாளிடமும் மீண்டவராக

அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கின்றீர்களோ அவர்களுக்கு

அல்லாஹ்வின் திருத்தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21)

            நபி (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரியாக அடைவதற்கு இவை இரண்டும் இறைவனால் சுட்டப்படும் நியதிகள் ஆகும். எனவே இறைவனிடமும் மறுமையிடமும் இதயம் திரும்பாமலும், இறைவனை அதிகமாக திக்ரு செய்யாமலும் (தியானிக்காமலும்) இருக்கின்ற நிலையில் அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவதாக ஒரு முஸ்லிம் சொல்வது அர்த்தமற்ற வெற்றுப் பிதற்றல் ஆகும். இந்தத் திருவசனத்தை எதார்த்தத்தில் செயற்படுத்துவோர் ஸூஃபிகள் மட்டுமே என்பது உறுதி.

            இனி இந்தக் கோட்பாட்டுக்கு நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பெரியோர்களும் அறிஞர்களும் தருகின்ற விளக்கங்களைக் காண்போம்.

வெளிரங்கமான அர்த்தமும் விளக்கமும்:

            இந்தக் கோட்பாட்டிற்கு வெளிரங்கமான அர்த்தம் ஒன்று உண்டு என்று அவர்கள் சொல்கின்றனர். அதாவது, தனக்கு வழிகாட்டக் கூடிய ஒரு குருவைத் தேடி சாதகன் இம்மண்ணுலகில் தேடி அலைந்து அவரைக் கண்டடைவதாகும். ஞான வானில் ஒளி வீசும் சூரியன்களாக உள்ள மாபெரும் ஸூஃபிகள் பலரும் பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சுற்றித் திரிந்து தம் குருநாதரை அடைந்திருக்கிறார்கள். இந்தப் புறப்பயணம் சீடனால் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை குர்’ஆனின் பின்வரும் வசனம் சுட்டிக் காட்டுகிறது:

”இறை விசுவாசியரே! அல்லாஹ்விடம் பயபக்தி செய்யுங்கள்; அவனிடம் இணைத்து வைக்கும் வசீலாவை (இடைத்தொடர்பை)த் தேடிக்கொள்ளுங்கள்; மேலும், அவனின் பாதையில் கடுமுயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றியடையலாம்.” (5:35)

            இறைவனை அடைவதற்காகக் கடுமுயற்சி (முஜாஹதா) செய்வது பற்றி இன்னொரு திருவசனம் குறிப்பிடுவதும் கவனத்திற்கு உரியது:

“எவர் நம்மில் கடுமுயற்சி செய்வார்களோ

அவர்களுக்கு நாம் நம் பாதைகளில் நேர்வழி காட்டுவோம்” (29:69)

            இறைவனை அடைவதற்கான நேர்வழிகாட்டல் (ஹிதாயத்) கிடைப்பதில் குருவைத் தேடி அடைவதும் அடங்கும் என்று இந்தத் திருவசனங்கள் காட்டுகின்றன. இறைவனுடன் இணைத்து வைக்கும் வசீலா இறைநேசரான முர்ஷித் (வழிகாட்டி)தான் என்றும் குர்’ஆன் சொல்கிறது:

 “எவனை நான் வழிகேட்டில் விட்டுவிட்டேனோ

அவனுக்கு நேர்வழிகாட்டும் இறை நேசரை அடையமாட்டீர்  (18:17)

            இறைவனால் அருள் செய்யப்பட்டோர் என்று வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ள இறைத்தூதர்கள் (நபிய்யீன்), மெய்யாளர்கள் (ஸித்தீக்கீன்), உயிர் தியாகியர் (ஷுஹதா’) மற்றும் நல்லடியார்கள் (ஸாலிஹீன்) ஆகியோருள் ஸித்தீக்கீன்களின் சகவாசத்தில் இருக்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளை இட்டுள்ளான்:

 “இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை பயபக்தி செய்யுங்கள்,

மேலும், மெய்யாளர்களுடன் இணைந்திருங்கள்” (9:119)

            ஸூஃபிகளே விலாயத் என்னும் இறை நேசத்தை அடைந்த ஸித்தீக்கீன்களாக உள்ளனர். ஒரு  வலியே முர்ஷிதை (வழிகாட்டும் இறைநேசரை) அடைந்து அவருடன் இருக்கும்போது ஏற்கனவே மெய்யாளர் என்னும் நிலையை அடைந்த மூத்த சீடர்களுடன் சகவாசம் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அது கூனூ ம’அஸ் ஸாதிக்கீன் – மெய்யாளர்களுடன் இணைந்திருப்பதாகிறது.

            இவை எல்லாம் சஃபர் தர் வதன் என்பதன் வெளிரங்கமான அர்த்தப்படி கிடைக்கும் விளக்கங்கள் ஆகும்.











அந்தரங்கமான அர்த்தமும் விளக்கமும்:

            ”சஃபர் தர் வதன் என்பது ஒருவர் தன் தாய்நிலம் திரும்புதலாகும். அதாவது சாதகன் படைப்புக்களின் உலகை விட்டும் படைத்தவனின் உலகிற்குத்  திரும்புவதாகும். மேலும் சுருக்கமாக, படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் – மினல் ஃகல்க் இலல் ஹக்கு  - திரும்புவதாகும். இந்தப் பயணம் தடுக்கப்பட்ட (ஹராமான)வற்றின் மீதான ஆசையை விட்டு விலகி இறைவனின் பிரசன்னம் மீதான ஆசைக்குப் பயணிப்பதாகும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இதில் பின்வருமாறு பல நிலைகள் இருக்கின்றன:

  1. தடுக்கப்பட்டவற்றை விட்டும் அனுமதிக்கப்பட்டவற்றிடம் திரும்புவது (மினல் ஹராம் இலல் ஹலால்). இது இறைச்சட்டங்களின் – ஷரீஅத் – நிலையில் செயற்படுத்தப்பட வேண்டிய பயணம் ஆகும். ஆரம்ப நிலைச் சாதகர்கள் இதில் உறுதிப்பட்ட பின்னரே அடுத்த நிலைக்கு உயர முடியும்.
  2. அனுமதிக்கப்பட்டவற்றிலும் தனக்குத் தேவையற்ற விடயங்களை விட்டுவிடுவதாகும். இந்த நிலை ஜுஹ்து (Zuhd) என்றும் இதனைக் கடைப்பிடிப்பவர் ஜாஹித் (Zahid) என்றும் சொல்லப்படுகிறார். இது ஆன்மிக நெறியில் முன்னேறிக் கொண்டிருப்போர் இருக்கும் நிலையாகும்.
  3. படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் திரும்புவது (மினல் ஃகல்க் இலல் ஹக்கு). அதாவது ஆகுமான, அவசியத் தேவையான பொருட்களிலும்கூட படைப்பைக் காணாமல் அகக்கண்ணால் படைத்தவனை ஷுஹூது (சாட்சி தரிசனம்) செய்வது. இது இறைவனை நெருங்குவோரின் (முகர்ரபீன்) நிலையாகும்.
  4. இறைவனை விட்டும் இறைவனிடம் திரும்புவது (மினல்லாஹ் இலல்லாஹ்). அதாவது இந்த நிலை சைர் ஃபில்லாஹ் (இறைவனிடம் பயணித்தல்) என்றும் சொல்லப்படும். இது இறைத்தூதர்கள் (அன்பியா) மற்றும் ஸித்தீக்கீன் என்னும் இறை நேசர்கள் (அவ்லியா) ஆகியோரின் நிலையாகும்.

இறைவனிடம் திரும்பிவிட்டோருக்கு மீண்டும் திரும்பி வருதல் இல்லை – புறத்திலும் அகத்திலும், உடலாலும், இதயத்தாலும். இது குறித்து ஸூஃபி கவிதை ஒன்று சொல்கிறது:

            ”நான் எனது மூல இடத்திற்குப் பயணிக்கின்றேன்;

             ஆம், நான் ஒருவேளை திரும்பி வரவே மாட்டேன்!”

            (முசாஃபிரம் ப-ஷஹ்ரே மன் / ஷாயத் கெ பாஸ் ந-கர்தம்)

            ”சஃபர் தர் வதன் என்பது சாதகன் தன் மனித சுபாவத்தினுள் நிகழ்த்தும் பயணமாகும். அதாவது மனித குணங்களில் இருந்து வானவரின் குணங்களை நோக்கி உயர்வதாகும், இழிவான குணங்களை விட்டுப் போற்றத்தக்க குணங்களை நோக்கி உயர்வதாகும்” என்று ரஷாஹத்தே ஐனல் ஹயாத் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது.

            ஷைஃகு அஹ்மத் சிர்ஹிந்தி (ரஹ்) சொல்கிறார்கள்: “சஃபர் தர் வதன் என்னும் இந்த பாக்கியமான கோட்பாடு சுயத்தினுள் பயணிப்பதைக் குறிக்கிறது. குர்’ஆனில் அல்லாஹ் சொல்கிறான்:

”வெளியுலகிலும் அவர்களுக்கு உள்ளேயும்

அதிவிரைவில் அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் காண்பிப்போம்,

அவன்தான் சத்தியம் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரை.” (41:53)

            இதன்படி தொடுவானங்களில் பயணித்த பிறகு மட்டுமே இந்த அகப் பயணம் இதர ஞான நெறிகளில் (தரீக்காக்களில்) கிடைக்கின்றது. நக்‌ஷ்பந்திய்யா நெறி அதனை ஆரம்பத்தில் வைக்கிறது.”

             ஒரு ஸூஃபி கவிதை இப்படிச் சொல்கிறது:

                        ”வெளியுலகில் வசித்திரு, உன் இதயம் பயணிக்கட்டும்;

                        கால்கள் இல்லாமல் பயணிப்பதே சிறந்த பயணமாகும்!”

            ”சாதகனுக்குப் பல்வேறு அகநிலைகளும் படித்தரங்களும் (ஹால் வ மகாம்) கிடைக்கும். எந்த ஓர் அனுபவத்தையும் அவன் இறுதியானது உச்சமானது என்று கருதிவிடக் கூடாது. அதிலேயே அவன் சிக்கி நின்றுவிடக் கூடாது. அவன் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு படித்தரத்தில் இருந்து அடுத்த படித்தரத்திற்கு எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைதான் சஃபர் தர் வதன் என்று சொல்கிறோம்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) இக்கருத்தில் ஒரு கவிதை சொல்லியிருக்கிறார்:

காம் அப்னா ஹே ஸுப்ஹ் ஒ ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா

”நம் பணி காலையும் மாலையும் சென்று கொண்டு இருப்பதே;

செல்வது செல்வது, எங்கும் நில்லாமல் செல்வதே!”

            ”சாதகன் தன் குருவை அடையும்வரைதான் அவனின் வெளிரங்கமான பயணங்கள் நிகழ்கின்றன. அவன் குருவை அடைந்ததும் புறத்தில் பயணிப்பது நின்று அவனின் அகப் பயணம் ஆரம்பம் ஆகிவிடுகிறது” என்கிறார் அபூ உஸ்மான் அல்-மக்ரிபி (ரஹ்) அவர்கள்.

            சாதகன் அகப் பயணம் மேற்கொள்ளும்போது அவனின் நிலை இறைத்தூதர் இப்றாஹிம் (அலை) அடைந்த மனநிலையை ஒத்ததாகிவிடுகிறது. அதாவது:

 “மேலும் அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என் ரட்சகனிடமே செல்கிறேன். நிச்சயமாக அவன் எனக்கு வழிகாட்டுவான்” (37:99)

            அதாவது, குருநாதர் தன்தானே சுயமாக வழிநடத்துவதில்லை. அவர் இறைவனின் கருவியாக இருக்கிறார். அவர் ‘மகாமே றப்’பாக (இறைவனின் தங்குமிடமாக), ’மழ்ஹரே றப்’பாக (இறைவன் வெளிப்படும் ஊடகமாக) இருக்கிறார். அவரைக் கொண்டு இறைவனே ஒருவருக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தெளிவுடன் சாதகன் தன் அகப் பயணத்தைத் தொடர்கிறான்.