Sunday, December 23, 2018

பசுக்கழகக் குழம்பி!



                அரசு வேலைக்கு லாயக்கற்ற 33 முதுநிலை படிப்புகள்” என்பது நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்றின் தலைப்பு. எந்த நாளிதழ் என்று தெரியவில்லை. அதன் அலைப்படத்தை வாட்ஸேப்பில் வைத்திருந்த பேராசிரியர் அப்துர் ரஜ்ஜாக் என்னிடம் வாசித்துக் காட்டினார். (பின்னர் எனது அலைப்பேசிக்கும் அனுப்பினார்). 

அந்தச் செய்தியை அவர் வாசிக்கும் போது “தமிழக பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில்…” எனத் தொடங்கும் பத்தியை வாசிக்க மிகவும் தடுமாறினார். ‘பல்கலை’ என்னும் சொல் அவரைத் தடுமாற வைத்தது. அது அவருக்குப் புதிய சொல்லாக இருந்திருக்க வேண்டும். இணையத்தில் எழுதிவரும் நவீன எழுத்தாளர்களால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாளிதழ் வரை வந்திருக்கும் ஒரு சொற் பயன்பாடு அது. பல்கலைக்கழகம் என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.

பேராசிரியர் வேறு அர்த்தம் தொனித்துக் குழம்பிப் போயிருக்கலாம். “இவர் ஒரு பல்துறை வித்தகர்” என்று நண்பருக்கு ஒருவரை அறிமுகஞ் செய்கிறார் ஒருவர். “அப்படியா?” என்கிறார் இவர். “இல்லியா பின்ன? பிடிஎஸ் எம்,டிங்க இவரு” என்று அநியாயத்துக்குக் கடிக்கிறார் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.

சரி. பல்கலைக் கழகம் என்பதை பல்கலை என்று பிரயோகித்ததை நான் முதன் முதலில் ஜெயமோகனின் எழுத்தில்தான் கண்டேன். சுருக்கிச் சொல்ல வேண்டினால் அல்லது வேண்டியிருந்தால் ப.க.கழகம் என்றோ ப.க.க என்றோ சொல்லலாமே? வேண்டாம். மேலும் குழப்பம்தான் விளையும். ஏதோ புதிய அரசியல் கட்சி ஒன்றின் பெயர் போல் ஒலிக்கிறது. ஆகையால் பல்கலை என்றே பகர்ந்தனர் போலும்.

யோசித்துப் பார்க்கையில், கழகம் என்ற சொல்லின் மீதான ஒவ்வாமையால்தான் அதை நறுக்கி விட்டுப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது (’பெயரைக் கேட்டாலே அதிருதுல்ல’). ஆக, இது சுருக்கல் அல்ல, நறுக்கல்!

      அரசியற் கழகங்கள் வந்த பின்புதான் சர்வகலாசாலை என்றிருந்த யூனிவர்சிட்டி தூய தமிழில் ‘பல்கலைக்கழகம்’ என்னும் நாமகரணம் பூண்டது. நல்ல வேலை, மீண்டும் சமற்கிருதச் சொல்லாடலுக்கே போய்விடாமல் பல்கலை என்றாவது எழுதுகிறார்கள். சாலை என்பதும்கூட வடமொழியில் ’ஷாலா’ என்றே உச்சரிக்கப்படும். (இந்தியில் ’சாலா’ என்று வைகிறார்களே. அது வேறு. குறிப்பாக ’மதராசி’களை, அதவாது ’சென்னைட்ஸ்’களையும் அதன்வழி ஒட்டுமொத்த தமிழர்களையும் இழித்து விளிக்கப் பயன்படும் அடைமொழி!). அப்படி யாராவது செம் சமற்கிருத உச்சரிப்பாக ‘சர்வகலாஷாலா’ என்றோ அல்லது சகரத்தை ஷவரம் செய்கிற பிராமண உச்சரிப்பாக ‘ஷர்வகலாஷாலா’ என்றோ செப்பத் தொடங்கிவிடவும் சாத்தியம் உள்ளது. (பிறகு அப்பிரயோகம், பல்கலையைச் சார்ந்த யாரையாவது தூற்றுவதற்கான வடிவமாகவும் மாறிவிடக் கூடும்: ‘அதோ போவுதே, அது ஒரு சர்வகலாசாலா!”).

      வரலாற்றில் சில இயக்கங்கள் தோன்றி வந்து சில மாற்றங்களைச் செய்து விடுகின்றன. அவை காலப்போக்கில் மக்களிடம் ஏற்பும் பெற்று வேர் பிடித்து நிற்கின்றன. அவற்றைத் தேவையில்லாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.















      கும்பகோணம் அருகே ஆடுதுறைக்குப் புறத்தே “ராயல் காஃபி” என்றொரு கடை உள்ளது. அது, பிராமணர்களுக்கான ஓர் நவீன அடுக்குக் குடியிருப்பின் வாசலில் இருக்கிறது. ஓடு வேய்ந்து மரத்தூண்கள் நிறுத்தி குத்து விளக்கெறிய ஊதுவத்திப் புகை நெளிந்திழைய, கல்கி, கிருபானந்த வாரியார் போன்றோரின் நூற்கள் அணியியற்ற கருப்பட்டி, நாட்டுச் சக்கரை, தேய்ங்காய்ப்பால் முறுக்கு, சீடை, ஓலைப்பெட்டிக்குள் இட்ட மிட்டாய் வகைகள் இத்தியாதிகள் என செவ்வியற் கலையம்சத்துடன் அமைந்த பாந்தமான கடை. கர்நாடக ராகங்களின் பெயர் சூட்டப்பட்ட காஃபி வகைகள் விற்கிறார்கள். நாக்கில் வெகு நேரம் சுவையும் மணமும் ஒட்டிக்கொண்டிரும் அருமையான காஃபி சுடச் சுட வேண்டுவோர் அவ்வழியே பயணித்தால் அவசியம் நிற்க வேண்டிய இடம் அது. “இங்கே பக்கத்தில் காஞ்சி காமக்கோடி பீடத்துக்கான ஒரு குருகுலம் இருக்கு. அங்க உள்ள கோசாலையிலிருந்துதான் பால் எடுத்தாறது. அதுனாலதான் இவ்ளோ ஷுவையா இருக்கு” என்றார் கடையின் இளம் ஊழியர் ஒருவர்.

இந்தச் செய்தியை நான் யாரிடமாவது பகிர்வதென்றால், “ஆடுதுறைக்கு வெளியே ஒரு காஃபிக் கடை இருக்குங்க. அல்ஹம்துலில்லாஹ்! என்னா டேஸ்ட்டுங்கிறீங்க! குருகுலம் ஒன்னு இருக்காம். அங்க உள்ள கோசாலைல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்” என்றுதான் சொல்வேன்.

அதை ஒருபோதும் இப்படிச் சொல்ல மாட்டேன்: “ஆடுதுறைக்கு ஊர்ப்புறத்தே ஒரு குழம்பிக் கடை இருக்குங்க. (ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டியபடி) எல்லாப் புகழும் (ஏக) இறைவனுக்கே! என்னா சுவைங்கறீங்க. மறைப்பாடப் பள்ளி ஒன்று இருக்காம். அங்க உள்ள பசுக்கழகத்துல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்!”


Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி



              





   அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:

      ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

      இரண்டு வகையான துறவுகள் உள்ளன. ரஹ்பானிய்யத் மற்றும் ஜுஹ்து என்று அவற்றை அறபியில் குறிப்பிடுவர்.

      ரஹ்பானிய்யத் என்னும் வகையான துறவு இஸ்லாத்தில் அனுமதிக்கப் படவில்லை. “இஸ்லாத்தில் துறவு இல்லை” (”லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்”) என்று நபிகள் நாயகம் சொன்னது இந்த வகைத் துறவைத்தான்.

      ஆனால், இன்னொரு வகையான துறவான ‘ஜுஹ்து’ என்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. ஜுஹ்து என்றால் பற்றின்மை என்று பொருள். ”தர்க்குஹு மா லா யஃனீஹி” - தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் துறத்தல் என்பது அதுதான். அதாவது, உனது ஆன்மிக வாழ்வுக்கு அவசியமே இல்லாத செயல்களையும் பேச்சுக்களையும் எண்ணங்களையும் துறந்து விடுவதாகும்.

      தனது ஆன்மிகத் தோழர்களான ‘சஹாபா’க்கள் பற்றி நபிகள் நாயகம் நவின்றார்கள், “இந்தச் சமுதாயத்தின் சீர்மை அகத்தெளிவு மற்றும் உலகப் பற்றின்மை ஆகியவற்றால் தொடங்கியது” (’அவ்வலு ஸலாஹி ஹாதிஹி உம்ம(த்)தி பில்-யகீனி வல்-ஜுஹ்தி’ - அறிவிப்பாளர்: அம்ரிப்னு ஷுஐப் (ரஹ்); நூல்: பைஹகீ).

      இவ்விருவகைத் துறவுகளுக்கும் வேறுபாடு என்ன? ஒன்றை நபி அனுமதிக்கவில்லை, தடுத்துள்ளார்கள். மற்றொன்றை நபி வலியுறுத்துகிறார்கள், போற்றுகிறார்கள். எனவே, முன்னதான துறவு தீயது என்பதும் பின்னதான துறவு நல்லது என்றும் புரிகிறது. எனில், இந்த இரண்டு துறவு வகைகளின் தன்மைகள் என்ன?


      
























 சமய வாழ்வின், ஆன்மிகத்தின் நோக்கமே இறைவனை அடைவதுதான். இறைவனை நெருங்க விடாமல் உன்னைத் தடுக்கின்ற அனைத்தையும் நீ துறந்தாக வேண்டும். இறைவனை நீ நெருங்குவதற்கு உதவியாக இருக்கும் அருட்கொடைகளை நீ பேண வேண்டும். அவற்றைத் துறக்கக் கூடாது.

      எனவே, இறைவனின் அருட்கொடைகளைத் துறப்பதே ‘ரஹ்பானிய்யத்’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறைவனை நெருங்குவதற்குத் தடையாகும் விஷயங்களைத் துறப்பதே ‘ஜுஹ்து’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் ஏற்றமானதொரு இடம் உள்ளது.

      தேவையற்ற விஷயங்களை விட்டுவிடுதல் என்றால் என்ன? மனதிற்குள் படைப்புக்களும் உலகமும் நுழையாமல் பாதுகாத்தல். அப்போதுதான் மனம் இறைவனின் தியானத்தில் திளைக்க முடியும். ஒருவர் தனது ”அன்ஃபுஸ்” என்னும் அகத்தினுள் மிக ஆழமாக மூழ்கி இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு மனம் தெளிவாக இருப்பது அவசியம்.

      ”யகீன் வல்-ஜுஹ்து” – அகத்தெளிவும் பற்றின்மையும் என்று நபிகள் நாயகம் அருளியிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இரண்டும் மிக உறுதியான தொடர்பு கொண்டவை. உலகப் பற்று உள்ளவனுக்கு – அதாவது, உலகைத் தனது உள்ளத்தில் சுமந்து கொண்டிருப்பவனுக்கு ஒருபோதும் அகத்தெளிவு ஏற்படாது. அதாவது, “பஸீரா” என்னும் ’அகப் பார்வை’ உண்டாகாது. அவன் அகக் குருடனாகவே இருப்பான். இறைவனின் அத்தாட்சிகளைப் புறத்திலும் அகத்திலும் அவனால் காணவே முடியாது.

   
  














 இங்கே, துறவு குறித்தும், மடப்பள்ளிகள் குறித்தும் முன்பொரு கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருந்ததை நினைவு கூர்கிறேன். துறவு ஏன் தேவைப்படுகிறது என்றால், உலகம் உங்கள் மனதிற்குள் தினம் தினம் நாளெல்லாம் பல்லாயிரம் பிம்பங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறது. பிம்பங்களின் குவியலால் உங்கள் மனம் நிரம்பிக் கிடக்கும்போது அதில் ஒருபோதும் தியானம் சித்திக்க இயலாது. தியான நிலை கூடிவருவது மிகவும் கடினம். தினம் தினம் பிம்பங்களை அழிப்பதில் போராடுவதிலேயே காலம் கணிசமாக விரயமாகி ஒழிந்து போகும். எனவே, புறவுலகின் பிம்பங்களே உள்ளத்தினுள் நுழையாத படிக்கு ஒரு சூழலை உருவாக்கினார்கள். அவையே மடங்கள்’ என்னும் கருத்தினை அவர் சொல்லியிருந்தார். (அவர் சொன்ன கருத்தினை உள்வாங்கி எனது சொற்களில் இங்கே எழுதியுள்ளேன்).

      இஸ்லாத்தில் ‘மதரஸா’ என்னும் கல்விச் சாலைகள் அதே அடிப்படையில்தான் உண்டாயின. ஏனெனில், வீட்டிலிருந்தபடி அவ்வளவு குறுகிய காலத்தில் எளிதாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்வதோ அல்லது சமயவியலைப் படிப்பதோ முடியாது. (ஸ்கூல்களும் காலேஜ்களும்கூட ஒருவகையில் பகுதி நேர மடங்கள்தான்). ”ஃகான்காஹ்” என்னும் சூஃபி தியான நிலையங்களும் அப்படித்தான் உருவாகின, புறவுலகின் ஊடுறுவல் இல்லாச் சூழலில் இறைவனை தியானம் செய்வதற்காக. (நபிகள் நாயகம் காலத்தில் தனியாக ஃகான்காஹ் இல்லையே என்றால், நபித்தோழர்களின் இல்லங்களே ஃகான்காஹ் என்னும் நிலையில்தான் இருந்தன. அவர்களின் எளிமை நிலையை எண்ணிப் பாருங்கள்! வீட்டில் அடிப்படையான நான்கைந்து பொருட்கள் மட்டுமே இருந்தன!)

      ’ரஹ்பானிய்யத்’ என்னும் துறவாவது திருமணம் புரியாமல், இல்லறம் பேணாமல், பிள்ளைகள் பெறாமல், அவர்களுக்காக சம்பாதிக்காமல், தனிக்கட்டையாக வாழ்வது. இந்த வகைத் துறவில் மனதிற்குள் பிம்பங்கள் வந்து குவிவதைத் தவிர்ப்பது மிகவும் எளிது என்றாலும் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதே சமயம், இறைவனை மறந்த நிலையில், அவனை அடைவதற்கான தியானங்களில் ஈடுபடாமல், மனைவி மக்களே கதி என்று வாழ்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. 



























இல்லற வாழ்க்கை முறையில் அவ்வப்போது இதயத்தில் உலக பிம்பங்கள் வந்து விழுவதைத் தவிர்க்க இயலாது என்பது உண்மை எனினும், அதனை உடனுக்குடன் இறை தியானத்தின் வழி துடைத்துத் தூய்மை செய்துவிடுவது எளிது. அதற்கான வழியை நபிகள் நாயகம் சொன்னார்கள், “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மெருகு, தெளிவு உண்டு. உள்ளத்தின் தெளிவு, மெருகு இறைவனின் தியானம்” (”இன்ன லி குல்லி ஷை-இன் ஜிலாஅன் வ ஜிலாஅல் குலூபி திக்ருல்லாஹி அஸ்ஸ வ ஜல்ல” – அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி); நூல்: பைஹகீ).

இஸ்லாத்தின் அத்தாட்சிகளாகவும் மகத்துவமாகவும் விளங்கும் மாபெரும் மகான்கள், இறைநேசச் செல்வர்கள், சூஃபிகள் எல்லாம் இல்லறம் பேணி ஜுஹ்து என்னும் நல்லறம் புரிந்து, இறைவனின் தியானத்தில் ஈடுபட்டுத்தான் மெய்ஞ்ஞானமும் இறைநேசமும் அடைந்தார்கள். அவர்களில் ஒருவரான, இந்த ரபீயுல் ஆஃகிர் என்னும் மாதத்தில் இம் மண்ணகத்தில் உதித்தவர்களான முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் தமது “சிர்ருல் அஸ்ரார்” (’ரகசியங்களின் ரகசியம்’) என்னும் சிறு மா நூலில் சொல்கிறார்கள்:

“இனிய நண்பா! உனது உள்ளம் ஒரு மெருகூட்டிய கண்ணாடி. அதன் மீது படிந்திருக்கும் தூசுப் படலத்தை நீ துடைத்துத் தூய்மை செய். ஏனெனில், தெய்வீக ரகசியங்களின் ஒளியைப் பிரதிபலிப்பதற்காகவே அது படைக்கப் பட்டுள்ளது.”

இவ்வாறு சொல்லிய பின், அன்னனம் மனதைத் தூய்மை செய்தால் எந்த எந்த நிலைகளில் இறையொளி அதில் பிரதிபலிக்கும் என்னும் விளக்கங்களை மகான் அவர்கள் தருகிறார்கள். இறுதியாகச் சொல்கிறார்கள்:

“இவை எல்லாம் உனது இதயம் என்னும் கண்ணாடி தூய்மை செய்யப்பட்ட பின்னரே ஆரம்பம் ஆகும். நீ அவனுக்காக அவனிடம் அவனைக் கொண்டு நாடி, கேட்கத் தொடங்கும்போது மட்டுமே தெய்வீக ரகசியங்களின் ஒளி அதன் மீது விழும்.”

Monday, December 3, 2018

Baல்லே Baல்லே




      “யாமறிந்த மொழிகளிலே…” என்று ஆரம்பித்து பாரதி சொன்ன கருத்து எல்லோருக்கும் தெரியும். அதாவது, தமிழைப் போல் இனிமையான மொழி வேறு இல்லை. 

இது அவனது மொழிக் கொள்கை என்று சொல்வது பிழை என்றே எண்ணுகிறேன். பாரதி மொழிப் பற்றாளன் என்பது உண்மைதான். ஆனால் அவன் மொழி வெறியன் அல்லன். அவனேதான் ”சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து…” என்றும் சொன்னான். இப்படியெல்லாம் அவன் சொன்னது அந்த அந்தக் கணத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள், மனோ பாவனைகள் என்றே எண்ணுகிறேன்.

இதில் எனக்கு பல வருடங்கள் அனுபவமுண்டு. எனது பதினேழாம் வயதிலிருந்தே பல மொழிகளில் அமைந்த இசைப் பாடல்களையும், மொழியே இல்லாத இசையையும் ரசிக்கத் தொடங்கி விட்டேன்.

உருது மொழியின் கஸல் மற்றும் கவ்வாலி பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அந்த மொழியின் அழகில் சொக்கிப் போயிருக்கிறேன். ரசனை அமைந்துவிட்டால் ஆங்கிலமும்தான் எத்தனைப் பேரழகு! உருதுவுக்கே உரிய லாவகத்தை எவ்வளவு முயன்றாலும் வேறு எந்த மொழியிலும் கொண்டுவர இயலாது. அம்மொழியை இலக்கிய ரீதியாக அறிந்தோர் இவ்வுண்மை அறிவர்.

ஆனால், பேச்சு வழக்கில் இருப்பதையெல்லாம் கேட்டால் எந்த மொழியையும் நாம் ரசிக்க முடியாது போலும். ‘என்னப்பா இது, காரே பூரேன்னு பேசுறானுங்க’ என்பார் என் தந்தை, உருதுக்காரர்கள் பேசுவதை. ”தென் இந்திய பாஷையே தகர டப்பாவில் கல்லைப் போட்டு ஆட்டுவது போல் இருக்கிறது. அதில் இசை நயமே இல்லை” என்றார் ஓஷோ. திராவிட மொழிகளைத்தான்! (மலையாளி ஒருவர் எப்படி மலையாளம் பேசுவார் என்பதை அறபி ஒருவர் மிமிக் பண்ணிக் காட்டிய காணொளி ஒன்றைக் கண்டபோது ஓஷோ சொன்னது உண்மைதான் என்று தோன்றியது). ஆனால் இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு அடுத்து எனக்குப் பிடித்த மொழி ஒன்று உண்டு என்றால், நான் கற்க விரும்பும் மொழி மலையாளம்தான். வட இந்திய மொழிகளில் என்னைக் கவர்ந்தது பஞ்சாபி.


















பஞ்சாபி மொழியை எனக்கு பசந்தான மொழியாக (பசந்த் – விருப்பம்) ஆக்கியவர் நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான். கவ்வாலி என்னும் இசை வடிவத்தையும் எனக்குப் பிரியமானதாக ஆக்கியவர் அவரே. உலக இசை மேதைகளுள் ஒருவராக, லெஜண்டாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அற்புதமான இசைக் கலைஞர், பாடகர். உருது மொழியில்தான் அதிகமாகப் பாடினார் என்றாலும் பிற கவ்வாலிக் கலைஞர்களை விடவும் பஞ்சாபி மொழியை அதிகமாகப் பாடியவர் நுஸ்ரத்-தான். அத்ற்குக் காரணம் பஞ்சாபி அவரின் தாய்மொழி! ஆம், பிரிவினையில் பஞ்சாப் இரண்டாக உடைந்தபோது பஞ்சாபி முஸ்லிம்கள் பாகிஸ்தானிலும் பஞ்சாபி சீக்கியர்கள் இந்தியாவிலும் அமைந்தார்கள். 

உருதுப் பேராசிரியர் ஒருவர் ஒருமுறை அஸ்லம் சாபிரி பாடிய கவ்வாலி குறுவட்டு ஒன்றை எனக்குத் தந்தார். அவரிடம் நான் ஆவலாக நுஸ்ரத்தைப் பற்றிக் கேட்டேன். ‘அவரோட உருதுவ்ல பஞ்சாபி சாயல் இருக்கும்’ என்று சொன்னார், எனவே தனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்பதைப் போல. அப்போதுதான் இப்படி ஒரு மொழி அரசியல் இருப்பதை அறிந்தேன். எனக்கோ, ஃபரீத் அயாஜ், சாப்ரி பிரதர்ஸ், ஜாஃபர் பதாயூனி, அஸ்லம் சாபிரி முதலிய அனைத்துக் கவ்வாலியர்களை ஒரு பக்கம் வைத்தாலும் நுஸ்ரத்துக்கு ஈடாக மாட்டார்கள் என்பதே கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாறாத அபிப்பிராயம்.

நுஸ்ரத் தங்களது மொழிக்கு மிகப் பெரிய தொண்டாற்றியிருக்கிறார் என்றே பஞ்சாபிகள் அவரைக் கொண்டாடுகிறார்கள். மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் இசையின் முகவரியே அவர்தான். உருது மொழியின் இசையை உலகுக்கு எடுத்துச் சென்றவரின் தாய் மொழி பஞ்சாபி! அதே போல், தனது கவிதையின் மூலம் உருது மொழியை உலக அரங்கில் முன்னிறுத்திய மகாகவி இக்பாலின் தாய்மொழி பஞ்சாபி! பஞ்சாபிகள் படைமடம் (chivalry) என்னும் வீரத் தன்மை மிகுந்தவர்கள். அதனால்தான் மிருதுவான உருதுவை இக்பால் தன் கவிதைகளில் எஃகின் வலிமை கொண்ட மொழியாக மாற்றிவிட்டார் போலும்!













கஸல் என்பது உருது மொழியின் பெருமை என்பார்கள். காதலின் மென்மையை வெளிப்படுத்துவதில் கஸல் போன்றொரு கவிதை வடிவம் உலக இலக்கியத்தில் வேறெதுவும் இல்லை எனலாம். கஸல் எழுதிப் புகழ் பெற்ற கவிஞர்கள் பலருண்டு. அதுபோல், கஸல்களை இசைப் பாடல்களாகப் பாடி உலகப் புகழ் அடைந்தவர்கள் உண்டு. மெஹதி ஹசன், முன்னி பேகம், ஃபரீதா கானம், குலாம் அலி, பேகம் அஃக்தர், ஜகஜீத் சிங், தலத் அஜீஸ், பங்கஜ் உதாஸ், ஹரிஹரன் என்று நீளும் பட்டியலில் அவரவருக்கு நம்பர் ஒன் என்று யாரையாவது மிகவும் பிடித்துப் போகும். நண்பர் நாகூர் ரூமிக்கு குலாம் அலி. ‘கமகம் அப்படியே கொட்டும். கேட்டுப் பாருங்க’ என்று ஒருமுறை சொன்னார். கேட்டேன். பிறகும் எனக்கு ஜகஜீத் சிங்-தான் முதலிடமாகத் தொடர்கிறார். ஒரு காலத்தில் ஹரிஹரனை அப்படி ரசித்தேன். பிறகு ஜகஜீத் மேலே வந்தார். அவர்து குரலில் உள்ள ஆழம் வேறு கஜல் பாடகர்களிடம் இல்லை என்றே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. உருது கஜல்களின் சிகரமான ஜகஜீத் சிங்கின் தாய்மொழி பஞ்சாபி!

”செந்தமிழும் நாப்பழக்கம்” என்பார்கள். எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், பஞ்சாபிக்கு நாப்பழக்கத்துடன் மூக்குப் பழக்கமும் முக்கியம். ஆமாம், அது மூக்கொலிகள் (nasal sounds) கணிசமாக வெளிப்படும் மொழி. ஆனால், சீன ஜப்பானிய மொழிகளின் அளவுக்கு இல்லை. பஞ்சாபி மொழியை உருவாக்கியதில் சூஃபிகளுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. அறபி மொழியில் மூக்கொலியாக ஓசை எழுப்புவதை “குன்னா” (ghunna) செய்தல் என்று சொல்வர். அந்த தாக்கம் பஞ்சாபி மொழியில் வந்துவிட்டது போலும்.

 பஞ்சாபி மொழிப் பாடல்களுக்கு ஒரு துள்ளல் தன்மை உண்டு. அவர்களது நடனமான ’பாங்ரா’வே துள்ளலானதுதான். பரத நாட்டியம், கதக் போன்ற நடனங்களின் நுட்பங்கள் இல்லாதது என்றாலும் எளிமையான அசைவுகளில் பரவத்தை வெளிப்படுத்தும் நடனம் அது. அதற்கும் அறபிகளின் வாளேந்திய நடன அசைவுக்கும் தொடர்பிருப்பதைக் காணலாம். போரின் பின்னான வெற்றிக் களியாட்டமே அந்த நடனமாக உருவாகியிருக்க வேண்டும். அமர்ந்த படி இரண்டு கைகளையும் விரித்து மேலும் கீழுமாக அசைத்துக் காட்டினாலே போதும், பாங்ரா நடனத்தை அடையாளம் காட்டிவிடலாம். அத்துடன் ”பல்லே பல்லே” (B ஓசை) என்று சொன்னால் இன்னும் துலக்கம். (சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரிக்கு தர நிர்ணயம் செய்வதற்கு வந்த பல்கலைக்கழக மாணியக் குழுவின் அணியில் பஞ்சாபி ஒருவர் இருந்தார். அப்போது ஒரு பேராசிரியர், பாங்ரா ஆடுவது போல் கைகளால் செய்கை காட்டிக்கொண்டு சொன்னார், “சிங் ரொம்ப ஸ்ட்ரிக்டாம். நம்ம டிபார்ட்மண்ட்டுக்கு பல்லே பல்லேதான்”).

 அறியாத மொழி ஒன்றை இசைப் பாடலாகக் கேட்பதில் நமக்கு மனத் தடைகள் ஏதும் இருப்பதில்லை. அதிலும்கூட பலருக்கும் சிரமம் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஃபார்சி, ஸ்பானிஷ், சம்ஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் என்று ஏதாவதொரு மொழியில் நல்ல இசையுடன் கூடிய பாடலொன்றை நான் லயித்துக் கேட்பதைக் கண்டு “புரிகிறதா?” என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். ‘ஆமாம், மொழி புரியாவிட்டாலும் இசை புரிகிறது’ என்று பதில் சொல்லியிருக்கிறேன். விஷயம் யாதெனில், நமக்குத் தெரிந்த மொழிக்குத் தொடர்புடைய மொழியாக இருப்பின் இசை வழியாகக் கேட்டுக்கொண்டே இருந்தால் அந்த மொழியும் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கிவிடும்!

அறியா மொழியில் நல்ல இசைப்பாடலைக் கேட்டுவிடலாம்தான். அதே போல், அறியா மொழியின் திரைப்படத்தைக்கூட, அதன் காட்சிகள் புரியும்படியாக அமைக்கப் பட்டிருந்தால், பார்ப்பதில் சிரமம் இருக்காது. ஏனெனில் காட்சிகளே கதையைப் புரிய வைத்துவிடும். ஆனால், அறியாத ஒரு மொழியில் ஒருவர் சொற்பொழிவு நிகழ்த்துவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? பஞ்சாபி மொழியை அப்படிக் கேட்டு ரசிக்க முடியும்! ஒரு பத்து நிமிடங்களாவது.


















அப்படி நான் ரசித்த ஒரு பேச்சாளர் சூஃபி வழியின் குருவாக இருந்த பீர் நசீருத்தீன் நசீர் (ரஹ்). பிப்ரவரி 2009-இல் தனது அறுபதாவது வயதில் இறந்தார். அவரது தாய்மொழியான பஞ்சாபியிலும், இலக்கிய மொழியான உருதுவிலும் மேடையுரை ஆற்றுவதில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்தார். கவிஞர், பாடகர், சமய அறிஞர் என்று பன்முகத் திறன் பெற்றவர். அவர் பஞ்சாபி மொழியில் மேடைப் பிரசங்கம் செய்வதை ஒரு நாடகத்தைப் பார்ப்பது போல் பாக்கலாம். விழியசைவும் முகபாவனைகளும், அழகிய விரல்கள் கொண்ட கைகளால் நடன அசைவு போல் அவர் காட்டும் அபிநயங்களும் யாரையும் ஈர்த்துவிடும்.

இப்படித்தான் பஞ்சாபி மொழி எனது ரசனையின் ஒரு பகுதியாகவே வேர் பிடித்து வந்திருக்கிறது. சென்ற வாரம் ஆன்மிகத் தோழர்களுடன் மேலைப்பாளையம் வரை பயணமானேன். காரில் எப்போதும் சூஃபிப் பாடல்களையே கேட்டுக் கொண்டு போவோம். உருதுக் கவ்வாலிகளுக்கிடையே நான் அலைபேசியிலிருந்து பஞ்சாபிப் பாடல்கள் சிலவற்றையும் ஒலிக்க விட்டேன். ’குருதாஸ் மான்’ பாடிய ‘கீ பனு துனியா தா’ என்னும் பாடல் அது. அந்த இசையின் எடுத்தல் பாணியே உணர்வுகளைக் கிளர கார் ஓட்டிக்கொண்டிருந்த நண்பர் துள்ளிக்கொண்டு கைகளைத் தட்டினார். பல்லே பல்லே!