(இளையாங்குடியில்
உள்ள ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் தமிழ்த்துறை 11-03-2018 அன்று நடத்திய இன்குலாப் நினைவுக்
கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ”கவிஞர் இன்குலாப் இலக்கியத் தடம்” என்னும் ஆய்வுநூலில்
இடம் பெற்றுள்ள கட்டுரை)
”இன்குலாப்”
என்னும் சொல்லுக்குப் புரட்சி என்று பொருள். அரபியிலிருந்து உருது மொழிக்கு வந்த சொல்
அது. சாகுல் ஹமீது என்று இயற்பெயர் கொண்ட ஒருவர் ‘இன்குலாப்’ என்னும் சொல்லினைத் தனது
புனைபெயராகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதைக் கண்டால் தானொரு முஸ்லிம் என்பதால் அவர்
அந்தப் புனைபெயரை தேர்ந்துகொண்டார் என்று எவரும் தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பே
அதிகம். உண்மை அதுவல்ல.
அவர் ஓர் இடதுசாரி, முற்போக்குச் சிந்தனையாளர். மார்க்ஸியத்தையும்
பெரியாரியத்தையும் கொண்டு தனது உள்ளத்திற்கு உரமேற்றிக்கொண்டவர். எந்த மதத்தையும் சாராத
நாத்திகர். இடதுசாரிச் சிந்தனையாளனும் நாத்திகனும் விடுதலைப் புரட்சியாளனுமான பகத்சிங்கின்
முழக்கமான “இன்குலாப் ஜிந்தாபாத்” (’புரட்சி வாழ்க’) என்பதிலிருந்து தனது புனைபெயரை
அவர் வரித்துக்கொண்டார்.
இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை எனில் அவரது இயற்பெயரைச்
சுட்டிக்காட்டி அவரது புனைபெயரைச் சுற்றிப் பின்னப்படும் குழப்ப இழைகள் அவரது ஒட்டுமொத்த
வாழ்க்கைப் பணியின் நேர்மையை ஒருவர் உணரமுடியாமல் தடுத்துவிடும்.
இன்குலாப் என்று சொன்ன மாத்திரத்தில் அவரைக் குறித்து எழுகின்ற மனச்சித்திரம்
அவர் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின், விளிம்பு நிலைச் சமூகத்தினரின் கவிஞர் என்பதுதான்.
இந்த அழுத்தமான அடையாளமாகத்தான் அவர் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கட்டுரை, கவிதை
மற்றும் நாடகம் ஆகிய மூன்று இலக்கிய வகைமைகள் வழியே தீவிரமாகப் பங்காற்றியுள்ளார்.
இந்த மூன்று இலக்கிய வகைமைகளை நோக்க ஒருவகையில்
அவர் இயல் இசை மற்றும் நாடகம் ஆகிய முத்தமிழில் புதிய திசைகளைத் திறந்தவர் என்று சொல்லலாம்.
”சமயம் கடந்து மானுடம் கூடும் / சுவரில்லாத சமவெளி தோறும் / குறிகளில்லாத
முகங்களில் விழிப்பேன் / மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!” என்னும் அவரது வரிகள் அவரது
ஆளுமையின் இலக்கு என்ன என்பதை மிகத் தெளிவாக இயம்புகின்றன. ‘மனிதம்’ மட்டுமே அந்த இலக்கு.
மனிதகுலம் அந்த இலக்கினை அடையாதபடிக்கு எழுப்பப்பட்டிருக்கும் தடைகளை எல்லாம் தகர்க்கும்
பணியில் ஓயாதுழைப்பதே தனது கவிவாழ்வு என அவர் இயங்கினார். அப்பணியின் தொடக்கப் புள்ளியை
ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின், விளிம்பு நிலை மாந்தரின் விடுதலைப் போராட்டம்
/ கிளர்ச்சி / கலகம் என்பதில் அவர் கண்டார்.
இன்றைக்கு,
தமிழின் சமகால இலக்கியப் போக்கில், விளிம்பு நிலை மாந்தர் குறித்த இலக்கிய ஆக்கங்கள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் காத்திரமாகவும் உண்மையாகவும் வெளிப்படுவதைக் காண்கிறோம்.
’செம்மொழி’ என்னும் தகுதிப்பாடு தமிழ் மொழிக்கு ஏற்கப்பட்ட ஞான்று பேராசிரியர் மறைமலை
அவர்களுக்கு முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் எழுதிய மடலில் பின்வருமாறு ஓர் அவதானம்
இடம்பெறுகிறது: “விளிம்புநிலை மக்களை மிகப் பரந்த அளவில் கருத்தில் கொண்டிருந்த முன்-நவீன
இந்திய இலக்கியம் தமிழ் மட்டுமே” (Tamil is the only premordern Indian Literature
to treat the subaltern extensively). ஆக, விளிம்பு நிலை மாந்தரின் விடுதலைக்குக் குரல்
கொடுத்தல் என்னும் பண்பு தமிழிலக்கிய மரபிலிருந்தே இன்குலாபிற்கு வந்துசேர்ந்ததாகப்
பேசலாம். அது எந்த அளவு உண்மையாக இருக்கும்?
பழந்தமிழ்
இலக்கியங்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய பதிவுகள் என்னவாக இருந்தன? தமிழ் இலக்கிய
மரபையே மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்னும் தேவையை உணர்ந்து செயல்பட்டோருள்
ஒருவரான இன்குலாப் விளிம்புநிலை மாந்தரின் குரல் தமிழின் நாடுப்புறப் பாடல்களில்தான்
காணக்கிடைக்கின்றன என்று கண்டார். “ஒரு வண்டியோட்டியின் சோகத்தை, சாதியால் தாழ்த்தப்பட்டவனுடைய
கோபத்தை, பொருந்தாத திருமணத்தால் கண்ணீர் சிந்தும் ஓர் அபலையின் பொருமலை, ஒரு விதவையின்
ஏக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியங்கள் பரிவோடு எதிரொலித்துள்ளனவா? ஒன்றிரண்டு
பாடல்கள் இருக்கக்கூடும்; தேடிப்பார்க்க வேண்டும். பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின்
நெஞ்சத் துடிப்பை இந்த ஏட்டு இலக்கியங்களில் கேட்க முடியாது.” என்றும், “ஒடுக்கப்பட்ட
உழைக்கும் மக்களை நமது இலக்கியம் தலைவர்களாக்கிச் சிறப்பிக்கவில்லை. ஆயினும் அம்மக்களின்
பாடல் வடிவங்களை ஏட்டு இலக்கியங்கள் ஏற்று வந்தன. இளங்கோ அடிகளில் இருந்து பாரதி, பாரதிதாசன்
வரை இதற்கு எடுத்துக்காட்டுகள்” என்றும் அவர் எழுதுகிறார். (”எதிர்ச்சொல்” / ‘ஊதற்காற்றில்
ஒரு சில பொறிகள்...’, பக்.70-72).
விளிம்பு
நிலை மக்களுக்கான உரிமைக் குரலாக, போராட்டக் குரலாகத் தன் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கான
வழிகாட்டுதலை அவர் முன்றாம் உலக நாடுகளின் இலக்கிய இயக்கங்களிலிருந்தே கண்டடைந்திருக்கிறார்.
அவ்வகையில் அவரின் குரல் தமிழக அல்லது இந்திய எல்லைகளுக்குள் அடைபட்டது அல்ல. அது
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உலகையே தனதாகத் தழுவிக்கொண்ட நோக்குதான். தன் முன்னோடிகளாக
அவரால் முன்மொழியப்படுபவர்கள் யாவர் என்றொரு பட்டியலிட்டுக் கண்டால் இதனை அறியலாம்.
அவர்கள் அனைவருமே நிறுவப்பட்ட வரலாறுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி அதனைக் கட்டுடைப்புச்
செய்தவர்களாகவே இருக்கிறார்கள்.
“மக்கள்
போராடிய செய்திகள் நமது வரலாற்று நூல்களில் இடம்பெறுவதே இல்லை. நமது வரலாறு அரசர்களின்
வரலாறு. நமது நம்பிக்கைகள் மதவாதிகளின் நம்பிக்கைகள். நமது மரபுகள் ஒடுக்குமுறையாளர்களின்
மரபுகள்” (”எதிர்ச்சொல்” / ‘விலங்குலக நியாயம்’, ப.28) என்றும், “இங்கு உண்மையான சமுதாய
வரலாறு எழுதப்படாதது போலவே உண்மையான சிந்தனை வரலாறும் எழுதப்படவில்லை” (”எதிர்ச்சொல்”
/ ‘வெளிநடப்புச் செய்தவர்கள்’, ப.54) என்றும், “முதலாளியத்தின் காவலர்களாகிய அனைத்துப்
பிற்போக்காளர்களும் ஆட்சிக்கு வருமுன் உச்சரிக்கும் ஒரே மந்திரச் சொல் ‘சோசலிஸம்’ என்பதுதான்”
(”எதிர்ச்சொல்” / ‘வாழும் சாட்சியங்கள்’, ப.104) என்றும், ”மக்களின் அச்சத்தைக் கட்டிக்
காப்பதையே அனைத்து நிறுவனங்களும் தமது பணியாகச் செய்கின்றன. அரசு, நீதித்துறை, காவல்துறை,
ஆட்சிமன்றங்கள், கல்விக்கூடம், குடும்பம் எல்லாம் இந்த அதிகார முறையின் காப்பகங்கள்தாம்.
இவற்றை நியாயப்படுத்தும் பண்பாடு, கலை இலக்கியம் எல்லாம் அதிகாரத்தின் மாறுவேடங்கள்தாம்”
(”எதிர்ச்சொல்” / ‘ரசிகர் மன்ற அரசியல்’, ப.131) என்றும், “பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில்
பார்க்கும்பொழுது எந்த நம்பிக்கையும் புனிதமானது இல்லை. புனிதமானவை என்று எவையுமில்லை.
சரி-தவறு, நன்மை-தீமை என்பவைதான் நிகழ்வுகளின் இயல்பாக இருக்கமுடியுமே தவிர புனிதம்
புனிதமற்றவை என்பது மூடத்தனம். ஒன்றைப் புனிதம் என்பது அதனுடைய அதிகார நீட்டிப்புக்கே
பயன்படும். புனிதமானது என்ற தகுதியில் நிற்கும் ஒவ்வொன்றும் தனது கேள்விக்கு அப்பாற்பட்ட
இருப்பினால், ஒடுக்குமுறைக் கருவியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” (”எதிர்ச்சொல்”
/ ‘பந்தயக் குதிரைகள் நீடூழி வாழ்க!’, பக்.158-159) என்றும், “நிதிமூலதனத்தினால் வளரும்
நாடுகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஏகாதிபத்திய நாடுகளின் முயற்சிக்கு
மறுபெயர்தான் உலகமயமாதல்” (”எதிர்ச்சொல்” / ‘உலகமயமாதலில் மறுக்கப்படும் கல்வி’, ப.213)
என்றும், “ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள் இந்தப் பழைய வரலாற்றை விடுதலைக் கண்ணோட்டத்தில்
பயில்வது அவசியம். அப்பொழுது தாங்கள் மட்டுமல்ல தங்களது தாய்மொழியாகிய தமிழும் ஒடுக்கப்பட்டு
வருகிற உண்மையைக் காண்பார்கள்” (”எதிர்ச்சொல்” / ‘ஒரு பண்பாட்டுப் புரட்சி’ ப.252)
என்றும், மாநில, தேச மற்றும் அனைத்துலக அளவில் நடைபெற்றுவந்த அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளை
அவதானித்து எழுதப்பட்ட கட்டுரைகளினூடே காணப்படும் கருத்துப் புள்ளிகள் அவரது சிந்தனையின்
கொள்கையின் அடிப்படை யாதெனக் காட்டும். அந்த அடிப்படையிலிருந்துதான் அவர் மனிதகுலத்தின்
எதிரிகளையும் மனிதகுலத்தின் தோழர்களையும் அடையாளம் காட்டினார்.
ராஜராஜன்,
ராஜேந்திரன், கஜினி முகம்மது, மாலிக் காபூர், ஹிட்லர், ஷாஜஹான், ரோமானிய சீமாட்டிகளும்
மன்னர்களும், ஹைதராபாத் நிஜாம் என்று நீளும் மனிதகுல எதிரிகளென அவர் அடையாளம் காட்டும்
பட்டியலில் சமகால மாநில தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் ஆளும் வர்க்கமாய் அமைந்த அரசியல்
ஆளுமைகளும் அடங்குவர்.
மானுடத்தின்
தோழர்கள் என்று அவர் அடையாளம் காட்டியோரின் பட்டியல் தமிழகத்துச் சித்தர்கள், சீனாவின்
தாவோக்கள், மத்திய கிழக்கின் சூஃபிகள், கார்ல் மார்க்ஸ், லெனின், ஹோசிமின், ஷெல்லி,
வால்ட் விட்மன், பாப்லோ நெரூதா, ஸ்பார்டக்ஸ், கொள்ளையன் சி, முடவன் சுவாங், சென்ஷே,
இங்கிலாந்தின் சாசன இயக்கம், ஜே.எம்.ஓவன், தெலுங்கானா போராட்டக் கவிஞர் ஹரிந்திரநாத்
சட்டோபாத்யா, நீக்ரோ போராட்டக் கவிஞர்களான கொண்ட்ராட் கெண்ட் ரிவர்ஸ் மற்றும் மெலேய்சே,
நக்சல்பாரி இயக்கக் கவிஞர்களான சரோஜ்தத்தா, சுப்பாராவ் பாணிக்கிரகி, ஸ்ரீஸ்ரீ, செரபண்டராஜு,
சிவசாகர், மற்றும் முராரி முக்கோபாத்யா ஆகியோர், சோவியத் நாவலாசிரியர் மீகயீல் சோலக்கோவ்,
ருஷ்யக் கவிஞர் யெங்கனி யெவ்ஷென்கோ, பிலிப்பைன்ஸ் கவிஞர் ஜோஸ்.ம.சிசான், யூதக் கவிஞர்
அலெக்ஸாண்டர் போகன், புரட்சிப் பாடகர் கத்தார் என்று நீள்கிறது.
அவரது
ஆளுமை மதம், மொழி, தேசம், இனம் என்று எந்த வரையறைக்குள்ளும் தன்னை அடக்கிக்கொண்ட ஒன்றல்ல
என்பதைக் காட்டவே மேற்கண்ட பட்டியல்களை அவரது நூலிலிருந்தே கோர்த்தெழுத வேண்டியதாயிற்று.
அதனைக் கேள்விக்குறியாக்குகின்ற முயற்சி அவரது சித்தாந்தத்திற்கு எதிர் நிலையில் இயங்குகின்ற
தரப்பிலிருந்து செய்யப்படக்கூடும், செய்யப்படுகின்றன. 1, திசம்பர், 2016-இல் அவர் இறந்த
காலச்சூழலின் அண்மையிலேயே அப்படியொரு எதிர்க்கருத்து வைக்கப்பட்டதை இங்கே மேற்கோள்
காட்டுவது பொருத்தமாக இருக்கும். பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளரான ஜெயமோகனின் இணையதளத்தில்
திசம்பர் 15, 2016-இல் “இன்குலாபின் புரட்சி” என்னும் தலைப்பில் ஓர் இடுகை. ’பெரும்பாலும்
எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக் கட்டுரையை எழுதும்’ ஜெயமோகன் இன்குலாபிற்கு
எழுதாதது ஏன் என்று முருகேசன் என்பவர் தொடுக்கும் வினாவுக்கு ஜெ எழுதிய பதில்தான் அவ்விடுகை.
“கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுபதுகளில் மோஸ்தராக இருந்த பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர்.
புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டிருந்தார்.
இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும்.
அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெருந்தரப்பாக
அது ஒருவகையில் முக்கியமானதே. அது இங்குள்ள உறைந்துபோன சனாதனத்தின் மீது ஆக்ரோஷமான
தாக்குதல்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. கருத்தியலின் முரணியக்கத்தில் அதற்கு
ஒரு பங்குண்டு” என்று எழுதும் ஜெ, இன்குலாபை அத்தகு கருத்துலகின் தொண்டர் என்று மதிப்பிடுகிறார்.
“உண்மையான புரட்சிக்காரன் தன் மரபுமூலம் தனக்கு அளிக்கப்பட்டதும் தான் அன்றாட வாழ்க்கையில்
சார்ந்திருப்பதுமான மதத்தையும் நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் நிராகரிப்பதிலும் விமர்சிப்பதிலும்தான்
தொடங்குவான். இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து
வந்தார். கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று
கேட்டார். அதே கேள்வியை மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத்
தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம். புரட்சிகள் தன்னிலிருந்தே ஆரம்பிக்கும். அந்தக்
கலகம் அளிக்கும் இழப்புகளைக் கடந்து வந்திருந்தால்தான் அவர் தியாகி என்று அர்த்தம்”
என்றும் சொல்கிறார்.
தன் எழுத்துக்களுக்காக
இன்குலாபைப் போல் அதிகக் காயங்களைப் பெற்ற வேறு ஒரு கவிஞனை நமது சமகாலம் கண்டிருக்க
முடியாது என்பதே உண்மை. சிறையும் காயங்களுமே தனக்குக் கொடுக்கப்படும் விருதுகள் என்று
அவர் தன் மகளிடம் சொல்வதாக அமைந்த அவரின் கவிதைக்கான அனுபவத்தை எத்தனைக் கவிஞர்கள்
இங்கே பெற்றிருந்தார்கள்?
“மதங்களின்
பெயரால் மட்டுமல்ல, மகுடங்களின் பெயராலும் மூடத்தனங்கள் தொடர்கின்றன” (”எதிர்ச்சொல்”
/ ‘தோண்டிகளுக்கு ஒரு வேண்டுகோல்’, ப.30) என்று அவர் எழுதுவது இஸ்லாமை விட்டுவிட்டல்ல
என்பதற்கு அவரது எழுத்துக்களிலேயே சான்றுகளுண்டு. “மூடத்தனங்களுக்கு இஸ்லாமிய சமயமும்
விதிவிலக்கல்ல” (”எதிர்ச்சொல்” / ‘அற்புதங்களும் அந்தச் சமாதிகளும்’, ப.146) என்று
அந்த மதச்சார்பின்மைதான் அவரை எழுத வைத்தது.
”போராட்டத்தைப்
பற்றி எழுதுவது சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கிறது அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்கான
ஒரு அவசியமாக இருக்கிறது. உண்மையில் போராட வேண்டிய தருணம் வரும்போது இந்த நெம்புகோல்கள்
வளைந்து போய்விடுகின்றன” (”எதிர்ச்சொல்” / ‘யார் பக்கம்’, ப.96) என்று இன்குலாப் வேதனையுடன்
எழுதும் வரிகளுக்கு அவரையே உதாரணமாக்குகிறது ஜெயமோகனின் மதிப்பீடு. மு.மேத்தா, சிற்பி,
அப்துல் ரகுமான், பாலா, தமிழவன், புவியரசு, தமிழன்பன் போன்ற ஏதேனுமொரு வானம்பாடியைக்
குறித்து அவ்வாறு சொல்லப்பட்டிருப்பின் ஒருவேளை பொருந்துவதாகலாம். இன்குலாப் வானம்பாடிகளிடையே
சிறகடித்த ஒரு ராஜாளி என்றே சொல்ல வேண்டும்.
இன்குலாபின் படைப்புமொழி மூன்றாம் உலக நாடுகளின் போராளிக் கவிஞக்ரள்
மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்ட மொழிதான். அதில் செவ்வியலின் கவித்துவம்
அல்லது கலைத்தன்மை குறைவு என்று கூறுவது பிழையன்று. அவரது புகழ் பெற்ற “மனுசங்கடா நாங்க
மனுசங்கடா” என்னும் தலித்தியப்பாடலை இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்
அவர்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதுவதாக அமைந்த கட்டுரையில் அவர் சொல்கிறார்: “உங்கள்
அமைப்புகளால் கொடுமை இழைக்கப்படும் ஷெட்யூல்ட் மக்கள் பாடுவதாக எழுதினேன். இது நீங்கள்
பாடிக்காட்டும் உருதுக் கஜல்கள் போலவோ… பாரசீகக் கவிதைகள் போலவோ ரம்மியமானதாக இருக்காது”
(”எதிர்ச்சொல்” / ‘மனுசங்கடா…, டேய் மனுசங்கடா!’, ப.94). மனிதமே தனது கவிதையின் ஆதார
வலிமை என்று அவர் கொண்டிருந்தாரே தவிர இலக்கிய உத்திகளை அன்று. உருது மற்றும் பாரசீகக்
கவிதை மரபுக் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு தமிழுக்கு இலக்கியச் செழுமை பெருக்கிய அப்துல்
ரகுமானுடன் இந்தக் கருத்தின் கோணத்தில் இன்குலாபை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்
தனது மதச்சார்பின்மையை எந்த அளவுக்குத் துறந்திருக்கிறார் என்பதை உணரலாம்.
தான் பிறந்த மதத்தின் மரபையும் பண்பாட்டையும் கிஞ்சிற்றேனும் பெருமிதமாகக்
கருதி உள்வாங்கியிருப்பார் எனில் இஸ்லாமிய வேத மொழியும் இறைத்தூதர் மொழியுமான அரபியின்
மீது ஓர் அபிமானம் அவருக்கு உருவாகியிருந்திருக்கும். ஆனால், தமிழனுக்குத் தமிழையே
தடைசெய்கின்ற பல மொழிகளுள் ஒன்றாகவே அவர் அரபியையும் கண்டார். “தமிழன் எங்கே மூச்சு
விடுகிறான்? அதுவும் தமிழில்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பான் விட்ட
சமஸ்கிருத மூச்சு, முகலாயர்கள் விட்ட உருது மூச்சு, விஜயநகர அரசர்கள் விட்ட தெலுங்கு
மூச்சு, இசுலாமிய போதகர்கள் விட்ட அரபு மூச்சு, வெள்ளைக்காரன்விட்ட இங்கிலீஸ் மூச்சு,
இந்திக்காரன்விட்ட இந்தி மூச்சு... எல்லா மூச்சுகளும் என்மேல்... தமிழ் என் மூச்சு!
விடமுடியலியே என்று ஓலமிடத் தோன்றுகிறது” (”எதிர்ச்சொல்” / ‘ஒரு பண்பாட்டுப் புரட்சி’,
ப.254) என்று அவர் எழுதியிருப்பது ஓர்தற்பாற்று.
தான்
பிறந்த மதத்தைத் தனது அடையாளமாக ஆக்கிக்கொள்ளாததுடன் தனது இன மொழி அடையாளத்தைப் பெருமிதத்துடன்
பேணிக்கொண்ட அதே வேளை அது உலக மானுடத்தைத் தழுவிக்கொள்ள அனுமதிக்காத வேலியாக மாறிவிடாத
தெளிவுடனேயே அவர் இயங்கினார் என்பதை அவரின் எழுத்துக்கள் காட்டுகின்றன. “உடமை வர்க்கத்தின்
நலன்களைப் பாதுகாக்கத் தோன்றிய அரசு, வன்முறையைத் தனது இயல்பாகக் கொண்டிருக்கிறது என்கிற
தொடக்க உண்மையை, போராடுகிற சக்திகளோடு நின்றால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். அல்லது
தனது இருப்பையும், தனது வாழ்நிலையையும், தன் சார்புகளையும் கேள்விக்கு உட்படுத்தி உண்மையைக்
காண முயலும் ஒரு படைப்பாளியால், அவன் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் புரிந்துகொள்ள
முடியும்” என்று அவர் எழுதுகிறார் (”எதிர்ச்சொல்” / ‘திரைப்படத் தீவிரவாதிகள்’, பக்.111-112).
அப்படிப் புரிந்துகொண்ட ஒரு படைப்பாளி என்று அவரை மதிப்பிடுவதே உண்மையாக இருக்கமுடியும்.
கருத்தியல்
முரணியக்கம் (dialectics) என்பதில் அமையும் இரு தரப்புகளிடையேயும் உள்ள நியாயங்களைப்
பாராட்டுகின்ற நிலையிலேயே நான் நிற்கிறேன். கலை கலைக்காகவே என்னும் தரப்பின் மீதான
உளச்சாய்வு எனக்கு உண்டு. கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை ஆளுமை அத்தரப்பு சார்ந்தது
என்றே நான் மதிப்பிடுகிறேன். கலை சமுதாயத்துக்காகவே என்று கூறும் மறு தரப்பில் இயங்கியவர்
இன்குலாப். முன்னது கலையின் செழுமையை பெருக்கிய அளவு பின்னது செய்யவில்லை என்பது என்
புரிதல். எனினும் கலை சமுதாயத்துக்காகவே என்னும் தரப்பின் வெளிப்பாடுகள் மீது மரியாதை
செலுத்த மறுப்பவனோ மறப்பவனோ அல்லன் நான். ஜெயமோகனின் இறுதிக் கணை இன்குலாபின் கவிதைகளின்
இலக்கியத் தன்மை மீதுதான் பாய்ந்தது: “இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே
புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள்.
கவிதையின் அழகியல் உருவானதே நேரடியாகக் கூற உணர்த்த முடியாதனவற்றை கூறும் பொருட்டு
மொழியால் அறிய வைக்க முடியாதவற்றை மொழி கடந்த மொழி ஒன்றால் உணர்த்தும் பொருட்டு. ஒரு
சாதாரண முற்போக்குத் துண்டுப் பிரசுரத்திற்கும் இன்குலாப் கவிதைக்கும் வேறுபாட்டை இன்குலாபாலேயே
கண்டுபிடிக்க முடியாது”
இவ்விமரிசன
வரிகளை வாசித்தபோது இன்குலாப் எழுதிய ஒரு கவிதையை நான் தேவதேவனின் கவிதை ஒன்றுடன் ஒப்பிட்டுப்
பார்த்தேன். தேவதேவனைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணமுண்டு. ”கவிஞர் தேவதேவன் என்றும் என்
ஆதர்ச இலக்கியவாதி. தனிப்பட்ட முறையில் அவரையும் பாரதியையும் மட்டுமே கடந்த நூற்றாண்டுக்கால
தமிழிலக்கியம் உருவாக்கிய பெருங்கவிஞர்களாக கருதுகிறேன்” என்று ஜெயமோகன் சொல்கிறார்
(”தேவதேவனுக்கு ஒரு இணையதளம்”. மார்ச் 4, 2011, www.jeyamohan.com).
தேவதேவன் எழுதிய கவிதையின் தலைப்பு “ஒரு புல்லின் உதவி கொண்டு” என்பது.
“ஒரு
புல்லின் உதவி கொண்டு
பூமியிலொரு
பச்சைக் கம்பளம் விரித்தேன்
ஒரு மரக்கிளையின்
உதவிகொண்டு
புள்ளினங்கள்
கொஞ்சுமோர்
பள்ளத்தாக்கை
எழுப்பினேன்
ஒரு கூழாங்கல்லின்
உதவிகொண்டு
மலையடுக்குகளையும்
அருவிகளையும் உருவாக்கினேன்
ஒரு தேன்சிட்டின்
ஆலோசனை கொண்டு
விண்ணிலோர்
மாளிகை அமைத்தேன்
ஒரு கண்ணீர்த்
துளி கொண்டு
வானமெங்கும்
கார்மேகங்களைப் படரவிட்டேன்”
இன்குலாப்
எழுதிய கவிதையின் தலைப்பு “ஒவ்வொரு புல்லையும்” என்பது. இத்தலைப்பே அவரது மொத்தக் கவிதைகளின்
தொகுப்பாக வந்த நூற்தலைப்பாகவும் சூட்டப்பட்டது.
“ஒவ்வொரு
புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு
எல்லை கடப்பேன்
பெயர்
தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத்
தெரிந்த சொல்லால் விளிப்பேன்
நீளும்
கைகளில் தோழமை தொடரும்
நீளாத
கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு
வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு
வேண்டும் நானும் ஓர் துளியாய்
கூவும்
குயிலும் கரையும் காகமும்
விரியும்
எனது கிளைகளில் அடையும்
போதியின்
நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும்
சமத்துவப் புனலில் கரையும்
எந்த
மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே
எதிரொலில் கேட்கும்
கூண்டில்
மோதும் சிறகுகளோடு
எனது
சிறகிலும் குருதியின் கோடு
சமயம்
கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத
சமவெளி தோறும்
குறிகளில்லாத
முகங்களில் விழிப்பேன்
மனிதம்
என்றொரு பாடலை இசைப்பேன்!”
இக்கவிதையே
இன்குலாபின் சிறந்த கவிதையாக எனக்குத் தோன்றுகிறது. இக்கவிதையில் பாரதியும் தேவதேவனும்
இருப்பதைக் காண்கிறேன். கலை கலைக்காகவே என்னும் தரப்பிற்கு மிக அருகில் வரும் கவிதையாக
இதனை உணர்கிறேன். அதேபோல், அத்தரப்பிலிருந்தும் கலை சமுதாயத்திற்காகவே என்னும் மறுதரப்பிற்கு
அருகில் வரும் இலக்கிய வெளிப்பாடுகள் உண்டு, திண்ணியம் வன்கொடுமை குறித்து தேவதேவன்
எழுதியது போல. இன்னனம், கருத்தியல் முரணியக்கத்தின் தரப்புகளிடையே அவ்வப்போது ஒன்றுக்கொன்று
நெருங்கி வருகின்ற ஆக்கங்கள் வருவதே நல்லது. அத்தகு கவிகளே மனிதம் என்னும் பாடலை இசைக்க
முடியும்.
No comments:
Post a Comment