Sunday, February 9, 2014

இந்தியாவின் கிளி


      சூஃபி உலகில், கி.பி.13-ஆம் நூற்றாண்டு என்றால் நினைவுக்கு வரும் பெயர் ’ரூமி’ என்பதாகத்தான் இருக்கும். இறைக்காதலின் நாவாக இருந்து அவர் தந்திருக்கும் மஸ்னவி என்னும் காவியம் ‘பாரசீக மொழியின் குர்ஆன்’ என்று போற்றப் படுகிறது. குர்ஆன் என்றால் ஓதப்படுவது என்று பொருள். அரபி மொழியில் உள்ள நூற்கள் அனைத்திலும் அதிகமாக ஓதப்படும் நூல் குர்ஆன் என்பது போல் பாரசீக மொழியில் உள்ள அனைத்து நூற்களிலும் அதிகமாக ஓதப்படும் நூல் மௌலானா ரூமியின் மஸ்னவி காவியம்தான்.

      ரூமியின் பூர்வீகம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள பல்ஃக் என்னும் பகுதி. செங்கிஸ் கானின் படையெடுப்பு நிகழ்ந்த அக்காலத்தில் ரூமியின் தந்தையான பஹாவுத்தீன் வலத் தனது பரிவாரங்களுடன் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறி இரான் இராக் அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின் துருக்கியில் உள்ள கோன்யா என்னும் ஊரில் குடியமர்ந்தார். ரூமியின் பரம்பரை இன்னமும் அங்கே இருக்கிறது.

      அதே காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இன்னொரு குடும்பம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் குடியமர்ந்தது. சைஃபுத்தீன் ஷம்ஸி என்பவர் அன்றைய நாளில் தில்லியில் ஆட்சி செய்திருந்த சுல்தான் இல்துமிஷ்-இன் காவல் துறையில் பணி பெற்றார். அரசனின் ராஜாளி, குதிரை ஆகியவற்றைப் பராமரிக்கும் பணியில் இருந்த இமாதுல் முல்க் என்பவரின் மகளை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு கி.பி.1253-ல் பிறந்தார் அபுல் ஹசன்.

      தில்லியை ஆட்சி புரிந்த ஐந்து அரசர்களின் அவையை அலங்கரித்த அவரின் புனைபெயர் இன்றும் ஈரமும் வாசமும் உலராமல் உச்சரிக்கப் படுகிறது: அமீர் ஃகுஸ்ரோ.

      அண்மையில் அடியேன் வாங்கிப் படித்த அழகான நூல் “IN THE BAZAAR OF LOVE The Selected Poetry of Amir Khusrau”. ப்ளூமிங்க்டன்னில் உள்ள இந்தியானா பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் பால் லோசன்ஸ்கி மற்றும் போஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் சுனில் ஷர்மா ஆகியோர் இணைந்து அமீர் ஃகுஸ்ரோவின் கவிதைகளை ஆங்கிலம் ஆக்கியுள்ளனர்.

      மௌலானா ரூமியுடன் அமீர் ஃகுஸ்ரோவை ஒப்பிட்டு அவர்கள் தரும் அவதானிப்புக்கள் சுவையானவை. ரூமி முழுமையாக ஆன்மிகத்தில் திளைத்த ஞானக் கவிஞர். ஃகுஸ்ரோ, அரசர்களின் அவைக் கவிஞராக இருந்து பெரிதும் அரச பாடல்களைப் பாடியவர். எனவே ரூமிக்கு ‘மௌலானா’ (எமது ஆசான்) என்னும் பட்டமும் ஃகுஸ்ரோவுக்கு ‘அமீர்’ (அதிகாரி/ இளவரசன்) என்னும் பட்டமும் சொல்லப் படுவது பொருத்தமானதே.

      ரூமியும் ஃகுஸ்ரோவும் தத்தமது ஆன்மிக குருநாதர்களின் மீது கொண்டிருந்த காதல் சூஃபித்துவத்தில் உதாரணங்களாகத் திகழ்கின்றன. குருவை எந்த அளவு நேசிக்க வேண்டும் என்பதற்குச் சீடர்கள் கற்க வேண்டிய பாடங்களாக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். ரூமியின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரஹ்); அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்).

      அமீர் ஃகுஸ்ரோ வாழ்ந்த காலத்தில் உருது மொழி உருவாகவில்லை. அவரின் கவிதைகள் பெரும்பான்மையும் ஃபார்ஸி மொழியில் அமைந்திருக்கின்றன. எனினும் தில்லியின் வட்டார மொழியாக இருந்த ஹிந்த்வி மொழியில் நாட்டுப்புற பாணியில் அவர் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். வசந்த விழா, ஹோலி பண்டிகை ஆகியவற்றில் பெண்கள் பாடுவது போல் அவை அமைந்திருக்கின்றன. மேலும், அவர் இயற்றிய விடுகதைகளும் சிலேடைக் கவிதைகளும் மக்களிடம் பெரிதும் பரவி வழங்கின. ’தோத்தாயெ ஹிந்த்’ (இந்தியாவின் கிளி) என்று அவர் செல்லமாக அழைக்கப் பட்டார்.

      பாரசீகமும் ஹிந்த்வியும் கலந்து உருது மொழி உருவாகிட முன்னோடியாக அமீர் ஃகுஸ்ரோ இருந்தார் என்பது மட்டுமல்ல அவரின் பணி. இவ்விரு மொழிகளின் பின்னணியாக இருந்த பண்பாடுகளின் இணைவிற்கும் அவர் முன்னோடியாக இருந்தார். அவரின் தந்தை ஆஃப்கானியராகவும் தாய் இந்தியராகவும் இருந்ததால் அவரின் ரத்தத்திலேயே இந்த உணர்வு இருந்ததில் வியப்பில்லை.

      சூஃபிகளின் ஆன்மிக இசை வடிவமாக இன்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் கவ்வாலி என்னும் வகையை உருவாக்கியவர் அமீர் ஃகுஸ்ரோதான். ஃபாரசீக கஜல் மரபு மற்றும் இந்திய பஜன் மரபு ஆகியவற்றின் கலவைதான் கவ்வாலி. மேலும், சிதார் மற்றும் தப்லா ஆகிய இசைக் கருவிகளை உருவாக்கியவர் என்றும் அவர் சுட்டப்படுகிறார்.

      இந்தியச் சூழலில் சூஃபிகளுக்கான கவிதை மற்றும் இசையை வடிவமைத்ததில் அவர் உருவாக்கிய பண்பாட்டுத் தாக்கம் இன்றளவும் கஷ்மீர் முதல் ஹைதராபாத் வரை வாழும் முஸ்லிம் சமூகத்தில் உயிரோட்டமாக உள்ளது. (கேரளம் மற்றும் தமிழகத்தில் இப்பண்பாட்டுத் தாக்கம் அழுத்தமாக இல்லை.)

      உலகெங்கிலும் பரவியிருக்கின்ற பல்வேறு சூஃபிப் பள்ளிகளில் (தரீக்கா) இசையைத் தங்களின் தியான முறைக்குள் வரித்துக் கொண்டிருக்கும் முதன்மையான சூஃபிப்ப் பள்ளிகள் இரண்டுதான்: மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் அமைத்த மௌலவிய்யா தரீக்கா மற்றும் ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களிலிருந்து தொடரும் ச்சிஷ்திய்யா தரீக்கா.

      ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) à குத்புத்தீன் பஃக்தியார் ஃகாக்கீ (ரஹ்) à பாபா ஃபரீதுத்தீன் கன்ஜெ ஷக்கர் (ரஹ்) à நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) என்று தொடர்ந்த சூஃபி குருவழியில் நிஜாமுத்தீன் அவ்லியாவின் சீடராக விளங்கியவர் அமீர் ஃகுஸ்ரோ. (பாபா ஃபரீதுத்தீன் (ரஹ்) அவர்களின் தாய்மொழி பஞ்சாபி ஆகும். அன்னார் இயற்றிய ஆன்மிகப் பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ’குரு கிரந்த் சாஹிப்’-ல் சேர்க்கப்பட்டுள்ளன. மட்டுமன்று, ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் பியாபானி பூர்வீகத்தில் அஜைபால் என்னும் பெயரில் மாந்திரீகவாதியாக இருந்தவர். எனவே இன்றளவும் அஜ்மீர் தர்காவிற்கு சீக்கியர்களும் இந்து சாதுக்களும் அருள் நாடி வந்து செல்வதைக் காண்கிறோம்.) 

Hazrath Syed Noori Shah (rah) at Ajmer Sharif

      மௌலானா ரூமி அமைத்த மவ்லவிய்யா தரீக்கா கிளைகள் இன்றி அப்படியே தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பரவிய சிஷ்திய்யா தரீக்கா அதன் கொடிவழியில் பல்வேறு மகான்களின் பெயர்களால் கிளைகளுடன் பரவியிருக்கிறது. அக்கிளைகள் நிஜாமுத்தீன் அவ்லியாவிலிருந்து கிளைத்துள்ளன. அன்னாரின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஃக்வாஜா சாபிர் கில்யாரீ (ரஹ்) அவர்களின் வழி வடமேற்கு நோக்கியும், ஃக்வாஜா கேஸு தராஸ் (ரஹ்) அவர்களின் வழி தெற்கு நோக்கியும் பரவிற்று. அவ்வழியில் ஹைதராபாதில் வாழ்ந்த சூஃபி மகான் நூரீ ஷாஹ் (ரஹ்) அவர்களிலிருந்து வரும் கிளைகள் தமிழகத்திலும் கேரளத்திலும் பரவியுள்ளன. என் குருநாதரை இவ்வழியில் அடியேன் அடைந்து கொண்டேன்.

      அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) வரையிலான நான்கு குருமகான்கள் பற்றிய பாடல் வரிகள், உத்தமப்பாளையம் அன்வாருல்லாஹ் ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் இயற்றிய ’கொடிவழிக் கும்மி’ என்னும் நூலிலிருந்து:

      ”தீனுக் குறுதுணை ஆனவராம் – அருட்
            செம்மலாம் காஜா முயினுத்தீனாம்
      ஞானக் குருபரன் தம்பொருட்டால் எங்கள்
            நாடு செழிக்கச் செய் நாயகனே!

      காஜாவாம் குத்புத்தீன் காக்கிவலீ – மிகக்
            கண்ணியம் வாய்ந்த பரீதுவலீ
      தேசுறு நாதாக்கள் தம்பொருட்டால் – நாங்கள்
            தீனை வளர்க்கத் திறனருளாய்!

      நானிலம் போற்றிடும் நிஜாமுத்தீன் அவ்லியா
            நல்லடி யாரவர் தம்பொருட்டால்
      மானில வாழ்க்கையும் மறுவுலகப் பேறும்
            மகிழ்ந்தளித் தாட்கொள்வா யெங்களையே!”


     நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் அடங்கியிருக்கும் தர்கா தில்லியில் இருக்கிறது. அதன் வளாகத்திலேயே அமீர் ஃகுஸ்ரோவின் தர்காவும் இருக்கிறது. அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதர் மீது பாடிய பாடல்கள் அங்கே இன்றளவும் கவ்வாலி இசையுருவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கவ்வாலி இசைக் கலைஞர்களில் அன்னாரின் பாடல்களைப் பாடாத ஒருவரையும் காட்ட இயலாது. அல்லாஹ் பக்‌ஷ், முபாரக் அலீ கான், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான், முன்ஷி ரஜியுத்தீன், ஃபரீத் அயாஜ், சாப்ரி பிரதர்ஸ், வார்ஸி பிரதர்ஸ், ஆபிதா பர்வீன், ஜாஃபர் பதாயூனி என்று தொடரும் கவ்வாலிப் பாடகர்கள் அனைவருமே அமீர் ஃகுஸ்ரோவின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார்கள். (நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்கள் முந்நூறு வருடங்களாகக் கவ்வாலி பாடி வரும் பரம்பரையில் பிறந்தவர். சூஃபி இசையின் சிகரம் என்று உலகம் போற்றும் அத்தகைய ஆளுமை பரிணமித்து வர அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!)

      தன் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அமீர் ஃகுஸ்ரோ கொண்டிருந்த ஆழிய அன்பை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

      குருவின் மீது சீடன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பது அவ்வப்போது சோதிக்கப் படலாம். அமீர் ஃகுஸ்ரோவும் அப்படிச் சோதிக்கப் பட்டிருக்கிறார்.

      ஒரு நாள், தன் சீடர்களுடன் தில்லியின் கடைவீதிகளில் பகலெல்லாம் நடந்திருந்த நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள், பொழுது சாய்ந்து இருள் கவிந்த பின், விலைமகள் ஒருத்தியின் வீட்டின் முன் சென்று நின்றார்கள். அந்த விலைமகள் மிகுந்த கண்ணியத்துடன் மகான் அவர்களைத் தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். சீடர்கள் அனைவரும் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்கள். குரு தாமதிக்காமல் உடனே வெளியே வந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. மகான் இன்னும் வரவில்லை.

      அந்த விலைமாது மிகவும் வியந்து போயிருந்தாள். தன் விதியில் இப்படி ஒரு நல்லருள் எழுதப்பட்டுள்ளதா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இத்தகைய புனிதமான மகான் பெரும்பாவியான தன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை அவளால் எப்படி நம்ப இயலும்? ”தங்களின் வருகையால் நான் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய முடியும்?” என்று அவள் கேட்டாள். “ஒரு தட்டில் உணவும், மதுக்குப்பியில் தண்ணீரும் கொண்டு வரும்படி உன் பணிப்பெண்ணிடம் கூறு. என் சீடர்கள் அதைக் கண்டு நான் உணவும் மதுவும் கொண்டுவரச் சொன்னதாக நினைத்துக் கொள்ளும்படி அவள் கொண்டுவர வேண்டும்” என்று மகான் சொன்னார்கள். அப்படியே நடந்தது.

      சீடர்களில் சிலரின் சிந்தனையில் ஊசாட்டம் வந்துவிட்டது. ”நாம் வசியத்தில் மாட்டிக் கொண்டிருந்தோம். குரு நாம் நினைத்தது போல் புனிதமானவர் அல்ல. இதோ அவர் மது அருந்துகிறார். விலைமாதுடன் இருக்கிறார்! எத்தனை மோசமான பேர்வழி!” என்று பலவாறு எண்ணியபடி அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டார்கள்.

இரவு செல்லச் செல்ல, மேலும் பல சீடர்கள் விலகிச் சென்று கொண்டே இருந்தனர். இறுதியில் அங்கே அமீர் ஃகுஸ்ரோ மட்டும் நின்றார். விடிந்தது. மகான் அவ்வீட்டில் இருந்து வெளியே வந்தார்கள். ”எல்லோரும் எங்கே?” என்று கேட்டார்கள். “அவர்கள் போய்விட்டார்கள் குருவே” என்றார் அமீர்.

      ”நான் மது வரவழைத்ததையும் தாசியுடன் இரவைக் கழித்ததையும் நீ பார்க்கவில்லையா? நீ மட்டும் ஏன் நிற்கிறாய்? நீயும் போக வேண்டியதுதானே?” என்று மகான் கேட்டார்கள்.

      ”குருவே! நானும் போகலாம்தான். ஆனால் தங்களின் திருவடிகள் அன்றி எனக்குப் போக்கிடம் வேறு எங்கே இருக்கிறது?” என்றார் அமீர் ஃகுஸ்ரோ.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் இதயத்தில் அருள் சுரந்து அவர்களின் கனிவான முகத்தில் பேரொளி பொங்கி இலங்கியது. ”உன் காத்திருப்பு முடிந்தது. நீ முழுமை அடைந்துவிட்டாய்” என்று அமீர் ஃகுஸ்ரோவை அவர்கள் திருவாய் மலர்ந்து ஆசீர்வதித்தார்கள்.

      இன்னொரு நிகழ்ச்சி.
      அமீர் ஃகுஸ்ரோ அரசனுடன் வெளியூருக்குச் சென்றிருந்த சமயம். ஏழ்மையால் மிகவும் அவதிப்பட்ட ஒருவர் நிஜாமுத்தீன் அவ்லியாவிடம் பொருளுதவி கேட்க வந்தார். மகான் மஸ்ஜிதில் தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். அந்த நபர் மெல்ல அவர்களை அணுகித் தனது தேவையைச் சொன்னார். “வெளியே என் செருப்புகள் கிடக்கின்றன. அதை எடுத்துச் செல்” என்னும் உத்தரவு மகானின் உதடுகளில் பிறந்தது. அந்த நபர் செய்வதறியாது விழித்தார். செருப்புக்களை எடுத்துச் சென்று என்ன செய்வது? அவருக்குத் தேவைப்பட்டது நாற்பதாயிரம் பொற்காசுகள்! செருப்பு நாலு காசுகளுக்கு மேல் வராதே? எனினும், மகானின் உத்தரவைத் தட்டவும் அவருக்குப் பயமாக இருந்தது. தேய்ந்து போன செருப்புக்களைக் கையில் சுமந்து செல்லவும் வெட்கப்பட்டார். எனவே, மகானின் காலணிகளை ஒரு துணியால் சுற்றித் தன் கைகளில் எடுத்துச் சென்றார்.

தில்லிக்கு வெளியே அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். எதிர் திசையிலிருந்து அமீர் ஃகுஸ்ரோ ஒரு குதிரையின் மீது இவர்ந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நபரின் அருகில் வந்ததும் குதிரையிலிருந்து சட்டென்று குதித்து இறங்கினார் அமீர். “உங்களிடம் ஏதோவொரு பொக்கிஷம் இருக்கிறது. அதை உடனே எனக்கு விற்றுவிடுங்கள்” என்று அந்த நபரிடம் சொன்னார். “என்னிடம் எந்தப் பொக்கிஷமும் இல்லையே. நான் பரம ஏழை ஐயா” என்று அவர் சொன்னார். “இல்லை, உம்மிடம் என் குருநாதரின் நறுமணம் வருகிறது! ஏதோ ஒரு பொருள் உங்களிடம் இருக்கிறது. மறைக்காமல் சொல்லுங்கள்” என்று அவரிடம் அதட்டலாகச் சொன்னார் அமீர். அந்த நபர் தன் கையிலிருந்த துணிப்பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினார். தன் குருநாதரின் காலணிகளைக் கண்களில் ஒற்றியபடி எடுத்துக் கொண்டார்கள் அமீர் ஃகுஸ்ரோ. அதற்கு விலையாக அந்த நபரின் கையில் ஒரு பணமுடிப்பை வைத்தார்கள். நாற்பதாயிரம் பொற்காசுகள்!

தில்லி திரும்பிய அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதரை எதிர்பார்த்து மஸ்ஜிதின் வாசலில் நின்றார்கள். நிஜாமுத்தீன் அவ்லியா வெளியே வந்தபோது அவர்களின் காலணியைப் பணிவுடன் முன் வைத்தார்கள். “இதை எவ்வளவு கொடுத்து வாங்கினாய்?” என்றார்கள் மகான். “நாற்பதாயிரம் பொற்காசுகள்” என்றார் அமீர். புன்முறுவல் பூத்தபடி மகான் சொன்னார்கள், “மிகவும் மலிவாக வாங்கிவிட்டாய், அமீர்!”

இன்னொரு நிகழ்ச்சி.
ஒருமுறை நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் குதிரை மீது இவர்ந்து தில்லியின் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி அங்கே வந்த அமீர் ஃகுஸ்ரோவின் உள்ளத்தில் பரசவத்தை மூட்டியது. ஓடோடிச் சென்று தன் குருநாதரின் கையில் முத்தமிட்டார். ”இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்றார்கள் மகான். உடனே மகானின் பாதத்தில் முத்தமிட்டார். “இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்று மீண்டும் மகான் சொனார்கள். சட்டென்று கீழே விழுந்த அமீர் ஃகுஸ்ரோ குதிரையின் குளம்பில் முத்தமிட்டார். “உன் காதல் ஏற்கப்பட்டது” என்று மகான் அருளினார்கள்.

புறத்திலிருந்து பார்ப்போருக்கு இந்நிகழ்ச்சிகள் எல்லாம் கடைவீதியில் நடந்தவை. அகத்தில் இருந்து காண்போருக்குத் தெரியும், இவை எல்லாம் காதலின் வீதியில் நடந்தவை. இனி, அமீர் ஃகுஸ்ரோவின் கவிதை வீதியில் உலா வருவோம்.


(to be continued)      

Thursday, January 2, 2014

தேவநேயத் தேடல் -part2


’காலம்’ என்னும் பொருண்மை அறிவியல் மற்றும் ஆன்மிகம் ஆகிய இரு துறைகளிலும் பெரிதும் பேசப்படும் ஒன்று. ஹாரூன் யஹ்யா எழுதிய “The Eternity Has Already Begun” என்னும் நூல் திருக்குர்ஆன் வசனங்களை வைத்துக் கொண்டு அறிவியல் நோக்கில் காலம் பற்றி ஆயும் அருமையான நூல். காலம் தொடங்கிய காலம் தொட்டே காலம் பற்றியும் காலாதீதம் பற்றியும் இரண்டிற்கும் உள்ள உறவு குறித்தும் மனித மனம் சிந்தித்து வருகிறது. முப்பரிமான உலகிற்கு அடுத்தமையும் நான்காம் பரிமாணம்தான் காலம் என்றார் ஐன்ஸ்டீன். காலம் என்பது இடத்தின் நீட்சியே என்பது அவரின் தத்துவச் சாரம். இக்கருத்தினைத் தொட்டுக் காலம் பற்றிப் பாவாணர் எழுதியுள்ள ஒரு சிறு பத்தி அவரின் சிந்தனைச் செழுமைக்குக் கட்டியம் உரைக்கிறது:

“இடம் உண்மையின் (இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்ப வெப்ப நிலை வேறுபாடும் பற்றியே சிறு பொழுதும் பெரும் பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர்வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகி விடும்.” (பக்கம்:103)

இடத்தின் வேறுபாடுகளைக் கொண்டே காலத்தையும் பகுத்து வேறுபடுத்தி உணர்ந்து கொள்கிறோம் என்னும் உண்மை இவ்வரிகளில் எவ்வளவு அழகாக வெளிப்பட்டுள்ளது!

ஊழி முடிவை, உலக முடிவை ‘கியாமத்’ என்னும் சொல்லால் குறிக்கிறது இஸ்லாம். அச்சொல்லுக்கு ‘நிற்றல்’ என்பது பொருள். எது நிற்றல்? எனின் காலம் நின்று போவது என்பது விளக்கம். மறுமையில் காலப் பரிமாணம் இல்லை. ஆஃது காலாதீதமாய் இருக்கும். எனில், தோன்றிய ஒன்றும் மறைந்திராது. எனவே, இடப் பரிமாணத்திற்கு மாறுதல்கள் இல்லை. ஆகையால் கால வேறுபாடுகளும் இல்லை. ‘சொர்க்கத்தின் பொழுது மாறாத வைகறை’ என்னும் நபிமொழிக் கருத்தினை ஓர்க.


தேவநேயப் பாவாணரின் மையப் பணி தமிழ் மொழியின் தூய்மையை நிலை நிறுத்துவதுதான். மொழியியலின் அந்த அளவுக்கு ஆழமும் விரிவும் கொண்ட ஆய்வுகள் செய்தோர் உலகத்திலேயே சிலர்தான் என்று சொல்லலாம். தமிழில் வேரூன்றியிருக்கும் ஆரிய மொழித் தாக்கத்தைக் கெல்லி எறிய வேண்டும் என்பது அவரின் ஆறா விழைவாக இருந்தது. அந்தத் தேடலில் அவரின் உள்ளம் கண்டடைந்த உண்மைகள் பல. மொழித் தேடலாகத் தொடங்கிய அப்பயணம் தமிழரின் சமயக் கொள்கை என்ன என்பதையும் கண்டறிந்தது. அதனை உலகிற்கு எடுத்துரைக்கும் நூல்தான் அவரெழுதிய “தமிழர் மதம்” என்னும் இந்நூல். ஆன்மிக ஆர்வம் கொண்ட எவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.

தமிழரின் மதக் கொள்கை ஆரியக் கலப்பால் அழுக்கானது என்பது தேவநேயரின் ஆய்வு முடிவு. அந்த அழுக்கினைச் சலவை செய்து தமிழர்க்கு அவர்தம் தொன்மை மதக் கொள்கையை எடுத்துச்சொல்ல பாவாணர் இந்நூலில் முனைகிறார்.

பொதுவாக, உலகச் சமயங்களை அலசுவோர் செமிட்டிக் மதங்கள் என்று யூத மதத்தையும், கிறித்துவத்தையும் இஸ்லாமையும் குறிப்பிடுவது வழக்கம். ஒரே வேறிலிருந்து தோன்றிய மூன்று கிளைகள் என்று இந்த மூன்று சமயங்க்ளையும் பற்றி ஓஷோ ஓரிடத்தில் பேசியிருக்கிறார். இவை மூன்றினையும் “MONOTHEISTIC RELIGIONS” ஏகதெய்வக் கொள்கையுள்ள மதங்கள் என்று சொல்வதுண்டு.

இஸ்லாமின் நம்பிக்கைப்படி ஏகதெய்வ வணக்கம் என்பது அறபகத்தில் நபிகள் நாயகத்தால் புதிதாக போதிக்கப்பட்ட கொள்கை அல்ல. அல்லது நபிகள் நாயகத்துக்கும் ஏசுநாதருக்கும் பொதுவான வமிச முன்னோடியான இப்றாஹீம் (லத்தீனாக்கம்: ஆபிரஹாம்) என்னும் இறைத்தூதரால் முதன் முதலில் போதிக்கப்பட்டது என்பதும் அல்ல. முதல் மனிதரான ஆதம் தொட்டு உலகிற் போந்த அனைத்து இறைத்தூதர்களும் போதித்த தூய இறைக் கொள்கை ஏகதெய்வ வணக்கமே என்று இஸ்லாம் நம்புகிறது. ஆதம் என்னும் அந்த முதல் மனிதர் இந்தியாவில் இருந்த ’பூத்’ அல்லது ’நூத்’ என்னும் மலைமீது இறக்கப்பட்டார் என்றும் இன்றைய இலங்கையில் உள்ள ஒரு மலை மீது இறக்கப்பட்டார் என்றும் நபிமொழிகளில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. (அறபு மொழியில்: சிரந்தீப். தலைத்தீவு என்னும் பொருள்பட சிரந்தீவு என்பது அறபியில் சிரந்தீப் என்று மருவியதாக இருக்கலாம். இது இலங்கைக்கு நபிகள் நாயகம் காலத்துப் பெயர். ஆதம் இறக்கப்பட்ட போது அவ்விடம் தீவாக அன்றிக் குமரிக் கண்டமாக இருந்திருக்க வேண்டும். எனவே இலங்கை எனினும் இந்தியா எனினும் முற்காலத்தில் அவை பிரியாது ஒரே நிலப்பரப்பாக இருந்ததைக் கருத்தில் கொள்ள நபிமொழிகளில் உள்ள அறிவிப்புக்கள் முரணானவை அல்ல என்பது விளங்கும். இலங்கையும் இந்தியாவும் முற்காலத்தில் பிரியாது இருந்ததை நபிமொழிகள் உணர்த்துகின்றன). இதனை ஓர்ந்துகொண்டு தேவநேயப் பாவாணர் தனது நூலில் எழுதியிருப்பதைப் படியுங்கள்:

“இசுமவேல இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெரு வெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில் முதன் முதலாகக் கண்டவர் குமரி நாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டிருப்பதே, அதற்குச் சான்றாகும்.

“காமப் பகுதி கடவுளும் வரையார்” (தொல்.புறத்.உஅ)
“கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (மேற்படி.மேற்படி.ங.ங).

கடவுள் என்னுஞ் சொல், எல்லா வற்றையுங் கடந்து எண்ணிற்கும் எட்டாத பரம் பொருளையே குறிக்கும். சிறு தெய்வ வணக்க ஆரியர் (பிராமணர்), பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டு விட்டனர்
.
கடவுட்கு உருவமின்மையால், உருவ வணக்கமுமில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம்.” (பக்கம்:54)

கடவுள் மற்றும் இறைவன் என்னும் சொற்களை எப்பொருளில் பாவாணர் வழங்குகிறார் என்பதை அறிந்து கொள்வது இங்கே அவசியம். தமிழ் மொழியின்படி இச்சொற்களுக்கான சரியான அர்த்தத்தை அவர் தருகிறார் என்பதால் இந்த அர்த்தங்களிலேயே நாமும் பயன்படுத்துவதுதான் அறிவுடைமையும் நேர்மையும் ஆகும்.

கடவுள் என்பது கடந்து உள்ளது என்று அர்த்தப்படும் சொல். காலம் இடம் பொருட்கள் ஆகிய படைப்புக்கள் அனைத்துக்கும் அப்பால் இருக்கும் நிலையைக் குறிப்பது. சூஃபிகள் இந்நிலையை ’தன்ஸீஹ்’ என்று கூறுவர்.

இறைவன் என்பது எங்கும் நிறைந்திருப்பது என்று அர்த்தப்படும் சொல். படைப்புக்கள் அனைத்திலும் அவன் ஏகனாய் இருக்கும் நிலையைக் குறிப்பது. சூஃபிகள் இந்நிலையை ’தஷ்பீஹ்’ என்று கூறுவர்.

இவ்விரு நிலைகளும் ஏகத்துவத்தின் பாற்பட்டதாகும்.

ஆக, ”ஏக இறைவனின் திருப்பெயரால்” என்று சொல்லும் போது படைப்புக்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து எங்கும் இருக்கின்ற ஏகனின் பெயரால் என்று அர்த்தப்படுகிறது. இது சரியான கொள்கைதான். இறைவனின் உள்ளமையை ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ள ’அர்ஷ்’ என்னுமொரு படைப்பில் மட்டுப்படுத்தி அவன் வேறு எங்கும் இருப்பவன் அல்லன் என்று பகரும் இணைவைப்புக் கொள்கைக்கு மாற்றமாக இந்த வாசகம் அமைந்திருக்கிறது.

மதங்கள் மூவகைப்படும் என்று பாவாணர் சொல்கிறார். மூன்று வகைக்கும் வெவ்வேறு சொற்களை அவர் கையாள்வதைக் கவனிக்கவும்:

“மக்களின் அறிவு நிலைக்கேற்ப, மதம், (க) சிறுதெய்வ வணக்கம், (உ) பெருந்தேவ மதம், (ங) கடவுள் சமயம் என மூவகைப்படும்.” (பக்கம்:10)

இம்மூன்றையும் பாவாணர் வேறுபடுத்திக் காட்டுகிறார். ஐம்பூதங்களையும் அதன் கலவைகளாக உள்ளவைகளையும், அதாவது படைப்புக்களை, அவற்றுக்கு வேள்வி காவு முதலியன கொண்டு வழிபடுவது சிறுதெய்வ வணக்கம்.

இறைவனை (எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளை) உருவகப்படுத்திக் கொண்டு, அடையாளங்கள் இட்டு வழிபடுவது பெருந்தேவ மதம். இதில் சைவத்தையும் வைணவத்தையும் சேர்க்கிறார். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் ஐந்து சிறுதெய்வ வணக்க முறை இருந்தது. அவற்றில் இவ்விரண்டு மட்டும் பெருந்தேவ வணக்கமாக வளர்ந்தது என்பது அவரின் கருத்து:

“ஐந்திணை தெய்வ வணக்கங்களுள், இரண்டே மதமாக வளர்ச்சி யடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவ மதமும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன்றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின் பின் எங்கும் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும் நீரின் கூறாக மால் (மாயோன்) என்றும், பெயரிட்டு இறைவனை வழிபட்டனர்” (’பெருந்தேவ மதம்’ என்னும் தலைப்பின்கீழ் இவ்வாறு எழுதியுள்ளார். பக்கம்:37)

கடவுட் சமயம் என்பது என்ன என்பதற்குப் பாவாணர் தரும் விளக்கம்:
“எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமும் தூய்மையாக்கி, இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர்கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற ஒழுகுவது, கடவுள் சமயமாம்” (’மூவகை மதம்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது.பக்கம்:10,11).

“ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறை யின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறா திருக்கும் பரம் பொருளை உள்ளத்தில் அகக் கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம்.” (’கடவுட் சமயம்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது பக்கம்:53).


’சிதம்பர ரகசியம்’ என்று ஒன்றுண்டு. சிதம்பரம் நடராசர் கோவிலில் சிலை இன்றி பீடம் மட்டும் உள்ள இடம் ஒன்று இருக்கிறதாம். இறைவனுக்கு உருவம் இல்லை என்னும் பேருண்மையை அது உணர்த்தி நிற்கிறது என்றும் அதுவே சிதம்பர ரகசியம் என்றும் சொல்கிறார்கள். சிற்பக் கலை பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இதனைக் கூறியுள்ளார். “கலைகள் எல்லாம் இல்லாமையில் தோன்றும். ஆனால் இருப்பதிலேயே தோன்றுவது சிற்பக் கலை. ஏனைய கலைகள் வேண்டுவன வற்றைச் சேர்த்துக் கொண்டே போய் முழுமை பெறூம். வேண்டாதவற்றை நீக்கிக் கொண்டே போய் முடிவது சிற்பக் கலை. சிதம்பரத்தில் சிற்பமே இல்லாத பீடமொன்றுண்டு. வேண்டாதவற்றைச் செதுக்கிக் கொண்டே போய் எல்லாவற்றையும் செதுக்கி எறிந்த ஒருவன் கண்டடைந்த ரகசியம் அது. அதுவே சிதம்பர ரகசியம்.” இக்கருத்துக்கள் தொனிக்க அப்துல் ரகுமான் அந்தக் கட்டுரையை அவரின் பாணியில் வெகு செப்பமாக எழுதியிருப்பார். தேவநேயப் பாவாணர் அந்தச் சிதம்பர ரகசியம் பற்றிப் பேசுகிறார்:

“கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக் கண் வளர்ச்சி யடையாத பொது மக்கட்குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப் பரவெளி யம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல மருமம் (சிதம்பர ரகஸியம்) என வழங்குவது” (பக்கம்:42)

இறைவனின் சுயத்தைக் குறிக்கும் சூஃபிக் கலைச்சொல் “ஜாத்” என்பதாகும். இறைவனின் பண்புகளைக் குறிக்கும் சூஃபிக் கலைச்சொல் “சிஃபாத்” என்பது. இறைவனின் சுயத்தில் சார்ந்து நிற்பதே அவனின் பண்புகள். பண்புகள் சுயத்தை விட்டும் தனித்து நில்லா. சுயம் பண்பு ஆகிய இரண்டுமே அநாதிகள்தாம். எனினும், மனிதனின் அனுபவத்திற்கு அவை தம்மைக் காட்டிக்கொள்ளும் வகக்யில் சுயம் மீளப்படும் இடமாகும்; பண்புகள் சுயத்தின் பக்கம் மீள்வன. சுயம் தொடரப்படுவது; பண்புகள் சுயத்தைத் தொடர்வன. ஒருவகையில் சுயம் மூலம் போன்றும் பண்புகள் அதன் வருவிப்புக்கள் (derivatives) போன்றும் செயல்படுகின்றன.

ஆணிலிருந்து பெண் (ஆதாமிலிருந்து ஹவ்வா) வெளிப்பட்டதைக் கவனித்து, பெண் என்பவள் ஆணைச் சார்ந்தவள். பெண் மீள்பவளாகவும் ஆண் மீளும் தளமாகவும் இருக்கிறான். இத்தத்துவத்தின் அடியாக இறைவனின் சுயத்தையும் பண்புகளையும் உருவகித்த சைவ அறிவர்கள்தாம் அம்மை அப்பன் என்று அதனை வரைந்து வைத்தார்கள். இதனைப் பின்வருமாறு பாவாணர் சொல்கிறார்:

“அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காண முடியாத இல்லற வாணரான பொது மக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்த சித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர்.” (பக்கம்:41)

இத்தகைய உருவகிப்புக்களாலேயே சிவனியமும் மாலியமும் (சைவம், வைணவம் ஆகியவற்றைப் பாவாணர் இன்னனம் குறிப்பிடுகிறார்) சிறுதெய்வ மதத்திற்கும் கடவுட் சமயத்திற்கும் இடைப்பட்ட பெருந்தேவ மதங்களாக இருக்கின்றன என்பது பாவாணரின் கருத்து.

சிறுதெய்வ வழிபாட்டு நிலை நோக்கித் தமிழரின் தொல் மதத்தை இழித்தது ஆரியக் கலப்பே என்பதை தனது நூல் நெடுகிலும் பாவாணர் பரக்கக் கூறிச் செல்கிறார். அப்பகுதிகள் தோறும் அவரது அறச் சீற்றத்தின் அனல் அடிக்கிறது.

”ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு.கரு00. அவர் மதம் கொலை வேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுக்களையும் நம்பி, அவையே சிவ நெறிக்கும் திருமால்நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும் (சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ்விருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணையும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந்நூல் நெடுகலும் கண்டு தெளிக.” (பக்கம்:11)

“இயற்கைத் தோற்றங்க ளெல்லாம் தெய்வங்க ளாக்கப் பட்டுள்ளன” (’வேத கால ஆரியத் தெய்வ நிலைகள்’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:67)

“முருகன் சிவன் காளி திருமால் என்னும் தமிழ்ச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பும் இல்லை” (பக்கம்:67)

“வேத ஆரியர் தெய்வ வழிபா டெல்லாம், கொலை வேள்விப் பல் சிறு தெய்வ வணக்கமே” (’ஆரியர் தெய்வ வணக்க நிலை’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:68).

”கோவில் வழிபாடு, பெருந் தேவ மதம், கடவுட் சமயம், நாற் பொருள், வீடுபேறு என்பன பற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை” (பக்கம்: 68).

”ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்டமாய்க் காந்தார நாட்டு (ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற்குட் புகுந்தாராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிற ரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களோடு கலந்து போனமையால், வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும், பிராமணரையே என்றறிதல் வேண்டும்.” (பக்கம்:69)

“ஆரியர், முன்பு பிராகிருதரையும் பின்பு திராவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது” (பக்கம்:69)

தமிழரின் தொல் மதத்தில் மேற்கண்ட படி கலந்த ஆரியம் பின் எவ்வாறு ஏக இறை வணக்கத்தில் திரிபு செய்தது என்பதை “முத் திருமேனிப் புணர்ப்பு” (Trinity Concept) என்னும் தலைப்பின் கீழ்ப் பின்வருமாறு பாவாணர் எழுதுகிறார்:

“தமிழ்ப் பொது மக்கள் அரசரைப் பின் பற்றிப் பிராமணர்க்கு எத்துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக்குறி (இலங்க) வணக்கஞ் செய்து வந்த சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார் (சிச்ன தேவ) என்று பழித்து வந்தாரேனும், தென்னாடு வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வையுணர்ந்து, அவற்றை ஆரியப் படுத்தற்கு, இறைவன் முத்தொழிலையும் வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிரமனைப் படைப்புத் தேவனென்றும், முத்தொழில் திருமாலைக் காப்புத் தேவனென்றும், முத்தொழிற் சிவனை அழிப்புத் தேவனென்றும், முத்திருமேனிக் கொள்கையைப் புகுத்தி விட்டனர்.” (பக்கம்:73)

பாவாணர் இவ்வாறு எழுதினும், சைவரும் வைணவரும் தத்தமது இறை உருவகிப்பை இவ்வாறு ஒற்றைத் தொழிற்கு இறக்கப்படுவதை ஒருபோதும் ஏற்கவில்லை. முத்தொழிலையுமே தத்தமது இறையுருவகிப்பிற்கு உரியதாகவே இன்று வரை கொண்டுள்ளனர். சைவத் திருமுறைகளையும் வைணவப் பிரபந்தங்களையும் வாசித்தால் இதனை அறியலாம். இக்கருத்தையும் தேவநேயர் தனது நூலின்கண் விளக்கியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மேற்கோள்:

“கிறித்தவமும் இஸ்லாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத் தொழில் செய்பவன் என்று கூறப்படும்” (’தமிழ் மத உட்போர்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது. பக்கம்:117)

உருவகத்தை உருவகம் என்று உணராது உண்மை என்று கொள்வதால் உறும் ஊறு பற்றிப் பாவாணர் பின்வருமாறு உரைக்கிறார்:

“ஆண் பெண் பான்மை யின்றி ஒரே தன்மையாய் ஆற்றல் வடிவாயுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மை யப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது, மாந்தரைப் போன்ற கணவனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலுமில்லாத பல்வேறு கதைகளைக் கட்டி, சொல்லளவாக வுள்ள சிவன் சிவைக்கு ஆண்டு தொறும் திருமணம் நடத்தி வைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்!” (பக்கம்:102)

“(கஅ) கடவுட் சமய மறைப்பு

உருவ வழிபாட்டினாலேயே ஆரியர்க்குப் பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத் தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும், உண்மையால், கடவுட் சமயம் மறைக்கப்பட்டது” (’ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள்’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:108).

”தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிக மிகப் புண் படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம். அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இவ்விருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவன் அல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.” (பக்கம்:133&134)

”பிராமணியத்திடமிருந்து தப்ப முடியாதவர் பிறவியினின்று ஒருகாலும் தப்ப முடியாது. கூரை யேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுர மேறிக் குடக் கூத்தாடுவான்?” (பக்கம்:136)

இந்நூலை தேவநேயப் பாவாணர் எழுதிய காலம் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருந்த காலம். பெரியார் அற்றை நாள் தமிழரின் தனிப்பெருந் தலைவராய் இருந்த காலம். அன்னாரின் கொள்கைகளுக்குத் தி.மு.கழக அரசு சட்ட வடிவம் கொடுத்து வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காலம். அதன் பின்னணியிலும்கூட தமிழரின் தொல் கடவுட் கொள்கையே மீண்டும் வேண்டுவதே அன்றி நாத்திகம் அல்ல என்னும் தெளிவு துலங்கப் பாவாணர் பின்வருமாறு எழுதினார்:

“மதத்தை ஒழித்து விட்டாற் பிராமணியம் அடியோடொழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லி வருகின்றனர். உருவ வணக்கத்தை ஒழித்து விட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.” (பக்கம்: 142).

பிராமணியம் என்று இங்கே அவர் குறிப்பிடுவது உருவ வழிபாட்டையும் குலதர்ம வருணாசிரமக் கொள்கையையும் ஆகும். பின்னைக் காரணம் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“தமிழ் நாட்டைப் பொருத்த வரையில், மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருப்பது, ஆரியத்தா லேற்பட்ட பிறவிக் குலப் பிரிவினையே யன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப்பான குமுகாயக் கொடு நோய்.” (பக்கம்:184)

தமிழர்க்கு நிகழ்ந்த தடையாக அவர் கருதுவது இஃதொன்றுதான் என்னும்படிக்கு அவர் தனது ஆய்வு முடிபாகச் சொல்வதைக் காண்க:

“மெய்ப் பொருள் இருபத் தெட்டே. மன மொழி மெய்க் கெட்டாது எங்கும் நிறைந்து நுண்ம வடிவி லிருக்கும் ஒரே கடவுளை, ஐங் கூறாகவும் தொண் கூறாகவும் பகுப்பதும், பாலற்று நினைத்த மட்டில் எல்லாம் நிகழ்த்த வல்ல மாபெரும் பரம் பொருளை மாந்தனைப் போற் கருதி, அவனுக்கு வாழ்க்கைத் துணையும் ஐம் புதல்வர் குடும்பமும் தொழிற் றுணைவரும் சேர்ப்பதும், கடவுட் கொள்கைக்கு மாறான தெய்வப் பழிப்பே யாம்.

ஆரிய வேதத்திற்கும் இரு தமிழ மதங்கட்கும் யாதொரு தொடர்பு மில்லை. ஆரியக் கூண்டுள் அடைபட் டிருக்கும் தமிழனுக்கு, இம்மை விடுதலையும் மறுமை விடுதலையும் இல்லவே யில்லை.” (பக்கம்:193)

தமிழன் விடுதலை அடைவதற்கான ஒரே வழி இறைவனின் உண்மைத் தன்மையான உருவமற்ற நிலையில் அவனை ஏற்று வணங்குவதே ஆகும் என்பது பாவாணரின் கொள்கையாக இந்நூலெங்கும் மிளிர்கிறது.

“துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல்லறத்தார்க்கும், உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழிபாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப்படாது போம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும்.

உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில்தான் இறைவனைக் காட்ட முடியும். அதுவே, அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறிவில்லா யானை வடிவிற் படிவமமைத்து வணங்குவது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்ஙனமிருக்கும்!” (’உருவிலா வழிபாடு’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது. பக்கம்:141)

“தமிழ் நாட்டில் உருவிலா வழிபாடு பதினெண் சித்தர் காலத்திற் தோன்றிய தென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்டதென்றும், தவறாகக் கருதப் படுகின்றது. உலகில் முதன் முதல் கடவுளை உணர்ந்தவர் தமிழறிவரே. கடவுள் என்னும் சொல், தமிழ் நாட்டில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்’ புலந்தொகுக்கப் பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தல் காண்க.” (’உருவிலா வழிபாடு’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது. பக்கம்:143)

உருவிலா வழிபாட்டினை வலியுறுத்தும் பாவாணர் அதற்கு ஏதுவாய்க் காட்டும் மதங்கள் இரண்டு: “இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க” (பக்கம்:142)

உருவிலா வழிபாட்டில் கிறித்துவத்தைப் பாவாணர் குறித்திருப்பது எப்படி என்றே புரியவில்லை. கிறித்துவமும் உருவ வழிபாட்டில் கோலி நிற்கும் மதமே என்பது கண்கூடு. தேவாலயங்கள் தோறும் ஏசுநாதரின் சிலையும், மரியன்னையின் சிலையும், பல்வேறு கிறித்துவ ஞானியரின் படிமைகளும் கொண்டு உருவ வழிபாடுதான் நிகழ்த்தப் படுகின்றது. சிவனியமும் மாலியமும் போல் இறைவனை உருவகப் படுத்திக் கொண்ட பெருந்தேவ மதமாகவே கிறித்துவத்தைப் பாவாணர் கண்டிருத்தல் வேண்டும். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்த வகை பக்திக்கு வழியாமாறு பற்றி எழுதிய திரு.வி.க அவர்கள் கிறித்துவரும் அவ்வழி பயனடைவதற்கு குழந்தை ஏசுவின் படிமை இருப்பதைக் குறிப்பிட்டார் என்பதை இவ்விடத்தில் நினைவு கூர்க.

இஸ்லாமிய வழிபாட்டு முறை உருவிலா வழிபாடே ஆகும்; அதாவது, அருவ வழிபாடே ஆகும். பாவாணர் சொன்ன மும்மத வகையுள் அது கடவுட் சமயம் என்பதில் பொருந்தும். ஆதம் என்ற ஆதன் வழி அவணிக்கு இறைவன் அளித்த ஆதி மதமே எம் மதம். அதுவே தமிழர் மதம். அதற்கு அறபி மொழியில் ’இஸ்லாம்’ என்று பெயர்.

இஸ்லாத்தில் உருவ வழிபாடோ உருவகமோ இல்லையோ எனில் இல்லை என்பது திண்ணம். இறைநேசர்களின் அடக்கவிடங்களான தர்ஹாக்கள் உள்ளனவே, அவை உருவ வழிபாடு ஆகாதோ? எனின், அவர்கள் இறைவன் அல்லர், வணக்கத்திற் குரியவர்கள் அல்லர் என்பதே கொள்கை. அவ்விடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அவர்களை வணங்கும் செயல்கள் அல்ல என்பதே கொள்கை. மக்காவில் இருக்கும் கஃபா என்னும் ஆலயத்தை நோக்கித் தொழுவது உருவ வழிபாடாகாதோ எனின், மக்காவும் இறைவன் அல்ல, மதினாவும் இறைவன் அல்ல, கஃபாவும் இறைவன் அல்ல என்பதே கொள்கை, அவற்றை நாங்கள் வணங்குவதில்லை என்பதே கொள்கை. “திக்கைத் தொழும் துருக்கர்” என்று எழுதி வைத்ததும் புரியாத பிதற்றல். திக்கு என்பது இறைவன் என்று இஸ்லாம் கூறவில்லை. எந்தத் திசையும் இறைவன் அல்ல என்பதே கொள்கை. முஸ்லிம்கள் பிறையை வணங்குகிறார்கள் என்று பாவேந்தர் பாடியதும் அறியாது சொன்ன வார்த்தை. பிறையோ முழுநிலவோ சூரியனோ விண்மீனோ கிரகமோ இவையும் இவை அன்ன பிறவும் இறைவன் அல்ல என்பதே கொள்கை. சுருங்கச் சொன்னால், படைப்பு எதுவும் இறைவன் அல்ல என்பதே இஸ்லாமின் கொள்கை.


தொழுகையில் வெளி ஓசை வடிவிலும் உள் ஓசை வடிவிலும் திருக்குர்ஆன் உச்சரிப்புக்கள் உள்ளத்தில் ஒட்டுமே, அவை இறைவனுக்கான ஓசை உருவகமாகாதோ எனின், அவ்வோசைகள் இறைவன் அல்ல என்பதே கொள்கை. லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் இஸ்லாமின் மூல மந்திரமும் இறைவன் அல்ல. அல்லாஹ் என்னும் பெயரும் இறைவன் அல்ல. யாம் ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்குகிறோம்; அல்லாஹ் என்னும் பெயரை அல்ல.

மனதிற் படும் உருவ உருவகம் அனைத்தையும் ‘இஃது இறைவன் அல்ல, இஃது இறைவன் அல்ல’ என்று தள்ளி நீக்கிச் செல்ல செல்ல கால இடப் பரிமாணம் கடந்த நிலையை மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டு கடவுட் தன்மையை உணர்வால் அறிந்து நிற்கும் நிலையே இஸ்லாமின் தொழுகை.


இவ்வாறு உருவங்களை, படைப்புக்களை மனதை விட்டு நீக்கி நீக்கி மேற்சென்று மெய்ஞ்ஞானம் அடையும் முறையை ‘நேதி நேதி பாவனை’ என்று இந்து மதம் கற்றுத் தருவதை சுவாமி விவேகானந்தர் எழுதிய நூற்களைக் கற்றோர் அறிவர்.

“அகவிழிப்பின்றி மஸ்ஜிதில் நிற்பவனை விட
அகவிழிப்புடன் சிலை முன் நிற்போன் சிறந்தவன்”
                        -அல்லாமா இக்பால் (ரஹ்).

      
இவ்வரிகளின் உட்பொருள் யாதெனில், அக விழிப்பு இருக்கும் பட்சத்தில் அந்த அக விழிப்பே உருவ நிலையை விட்டும் கடக்கச் செய்து ஒரு கட்டத்தில் அவன் இறைவனின் உண்மை நிலையை உணர்ந்துவிடுவான் என்பதாகும். அக விழிப்பு அற்றவனின் நிலையோ, அவனுள் மறைவான இணைவைப்பு (”ஷிர்க்கெ கஃபீ” என்று சூஃபிகள் உரைப்பது) பற்பல சூக்கும வடிவங்களில் மண்டி நிறைந்துவிடும்.


      இந்த நேதி நேதி பாவனையைத் தமிழர் அனைவரும் சாதனை செய்து ஆன்ம நலம் பெற எல்லாம் வல்ல ஏக இறைவனின் பேரருள் கனிய வேண்டுகிறேன்.

Monday, December 30, 2013

தேவநேயத் தேடல் - part1


     கல்லூரிக் கருத்தரங்கம் ஒன்றிற்காக கடந்த இரண்டு வாரங்கள் கடுமையான உழைப்பு. பழைய நூற்கள் பலவற்றைப் படிக்க வேண்டியிருந்தது. செந்தமிழ் நடையில் அமைந்த நூல்கள். தேவநேயப் பாவாணர், மறைமல அடிகள், கா.அப்பாதுரையார், க.அன்பழகன் போன்றோர் எழுதியவை. இவர்களின் செந்தமிழ் நடையைச் சிலர் கடுந்தமிழ் என்று கருதலாம். ஏன், கொடுந்தமிழ் என்றும்கூட சிலர் சொல்லக்கூடும். எப்படியோ, இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்று தொடங்கி சுஜாதா வரைக்கும் வந்த பல்வகைத் தமிழ் நடைகளையும் அடியேன் ரசிப்பதுண்டு. மான் நடப்பது ஒரு போக்கு, யானை நடை ஒரு தினுசு. குறை சொல்ல என்ன இருக்கிறது?


      கடவுள் உண்டா? என்று ஒரு கேள்வி. பலரிடம் பலரும் கேட்ட கேள்வி. பெரியாரிடம் சிறியார் பலர் கேட்ட கேள்வி. இதே கேள்வி ஒருமுறை அ.ப.ஜ.அப்துல் கலாம் அவர்களிடம் பள்ளி மாணவி ஒருத்தி கேட்டிருக்கிறாள். உண்டு என்று தான் நம்புவதற்கான ஒரு காரணத்தை அவர் செப்பினார். “பிரபஞ்ச வெளியில் கோடிக் கணக்கான கிரகங்களும் விண்மீன்களும் விண்கற்களும் குடும்பங்களாக அமைந்து தத்தமது இடத்தில் ஒழுங்கான பாதையில் சீராக இயங்கி வருகின்றன. அனைத்திற்கும் ஆதாரமாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள ஓர் இறையாற்றல்தான் இவற்றை இப்படி இயக்கி வருகிறது என்று நம்புகிறேன்.” இக்கருத்துப்பட அவர் பதில் சொல்லியிருந்தார்.


      ”தமிழர் மதம்” என்னும் தலைப்பில் ஒரு நூல். 15 செப்டம்பர் 1972-ல் வெளியிடப்பட்டது. எழுதியவர் தேவநேயர். ’மொழி ஞாயிறு’ என்றழைக்கப்படும் ஞானதேசிகன் தேவநேயன் என்னும் தேவநேயப் பாவாணர் அவர்களேதான். கடவுள் உண்டு என்பதற்கு தான் கருதும் ஏதுக்களாக அவர் ஒன்பது குறிப்புக்கள் தருகிறார். முதற்குறிப்பு மேலே அ.ப.ஜ.அ.க அவர்கள் சொன்ன அதே கருத்து! தேவநேயர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொல்லும் ஒன்பது கருத்துக்களை அப்படியே தருகிறேன். (1 முதல் 9 வரையிலான எண்களைத் தமிழில் கொடுத்துள்ளார். அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.):

“கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

 (க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன.

      ஓர் ஊரில் ஊர்காவலனோ அரசிய லாட்சியோ சிறிது நேரம் இல்லா விடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடி வரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறிவற்றதாயிருக்க முடியாது. அவ்வறிவே இறைவன்.
(உ) இவ்வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன.

      ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல உலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேலையாகிய இராக் காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(ங) பிற கோள்களைப் போற் சுற்றாது ஒரே இடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.

(ச) கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.

(ரு) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான்,
      ”படைத்து விளையாடும் பண்பி னோனும்
      துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
      தன்னில் வேறு தானொன் றிலோனும்
      அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்”
மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).

(சா) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் தொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி லுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.

[குறிப்பு: உள்ளங்கையில் உள்ள ரேகைகளைத்தான் ”கைவரை” என்று குறிப்பிடுகிறார்.]

(எ) “கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது.

(அ) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல்.

(கூ) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.”

இப்பகுதியைத் தொடர்ந்து கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன் வைக்கும் ஐந்து கருத்துக்களைக் கூறுகிறார். பாவாணர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவற்றை இங்கே சொல்ல வேண்டியதில்லை. அதைத் தொடர்ந்து, ’பகுத்தறிவு’க்கு ஒன்று சொல்கிறார்:

“மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாகலின், இறைவன் ஆட்சியிலுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.
      ’ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
      நாழி முகவாது நானாழி” (மூதுரை. ககூ)’”


ஔவை பாட்டியின் இந்த வரிகள் புரியாதோர்க்கு:
“நம்பகிட்ட ஒரு சொம்பு இருக்கு. கடலுக்குப் போய் அந்தச் சொம்பை முக்குனாக்க அதுல ஒரு சொம்பளவு தண்ணிதான்யா வரும். நாலு சொம்பளவுத் தண்ணி வராது.”
(கு.குசலாவின் குறுக்குச் சால்: ’நாலு சொம்பளவுத் தண்ணி வேணும்னா அந்தச் சொம்ப நாலு தபா முக்க வேண்டியதுதானே?’ ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட்.)

”மதத்தை அழிக்க முடியுமா?” என்றொரு கேள்வி எழுப்பி அதன்கீழ் பாவாணர் சொல்லிச் செல்வதில் முடிவாக வரும் உளவியல் கருத்து என்னைக் கவர்ந்தது:

“கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் – இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடினும் உண்ணினும் – இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின், மனம் உள்ளவரை  மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக.”

ஹாரூன் யஹ்யா என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இன்று முன்னணியில் இருக்கும் இஸ்லாமியப் பரப்புநருள் ஒருவர். பேச்சாளர் அல்ல. அவரின் களம் எழுத்து. நூற்றுக் கணக்கான நூற்களை நெய்திருக்கிறார், அதாவது எழுதியிருக்கிறார். நான் வியக்கும், விரும்பும் நபர்களுள் ஒருவர். அவர் ஒருவர்தானா அல்லது ஒரு குழு அமர்ந்து அப்பெயரில் எழுதித் தள்ளுகிறதா என்று ஐயம் உண்டு. அவ்வளவு நூற்கள் வெளிவந்துள்ளன. அறிவியல், வரலாறு என்னும் இரு துறை சார்ந்து திருக்குர்ஆன் பற்றி அவர் எழுதுகிறார். டார்வின் முன்வைத்த கூர்தலறக் கோட்பாடு (பரிணாமக் கொள்கை, Theory of Evolution) பொய் என்று நவீன அறிவியல் ரீதியாக அவர் மறுத்து எழுதியுள்ள நூற்கள், குறிப்பாக “DARWINISM REFUTED” என்னும் நூல், உலகப் புகழ் பெற்றது. டார்வினியலாளர்களின் மூக்குக்குள் புலிகேசியின் மீசையை விட்டு மூளையைக் குதறுவது!


ஹாரூன் யஹ்யா குறிப்பிடும் சில வாதங்களை தேவநேயப் பாவாணர் தனது நூலில் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. அப்பகுதியைப் படியுங்கள்:

“இறைவனின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினெ தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தின தாகத் தெரிகின்றது.

தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்?

சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே!

ஆதலால் திரிபாக்கக் கொள்கை (Evolution Theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது.

இனி, கதிரவனின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதனின்று வீழ்ந்தது?

இக்கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறிவிடுவது போல், தனக்கு நுண்மதி யளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ!”


(to be continued)

Thursday, December 12, 2013

கூஜா நாமா


(உமர் ஃகய்யாமின் ’ருபாயாத்’ பாடல்களில் ஒரு பகுதியாக அமைந்திருப்பது ’கூஜா நாமா’ என்பது. களிமண் கூஜாக்கள் தமக்குள் குயவனைப் பற்றியும் தம் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்ளும் பாணியில் மனிதர்கள் இறைவனைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்வதாக உட்பொருள் தொனிக்க அவர் எழுதியுள்ளார். அந்தப் பெயரையே இந்தக் கவிதைக்குச் சூட்டுகிறேன்)

ஈரம் காயாத களிமண்
இன்னமும் நான்
குயவனின் கைகளில் இருக்கின்றேன்
இன்னமும் நான்

ஒவ்வொரு கணமும் வனைகிறது
அவனின் இயக்கம் என்னை
ஒவ்வொரு கணமும் புனைகிறது
அவனின் நாட்டம் என்னை

என் கட்டமைப்பில் தெரிவதெல்லாம்
அவனின் கைவண்ணமே
பொய்வண்ணம் அல்ல இது
சத்திய மெய்வண்ணமே!

வெறுமை என்னும் வடிவில்
வரைந்த பாத்திரம் நான்
ஏழு கடல்களின் தண்ணீர்
நிறைந்த பாத்திரம் நான்!

அவனின் மூச்சு கடலானது
என்னுள் எழும் அலைகளுக்கெல்லாம்
அவனின் காதலே வேர் ஆனது
என் கிளைகள் இலைகளுக்கெல்லாம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் இறைவனே
ஒளியாக இருக்கின்றான்
இறைவன் பார்வை எனில் மனிதனே
விழியாக இருக்கின்றான்

உடைவோம் என்ற அச்சத்தில்
சாகிறது கூஜா ஒன்று
உடைந்தோம் என்ற கவலையில்
வேகிறது கூஜா ஒன்று

’தோழர்களே! உடையுங்கள் என்னை’
என்கிறது ஒன்றின் முழக்கம்
’நேசர்களுக்கில்லை அச்சமும் கவலையும்’
என்பதே இறை வழக்கம்


(குறிப்பு: ”‘தோழர்களே! உடையுங்கள் என்னை’ என்கிறது ஒன்றின் முழக்கம்” என்பது மன்ஸூர் அல்-ஹல்லாஜின் கவிதை ஒன்றிற்கான சுட்டுதல் ஆகும். “உக்தூலூனீ யா ஸிகாத்தீ / இன்ன ஃபீ கத்லீ ஹயாத்தீ” (என் நண்பர்களே! என்னைக் கொல்லுங்கள்! நிச்சயமாக, நான் கொலை செய்யப்படுவதில் என் வாழ்க்கை உள்ளது!) என்பதே அந்தக் கவிதை வரிகள்)

Wednesday, November 27, 2013

கஸல் துளிகள்


விரல்கள் ரணமாக அவிழ்த்தேன்
காதல் மர்மங்களின் முடிச்சு ஒன்றை
நொடியில் தோன்றி நின்றன
நூறு முடிச்சுக்கள் இன்னும்
*

கண்ணாடி ஓவியம் நான்
’நான்’ இல்லாதுபோகும் இடமெல்லாம்
ஊடுருவிப் பாய்கிறது
உன் ஒளி
*
தேனீயைப் போல் சுறுசுறுப்பானவள்
தேனைப் போல் இனிமையானவள்
நெஞ்சே! மறந்துவிடாதே
விஷமுள்ள கொடுக்கும் இருக்கிறது!
*

உடல் வேறொரு காலத்தில்
உள்ளம் வேறொரு காலத்தில்
உயிர் முறுவல் பூக்கிறது
காலாதீதத்தில்

மூச்சு வேறொரு தாளத்தில்
பேச்சு வேறொரு தாளத்தில்
தியானம் மெல்ல சிரிக்கிறது
மௌன ராகத்தில்
*

மணமே அறிவித்துவிடுகின்றது
மலர்ந்த ரோஜாவை

புல்புலின்
புகழ்ப் பாடல்களால்
புல்புலையே அறிவிக்கிறது ரோஜா!

லைலாவின் அழகைச் சொல்கிறதாம்
மஜ்னூனின் அலங்கோலம்

லைலாவின் அழகு இல்லை எனில்
கயஸ்
மஜ்னூன் ஆவதெங்கே?
*

ஆதலினால் செய்யப்படுவதல்ல
காதல்

காதலினால் ஆகின்றன
எல்லாம்

*