Thursday, August 10, 2017

திரையில் திரையாத் தமிழ்




இருந்தாற்போல் இருந்து என்னதான் ஞானோதயம் வந்து சேர்ந்ததோ, அண்டை வீட்டுக்காரர் தினமும் வானொலி நிகழ்வுகளை தெருவுக்கே விளம்பத் தொடங்கிவிட்டார். பிரத்யேகமாக ஏதேனும் ஒலிபெருக்கிகள் வைத்துச் செய்கிறாரா என்னவென்று தெரியவில்லை. முந்தாநாள் அந்திக்குச் சற்றுமுன், பாரதியாரியற்றிய பாடல் ஒலித்தது, அவரது வாழ்க்கையைப் படமாக்கிய ’பாரதி’யிலிருந்து.
      நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே – நீங்களெல்லாம்
      சொப்பனம்தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?
      கற்பதுவே கேட்பதுவே கருதுவதே – நீங்களெல்லாம்
      அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

      இருத்தலியற் சிந்தனையில் எழுதப்பட்ட இப்பாடலை நாம் வெறுமனே அச்செழுத்துக்களாக ஏட்டில் வாசித்தால் அப்பாடல் ஒரு வரட்டுத் தத்துவ விசாரம் என்னும்படிக்கு வாசித்து ’படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்னும் முதுமொழிக்குப் புதுப்பொருள் தந்துவிடுவோம். ஆனால் இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா அமைத்திருக்கும் மெட்டு, எந்த மனநிலையில் பாரதி இவ்வரிகளை யாத்திருப்பானோ அந்த மனவுணர்வுகளை நம்முள் நிச்சயமாகக் கிளர்த்துகின்றது என்றே கருதுகின்றேன். மாயத் திரையினை விலக்கி உண்மையின் முகத்தை தரிசித்துவிடத் தவிக்குமோர் ஏக்கம் அதிலிருக்கிறது. இதனை அடுத்தூறும் வரிகளில் மெட்டு மேலெழுந்து உயரும்போது நெஞ்சுக்குள் அந்த ஏக்கம் கரைத்துக்கொண்டு அலையாய் எழும்.
      வானகமே இளவெயிலே மறச்செறிவே – நீங்களிலெல்லாம்
      கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
Image result for bharathi movie
      இவ்வரிகளே மெட்டின் உச்சம். இதனைத் தொடரும் வரிகளில் அதனைக் கீழே இறக்கிக்கொண்டு வந்து வேகத்தைக் குறைத்து மண்ணில் உலவும் பாவனையில் விட்டுவிடுகிறார். “நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?” என்னும் ஆழமான முக்கியமான கேள்விகளுடன் அச்சரணம் முடியும். 

      என் மீது அவள் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் பல நேரங்களில் அனிச்சையாக ஏதாவது பாடலைத் தொடங்கிவிடுவது என் பழக்கம். காதற் ததும்பும் பாடலெனில் பிழையன்று, ‘உடையாத வெண்ணிலா, உறங்காத பூங்குயில், நனைகின்ற புல்வெளி, நனையாத பூவனம்...’ என்பது போல. ஆனால் ஒருமுறை இப்பாடல் கிளம்பிற்று. ’வானகமே இளவெயிலே மரச்செறிவே...’ என்று பாடும்போது அந்த மெட்டில் தொனிக்கும் ஏக்கத்தில் எனக்குப் புருவங்கள் உயர்ந்து மூக்கு மலர்ந்துவிடும். கேவல் பாவம் கூடிவிடும். தருணம் நோக்காது தத்துவப் பாடலா என்றவள் ஊட வாய்ப்புள்ளது. எனவே நான் அதன் வேகத்தை வேறொரு விதத்தில் குறைத்துவிட்டேன். அது பாரதியோ இளையராஜாவோ அறியாதது. அது எனக்கொரு கைவந்த உத்தி. அப்படியே பாடலின் வரிகளை மட்டும் மாற்றி, ஆனால் மெட்டுக்குள் வருமாறு பாடுவேன். “நீந்துவதே ஊருவதே ஓடுவதே – நீங்களெல்லாம்...” என்று தொடங்கினேன். “ம்க்கும்” என்றாள் அவள்.
      
 பாரதியாரின் பாடல்கள் பலவும் திரைப்படங்களில் வந்துள்ளன. அவற்றிலெல்லாம் இப்பாடல் எனக்கு மிகவும் உன்னதமான மெட்டினைப் பெற்றுவிட்ட ஒன்றாகப் படுகிறது. இளம் பாடகர் கார்த்தி இதனைப் பாடினார். அவருக்கு அதுவே முதற்பாடல் என்று நினைக்கிறேன். திரைத்துறைக்குள் அவர் நுழையும் முன், 1999-இன் இறுதி அல்லது 2000-இன் தொடக்க காலத்தில் அவரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இப்போது மெல்ல பிரபலமடைந்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் அப்போது ஸ்டார்.டாட்.ஸ்டார் என்னும் நிறுவனத்தில் இசைஞராகப் பணியாற்றி வந்தார். குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் பாடல்களை அனிமேஷன் காட்சிகளுடன் குறுவட்டுக்களாக அந்நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்தது. மூன்று வருடங்களாகத் தேங்கிக் கிடந்த தமிழ்ப்பணியை முடித்துத் தர அங்கே பகுதி நேர எழுத்தாளனாக நான்கைந்து மாதங்கள் வேலை செய்தேன். அப்போது பாடற்பதிவுக்காக ஜிப்ரான் அங்கே கார்த்தியை அழைத்திருந்தார். அடியேன் இயற்றிய  குழந்தைப் பாடல் ஒன்றினைக் கார்த்தி பாடித்தந்தார்.

  Image result for singer karthik    

 ஏறத்தாழ அதே காலகட்டத்தில் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தின் இசைப்பேழை வந்திருந்தது. எனது சின்னமாவின் மகனுக்கு அதனையும் எனக்கு ’பாரதி’யையும் வாங்கினேன். க.க-வில் ’சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா’ என்னும் பாரதிப்பாடல் இடம்பெற்றிருந்தது. பத்திரிகை ஒன்று “இத இதத்தான் எதிர்பார்த்தோம் என்று ஏ.ஆர்.ரகுமானின் பேட்டி ஒன்றில் புளகித்து எழுதியிருந்தது நினைவு. ஆனால் அப்பாடலின் மெட்டு தூங்கலோசையாகவே பட்டது. பாரதிக்கு அந்த மெட்டு நியாயம் செய்யவில்லை என்று முதலில் கேட்டதுமே தோன்றிவிட்டது. இளையராஜா அளவுக்கு பாரதியை ஏ.ஆர்.ரகுமான் ஆத்மார்த்தமாக உள்வாங்கவில்லை என்று கருதினேன். (இந்தத் தரவினைச் சரி காண இப்போது கூகிளில் உலவினேன். ராக்ட்யூன்.காம் என்னும் இணையத்தளம் இப்படிச் செப்புகிறது: பாரதியார் என்பவர் ஒரு பிரபலமான தமிழ்ப் பாடகர். அவரது சமீபத்திய ஆல்பமான ’பாரதியார் பாடல்கள்’ என்பதற்காக அவர் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். (Bharathiar is a famous Tamil Singer and popular for his recent album Bharathiyar Paadalgal.) ஆமாம், ஏ.ஆர்.ரகுமான் இல்லை எனில் தமிழ்நாட்டில் பாரதியாரை யாருக்குத் தெரியப் போகிறது? அடப்பாவிகளா! ஒங்க அறிவுல தர்ப்பய போட்டுக் கொளுத்த!

      திரைப்படங்களில் இலக்கியப் பாடல்கள் இடம்பெறுதல் என்பதை மாணவப் பருவத்திலிருந்தே என்னையுமறியாமல் கவனித்து வந்திருக்கிறேன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் தமிழ். தூய வடிவில் அல்லது செவ்வியற் பண்பு பிறங்கும் வரிகள் கொண்டு எழுதப்படும் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்த்து வந்துள்ளன. அவை இலக்கியப் பனுவல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் தனிக்கவனம் பெற்றுள்ளன. திரைப்படங்களின் தரமுயர அஃதொரு வழி என்று நான் அப்போது எண்ணியிருந்தேன் போலும். 
 
      என் பதின்ம வயதுகளின்போது சிலப்பதிகாரத்தைத் திரைக்காவியமாக்கிய ‘பூம்புகார்’ கண்டேன். அப்போதெல்லாம் மனோகரா, பராசக்தி என்று கலைஞரின் கைவண்ணத்தில் உருவான திரைப்படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்த காலம். அந்த வண்ணத்தில் ஓர் ஈர்ப்பு அப்போது இருந்தது. பூம்புகாரில் ஓர் பாடல். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தின்படி பதினாறு வயது கோவலனும் பன்னிரு வயது கண்ணகியும் மனையறம் தொடங்கும் முதலிரவில் அவன் அவளிடம் பாடுவதாக வரும் நலம் பாராட்டுதல் அது. திரையில் பதினாறு வயது(?) எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பன்னிரு வயது(?) விஜயகுமாரியும் தோன்றுவார்கள். அக்காட்சிக்கு சிலப்பதிகார வரிகளையே பல்லவியாக எடுத்தாண்டிருந்தார்கள்:
            ”மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
            காசறு விரையே! கரும்பே! தேனே!”

      வரலாறுரைக்கும் திரைப்படங்களாகவே பார்த்திருந்த அக்காலகட்டத்தில் அனைத்து வரலாற்றுப் பாத்திரங்களாகவும் சிவாஜி கணேசனே தோன்றியிருந்ததான மனக்காட்சி இப்போது வருகிறது. கப்பலோட்டிய தமிழனில் பாடற்காட்சியில் மட்டும் அவர் பாரதியாராக வருவார். அது போன்ற படங்களில் பாரதியாரின் பாடல்கள் இடம்பெற்றமை வியப்பல்ல. எழுதிய பாடல்களுக்கு இசைவாணர்கள் மெட்டமைத்த காலமது. எனவே இசையமைவு ஒருவித கட்டுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும். அதன் பெயரே மெட்டுக் கட்டுதல் அல்லவா? ’சிந்துநதியின் மிசை நிலவினிலே…” “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்…” போன்ற பாடல்கள் இசைரீதியாக என்னில் ஏதும் வியப்புணர்வைக் கிளர்த்தவில்லை.


EzhavathuManithan.jpg 

      பாரதியின் பாடலொன்றைத் திரையில் கேட்டு மனவெழுச்சி உண்டானது என்று சொன்னால் அது எல்.வைத்தியநாதனின் இசையில் ஏழாவது மனிதனில் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா” என்னும் பாடல்தான். இன்றுவரை அதன் இசையழகு தாக்கம் குறையாதிருக்கிறது. “தீக்குள் விரலை வைத்தால்…” என்னும் வரியில் அம்மெட்டு கொள்ளும் ஆரோகணத்தில் அப்படியே ஏக்கமெழுந்து மூக்கு மலர்ந்துவிடும். அதுவே அப்பாடலின் ஆத்மார்த்தத் திறப்புக் கணம். 

      அடியேன் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கையில் வந்தது “தளபதி”. அப்போது தமிழ்ப்பாடத்தில் இடம்பெற்றிருந்த செய்யுட்களுள் ஒன்று “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்” எனத் தொடங்கும் அப்பர் தேவாரப் பாடல் (நான்காம் திருமுறை: 783). வத்தலும் தொத்தலுமான ஒரு தமிழாசிரியர் அவ்வாண்டில்தான் பணிக்கு வந்திருந்தார். கிறித்துவர் (அஃதொரு கிறித்துவப் பள்ளிக்கூடம்). சோம்பரில் திளைக்கும் மாணவர்களைச் சேம்பரில் வைத்துப் பேயோட்டிப் புகழ் பெற்றிருந்தார். எப்பாடலாயினும் ‘இப்பாடல் ஆதி ராகத்தில் பாடப்பெற்றது” என்று சொல்லி பாடவதியாகப் பாடிப் பாடிப் பாடம் நடத்துவார். ஆதி என்பது ராகம் அல்ல, அஃதொரு தாளம் என்று மறுப்போர் முதுகில் தாளக்கட்டுகளும் வாசித்துக் காட்டுவார். ஆதி தாளத்தில் “குனித்த புருவமும்...” என்றவர் இழுத்துத் தொடங்கியதை ரஜினி ரசிகர்களாய் இருந்த இரண்டு மாணவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. “ஐயா நீங்கள் பாடுவது தவறு” என்று பொங்கி எழுந்துவிட்டார்கள். “நீங்கள்தான் சரியாகப் பாடுங்களேன்” என்று மன்னர் தோரணையில் ஆணையிட்டார். ஏனெனில் அந்த மாணவர்கள் சொன்னது சரிதான் என்று எல்லாருமே ஆதரவு உரைத்தோம். இசைஞானி அந்த விருத்தப் பாடலுக்கு அமைத்த மெட்டில் வருத்தப்படாமல் அவ்விருவரும் பாடினார்கள். “இது என்ன ராகம்?” என்று ஆசிரியர் கேட்டார். பாடிய மாணவர்கள் “தளபதி ராகம்” என்று தயங்காமல் சொல்லிவிட்டார்கள். பொதுத்தேர்விலும் அப்பாடல் கேட்கப்பட்டது. மனதுக்குள் இசைஞானியின் மெட்டொலிக்கவேதான் எழுதி வைத்தேன்.

Image result for ilayaraja thiruvasagam in symphony

      இப்போது சிந்திக்கையில் அப்பாடலின் விரிவு வியப்பூட்டுகிறது. அதுவே பின்னாளில் ”திருவாசகம்” என்னும் நல்லிசைப் பேழையின் உருவாக்கத்திற்கான முன்னோடி என்று சொல்லலாம். மேற்கத்திய செவ்வியலிசையான சிம்ஃபொனியைத் தமிழ் மரபிசையுடன் தேனும் பாலுமெனக் கலந்து தெவிட்டா இன்னிசையாக்கிய பணி எளிய சாதனை அல்ல. குறிப்பாக, “முத்து நற்றாழம் பூமாலை தூக்கி முளைக்குடந் தூபம்நற் தீபம் வைம்மின்” என்னும் பாடலினைத் தனிமையிற் கேட்டபோது சுண்ணமிடித்தபடி அடியார் குழாமொன்று ஆனந்தக் களிப்புற்றுச் சுழன்றாடுவதான மனச்சித்திரம் எழுந்துவந்தது. மாணிக்கவாசகர் காலத்துத் தமிழ்-சிம்ஃபொனியுடன் கூடிய ஒபெராவை இளையராஜா வழங்கியிருக்கிறார். (ஏ.ஆர்.ரஹ்மான் இதுபோல் சூஃபி-சிம்ஃபனி ஒன்றினை உருவாக்க முனையலாம். மேற்கத்திய சிம்ஃபனியுடன் பழந்தமிழிசையை இளையராஜா கலந்தது போல் மேற்கத்திய செவ்வியலிசையுடன் கவ்வாலி இசையைக் கலந்து சூஃபிப் பாடல் வரிகளை, குறிப்பாக மௌலானா ரூமி அவர்களின் பாடல் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தந்தால் அஃது இசை மற்றும் ஆன்மிக உலகங்களில் அரும்பணியாய் நிற்கும்).

      செந்தமிழ் நடைகொண்ட இலக்கியப் பாடல்களைப் போலவே எழுதி ஏதோ பழம்பாடல் போலும் என்பது போன்ற மயக்கத்தை ஊட்டுகின்ற வாய்ப்பினைக் கவிஞர் வாலி மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கவர் பெற்றிருந்த இலக்கியத் தோய்வு, குறிப்பாக வைணவ பக்திப் பாசுரங்களான நாலாயிர திவ்ய பிரபந்த வாசிப்பு மிகவும் உறுதுணையாயிற்று எனலாம். ‘மாசறு பொன்னே வருக...’ (படம்: தேவர் மகன்) என்பது தேவாரப் பாடல் போன்றே ஒலிக்கின்றது. ’குணா’ என்னும் திரைப்படம் அபிராமி அந்தாதியின் உந்துதல் கொண்டதொரு கதை. பௌர்ணமி என்னுங் குறியீடும், இடையிடையே தொன்மப் பொருள் தொனிக்கும் வசனங்களும் (எழுதியவர் பாலகுமாரன்), ’அபிராமி’ என்று நாயகிக்குப் பெயர் வைத்திருப்பதும் இதனைச் சுட்டும். அபிராமியை குணா முதன்முதலில் பார்க்கும் காட்சிக்கு இளையராஜா இசையமைத்த பாடல் முப்பகுதிகள் கொண்டது. அதன் முதற்பகுதியும் மூன்றாம் பகுதியும் முறையே அபிராமி அந்தாதியின் ’நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி...’ (50) மற்றும் ‘இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி...’(42) ஆகிய இரண்டு பாடல்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுப்பகுதி அபிராமி அந்தாதிப் விருத்தப்பாக்களின் சாயலிலேயே எழுதப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் கவிஞர்.வாலி:
      ”பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
      காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
      ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
      மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே”

Related image 
      இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் எதுகைத் தொடை பயிலவில்லை என்பதனைத் தமிழுக்குச் செவியுள்ளார் நன்கறிவர். முதன் முதலில் கேட்டபோதே எனக்கிது உறுத்திற்று. இப்பாடல் அபிராமி பட்டர் எழுதியதல்ல என்று ஐயுற்றேன். எனினும், பொதுமக்களில் யாருக்கும் வேறுபாடு தெரியா வண்ணம் எழுதியமைக்காக வாலியை வாழ்த்தினேன்.
      ’இசைப்புயல்’ என்னும் பொருந்தாக் கிளவியால் விளிக்கப்பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் புதுமழைக் காற்றெனப் புகுந்து வீசிக்கொண்டிருந்த காலம். ’காதலன்’ என்னும் படத்தினது பாடற்பேழையை இ.புயலின் தீவிர விசிறியான என் தம்பி வாங்கி வந்தான். பிரமிட் என்னும் நிறுவனம் அப்போது இசைப்பேழைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. குறுவட்டுக்கள் வராத காலகட்டம். அப்பேழையின் பின்புறம் கொடுக்கப்பட்டிருந்த பாடற் தகவல்களை வாசித்தபோது வியப்பொன்று காத்திருந்தது. அதிலொரு பாடலை எழுதியவரென்று “திரிகூடராசப்பக் கவிராயர்” என்னும் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் தமிழ்ப்பனுவல் தந்தவர். அதிலுள்ள ‘வசந்தவல்லி பந்தடித்தல்’ என்னும் பகுதியின் நான்காம் பாடலான “இந்திரையோ இவள் சுந்தரியோ...” என்னும் பாடலினை மட்டுமெடுத்து அற்புதமான மெட்டெடுத்து அலங்கரித்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இலக்கியக் குறிப்புப்படி இப்பாடல் பைரவி ராகத்தில் சாப்புத் தாளம் கொண்டு பாடப்பெறல் வேண்டும். ஆனால் இ.புயல் இதனைக் ’கேதாரம்’ என்னும் ராகத்தில் தவழவிட்டிருப்பார். இதே மெட்டினைக் கொண்டு மேலும் சரணங்கள் சேர்த்து “என்னவளே அடி என்னவளே” என்னும் பாடலும் நல்கினார்.

Image result for a r rahman sufi

      ஏ.ஆர்.ரகுமான் என்றால் நவீன இசை என்றே அடையாளம் அமைந்துபோனது. அப்போதும் அவரிடமிருந்து திடீரென்று ஏதேனுமொரு பாடல் நற்றமிழ் வரிகளைச் சுமந்து வந்து என் செவிகளில் குறிஞ்சித் தேன் பாய்ச்சும். நான்கைந்து நாட்களுக்கு முன் இளநிலை வகுப்பொன்றில் கலிங்கத்துப் பரணி நடத்திய போது பாடத்தின் ஊடாக ஒரு பாடலை நினைவு கூர்ந்து சொன்னேன். ’இருவர்’ என்னும் அப்படத்தைப் பற்றி ஒரு மாணவன்கூட அறிந்திருக்கவில்லை. ”நாங்கள் பிறக்கும் முன் வந்ததெல்லாம் எப்படி சார் எங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். கிடக்கட்டும். பாடல் வரிகளை அவர்களிடம் சொன்னேன். தூய தமிழில் எழுதும்படிப் பணிக்கப்பட்டு வைரமுத்து மிகுந்த உற்சாகத்துடன் எழுதியதாம். “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் /  செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்” என்று தொடங்கும் பாடல் அது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளிவந்த ஒரு படத்தில் ஒரு பாடலின் ஆரம்பத்தில் பெண்குரல் ஒன்று ’உயவுநோய்’ கொண்ட தன்மையில் வெள்ளிவீதியாரின் “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது” என்னும் குறுந்தொகைப் பாடலைப் பேசுவது போல் இ.புயல் பயன்படுத்தியிருந்தார். அப்பாடலுக்கு ஏற்ற உணர்ச்சி அதுதானா என்பது ஆராயற்பாற்று.

Related image
      
 இறையடியார்களின் வரலாறு நுவலும் கதைகள் கொண்ட படங்களில் பழம்பனுவல்களின் பாடல்கள் இடம்பெறுவது இயல்பு. ஆனால், நவீன வாழ்விற்கு அத்தகு பாடல்கள் பின்னணியாக ஒலிப்பது போல் காட்டுவது நிச்சயம் புதுமுயற்சிதான். அத்தகு முயற்சியை ‘ராமானுஜன்’ (2014) காட்டிற்று. இருபதாம் நூற்றாண்டு கண்ட ஒப்பாரும் மிக்காருமற்ற கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அது. ராமானுஜத்தின் சரிதத்தை 1991-இல் எழுதிய ராபர்ட் கனிகல் தனது நூலுக்கு “The Man Who Knew Infinity” (முடிவிலியை அறிந்த மனிதன்) என்று பெயரிட்டார். அந்நூல் அதே பெயரில் பின்னர் 2015-இல் ஹாலிவுட்டில் திரைப்படமாக ஆக்கம் பெற்றது. அதற்கு ஓராண்டுக்கு முன்பே ஞானராஜசேகரன் இங்கே தமிழில் ’நம்’ கணிதமேதையின் வரலாற்றினைத் திரைப்படம் ஆக்கிவிட்டார். இரண்டு படங்களையுமே நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஆங்கிலப் படத்திலில்லாத ஓர் ஆதமார்த்தக்கூறு நிச்சயமாக தமிழ்ப்பிரதியில் இருக்கின்றது என்பேன். அது ஓர் பாடல். ராமானுஜத்துக்குக் கணிதமே கடவுளை அடையும் வழி. அஃது அவரின் ஆன்மிக நெறி. ஆனால், எண்களின் முடிவிலியை அறிந்த அவரது மூளைக்குக்கூட இறைவன் எட்டாக் கனியாகவே நிற்கின்றான். அதை அவரின் ஆன்மா ஆழமாக உணர்கிறது. அந்த மனநிலையில் ஏக்கத்தை வெளிப்படுத்த ஏற்றதொரு பாடல் இசைக்கப்பட வேண்டிய இடத்தில் மெல்ல அலையெழுந்து தெளிந்த குரலில் ஒலிக்கிறது திருமழிசை ஆழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தப் பாடல்கள்:

      விண்கடந்த சோதியாய் விளங்குஞான மூர்த்தியாய்
      பண்கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
      எண்கடந்த யோகினோடு இரந்துசென்று மாணியாய்
      மண்கடந்த வண்ணம் நின்னை யார்மதிக்க வல்லரே (27)

      ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
      ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
      வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
      ஊரொடோசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே (2)

      பூ நிலாய ஐந்துமாய் புணர்ந்து நின்ற நான்குமாய்
      தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
      மீ நிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
      நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே (1)

      வயொலின் பியானோ மற்றும் குழல் மேற்கத்திய சிம்ஃபொனி பாணியில் இழைய இழைய, ”அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே” (மதுரகவியாழ்வார்) என்பது போல் உன்னிக்கிருஷ்ணனின் கேட்கிறது. உயிரோட்டமுள்ள இசையைத் தந்திருக்கிறார் ரமேஷ் விநாயகம். இதே பாணியில் திருச்சந்த விருத்தம் முழுமைக்கும் இசையமைத்து வழங்குவாரெனில் தனித்த சாதனையாய் நிற்கும்.

Image result for ramesh vinayagam 
      ஆனைக்கும் அடி சறுக்கும். பாரதியாரின் பாடலை இளையராஜா தேர்கிறார் எனில் அற்புதமொன்றனையே எதிர்பார்ப்போம். ஏமாற்றமே கிடைத்தது என்றால் என்செய? ஏ.ஆர்.ரகுமானிடம் பாரதியாரின் ’சுட்டும் விழிச்சுடர்’ சற்றே மங்கிவிட்டது போன்றுதான் இளையராஜாவிடம் ‘ஆசை முகம் மறந்து போச்சே’ (டூரிங் டாக்கீஸ், 2015) என்னும் அதி அழகிய கவிதையும் சோபிக்கவில்லை. ஷங்கர் டுக்கர் இதே பாடலைத் தனது சாக்ஸஃபோன் இசை கொண்டு அலங்கரித்து வித்யா வாக்ஸ் மற்றும் வந்தனா ஐயர் ஆகிய இரு இளஞிகளைப் பாட வைத்த பிரதி இனிமையாக இருக்கின்றது. கர்நாடக வித்வான்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடுங்கால் இடம்பெறும் ஒரு டஜன் பாடல்களில் இப்பாடலும் தவறாது இருக்கும் எனலாம். இதே பாடலைக் கார்த்தி, சுசித்ரா கார்த்தி முதலியோர் நவீன தொழில்நுட்பக் கூடங்களி வைத்துப் பாடிப் பதிவு செய்திருப்பதும் யூட்யூபில் கிடைக்கின்றது. சங்கீத வித்வான் ஓ.எஸ்.அருண் இப்பாடலைத் தனது தனித்த சேஷ்டைகளால் ஹாஸ்யமாக்கிவிடுகிறார். அதனை என் மகனுக்குக் காட்டியபோது அவரது சேஷ்டைகளைப் பார்த்துச் சிரித்து ரசித்துவிட்டு ஒரு விமரிசனம் சொன்னானே பார்க்கலாம், “அத்தா, பாட வரலீன்னா இந்த ஆளு வேற தொழிலு பாக்கலாம்ல?” என்றான். (’பாப் பாடகர்கள் எல்லாம் என்ன பாட்டா படிக்கிறான்கள்? அடித்தொண்டையில் கதறுகிறான்கள்’ என்று சொல்லப்படுவதில்லையா? ‘என்னடா பெரிய ஒங்க டிஸ்கோ?’ என்று சங்கராபரணத்தில் சோமயாஜுலு கேட்கவில்லையா? பாப் மார்லி ஒரு குப்பை என்று இளையராஜாவே சொல்லவில்லையா? எனது சிற்றப்பா ஒருவர் சொல்வார், கர்நாடக இசைஞர்களைப் பற்றி, “வயிற்று வலி வந்த மாதிரி முகத்த வச்சுக்கிட்டு இவனுங்க கத்துறது இருக்கே...” என்பார். எல்லாம் ஒரு சார்பு கோடலின் குறைபட்ட பார்வைகள்தாம் அல்லவா?)

Image result for a r rahman tamil

      ’மெலொடி’ என்றால் நத்தை வேகத்தில் நகரும் இசையும் மெட்டுமாக இருக்க வேண்டும் என்று பொதுப்புத்தியில் ஓர் எண்ணம் இருப்பது போலவே விளங்கி வைத்திருக்கும் என் மகன் அப்படித் தன்மை கொண்ட பாடலொன்றை எனக்கு அறிமுகஞ் செய்து ’இதைக் கேளுங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றான். ’அச்சம் என்பது மடமையடா’ (2016) என்னும் படத்திலுள்ள பாடலாமது. அப்பாடல் என்னைக் கவரவில்லை. ஆனால் அதே படத்திலிருந்தான வேறொரு பாடல் சட்டென்று மனதை ஈர்த்தது. “அவளும் நானும்...” என்று தொடங்கும் அப்பாடலை முதன்முதலில் கேட்டபோதே அதன் வரிகளை எங்கோ வாசித்திருக்கிறோமே என்று மண்டைக்குள் குடைந்தது. யார் எழுதியது என்று உசாவியபோது “பாவேந்தர் பாரதிதாசன்” என்று பதில் கிடைத்தது. ’போச்சுடா, ஏ.ஆர்.ரகுமான் இப்போது பாரதிதாசனையும் ஃபேமஸ் ஆக்காமல் விடமாட்டார் போலிருக்கே?’ என்று நினைத்துக்கொண்டேன். இப்பாடல் குறித்து எனது (ஒன்றுவிட்ட) தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவனொரு மென்பொறிஞன். தமிழிலக்கியங்கள் ஏதும் வாசித்தறியான். பாரதி பாரதிதாசனாரெல்லாம் அவனுக்கு பாடலாசிரியர்கள் மாத்திரமே. அவன் சொன்னான், “ஐயோ செம பாட்டு. அந்த ஆளு அசால்ட்டா எழுதீருப்பாரு”. அருமையான வரிகளுக்கு மிக அழகாக இசையமைத்து மீண்டுமொரு இலக்கிய இசையின்பத்தை ஏ.ஆர்.ரகுமான் நல்கியிருக்கிறார். அவரது தலைப்பாகையில் இன்னொரு சிறகு!

      ”அவளும் நானும் அமுதும் தமிழும்
      அவளும் நானும் அலையும் கடலும்
      அவளும் நானும் தவமும் அருளும்
      அவளும் நானும் வேரும் மரமும்
      ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
      அணியும் பணிவும் அவளும் நானும்
      அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
      அளித்தலும் புகழும் அவளும் நானும்
      மீனும் புனலும் விண்ணும் விரிவும்
      வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்
      ஆறும் கரையும் அம்பும் வில்லும்
      பாட்டும் உரையும் நானும் அவளும்
      நானும் அவளும் உயிரும் உடம்பும்
      நரம்பும் யாழும் பூவும் மணமும்
      அவளும் நானும் தேனும் இனிப்பும்
      அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும்
      அவளும் நானும் திங்களும் குளிரும்
      அவளும் நானும் கதிரும் ஒளியும்”

      குடும்பவிளக்கில் கணவனும் மனைவியும் பேசிக்கொள்வதாக பாரதிதாசன் இயற்றியிருக்கும் கவிதைகளைத் தழுவி ”சாதி மல்லிப் பூச்சரமே! சங்கத் தமிழ்ப் பாச்சரமே!” என்னும் பாடலொன்றைப் புலமைப்பித்தன் எழுதி மரகதமணி இசையாக்கியிருந்தார் (’அழகன்’, 1991). இப்பாடலைக் கேட்டபோது அப்பாடலையும் நினைவு கூர்ந்தேன். எனினும் பாரதிதாசனாரின் வரிகள் குறிஞ்சித் தேன் போல் இனிக்கின்றன. 

Monday, August 7, 2017

ஹெச்.ஜி.ரசூல் – நினைவேந்தல்

Related image

ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் இறப்பெய்தினார் என்னும் செய்தியை இன்றைய இந்து நாளிதழில் களந்தை.பீர் முஹம்மது எழுதியிருக்கும் நினைவுரையிலிருந்தே அறிந்தேன். அவர் இவ்வுலகை விட்டகன்று மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அன்னாரின் ஆத்மா அமைதி காண அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

      ஹெச்.ஜி.ரசூல் அவர்களை நான் அறிந்தது ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன். முஸ்லிம் சமூகத்தில் அவருக்குப் பெருஞ்சிக்கலை உருவாக்கிய அவரின் ‘மைலாஞ்சிஎன்னும் கவிதைத் தொகுப்பின் மீதான எதிர்வினைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ‘சிந்தனைச் சரம்மாத இதழில் அது வாதப் பிரதிவாதமாகத் தொடர்ந்து வந்தது. நவீனக் கவிதையின் இயங்குமுறையை அறியாத, பொதுவாகவே கவிதையின் மீதொரு ஒவ்வாமை மனநிலை கற்பிக்கப்பட்ட (குறிப்பாக வஹ்ஹாபிகளின் குரல் ஓங்கிய பின்) சமூகத்திடம் கண்மூடித்தனமான எதிர்ப்பையே அவர் பெற முடிந்தது. அவரின் குடும்பத்தை ஜமாஅத் ஊரொதுக்கம் செய்த விளைவு வரை அது அவரைத் தாக்கிற்று.

      கவிதையை உள்வாங்கும் தன்மை முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்று எழுதும் அதே நேரம் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் மீதான என்னுடைய பார்வை அவரை முழுமையாக உடன்படுவதல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும். ஹெச்.ஜி.ரசூல் எனக்கு யார்? அவரை நான் என்னவாகக் காண்கிறேன்? என்னும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு முற்செல்ல விரும்புகிறேன்.

பத்து நாட்களுக்கு முன்புதான் அவரின் “மைலாஞ்சிதொகுப்பின் மறுபதிப்பினைப் புரட்டிக்கொண்டிருந்தேன். (ஒரு முஸ்லிம் பெண்மணி கையேந்தி இறைஞ்சும் புகைப்படம் அட்டையில் உள்ள பதிப்பு). அவரது கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியதால் அந்நூலை எடுத்திருந்தேன். கைப்போக்காகப் புரட்டிய பக்கங்களில் தென்பட்ட கவிதைகளில் எதுவுமே எனது எண்ணத்திற்கு வலுச்சேர்த்து ஊக்கவில்லை. எனவே மீண்டும் அலமாறியிலேயே வைத்துவிட்டேன். வேறு நூலுக்கு நகர்ந்துவிட்டேன். மிகவும் சர்ச்சையான கவிதை வரி என்று சொல்லப்படுகின்ற (5.8.2018 தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி இவ்வரியையே மேற்கோள் காட்டியிருக்கிறது என்பதொரு சான்று) “ஏன் இல்லை வாப்பா ஒரு பெண் நபி?என்னும் வரியும்கூட என்னைத் தூண்டவில்லை. சிறுமியொருத்தி தனது தந்தையிடம் இக்கேள்வியைக் கேட்பதாக அக்கவிதை அமைந்திருக்கிறது. சிறு பிராயத்தில் அவ்வாறான கேள்விகள் எழுந்து வருதல் இயல்பு. காலப்போக்கில் கேள்விகள் தேய்ந்து மறைந்து போகின்றன. அவற்றுக்காண விடைகளை இங்கே அறிபவர்கள் மிகச் சொற்பம். லட்சத்தில் ஒருவர் எனில் மிகையன்று.

ஹெச்.ஜி.ரசூலிடம் எனக்குள்ள போதாமை யாதெனில் அவர் கேள்வி கேட்டவர் மாத்திரமே, விடைகளை அறிந்தவர் அல்லர் என்பதுதான். அல்லது, விடைகளை நோக்கிய சரியான திசையில் நகராதவர், இன்னும் சொல்வதெனில் தவறான அணுகுதிசையில் நகர்ந்தவர் என்றே அனுமானிக்கின்றேன். அவருடைய அனைத்துக் கவிதைகளிலும் இந்தப் போதாமையை நான் காண்கிறேன். எனவே அவரின் கவிதைகள் எவ்வித அகத்திறப்பினையும் எனக்குத் தரவில்லை.

சூஃபி மகாகவி மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் ஆன்மிகப் பெருங்காவியமான ‘மஸ்னவியின் தமிழாக்க வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டது பற்றியும் அதுவே அவருடனான தனது கடைசிச் சந்திப்பு என்றும் களந்தை பீர் முஹம்மது எழுதியிருக்கிறார் (இந்து’, 8.8.2017).  ஒருவேளை ஹெச்.ஜி.ரசூல் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வு அதுதானாக இருக்கலாம். மஸ்னவி தமிழாக்கம் என்பதும் எந்நூல் என்று விவரம் இன்னும் தெரியவில்லை. சென்னை ஃபஹீமிய்யா டிரஸ்ட் வெளியிட்டு வருகின்ற (மூன்று பாகங்கள் வந்துள்ளன. நான்காம் பாக வேலை முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது என்று ரம்ஜானுக்கு முன்பு நண்பர். அபுதாஹிர் ஃபஹீமி சொன்னார்.) மஸ்னவி ஷரீஃப்என்னும் தமிழாக்கம்தான் உருப்படியான முழுமையான் பதிப்பு. நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்கள் ஆறுபாகங்களையும் ஃபார்சி மூலம் மற்றும் உருது மொழிபெயர்ப்புடன் சேர்த்து விளக்கக் குறிப்புக்களுடன் தமிழாக்கம் செய்துள்ள பெரும்பணி அரும்பணி அது. அந்நூலின் நான்காம் பாகத்திற்கான வெளியீட்டு விழாதான் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் தேர்ந்தெடுத்த, ஆங்கில வழியிலான தோராய மொழிபெயர்ப்பு நூலொன்றின் வெளியீட்டு விழாவா? என்பதறியேன். அதற்கும் வாய்ப்புண்டு, ‘பாரசீக்க் கவிஞானி ஜலாலுத்தீன் ரூமி கவிதைகள் கதைகள்என்று நாகூர் ரூமி வெளியிட்டதைப் போல, ‘ரகசிய ரோஜா’ ‘ரூமியின் வைரங்கள்என்று அடியேன் வெளியிட்டதைப் போல. முன்னது எனில், அது ஒரு முரண் (ஐரனி). பின்னது எனில் அதுவுமோர் அணுகு பிழை.

ஹெச்.ஜி.ரசூலின் இறப்புச் செய்தி என்னுள் விண்மீன்களைப் போல் ஒளிரச் செய்துவிட்ட பல சிந்தனைப் புள்ளிகளை ஒன்றுடனொன்று இணைத்து ஒரு கோலமிடல் போல் இக்கட்டுரையை நான் ‘பேசிச் செல்கிறேன். எனவே, இது நேரற்றதாக இருக்கலாம். தொடர்ந்து வாசிக்கவும். முழுக்கோலம் நேர்த்தி காணும் என்று நம்புகிறேன்.

‘அணுகு பிழைஎன்னும் சொல்லினை மீண்டும் அழுத்தம் தந்து உச்சரிக்க விரும்புகிறேன். ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாம் சார்ந்து கேட்ட, அவரது மனத்துள் எழுந்த ‘ஆழமானஎன்று விமர்சிக்கப்படுகின்ற அல்லது அவரே அப்படிக் கருதியிருக்கக்கூடிய கேள்விகளில் பல பிற எழுத்தாளர்களும் கேட்டவைதான் என்பதை நான் நினைவு கூராதிருக்கவியலாது. கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய, ஆலாபனைஎன்னும் நூலில் உள்ள ‘ராங் நம்பர்என்னும் கவிதையை இங்கே சொல்ல வேண்டும். ‘எங்கள் செயல்களில் குற்றம் பிடிப்பவனே, எந்தச் சபிக்கப்பட்ட மண்ணால் எங்களைப் படைத்தாய்?என்னும் கேள்வியும், ‘ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை ஏன் வைத்தாய்?என்னும் முறையீடும் காத்திரம் குறைந்தவையா? ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகள் செய்யும் சமய விசாரத்தின் தன்மையை நாகூர் ரூமியின் சில கவிதைகளிலும் காணவியலும். கவிக்கோவின் அக்கவிதை ராங் நம்பர் என்று தொடர்பு துண்டிக்கப்பட்டதுஎன்பதாக முடியும். ஆம், தவறான அணுகுமுறைக்குக் கிடைக்கும் முடிவு அதுவாகத்தான் இருக்கும் என்பதையே அப்துல் ரகுமான் அக்கவிதையில் சுட்டிக்காட்டுவதாகப் புரிந்துகொள்கிறேன். ‘சரியான அணுகுமுறை எது என்று கண்டறிந்து அவ்வழிச் செல்லார்க்கு ஞானத்தின் கதவுகள் திறவா என்பது உண்மை. ஹெச்.ஜி.ரசூலும், களந்தை பீர் முஹம்மதும் அவரன்ன பிறரும் சிக்கிக்கொண்டிருப்பது இவ்விடத்தில்தான் என்று நான் காண்கிறேன்.

Image result for falcon of iqbal
photo by rifat iqbal. 

சிந்தனைச் சரம் இதழில் ஏறத்தாழ இருபதாண்டு காலத்துக்கு முன் அவரெழுதிய ஓர் கட்டுரையில் அல்லாமா இக்பாலின் கவிதையை (ராஜாளியுடன் போரிடும் வல்லமையை ஒரு சிட்டுக்குருவிக்கு வழங்கு) மேற்கோள் காட்டி எழுதியிருந்ததை இப்போது நினைவு கூர்கிறேன். அல்லாம இக்பால் சொல்லும் ஷாஹீன்என்னும் ஆன்மிக ராஜாளியாக ஹெச்.ஜி.ரசூல் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பது திண்ணம். அவர் சிட்டுக்குருவியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அப்படி எழுதினார் எனில் வல்லமை தாராயோ?எனும் வேட்டல் நிறைவேறியதாகவும் தெரியவில்லை. அந்நாளில் அக்கட்டுரையை வாசித்தபோதே எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. அல்லாமா இக்பாலைப் பற்றியெல்லாம் இவர் எதற்கு எழுதுகிறார் என்று நினைத்தேன். அல்லாமா இக்பாலின் கவிதைகளில் உள்ள சூஃபிய்யத் (சூஃபித் தன்மை) இவரிடம் கிஞ்சிற்றும் இல்லையே என்பதால். இப்போது, அல்லாமா இக்பாலின் ஆன்மிக குருவான (ரூஹானிய்யத் என்னும் ஆத்மத் தொடர்பு வழி குருவான) மவ்லானா ரூமி தொடர்பானதொரு விழாவில் வந்து அவரின் வாழ்க்கை முடிந்திருக்கிறது. ஆனால், ‘ரூமியின் மதுவிடுதியை நாம் மீண்டும் திறக்க வேண்டும்என்று மகாகவி இக்பால் எந்த சூஃபித்துவம் பற்றிப் பாடினாரோ அந்த சூஃபி ஞானப் பாட்டையில் எதுவொன்றிலும் அனுபவத் தேடலை நிகழ்த்தாத, சிந்தனை வெளி சஞ்சாரம்எனப் பிதற்றித் தன்னையே ஏமாற்றிக்கொண்ட ஒருவராகவே ஹெச்.ஜி.ரசூலைப் பார்க்க முடிகிறது. ஆம், பயிற்சிகளை மறுதலித்த ஒருவரால் அப்பயிற்சிகளுக்குரிய விளைவுகளை எப்படி அடைய முடியும்? சிந்தனையாளர்கள் என்று சொல்லப்படும் பலரிடம் இப்பெருங்குறை பெரும்பிழை இருப்பதை நான் பார்க்கிறேன். 

‘மொழிப்பழக்கம் நம்மை ஏமாற்றுகிறதுஎன்று மகாகவி இக்பால் பாடிய வரியொன்று ஞாபகம் வருகிறது. ‘இவர் என்னங்க எழுதுறார்? அது தமிழ்தானா? என்னமோ பெரிசாச் சொல்றாப்ல வளைச்சு வளைச்சு எழுதிக்கிட்டே போறார். ஒன்னுமே புரியமாட்டேங்குது. நீங்க தமிழ் ப்ரொஃபஸ்ஸர். ஒங்களுக்குத்தான் இந்த நவீன வார்த்தையெல்லாம் புரியும்போலஎன்று எனது நண்பரும் வரலாற்றுப் பேராசிரியருமான ஒருவர் ஹெச்.ஜி.ரசூலின் மொழிநடை பற்றி ஒருமுறை சொன்னார். அறிவுஜீவித்தனமான மொழிநடை என ஒன்றை உருவாக்கிப் பழகிக் கைவரப் பெற்றபின் அது தரும் போதையில் சுயத்தை இழந்து போகும் அபாயம் உண்டு என்பது உண்மையே. கவிஞர்களும் எழுத்தாளர்களும் எளிதில் வீழ்ந்துவிடும் பெரும்பள்ளம் அது. ஒருவேளை இவரும் அதனுள் வீழ்ந்த ஒருவரா? அவரது நூலொன்றின் தலைப்பு: “குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்”. இதே போல், சமரசம் அமீன் அவர்கள் எம் கல்லூரியின் நிகழ்வொன்றில் பேசுகையில் “களமாடல்என்னுஞ் சொல்லினைப் பயன்படுத்தினார். அண்மையில் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு பாடலில் “காதலாடஎன்னும் சொல் வருகிறது. ஆக, எல்லாம் ஆட என்னும் விகுதி சேர்த்துக்கொள்வதுதான். வாயாட என்பது நாட்டுப்புற வழக்கு. வாயாடுபவர் வாயாடி என்பது போல், காதலாடுபவர் காதலாடி. களமாடுபவர் களமாடி. மொழியாடுபவர் மொழியாடி. ஹெச்.ஜி.ரசூல் ஒரு நவீன மொழியாடி என்பது உண்மைதான். ஆனால் மொழியாடல் என்பதே உண்மையை மறைக்கும் திரைப்பின்னல் ஆகிவிடுமெனில் அதனின் கைச்சேதம் வேறென்ன?

Image result for h g rasool

இனி, “குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்என்னும் தலைப்பிலேயே ஓர் ஆழ்ந்த அபத்தம் இருப்பதாக உணர்கிறேன். மீள்வாசிப்பு என்னுஞ் சொல்லினைக் காண்கையில், அதன் மிதப்புத் தன்மையை உணர்கையில்,  “எல்லாந்தான் படிச்சீங்க என்ன செஞ்சு கிழிச்சீங்கஎன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரி என் சிந்தையில் முன் வந்து நிற்கிறது. உங்கள் முதல் வாசிப்பு என்னவாக இருந்தது? என்னும் கேள்வி தவிர்க்கவியலாமல் எழுகிறது. இப்னுல் அரபி, இமாம் கஸ்ஸாலி, மவ்லானா ரூமி, அல்லாமா இக்பால் போன்றவர்கள் நிகழ்த்திய குர்ஆனிய வாசிப்புப் பற்றிய புரிதல்களில் இருந்தல்லவா நமது மீள்வாசிப்பு முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான பயிற்சியும் முனைப்பும் உம்மிடம் இருந்த்தா? இல்லையே. மார்க்க ரீதியாக ஹெச்.ஜி.ரசூல் கொண்டிருந்த போதாமையைப் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன், “இஸ்லாமியப் பெண்ணியம்என்னும் அவரது நூலை முன்வைத்து. அதுபோல் இந்நூலை வைத்தும் விவாதிக்க இடமுள்ளது.

Image result for h g rasool

ஹெச்.ஜி.ரசூலை இங்கே ஒருவருடன் ஒப்பிட்டுக் கூறத் தோன்றுகிறது. ஃப்ரெட்ரிக் நீஷே என்னுக் கிளர்ச்சியாளன். குறிப்பாக, நீஷேவைப் பற்றி கேட்கப்பட்டபோது மகாகவி அல்லாமா இக்பால் சொன்ன கருத்தை இங்கே அவருக்குப் பொருத்தமானதாகக் காண்கிறேன்: அவரின் அறிவு நிராகரிப்பாளனாய் இருந்தது; ஆனால் அவரின் உள்ளமோ நம்பிக்கையாளனாய் இருந்தது”. (இவ்வரி உமைய்யா என்னும் அறபிக்கவிஞரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகும். இக்பாலின் ஆழிய புரிதலுக்கும் இஸ்லாமிய அறிவுக்கும் இஃதொரு சான்று). மேலும் நீஷேவின் குறையைத் தான் நிவர்த்தி செய்திருக்கவியலும் என்பதை அல்லாமா இக்பால் இப்படிச் சொன்னார்:
“அந்த ஐரோப்பியப் பித்தன் இக்காலத்தில் இருந்திருப்பான் எனில்
இக்பால் அவனுக்குப் புரியவைத்திருப்பார் தெய்வீக நிலை யாதென்று
(அகர் ஹோத்தா ஓ மஜ்தூபே ஃபிரங்கி இஸ் ஸமானே மே(ன்)
 தொ இக்பால் உஸ்கோ சம்ஜாத்தா மகாமே கிப்ரிய்யா க்யா ஹே)

      இறுதியாக, ஓர் ஒப்புவமை. சிறுவன் ஒருவனின் கையில் சோடா பாட்டில் ஒன்று கிடைக்கிறது. உள்ளே உள்ள பானம அவனின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. அவனுக்கோ தாகத் தவிப்பு வேறு. அந்த புட்டியின் மூடியைத் திறப்பதற்காக அவன் விரல்களால் நெம்புகிறான். அவனது விரல்கள் புண்ணாகி ரத்தம் ஒழுகுகிறது. வாயில் வைத்துப் பல்லால் கடிக்கிறான். அவனது நாவிலும் உதடுகளிலும் அந்த மூடியின் விளிம்பு கீறி ரத்தம் வழிகிறது. தனது ரத்தத்தையே அவன் சப்புக்கொட்டியபடி மேலும் தீவிரமாக முனைகிறான். அப்போது அங்கே வந்த அவனது தந்தை அவனிடமிருந்து அந்த சோடாப் புட்டியைப் பிடுங்கி தன் பையிலிருந்து திறப்பியை (ஓப்பனர்) எடுத்து ஒரே நொடியில் இலகுவாக மூடியைத் திறந்துவிடுகிறார்.

      ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஒருவர் அந்தச் சிறுவனை ஒத்தவராகவே இருப்பார். அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது போலொரு தந்தை வாய்க்க வேண்டும். ஆன்மிகத் தந்தை என்னும் குருநாதர் வாய்க்க வேண்டும். அவர்தான் கண் திறப்பாளர் (eye opener) என்னும் நிலையில் நமது அகப்பார்வையைத் துலங்கச் செய்யவியலும்.


      நீத்தார் பற்றி நிந்தனை கூடாது என்பதொரு நயத்தகு நாகரிகம் ஒருபுறம் இருக்க, “குலில் ஹக்கு வலவ் கான முர்ராகசப்பாயினும் உண்மையே பேசுகஎன்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. இவ்விரண்டையும் பேணியே எனது சிந்தனைகளை இங்கே வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். மீண்டுமொரு முறை ஹெச்.ஜி.ரசூல் என்னும் பெயரேற்றுத் தோன்றி இப்புவனத்தில் வாழ்ந்தடங்கியிருக்கும் அந்த ஆன்மா அமைதி பெற இறைவனை வழுத்தியிறைஞ்சி அமைகிறேன்.


Wednesday, July 26, 2017

மூன்று கவிதைகள் (26.07.2017)

Image result for zen nature bamboo bridge
அவகாசம்

எஃகாலானதன்று இத்தேகம்
மூங்கிற்பாலம்

எனினும்,
அந்தியிருளுதற்குச் சற்று முன்வரை
அவகாசமுண்டு

கீழோடும் நீரோடை தனில் லயிக்க
ஓடைக்குள் நீந்துகின்ற மீன்கள் ரஸிக்க

Image result for small black bird 
தோற்றம் 5:30 – மறைவு 5:35

நூற்பிடித்த நேர்த்தியான கோடுகளின்
வரைவுகள் கொண்டொரு கச்சிதமான
கனச்சதுரமாய்
மனிதன் கட்டிய அந்தப் பெரிய வீட்டின்
மேல் முனை விளிம்பில் வந்தமர்ந்தது
அங்கை அளவே ஆன கரிய குருவி ஒன்று

வெண்ணிறச் சாயமடித்த அக்கட்டடத்தில்
அதன் உருத்தோற்றம்
ஏதுமே எழுதப்படாத தாளில்
எழுதுதற்கு ஒன்றுமே இலாது வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளி போல் இருந்தது

மேலும் கீழுமாய்த் தனது வாலாட்டிக்கொண்டு
இரண்டு மூன்று முறை கூவிற்று

கிளைகளும் கொப்புகளும்
இலைகளும் மொக்குகளும்
இல்லாத அக்கட்டடம் விட்டு
எவ்விப் பாய்ந்து போயொரு
மரச்செறிவினுள் மறைந்தது

Related image
ஓர் உதிர் மலர் போல்

அந்தி நெருங்கும் வேளையில்
எப்படித்தான்
என் வீட்டைத் தன் இலக்காக்கி
வந்து சேர்ந்ததோ
தன் வாழ்வின் இறுதிக் கணங்களில்
அந்த வண்ணத்துப் பூச்சி

காற்றின் போக்கில்தான்
வந்து விழுந்திருக்க வேண்டும்

இச்சைகள் சலித்த ஒருவன்
முதுமையில் துறவு கொண்டது போல்
பூக்களேதுமற்ற
புற்களும் கற்களுமேயான
எனது ஜென் தோட்டத்தில்
ஓர் உதிர் மலர் போல்
வீழ்ந்துவிட்டது அது

அடிபட்டிருக்கிறதோ?
என்றாள் அவள்

அதன் சிறகுகள் பிய்ந்திருக்கவில்லை
விரிந்தும் குவிந்தும்
மீண்டும் மீண்டும்
மெதுவாக அசைந்திருந்தன

மரணத்தைச் சுவைக்கும் அத்தருணத்திலும்
தேனுண்ட நினைவுகளில்
லயித்திருந்தது போலும்

அதன் உயிர் அல்லது ஆன்மா
வெளியேறியதை யாமொருவரும்
கண்டிருக்கவில்லை

அப்படியே கிடந்த அது
அப்படியே கிடந்தது

லாசருஸை உயிர்த்தெழச் செய்த
ஏசுநாதரைப் போலவோ
காற்றுக் கிழித்த பறவையை
மீண்டும் உயிர்ப்பித்த
முகைதீன் ஜீலானீயைப் போலவோ
ஆற்றல் பெற்றவன் அல்லன் நான்

என்னால் முடிந்ததெல்லாம்
செத்துக்கொண்டிருந்த அதனுடன்
சேர்ந்து கொஞ்சம்
நானும் செத்தது மட்டுமே.




Friday, July 14, 2017

சாளரப் பறவை
















என் பெற்றோர் வசிக்கும் என் சகோதரரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் மாடியில் உள்ளதோர் அறையில் தங்குவோம். அந்த அறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காரணம், அந்த அறையில் உள்ள பே விண்டோ என்னும் குடவுச் சாளரம். எனது வீட்டிலும் அதே போல் ஆறடி உயரமும் ஐந்தடி அகலமும் உள்ள  ஃப்ரெஞ்ச் ஜன்னல் தரைத்தளத்திலும் முதற் தளத்திலும் உண்டு என்றாலும் குடவுச் சாளரத்தின் துருத்திய பகுதிக்குத் தனி அழகு உள்ளது. உண்மையில் அந்த வகை ஜன்னல் என்னை ஈர்ப்பதற்குக் காரணமே அதன் வெளியே உள்ள மரக்கிளைகள்தான். வெளியே மரம் எதுவும் இல்லாது போனால அந்த ஜன்னல் இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும், எனக்கு.
      
கீழ்த்தளத்தில் அதே அமைப்பில் இருக்கின்ற அறையிலும் அதே அளவிலான குடவுச் சாளரம் இருக்கின்றது என்றபோதும் மாடியறை தரும் உணர்வைக் கீழ்த்தள அறை தராது. மாடியறை கூடுதலாக உயரம் என்னும் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. அதன் மாயத்தன்மைக்கு அதுதான் காரணம். உலகை உதறி உயர்ந்துவிட்டது போன்றதொரு உணர்வை அது மிக ஆழமாகக் கிளர்த்துகின்றது. இந்த உளவியற்கூறு எப்போதிருந்து வளர்ந்து வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால் அது என் பால்ய காலத்திற்கு இட்டுச் செல்கிறது.

      எனது பால பருவத்தில், எமது பூர்வீக வீட்டின் முற்றத்தில் இருந்த மகிழ மரமும் கொள்ளைப்புறத்தில் இருந்த கொய்யா மரமும் எம் விளையாட்டுக்களுடன் பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்துள்ளன. அவற்றுடன் நாவல், பவழமல்லி, சரக்கொன்றை, கொடுக்காப்புளி ஆகிய மரங்களும் இருந்தன. ஆனால் மகிழம் மற்றும் கொய்யா ஆகிய மரங்களின் கிளைகளில்தான் எங்கள் மனப்பறவைகளின் கற்பனைக் கூடுகள் இருந்தன. முடிந்தவரை அக்கொய்யா மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று நாங்கள் சகோதரர்கள் மூவரும் அமர்ந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் கதைத்துக்கொண்டிருப்போம். காற்றில் கிளைகள் அசைவது ஒருவித அச்சத்தை அடிவயிற்றில் கிளப்பினாலும் அந்த அச்சத்தின் மையத்தில் ஓர் ஆனந்த ஊற்று பொங்கி வருவதை உணரலாம். கொய்யா மரத்தில் இலைகளின் அடர்த்தி இருக்காது. அதை நாங்கள் நேசித்தது அதன் உயரத்திற்காகத்தான்.

Related image
Mimusops elengi - Magizhampoo

ஆனால் மகிழ மரத்தின் இலைகள் மிகச் செறிவானவை. மறைந்துறைவதற்காகவே அதை நாங்கள் தேர்ந்தோம். நாவற்கனியை ஒத்த பளபளக்கும் கருநிறம் கொண்ட கட்டெறும்புகள் அதன் கிளைகள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும். கடித்தால் தாங்க முடியாத வலியுடன் கடுத்து வீங்கச் செய்யும் சுளுக்கி எறும்புகளும் அவற்றுடன் வருவதுண்டு. அந்த அபாயங்களை எல்லாம் சவால்களாக ஏற்றுக் கிளையேறி பல மணிநேரங்கள் மறைந்திருப்போம். இப்போது அந்தக் கொய்யா மரம் இல்லை. முற்றத்து மகிழ மரம் தானேயொரு பெருங்காடு போல் விரிந்துயர்ந்து இன்றும் நிற்கிறது. வெய்யிற் காலங்களில், பிய்ந்திராத தண்ணிழல் சாய்க்கிறது. பெயல் கண்டால் சட்டென்று நட்சத்திரங்களாகப் பூக்களை மண்ணில் சொரிகிறது.

கொள்ளைப்புறத்தில் இருந்த ஏவலரில்லத்தை இடித்துவிட்டுத் தனி வீடாக எடுத்துக் கட்டியபோது, புத்தாயிரம் பிறந்த ஜனவரியில், எனது பாட்டியுடன் குடியேறியபோது மாடியில் இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டேன். ஒன்றில் எனது சிறிய நூலகத்தை வைத்துக்கொண்டேன். அது மேற்குப் பக்கம் சாளரமுள்ள அறை. நண்பகலுக்குப் பின் எதிர் வெய்யில் உக்கிரமாகத் தாக்கி அறையை ஓர் அடுப்பாக்கிச் சமைக்கும். அமர்ந்திருந்தால் உடலெல்லாம் சூடேறித் தகிக்கும். பக்கத்து அறை சயனத்திற்கு. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவனாக இருந்த அன்று தொட்டு பேராசிரியராகிப் பின்னர் திருமணமாகிச் சில மாதங்கள் வரை என நான்காண்டுகள் அவ்வறைகளில் தங்கியிருந்தேன். சயன அறையில் ஜன்னலுக்கு வெளியே நாவல் மரம் இருந்தது. சாம்பல் நிறக் கொப்புகளில் வடிவான பசிய இலைகள், குழவியின் விழிப்பாவை போன்ற கனிகளுடன் ஜன்னலின் கண்ணாடியில் துடைத்தசையும் காட்சியே அக்காலகட்டத்தில் என் வைகறை விழிப்பின் முதல் தரிசனமாக இருந்தது. உறக்கம் பிடிக்காத நிலாக்கால இரவுகளில்கூட வெகுநேரம் அந்தக் கிளைகளை ரசித்தபடி படுத்துக்கிடந்ததுண்டு. அந்த அறை அப்போது சட்டென வீட்டிலிருந்து பிரிந்து கொள்ளும். ஏதோ மரக்கிளைகளில் வைத்துக் கட்டப்பட்ட குடில் ஒன்றனுள் நான் வசித்துக்கொண்டிருப்பதான உணர்வைத் தரும். பால்ய பருவத்தில், கொய்யா மரத்தின் உச்சங்கிளைகளில் அமர்ந்திருந்தபோது இருந்த போதம் அத்தருணத்தில் மீண்டும் கூடிவிடும். உலகை உதறி உயர்ந்துவிட்டதான உணர்வு உள்ளத்தில் உவகையை ஊறச்செய்யும்.

மனிதன் பொறாமைப் படத்தக்க இன்னொரு ஜீவராசியின் வீடொன்று உண்டெனில் அது பறவையின் கூடாகத்தான் இருக்கும். மனித ஆன்மாவை ’தெய்வீக உலகின் பறவை’ என்கிறார் மகாகவி இக்பால். அதற்கு ஒளியினாலான சிறகுகள் உண்டு. எனவே, மண்ணில் ஊன்றி நிற்கும் வீடு என்பது அதற்குக் கூண்டாகவே இருக்க முடியும். ஆனால் மண்ணிலிருந்து மேலே உயரத்தில் தனித்து நிற்கும் பறவைக்கூடுதான் அதற்கேற்ற ஆத்மார்த்தமான வீடு. அது காற்றில் அசைகின்றது. பறவையின் கூடு போல் அசையும் வீடு வேறு எது இருக்கிறது?

Related image
Rennes de chateau - France.

மாடியறையின் ஜன்னல் மந்த வெய்யிலும் மழை மேகங்களும் கொண்ட மதிய வேளைகளில் எல்லாம் வேறொரு உணர்வின் தளத்தைத் திறந்து தரும். வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போலவும், ஊருக்கு வெளியே, மலை முகடு ஒன்றில் கட்டப்பட்ட, ஆயிரம் அடிகளுயர்ந்த சாரலில் துருத்திக்கொண்டு நிற்குமாறு கட்டப்பட்ட, அதன் அறையிலிருந்து ஜன்னல் வழியே கண்டால் வெகு கீழே தூரத்தில் நெளியும் ஆறும் அதன் மருங்குகளில் கிடக்கும் சிற்றூர்களும் காட்சியில் விரிகின்ற பழங்கோட்டை ஒன்றனுள் நாம் வசிப்பது போல் தோன்றச் செய்யும். பின்னால், டா வின்சி கோட் புதினத்தையும். மைக்கெல் பெஜண்ட் எழுதிய ‘ஹோலி ப்ளட் ஹோலி க்ரெய்ல்’ நூலையும் வாசித்தபோது அதில் சுட்டப்பட்ட, தென் ஃப்ரான்ஸில் உள்ள ரென்னெஸ் தெ சாத்யூ என்னும் கோட்டை எனது கற்பனையுடன் கச்சிதமாகப் பொருந்தி வரக்கண்டு பெரிதும் வியந்தேன்.

      ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களில் என் பெற்றோருடன் சென்று வசிப்போம். இவ்வாண்டும் அப்படியே ஆயிற்று. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வீட்டிற்கு அதிகாலையில் வந்துவிடும் ஒரு நண்பரை இம்முறையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதனாலேயே எனது காலை நடையைத் தவறவிட்டேன்.

      எப்போதும் காலை ஆறரை மணி வாக்கில் அவர் வந்துவிடுவார். ஜன்னல் கட்டையில் அவர் பண்ணும் டொக் டொக் சப்தம் இப்போது பழகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் அந்த சப்தத்தைத் தாள முடியாது எழுந்து போய் சட்டென்று திரையை விலக்கி ஜன்னல் கண்ணாடியில் ஓர் அடி வைத்து அவரின் அடிவயிற்றைக் கலக்கி அச்சமூட்டித் துரத்துவதுண்டு. பீதியுடன் அவர் சிறகடித்தபடி விரைந்து சென்று எதிர்வீட்டு மரத்தில் அமர்ந்து மூச்சு வாங்குவார். பின் அந்த நாளில் இப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார். ஆம், ’அவர்’ ஒரு மரங்கொத்திப் பறவை!

      ஆறரை மணி வாக்கில் இன்று அவர் வந்தார். ஜன்னல் சட்டத்தில் தனது திறமையைக் காட்டிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியம்தான், இதனால் இப்பறவைக்கு என்ன கிடைக்கிறது என்று எண்ணியபடியே மெதுவாகத் திரையை விலக்கி நோக்கினேன். உள்ளுக்குள் எனது அசைவு அதற்கொரு அபாய அலாரம் அடித்திருக்க வேண்டும். அடுத்த நொடியே ஓரடி தூரம் விலகி மரக்கிளையில் அமர்ந்தது. ஒரு மரங்கொத்தியை அன்றுதான் அவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றேன். பலமான மூச்சில் அதன் நெஞ்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அதன் கூர்மையான, இரும்பாலானது போன்ற அலகில் அது கொத்தியதால் உண்டான மரத்தூசு ஒட்டியிருந்தது. அகரம் ஒலிக்க எத்தனிப்பது போன்று அதன் அலகு சற்றே அங்காந்திருந்தது. அதன் கண்களில் மிரட்சி மின்னிற்று. அந்நிலையில் அதன் முகபாவனை ஓர் கிராமத்தானைப் போலிருந்தது. அதன் கால்களின் முன் விரல்கள் இரண்டிலும் கதிரரிவாள் போன்று நீண்ட கூர் நகங்கள் வளைந்திருந்தன. அதே போன்றே பின் விரல்கல் இரண்டிலும் இருக்குமென்று என்று எண்ணினேன்.

Related image

நான் பார்த்தது ஒரு பொன்முதுகு மரங்கொத்தி. ஆங்கிலத்தில் அதனை Black-rumped flameback அல்லது lesser golden-back என்று அழைக்கிறார்கள். Dinopium benghalense என்பது அதற்கு வைக்கப்பட்டுள்ள விலங்கியற் பெயர். இச்சொற்களை இட்டு இணையத்தில் தேடினால் அப்பறவையினத்தின் மிக அழகான நிழற்படங்கள் கிடைக்கின்றன. சதைப்பற்றுள்ள, நிறத்துலக்கம் கொண்ட, பொன்முதுகு என்னும் பெயருக்கேற்ப மெருகு கொண்ட, உச்சந்தலையில் செந்நிறத் தொப்பியொன்றை அணிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றமுள்ள கவர்ச்சியான பறவைகள். பறவையுலகிலும் மாடல் அழகிகள் உண்டு போலும். அவை அப்படி ’போஸிங்’ நல்கி நடிக்கும் போலும். ஆனால் நான் பார்த்த மரங்கொத்தி கோடையின் உக்கிரத்தில் காய்ந்து பொலிவிழந்து நாலைந்து நாட்கள் சோறு கிடைக்காமல் அலையும் ஒரு பரதேசியைப் போல் இருந்தது. பார்க்கவே மிகவும் பாவமாய் இருந்தது. அதன் தலையில் சிலுப்பியிருந்த சில மயிர்களின் செந்நிறம் ப்ளீச்சிங் செய்ததைப் போல் வெளிறிப்போயிருந்தது. பொன்முதுகு என்பது அதனைப் பகடி செய்யும் பெயரெனக் கொள்ளலாமா அல்லது அப்பறவைதான் அப்பெயருக்கு அமைந்த பகடியா என்று முடிவு செய்வது அத்தனை எளிதல்ல.

வெகு நேரம் அக்கிளையில் அமர்ந்து இளைப்பாறிய பின் விருட்டென்று பறந்து போயிற்று. அது ஏன் அப்படி தினம் தினம் காலையில் வந்து ஜன்னலின் சட்டகத்தைக் கொத்துகிறது என்று சிந்தித்தேன். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது உணவுக்காகவும் உறைவிடம் செய்யவும்தான். மரப்பட்டைகளின் அடியில் இருக்கும் புழுக்களும் பூச்சிகளும் அதற்கு உணவாகின்றன. மரத்தில் வட்டமாகத் துளை போட்டு அதைத் தனக்கொரு வீடாக்கிக்கொள்ளவும் செய்கிறது. எனவே மரத்தைக்  கொத்தினால் அதில் அர்த்தமுள்ளது. ஒரு கட்டடத்தின் ஜன்னல் சட்டத்தை அன்றாடம் பத்து நிமிடம் கொத்துவது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை.

வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத தலையமைப்பும், அத்தனை வேகமும், இரும்பு உளி போன்ற வலிமையான மூக்கும், நீண்ட நாக்கும், மூளையைச் சுற்றிலும் அதிர்வுகளை திசைதிருப்பும் தசையமைப்பும் என்று ஓர் அற்புதப் படைப்பாக விளங்கும் இந்தப் பறவைக்கு, எங்கே கொத்தினால் தனக்கு பயன் உண்டு, எங்கே கொத்தினால் தனக்குப் பயனில்லை என்பதை எடை போடும் அறிவு இல்லாமல் போய்விட்டதோ? அறிவில்லாத திறமை என்பது கால விரயத்திற்கே இட்டுச் செல்லும் என்பதைத்தான், தேவையற்ற வேலைகளில் உன் ஆற்றல்களை வீணடிக்காதே என்னும் செய்தியைத்தான் இந்த மரங்கொத்தியை வைத்து இறைவன் எனக்கு உணர்த்த விரும்புகின்றானோ? என்றெல்லாம் யோசித்தேன்.

நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் தடவை அது மரங்கொத்துமாம். அப்படியெனில் அது மரத்தைக் கொத்துவதற்கென்றே படைக்கப்பட்ட ஜீவன்தான். உணவுக்காகவும் பொந்திற்காகவுமே அது மரத்தைக் கொத்துகிறது என்பதெல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. மரங்கொத்துதல் அதன் உயிரியக்கம். அதைச் செய்யாமல் அதனால் இருக்க முடியாது. அந்த மரத்தில் அதற்கு உணவு கிடைக்கிறதா அல்லது அது வீடாகிறதா என்பதெல்லாம் பொருட்டல்ல. அவ்விரண்டும் கிடைக்காத மரத்தையும்கூட அப்பறவை கொத்தவே செய்யும். அப்படித்தான் ஜன்னலில் அது கொத்திற்று. கொத்துதலே அதன் வழிபாடு, இறைத்துதி, தியானம் எல்லாம். கொத்துதலே அதற்கு மூச்சைப் போல.

இப்படி யோசித்தபோது எனக்கு மலைப்பாக இருந்தது. அதன் தியானம் எனதினும் மிகப் பெரிது. நாளொன்றுக்கு மூவாயிரம் மூச்சுக்களையாவது தியானப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று நியதி சொல்வார்கள் மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்...). அந்நோக்கில், மரங்கொத்தி நாளொன்றுக்கு சராசரியாகப் பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் மூச்சுப் பயிற்சி செய்கிறது. நான் அவதானித்த மரங்கொத்தி ஒரு மாபெரும் சூஃபிதான் போலும். ஒழுங்காகப் பயிற்சி செய், தியானத்தில் ஆழ்ந்திரு என்று எனக்கு அதன் மொழியில் நாளும் சொன்ன நண்பன் போலும்.