Monday, February 17, 2020

தோட்டத்தில் இன்று மாலை




குழாய் பீய்ச்சும் தண்ணீர்
பட்டதும்
உதறிக்கொண்டு
அப்பாலொரு புல்லின் மேல்
சென்று அமர்ந்தது
அப்போதுதான் புதிதாய்
என் கண்ணில் பிறக்கும்
பூச்சி ஒன்று.

அதனைப் போலவே
அதன் பெயரை
அறியேன் யானும்.

(பெயரும்தான் உண்டோ?
அதுவேதானொரு பெயரோ?)

அவளை அழைத்துக் காட்டிட
திரும்பி மீள்வதற்குள்
மறைந்து போய்விட்டது
எங்கோ
எனக்குள்.

Wednesday, February 12, 2020

என்றார் சூஃபி (பாகம்-2) - 3


4

      திருமண விழாவில் புதிய இளம் இணையரை மலர்த்திரை அலங்காரங்களுடன் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றிருந்தனர்.

      ”Marriages are made in heaven” (”திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”) என்று அக்காட்சியைப் பார்த்தபடி சொன்னார் ஒருவர்.

      அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றோம். பூங்காவில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

      ”Marriage is a raw material. You make heaven or hell out of it” (’திருமணம் ஒரு கச்சாப் பொருள். நீங்கள் அதைக் கொண்டு சொர்க்கத்தை அல்லது நரகத்தை உருவாக்குகின்றீர்கள்’) என்றார் சூஃபி.

5

      கடல் போல் பரந்து கிடந்த ஏரிக்கரையில், புல்வெளியில் அமர்ந்திருந்தோம். மகிழுலா வந்த மக்கள் திரள் அங்கும் இங்கும் ஆரவாரத்துடன் அலைந்து கொண்டிருந்தது. அந்தகர் ஒருவர் கோலால் தட்டித் தட்டி நடந்து கொண்டிருந்தவர் சிறு குழி ஒன்றில் கால் இடரி விழுந்தார். சிலர் ஓடிச் சென்று அவரைத் தூக்கியமர்த்தி உதவினர்.

      ”அடடா, பார்வை இல்லாததால் அவருக்குக் குழி இருந்தது தெரியவில்லை. அதனால் அப்படி விழுந்து விட்டார்” என்றார் நண்பர்.

      மக்கள் நொறுக்குத் தீனிகள் வாங்கவும் அவற்றைக் கொரித்துக்கொண்டே அரசியலும் கேளிக்கையும் இன்ன பிறவும் பற்றிப் பேசிக்கொண்டே திரியவும் ஆங்காங்கே நின்று படமெடுக்கவுமாகப் பரபரத்து இயங்குவதைச் சுட்டிக் காட்டினார் சூஃபி. ’இங்கேயும் அவர்கள் உலகத்தையே காண வந்திருக்கிறார்கள்’ என்றார்.

      பிறகு நாங்கள் அவ்விடம் விட்டு அகன்றோம். அறைக்குள் எல்லோரும் அமர்ந்து தேநீர் பருகினோம்.

      ”மனிதன் விழுந்ததால் பார்வையை இழந்து விட்டான். அதனால் அவனுக்கு உலகம் மட்டுமே தெரிகிறது” என்றார் சூஃபி.

கனி வழி



     நான் பெரிதும் மதிக்கும் அந்த முதிய அறிஞரை என் மாணவனுக்கு அறிமுகப்படுத்துகிறேன். “அப்படியே பழமா இருக்காறே!” என்று வியந்து சொல்கிறான் அவன்.

      முதுமையைக் கிழம் என்று சொல்லாமல் பழம் என்று சுட்டுகின்ற தமிழ்ப் பண்பாட்டில் உள்ள ஞானத்தை எண்ணி எண்ணி வியந்து போகிறேன்.

      பழம் என்பதற்கு இன்னொரு சொல் கனி. மென்மையும் இனிமையும் சேர்ந்த நிலையே கனிவு.

      எல்லாப் பழமும் கனி அல்ல. மிளகாய்ப் பழம் கனி அன்று.

      அதுபோல், வயது செல்லச் செல்ல உடலால் மட்டுமே முதுமை அடைந்து உள்ளம் பக்குவப்படாமல் இருப்போர் பழமே அன்றி கனி அல்லர். அகத்தில் கனிவை அடைந்தோரே கனி என்று கொண்டாடத் தக்கோர்.

            அகத்தின் கனிவு முதுமையில்தான் உண்டாக வேண்டும் என்பதில்லை. இளம் வயதிலேயே சிலருக்கு அகக்கனிவு வாய்த்துவிடுவது உண்டு.

      பெரியவர் போல் பேசும் சிறியோரை, ‘பிஞ்சில் பழுத்தோர்’ என்று குறிப்பிடும் சொல்லாடல் உண்டு. பக்குவமின்றி அன்னனம் பேசும் சிறியோரை ‘பிஞ்சில் வெம்பியோர்’ என்று சொல்வதே பொருத்தம். பக்குவமுடன் அன்னனம் பேசும் சிறியோரையே ’பிஞ்சில் பழுத்தோர்’ என்று சொல்லத் தகும்.

      நல்ல கலைகள் பிஞ்சுகளைப் பழமாக்கும்; தீய கலைகள் பிஞ்சுகளை வெம்பிடச் செய்யும்.

      ஆங்கிலக் கவிஞர்களுள் ஜான் கீட்ஸ் ஒரு ஞானக் கனி. ஆங்கில இலக்கிய உலகின் சிகரமாகிய ஷேக்ஸ்பியரைத் தனது ஆசான் என்று கொண்டவன். ஷேக்ஸ்பியரைப் போல், கீட்ஸும் பிறப்பிலேயே ஓர் ஆத்மஞானி (a born mystic) என்கிறார் மார்டின் லிங்ஸ்.



      இருபத்தாறு என்னும் இளம் வயதில் இறந்துவிட்ட அந்த அற்புதக் கவிஞன், தனது மானசீக குருவான ஷேக்ஸ்பியரின் பல்லாயிரம் கவிதை வரிகளில் இருந்து தேர்ந்து அடிக்கடி மேற்கோள் காட்டிய வரிகள் இவை:

      ”இவ்விடம் வருவதை உவத்தல் போன்றே
      இங்கிருந்து செல்வதையும் மனிதர் கருதுக.
      கனிவே எல்லாம்.”
      (Men must endure / their going hence, even as their coming hither; / Ripeness is all).

       ”காய் கனியாக மாறியவுடன் தானே காம்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மரத்தைப் பிரிந்து விடுகிறது. அதுபோல், அகம் கனிந்து விடின் தானே இவ்வுலகப் பற்றிலிருந்து விடுதலை ஏற்பட்டு விடுகிறது” என்கிறார் ஓஷோ.

      கனிந்த உள்ளம் இவ்வுலகை விட்டு விடுவதற்கு ஆயத்தம் ஆகிவிடுகிறது. மேற்சொன்ன ஷேக்ஸ்பியர் வரிகள் “கிங் லியர்” என்னும் நாடகத்தில் உள்ளவை. இதற்கு இணையான இன்னொரு வரி “ஹேம்லட்” என்னும் நாடகத்தில் இருப்பதை மார்டின் லிங்ஸ் சுட்டிக் காட்டுகிறார்: “the readiness is all” – ‘ஆயத்தமே எல்லாம்.”

      கனிவு (ripeness) மற்றும் ஆயத்தம் (readiness) ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் ஷேக்ஸ்பியர் சுட்டியிருப்பது அவரது அறிவின் ஆழத்தைக் காட்டுகிறது.

      ”இறக்கும் முன்பே இறந்து விடுக” (மூத்தூ கப்ல அன் தமூத்தூ) என்னும் சூஃபி வாசகத்தை இக்கோணத்தில் நோக்கினால், ’உள்ளத்தில் கனிவு கொள்’ என்று அர்த்தப் படுகிறது.

      ’என் வழி தனி வழி’ என்று சொல்வோன் ஆன்மிகவாதி அல்லன்; ’என் வழி கனி வழி’ என்று அமைவதே ஆன்மிகம் என்க.