Tuesday, March 20, 2018

சூஃபித் தோட்டம் – அர்த்தங்கள் மலரும் வெளி


சாதிக் ஆலம்
தமிழில்: ரமீஸ் பிலாலி
(“The Sufi Garden – Place of Many Meanings” என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)


வசந்தத்தில்
பூவனம் வா

ஒளியும் மதுவும்
உள்ளன அங்கே

மாதுளம் பூக்களில்
காதலிகள்

நீ வரவில்லை எனில்
இவை எதுவும் பொருட்டல்ல

நீ வந்தாய் எனில்
இவை எதுவும் பொருட்டல்ல

 ஒரு சூஃபிக்கு மலர்வனம் என்பது பல அர்த்தங்கள் கொண்டது. அது ஓய்விடம், கட்டடங்கள் பலவற்றுள் நுழைய வாயில் திறக்கும் மைய இடம், அழகை தரிசித்தல் மற்றும் தியானத்திற்கான இடம், அல்லாஹ் தனது அடையாளங்களை வெளிப்படுத்தும் தொடுவானம் மற்றும் பிரபஞ்சத் தோட்டக்காரனை (இறைவனை) ஒருவர் கண்டுகொள்ளும் இடம்.
சூஃபிக் கூடம் (தைக்கா / ஃகான்காஹ்) ஒவ்வொன்றும் ஒரு பூங்காவைப் பெற்றிருந்தது. புறவுலகை விட்டும் அது உயரமான நெடுஞ்சுவர்களால் கவசமிடப்பட்டிருந்தது. பெரும் பறவை ஒன்றின் நீளும் சிறகினைப் போல் சூஃபிக் கூடத்தைக் கட்டமைக்கும் பல கட்டிடங்களையும் இணைக்கும் மையப் புள்ளியாகப் பூங்கா அமைக்கப்பட்டது. தியானமும் ஞான இசையும் நிகழும் ’சமாஃகானா’, ஞான உரையாடல்கள் நிகழும் ’மஜ்லிஸ்’, பெண்களின் தனியிடம் (ஹரம்), மடப்பள்ளி (அதாவது, சமையலறை), நூலகம், நீர்த்தடாகம், குருவின் இல்லம் மற்றும் பள்ளிவாசல் ஆகியன எல்லாம் அந்தப் பூங்காவிலிருந்து செல்ல முடிந்தவையாக அமைந்தன.
மௌலானா ரூமியின் சூஃபி நிலையம் (தைக்கா) துருக்கி நாட்டின் ’கூன்யா’ என்னும் ஊரில் இருக்கிறது. அதன் பூந்தோட்டம் மிகப் பரந்தது. அந்நிலையத்தில், நீல நிற ஓடுகள் பதிக்கப்பட்டதும் கூம்புக் கூரை கொண்டதுமான கோபுரமுண்டு. அதற்கு நேர் கீழேதான் மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் மண்ணறை உள்ளது. சிறப்பான நாட்களில், திரளும் மேகங்களும் திரியும் பறவைகளும் கொண்ட வானின் கீழே இந்தத் தோட்டத்தில்தான் தியான இசை நிகழ்த்தப்பெறும். ரூமி பாடினார்:

“நானொரு வான் தோட்டப் பறவை

யானல்லன்
இவ்வுலகைச் சேர்ந்தவன்

இரண்டோ மூன்றோ நாட்களுக்கென
செய்திருக்கிறார்கள்
என்னுடலின் இக்கூண்டினை”

இந்த இரண்டு மூன்று நாட்களில் தர்வேஷ் (அதாவது, சூஃபி) மறைந்திருக்கிறார். அவரின் மறைப்பு ஒரு பாதுகாவல், முள்ளால் அழகிய ரோஜா பாதுகாப்பு அடைவதைப் போல். ஆடையால் அல்லது ஒரு குறிப்பிட்ட மனநிலையால் அந்த மறைப்பு உருவாகிறது. பல் ஷைஃகுகள் (சூஃபி குருமார்கள்) காதலைப் பற்றி எழுதினார்கள். ரூமியைப் போல் அவர்கள் ஆன்மிகக் காதலை, உடலை விட்டும் அப்பாலான காதலையே எழுதினார்கள். ஆனால், இதனை யாரும் உணரவில்லை, ஃபரீதுத்தீன் அத்தார் மருந்து வணிகம் செய்தார், பஜாரில் ஓர் அங்காடி வைத்திருந்தார். பிறர் இலக்கியம் பற்றி எழுதினார்கள், நூல் வியாபாரம் செய்தார்கள், அல்லது பிற தொழில்கள் புரிந்தார்கள். உலக மக்களின் ‘நச்சரிப்பை’த் தவிர்ப்பதற்காக அவர்களின் மெய்ந்நிலை மறைக்கப்பட்டிருந்தது.

நபிகள் நாயகம் சொன்னார்கள், “அல்லாஹ் தன் நேசர்களை மறைத்து வைத்துள்ளான்”.

மௌலானா ரூமி தனது உரை ஒன்றில் சொன்னார்கள்: அல்லாஹ்விடம் ஒரு அஞ்சனம் இருக்கிறது. அதை ஒருவரின் கண்களில் இட்டால் அவரின் அகக் கண்கள் திறந்துவிடும். பிறகு அவர் இருப்பின் ரகசியத்தைக் காண்பார், மறைவானவற்றின் அர்த்தங்கள் அவருக்கு விளங்கவரும். ஷைஃகின் பார்வையால் ஒருவரின் இதயம் இந்த நிலைக்கு வெளிச்சமாக்கப்பட முடியும்.

























ஒருவரின் அகக் கண் திறந்துவிடும்போது அவர் இவ்வுலகப் பூக்கள் சொற்ப காலமே வாழ்வதையும் ஞானத்தில் பூக்கும் மலர்கள் எப்போதும் புத்தம் புதிதாக இருந்துவருவதையும் காண்கிறார். மண்ணில் பூக்கும் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன; இதயத்தில் பூக்கும் பூக்கள் ஆனந்தம் தருகின்றன. நாம் அறிந்து வைத்திருக்கும் அறிவுத் துறைகள் அனைத்துமே அந்த ஒரு பூங்காவின் மூன்று மலர்க்கொப்புகள் மட்டுமே. நாமே நமக்கு அந்தத் தோட்டத்தின் வாசலை அடைத்துக்கொண்டோம் என்பதால்தான் அந்த மூன்று மலர்க்கொப்புகளுக்கு அர்ப்பணமாகிறோம். ரூமி சொல்கிறார்:

“நம் சொற்களை கவனி

ஞான ரோஜாக்களின்
நறுமணம் அவை

நாமோ
ஞானத் தோட்டத்தின்
ரோஜாப் புதர்கள்”

‘ரோஜா’வின் நறுமணம் ஒருவரை ’ரோஜா’விடம் அழைத்துச் செல்லும். சில சமயங்களில் ‘ரோஜாக்கார’னிடமே அழைத்துச் செல்வதும் உண்டு.

ஆனால், நாம் காலவிரயம் செய்யலாகாது என்பதில் மௌலானா ரூமி உன்னிப்பாக இருக்கிறார். ஒரு கவிதையில் அவர் சொல்கிறார்:

”என் கவிதை
எகிப்து நாட்டின் ரொட்டி போன்றது

ஓர் இரவு அதன் மீது கடந்து போனால்
பிறகு அதை உண்ண முடியாது

அது புதிதாக இருக்கையில்
இப்போதே சுவைத்துவிடு
அதன் மீது தூசி படிவதற்கு முன்பே”

மௌலானா ரூமிக்கு இசை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உணர்வுறவு. தனது தீவானில் (கவிதைத் தொகுப்பில்) அவர் சொல்கிறார்:

”ஓய்வற்ற ஆன்மாவுக்கே இசை உரியது
விரைந்து குதித்துவிடு, ஏன் தயங்குகிறாய்?

உன் சிந்தனைகளில் மூழ்கிப்போய்
இப்படியே குந்தியிருக்காதே

நீயொரு மனிதன் எனில்
இறைவனிடம் செல்

’அவனுக்கு நான் தேவையில்லையோ என்னவோ’
என்றெல்லாம் உளறாதே

அத்தகைய வார்த்தைகளுடன்
தாகித்த மனிதனுக்குத் தொடர்பு என்ன?

தீயின் நாவுகள் பற்றி
விட்டில்கள் யோசிப்பதில்லை

காதலின் ஆன்மாவிற்குச்
சிந்தனை என்பது அவமானம்

முரசொலி கேட்குமொரு வீரன்
தானே பல்லாயிரம் வீரகள் ஆகிறான்

இறைவா!
இசையே உன் தோட்டத்தின்
ஜன்னல் ஆனது

உன் காதலரின்
செவிகளும் இதயங்களும்
அந்த ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கின்றன”


கோன்யாவுக்கு வெளியே சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள மீரம் என்னும் மலையின் உச்சியில் உள்ளது ஹுசாமுத்தீனின் வீடு. அவர் மௌலானா ரூமியின் ஆன்மிகப் பிரதிநிதியும் எழுத்தரும் ஆவார். அந்த மரவீடு (wooden house) வசதியானதாக, பூங்காவும் பழத்தோட்டமும் கொண்டிருந்தது. தியானிப்பதற்கும் ஆன்மிக உரைகள் நிகழ்த்துவதற்கும் இசை நிகழ்ச்சிக்கும் மௌலானா ரூமி அடிக்கடி இந்த வீட்டுக்கு வருவார்கள். சீடர்கள் பலரும் அதில் கலந்துகொள்வார்கள். மௌலானா ரூமி உள்முகமாகத் திரும்பி, தன்னைத் தானே அணைப்பது போல் தனது அங்கியைப் பிடித்துக்கொள்வார்கள். ரூமியின் மகனார் சுல்தான் வலத் அவர்களின் வழியாக வடிவமைக்கப்பட்டு இன்றைய மௌலவி சூஃபி வழிமுறையில் நாம் காணும் ’சுழல்தல்’ தியானம் போன்றதல்ல அது. ரூமியின் ஆன்மா அன்பால் நிரம்பி வழியும். எனவே, அவர் தனது சீடர் ஒவ்வொருவராக வந்து தன்னை லேசாக அணைத்துக்கொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து சற்றே சுழலவும் அனுமதித்தார்.
இதனைப் போன்றதொரு அசைவை இன்று காணவேண்டும் எனில் ஹல்வத்தி சூஃபி நெறியில் உள்ள ”பதவீ டோப்பு” தியானத்தைச் சொல்லலாம். தியான வளையத்தை ஷைஃகு (குரு) ஊடுறுவி நிறுத்தி சீடர்களில் ஒருவரின் கைகளைக் குறுக்காகப் பிடித்துள்ள அவர் குருவுடன் இணைந்து இறை நாமத்தை உச்சரித்தபடியே நகர்வார். அவ்விருவரையும் மையப்புள்ளியாக வைத்துப் பிற சீடர்கள் பொதுமைய வட்டங்களை உருவாக்குகிறார்கள். மையப்புள்ளியின் ஆன்மிக அபவிருத்தி (பரக்கத்) வெளி வட்டங்களில் பாய்கிறது.
ஹுசாமுத்தீனின் வீட்டுத் தோட்டத்தில் அத்தகையதொரு மாலை நேரத்தில்தான் மௌலானா ரூமி அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) பற்றிப் பேசத் தொடங்கினார்கள். ”நபி அவர்கள் ’உம்மி’ (பாமரர்) என்று அழைக்கப்படுவது அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதால் அல்ல. அப்படி அவர்கள் அழைக்கப்படக் காரணம், அவர்களின் எழுத்துக்களும் அறிவும் ஞானமும் அவர்களில் இயற்கையாகவே அமைந்தவையாக, கற்கப்படாதவையாக இருந்தன என்பதுதான். நிலாவில் கல்வெட்டுச் செதுக்கிய அந்த மனிதரா எழுதத் தெரியாதவர்? அனைவரும் அவரிடமிருந்தே படிக்கிறார்கள் எனும்போது அந்த மனிதர் அறியாத ஒன்று இவ்வுலகில் ஏது? பிரபஞ்ச அறிவில் இல்லாத எதனைப் பகுதியறிவு வைத்திருக்க முடியும்? தான் முன்பு கண்டிறாத எதனையும் பகுதியறிவால் வெளிப்படுத்த இயலாது. காகத்தின் கதையை நினைவு கூர்க. ஹாபிலைக் கொன்ற காபில் அவ்வுடலை என்ன செய்வது என்று அறியாது நின்றபோது காகம் ஒன்று இன்னொரு காகத்தைக் கொன்று பின் மண்ணில் குழி பறித்து இறந்த காகத்தின் உடலைப் புதைத்தது. இதிலிருந்தே பிணத்தைப் புதைக்கவும் மண்ணறை அமைக்கவும் காபில் கற்றுக்கொண்டார். எல்லாத் தொழில்களும் இப்படித்தான். பகுதியறிவு கொண்டவனுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. தமது பகுதியறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைத்து ஒன்றாக்கியவர்கள் இறைத்தூதர்களும் இறைநேசர்களும் மட்டுமே”.

ரூமி சொல்கிறார்கள்:

“பூந்தோட்டத்தில் உறங்கும் ஒருவன் தான் எழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், சிறைச்சாலையில் உறங்கும் ஒருவனுக்கோ எழுப்பப்படுதல் என்பது பெரும் வேதனையே ஆகும்”.

நபிகள் நாயகத்தின் ஒரு ஹதீஸ் (அருள்மொழி) சொல்கிறது: “நீங்கள் சொர்க்கப் பூங்காக்களின் பக்கம் சென்றால் நன்றாக மேய்வீராக”. அவர்கள் கேட்டார்கள், ‘இறைத்தூதரே! சொர்க்கத்தின் தோட்டங்கள் என்பவை என்ன?’ நபி(ஸல்) சொன்னார்கள்: “தியானச் சபைகள்”.

ஒரு முஸ்லிமுக்குத் தோட்டங்களில் எல்லாம் சிறந்தது சொர்க்கம்தான். மௌலானா ரூமி இதனை மிகச் சுருக்கமான வரிகளில் சொல்கிறார்கள்:

“தோட்டங்களில் அழகு நிரம்பி வழியலாம்
வாருங்கள் நாம் தோட்டக்காரனிடமே செல்வோம்”

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘பாக்பான்’ (தோட்டக்காரன்) என்றால் உலக ரீதியில் தோட்டத்தில் வேலை செய்பவன் என்று பொருட்படும். தோட்டத்தின் சொந்தக்காரனைக் குறிப்பதில்லை. இங்கே இரண்டுமாய் இருக்கின்ற இறைவனைக் குறிப்பதற்கே இச்சொல் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. சூஃபி இலக்கியங்களில் இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் குறியீடுகளில் ஒன்று. அது அதன் முழுமையான அர்த்தத்தில் இயல்பாகவே அம்மொழியினரால் புரிந்திகொள்ளப்படுகிறது).


குர்ஆனிய ஆன்மிக நிலக்காட்சி மற்றும் உரையாடலில், தமது மூலத்திற்குத் திரும்பிவிட்ட ஆன்மாக்கள் பேரின்பம் காண்கின்ற இறுதியிடமான விண்ணுலகம் என்பது “தோட்டம்” (ஜன்னத்) என்றே அழைக்கப்படுகிறது. இறைக்காட்சி மற்றும் பேரின்பம் ஆகியவையே பக்தர்களுக்கான இறுதி முடிவாகவும் தங்குமிடமாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. அதுவே இறுதித் தீர்ப்பிற்கான குறியீடாகவும் அமைகிறது.  

வ இதல் ஜன்னத்து உஸ்லிஃபத்
அலிமத் நஃப்சும் மா அஹ்ளரத்

”சொர்க்கப் பூங்கா அருகில் கொண்டுவரப்படும்போது
ஒவ்வோர் ஆத்மாவும்
தான் கொண்டுவந்ததை அறிந்துகொள்ளும்”
(குர்ஆன்: 81:13-14)

வ அம்மா மன் ஃகாஃப மகாம றப்பிஹி
வ நஹன் நஃப்ச அனில் ஹவா
ஃப இன்னல் ஜன்னத்த ஹியல் மஃவா

“எவர் தன் இறைவனின் உறைவிடத்தை அஞ்சி
இச்சையை விட்டும் தன் உள்ளத்தைத் தடுத்தாரோ
நிச்சயமாக அவரின் தங்குமிடம்
சொர்க்கப் பூங்காதான்”
(குர்ஆன்: 79:40-41)

யா அய்யுஹன் நஃப்சுல் முத்மஇன்னஹ்
இர்ஜிஈ இலா றப்பி(க்)கி ராளியத்தம் மர்ளிய்யஹ்
ஃபத்ஃகுலீ ஃபீ இபாதீ
வத்ஃகுலீ ஜன்ன(த்)தீ

நிம்மதி அடைந்த ஆத்மாவே!
நீ உன்னுடைய இறைவனிடம்
திருப்தியடைந்த நிலையிலும்
அவன் உன் மீது
திருப்தியடைந்த நிலையிலும்
மீளுவாயாக!
நீ என் நல்லடியார்களில்
இணைந்துவிடு
நீ என் சொர்க்கப் பூங்காவில்
நுழைந்துவிடு”
(குர்ஆன்: 89:27-30)


No comments:

Post a Comment