Tuesday, April 28, 2015

...என்றார் சூஃபி - part 10

37

சுவரில் மாட்டியிருந்த ஒரு படத்தின் பக்கம் சுட்டிக் காட்டினார் சூஃபி. அது ஒரு கதவின் படம். கதவு திறந்திருக்கிறது. வெளியே ஒரு பாதையும் அதன் இரு மருங்கில் நெடிய மரங்களும் உள்ளன.

“ஓவியத்தில் உள்ள பாதையின் வழியாக அப்பால் கடந்து செல்ல நம்மால் இயலுமா?” என்று கேட்டார் சூஃபி.

இயலாது என்றார்கள் சகாக்கள். சிலர் அதன் அர்த்தத்தில் தலை அசைத்தனர்.

“கதவின் படம் சுவரில் அலங்காரம் ஆகலாம். தப்பில்லை. ஆனால் கடந்து செல்ல நிஜக் கதவு வேண்டும் அல்லவா?

வேதத்தின் பிரதி கைகளில் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் இங்கே பலரின் உள்ளங்களிலும் இருப்பது வேதத்தின் பிரதியே அன்றி வேதம் அல்ல” என்றார் சூஃபி.

38

பிரபலமான நபிமொழி ஒன்றினைப் பற்றி உரையாடல். அந்த ஹதீஸ்:

நபி (ஸல்) நவின்றார்கள், “வெப்பமான நாளொன்றில் தாகத்தால் தனது நாவைத் தொங்க விட்டபடிக் கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்த நாய் ஒன்றினை வேசி ஒருத்தி கண்டாள். தனது காலுறையில் கொஞ்சம் நீர் எடுத்து அதற்குப் புகட்டினாள். எனவே அல்லாஹ் அவளை மன்னித்துவிட்டான்.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: சஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் எண்: 2245.)

”அந்த வேசியின் பாவங்கள் எதன் பொருட்டால் மன்னிக்கப்பட்டது?” என்று சூஃபி கேட்டார்.

“நாயின் மீது இரக்கம் காட்டியதால்” என்றார் ஒரு சகா.

“ஆம். அவளின் உள்ளத்தில் கருணை இருந்தது. பாவங்களால் அவளின் உள்ளம் வரண்டு போய்விடவில்லை. எனவே ஈடேற்றத்திற்கான வாய்ப்பும் இருந்தது.

நபிகள் நாயகத்தை அல்லாஹ் “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” (அகிலங்கள் அனைத்திற்கும் கருணை) என்று கூறுகிறான். அதாவது, சர்வ சிருஷ்டிகளுக்கும் அவர்கள் கருணையாக இருக்கிறார்கள். நாய்க்கும் கருணை அவர்களே!

அந்த அகிலங்களின் கருணையின் ஒரு திவலை அந்தப் பெண்ணின் இதயத்தில் பொங்கிவிட்டது. எனவே அவள் மன்னிக்கப்பட்டாள்.

அந்தப் பெண்ணுடன் விபச்சாரம் புரிந்தார்களே, அந்த ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

சூஃபியின் இந்தக் கேள்விக்கு எவரும் பதில் கூறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்தது.

“அவளின் இதயத்திற்கு முன் அவர்களெல்லாம் வெறும் நாய்க்குட்டிகளே!” என்றார் சூஃபி.

39

சபையில் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது.

“எப்படிப் பருகுவது? எப்படி உண்பது?” என்று கேட்டார் சூஃபி.

உண்ணவும் பருகவும் தொடங்கும் முன் ஓதும் மந்திரத்தை நண்பர் ஒருவர் சொன்னார்.

“சரிதான். காரியம் தொடங்கும்போது ஓதுவதைப் பற்றி நான் கேட்கவில்லை. அதன் நிகழ்வைப் பற்றிக் கேட்கிறேன்.”

எதற்கு வம்பு? ஒருவரும் பதில் கூறவில்லை.


”உணவையும் பானத்தையும் அடைந்துகொள்வது விலங்குகளும் செய்வதுதானே? உண்மையில் உண்பதும் பருகுவதும் ஊட்டுபவனை அடைந்து கொள்வதுதான்” என்றார் சூஃபி.

3 comments: