Tuesday, October 3, 2017

கனவுச் சிறுமியின் கவிதைகள்



               ”உலகத்தைச் சொற்களால் மாற்றுங்கள்.
ஆம், சொற்கள் உண்மையில்
அவ்வளவு சக்தி வாய்ந்தவை”

இப்படிச் சொல்லும் மார்கரீட்டா எங்க்லே’யின் கவிதைகளைப் படித்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவை அத்தனை எளிமையான சொற்களுடனும், குழந்தைகளின் கற்பனை அழகுடனும் இருக்கின்றன.

மென்மையான விதைகளில் இருந்துதானே வலிய காடு எழுகிறது? இளம் உள்ளங்களில் உயர்ந்த கருத்துக்களை விதைப்பதே தனது கவிதைப்பணி என்று அவர் உணர்ந்திருக்கிறார்.

கவிஞர், புதின எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்று தனது எழுத்துப் பணிக்கு மூன்று பரிமாணங்கள் கொண்டவர் மார்கரீட்டா. கலிஃபோர்னியாவில் வசிக்கின்றார். தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். வேளாண் தொழில்நுட்பம் கற்பிக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியை. ”இளைஞர்களுக்கான கவிஞர்” என்று சிறப்பிக்கப்படுபவர்.

மார்கரீட்டா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தவர். அவரின் தந்தை அமெரிக்கர்; தாய் க்யூபா நாட்டவர். தாய் பிறந்த நாடே தனது தாய்நாடு என்னும் உணர்வு அவரின் உள்ளத்தில் ஆழ வேரோடியிருக்கிறது. அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்ற அவர் விடுமுறைகளில் எல்லாம் க்யூபாவுக்குச் சென்று தனது தாயின் பெற்றோருடன் தங்கி வருவார்.

1962-இல் அரசியல் சூழல் மாறியது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்து வந்த பனிப்போரில் ஒரு தீவிர நிகழ்வு அது. தங்கள் நாட்டைத் தாக்குவதற்காக க்யூபாவில் ரஷ்யா ஏவுகணைகளைப் பொருத்தி வருவதை அமெரிக்கா ‘கண்டுபிடித்தது’. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1962-இல் பதின்மூன்று நாட்கள் நடந்த போர்த் தாக்குதல்களை வரலாறு “க்யூபன் ஏவுகணை நெருக்கடி” (Cuban Missile Crisis) என்று அழைக்கிறது.

அந்த நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் க்யூபர்கள் தமது ‘தாய்’நாட்டிற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அற்புதக் கனவுகளில் மிதக்கும் மனம் கொண்ட பத்து வயதுச் சிறுமியான மார்கரீட்டாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்காவில் க்யூபர்கள் திடீரென்று தாம் அகதிகள் ஆகிவிட்டதாக உணர்ந்தனர். ”தமது செயற்பாடுகள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்காத அரசியல்வாதிகளால் நாங்கள் அகதிகளாக்கப்பட்டோம்” என்று மார்கரீட்டா சொல்கிறார்.

நெருக்கடிக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் க்யூபா மக்கள் மேலும் மேலும் தனிமையிலும் வறுமையிலும் ஆழ்ந்து போனதாகவும், குடும்பங்கள் சிதறிப் போயின என்றும் சொல்லும் மார்கரீட்டா அந்தக் காலக் கட்டத்தில் நூற்களுக்குள் தஞ்சம் புகுந்தார். கவிதை அவருக்கு ஓர் அக விடுதலைக்கான வழி ஆயிற்று. அப்படித்தான் அவர் கவிஞராக மலர்ந்தார். 

 Image result for refugee child

தாய் வழியிலும் தந்தை வழியிலும் அரசியல் பாதிப்புக்கள் கொண்ட குடும்பம் அவருடையது. பிள்ளைப்பருவத்திலேயே அதை அவர் தெளிவாகத் தெரிந்து கொண்டதை “சொந்த பந்தம்” என்னும் கவிதையில் சொல்கிறார்:

இரண்டு
குடும்பக் கதைகள்,

ஒன்று விரிவான நீள்கதை,
இத்தீவின் மூதாதையரின்
பல நூற்றாண்டுகள் பற்றியது,
அவர்கள் அனைவரும் வாழ்கிறார்கள்
அதே வெப்பமண்டலத் தோட்டங்களில்

குடும்பத்தின் மற்றொரு தரப்பு
சுருக்கமான பூடகமான கதைகளைச் சொல்கிறது,
உக்ரைன் வன்முறை பற்றி,
அன்பனான தமியர் அனைவரையும் விட்டு
அப்பாவின் பெற்றோர்
அங்கிருந்தே தப்பி வந்தனர்
என்றைக்குமாக என்று

யாரேனும் எஞ்சினார்களா என்று
இப்பவும் அவர்களுக்குத் தெரியாது

பாட்டி
கியூபாவைப் பற்றித் தனது
ரசமான கதைகளைச் சொல்லும்போது
சொற்களால் தன் உறவினர்களைத் தீட்டுகிறாள்

ஆனால் நான் எனது
உக்ரைனிய யூத அமெரிக்கப் பாட்டியிடம்
பனி படர்ந்த கீவ் கிராமத்திலான
அவளது பிள்ளைப்பருவத்தைப் பற்றிக்
கேட்கும்போது
அவள் வெளிப்படுத்துவதெல்லாம்
உறைந்த குளமொன்றில்
பனிச்சறுக்கு ஆடிய
ஒற்றை நினைவையே

நன்றாகத் தெரிகிறது,
வளர்ந்தவர்கள் சொல்லும்
‘வளர்பருவ’க் கதைகளின் நீளம்
குடியேற்றத்திற்கும்
தப்பித்தலுக்குமான
வித்தியாசத்தால் தீர்மானிக்கப்படுகிறது

மார்கரீட்டா அமெரிக்காவில் வளர்ந்தாலும் அவரின் உள்ளம் க்யூபாவின் இயற்கை எழில் மிக்க, அவரின் தாய் பிறந்த கிராமத்தையே தனது அகநிலமாக வரித்துக் கொண்டது. அது அவரின் கலையில் வெளிப்படத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே ”அமெரிக்கப் பார்வை” அதற்குத் தடை போட முனைந்ததை “ஆமை என்னைப் பார்க்க வந்தது” (Turtle came to see me) என்னும் கவிதையில் சொல்கிறார். குழந்தைகளின் வகுப்பறைகளுக்குள்ளும் அரசியல் நுண்ணிய முறையில் நுழைவதை அக்கவிதை உணர்த்துகிறது.

Image result for tree drawing by a child

நான் எழுதிய முதல் கதை
ஓர் ஒளிரும் தீட்டுக்கோல் படம்

தீவுக் காற்றில்
கிளைகள் கலைந்தாடும்
மரம் ஒன்று.

அந்த மரத்தின் அருகில்
நான் நிற்பதாய் வரைந்தேன்

எனக்கு மேலேயொரு பச்சைக் கிளி
என் கையிலொரு மந்திர ஆமை
க்யூப ரும்பா கூத்தரின்
நூதன ஆடை அணிந்த
என் பெருமிதத் தோள்களில்
ஒரு ஜோடி மஞ்சள் சிறகுகள்
படபடத்திருந்தன

எனது கலிஃபோர்னிய பாலர் வகுப்பில்
வாத்திச்சி என்னைக் கண்டிக்கிறார்:
உண்மையான மரங்கள்
இப்படி இருக்காது.

ஆசிரியர்களும் தவறாகக்கூடும்
என்று நான் கற்கத் தொடங்கிய
முதல் கணம் அது.

க்யூபாவின் ஆடும் மரங்களை
அவர்கள் கண்டதேயில்லை.

மார்கரீட்டாவின் எழுதுகோல் தொடர்ந்து க்யூபா பற்றி அமெரிக்காவில் வாழும் க்யூபச் சிறார்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெண்ணியவாதி கொமேஸ் தெ அவெல்லாநதா மற்றும் கறுப்பின அடிமைத்தளை ஒழியப் போராடிய யுவான் ஃப்ரான்சிசோ மன்ஸானோ ஆகியோரைப் பற்றிய நூற்கள் இரண்டும், க்யூப விடுதலைப் போரின் கவிதைகள் பற்றிய நூலொன்றும், க்யூபா பற்றிய இரண்டு நாவல்களும் என்று அவரின் எழுத்துப் பணி இதனைச் சாதித்துள்ளது.

 Image result for gomez de avellaneda

 “The Lightning Dreamer: Cuba’s Greatest Abolitionist” என்னும் அவரது புதினம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் க்யூபாவில் அடிமை முறையை ஒழிப்பதற்கு எழுத்தையே ஆயுதமாக்கிப் போராடிய கொமேஸ் தெ அவெல்லாநதா என்னும் பெண் புரட்சியாளரைப் பற்றியது. மக்கள் அவரை லா திவினா டூலா (புனித வெண்குருகு) என்று அழைத்தார்கள். கொமேஸ் தனது எழுத்துலக வாழ்வைச் சொல்வது போல் ஒரு கவிதை தருகிறார் மார்கரீட்டா:
“நகர வாழ்க்கை
கவிதை வாசிப்பின்,
தடைசெய்யப்பட்ட
இலக்கியக்கூட்டங்களின்
பெருஞ்சுழல்.

அங்கே
இளையரும் முதியரும்
செல்வரும் வறியரும்
ஆணும் பெண்ணும்
கறுப்பரும் வெள்ளையரும்
தப்பியோடிய அடிமைகளும்
விடுதலை பெற்றவரும்
முன்னாள் எஜமானர்களும்
முன்னாள் அடிமைகளும்
அவரவர் சுற்றில் வாய்ப்புப் பெறுகிறார்
அதிர்ச்சியான புதிய சிந்தனைகளில்
வேர்கொண்ட ரகசியக் கவிதைகளைப்
பகிர்ந்துகொள்ள.

ஒவ்வொரு மாலையும்
நான் வீடு திரும்புகிறேன்
தழல் போல் எழுந்தாடும்
சொற்களின் ஒளியால்
பிரகாசிக்குமொரு உள்ளத்துடன்.

Image result for the lightning dreamer

கொமேஸ் நூற்களை மிகவும் நேசித்தாள். அவை காலத்தில் பயணிக்க வாய்த்த கதவுகள் என்று கண்டாள். பிள்ளைப் பருவம் தொட்டே அவளின் உள்ளத்தில் ஊறிய நூற்காதலை மார்கரீட்டா ஒரு மந்திரக் கவிதையாக வடித்திருக்கிறார்:

நூல்கள்
கதவின் வடிவம் கொண்டவை

என் தனிமை குறைத்து
கடல்களுக்கும்
நூற்றாண்டுகளுக்கும்
அப்பால் என்னை
அழைத்துச் செல்பவை

ஆனால் என்
அன்னை நினைக்கிறார்
நிறைய படிக்கும் பெண்பிள்ளைகள்
பெண்மையற்று
அசிங்கமானவர்கள் என்று

எனவே என் தந்தையின் நூற்கள்
தெளிந்த கண்ணாடி அலமாறியில்
பூட்டப்பட்டுள்ளன.

கவர்ந்திழுக்கும் நூற்களின் முதுகை
அவற்றின் புதிரான தலைப்புகளை
நான் பார்க்கிறேன்.

ஆனால்,
வார்த்தைகளின்
வசீகரத்தைத் தீண்ட
அரிதாகவே நான்
அனுமதிக்கப்படுகிறேன்.

கவிதைகள்
கதைகள்
நாடகங்கள்
எல்லாமே விலக்கப்பட்டவை

சிறுமிகள் சிந்திப்பவர்கள் அல்லர்
ஆனால்
என் ஆர்வ மனம் கிளம்பியதுமே
அடைபட்ட எண்ணங்களின் இடத்தில்
கட்டற்ற எண்ணங்கள் மண்டுகின்றன

தூரத்துக் காலங்களை
தொலைவான இடங்களை
பேய்களை
அணங்குகளை
பழங்கால வீரர்களை
நான் கற்பனை செய்கிறேன்

தனிமைக் குழப்பத்தின்
புதிரான வழிகளில்
மாயக் கற்பனை
நகர்கிறது

ரகசியமாக
என் உள்ளத்தில்
அரூப நூலொன்றைத்
திறக்கிறேன்.

அதன்
மாயக் கதவு வடிவின் வழியே
அபாயத் தீயர்களும்
அற்புத நாயகர்களும்
வாழுமொரு பிரபஞ்சத்தினுள்
நுழைகிறேன்.

அந்த நாயகருள் பலரும்
ஆண்களும் பையன்களும்தான்
எனினும்
சிலர் யுவதிகள்
மிகவும் உயரமான
வலிமையான
தந்திரம் மிக்க
யுவதிகள்

அவர்கள்தாம் மீட்கிறார்கள்
அசுரர்களிடமிருந்து
பிள்ளைகளை எல்லாம்.

கல்வியைப் பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான பார்வைகளை மார்கரீட்டா சாடுகிறார். இலக்கியங்கள் செழித்துத் தோன்றிய நாடு இது. ஆனால் இலக்கியக் கல்வி வீண் என்பதே தேசிய மனநிலையாகி இருக்கிறது. என்ன ஒரு முரண்? அறிவியற் கல்வி அல்லது பயன்பாட்டுக் கல்வி என்பது வலியுறுத்தப்படும் இடங்களில் எல்லாம் இலக்கியக் கல்வி இழிவாகப் பார்க்கப்படும் நிலை தலை தூக்குகிறது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கன்று. பல்கலையில் பேராசிரியராக இருக்கும் மார்கரீட்டா இந்த அறியாமை பற்றி நோகிறார்:

“எத்தனை தடவை என்னிடம் ஆசிரியர்களும் நூலகர்களும் வந்து ‘எனக்குக் கவிதை புரிவதே இல்லை’ என்று சொன்னார்கள் என்று என்னால் எண்ண முடியவில்லை. அது மிகவும் அராஜகமும் அகம்பாவமும் தொனிப்பது. ஒரு அலமாறியை எப்படி செய்வது என்றோ அல்லது வைலின் வாசிப்பது எப்படி என்றோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் தச்சர்களையும் இசைக் கலைஞர்களையும் போற்றுகிறேன். குழந்தைகள் உள்ளுணர்வாகவே சந்தங்களை விரும்புகிறார்கள், தமது உணர்ச்சிகள் தாளக்கட்டுடன் வெளிப்படுவதையே வாலிபர்கள் ஆசிக்கிறார்கள் என்பதைப் பெரியவர்கள் புரிந்துகொண்டால் போதும்” 

Related image 
Margarita Engle
 
பள்ளிகளில், கல்லூரிகளில், இல்லங்களில், பொதுவிடங்களில் நாம் உடனே செய்யவேண்டிய ஒரு கடமையாக மார்கரீட்டா சொல்கிறார்: “கவிதை படித்தல் மற்றும் எழுதுதல் என்னும் செயல்பாட்டை எந்தத் தடையுமின்றி அனுபவிக்க நீங்கள் இளம் வயதினரை அனுமதித்தால் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கொண்டாடக்கூடிய அன்பளிப்பு ஒன்றை அவர்களுக்கு நீங்கள் தருகின்றீர்கள். தொலைவான காலத்தில் அதனை அவர்கள் தம் பேரப்பிள்ளைகளுடன் பகிர்ந்து மகிழவும் முடியும்.”

நவீன இசை வடிவங்களின் கொண்டாட்டக் களம் அமெரிக்கா என்னும் பார்வை உலகெங்கும் பரவியுள்ள ஒன்று. எனினும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் இசையில் உள்ள வரலாற்றுப் பரிமாணம் அதற்குக் கிடையாது. ஸ்பானிஷ் இசை மரபில் அது இனங்காணப்படுகிறது. அந்த ஸ்பானிஷ் இசையின் மூலமே அரபு இசைமரபிலிருது உருவாகி வந்தது. அரபு இசை மரபும்கூட இந்திய தொல்லிசையுடன் தொடர்புடையது என்று கூறுவர். இப்படியொரு கொடிவழித் தன்மையில் மலர்ச்சி கொண்ட லத்தீன் அமெரிக்க இசை க்யூபர்களின் பண்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளது. மார்கரீட்டாவின் மனம் க்யூபாவின் தாளக்கட்டு துள்ளும் இசையையே தன்னுள் நிரப்பிக்கொண்டுள்ளது. “ருதம்” (Ritmo / Rhythm) என்னும் கவிதையில் இதனை அவர் பேசுகிறார்:

மதி ஒரு கழுகைப் பிடிப்பதென
முடிவு செய்திருக்கிறாள்,
அவளால் காண முடிந்ததில்
ஆகப் பெரிய பறவையை

அவள் அத்தனைப் பிடிவாதமாகவும்
யுக்தி கொண்டவளாயும் இருக்கிறாள்,
கயிறுகளையும் குச்சிகளையும் இணைத்து
ஒருவிதக் கூண்டுப்பொறி அமைக்கிறாள்,
இரவில் மிஞ்சிய
இறைச்சியை வைத்தால்
பறவையை ஏமாற்றிப் பிடிக்கப்
போதுமானதாக.

மதியும் நானும்
எதையும் ஒன்றாகவே செய்திருப்போம்,
ஆனால் இப்போதெனக்கு
சொந்த சாகசங்கள் தேவைப்படுகிறது.
எனவே நான்
எலும்புகள் தேடி
பசிய வயல்களில் அலைகிறேன்

காட்டுப் பன்றி ஒன்றின் கபாலம்
கோவேறு கழுதை ஒன்றின் தாடை

வளர்ந்த அண்ணன்மார்கள்
சொல்லித் தருகிறார்கள்
கழுதையின் தாடையை அசைத்து
அதன் தேய்ந்த பற்களைத்
தாளமிடச் செய்ய

கிதார்கள்
மத்தளங்கள்
குடுவைகள்
குச்சிகள்
ஒரு மாட்டு மணி
ஒரு பலகை

விரைவில் உருவாயிற்று
ஒரு முழு
இசைக்குழு

க்யூபாவின் தோட்டங்களில்
மரணம் கூட
இசையாக முடியும்.

Image result for drum dream girl 
 
மார்கரீட்டா எழுதிய உலகப் புகழ் பெற்ற சிறுவர் நூல் “Drum Dream Girl” என்பதாகும். மில்லோ காஸ்ட்ரோ ஸல்தர்ரியாகா என்னும் பெண் மத்தளக் கலைஞரின் இளம்பருவ வாழ்வை வைத்து அந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1930-கள் வரை க்யூபாவில் பெண்கள் தாள வாத்தியங்கள் வாசிக்கக் கூடாது என்னும் மரபான தடை இருந்தது. ராகம் பெண்மையானது, தாளம் ஆண்மையானது என்பது ஒரு பொதுச் சிந்தனைதான். அஃது இந்திய இசை மரபிலும் இருக்கின்றது. அதனாற்றான் வாய்ப்பாட்டுக்கு அதிகம் பெண்களைக் காணும் இந்திய செவ்வியலிசையில் மிருதங்கம் கஞ்சிரா தவில் பக்வாஜ் தபலா போன்ற தாளக் கருவிகளின் வாசிப்பில் பெண்கள் அரிதினும் அரிதாகவே உள்ளனர். மில்லோவுக்குத் தானொரு தாளக்கருவிக் கலைஞராக வேண்டும் என்பதே ஆன்மாவில் முகிழ்த்த ஆசையாக இருந்தது. தந்தையின் தடையைத் தாண்டி அவர் தன் லட்சியத்தை அடைந்ததை, போங்கோ ட்ரம்ஸ் கலைஞராக உலகப் புகழ் பெற்றதை மார்கரீட்டா சிறுவர்களுக்குச் சொல்வதாக இந்நூல் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதை இது:

இசையினொரு தீவில்
மத்தளத் தாளங்களின் நகரில்
மத்தளக் கனவுச் சிறுமி
கனவு கண்டாள்...

நெடிய கோங்கா மத்தளங்களை
அறைந்து வாசிப்பது போலவும்
சிறிய போங்கோ மத்தளங்களைத்
தட்டுவது போலவும்
நீள குச்சிகளை வைத்து
நிலா வெளிச்சம் போன்று
வெள்ளி நிறம் கொண்ட வட்டமான
டிம்பேல்ஸ் மேளத்தை
அடித்து முழக்குவது போலவும்.

ஆனால்
இசைத்தீவில்
தாள நகரில்
உள்ள ஒவ்வொருவரும்
பையன்கள் மட்டுமே
கொட்டு வாசிக்கவேண்டும்
என்று நம்பினார்கள்

எனவே
மத்தளக் கனவுச் சிறுமி
மௌனமாகவும்
ரகசியமாகவும்
மத்தளக் கனவுகளைக்
கண்டிருக்க வேண்டியதாயிற்று

பூங்காக்கள் போல் தோன்றிய
வெளியிடத்துத் தேநீர்க் கடைகளில்
ஆண்கள் மத்தளங்கொட்டுவதை
அவள் கேட்டாள்

ஆனால் அவள் தன்
கண்களை மூடியபோது
தனது சுயத்தின் கற்பனை இசையையும்
அவளால் கேட்க முடிந்தது

பூக்கள் ஒளிரும் பூவனத்தில்
காற்றில் அசையும் பனைமரங்களின் கீழே
அவள் நடந்திருந்தபோது
கிளிகளின் சிறகுப் படபடப்பையும்
மரங்கொத்தியின் அலகு
மரங்கொத்தும் ஓசையையும்
தனது சொந்தக் காலடிகளின்
நடனச் சத்தத்தையும்
தனது இருதயமே
தன்னைத் தட்டிக்கொடுக்கும்
ஓசையையும்
அவள் கேட்டாள்

திருவிழாக்களில்
நெடிதுயர்ந்த
பொய்க்கால் ஆட்டக்காரரின்
கால்களிடும் தாளங்களையும்
ராட்சத டிராகன் வேடமிட்டோர்
வாசிக்கும் மத்தளங்களையும்
கவனித்தாள்

வீட்டில்
அவளின் விரல்கள்
மேசையிலும் நாற்காலியிலும்
தம் கற்பனை மேளத்தின்மீது
தாளமிட்டன

இசைத் தீவில் சிறுமிகள்
மத்தளம் வாசித்ததில்லை என்று
ஒவ்வொருவரும் அவளிடம்
நினைவூட்டியபோதும்
துணிச்சலான அந்த
மத்தளக் கனவுச் சிறுமி
நெடிய கோங்கா மத்தளங்களையும்
சிறிய போங்கோ மத்தளங்களையும்
நிலா போல் ஒளிரும்
வெள்ளி நிற டிம்பேல்களையும்
வாசித்தாள்

கனவு மத்தளங்களில்
தாளமெழுப்பும்
அவளின் கைகள்
அறைந்தும் உறழ்ந்தும் வருடியும்
வாசிக்கும்போது
பறப்பது போல் தோன்றின

பரவசப்பட்ட
அவளின் அக்காள்மார்கள்
மகளிர் மட்டுமேயான
தமது புதிய இசைக்குழுவில்
இணைய அழைத்தனர் அவளை

ஆனால்,
பையன்கள் மட்டுமே
மத்தளம் வாசிக்க வேண்டும்
என்றார் அவளின் தந்தை

எனவே
மத்தளக் கனவுச் சிறுமி
தனிமையாகவே தாளமிட்டாள்
தன் கனவுகளில் மட்டும்

பிறகு ஒரு நாள்...
அவளின் தாளத்திறன் உண்மையானதா?
மக்கள் கேட்பதற்குரியதா?
என்றறிய
ஆசிரியர் ஒருவரை
அப்பா அழைத்து வந்தார்

மத்தளக் கனவுச் சிறுமியின்
ஆசிரியர் அதிசயித்தார்

அவள்
அதிகமதிகம்
அறிந்திருந்தாள்

அவர்
மேலும் மேலும்
சொல்லித்தந்தார்

அவள்
பயிற்சி செய்தாள்
மீண்டும் மீண்டும் மீண்டும்

ஒருநாள்...

நட்சத்திர இரவின் கீழ்
பூங்காவைப் போன்ற அந்த
தேநீர்க் கடையில்
அவள்
தனது சிறிய போங்கோவை
வாசிக்கலாம் என்று
வாத்தியார் ஒப்பினார்

அங்கே அவளின்
கனவு மின்னும்
இசையைக் கேட்ட
ஒவ்வொருவரும்
பாடினார்கள்
ஆடினார்கள்

அன்றே
அவர்களொரு
முடிவுக்கு வந்தார்கள்

தாளக்கருவிகள் இசைக்க
பெண்களும்
அனுமதிக்கப்படவேண்டும்

கனவு காண
பெண்ணுக்கும் ஆணுக்கும்
தடையிருக்கக் கூடாது.

Related image

மார்கரீட்டா எங்க்லேயின் கவிதைகள் வளர் பருவத்தினருக்கு ஏற்ற எளிய சொற்கள் கொண்டு அவர்களிடம் உரையாடுகின்றன. பதின் வயதினரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அவை இருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நாம் நமது பால்ய பருவத்தின் முகத்தை அதில் காண்கிறோம்.

 Image result for drum dream girl

“நான் எனது கவிதைகளில் முழுமையான விடைகளை வழங்குவதாகப் பாசாங்கு செய்வதில்லை. கவிதை என்பது கேள்வி கேட்கும் இயங்குமுறை” என்று சொல்கிறார் மார்கரீட்டா. அந்தக் கேள்விகள் மெத்தப் படித்த சிந்தனையாளர்களின் கேள்விகள் அல்ல. பள்ளிப் பருவத்து விளையாட்டுப் பிள்ளைகளின் மனங்களில் உதிக்கும் கேள்விகள். ஆனால், அவையே நாளைய உலகின் கதவுகளைத் திறக்கின்ற சாவிகளாய் இருக்கின்றன.

மார்கரீட்டா தனது கவிதைகள் மீது உடைமை முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவும் தயங்குகிறார். அவர் சொல்கிறார், “கவிதை அதை எழுதிய கவிஞருக்கு எந்த அளவு உரியதோ அதே அளவு வாசகருக்கும் உரியது.”



Tuesday, September 26, 2017

யாதினும் மெல்லோன்



      எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்... என்று ஆரம்பம் செய்கிறார்கள்.

      சர்வ வல்லமை கொண்ட ஆண்டவன் என்று இறைவனைச் சுட்டுகிறார்கள்.

      எல்லையற்ற வல்லமை கொண்டவன் என்றும் வருணிக்கின்றார்கள்.

      ’அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்’ என்று ஒலிக்கின்றது அல்லாஹ்வைத் தமிழ் செய்த பாடல்.

      அவன் வல்லோன் மட்டுமா? மெல்லோனும் அல்லவா?

      அவன் வலியன் மட்டுமா? எளியோனும் அல்லவா?

      இறைவன் வன்மைப் பண்பு கொண்டவன் என்று நினைக்கப் பாமர மனமே போதும். அவன் மென்மைப் பண்பு கொண்டவன் என்றும் உணர மனம் பக்குவப்பட வேண்டும்.

      ”அல்லாஹ் மென்மையானவன்; அவன் மென்மையை விரும்புகிறான்” என்று நபிகள் நாயகம் நவில்கிறார்கள். [சஹீஹ் முஸ்லிம்: 2593].

      இந்த அருள்மொழியின் மூலப்பிரதியில் உள்ள அரபிச் சொல் ”ரிஃப்க்” என்பதாகும். அதன் அர்த்தப் பிரிகைகளில் ஒன்றுதான் மென்மை என்பது. உண்மையில் அச்சொல் மென்மை சார்ந்த அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, நளினம் என்றும் அதற்குப் பொருள் தரலாம்.

      எனவே, “அல்லாஹ் நளினமானவன்; அவன் நளினத்தை விரும்புகிறான்”.

      இறைவனின் மென்மைக்கு ஏதேனும் உவமை காட்ட முடியுமா?

      இறைவனுக்கு உவமை கூறக்கூடாது என்பதொரு நியதி. என்ன சொன்னாலும் தப்பாகத்தான் ஆகும் என்பதால். அவன் ஒப்புவமை அற்றோன் அல்லவா?

       ”எப்பொருளும் அவனுக்கு ஒப்பென்று இல்லை” (42:11) என்கிறது குர்ஆன்.

     இருப்பினும் அவனை நினைவூட்டாத பொருள் ஏதேனும் இருக்கிறதா?

 Image result for sufi with rose

      ”எந்தப் பூவும்
       உன்னைப் போல் இல்லை
       ஆனால்
       ஒவ்வொரு பூவும்
       உன்னையே நினைவூட்டுகிறது”

      என்று பாடினான் ஒரு கஸல் கவிஞன்.

      அப்படித்தான் ஒரு நிகழ்வில், “இந்தத் தாய்க்கு அவளின் பிள்ளை மீதுள்ள பாசத்தை விடவும் அல்லாஹ் தனது அடியானின் மீது பிரியமுள்ளவன்” என்று நபிகள் நாயகம் ஒப்பிட்டு உயர்த்திச் சொன்னார்கள். (சஹீஹ் புகாரி: 5653).

      இறைவன் நம் மீது பரிவு காட்டுவதைச் சொல்ல வந்த வள்ளலார் “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...” என்று பாடினார்.

      அதுபோல், நாமும் ஓர் ஒப்பீடு சொல்லி, இறைவன் இதனினும் மென்மையானவன் என்று சொல்லிச் சொல்லி இன்பம் அடையலாமே? எதைச் சொல்வது?

      மென்மை என்றதும் நம் நினைவுக்கு வருவன எவை? பூ, பெண், குழந்தை, பட்டு, தென்றல்...

      எதைச் சொன்னாலும் அதனினும் இறைவன் மென்மையானவன் அல்லவா? அவன் யாதினும் மெல்லோன்.

      நபித்தோழர் அனஸ் அவர்கள் சொல்கிறார்கள், “நபியின் உள்ளங்கையை விடவும் மென்மையான பட்டு எதையும் நான் தொட்டதில்லை. அவர்களின் வியர்வையை விடவும் வாசமான நறுமணம் எதையும் நான் முகர்ந்ததில்லை” (சஹீஹ் புகாரி: 3561).

      நபியில் வெளிப்படுவது இறைவனின் மென்மை அன்றி வேறல்ல. நபியில் கமழ்வது தெய்வீக மணம் அன்றி வேறல்ல.

Image result for sufi with rose 
 
      இறைவனால்தான் பூவும் மென்மையாக இருக்கிறது. இந்த ஞானம் தோன்றித்தான் தாயுமானவர் பூசைக்குப் பூப்பறிக்கச் சென்றவிடத்தில் பூவிலேயே இறைவனை உணர்ந்தார். “பார்க்கும் மலரூடு நீயே இருத்தி” என்று பரவசத்துடன் பாடினார்.
     
 இறைவன் பூவினும் மெல்லோன் என்று சொல்லலாம்தான். ஆனால், பூவை விடவும் மென்மையான விசயம் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

      ”மலரினும் மெல்லிது காமம் / சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்” என்று சொல்லி வியக்க வைக்கிறார் அவர்.

      ’காமம்’ இன்று ஓர் ஆபாச வார்த்தை ஆகிவிட்டது. முப்பால் தந்த வள்ளுவர் தம் நூலின் மூன்றாம் பாலுக்குக் காமத்துப் பால் என்றே பெயர் சூட்டினார். அவர் காலத்தில் காமம் என்பது காதலின் மலர்ச்சி. அது வெறும் உடற் கிளர்ச்சி அல்ல.

      வள்ளுவர் மெய்ப்பொருள் காணும் அறிவு பெற்றவர். காமம் என்னும் ’மெய்’ப்பொருளில் இறைமை என்னும் மெய்ப்பொருளின் ஜோதி கண்டவர். அறிவுடையார்க்குக் காமம் என்பது பால். அறிவிலார்க்குக் காமம் என்பது கள். 

’பால் போல கள்ளும் உண்டு; நிறத்தாலே ரெண்டும் ஒன்று’ என்பார் கண்ணதாசன். ஒன்று சித்தம் அளிப்பது. மற்றது சித்தம் அழிப்பது. ஒன்று போதை போன்ற போதம். மற்றது போதம் போன்ற போதை. 

”மெல்லிது...” என்பதை tender என்று ஜி.யூ.போப்பும் ‘soft’ என்று கவியோகி சுத்தானந்த பாரதியும் ஆங்கிலம் ஆக்கியுள்ளனர். எனினும், மெல்லிது என்னும் சொல்லின் நுட்பமான அர்த்தம் இச்சொற்களிலும் மேலும், delicate, gentle போன்ற சொற்களிலும் வெளிப்படவில்லை என்று ஆங்கிலப் புலமை ஆழங்காற்பட்ட அறிஞர் தி.ந.ராமச்சந்திரன் சொல்கிறார். ’மெல்லிது’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்து, ”மெல்லிது மெல்லிது மெல்லிது. வள்ளுவன் சொன்ன சொல்லிது சொல்லிது சொல்லிது” என்று அமைகிறார்.

பூக்களில் மிகவும் மென்மையான பூ எது? அனிச்சம் என்று கூறுகிறது தமிழ். எவ்வளவு மென்மை? “,மோப்பக் குழையும் அனிச்சம்” என்கிறார் வள்ளுவர். அதாவது, அனிச்சம்பூ முகர்ந்து பார்த்தாலே வதங்கிவிடுமாம்.

மிகவும் மென்மையாகத் தொடுவதை ஆங்கிலத்தில் feather touch என்று சொல்லும் வழக்குண்டு. பறவைகளின் இறகுகளில் மென்மையானது அன்னத்தின் இறகு போலும். அதன் உடலிலிருந்து தானாய் உதிர்ந்த இறகுக்குத் தூவி என்று பெயர்.  

Image result for feet detail painting 
Detail - "Gentle Spring" by Fredrick Augustus Sandy.
 
அனிச்சம் என்னும் பூவும், அன்னத்தின் தூவியும் பெண்களின் பாதத்தில் நெருஞ்சி முள் போல் குத்தும் என்கிறார் வள்ளுவர். அவர்களின் பாதங்கள் அவ்வளவு மென்மையாம்!

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்” (1120).

மலரினும் மெல்லிது காமம். பூவினும் மென்மையள் பெண்.

இறைவனால்தான் பெண் மென்மையாக இருக்கிறாள்.

இசை மென்மையானது. இறைவன் இசையினும் மென்மையானவன். இறைவனால்தான் இசை மென்மையாக இருக்கிறது.

குழந்தையின் மூச்சு மென்மையானது. இறைவன் குழவியின் மூச்சினும் மென்மையானவன். இறைவனால்தான் சிசுவின் மூச்சு மென்மையாக இருக்கிறது.

எதைச் சொன்னாலும் இப்படிப் போய்க்கொண்டேதானே இருக்கும். இறைவன் யாதினும் மெல்லோன். அதை அவரவர் தம் அறிவு நிலைக்கேற்ப சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

கிறித்துவ ஞான மரபில் தோன்றிய புனிதர் சியனாவின் கேத்தரீன் ஒரு மென்மையான விஷயத்தைச் சொல்கிறார்: முத்தம்!

Image result for virgin and child auguste ernest hebert 
"VIrgin and the Child" by Antoine Auguste Ernest Herbert.

அது காதலியின் முத்தம் அல்ல. அதைவிடவும் அழகான ஆழமான ஒரு முத்தத்தை முன்வைத்து அவர் பேசுகிறார். அதைப் படித்தபோது ஒரு நொடி என் மூச்சு நின்றுவிட்டது!

”God’s heart is more gentle than the Virgin’s first kiss upon the Christ” என்கிறார் அவர்.

”இறைவனின் இதயம்
மென்மையானது,
ஏசுவின் மீது
கன்னி (மேரி) இட்ட
முதல் முத்தத்தினும்.”
                                                                                               

Sunday, September 24, 2017

அன்பின் அழகிய மகள்



Image result for thiruvalluvar
     தமிழின் அதி சிறந்த அறநூல் திருக்குறள். அதில் தமிழ் என்னும் சொல்லே இல்லை! யாரோ ஒரு புண்ணியவான் எழுத்தெண்ணிப் படித்து இதனைக் கண்டுபிடித்திருக்கிறார். 

      இரவெல்லாம் அமர்ந்து ஒவ்வொரு குறளாக விடிய விடிய ஆய்ந்து அதில் வெண்பா இலக்கணம் எவ்விடத்தும் பிழைபடவில்லை என்று கண்டறிந்தாராம் வைரமுத்து. ’தேவையா இந்த வேலை?’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதனால், வெண்பா எழுதும் திறன் அவருக்குக் கைவந்ததாம்.

      அடியேனும் இன்று திருக்குறளில் ஒரு தன்மையைக் கண்டுபிடித்தேன். கடின உழைப்பால் அல்ல. மிகவும் எளிதாக. இணையம் என்னும் ‘ஜின்’னின் ஒத்தாசை இருக்கிறதே!

      ’அன்பு’ என்று தொடங்கும் அல்லது முடியும் கவிதை ஒன்று, ஐந்து நிமிடத்திற்குள் அவசரமாக வேண்டும் என்று அழைத்தார் நண்பர் ஒருவர். இணையத்துள் நுழைந்து திருக்குறளில் தேடும்படி கணினிக்கு ஆணையிட்டேன். ‘ஆலம்பனாஹ்! இதோ’ என்று அது அள்ளி வந்ததில் பதினொரு குறள்கள் இருந்தன. ”சரி, அன்பு என்று முடியும் குறள்” என்று ஆணையிட்டேன். ’இல்லை’ என்று பதில் வந்தது. “அடடே! திருக்குறளில் அன்பு என்று எந்தக் குறளும் முடியவில்லை”. ஆய்வு செய்து நான் இதைக் கண்டுபிடித்ததாகப் பீற்றினால் என் மனசாட்சியே என்னை மன்னிக்காது. 

‘அன்பு என்று தொடங்கும் குறள்கள் பதினொன்று உள்ளன. ஆனால், அன்பு என்று ஒரு குறளும் முடியவில்லை. ஏன் தெரியுமா? அன்பிற்கு முடிவே இல்லை! என்று வள்ளுவர் சொல்ல வருகிறார்’ என்று நான் ஏதாவது மேடையில் பேசினால் கைத்தட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், வள்ளுவரின் ஆன்மா என்னை மன்னிக்காது! (தர்க்கம் இடிக்கிறதே? அறம் என்று முடியும் குறள் உண்டு. அப்படியானால் அறத்திற்கு முடிவு உண்டா?)

தோழருக்கு அக்குறட்பாக்களின் எண்களை அனுப்பினேன். ‘இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டது. புதிய கவிதை வேண்டும். ஐந்து வரிகள் போதும். உங்களுக்கு இரண்டு நிமிடம் ஆகுமா? எழுதி அனுப்புங்களேன்” என்று அன்புக் கட்டளை இட்டார். ஆங்கிலத்தில் தட்டி வாட்ஸப்பில் அனுப்பினேன், இப்படி:

என் அன்பே!
என்று அழைப்பது எப்படி?

அன்பு
எனதும் அல்ல
உனதும் அல்ல

அன்பின் உடைமை
அல்லவோ
நீயும் நானும்?

’ஆஹா! கவிதை கவிதை’ என்று சிலாகித்து குறுஞ்செய்தி அனுப்பினார் தோழர். தொடர்ந்து, ஊறும் மணற்கேணி போல் அன்பைப் பற்றிய எண்ணங்கள் மனக்கேணியில் சுரந்து வந்தன.

Image result for love painting 
"In Love" - by Marcus Stone.

“வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை” என்பது பாரதியின் வாக்கு. இவ்வரி தோன்றியபோது பாரதியைச் செல்லமாகச் சீண்ட நினைத்தேன். திரைப்பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதலாம் போல் இப்படி எழுதினேன்:

“அன்பே சிறந்த தவம்
என்கிறான் பாரதி
அன்பே சிறந்த வரம்
என்று நீ கூறடி!”

இன்னொரு சிந்தனை. அவனும் அவளும் பால்ய வயதில் அன்புடன் பழகியவர்கள். காலம் செல்ல, அவள் பருவமடைகிறாள். முன் போல் அவளை அவன் பார்க்கவியலாது. அவள் பர்தா என்னும் திரை அணிந்துகொள்கிறாள். ஆனால் அந்த அன்பு அகத்தில் மெல்ல மெல்லக் காய்ச்சப்பட்டுக் காதலாகிவிடுகிறது. இனி அவளை அவன் மணம் செய்தால்தான் முன்பு போல் உரையாட முடியும். இந்தப் பின்னணியில் அவன் சிந்திப்பதாக ஒரு குறுங்கவிதை:

அன்பைப் போல்
அத்தனை வெளிப்படையாய்
இருப்பதில்லை காதல்

ருதுவடைந்த அன்புதான் காதலோ?
அதனால் அது     
திரை அணிகின்றதோ?

அன்பு எனும் சிறுமி பருவமெய்திக் கன்னியாய் ஆனதே காதல் என்று நான் உருவகம் செய்கிறேன் என்றால், அந்த அன்பு ஒரு தாயாகிக் கருவுற்றுப் பிள்ளை பெறுவதாக உருவகம் செய்து வியக்க வைக்கிறார் வள்ளுவர். அன்பின் குழந்தை எது? அருள் என்கிறார் அவர். “அருள் என்னும் அன்பீன் குழவி” என்பது அவர் வாக்கு.

Related image 
"madonna with child" by william bouguereau.

குழவி என்றால் கைக்குழந்தை. அருளைக் குழவி என்று சொன்னதில் நுட்பமான உட்பொருள் உள்ளது. கரு தரித்துத் தங்கி குழந்தை பிறப்பதே பெரும்பாடு. அதுபோல் அன்புள்ள மனதில் அவ்வன்பு அருளாய் மாறுவதே அபூர்வம்தான். எனினும் அன்பு அருளாக மாறும் கணங்களை அவ்வப்போது ஒவ்வொரு மனிதனும் அடையவே செய்வான். ஆனால், அந்த அருளை வளர்த்தெடுப்பது, நிலைக்க வைப்பது மிக மிகக் கடினமான செயல். அது குழவியை வளர்த்தெடுப்பது போன்றது. தொடர்ந்து தாய் அதற்குப் பாலூட்ட வேண்டும். நோய் தாக்காது கவனிக்க வேண்டும். நோயுற்றால் தக்க மருந்து கொடுத்துக் காக்க வேண்டும். இப்படித்தான் அருளையும் வளர்க்க வேண்டியுள்ளது. அபூர்வமாக அகத்தில் அரும்பும் அருளுணர்வை மனிதர்கள் அனாதையாக விட்டுவிடுகிறார்கள். அதனை வளர்ப்போரே புனிதர்கள் ஆகிறார்கள்.

இன்னொரு சிந்தனை: “அன்பு தாய்; அருள் அதன் மகள். அன்பு அழகானதுதான், மாதவியைப் போல. ஆனால் அவளின் மகள் அவளைவிட அழகி, மணிமேகலையைப் போல.”

இந்தச் சிந்தனையை விரித்துக்கொண்டே போனபோது அதுவே அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் போல் அர்த்தங்களை அள்ளி வழங்கியது.

அன்பைப் பற்றி அதிகமாக எழுதுகிறார்கள். ஆனால் அருளைப் பற்றி அவ்வளவு எழுதப்படுவதில்லை. சிலம்பில், மாதவியின் அழகை இளங்கோ பாடிய அளவுக்கு, மணிமேகலையின் அழகை அவள் பெயரால் அமைந்த காப்பியத்தில் சாத்தனார் பாடவில்லை. எனினும், சுருக்கமாக ஒரு வரி சொல்கிறார். அதில் அவள் உலகின் மிகச் சிறந்த அழகியாகத் தோன்றுகிறாள்:

படையிட்டு நடுங்கும்
காமன் பாவையை
ஆடவர் கண்டால்
அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ
பெற்றியின் நின்றிடின்?

அதாவது, இளமையின் அழகு செழித்த அவளைப் பார்த்தால் அதன் பின் ஆடவர் அவளிருக்கும் இடத்தை விட்டு அகல்வார்களா? அவளைக் கண்ட பின்னும் தம் இயல்பு திரியாமல் அப்படியே நிற்பார்கள் எனில் அவர்கள் பேடிகளாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிறார் சாத்தனார். 






Image result for face portrait detail
face detail by william bouguereau.

மாதவி தன் மகளான மணிமேகலையைத் துறவு நெறிக்குக் கொடுத்துவிட்டாள். ஒரு நாள் மணிமேகலை பூப்பறிப்பதற்காக மலர்வனம் சென்றாள். அப்போது அவ்வூர் மக்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து நின்று பார்க்கிறார்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்து தன் அழகால் உள்ளங்களை உருக்கியவளான மாதவி தனது மகளை இப்படித் துறவி ஆக்கிவிட்டாளே என்று அவர்கள் வருந்தி, அப்படிச் செய்த மாதவி கொடியவள் அறிவற்றவள் என்று திட்டியதாகச் சாத்தனார் எழுதுகிறார்:

அணியமை தோற்றத்து
அருந்தவப் படுத்திய
தாயோ
கொடியவள் தகவிலள்

அன்பு நிலையில் மட்டுமே நின்றியங்கும் மக்கள் இப்படி வருத்தப்படுவது இயல்புதான். ஆனால் அருள் அதனைக் கருத்தில் கொள்ளலாகாது. காலம் செல்லச் செல்லத்தான் அருளின் உயர்வு அனைவர்க்கும் தெரியும்.

கலைகளில் சிறந்த மாதவிக்கு அமுதசுரபி கிடைக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த மணிமேகலைக்கே அது கிடைத்தது. அதுபோல், பல்வேறு உறவுநிலைகளால் இவ்வுலகை அலங்கரிக்கும் அன்புக்குக் கிடைக்காத ஞானம், அந்த அன்பின் வழிப் பிறந்த அருளுக்கே கிடைக்கிறது.

இன்னொரு சிந்தனை. மேற்சொன்ன திருக்குறளுக்கு வரையப்பட்டுள்ள உரைகள் தரும் வெளிச்சங்கள்.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ”தொடர்பு பற்றாதே வருத்தம் உற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவது ஆகலின்...” என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.

அதாவது இன்னார் இனியார் எனப் பாராது உற்றார் உறவினர் அல்லார் மீதும் உண்டாகும் மெல்லுணர்வு (மேலுணர்வு) அருள். நம்முடன் தொடர்புடைய நபர்கள் மீது மட்டும் உண்டாகும் மெல்லுணர்வு அன்பு.

இவ்விரு பண்புகளும் இறைமைப் பண்புகள் என்று இஸ்லாம் காண்கிறது. எவ்வொரு செயலுக்கும் தொடக்க வாசகமாக அதில் சொல்லப்படுவது “பிஸ்மில்லாஹ் அர்ரஹ்மான் அர்ரஹீம்” என்பது. ”அல்லாஹ்வின் பெயரால்... அவன் அருளாளன் அன்பாளன்” என்பது அதன் பொருள்.

இதில் அருள் முதலிலும் அன்பு அடுத்தும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் தன்னை ஏற்றாரையும் மறுத்தாரையும் நல்லாரையும் பொல்லாரையும் பாரபட்சமின்றி ரட்சிக்கிறான். இதுவே அருளாளன் எனும் நிலை. தனது அடியார்க்கு அவர்களின் பக்திக்கேற்ப அருட்கொடைகளை அவன் வழங்குகிறான். இதுவே அன்பாளன் என்னும் நிலை.

அன்பு என்னும் தாய்க்கு அருள் என்னும் குழந்தை பிறக்கிறது என்பது சரிதான். ஆனால் தந்தை யார் என்னும் கேள்வி தோன்றுகிறது அல்லவா? அறம் என்பதே அதன் தந்தை என்கிறார் மணக்குடவர். அதாவது, அறத்துடன் அன்பு சேரும்போது அருள் பிறக்கிறது.

இவ்வுலகில் அறம் செய்ய வேண்டும் என்றால் பொருள் (செல்வம்) வேண்டும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதும் அவர் சொல்வதுதான். அதாவது, இவ்வுலகிலும் அருள் வேண்டும், ஆனால் அதற்குப் பொருளின் துணை தேவை என்கிறார். “இது பொருளுடையார்க்கே அறம் செய்தல் ஆவது கூறிற்று” என்று இக்குறள் பற்றி மணக்குடவர் விளக்குகிறார்.
Image result for sadaqah photos
பொருளுடையார் செய்யும் அறம் இரண்டு என்று இஸ்லாம் வகுத்தது. ஒன்று வறியார்க்குக் கட்டாயம் ஈதல் ஆன ஜக்காத். தானுவந்து தரும் தர்மம் ஆன சதக்கா.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ஞா.தேவநேயப் பாவாணர் இன்னொரு விளக்கம் தருகிறார். “உயர்திணை மேலுள்ள அன்பு முதிர்ந்தவிடத்தே அஃறிணை மீது அருள் பிறத்தல் போல்...” என்கிறார்.

உயர்திணையான மக்கள் மீது மட்டும் காட்டுவது அன்பு. அதுவே, அஃறிணையான விலங்குகள் பூச்சிகள் தாவரங்கள் மீதெல்லாம் காட்டப்படும் எனில் அது அருள்.

“மானுட சமுத்திரம் நானென்று கூவு” என்றார் பாரதிதாசன். இது அன்பு.

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் பாரதி. இது அருள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றனார். இது அன்பு.

“யாதும் ஊரே யாதும் கேளிர்” என்றார் தேவதேவன். இது அருள்.