Sunday, March 18, 2018

ஹாஃபிஸ் கவிதைகள் - 1





தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி


அலையுறும் கூந்தலின் முன்னே...

அழகிய சகியே! கோப்பையுடன் வா
என் வாயில் வார்த்திடு நேரடியாய்
காதலின் பாதை எளிதெனத் தோன்றியது முதலில்
போகப் போக வந்தன சிரமங்கள் ஏராளம்

காலைத் தென்றல் தனது நறுமணத்தால்
காதலியின் பின்னலை அவிழ்க்கிறது
அலையுறும் அந்தக் கரிய கேச வளைவுகள்
இதயங்களை இழை இழையாய்க் கிழிக்கிறது

என் காதலியின் இல்லத்தில்
எப்படி நிம்மதியாய் விருந்தயர்வேன்?
பிரிவின் பயணத்திற்கு அழைக்கிறது
ஆலய மணியின் ஓசை

”மதுவால் உன் ஆடைக்குச் சாயமேற்று”
பழைய குருவின் ஆலோசனையைக் கேள்
ஏனெனில் சீடனுக்கு ஒன்றுமே தெரியாது
இப்பாதையின் படித்தரங்களும் சட்டங்களும்

காரிருள் இரவு, அச்சுறுத்தும் அலைகள்
ஆர்ப்பரிக்கும் சுழல்கள் இங்கே
எவனது கப்பல்கள் இன்னமும்
துறைமுகம் விட்டுக் கிளம்பவே இல்லையோ
எப்படி அறிவான் அவன்
எமது நிலை என்னென்று?

என் முழு வேலையே
என் சுயத்தினுள் மூழ்குவதாய் இருந்தது
இறுதியில், பெயர் கெட்டுப் போனேன்
ஒவ்வொரு நாவிலிருந்தும் சொட்டுமொரு ரகசியம்
எப்படி மறைந்ததாய் இருக்க முடியும்?

அவளுடன் இருக்கவே நாடுகிறாய் என்றால்
அவளைவிட்டு ஏன் ஓடி ஒளிகிறாய், ஹாஃபிஸ்?
உன் காதலின் இலக்குடன் ஒன்றிவிடு
உலகைத் துற, அதன் அனைத்தையும் துற.



உன் தாடைக்கு அப்பாலும் பார்

நல்ல காரியங்கள் எங்கே?
சீரழிந்த என் செயல்கள் எங்கே?
வித்தியாசத்தைப் பார்,
எங்கிருந்து என்பதற்கும்
எப்போது என்பதற்கும்!

தேவாலயம் மற்றும் அதன் அங்கிகளைப்
புறந்தள்ளினேன் நான்
சூஃபி குருவின் இருப்பிடம் எங்கே?
இனிய மது எங்கே?

வழிபாடுகளும் இறையச்சமும்
சித்தர்களுடன் என்ன தொடர்பு?
போதனைப் பிரசங்கம் எங்கே?
யாழின் இசை எங்கே?

காதலியின் முகத்தின் முன்னே
பகைவரின் இதயங்கள் சாய்கின்றன
அணைந்த விளக்குகள் எங்கே?
சூரிய மெழுகுவத்தி எங்கே?

உன் இருப்பிடத்தின் வாசற்புழுதியே
என் கண்களின் அஞ்சனம்
நான் வேறெங்கு செல்வேன்?
சொல், நீயே சொல்

பாதையில் உள்ளன கண்ணிகள்
உன் தாடைக்கு அப்பாலும் பார்
எங்கே விரைகிறாய் அப்படி,
ஓ இதயமே! எங்கே விரைகிறாய் நீ?

அவளுடன் இணையும் நாளின் நினைவுகள்
இன்பமாக இருக்கட்டும் என்றும்
முன்பிருந்த ஈர்ப்புகள் எங்கே போயின?
அன்றிருந்த தாராளம் எங்கே?

வாக்குறுதியும் கனவுகளும் வேண்டாம் நண்பா!
ஹாஃபிஸ் சொல்வதைக் கேள்
ஒப்பந்தம் என்ன? நிம்மதி எது? உறக்கம் எங்கே?



இந்து மச்சம்

ஷீராஸ் நகரின் அந்த அழகி
கைப்பற்றிப் போவாள் என் இதயத்தை எனில்
சமர்கந்த் புகாரா நகரங்களைத் தருவேன்
அவளின் இந்து மச்சம் ஒன்றுக்கே

சொர்க்கத்தில் கேட்டாலும் கிடைக்காத
அந்த நிரந்தர மதுவைக் கொண்டு வா சகியே!
நீரோடைகளில் பூவனங்களில்
உன் வாழ்வின் நாட்களை உலவவிடு

ஊரெல்லாம் பேசும் இந்த இனிய நாடோடிகள்
என் இதயத்தின் நிம்மதியைப் பறித்துவிட்டார்கள்
வரிப்பணம் கேட்கும் துருக்கியரைப் போல

நம் குறைப்பட்ட காதலை விட்டும்
நண்பனின் பேரழகு தேவையற்றதாய் உள்ளது
நீர் நிறம் மச்சம் தோற்றம் இவையெல்லாம்
அந்த பேரழகிற்கு என்ன தேவை?

ஒவ்வொரு நாளும் வளர்வ்தான
யூசுஃபின் அந்த அழகை அறிவேன் நான்
தூய திரையை விட்டும் சுலைஃகாவை
வெளியே கொண்டுவந்துவிட்டது காதல்

சினந்து பேசினாள் என்றாலும்
சாபமே மொழிந்தாள் என்றாலும்
அந்தச் சிவந்த இனிய உதடுகளுக்கு
நன்றியே சொல்கிறேன் நான்

அறிவுரைக்குக் காது கொடுங்கள்
பேரின்ப அருளுக்கான இளைஞர்களே!
உமது உயிரினும் மேல் எனப் போற்றுக
ஞானகுருவின் உபதேசத்தை

இசையும் மதுவும் பற்றிய சேதிகளைப் பேசுக
காலத்தின் ரகசியங்களைச் சொற்பமாகத் தேடுக
தன் அறிவால் இந்தப் புதிரைத் திறந்தவர்
இதுவரை யாருமில்லை
இனியும் யாருமில்லை

ஓ ஹாஃபிஸ்!
கஸல்கள் எழுதினாய்
இசைகள் பாடினாய்
நன்றாக வாழ்ந்துவிட்டாய் நீ
விண்ணின் ஒளிரும் வடக்கு நட்சத்திரம்
உன் கவிதைகளில் இணைந்துவிட்டது



ஏசுவின் நடனம்

இளங்காற்றே! தயவுடன் சொல்லிவிடு
அந்த அழகிய மானின் காதுகளில்
உன்னால்தான் மலைகளிலும் காடுகளிலும்
சுற்றித் திரிகின்றேன் நான் என்று

அழகு தேசத்தின் அரசன் நீயே
நன்றி நவிலும் பிரஜை நான்
எனினும்,
சமவெளிகள் மற்றும் பாலைவனத்தின்
பரதேசிகளை மறந்துவிடாதே!

அந்தச் சர்க்கரை வணிகனின் ஆயுளை
இறைவன் நீளமாக்கட்டும்!
போகட்டும், தேனீக்களைப் பற்றி ஏதும்
அவன் விசாரிப்பதே இல்லையே ஏன்?

ரோஜாவே! உன் அழகின் கர்வம்
உன்னை அனுமதிப்பதில்லை போலும்
உன் அழகில் அர்ப்பணமாகும் புல்புலின்
மன வேதனைகளை விசாரிப்பதே இல்லை நீ

அகப்பார்வை கொண்ட ஞானிகளை
நற்பண்புகளின் அழகால்தான் கவர முடியும் நீ
தானியங்கள் தூவப்பட்ட வலைகளுக்குள்
ஞானப்பறவை ஒருபோதும் சிக்குவதில்லை

காதலியின் அருகாமையில் நீயிருந்து
அவளுனக்கு மதுவும் வார்க்கும்போது
நாடோடி நண்பர்களையும் கொஞ்சம்
நியாபகம் செய்

மென் சாயல், கருவிழிகள்
நிலா முக அழகிகள்...
என்ன காரணம் என்பதறியேன்
பரிச்சயம் அற்றுப் போனதற்கு

உன் அழகின் மீது
குறையொன்றும் சொல்வதற்கில்லை எவரும்
அழகிய முகத்தில் முத்திரையாக
ஒரு மச்சம் இல்லையே
என்பதைத் தவிர

விண்ணுலகில் காதலின் தேவதை
ஹாஃபிஸின் பாடலை இசைக்கவும்
ஏசுநாதர் ஆனந்தக் களிப்பில் சுழல்வார் எனில்
வியப்பென்ன இருக்கிறது அதில்?


Hafiz will sing more... in-shaa Allah...

No comments:

Post a Comment