Sunday, July 20, 2014

...என்றார் சூஃபி - part7

30

இன்றைய கூட்டத்தில் சூஃபி பின்வரும் சிறிய கதையைச் சொன்னார்:
“குடிசை வீட்டில் ஒருவன் வாழ்ந்து வந்தான். வறுமை அவனை விட்டு அகலவே இல்லை. அந்தச் சிறிய குடிசையை மராமத்துச் செய்வதற்குக் கூட அவனிடம் பணம் இல்லை. காற்றிலும் மழையிலும் அது நைந்து கந்தலாகிப் போயிருந்தது. அதன் மண்-சுவர் இற்றுப் போயிருந்தது.

அவனது குடிசைக்கு எதிரே, சாலையின் அந்தப் பக்கமாக, பெரிய மச்சுவீடு ஒன்று இருந்தது. கொடுத்து வைத்த சீமான் ஒருவரின் இல்லம். அதைப் பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது. ‘ச்சே! என்ன வாழ்க்கை இது? இப்படி தரித்திரம் பிடித்து என்னை ஆட்டி வைக்கிறதே. கண் முன்னே இத்தனைப் பெரிய வீட்டில் ஒருத்தன் வாழ்கிறான். அதுவல்லவா வாழ்க்கை? இந்தக் குடிசையில் மழைக்குப் பாதுகாப்பு உண்டா? வெய்யிலுக்கு மறைப்பு உண்டா? என்றைக்காவது ஒரு நாள் அந்த வீட்டுக்குள் இருந்து பார்க்க வேண்டும்’ என்று அவன் தன் மனதிற்குள் அடிக்கடி எண்ணிக் கொள்வான். அது ஒரு சங்கற்பமாகவே அவனுக்குள் உருவாகியிருந்தது.

காலம் இப்படியாகச் சென்று கொண்டிருக்க ஒருநாள் அதிகாலையில் அந்த ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்தார்கள். இவனும் குடிசையை விட்டு வெளியே வந்தான். எதிர் வீட்டுச் சீமான் தனது மனைவி மக்களோடு வீட்டைத் திறந்தபடிப் போட்டுவிட்டு வெளியே ஓடுவதைப் பார்த்தான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் மனம் பரபரத்தது. ‘லூசுப்பய. இத்தனைப் பாதுகாப்பான வீட்டை விட்டு ஓடுகிறானே. இந்தக் குடிசைக்குள் இருந்து இனியும் நான் சாகவேண்டியதில்லை’ என்று நினைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிர்வீட்டிற்குள் – அழகான பங்களாவிற்குள் – நுழைந்தான். நிலநடுக்கத்தில் அவனது குடிசை தரைமட்டமானது. ஆனால், அதே சமயம் பங்களாவும் படுத்துவிட்டது. அவன் அதற்குள் அப்படியே சமாதி ஆகிவிட்டான்.”

இக்கதையின் மீது நாங்கள் சற்று நேரம் சிந்தனை செலுத்திக் கொண்டிருந்தோம்.
“காதலின் புயலால் கந்தலாகிக் கண்ணீர் கசியும் இதயம் உள்ளவர்களே! உங்கள் தன்முனைப்பு தரைமட்டமாகும் தருணத்தில் தப்பியோட நினைக்காதீர்கள்.” என்றார் சூஃபி.

31

சூஃபி கூறிய இன்னொரு சிறிய கதை:

“அடர்ந்து செழித்த ஒரு காட்டிற்குள் வாலிபன் ஒருவன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். உலக வாழ்க்கையின் சராசரித் தன்மையை வெறுத்து ஆனந்த மயமான ஏகாந்தமான வாழ்க்கையைத் தேடி அவன் அந்தக் காட்டிற்குள் ஓடிவந்திருந்தான். ’இயற்கையின் மடியில் இனி நானொரு குழந்தை. பறவைகளும் விலங்குகளுமே எனது உறவுகள். கைகளைப் போல் நீட்டியிருக்கும் மரக்கிளைகளில் எல்லாம் இறைவன் எனக்குச் சுவையான உணவை அள்ளித் தருகிறான். என் வாழ்வில் இனி துன்பமே இல்லை’ என்றெல்லாம் எண்ணியபடி அவன் காட்டுக்குள் குஷாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். 
அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காட்டாற்றின் கரையில் இரண்டு மரங்களை அவன் கண்டான். ஒரு மரத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பளபளப்பாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு மரத்தில் முட்கள் மண்டிய கிளைகளுக்கு இடையில் சொறி பிடித்தது போன்ற கனிகள் இருந்தன. அவனுக்குப் பசியாக இருந்தது. கண்ணைக் கவர்ந்த அந்த அழகிய கனிகளை அவன் முகர்ந்து பார்த்தான். அதன் மணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இன்னொரு மரத்தின் கனியிலும் ஒன்றைப் பறித்து முகர்ந்து பார்த்தான். அதன் துர்நாற்றம் வயிற்றைப் பிரட்டியது. அதை வெறுப்போடு வீசி எறிந்தான். பிறகு முதல் மரத்தின் அழகிய கனியை ஆர்வத்தோடு புசித்தான். அதன் சுவை வருணிப்புக்கு எட்டாததாக இருந்தது. சொர்க்கத்தின் கனியே கிடைத்துவிட்டது என்பது போல் அவன் மகிழ்ந்து இன்னும் நான்கைந்து கனிகளைத் தின்று விட்டு அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் உடலெல்லாம் நீலம் பாய்ந்து வாயில் நுரை தள்ளி மல்லாந்து விழுந்து மரணித்துவிட்டான்.


சிறிது நாட்கள் கழிந்தன. மூலிகை வைத்தியன் ஒருவன் தன் மகனுடன் அந்தக் காட்டிற்குள் வந்தான். தனது குல வித்தையைத் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக. செடிகள் கொடிகள் அவற்றின் இலைகள் வேர்கள் காய்கள் கனிகள் இவற்றின் தன்மைகளை எல்லாம் தன் மகனிடம் சொல்லிக் கொண்டே வந்தான். காட்டாற்றின் ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் கிடந்த அந்த வாலிபனின் பிணத்தை அவர்கள் கண்டார்கள். உடலெல்லாம் விஷம் பாய்ந்து அவன் செத்துப் போயிருப்பது தெரிந்தது. அவனுக்கு அருகில் சொறிப்பழம் ஒன்று கிடந்தது.

அதைப் பார்த்துவிட்டு மகன் தந்தையிடம், ‘அப்பா! இவன் அந்தச் சொறிப் பழத்தை உண்டதால் விஷம் பாய்ந்து இறந்து போயிருக்கிறான் என்று நினைக்கிறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

தந்தை அவனிடம் சொன்னான், ‘நீ நினைப்பது தவறு மகனே. கீழே கிடப்பது அவன் சாப்பிடாமல் போட்டுவிட்ட பழம். அது சொறி பிடித்தது போல் இருப்பதாலும் துர்நாற்றம் அடிப்பதாலும் அது விஷப் பழமாக இருக்கலாம் என்று நினைத்தே அவன் அதை உண்ணாமல் போட்டுவிட்டான். அவன் சாப்பிட்டது, இதோ, இந்த மரத்தின் பழம். இது பார்க்க அழகாகவும் மணமாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் இப்பழம் கொடிய விஷம்.”

இதைக் கேட்ட மகன் தன் தந்தையிடம், ’அப்படியானால் இதற்கு விஷ முறிவு ஏதேனும் உண்டா அப்பா?’ என்று கேட்டான்.

’நிச்சயமாக. அவன் சாப்பிடாமல் கீழே போட்டிருக்கிறானே, அந்தச் சொறிப் பழம்தான் இந்த பழத்தின் விஷத்திற்கான முறிவு. அதை அவன் ஒரே ஒரு கடி சுவைத்திருந்தால் போதும். இந்த விஷமெல்லாம் முறிந்து போயிருக்கும். அத்தனை வீரியமானது அது’ என்று வைத்தியன் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.”

இந்தக் கதை ஏன் சொல்லப்பட்டது என்று நான் சிந்தனை செய்திருந்தேன். அமுதம் என்று நினைத்தது விஷமாகவும், விஷம் என்று நினைத்தது அமுதமாகவும் இருந்து விடலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது என்று விளங்கினேன்.

அப்போது, “அன்பர்களே! ஆன்மிகம் என்பது ஒரு பெருங்காடு. அதில் நுழைந்து கண்ணில் கண்டதையெல்லாம் ருசிக்கலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதில் விஷக் கனிகளும் உண்டு. எதை உண்ணலாம் எதைத் தொடவும் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வழிகாட்டி – ஞான குரு – மிகவும் அவசியம்” என்றார் சூஃபி.

32


மாதுளம்பழம் பற்றிய பிரபலமான நபிமொழியைச் சொல்லிக் கொண்டிருந்தார் சூஃபி: “மாதுளம்பழம் சொர்க்கத்தின் பழங்களில் ஒன்று. இங்கே பூமியில் விளையும் மாதுளம் கனிகளிலும் ஒவ்வொரு கனிக்குள்ளும் சொர்க்கத்தின் ஒரு விதை உண்டு. அது எது என்று நமக்குத் தெரியாது. எனவே, எவர் ஒருவர் முழுமையாக ஒரு மாதுளங்கனியை உண்பாரோ அவர் சொர்க்கத்தின் ஒரு துளியை ருசித்தவராவார்.

இது நபி(ஸல்) அவர்கள் கூறிய அருள்மொழி. சரி, ஒரு மாதுளம்பழத்தின் விதைகளில் எது சொர்க்கத்திலிருந்து வந்த ஒன்று என்பது நபிக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். அவர்களின் அகப்பார்வைக்கு அது சிரமமான காரியம் அல்ல. இதுதான் அந்தச் சொர்க்கத்தின் துளி என்று அவர்கள் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால் அவர்கள் சொன்னது நம் போன்ற சராசரி மனிதர்களுக்காக.”

இவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஒரு சாதகர் கேள்வி கேட்டார்: “மகானே! இப்போதெல்லாம் மாதுளம்பழம் வாங்கி வந்து உடைத்துப் பார்த்தால் அதற்குள் பல விதைகள் அழுகிக் கிடக்கின்றனவே. அந்த அழுகிய விதையில் சொர்க்கத்தின் துளியும் போய்விட்டால் என்ன செய்வது?”

“ஏன் இந்தச் சந்தேகம்? அழுகாத விதைகள் உள்ளன அல்லவா? சொர்க்கத்தின் துளி அதில் இருக்கும். ஏனெனில், சொர்க்கத்தின் துளி அழுகாது!” என்றார் சூஃபி.

(சில சமயங்களில் யாருமே சாப்பிடாமல் முழு மாதுளம்பழமும் அழுகி விடுகிறதே. அப்போது அதிலிருக்கும் சொர்க்கத்தின் துளி என்னவாகும்? என்று என் மனதிற்குள் ஒரு கேள்வி உதித்தது. நான் அதை சூஃபியிடம் கேட்கவில்லை.)

”இந்த மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே, அதுவும் ஒரு மாதுளங்கனிதான். சொர்க்கத்தின் துளி போன்ற புனிதர் எவராது இங்கே அவசியம் இருப்பார். அவர் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அந்த சொர்க்கத் துளி இவராக இருக்கக் கூடும் என்று பார்த்து மதிப்பளிக்க வேண்டும். “உங்களில் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்” (வ லா தல்மிஸூ அன்ஃபுஸ(க்)கும் -49:11) என்று குர்ஆன் சொல்கிறது. இதற்கு ஹழ்றத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கொடுத்த விளக்கம்: ‘அடுத்தவரின் குறைகளைத் துருவித் திரிவதில் நேரத்தைப் போக்காதீர்’ என்பதே.


எனினும், ஒரு ஜும்மா தொழுகையின் போது, இன்னின்ன மனிதர்கள் நயவஞ்சகர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி எழுப்பி விட்டார்களே! அதுபோல், அகப்பார்வை கொண்ட மனிதருக்கு அழுகிய விதைகள் அடையாளம் தெரிந்தால் அது வேறு. சாதகர்கள், எல்லா நபர்களையும் சொர்க்கத் துளிகளாகவே காண வேண்டும். அகப்பார்வை பெற்ற ஞானிகளுக்கு உண்மையான சொர்க்கத் துளிகள் யார் யார் என்று அடையாளம் தெரியும்.” என்றார் சூஃபி.

1 comment:

  1. எண்ணிலடங்கா blogகளில் சொர்க்கத்து விதையை பிரபஞ்சக்குடிலில் பார்க்கிறேன்.

    ReplyDelete