Tuesday, November 30, 2021

ரூமியின் ஆன்மிகமும் சூஃபி மரபும்

 


ஆங்கில மூலம்: வீலர் எம். தாக்ஸ்டன் ஜூனியர்

தமிழில்: ரமீஸ் பிலாலி.

(மவ்லானா ரூமியின் ஞான உரைகளின் தொகுப்பான “ஃபீஹி மா ஃபீஹி”யை ஆங்கிலத்தில் பெயர்த்த வீலர் எம்.தாக்ஸ்டன் தன் நூலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இக்கட்டுரை. அவர் ஹார்வார்டு பல்கலையில் பணியாற்றிய கிழக்கியலாளர் ஆவார்.)



            ரூமியின் படைப்புகள் இஸ்லாமிய சிந்தனை மற்றும் சூஃபிப் பயிற்சி என்னும் புலத்தில் கட்டுப்பட்டவை. சூஃபித்துவம் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் பெரிதும் பற்றற்ற நிலையை வலியுறுத்துவதாகத் தோற்றம் பெற்றிருந்தது. ஆனால், அது பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் விரிவான இஸ்லாமியச் சமூக மற்றும் சமயப் பரப்பில் பயபக்தி (தக்வா) என்னும் பண்பின் நிறுவனமயமான வெளிப்பாடு ஆகிவிட்டது. “இஸ்லாமிய மெய்ஞ்ஞானம்” என்று அடிக்கடி அழைக்கப்படும் சூஃபித்துவம் அப்பெயரின் நேரடி அர்த்தத்துக்கு ஏற்ப ஒரு மெய்ஞ்ஞான நெறியே ஆகும். அதாவது, இறைநம்பிக்கையின் அந்தரங்கத்தில் இருக்கும் ரகசியங்கள் மற்றும் அக இயக்கங்கள் ஆகியவற்றுக்கு ஆற்றுப்படுத்துவதாகும். வரலாற்றின் எக்காலத்திலும் சூஃபித்துவம், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருந்ததில்லை. சொல்லப்போனால், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையே அது தன் அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது. எனினும், அவ்வப்போது சூஃபி தனி நபர்கள் மார்க்க அறிஞர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். அதற்குக் காரணம் அவர்களின் கொள்கைப் பிழைகள் அல்ல. மாறாக, அவர்களின் குழப்பமான வாழ்க்கை முறைகளும் அக நிலைகள் சார்ந்து அவர்கள் அவ்வப்போது கவனமின்றி வெளிப்படுத்திய பூடகமான பொதுப் பிரகடனங்களும்தாம். சூஃபித்துவம் சாராத இஸ்லாத்திற்கும் சூஃபித்துவத்தை ஏற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள உண்மையான வேறுபாடு ஒன்றே ஒன்றுதான், அது சூஃபிகளே குறிப்பிட்டதுதான்: சூஃபித்துவம் என்பது வெறுமனே மார்க்கத்தின் வெளிரங்கமான புற அம்சங்களை மட்டுமே போதுமென்று கொள்வதில்லை, ஆனால், வெளிரங்கமான கொள்கையின் அந்தரங்கமான அர்த்தம் குறித்த ஆன்மிக விழிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அவற்றை அகவயப்படுத்துகின்றது. அதாவது, சூஃபித்துவம் மார்க்கத்தின் வெளிக் கோலத்தைத் தாண்டி அதனுள் ஆன்மிக எதார்த்தத்தைக் காண முனைகிறது. இம்முயற்சிகளில் வெளிப்படும் சொலவடைகள் பலவும் இந்நெறியில் இணையாத பேர்களுக்கு மார்க்க துரோகமாகப் படுகின்றன.

            இப்ராஹிம் நபியின் ஏக இறைக் கொள்கை மற்றும் மூசா நபியின் இறைச்சட்டம் ஆகியவற்றின் இறுதியான முழுமையான வெளிப்பாடு என்று தன்னைக் காணும் இஸ்லாம், இறைவன் படைப்புக்களை விட்டும் அப்பாலாகி இருக்கும் ‘தன்ஸீஹ்’ (transcemdence) நிலையை வலியுறுத்துகின்றது. இதை சூஃபித்துவம் முழுமையாக ஏற்கிறது: “இறைவனைப் பற்றி நீ என்ன கருதினாலும் அவன் அதற்கு அப்பாற்பட்டவனே,” என்று ஆரம்பக் கால சூஃபி ஒருவர் தனது கோட்பாட்டை வெளியிட்டார். ஒருபக்கம், இறைவனைப் போல் எதுவும் இல்லை, அவனுக்கு இணை துணை இல்லை என்பதைப் பேணியபடி, தனது அப்பாலைத் தன்மையில் (ஷஃனே தன்ஸீஹ்) இருந்தபடியே அவன் தனது படைப்புக்களிலும் உடனிருக்கிறான் (ஷஃனே தஷ்பீஹ்) என்பதை சூஃபிகள் பார்க்கின்றனர். ரூமி சொல்கிறார்: ”இறைவனைப் பற்றி நீ என்ன கருத்து வைத்திருந்தாலும், அவன் ஓரளவு அது போல்தான் இருப்பான். ஏனெனில், உன் கருத்துக்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே.” எந்த நிலையிலும் இறைவனின் படைப்புக்கள் அவனைப் போன்றவை அல்ல; ஆனாலும், அவை அவனை அன்றியும் அல்ல.

            சூஃபிகளின் தோற்றவியல் பார்வை (ontological view), இஸ்லாத்தின் அனைத்து நடைமுறைக் கோட்பாடுகளையும் போன்றே, தவ்ஹீத் என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தவ்ஹீது என்பது இறைவனின் கலப்பற்ற ஏக நிலை மற்றும் ஒருமையை உறுதிப்படுத்துவதாகும். இறைவனை அன்றி வேறு எதையும் வழிபடக்கூடாது, துதிக்கக் கூடாது என்று அக்கொள்கை கோருகிறது.  ஏனெனில், எந்தக் கோணத்திலும் ஏதேனுமொரு பொருளை இறைவனுடன் ஒப்புமை ஆக்குவது என்பது இன்னொரு ’தெய்வம்’ உண்டென்று கருதுவதாகிவிடும். இதன் நியாயமான தேவையான நீட்சியாக, உள்ளமை இறைவனுக்கு மட்டுமே என்று தவ்ஹீது முடிவு கட்டுகிறது.  எனவே புலனுணர்வுக்குப் படும் அவனல்லாதது எதற்கும் சுய இருப்பு இல்லை. அவன் அல்லாத எப்பொருளும் ஏகமான சத்திய உள்ளமையான அவனின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை.

            குர்ஆன் (7:172)-ஆம் திருவசனத்தின் அடிப்படையில் இதனைக் குறியீடாகச் சொல்வதெனில், தொடர் காலமும் இடமும் படைக்கப்படுவதற்கு முன், இப்பிரபஞ்சத்தை இறைவனின் ஆணை தோன்றச் செய்வதற்கு முன், மனித குலத்தின் பிரிவற்ற ஆன்மாக்கள் எல்லாம் இறைவனின் ஞானத்திற்குள் முடிவிலியின் ஆழங்கான முடியாத கருவூலத்தில் கருத்துக்களாக மட்டுமே துஞ்சிக் கிடந்தன. அப்போது அவனைத் துதிக்க யாதொரு பொருளும் இல்லை ஆதலால், சூஃபிகள் அடிக்கடி மேற்கோள் சொல்லுமொரு ஹதீஸ் குத்ஸி-யின்படி, இறைவன் சொன்னான்: “நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன், அறியப்பட நாடினேன், எனவே அறியப்பட படைப்பைப் படைத்தேன்” (குன்து கன்ஸன் மஃக்ஃபிய்யன் ஃப அஹ்பப்து அன்ய்யுஃரஃப ஃபஃகக்துல் ஃகல்க்.) எனவே, ஏனைய படைப்புக்களுடன், மனித குலமும் இறைவனை அறிவதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூமியால் பன்முறை முன் வைக்கப்பட்ட அறிவறிவியல் அனுமானத்தின்படி (epistemological premise) ஒருவர் ஒரு பொருளை அதன் எதிர்மையைக் கொண்டே அறிய இயலும். எனவே, தவ்ஹீதின்படி இறைவனுக்கு எதிர்மை (’ளித்’ / ’அள்தாத்’) என்பது உண்மையில் இருக்க முடியாது என்பதால் ஒருபோதும் அவனை உள்ளமையில் அறியவும் முடியாது. சூஃபிகள் நகைமுரணுடன் சொல்வது போல், இறைவனை அறிவதற்கான ஒரே வழி அவனை அறிய இயலாது என்று நாம் அறிந்து கொள்வதே. எனினும், வடிவம் அல்லது பண்பு என்பதில், இறைவனுக்கு ஓர் எதிர்மையைக் கற்பனை பண்ண முடியும். உதாரணமாக, இறையொளி என்னும் பண்பின் எதிர்மையாக அவனது ஒளியைப் பிரதிபலிப்பதற்காகப் படைக்கப்படும் இருளின் வெறுமை இருக்கிறது: இந்தப் படைப்புலகமே அவனது ஒளியின் பிரதிபலிப்பு, அதில் உள்ள அனைத்தும் அவனின் வெளிப்பாடுகளே. அவற்றின் முடிவு அவனை அறிவதே.


            எல்லாப் பொருட்களும் இறைவன் வெளிப்படும் வாயில்களே, அவை அதனை உணர்ந்தாலும் உணராவிட்டாலும். இறை நம்பிக்கையாளன் இறை நம்பிக்கையின் பண்புகளையும் இறைவனின் இருத்தல் மீது நேர்மையான சாட்சியையும் வெளிப்படுத்துகிறான்; இறை நிராகரிப்பாளனும்கூட, இறைவனை மறுப்பதன் மூலம் இறைவனையே வெளிப்படுத்துகிறான், அந்த எதிர்மை நிலையை வைத்தும் இறை நம்பிக்கை அறியப்படுகிறது. உலகின் நன்மையான விசயங்களின் வழியே இறைவன் தனது அழகிய மற்றும் நன்மையான குணங்களைக்கொண்டு தன்னையே வெளிப்படுத்துகிறான்; நன்மைக்கு எதிர்நிலைகளான அவலட்சணம் மற்றும் தீமை ஆகியவற்றைக் கொண்டும் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். இறைவனைப் பொறுத்தமட்டில், ரூமி சொல்கிறார், எல்லா விசயங்களும் நல்லவையே, ஏனெனில் இறைவன் நல்லன், அழகன், அவன் தனது எதிர்மையைப் படைப்பான் என்று சொல்வது தர்க்கப் பிழை ஆகும். அவலட்சணமாகவும் தீமையாகவும் மனிதனுக்கு ஆக்கப்பட்டுள்ளவை எல்லாம் மனிதனைப் பொறுத்த வரை மட்டுமே – அதாவது, மனிதன் உண்மையையும் அழகையும் அறிவதற்கான வாய்ப்பை அளிக்கின்ற எதிர்நிலையாகத் தீமை இருக்கிறது. ஆனால் இறைவனிடம் தீமை என்பதற்கு உள்ளமை கிடையாது. இவ்வுலகில் நாம் நம் புலன்களால் காண்பதெல்லாம் வெறும் ரூபம் மட்டுமே. அவை, ரூமி குறிப்பிடும் ‘மறு உலகில்’ இருக்கின்ற சுயங்களின் ஒரு அம்சத்துடன் தற்காலிகமாக இணைந்து கொண்ட ஏதேச்சையான கூடுகள் மட்டுமே. இவ்வுலகம் என்னும் இம்மைக்கும் மறு உலகம் என்னும் மறுமைக்கும் இடையிலான வேறுபாடு மவ்லானாவுக்கு மிகவும் முக்கியமானது. அவை இரண்டு தனித்தனியான பிரிந்த உலகங்கள் அல்ல. அவை ஒரே தொடர்ச்சியின் இரண்டு அம்சங்கள். ரூமி அவற்றை ஒரே கண்ணாடியின் முன் மற்றும் பின் பக்கங்கள் என்று அடிக்கடி குறிப்பிடுகிறார். ஸ்தூலவுடல் கொண்ட படைப்புக்களால் நிரம்பியுள்ள இவ்வுலகம் பருப்பொருளின் பரப்பில் செறிவும் திடமுமான எல்லையாகும். அது காலம் மற்றும் இடத்துள் கட்டுப்பட்டுள்ளது. மறுவுலகம் என்பது அதே பரப்பின் சூக்குமமும் நுட்பமுமான எல்லையாகும். அதில்தான் பிரபஞ்ச மூலப்படிவங்கள் (universal archetypes) அல்லது அனைத்தின் சுயங்கள் இருக்கின்றன. அவையே இம்மையுலகில் வெளிப்படுகின்றன. ரூமியைப் பொறுத்தவரை அவ்வுலகம் என்பது உள்ளார்ந்த கருத்தியல்களின் புலம். அது, இவ்வுலகின் ‘குறியீட்டியல்’ ஆன நாமரூபத் தொகுதிகளை (phantasmagoria) விடவும் உயர்வான எதார்த்த மதிப்புக் கொண்டதாகும். எனினும், இக்கருத்தியல்கல் அல்லது சுயங்கள் ஸ்தூலக் கண்களால காண முடியாதவை. உடலின் கண் என்பதன் இயக்கம் இவ்வுலகின் புலப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டதாகும். இவ்வுலகில் வெளியாகியுள்ள அனைத்துப் பொருட்களும் ஒரே மரத்தின் இலைகள் போன்றவை என்னும் படிமத்தை ரூமி தருகிறார். அந்த மரத்தின் வேர் மறுவுலகில் புதைந்து மறைந்திருக்கிறது. ஆனால் அதன் கிளைகள் சுவருக்கு மேலே இவ்வுலகினுள் நீண்டிருக்கின்றன. இங்கே அவை கனிகளைத் தருகின்றன.

            அவ்வுலகம் என்பது உள்ளடக்கத்தின் புலம் என்றால் இவ்வுலகம் என்பது வடிவத்தின் புலம். ரூமியின் பார்வையில் உள்ளடக்கத்துக்கே பெரு மதிப்பு என்றாலும் வடிவத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை எட்டுவது இயலாது. இவ்வுலக நாம ரூபத்தை வெறுப்பதற்கு மாறாக ரூமி அதற்கே உரிய முறையான இயக்கமும் நோக்கமும் உள்ளன என்பதை ஏற்கிறார். ஆனால், அவற்றை அவற்றுக்காகவே சேகரம் செய்வது என்பது மரத்தின் இலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அல்லது கண்ணாடியின் பின் பக்கத்தைப் பார்த்துக்கொண்டு முதன்மையான விசயத்தைப் புறக்கணிப்பதாகும். மவ்லானாவுக்கு வடிவமும் உள்ளடக்கமும் விதை ஒன்றின் தொலியும் பருப்பும் போன்றவை. புதைக்கப்படும் முன்பே விதையின் தொலி உரிக்கப்பட்டுவிட்டால் அது ஒருபோதும் முளைக்காது. இஸ்லாமியச் சட்டவியலைப் புறக்கணித்து, சடங்குகளின் வடிவங்கள் தம்மை மெய்ந்நிலையை தியானிப்பதை விட்டும் தடுக்கின்றன என்று கோருகின்ற ’பேஷரா’ தர்வேஷ்களுக்கு முரணாக, வடிவத்தைப் பேணிக் காப்பதை மவ்லானா வலியுறுத்துகிறார். ஏனெனில், புற வடிவம் இன்றி அதன் அகமாக இருக்கின்ற தத்துவத்தை அடைய முடியாது. ஒரு பொருளின் உள்ளார்ந்த கருத்தியல் “அகக் கண்ணால்” அடையப்படுவது அப்பொருளின் வெளித்தோற்றத்தின் ஊடாகவே ஆகும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அகக்கண் அல்லது அகப் பார்வை என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற அகப்புலன் ஆகும். அதன் சாத்தியம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதனை விழிப்படைய வைத்து உன்னதக் கூர்மைக்குத் திரட்டிச் செம்மைப்படுத்துவோர் மனிதகுலத்தில் இரண்டே வகையினர்தாம் – இறைத்தூதர்கள் மற்றும் இறை நேசர்கள் (அன்பியா வ அவ்லியா.)

            இறைவன் தெரிந்தே நோக்கத்துடன்தான் இவ்வுலகத்தை மனிதன் ஆன்மிக ரீதியில் வளர்வதற்கான பயிற்சிக் களமாகப் படைத்திருக்கிறான். சூஃபிச் சிந்தனையாளர்கள் பலராலும் கருத்தியல் தளத்தில் விரித்துரைக்கப்பட்ட இந்த நோக்கு சமுதாயப் பின்னணியில் சூஃபித்துவத்துக்கான பொறுப்பாகவும் இருக்கிறது. எனவேதான், மேற்கத்திய கிறித்துவ ஞானிகளைப் போல் அல்லாது சூஃபிகள் தம்மைச் சமுதாய வாழ்வில் பெரிதும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ரூமிக்கு, மனிதனின் உடலியல்புகள் அவர் முன்வைக்கும் சுயத்தின் சுழற்சி முறைக் கோட்பாட்டில் ஒரு பரிணாம நிலையைக் குறிக்கின்றன. அண்டத்தின் பிண்டமான (microcosm of the universe) – சிறிய பிரபஞ்சமான மனிதன் – தன்னில் தாது தாவர விலங்கு வர்க்கங்களின் குணங்களை பொதிந்தவனாக இருக்கிறான். இந்நிலைகள் மனிதனின் அகத்திலும் புறத்திலும் பரிணமித்து, சுயத்தின் படிநிலைகளில் ஆகக் கீழ்நிலையான தூல நிலையை விட்டும் மேலெழும் வளர்ச்சியில் மனிதனுக்கு உதவுகின்றன. மனிதன் மட்டுமே இந்த வளர்ச்சிக்கான சாத்தியம் கொண்டவன். பகுத்தறிவு அற்றவையும் முற்றிலும் மண்ணியல் வாழ்க்கை முறை கொண்டவையும் ஆன விலங்குகள் தம்முள் எழும் விலங்குணர்வுகளின் தூண்டுதலுக்கு மட்டுமே வினையாற்றுகின்றன. அதற்கு மாறாக, இறைவனது பிரபஞ்சத்தின் இறுதி மற்றும் உச்சப் படைப்பான மனிதன் இரண்டு இயல்புகள் வழங்கப்பட்டிருக்கிறான். மண்ணிலிருந்து உடல் வடிவம் கொடுக்கப்பட்ட அவன்,20 விலங்குகளுடன் மிருக இயல்பையும் தாதுக்களுடன் ஜடத் தன்மையையும் பங்கிட்டுக் கொள்பவனாக இருக்கிறான்; அத்துடன், மனிதனின் ஆன்மா என்பது இறைவனால் அவனுக்குள் ஊதப்பட்டது21 என்னும் நிலையில் அவனுக்குப் புனிதத் தன்மையும் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றுடன், நன்மை தீமையைப் பிரித்தறியும் பகுத்தறிவும் கிரகிப்பாற்றலும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நித்திய வாழ்வின் நீராழத்துக்கு இழுக்கும் மீன் ஒன்றும், நிலத்தில் புழுதிக்கு இழுக்கும் பாம்பு ஒன்றும் மனிதனுக்குள் இருக்கின்றன. கூண்டையே மேலே தூக்க நினைக்கும் பறவை ஒன்றும், கீழே சாய்க்க நினைக்கும் எலி ஒன்றும் அவனுக்குள் இருக்கின்றன. ”தேவ நிலைக்கு எழும் நம்பிக்கையால் வானவர்களின் இறகுகள் ஒட்டவைக்கப்பட்ட” ஒரு கழுதையைப் போல் அவன் இருக்கிறான். மனிதன் தன் மிருக இச்சைகளை எதிர்த்துப் போராட வேண்டும். தன் ஆன்மா எந்த தெய்வீக ஒளியில் இருந்து புறப்பட்டதோ அதனுடன் மீண்டும் இணைய அவன் தன் மிருக மனத்தை அடக்கிப் பணிய வைக்க வேண்டும். மாயப் பொய்யுலகில் இருந்து புலன்களின் வழியே அவனுக்கு ஊட்டப்படும் தவறான தகவல்களை அவன் புறக்கணிக்க வேண்டும். தன் கூர்மதியைச் செம்மை ஆக்கி தர்க்கத்தைக் கடந்து அவன் ஆன்மிக உலகுக்குள் பாய்ந்துவிட வேண்டும்.

            மனிதனின் ஆன்மிக விழிப்பு முழுமை அடைந்ததும் அவன் தனது பருத் தன்மையை உதிர்த்துவிட்டு வானவ நிலைக்குள் பரிணமிக்க ஆயத்தம் ஆகிறான். அதாவது, சுயத்தின் அடுத்த தளத்துக்கு உயர்வதற்கு. ஆன்மிக வளர்ச்சிக்கான இடமாக இவ்வுலகைப் பேணிட ஒவ்வொரு நபரும் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட பணியைச் செய்வது அவசியம். அது நிகழ வேண்டும் எனில் பொதுவில் மனிதகுலம் ஆன்மிக விழிப்பற்ற நிலையில் இருக்க வேண்டுவதாகிறது. ஏனெனில், எல்லாரும் ஆன்மிக விழிப்பை அடைந்துவிட்டால் உலகப் பணிகளை ஆற்றாது நின்றுவிடுவர், உலக இயக்கம் பாழ்படும். அனைத்துக்கும் மேல், காலத்தின் பூரண மனிதனான இறை ஞானியின் பொருட்டு இவ்வுலகம் பேணப்பட வேண்டும். அவர் எத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்தவர் என்றால் மனிதகுலத்துக்கு அவரே பிரபஞ்சப் பேரறிவின், முதற் காரணத்தின், வானங்களை இயக்கும் முதன்மை இயக்கியின் வெளிப்பாடாக நிற்கிறார். அவற்றில் இருந்து வெளியாகும் அனைத்தும் அவரின் வழியாகவே நிகழ்கின்றன.

            மண்ணில் இருந்து வடிவமைத்துப் படைக்கப்பட்டிருந்தாலும் சக உயிரிகளிடையே ஒரு தனி மதிப்புக்கு உயர்த்தப்பட்டு பூமியில் இறைவனின் பிரதிநிதியாக மனிதன் இருப்பதைப் போன்றே, மனிதருள்ளும் சில தனி நபர்கள் இறைவன் வழங்கும் விசேடமான அருள்களுக்கும் அந்தஸ்த்துகளுக்கும் தகுதி படைத்திருக்கிறார்கள் – அவர்கள் இறைத்தூதர்களும் இறைநேசர்களும் ஆவர். அவர்களே ஆன்மிக முழுமையை அடைந்திருக்கும் அரிய ஆளுமைகள். ரூமி குறிப்பிடும் மூன்று வளர்ச்சி நிலைகளையும் கடந்து சென்றோர்.

            தனது ஆதி நிலையில் மனிதன் முதலில் “இறைவன் அல்லாதது” (மா சிவல்லாஹ்) என்னும் நிலையில், காலத்தின் “இப்போது” என்பதை மட்டும் காண்பவனாக, புகழுக்கு உரிய மெய்ப்பொருளை அறியா மயக்கத்தில் இம்மண்ணுலகின் தோற்றப் பொருட்களின் பற்றில் சிக்கியவனாக இருக்கிறான். செல்வம் பதவி கல்வி மற்றும் அறிவுச் சாதனைகள் போன்றவை அத்தளைகள். அத்தகையோர், காமவயமான தமது மிருக மனங்களால் மதி மயங்கி தமக்குத் தனி இருத்தல் உள்ளது என்று நம்புகிறார்கள். இறைவன் எங்கோ தமக்கு அப்பால் ஓரிடத்தில் ‘அவன்’ தனியாக இருக்கிறான் என்றெண்ணித் தமது தன்முனைப்பை வீக்கி முன்னிறுத்துகிறார்கள். இறைவன் தமக்குத் தொடர்பற்ற தனிப்பொருள் என்று கருதுகிறார்கள். தமக்கு ஒரு தனி இருப்பைக் கற்பனையாக உறுதிப்படுத்துவதால் இறைவன் அல்லாத ஓர் உள்ளமையை உருவகிக்கும் நிலையில் அவர்களுக்கு தவ்ஹீது என்னும் அடிப்படை இல்லாமல் ஆகிறது.

            பற்றற்ற நிலை என்னும், வளர்ச்சியின் இரண்டாம் நிலையில், இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அர்ப்பணம் ஆவதில்லை என்னும் உறுதியை மனிதன் அடைகிறான். உலகப் பொருட்களை அவன் துச்சமென ஒதுக்குகிறான். காலத்தின் முடிவைக் கருதுகிறான். அதாவது, இவ்வுலகத் திருப்தியை நாடாமல் மறுவுலகச் சன்மானத்தை அறுவடை செய்ய உழைக்கிறான். இறைவனுடனான தன் உறவில் தானொரு மூன்றாம் மனிதனாக நிற்காமல் – படர்க்கை இடத்தில் இருந்து – இரண்டாம் மனிதனாக – முன்னிலை இடத்திற்கு – மாறுகிறான்: “நீ இறைவன், உன்னை நான் வணங்குகிறேன்,” என்று அவன் சொல்கிறான். இருப்பினும், தனக்கென்று தனி உள்ளமை ஒன்றைக் கற்பனித்த நிலையில் இவனும் தன்னை இறைவனை விட்டும் பிரித்துக் காண்பதால் தஹ்வீதைத் தவரவிடுகிறான்.

            அனைத்து வஸ்துக்களும், தன் சுயமான தன்முனைப்பு உட்பட, மெய்ப்பொருளான ஏக இறைவனின் தற்காலிகமான போலி நிழல்கள் மட்டுமே என்று உணரும்போது மனிதன் ஆன்மிக வளர்ச்சியின் மூன்றாம் நிலையை, இறுதிக் கட்டத்தை அடைகிறான். இறைவன் மட்டுமே ஒரே எதார்த்தம் என்பதைக் காண்பதே இப்போது ஒரே இலக்கு. அதாவது, ஒருவன் தன் சுயத்தில் மரணித்து, தன்முனைப்பை விட்டு, இறைவனின் ஏகத்துவ ஒருமைக்குள் மூழ்கி ‘ஆன்மாவில் மீண்டும் பிறக்க’ வேண்டும். அத்தகு நபர் ”அவன்” என்றோ “நீ” என்றோ சொல்ல முடியாது. அவர் தெய்வீகத்தின் முழுமையான “நான்” என்பதற்குள் மூழ்கி இவ்வுலகுக்கு மௌனம் ஆகிவிடுகிறான். அவரே இறைஞானி, இறைநேசர். இறைவனுடன் இருப்பின் இணைவை (வஸ்லு) அடைந்த நிலையில் இறைவனின் கையில் அவர் ஒரு கருவி ஆகிறார். அவருக்கென்று தனிப்பட்ட நாட்டம் இருப்பதில்லை. பிரபலமான தெய்விக நபிமொழி (ஹதீஸ் குத்ஸி) கூறுவதுபோல், அத்தகைய நபருக்கு இறைவனே “அவர் காணும் கண்ணாகவும், அவர் கேட்கும் காதாகவும், அவர் பற்றும் கரமாகவும்” ஆகிவிடுகிறான். அத்தகைய சுயமிழந்த மனிதரை மவ்லானா ரூமி அடிக்கடி ‘நீருக்குள் மூழ்கிய மனிதன்’ என்று உருவகப்படுத்துகிறார். அந்த நபரின் ஒவ்வோர் அசைவும் அவரால் ஏற்படுவதில்லை, நீரால் ஏற்படுகிறது.


            ’இப்போது’ என்பதைப் பற்றியோ காலத்தின் ’முடிவு’ என்பதைப் பற்றியோ இறைஞானிக்கு அக்கறை கிடையாது. அவர் காலம் தோன்றிய ஆதி கணத்தைப் பார்த்துவிட்டார். எனவே கால இடக் கட்டுத்தளைகளை விட்டும் விடுதலை ஆகிவிட்டார். தனது ஆதி நிலையை நினைவு கொள்வதன் மூலம் அவர் இதனைச் சாதித்திருக்கிறார். இந்த ஆற்றல் அனைத்து மனிதர்களுக்குள்ளும் உறங்கிக் கிடக்கிறது. ஆதியை அவர் அறிவதால், முடிவிலியான அந்தம் என்ன என்பதும் அவருக்குத் தெரியும் ஆதலால் ‘இப்போது’ என்பதைப் பற்றிய அக்கறை அற்றவராகிறார். தனது நிலையை அடைந்திராத, “புறக்காட்சி” மட்டுமே கொண்ட ஏனைய மனிதர்களுக்கு அவரே “அகக்காட்சி” பெற்ற வழிகாட்டி (முர்ஷித் / ஷைகு) ஆகிறார். ஆன்மிகப் பாதையை ஏற்கனவே பயணித்து முடித்தவர் என்பதால் பாதையின் நெளிவு சுளிவுகளும் மேடு பள்ளங்களும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். எனவே அதில் பயணிக்க விழைவோருக்கு வழிகாட்ட அவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்.

            நற்செயல்களுக்கான (அஃமால்) நற்கூலியாக (ஸவாப்) இறைநேசம் (விலாயத்) என்னும் பேரருட்கொடை (நிஃமத்) கிடைக்கும் என்பதை மவ்லானா ரூமி திட்டவட்டமாக மறுக்கிறார். இறைநேசப் பதவிக்கு உயர்தல் என்பதும், இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் என்பதும் எல்லாம் அதீதமான வணக்க வழிபாடுகள் செய்வதால் கிடப்பன அல்ல; அவை இறைவன் தான் நாடியவர் மீது பொழிகின்ற அருட்கொடைகள் ஆகும். எனினும், நற்காரியங்களால் அருட்கொடைகள் தமக்கு நல்கப் பெறுமாறு தூண்ட முடியும் என்று கருதப்படுகிறது. இந்த விசேடமான அருளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் அதன் பின் சாதாரண நடத்தை நியதிகளுக்கு உட்பட்டவர் அல்லர். வெளித்தோற்றத்தில் பாவத்தைப் போல் தோன்றுவது உண்மையில் அவருக்குப் பாவமாக இல்லாதிருக்கலாம்; அத்தகையோரில் பாவங்கள் நிகழாது. ஏனெனில் செயற்படுவது அவர் அல்லர், இறைவனே. தன் நேசர்களின் விசயத்தில் இறைவன் நிச்சயமாக மிகவும் பொறாமை உடையவன். எனவே பாமரரின் பார்வையை விட்டும் அவர்களை அவன் மறைத்து வைக்கிறான். அவர்களின் அந்தரங்க எதார்த்தம் என்ன என்று உலகம் அடையாளம் காண்பதில்லை – இருப்பினும் இவ்வுலகம் நிலைத்திருப்பதும் உய்வதும் அவர்களின் நிமித்தமே.

            ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைஞானி மீதான ஒத்திசைவின் இழை ஒன்று மறைந்து கிடக்கிறது. அதனை அவன் கண்டறிந்து மீட்டாத வரை இறைஞானியின் சொற்கள் அவனின் உள்ளம் புகா, உணர்ச்சி தரா. ஆனால், அந்த நரம்பு சுண்டப்பட்ட கணத்திலேயே ஒருவனில் ஆதி நிலைக்கான ஆன்ம ஏக்கம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. காட்சிப் பிழைகலைக் கட்டுடைத்து ஒருவன் வெளியேறியதும், தன்னை கணந்தோறும் அழைத்துக் கொண்டிருக்கும் நித்தியப் பேரரசனின் கையில் போய் அமரும் பொருட்டு இந்த முப்பரிமாண உலகை விட்டெழுந்து பறப்பதற்காக அவனது ஆன்மா என்னும் ராஜாளி (ஷாஹீன்) தனது உள்ளுணர்வின் சிறகுகளை விரிக்கிறது.

            மஸ்னவி (1:3157)-இல் விரிவாகவும், ஃபீஹி மா ஃபீஹி (அத்தியாயம் #50)-இல் ஒரு பத்தியிலும் ரூமி கூறும் ஓர் உருவகக் கதையில், யஃகூப் நபியின் மகனான யூசுஃப் நபி, நெடுமபயணத்தில் இருந்து ஊர் திரும்பிய நண்பன் ஒருவனை எதிர்கொண்டு வரவேற்கிறார். பயணத்தில் இருந்து தனக்கு என்னென்ன அன்பளிப்புகளை அவன் கொண்டு வந்தான் என்று கேட்கிறார். யூசுஃப் நபிக்குப் பொருத்தமான பரிசு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று தான் எல்லா இடங்களிலும் அலசித் தேடியதாகவும் யூசுஃபின் கருவூலத்தில் இல்லாத பொருள் எதையுமே தான் காணவில்லை என்றும், கடைசியில், யூசுஃப் நபியின் பேரழகைப் பிரதிபலித்துக் காட்டும் ஒரு கண்ணாடியைத் தவிர வேறு ஒரு சிறந்த பரிசு இருக்க முடியாது என்று உணர்ந்து அதையே வாங்கி வந்ததாகவும் நண்பன் சொல்கிறான்.  அதே போல், மண்ணுலக வாழ்வின் பயணத்தில் இருந்து தனக்கு என்ன பரிசுப் பொருளைக் கொண்டு வந்தான் என்று மனிதனை இறைவன் கேட்பான். இறைவனின் பேரழகைப் பிரதிபலிக்குமாறு செம்மையாக மெருகேற்றப்பட்ட ஒரு கண்ணாடி மட்டுமே கேவலப்படாமல் அவன் முன் வைக்க முடிகின்ற ஒரே அன்பளிப்பு.  அவனின் உள்ளமே அந்தக் கண்ணாடி. உலகப் பொருட்கள் மீதான பற்றின் கறையும் தன்னல ஆசைகளின் துருவும் மனக் கண்ணாடியின் மேற்பரப்பில் இருந்து துடைத்து நீக்கப்பட்ட பின் அதனால் இறையழகைப் பிரதிபலிக்க முடியும். மனிதனின் சுயம் என்னும் கண்ணாடியை அதன் பிறகு தெய்விகத்தின் ஒளிச்சுடர்கள் படுமாறு உயர்த்திப் பிடிக்கலாம். படைப்புக்களில் இறைவன் கோரும் நோக்கம் நிறைவேறும். ஏனெனில், அப்போது இறைவன் தன் பிரதிபலிப்பை அதில் கண்டு தன்னை அறிய முடியும்.

3 comments:

  1. மறுமையில் தாழிடப்படும் நாவின்
    நினைவுகளை ஒரு கனம் கண்ணாடியுடன் தொடர்புபடுத்தி விட்டீர்கள் . சுப்ஹானல்லாஹ்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. “ஃபீஹி மா ஃபீஹி”யை எப்போது நாங்கள் தமிழில் முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிட்டும் மௌலா?

    ReplyDelete