Wednesday, July 26, 2017

மூன்று கவிதைகள் (26.07.2017)

Image result for zen nature bamboo bridge
அவகாசம்

எஃகாலானதன்று இத்தேகம்
மூங்கிற்பாலம்

எனினும்,
அந்தியிருளுதற்குச் சற்று முன்வரை
அவகாசமுண்டு

கீழோடும் நீரோடை தனில் லயிக்க
ஓடைக்குள் நீந்துகின்ற மீன்கள் ரஸிக்க

Image result for small black bird 
தோற்றம் 5:30 – மறைவு 5:35

நூற்பிடித்த நேர்த்தியான கோடுகளின்
வரைவுகள் கொண்டொரு கச்சிதமான
கனச்சதுரமாய்
மனிதன் கட்டிய அந்தப் பெரிய வீட்டின்
மேல் முனை விளிம்பில் வந்தமர்ந்தது
அங்கை அளவே ஆன கரிய குருவி ஒன்று

வெண்ணிறச் சாயமடித்த அக்கட்டடத்தில்
அதன் உருத்தோற்றம்
ஏதுமே எழுதப்படாத தாளில்
எழுதுதற்கு ஒன்றுமே இலாது வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளி போல் இருந்தது

மேலும் கீழுமாய்த் தனது வாலாட்டிக்கொண்டு
இரண்டு மூன்று முறை கூவிற்று

கிளைகளும் கொப்புகளும்
இலைகளும் மொக்குகளும்
இல்லாத அக்கட்டடம் விட்டு
எவ்விப் பாய்ந்து போயொரு
மரச்செறிவினுள் மறைந்தது

Related image
ஓர் உதிர் மலர் போல்

அந்தி நெருங்கும் வேளையில்
எப்படித்தான்
என் வீட்டைத் தன் இலக்காக்கி
வந்து சேர்ந்ததோ
தன் வாழ்வின் இறுதிக் கணங்களில்
அந்த வண்ணத்துப் பூச்சி

காற்றின் போக்கில்தான்
வந்து விழுந்திருக்க வேண்டும்

இச்சைகள் சலித்த ஒருவன்
முதுமையில் துறவு கொண்டது போல்
பூக்களேதுமற்ற
புற்களும் கற்களுமேயான
எனது ஜென் தோட்டத்தில்
ஓர் உதிர் மலர் போல்
வீழ்ந்துவிட்டது அது

அடிபட்டிருக்கிறதோ?
என்றாள் அவள்

அதன் சிறகுகள் பிய்ந்திருக்கவில்லை
விரிந்தும் குவிந்தும்
மீண்டும் மீண்டும்
மெதுவாக அசைந்திருந்தன

மரணத்தைச் சுவைக்கும் அத்தருணத்திலும்
தேனுண்ட நினைவுகளில்
லயித்திருந்தது போலும்

அதன் உயிர் அல்லது ஆன்மா
வெளியேறியதை யாமொருவரும்
கண்டிருக்கவில்லை

அப்படியே கிடந்த அது
அப்படியே கிடந்தது

லாசருஸை உயிர்த்தெழச் செய்த
ஏசுநாதரைப் போலவோ
காற்றுக் கிழித்த பறவையை
மீண்டும் உயிர்ப்பித்த
முகைதீன் ஜீலானீயைப் போலவோ
ஆற்றல் பெற்றவன் அல்லன் நான்

என்னால் முடிந்ததெல்லாம்
செத்துக்கொண்டிருந்த அதனுடன்
சேர்ந்து கொஞ்சம்
நானும் செத்தது மட்டுமே.




Friday, July 14, 2017

சாளரப் பறவை
















என் பெற்றோர் வசிக்கும் என் சகோதரரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் மாடியில் உள்ளதோர் அறையில் தங்குவோம். அந்த அறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காரணம், அந்த அறையில் உள்ள பே விண்டோ என்னும் குடவுச் சாளரம். எனது வீட்டிலும் அதே போல் ஆறடி உயரமும் ஐந்தடி அகலமும் உள்ள  ஃப்ரெஞ்ச் ஜன்னல் தரைத்தளத்திலும் முதற் தளத்திலும் உண்டு என்றாலும் குடவுச் சாளரத்தின் துருத்திய பகுதிக்குத் தனி அழகு உள்ளது. உண்மையில் அந்த வகை ஜன்னல் என்னை ஈர்ப்பதற்குக் காரணமே அதன் வெளியே உள்ள மரக்கிளைகள்தான். வெளியே மரம் எதுவும் இல்லாது போனால அந்த ஜன்னல் இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும், எனக்கு.
      
கீழ்த்தளத்தில் அதே அமைப்பில் இருக்கின்ற அறையிலும் அதே அளவிலான குடவுச் சாளரம் இருக்கின்றது என்றபோதும் மாடியறை தரும் உணர்வைக் கீழ்த்தள அறை தராது. மாடியறை கூடுதலாக உயரம் என்னும் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. அதன் மாயத்தன்மைக்கு அதுதான் காரணம். உலகை உதறி உயர்ந்துவிட்டது போன்றதொரு உணர்வை அது மிக ஆழமாகக் கிளர்த்துகின்றது. இந்த உளவியற்கூறு எப்போதிருந்து வளர்ந்து வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால் அது என் பால்ய காலத்திற்கு இட்டுச் செல்கிறது.

      எனது பால பருவத்தில், எமது பூர்வீக வீட்டின் முற்றத்தில் இருந்த மகிழ மரமும் கொள்ளைப்புறத்தில் இருந்த கொய்யா மரமும் எம் விளையாட்டுக்களுடன் பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்துள்ளன. அவற்றுடன் நாவல், பவழமல்லி, சரக்கொன்றை, கொடுக்காப்புளி ஆகிய மரங்களும் இருந்தன. ஆனால் மகிழம் மற்றும் கொய்யா ஆகிய மரங்களின் கிளைகளில்தான் எங்கள் மனப்பறவைகளின் கற்பனைக் கூடுகள் இருந்தன. முடிந்தவரை அக்கொய்யா மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று நாங்கள் சகோதரர்கள் மூவரும் அமர்ந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் கதைத்துக்கொண்டிருப்போம். காற்றில் கிளைகள் அசைவது ஒருவித அச்சத்தை அடிவயிற்றில் கிளப்பினாலும் அந்த அச்சத்தின் மையத்தில் ஓர் ஆனந்த ஊற்று பொங்கி வருவதை உணரலாம். கொய்யா மரத்தில் இலைகளின் அடர்த்தி இருக்காது. அதை நாங்கள் நேசித்தது அதன் உயரத்திற்காகத்தான்.

Related image
Mimusops elengi - Magizhampoo

ஆனால் மகிழ மரத்தின் இலைகள் மிகச் செறிவானவை. மறைந்துறைவதற்காகவே அதை நாங்கள் தேர்ந்தோம். நாவற்கனியை ஒத்த பளபளக்கும் கருநிறம் கொண்ட கட்டெறும்புகள் அதன் கிளைகள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும். கடித்தால் தாங்க முடியாத வலியுடன் கடுத்து வீங்கச் செய்யும் சுளுக்கி எறும்புகளும் அவற்றுடன் வருவதுண்டு. அந்த அபாயங்களை எல்லாம் சவால்களாக ஏற்றுக் கிளையேறி பல மணிநேரங்கள் மறைந்திருப்போம். இப்போது அந்தக் கொய்யா மரம் இல்லை. முற்றத்து மகிழ மரம் தானேயொரு பெருங்காடு போல் விரிந்துயர்ந்து இன்றும் நிற்கிறது. வெய்யிற் காலங்களில், பிய்ந்திராத தண்ணிழல் சாய்க்கிறது. பெயல் கண்டால் சட்டென்று நட்சத்திரங்களாகப் பூக்களை மண்ணில் சொரிகிறது.

கொள்ளைப்புறத்தில் இருந்த ஏவலரில்லத்தை இடித்துவிட்டுத் தனி வீடாக எடுத்துக் கட்டியபோது, புத்தாயிரம் பிறந்த ஜனவரியில், எனது பாட்டியுடன் குடியேறியபோது மாடியில் இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டேன். ஒன்றில் எனது சிறிய நூலகத்தை வைத்துக்கொண்டேன். அது மேற்குப் பக்கம் சாளரமுள்ள அறை. நண்பகலுக்குப் பின் எதிர் வெய்யில் உக்கிரமாகத் தாக்கி அறையை ஓர் அடுப்பாக்கிச் சமைக்கும். அமர்ந்திருந்தால் உடலெல்லாம் சூடேறித் தகிக்கும். பக்கத்து அறை சயனத்திற்கு. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவனாக இருந்த அன்று தொட்டு பேராசிரியராகிப் பின்னர் திருமணமாகிச் சில மாதங்கள் வரை என நான்காண்டுகள் அவ்வறைகளில் தங்கியிருந்தேன். சயன அறையில் ஜன்னலுக்கு வெளியே நாவல் மரம் இருந்தது. சாம்பல் நிறக் கொப்புகளில் வடிவான பசிய இலைகள், குழவியின் விழிப்பாவை போன்ற கனிகளுடன் ஜன்னலின் கண்ணாடியில் துடைத்தசையும் காட்சியே அக்காலகட்டத்தில் என் வைகறை விழிப்பின் முதல் தரிசனமாக இருந்தது. உறக்கம் பிடிக்காத நிலாக்கால இரவுகளில்கூட வெகுநேரம் அந்தக் கிளைகளை ரசித்தபடி படுத்துக்கிடந்ததுண்டு. அந்த அறை அப்போது சட்டென வீட்டிலிருந்து பிரிந்து கொள்ளும். ஏதோ மரக்கிளைகளில் வைத்துக் கட்டப்பட்ட குடில் ஒன்றனுள் நான் வசித்துக்கொண்டிருப்பதான உணர்வைத் தரும். பால்ய பருவத்தில், கொய்யா மரத்தின் உச்சங்கிளைகளில் அமர்ந்திருந்தபோது இருந்த போதம் அத்தருணத்தில் மீண்டும் கூடிவிடும். உலகை உதறி உயர்ந்துவிட்டதான உணர்வு உள்ளத்தில் உவகையை ஊறச்செய்யும்.

மனிதன் பொறாமைப் படத்தக்க இன்னொரு ஜீவராசியின் வீடொன்று உண்டெனில் அது பறவையின் கூடாகத்தான் இருக்கும். மனித ஆன்மாவை ’தெய்வீக உலகின் பறவை’ என்கிறார் மகாகவி இக்பால். அதற்கு ஒளியினாலான சிறகுகள் உண்டு. எனவே, மண்ணில் ஊன்றி நிற்கும் வீடு என்பது அதற்குக் கூண்டாகவே இருக்க முடியும். ஆனால் மண்ணிலிருந்து மேலே உயரத்தில் தனித்து நிற்கும் பறவைக்கூடுதான் அதற்கேற்ற ஆத்மார்த்தமான வீடு. அது காற்றில் அசைகின்றது. பறவையின் கூடு போல் அசையும் வீடு வேறு எது இருக்கிறது?

Related image
Rennes de chateau - France.

மாடியறையின் ஜன்னல் மந்த வெய்யிலும் மழை மேகங்களும் கொண்ட மதிய வேளைகளில் எல்லாம் வேறொரு உணர்வின் தளத்தைத் திறந்து தரும். வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போலவும், ஊருக்கு வெளியே, மலை முகடு ஒன்றில் கட்டப்பட்ட, ஆயிரம் அடிகளுயர்ந்த சாரலில் துருத்திக்கொண்டு நிற்குமாறு கட்டப்பட்ட, அதன் அறையிலிருந்து ஜன்னல் வழியே கண்டால் வெகு கீழே தூரத்தில் நெளியும் ஆறும் அதன் மருங்குகளில் கிடக்கும் சிற்றூர்களும் காட்சியில் விரிகின்ற பழங்கோட்டை ஒன்றனுள் நாம் வசிப்பது போல் தோன்றச் செய்யும். பின்னால், டா வின்சி கோட் புதினத்தையும். மைக்கெல் பெஜண்ட் எழுதிய ‘ஹோலி ப்ளட் ஹோலி க்ரெய்ல்’ நூலையும் வாசித்தபோது அதில் சுட்டப்பட்ட, தென் ஃப்ரான்ஸில் உள்ள ரென்னெஸ் தெ சாத்யூ என்னும் கோட்டை எனது கற்பனையுடன் கச்சிதமாகப் பொருந்தி வரக்கண்டு பெரிதும் வியந்தேன்.

      ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களில் என் பெற்றோருடன் சென்று வசிப்போம். இவ்வாண்டும் அப்படியே ஆயிற்று. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வீட்டிற்கு அதிகாலையில் வந்துவிடும் ஒரு நண்பரை இம்முறையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதனாலேயே எனது காலை நடையைத் தவறவிட்டேன்.

      எப்போதும் காலை ஆறரை மணி வாக்கில் அவர் வந்துவிடுவார். ஜன்னல் கட்டையில் அவர் பண்ணும் டொக் டொக் சப்தம் இப்போது பழகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் அந்த சப்தத்தைத் தாள முடியாது எழுந்து போய் சட்டென்று திரையை விலக்கி ஜன்னல் கண்ணாடியில் ஓர் அடி வைத்து அவரின் அடிவயிற்றைக் கலக்கி அச்சமூட்டித் துரத்துவதுண்டு. பீதியுடன் அவர் சிறகடித்தபடி விரைந்து சென்று எதிர்வீட்டு மரத்தில் அமர்ந்து மூச்சு வாங்குவார். பின் அந்த நாளில் இப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார். ஆம், ’அவர்’ ஒரு மரங்கொத்திப் பறவை!

      ஆறரை மணி வாக்கில் இன்று அவர் வந்தார். ஜன்னல் சட்டத்தில் தனது திறமையைக் காட்டிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியம்தான், இதனால் இப்பறவைக்கு என்ன கிடைக்கிறது என்று எண்ணியபடியே மெதுவாகத் திரையை விலக்கி நோக்கினேன். உள்ளுக்குள் எனது அசைவு அதற்கொரு அபாய அலாரம் அடித்திருக்க வேண்டும். அடுத்த நொடியே ஓரடி தூரம் விலகி மரக்கிளையில் அமர்ந்தது. ஒரு மரங்கொத்தியை அன்றுதான் அவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றேன். பலமான மூச்சில் அதன் நெஞ்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அதன் கூர்மையான, இரும்பாலானது போன்ற அலகில் அது கொத்தியதால் உண்டான மரத்தூசு ஒட்டியிருந்தது. அகரம் ஒலிக்க எத்தனிப்பது போன்று அதன் அலகு சற்றே அங்காந்திருந்தது. அதன் கண்களில் மிரட்சி மின்னிற்று. அந்நிலையில் அதன் முகபாவனை ஓர் கிராமத்தானைப் போலிருந்தது. அதன் கால்களின் முன் விரல்கள் இரண்டிலும் கதிரரிவாள் போன்று நீண்ட கூர் நகங்கள் வளைந்திருந்தன. அதே போன்றே பின் விரல்கல் இரண்டிலும் இருக்குமென்று என்று எண்ணினேன்.

Related image

நான் பார்த்தது ஒரு பொன்முதுகு மரங்கொத்தி. ஆங்கிலத்தில் அதனை Black-rumped flameback அல்லது lesser golden-back என்று அழைக்கிறார்கள். Dinopium benghalense என்பது அதற்கு வைக்கப்பட்டுள்ள விலங்கியற் பெயர். இச்சொற்களை இட்டு இணையத்தில் தேடினால் அப்பறவையினத்தின் மிக அழகான நிழற்படங்கள் கிடைக்கின்றன. சதைப்பற்றுள்ள, நிறத்துலக்கம் கொண்ட, பொன்முதுகு என்னும் பெயருக்கேற்ப மெருகு கொண்ட, உச்சந்தலையில் செந்நிறத் தொப்பியொன்றை அணிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றமுள்ள கவர்ச்சியான பறவைகள். பறவையுலகிலும் மாடல் அழகிகள் உண்டு போலும். அவை அப்படி ’போஸிங்’ நல்கி நடிக்கும் போலும். ஆனால் நான் பார்த்த மரங்கொத்தி கோடையின் உக்கிரத்தில் காய்ந்து பொலிவிழந்து நாலைந்து நாட்கள் சோறு கிடைக்காமல் அலையும் ஒரு பரதேசியைப் போல் இருந்தது. பார்க்கவே மிகவும் பாவமாய் இருந்தது. அதன் தலையில் சிலுப்பியிருந்த சில மயிர்களின் செந்நிறம் ப்ளீச்சிங் செய்ததைப் போல் வெளிறிப்போயிருந்தது. பொன்முதுகு என்பது அதனைப் பகடி செய்யும் பெயரெனக் கொள்ளலாமா அல்லது அப்பறவைதான் அப்பெயருக்கு அமைந்த பகடியா என்று முடிவு செய்வது அத்தனை எளிதல்ல.

வெகு நேரம் அக்கிளையில் அமர்ந்து இளைப்பாறிய பின் விருட்டென்று பறந்து போயிற்று. அது ஏன் அப்படி தினம் தினம் காலையில் வந்து ஜன்னலின் சட்டகத்தைக் கொத்துகிறது என்று சிந்தித்தேன். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது உணவுக்காகவும் உறைவிடம் செய்யவும்தான். மரப்பட்டைகளின் அடியில் இருக்கும் புழுக்களும் பூச்சிகளும் அதற்கு உணவாகின்றன. மரத்தில் வட்டமாகத் துளை போட்டு அதைத் தனக்கொரு வீடாக்கிக்கொள்ளவும் செய்கிறது. எனவே மரத்தைக்  கொத்தினால் அதில் அர்த்தமுள்ளது. ஒரு கட்டடத்தின் ஜன்னல் சட்டத்தை அன்றாடம் பத்து நிமிடம் கொத்துவது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை.

வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத தலையமைப்பும், அத்தனை வேகமும், இரும்பு உளி போன்ற வலிமையான மூக்கும், நீண்ட நாக்கும், மூளையைச் சுற்றிலும் அதிர்வுகளை திசைதிருப்பும் தசையமைப்பும் என்று ஓர் அற்புதப் படைப்பாக விளங்கும் இந்தப் பறவைக்கு, எங்கே கொத்தினால் தனக்கு பயன் உண்டு, எங்கே கொத்தினால் தனக்குப் பயனில்லை என்பதை எடை போடும் அறிவு இல்லாமல் போய்விட்டதோ? அறிவில்லாத திறமை என்பது கால விரயத்திற்கே இட்டுச் செல்லும் என்பதைத்தான், தேவையற்ற வேலைகளில் உன் ஆற்றல்களை வீணடிக்காதே என்னும் செய்தியைத்தான் இந்த மரங்கொத்தியை வைத்து இறைவன் எனக்கு உணர்த்த விரும்புகின்றானோ? என்றெல்லாம் யோசித்தேன்.

நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் தடவை அது மரங்கொத்துமாம். அப்படியெனில் அது மரத்தைக் கொத்துவதற்கென்றே படைக்கப்பட்ட ஜீவன்தான். உணவுக்காகவும் பொந்திற்காகவுமே அது மரத்தைக் கொத்துகிறது என்பதெல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. மரங்கொத்துதல் அதன் உயிரியக்கம். அதைச் செய்யாமல் அதனால் இருக்க முடியாது. அந்த மரத்தில் அதற்கு உணவு கிடைக்கிறதா அல்லது அது வீடாகிறதா என்பதெல்லாம் பொருட்டல்ல. அவ்விரண்டும் கிடைக்காத மரத்தையும்கூட அப்பறவை கொத்தவே செய்யும். அப்படித்தான் ஜன்னலில் அது கொத்திற்று. கொத்துதலே அதன் வழிபாடு, இறைத்துதி, தியானம் எல்லாம். கொத்துதலே அதற்கு மூச்சைப் போல.

இப்படி யோசித்தபோது எனக்கு மலைப்பாக இருந்தது. அதன் தியானம் எனதினும் மிகப் பெரிது. நாளொன்றுக்கு மூவாயிரம் மூச்சுக்களையாவது தியானப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று நியதி சொல்வார்கள் மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்...). அந்நோக்கில், மரங்கொத்தி நாளொன்றுக்கு சராசரியாகப் பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் மூச்சுப் பயிற்சி செய்கிறது. நான் அவதானித்த மரங்கொத்தி ஒரு மாபெரும் சூஃபிதான் போலும். ஒழுங்காகப் பயிற்சி செய், தியானத்தில் ஆழ்ந்திரு என்று எனக்கு அதன் மொழியில் நாளும் சொன்ன நண்பன் போலும்.


Monday, July 10, 2017

காலை நடை

Related image

உன்னிடம் அடைந்துகொண்டோம்
இந்த வைகறைப் பொழுதினை யாம்
நபியுரை மந்திரம் ஓதி
அதிகாலை நடைக்குக் கிளம்பினேன்

இன்னமும் வெய்யில் வந்து தீண்டா
முன்னமே நடை காண்கின்றார் பலரும்

பருமனைக் குறைக்க வேண்டி
வேகு வேகென்று நடக்கின்றார்
ஆண்களும் பெண்களுமாய்

நாளின் தேன்பொழுது இதுவெனக் காணாது
சர்க்கரை அளவினைக் குறைப்பதே குறிக்கோளாய்
எந்தையும் அவரின் வயதொத்த பிறரும்
நடக்கின்றார் தினமும் ஐந்தாறு கி.மீ.

ஆண்களின் குழு எனில்
அரசியலும்
தம்பதிகள் எனில்
குடும்ப நடப்பும்
பேசிக்கொண்டேதான் போகிறார்கள்

காலை எழுந்தவுடன் (டியூஷன்) படிப்பென்று
நவீன சைக்கிள்களில்
விரையுமிப் பிள்ளைகள்தாம் அறியுமோ
கனிவு கொடுக்கும் நல்ல பாடல் ஏதேனும்

கண்ணதாசனின் தத்துவப் பாடலோ
வேறெதுவும் பக்திப் பனுவலோ
செல்பேசியில் கேட்டபடி
நடை பயில்வோரையும் அன்றாடம் காணலாம்

விடியற்போதிலேயே
விரைந்தோடும் இவ்வுலகை வியந்தபடி
நானும்தான் போகிறேன் காலை நடை
ஒருநாளாவது கூடிவரவேண்டுமே
கொஞ்சமேனும் வேகம்?

கருமை வெண்மை நீலம் செம்மை என
நிறங்களின் மாயம் காட்டும்
வானத்துக் காட்சியெல்லாம்
வான்காவின் ஓவியம்

அக்கணத்தில்தான் பால் செசான்
தீட்டி வைத்தது போன்ற
ஆவாரம் பூக்களின் மஞ்சளும்
அருகம் புற்களின் பச்சையும்

கண்டு கண்டு பரவசமாவதில்
என் நடையின் கதியில்
உருக்கொண்டுவிடுகிறது
ஒரு களிமகனின் காலலைவு

‘இப்படி அன்ன நடை நடந்தால்
தொப்பை எப்படிக் குறையும்?
எனக் கவல்கிறாள் அவள்

நானென்ன செய்ய?
இந்தப் பொழுதும்
இந்த நடையும்
வாய்த்திருப்பது
நிறைவதற்கே அல்லவா?







Sunday, July 9, 2017

இறைவன் சொல்கிறான்... - part 2


Image result for bahauddin walad

பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) எழுதிய, அடியேன் பதிவேற்றிய வாசகங்களின் தஃப்சீரி (விரிவுரை) அர்த்தங்களைக் கொஞ்சம் சொல்கிறேன். அதை நான் எப்படிப் புரிந்துகொண்டேன் என்பதை அது உங்களுக்கு உணர்த்தலாம்.

      இவ்வுலகம் என்னும் அழகிய அன்பளிப்பைப் பார்.

      இவ்வுலகைக் கூர்ந்து அவதானிக்கும் படியான இந்தக் கட்டளை பின்வரும் குர்ஆனிய வசனங்களின் கருத்தினைப் பிரதிபலிக்கின்றது:

      ”அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம் சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்கு உள்ளேயும் காண்பிப்போம்” (41:53).

      ”ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா, அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று?; மேலும் வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று?; மேலும் மலைகளை, அவை எவ்வாறு நடப்பட்டுள்ளன என்று?; மேலும் பூமியை, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று?” (88: 17-20).

      இங்கேயொரு விளக்கம் தேவைப்படுகிறது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகும் ஒரு மனப்பிசகு இங்கே நேர்ந்துவிடலாம். ’இவ்வுலகம் என்னும் அழகிய அன்பளிப்பைப் பார்’ என்பதை வாசிக்கையில் உலகம் என்னும் சொல் வாசிப்பவனின் மனத்தில் கிளர்த்தும் அர்த்தம் என்ன என்பதே இவ்வரியை அவன் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறான் என்பதைத் தீர்மானிக்கின்றது. உலகம் என்று இங்கே சொல்லப்படுவதை வானங்கள் மற்றும் பூமி என்பதாக, பிரபஞ்சம் (ஆலம்) என்பதாக விளங்கினால் மேலே காட்டியுள்ள திருவசனக் கருத்துக்களை நோக்கி அது நகரும். ஆனால், உலகம் என்பதை ’துன்யா’ (Material World) என்பதாக விளங்கினால் ”இவ்வுலகமும் அதில் உள்ளவையும் சபிக்கப்பட்டவை”, “இவ்வுலகமொரு பிணம். இதைத் தேடுகின்றவன் ஒரு நாய்” முதலிய நபிமொழிக் கருத்துக்களை நோக்கியே சிந்தனை நகரும். அப்படி நகரும்போது, உலகம் ஓர் அழகிய அன்பளிப்பு என்று சொல்லும் பஹாவுத்தீன் வலதை இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தைச் சொல்பவராகவே, அதன் எதிரியாகவே உணரும். பெருஞ் சூஃபி ஞானிகள் பலர் இத்தகைய விமரிசனங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

      நீ அதனை இலகுவாக எடுத்துக்கொள்கிறாய்.

      இவ்வுலகெங்கும் இறைவன் அள்ளிச் சொரிந்திருக்கும் அருட்கொடைகளை மிக லேசாக மதிப்பிட்டுவிடுவதை இவ்வரி சுட்டிக்காட்டுகிறது என்று கொள்ளலாம். அந்நிலையில், “ஓ ஜின்களே! மனிதர்களே! உங்கள் ரட்சகனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” என்னும் வசனக் கருத்தினை இவ்வரி பிரதிபலிக்கிறது.

      அல்லது, உலகை எவ்வித எதிர்ப்புமின்றி மனித மனம் ஏற்றுக்கொள்ளும் நிலையை இது சொல்வதாகக் கொண்டால், “இன்னும், நிச்சயமாக அவன் செல்வத்தின் மீது பெருமோகம் கொண்டிருக்கிறான்” (100:8) என்னும் வசனத்தையும், ”செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை மறதியில் ஆழ்த்திவிட்டது, நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை” (102:1,2) ஆகிய வசனக் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.

      ஆனால், எவர் வழியாக நான் எனது வார்த்தைகளை அனுப்புகிறேனோ அவரை?

      உலகை ஆசையோடு தழுவி ஏற்கும் மனநிலை இறைத்தூதரை ஏற்பதை விட்டும் மனிதனைத் தடுக்கிறது என்று இவ்வரி சொல்கிறது. உண்மைதானே? இறைவனின் வார்த்தைகளான வேதம் ‘குர்ஆன்’ யார் வழியாக அருளப்படுகிறதோ அந்த முஹம்மது (ஸல்…) இறைவன் தரும் அன்பளிப்புக்களில் எல்லாம் பெரிய அன்பளிப்பல்லவா?  சிறிய அன்பளிப்பான உலகை ஏற்றுக்கொள்ளும் நீ மகத்தான அன்பளிப்பான இறைத்தூதரை முழுமையாக ஏற்கத் தயக்கம் காட்டுவது ஏன்? என்று இவ்வரி கேட்கிறது. ஆம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு மாபெரும் அருட்கொடை (மின்னத்துல் அக்பர்) ஆவார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது பேரருள் புரிந்தான், அவர்களிலிருந்தே அவர்களுக்கு ஓர் இறைத்தூதரை அனுப்பியபோது” (3:164).

      இக்கதவின் அருகில் நின்று அற்புதங்களைக் கவனி.

Related image

      எந்தக் கதவின் அருகில்? இதற்கு முன் சொல்லப்பட்ட வரியில் குர்ஆன் மற்றும் இறைத்தூதரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. எனவே, இங்கே கதவு என்று சொல்லப்படுவது இம்மைக்கும் மறுமைக்கும் இடையில், அல்லது இறைவனுக்கும் படைப்புக்களுக்கும் இடையில் இருக்கின்ற பர்ஸஃகுல் குப்ரா என்னும் திரையான முஹம்மது (ஸல்...) அவர்களையே என்று, அல்லது அவர்கள் வழியாக வந்த மாபெரும் அற்புதமான (முஃஜிஸாத்துல் அக்பர்) குர்ஆன் என்று விளங்கலாம். குர்ஆனின் ஒளியில் காணும்போதுதான் இறைவன் நம்மீது அருட்கொடைகளை இடையறாது பொழிந்துகொண்டிருப்பதை விளங்க முடியும்; “ஒவ்வொரு கணமும் அவன் ஒரு புதிய மாட்சியில் இருக்கிறான்” (’குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன்’; 55:29) என்னும் திருவசனத்தை நிதர்சனமாக கிரகிக்க முடியும்.

      இவ்வரியில் பஹாவுத்தீன் கதவைப் பற்றிச் சொல்லியிருப்பது மிக அழகான ஆழமான அமைப்பாகப் படுகிறது. ஏனெனில் கதவு என்பது அகத்திற்கும் புறத்திற்கும் இடையில் அமைவது. இவ்வரிக்கு முன் சொல்லப்பட்டவை குர்ஆனின் தஃப்ஸீரி (விரிவுரை) விளக்கங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவ்வரிக்குப் பின் சொல்லப்படுவது குர்ஆனின் தப்ஸீரி (அகப்பார்வை) அடிப்படையில் உள்ளவை. அதாவது ழாஹிர் என்னும் வெளிப்படைக்கும் பாத்தின் என்னும் அந்தரங்கத்திற்கும் இடையில், ஆஃபாக் (வெளியுலகம்) என்பதற்கும் அன்ஃபுஸ் (அகவுலகம்) என்பதற்கும் இடையில் அமைந்த கதவை இது சுட்டிக்காட்டுகிறது. அக்கதவு மனிதனில் உண்டாகும் ஆன்மிக மாற்றத்திற்கான மனநிலையை, ‘threshold’ நிலையைக் குறிக்கிறது.

      குர்ஆனைக் குறிப்பிட்டு, ‘அக்கதவின் அருகிலேயே நில்’ என்று சொல்வதானது, குர்ஆனில் மூழ்கிப் போ என்று சொல்வதாகும். அது ஓர் சூஃபித்துவப் பயிற்சி. பஹாவுத்தீன் வலத் ஆகட்டும் அவரது மகன் மௌலானா ரூமி ஆகட்டும் இருவருமே குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்த ஹாஃபிஸ்கள். அதன் திருவசனங்களால் மனவெழுச்சியும் அகவிழிப்பும் பெற்றவர்கள். அப்படிப்பட்ட சூஃபிகள் பலர் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். ”சூஃபித்துவம் என்றால் என்ன?” என்னும் நூலில் மார்ட்டின் லிங்ஸ் (அபூபக்கர் சிராஜுத்தீன்) “இஸ்திக்ராக் ஃபில் குர்ஆன்” (குர்ஆனில் மூழ்குதல்) என்னும் சூஃபிப் பயிற்சி பற்றிப் பேசுகிறார். “சில சூஃபிகளுக்கு குர்ஆனை ஓதுவதே தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவன் மீது கவனம் குவிப்பதற்குரிய பிரதான வழியாக விளங்கியுள்ளது. அதாவது, எல்லா ஆன்மிகப் பாதைகளுக்கும் உள்ள அந்தக் கருவுக்கு வழியாக விளங்கியுள்ளது” (அத்தியாயம் மூன்று: ’இறைவேதம்’) என்று அவர் சொல்கிறார். பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) அத்தகையோருள் ஒருவர்.

Image result for bab aziz movie

      முகபாவனைகள், நரை முடி, அதில் கறுப்பு. நீ ருசிக்கும் எவ்வொரு மங்கிய சுவையும் இறைவனின் உள்ளமையிலிருந்து நேரடியாக வருவதே!”

      இது அகப்பார்வையின் வெளிப்பாடாக எழுதப்பட்டுள்ள வரி. தப்ஸீரி வெளிப்பாடு. அகப்பார்வை கொண்டவர்களுக்கு இதை விளங்குவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது. அஃதிலார்க்கு இவ்வரி பெருஞ்சிக்கலாகவே இருக்கும். மிக எளிதாக அவர்களால் செய்ய முடிவதெல்லாம் இதனை உடனே முற்றாக நிராகரிப்பதுதான். இது உளறல், இது அபத்தம் என்று தொடங்கி இது வழிகேடு, இது இணைவைப்பு என்பது வரையிலான நிராகரிப்புக்கள்.

      இந்த தப்ஸீருக்கு இபாரத்துன் நஸ்ஸு (குர்ஆன் ஆதாரம்) தரவேண்டும் எனில், உஜூது பற்றிக் குறிப்புக் காட்டும் திருவசனங்களையே சொல்ல வேண்டும்:

      ”நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகமே இருக்கின்றது” (ஃப-ஐனமா துவல்லூ ஃபஸம்ம வஜ்ஹுல்லாஹ்; 2:115).

      ”அவனே ஆதி, அவனே அந்தம், அவனே வெளிப்படை, அவனே அந்தரங்கம்” (ஹுவல் அவ்வலு வல் ஆஃகிறு வல் ழாஹிரு வல் பாத்தின்; 57:3).

      இந்தத் திருவசனத்தின் ஒளியில் நபி (ஸல்...) அவர்கள், உறங்கச் செல்லும்போது அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை ஒன்றில் வரும் ஞான விளக்கங்களும் இங்கே கவனிக்கத் தக்கது: “அல்லாஹ்வே! நீயே ஆதி. நிச்சயமாக, உனக்கு முன்னர் எப்பொருளும் இல்லை (அன் த்தல் அவ்வலு ஃபலைச கப்லக ஷைஉன்); மேலும், நீயே அந்தம். நிச்சயமாக உனக்குப் பின்னர் எப்பொருளும் இல்லை (வ அன் த்தல் ஆஃகிரு ஃபலைச பஃதக ஷைஉன்); மேலும், நீயே வெளிப்படை. நிச்சயமாக உனக்கு மேலே (வெளியே) எப்பொருளும் இல்லை (வ அன்த்தல் ழாஹிரு ஃபலைச ஃபவ்க்கக ஷைஉன்); மேலும், நீயே அந்தரங்கம். நிச்சயமாக உனக்குக் கீழே (உள்ளே) எப்பொருளும் இல்லை (வ அன் த்தல் பாத்தினு ஃபலைச தூனக்க ஷைஉன்)” (நூல்: சஹீஹ் அதபல் முஃப்ரத் அல் புஃகாரீ, அத்தியாயம்: 50 ’உறங்கச் செல்லுதல் பற்றிய பாடம்’ ஹதீஸ் எண்: 1212).

      படைக்கப்பட்ட பொருள்கள் யாவும் இறையுள்ளமையிலிருந்தே வருகின்றன என்பதற்கான விளக்கத்தைப் பெற இந்தக் குறிப்புக்கள் போதுமானவை. அகத்திறப்பு கொண்டார்க்கு விளங்குதல் எளிது, அல்லார்க்கு எவ்வளவு விளக்கினும் ஏறாது என்பதால் இதில் இன்னும் நீட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

      சரி, இவற்றையெல்லாம் நினைத்துத்தான் பஹாவுத்தீன் வலத் எழுதினார் என்பதற்கு என்ன அத்தாட்சி? விமரிசகன் ஏதாவது விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான். எழுதியவன் அதையெல்லாம் எண்ணித்தான் எழுதினான் என்று எப்படி நம்புவது? என்று நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்விதான். இதற்கு உளவியல் சார்ந்த பதிலையே தரமுடியும்.

      ”மஃனவுஷ் ஷாயிரு அலா பத்னிஹி” (கவிஞனின் அர்த்தம் அவனின் வயிற்றில் / அந்தரங்கத்தில்) என்றொரு அரபி முதுமொழி உண்டு. ஒரு கவிதையை நாம் உள்வாங்குதல் என்பதற்கு அதை எழுதியவனின் மனநிலையுடனான ஒத்திசைவு நமக்கு இருக்க வேண்டும். நெடுங்காலக் கவிதை வாசிப்புப் பயிற்சியின் வழியாகவே அந்த நிலையை நாம் அடைய முடியும். ஒவ்வொரு மனநிலைக்கும் அதற்கேயான அலைவரிசை உண்டு. ஒரு வானொலிப்பெட்டியில் அதன் புலன் எந்த அலைவரிசையை நோக்கியுள்ளதோ அந்த அலைவரிசையில் மிதந்து வரும் செய்திகளே அதில் கேட்கலாகும். அதுபோலவே, எந்தச் சிந்தனையில் உங்களின் மனம் அமைவு கொண்டுள்ளதோ அந்த அலைவரிசையிலான எழுத்துக்களையே நீங்கள் இயல்பாக விளங்கிக்கொள்ள முடியும். ஒரு குறியீடாக மன அலைவரிசை என்பதை “நறுமணம்” என்று சொன்னால், ஒவ்வொரு மனவெளிப்பாட்டிற்கும் ஒரு தனித்த நறுமணம் உண்டு என்றாகிறது. ஒரு சிந்தனையாளரின் வெளிப்பாடு, அது உரைநடையாகவோ அல்லது கவிதையாகவோ இருக்கட்டும், உரைநடை கவிதை என்பதெல்லாம் வெளிப்பாட்டு உத்திகள்தானே தவிர அவையே உள்ளடக்கம் அல்ல, என்ன நறுமணம் கொண்டிருக்கிறது என்பதை அவரவர் ’அகமூக்கு’ நுகர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சிந்தனையின் நறுமணம் உங்களது அலைவரிசைக்கேற்ப அது நறுமணமாக இருக்கலாம் அல்லது துர்நாற்றமாக இருக்கலாம். “ரோஜாப் பன்னீரின் நறுமணம் மலவண்டிற்கு துர்நாற்றமாகவே தெரியும். அதை முகர்ந்து கொண்டிருந்தால் அது செத்துவிடும்” என்கிறார் இமாம் கஸ்ஸாலி (ரஹ்...).

      ஒன்று செய்யுங்கள். நபி (ஸல்...) அவர்களின் ஆஸ்தான கவிஞரான சய்யிதினா ஹஸ்ஸானிப்னு ஸாபித் (ரலி...) அவர்களின் கவிதைகளை (மஸ்ஜிதுந் நபவியின் மிம்பரில் ஏறி நின்று அவர்கள் இறைத்தூதரின் முன்னிலையில் அரங்கேற்றிய கவிதைகள் உட்பட), கஅப் (ரலி…) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது மஸ்ஜிதுந்நபவியில் இறைத்தூதரின் முன்னிலையில் பாடி அவர்களின் பாராட்டைப் பெற்ற “கஸீதத்துல் பானத் சுஆத்” என்னும் காவியத்தை (இதுவே கஸீதத்துல் புர்தா, சுப்ஹான் மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லித் போன்ற பிற்காலக் காவியங்களுக்கு நபிவழியிலான முன்னோடி), இதர நபித்தோழர்கள் இயற்றிய கவிதைகளை, அந்த நபிவழி மரபில் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளில் இயற்றப்பட்ட கவிதைகளை ஆழ்ந்து படியுங்கள். அவற்றின் பரிணாம வளர்ச்சி என்ன என்பதை அறியுங்கள். போதிய மனப்பயிற்சி இல்லை எனில் ஆன்மிகக் கவிதைகளை, கவித்துவமான உரைநடைகளை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாது.

      இன்றைய முஸ்லிம் சமூகம், உலகளாவிய நிலையில், மரபார்ந்த ஆன்மிகச் சிந்தனைப் பயிற்சியை இழந்து நிற்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் வஹ்ஹாபியக் கடுங்கோட்பாடுகள் பிரச்சாரம் செய்யப்பட்டு அதன் விளைவாக நாளுக்கு நாள் மேலும் சீரழிந்து வருகிறது. முன்னர் இச்சமூகத்தில் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் குறைவாகவே இருந்தபோதும் அவர்கள் உள்ளுணர்வின் ஊற்றுக்கண் திறக்கப்பெற்ற பாமர மேதைகளாக இருந்தார்கள். இப்போது படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஏறியிருந்த போதும் உள்ளுணர்வின் பாதையை இழந்துவிட்ட படித்த முட்டாள்களாக இருக்கிறார்கள். தமது அகச் செல்வங்களை இழந்து விட்டு மாற்றுச் சமயத்தவரின், குறிப்பாக மேற்குலகின் புற அறிவியற் புலங்களிலான சாதனைகளையே தமது எதிர்கால இலக்குகளாக்கி இயங்கி வருகிறார்கள். குர்ஆனுக்கு அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்தல் என்பது போன்ற செயல்பாடுகள் அதிலிருந்தே பிறக்கின்றன. உண்மையில் அது குர்ஆனின் கருத்துப் புலத்தை வெளியுலகு என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்குவதே ஆகும். அதன் விளைவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்க வீச்சுள்ள மகாகவியாகத் தன் சிந்தனைகளால் உலகப் புகழ் பெற்ற அல்லாமா இக்பாலுக்குப் பிறகு இன்று வரை அந்தத் தகுதிப்பாட்டில் ஒரு சிந்தனைக் கவிஞனை முஸ்லிம் சமுதாயம் உருவாக்க முடியவில்லை.
Related image
allama iqbal (rahmathullaahi alaihi).

      ”ஆமாம், மேற்கோள் குறிப்புக் கொடுங்கள். ஆதாரமற்ற மேற்கோள் குறிப்பற்ற பல விஷயங்கள் பரப்பப்படுகின்றன.” என்று பதறுகிறார் மிஸ்டர் இம்தியாஸ். இது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இப்படி கேட்க வேண்டும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல வஹ்ஹாபிகள் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ’இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அடைதல்’ என்பதற்கான இன்றியமையாத செயல்முறையாக இந்த ஆதாரம் கேட்டல் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் அராஜகம் ஒன்றுள்ளது. பழங்கிரந்தங்களை எல்லாம் அவற்றின் அசல் வடிவங்களை மாற்றித் தணிக்கை செய்து வருகின்றார்கள். நான் மேற்கோளே காட்டினாலும் அவர்கள் தனிக்கைச் செய்து வைத்திருக்கும் நூலில் அந்த எண்ணில் அந்த ஹதீஸ் இருக்காது. அல்லது ஸஹீஹ் என்று அந்நூற்களின் மூல ஆசிரியரால் பதிவு செய்யப்பட்ட ஒன்றை இவர்கள் ளயீஃப் (பலஹீனமான செய்தி) என்பதாக முடிவுகட்டி பதிப்பித்திருப்பார்கள். இப்படித்தான், சவூதி அரசாங்கம் தனது புரிதல் சார்ந்த முடிவுகளுக்கேற்ப ஆதாரங்களைத் திரித்து மாற்றும் வேளையை முக்கால் நூற்றாண்டு காலமாகச் செய்து வருகின்றது. இமாம் புஃகாரீ (ரஹ்...) அவர்கள் சஹீஹ் என்று முடிவு கண்டு பதிவு செய்து வைத்த ஹதீஸ்கள் பலவற்றை, அதே நூலை எடுத்து வைத்துக்கொண்டு அல்பானீ என்பவர் மறுக்கிறார், ஜாகிர் நாயக் மறுக்கிறார், பி.ஜெ என்பவர் மறுக்கிறார், பிலால் ஃபிலிப்ஸ் என்பவர் மறுக்கிறார். எல்லாம் உழப்பல்கள். தன் அறிவுக்கெட்டாத விஷயங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் அராஜகம். மூல நூற்களில் தணிக்கை செய்து மாற்றும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது?  குர்ஆனிலும் கூட இவர்கள் கைவரிசை அரங்கேறும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஏனெனில், குர்ஆனில் இஃராபு (ஃபத்ஹா, ளம்மா, ஃகஸ்ரா, மத்த், ஷத்த் போன்ற ஒலிக்குறிகள்) என்பது நபி(ஸல்...) அவர்களின் காலத்திலோ அல்லது நபித்தோழர்களின் காலத்திலோ செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த தலைமுறையின் அறிஞர்களால செய்யப்பட்டது. இதனை ஒரு வாகான வாய்ப்பாக வஹ்ஹாபிகள் கையில் எடுத்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இஃறாபுகள் மாறினால் அர்த்தமும் மாறும். எனவே தமது புத்தியின் விளங்குதலுக்கேற்ப அர்த்தங்கள் தொனிக்கும்படி இஃறாபுகளை அவர்கள் மாற்றி வெளியிடத் தயங்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மிஸ்டர் இம்தியாஸ் எழுதிய பின்னூட்டத்தைப் படித்தபோது, இப்படி ஆதாரம் கோருவதன் பின்னணி உளவியல் என்ன என்பது பற்றி நான் சிந்தித்தேன். ஓர் ஒப்புமையாக குறுங்கதை ஒன்றை வைத்து விளக்க நினைக்கிறேன். அடிப்படைக் கணிதமான அரித்மெட்டிக் கூட கைவராத ஒரு மாணவன் இருக்கிறான். ஆசிரியர் மிகவும் கடினமான சிக்கலான கணக்கு ஒன்றை பரீட்சையில் கேட்டுவிட்டார். அது அவனது பாட நூலில் இல்லாத கணக்கு. அவனோ கணக்குகளைக் கூட ஒருவாறு உருப்போட்டு ’மக் அப்’ செய்து எழுதக்கூடியவன். 3+5=? என்று கேட்டால் அதன் விடை 8 என்பது அவனுக்கு மனப்பாடம். அதையே 5+3=? என்று கேட்டுவிட்டால் ‘பாடநூலில் இல்லாத கணக்கு’ என்று பிலாக்கணம் வைப்பான். அப்படியொரு அறிவாளி! பரீட்சையில் கேட்கப்பட்டதோ மிகவும் சிக்கலான கணிதத்துறை சார்ந்த ஒரு கணக்கு. அவன் கேட்கிறான், ”இது என் பாடநூலில் எங்கே இருக்கிறது? ரெஃபரன்ஸ் என்ன? எந்தப் பாடத்தில், எத்தனாம் பக்கத்தில், எத்தனையாவது கேள்வி இது? எண்களைச் சொல்லுங்கள்”. ஒருவேளை அது அவனது பாடநூலிலேயே இருந்தாலும் அதனால் அவனுக்கு என்ன பயன்? அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியுமா? பாடநூற் கணக்குகளை, அவற்றின் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக்கொண்ட ஒருவனுக்கு அப்பாடநூலில் இல்லாத கணக்கு கொடுக்கப்பட்டாலும் அதனால் என்ன சிரமம்? அதனை அவன் ’சால்வ்’ செய்து மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்வான். இன்று முஸ்லிம் சமூகத்தில் இது ஒரு நோயாகவே வளர்ந்து முற்றி வருகிறது. ஆதாரம் கோரல், அதை வைத்து ஏதோ இவர்களால் விளங்க முடியும் என்பது போல்.

      இனி, இத்தகையோர் விளங்க முடியாத அறிவுப்புலங்கள் பல இருக்கின்றன. உள்ளுணர்வு (intuition) என்பது அதில் ஒன்று. ஆனால் மார்க்கத்தின் மேலான அறிவுகள் யாவும் உள்ளுணர்வினால் மட்டுமே எய்த முடிந்தவை. பகுத்தறிவுச் சிந்தனையால் அந்தப் புலங்களுக்குள் நுழையவே முடியாது. அதற்கு இலக்கியப் பயிற்சியும் ஆன்மிகப் பயிற்சியும் தேவை. ஆனால் மண்டூக மண்டையர்கள் அவை எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து பரப்புகின்றார்கள். அதனால் முஸ்லிம் சமூகம் அடைந்து வருகின்ற சரிவு அதிகம். குர்ஆன் மற்றும் ஹதீசைச் சார்ந்து, ஆன்மிகப் பயிற்சிகளால் அடையப் பெறுகின்ற  இல்ஹாம் என்னும் உள்ளுதிப்புக் கொண்டு பல இறைநேசர்கள் கவித்துவ நடையில் தமது கண்டடைதல்களை, ஞான விளக்கங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

      நபித்தோழர்கள் தொட்டு இற்றை நாள் வரை எழுந்த இஸ்லாமியக் கவிதைகளை வாசித்துப் பாருங்கள், இலக்கியச் சிந்தனைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்று நான் மேலே சொன்னேன். அதற்குக் காரணம், அதனெதிர் நிலையாக வஹ்ஹாபிகள் ‘கவிதை என்பதே முற்றிலும் ஹராம். அதற்கு இஸ்லாத்தில் இடமே இல்லை’ என்பது போன்ற பார்வையை ஊட்டி வருகிறார்கள் என்பதற்குத்தான். ஒருவர் எல்லாக் கவிதைகளுமே நறுமணம் வீசுகின்றன என்று சொன்னால் அது எப்படி வழிகேடோ அதே போல் ஒருவர் எல்லாக் கவிதைகளுமே துர்நாற்றம் வீசுகின்றன என்று சொன்னால் அதுவும் வழிகேடுதான். இரண்டு பேருக்குமே மூக்கு மரணித்துக் கிடக்கிறது என்பது ருஜுவாகிறது. உன் அகமூக்கில் ஆரோக்கியம் இருந்தால் நறுமணத்தையும் துர்நாற்றத்தையும் பிரித்துக் கண்டுகொள்வாய்.

      மீண்டும், இக்கட்டுரையின் மையப் பொருண்மைக்குத் திரும்புகிறேன். ’இறைவன் சொல்கிறான்…’ என்று தொடங்கி ஒருவர் பேசும்போது அல்லது கவிதையிலோ கட்டுரையிலோ எழுதும்போது அது தரும் மேற்கோள் செய்தி ஒன்று குர்ஆனின் நேரிட்ட மொழிபெயர்ப்பாக இருக்கலாம், அல்லது அதன் தழுவல் மொழிபெயர்ப்பாக இருக்கலாம், அல்லது அது தரும் கருத்தின் வெளிப்பாடாக இருக்க்கலாம், அல்லது ஏதேனுமொரு ஹதீசை வைத்து மேற்சொன்ன மூன்று நிலைகளில் அமையலாம், அல்லது அந்த ஆளுமையின் இதயத்தில் உள்ளுதிப்பாக (இல்ஹாம்) இறைவனால் உணர்த்தப்பட்ட ஞான விளக்கமாக இருக்கலாம். (இதனை இல்மெ லதுன்னீ (காண்க: குர்ஆன்: 18:65) என்றும் தப்ஸீர் (அகப்பார்வைக் காட்சி) என்றும் சொல்வர். இக்கட்டுரையில் இப்போது இப்பொருண்மைகளைத் தொட்டு விளக்க இடமில்லை. இணையத்தில் ஏராளமான விளக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் கண்டுகொள்க. இறைவன் உங்களுக்கு நாடியபடி அதன் உடன்பாட்டு விளக்கங்களையோ அல்லது அதற்கு எதிர்மறையான விளக்கங்களையோ அடைவீர்கள்.) இதில் எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் ’அது தவறு முற்றிலும் பொய்யானது, அந்த வார்த்தைகள் குர்ஆனிலேயே இல்லை’ என்று மறுப்பது நியாயமாகாது.

      இவ்விளக்கங்களை எல்லாம் தாண்டி, நீ என்னதான் சொல்லு, இது தவறுதான். இறைவனிடமிருந்து இல்ஹாம் என்னும் உள்ளுதிப்பெல்லாம் யாருக்கும் வராது. அதெல்லாம் வழிகேடுதான். எனவே இப்படி எழுதுபவர்கள் எல்லாம் காஃபிர்கள்தான் (நிராகரிப்பாளர்கள்), அல்லது முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)தான் என்று சொல்வீர்களானால் அது உங்கள் உரிமை ஐயா. தாராளமாக அழைத்துக்கொள்ளுங்கள். அப்படி அழைக்கப்பட்ட ஒரு ஞானக் கவிஞர் சமீபத்தில் மறைந்தார். கவிக்கோ அப்துல் ரகுமான். அவரின் கவிதை நூற்களில் ஒன்றான ‘ஆலாபனை’ என்பதிலிருந்து ஒரு கவிதையை நான் நினைவு கூர்ந்தேன். நீளமான அந்தக் கவிதையின் ஆரம்பத்தை மட்டும் இங்கே தருகிறேன்.
      ”ஆலாபனையைப் போல்
            மேலே வானத்தில்
ஆனந்தமாகப் பறக்கும்
      பறவைகளைப் பார்த்துப்
            பெருமூச்சு விட்ட
            மனிதன் கேட்டான்:
      இறைவா!
      உன் படைப்பின் உச்சி என்று
            என்னைப் பாராட்டுகிறாய்
            ஆனால் எனக்குச்
      சிறகுகளைத் தரவில்லையே நீ?
      இறைவன் சொன்னான்:
      என் செல்லப் பறவையே!
            உனக்குத் தெரிவதில்லை
            உனக்குத்தான்
      எத்தனை சிறகுகளைத்
            தந்திருக்கிறேன்!
      உன் சிறகுகள்
            இறகுகளால் ஆனவை
            அல்ல”
Image result for kaviko abdul rahman
kavikko abdul rahman.     

 இப்படித் தொடங்கி அந்தக் கவிதை இன்னும் இரண்டரைப் பக்கங்களுக்கு நீள்கிறது. அனைத்தும் ’இறைவன் சொன்னான்:’ என்பதன் கீழ், இறைவன் மனிதனிடம் பேசுபவையாக, அதாவது அல்லாஹ் அப்துல் ரகுமானிடம் பேசுபவையாக அமைகின்றன. அப்துல் மாலிக்கும் இம்தியாஸும் ஒருவேளை அப்துல் ரகுமானிடம் ரெஃபரன்ஸ் தரும்படிக் கேட்டிருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார் என்று வியப்புடன் யோசித்தேன். அதே நூலில் அப்துல் ரகுமான் எழுதிய இன்னொரு கவிதை நியாபகம் வந்தது. அதன் ஆரம்பம் இது:

      ”தற்செயலாய் ஒருநாள் தொலைபேசியில்
            தவறான எண்ணில் சிக்கினான்
                  இறைவன்

      ’என்ன ஆச்சரியம்! இறைவனா?
      நீ தேடினால் கிடைப்பதில்லை
            இப்படித்தான் எதிர்பாராத வகையில்
            சிக்கிக்கொள்கிறாய்
      தொலைபேசியை வைத்துவிடாதே
      பல நாட்களாகவே
            என் இதயத்தைக் குடையும்
            சில கேள்விகளை
      உன்னிடம் கேட்கவேண்டும்’ என்றேன்”

      இப்படித்  தொடங்கும் அந்தக் கவிதையில், தொடர்ந்து இறைவனிடம் கவிஞர் பல கேள்விகளை கேட்கிறார். கேள்விகளின் முடிவில் கவிதை இப்படி முற்றுப் பெறுகிறது:
      ”’ராங் நம்பர்’ என்ற பதிலோடு
      இணைப்பு துண்டிக்கப்பட்டது”


      இதே பதிலைத்தான் அப்துல் ரகுமானும் சொல்லியிருக்கக் கூடும் என்று நினைத்துக்கொண்டேன். என் பதிவேற்றத்தைப் பற்றி அதே பதிலைத்தான் நானும் இப்போது சொல்லியாக வேண்டும். ’மன்னிக்கவும், தவறான எண்’.

the end.