Wednesday, August 31, 2011

அமீர்சாப்


( சிறுகதை)

 
சூரியன் மேற்கில் இன்னும் முக்கால் மணி நேரத்தில் சாய்ந்துவிடுவான். நான் தெருவில் இறங்கி நடந்தபோது கமர்பாய் வந்துகொண்டிருந்தார். அஜானுபாகுவான சரீரத்தை எடுத்துக்காட்டுவது போல் சல்லிசான வெண்ணிற ஜிப்பா வியர்வையில் நனைந்து மேட்டுப்பாங்கான இடங்களில் எல்லாம் ஒட்டிக்கொண்டிருந்தது. (அவர் எப்போதும் உள்-பனியன் அணிவதில்லை.) கவர்ச்சி உடை! கமர்பாய்க்கு அதிகமாக வியர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அல்லும் பகலும் மார்க்க உழைப்பு செய்பவர். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வதற்குப் பதிலாக நாளொரு மேனியும் (அவருடைய மேனிதான்!) பொழுதொரு வண்ணமுமாக (அதே அட்டைக் கரி வண்ணம்தான்!) ஊதிக்கொண்டு போகிறார். இருக்காதா பின்னே? தீனுக்காக உழைப்பதில் பரக்கத் உண்டல்லவா?



பத்தடி தூரம் இருக்கும்போதே கமர்பாய் என்னை நோக்கிப் புன்னகைத்து சலாம் உரைத்தார். நான் அனிச்சையாக பதில் சொன்னேன். வெளுத்த தாடிக்கு மருதாணி இட்டு ஆரஞ்ச் நிறம் ஆக்கியிருந்தார். காற்றில் கலைந்து, நார் மாம்பழக் கொட்டையைச் சப்பியது போல் அது அவரின் முக விளிம்பில் பரவியிருந்தது. ’சிங்கம் பிடரி சிலிர்த்தது போல்’ என்றும் உவமை சொல்லலாம். ஆனால் கறுப்புச் சிங்கம் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. (கறுப்பு மாம்பழக் கொட்டை மட்டும் இருக்கிறதா என்ன? என்று கேட்காதீர்கள். கதையைக் கவனியுங்கள்.) அந்த நிறத்தில், அதாவது பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வானலியில் வதக்கும் போது ‘பொன் நிறப் பதம்’ என்று சொல்வார்களே, அந்த நிறத்தில் அவருடைய தாடியை மாலை வெயிலில் பார்க்கும்போது போது மூசா நபி தரிசித்த ’எரியும் புதர்’தான் எனக்கு ஞாபகம் வந்தது. நல்லவேளையாக மீசையை மழித்துவிட்டிருந்தார். அதனால் வாய் தெரிந்தது. ஓஷோ பாணியில் அங்கேயும் புதர் மண்ட விட்டிருந்தார் எனில் பேசுவது அவரா இல்லை அல்லாஹு தஆலாவா என்று நான் நிச்சயம் குழம்பியிருப்பேன்.

“வாஙக் மவ்லானா, ஃகைரிய்யத் தானே?” என்றேன்.

“அல்ஹம்துலில்லாஹ், எப்படி இருக்கீங்க சூஃபிஜி?” என்றார்.

அவரை நான் மவ்லானா (எங்கள் தலைவரே / நேசரே) என்பதும் அவர் என்னை சூஃபி என்பதும்… நல்ல தமாஷ் போங்கள். வாழ்க்கையில் ஏதாவது சுவாரஸ்யம் வேண்டுமல்லவா? நாங்கள் இருவரும் டீக்கடையை நோக்கி நடந்தோம். டீக்கடை மாஸ்டரை எடுத்துக்கொள்ளுங்கள், ஹைதர் காலத்துக் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடம்பில் ஒரு நார்த்துண்டுடன் நின்று பாய்லரின் சன்னிதானத்தில் வேகுபவர். “தலைவரே! ஸ்ட்ராங்கா மூனு டீ” என்று ஒரு நாளில் பத்து பேராவது அவரிடம் சொல்கிறார்கள். வாழ்க்கை சிங்கிள் டீக்குச் சிங்கி அடிக்கும் நிலையிலும் நம்மைப் பார்த்து தலைவரே என்று நாலு பேர் சொல்வது எல்லாம் ஒரு ‘இது’க்காகத்தானே? அந்த ஊக்கம் இல்லையென்றால் விண்ணில் குவளையும் மண்ணில் க்ளாஸுமாக டீ ஆத்த முடியுமா?

தேநீர் பருகிக் கொண்டிருக்கும் போது கமர்பாய் விஷயத்தை ஆரம்பித்தார்.

“சூஃபிஜி, மானா.சானா.கரீம்பாயோட மகன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓடிப் போனானே, ஞாபகமிருக்கா?”

“கலந்தர்தானே அவன் பேரு?”

“அல்லாஹு, அவன் மூத்த பையன். ரொம்ப நல்ல புள்ள. யூகேல இருக்கான். நான் சொல்றது ரெண்டாவது மகன். சிக்கந்தர்”

“அடடே, ஆமாமாம். நீங்க சில்லாவுக்குக் கூட்டிட்டுப் போனப்ப ஓடிப்போய்ட்டானே. அவந்தானே?"

கமர்பாய் தர்ம சங்கடமாக “இஹ்ஹிஹி” என்று சிரித்தார். அவனேதான்!

“அவன் போன வாரம் வீடு வந்து சேந்துட்டான்”

“அப்பிடியா? நல்ல விஷயந்தான்.”

”என்னத்த நல்ல விஷயம், றப்புதான் காப்பாத்தணும்”

“ஏன்? என்னாச்சு?”

“பையன் சினிமாத்துறையில குப்பை கொட்டிட்டு வந்திருக்கான்னு சொன்னாங்க”

“அப்பவே அவன் சினிமாப் பைத்தியமாத்தான் திரிஞ்சிக்கிட்டிருந்தான்”

“இப்ப நெஜம் பைத்தியமாவே ஆயிடுச்சு”

“என்ன பாய் சொல்றீங்க?”

கமர்பாய் தொண்டையைச் செருமினார். நான் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு நீண்ட கதையாகச் சொல்லி முடித்தார். இரண்டாம் டீ அவர் வாங்கிக் கொடுத்துவிட்டார். சுவாரஸ்யமான கதையும் அதைக் கேட்பதற்கு ஒரு டீயும். பரவாயில்லை, அல்லாஹுவோட கருணை எப்படியெல்லாம் இலவச இணைப்புடன் வருது பாருங்க! அவர் சொன்ன அந்தச் சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். டீ கிடையாது, அல்லாஹ்வுக்காக ஸபுர் செய்யுங்கள்.



நேற்றுதான் வெளியூர் ஜமாத் ஒன்று எங்கள் மொஹல்லாவுக்கு வந்து இறங்கியிருக்கிறது. இன்று காலை, அதாவது காலங்காத்தால, பகுதிவாசிகளைச் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் அழைப்புக் கொடுப்பதற்காக அவர்களை கமர்பாய் தன் ‘சாத்திகள்’ சகிதமாக அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்களாகவே அவருக்கு அந்தப் பையன் சிக்கந்தரை நினைத்து ஏகப்பட்ட மன உளைச்சல். தில்லி மர்கஸுக்கு என்று சில்லா கிளம்பி வந்தவன் இடையில் காணாமல் போய்விட்டான். ரயில் முழுக்கத் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் பதறிப்போய் போலீசில் சொல்லலாம் என்று நினைத்தபோதுதான் அவனுடைய தோஸ்த் முனீர் விஷயத்தைச் சொன்னான். ஷாருக் கானைப் பார்ப்பதற்காக அவன் மும்பைக்குச் சென்றுவிட்டானாம். அப்படியே பாலிவுட்டில் கால் பதித்து வளர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் தகித்துக் கொண்டிருந்ததாம். நிஜாமுத்தீனுக்குப் போய் என்ன கவ்வாலியா பாடப் போகிறோம் என்று எண்ணிக் கம்பி நீட்டிவிட்டான். மானா.சானாவுடன் பெரிய தகராறாகிப் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏறி இறங்கி நாய்பட்ட பாடாகிவிட்டது. மார்க்க உழைப்பு என்றால் சோதனைகளும் தியாகமும் இல்லாமல் சும்மாவா? இல்லை இந்தத் தருதலைப் பயல் இப்படி ஷாருக் கானைப் பார்க்கக் கிளம்புவான் என்றுதான் அவர் கண்டாரா? முஹல்லாவில் எல்லாப் பசங்களும் எவ்வளவு அதபாக இருக்கிறார்கள். தொப்பியும் தாடியும் இல்லாத ஒரு வயசுப் பையன் எங்கள் முஹல்லாவில் உண்டா? இதுக்கெல்லாம் யாருடைய உழைப்பு காரணம்? எவனுக்காவது பதினாலு பதினைந்து வயசு வந்துவிட்டாலே கமர்பாய் அவனை அழைத்து தாடி என்னும் சுன்னத்தின் அருமை பெருமைகளை அவசியங்களை அன்பொழுக அவன் மோவாய்க் கட்டையைத் தடவித் தடவி எடுத்துச் சொல்லித் தூண்டுவார். அவருடைய கையின் பரக்கத்தால்தான் பதினாறு பதினேழு வயசுக்கெல்லாம் தேன்கூடு போல் தாடி வளர்ந்துவிடுவதாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் இந்தச் சிக்கந்தர் பயல் மட்டும் சண்டி மாடாக வளர்ந்து வந்தான். மழுக்கச் சிரைத்து யூடிக்கொலோன் பூசி, கமர்பாய் தன் வாழ்நாளில் அணிந்திராத உள்-பனியன் போன்ற கலர்பனியனை மட்டும் அணிந்து கொண்டு தொழுகைக்கு வருவான். அவனை எப்படியாவது திருத்தி அல்லாஹ்வாலாவாக ஆக்கிவிட வேண்டும் என்பது கமர்பாயின் சங்கல்ப்பமாக இருந்தது. இல்லையெனில் நாளை மஹ்ஷரில் அவனையும் தன்னையும் நிற்க வைத்து ‘நீ ஏன் அவன் மீது சரியாக உழைப்புச் செய்யவில்லை?’ என்று அல்லாஹ் கேள்விக்கணக்கு கேட்கும்போது என்ன பதில் சொல்ல முடியும்?

அந்த சிக்கந்தர்தான் இரண்டு வருடங்கள் கழித்து இப்போது வீடு திரும்பியிருக்கிறான். பாலிவுட்டில் ஷாருக்கான் அவனைக் கண்டுகொள்ளாததால் தன் அதிஷ்டத்தைக் கோலிவுட்டில் தேடி அங்கே ஒன்றரை வருடம் லோல் பட்டு இப்போது புத்தி பிசகி வந்திருக்கிறான் என்று பேச்சு. எப்படியாவது அவனை நல்லாக்கி அதபான பிள்ளையாக மாற்றி அவனது பெற்றோர்களின் மனதில் பால்வார்க்க வேண்டும் என்பது கமர்பாயின் மனதில் இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. நேற்று மாலை அஸருக்குப் பின் எல்லோரும் அமர்ந்து ’கவலை’ செய்தபோதுகூட கமர்பாய் தன் மனதின் மென்னியைத் திருகிக் கொஞ்சம் அதிகமாகவே கவலை செய்தார்.

இன்று காலை ஜமாத் மானா.சானா வீட்டிற்கும் சென்று பார்த்தது. காலிங் பெல்லை அடித்துவிட்டு எல்லோரும் மௌனமாக நின்றனர். கதவைத் திறந்தது சிக்கந்தர்தான். என்ன என்பது போல் பார்த்தான். ”குசூசி முலாக்காத் வந்திருக்கோம். இவங்கள்லாம் கார்கூன்கள், முக்கியஸ்தர்கள்” என்று கமர்பாய் சொன்னார். அதற்குள்ளாக உள்ளேயிருந்து “சிக்கு, யாருப்பா அங்க?” என்று ஒரு பெண் குரல் கேட்டது. “கார்டூன்கள்லாம் வந்திருக்காங்கம்மா” என்று சிக்கந்தர் பதில் சொன்னான்.

“கார்டூன் இல்ல தம்பி, கார்கூன் கார்கூன்” என்றார் கமர்பாய்.

”இவர் யார்?” என்றான் சிக்கந்தர், மாநிறமாக இருந்த நடுத்தர வயதுக்காரரைக் காட்டி.

”இவர்தான் அமீர்சாப்” என்று கமர்பாய் அறிமுகப் படுத்தி வைத்தார்.

பையன் அவரை தின்றுவிடுவது போல் சிறிது நேரம் பார்த்தான். என்ன நினைத்தானோ, சட்டென்று அவன் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. அவர் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

“அமீர்சாப், ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டீங்க. நிச்சயமா என்னைத் தேடிக்கிட்டு ஒருநாள் வீட்டுக்கு வருவீங்கன்னு எனக்குத் தெரியும். கடைசியா உங்கள யோகி சூட்டிங்குல பாத்தது. உள்ள வாங்க” என்று சொல்லி அவரை இழுத்துச் சென்றான். அவர் அவன் பிடியிலிருந்து உதறி விலகப் பெரும்பாடு பட்டார். முடியவில்லை. உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.



“இவரு டைரக்டர் அமீர் இல்லடா, ஜமாத்தோட அமீரு. அவர விட்ரு” என்று ஒரு பையன் பதறினான். பயனில்லை. அவன் காதில் எதுவுமே விழவில்லை. அதற்குள்ளாக அவரை இழுத்துச் சென்று அவன் சோஃபாவில் தள்ளிப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். கைப்பிடி விலகவில்லை. அமீர்சாப் தன் ஜேப்பிலிருந்த மிஸ்வாக் குச்சியை எடுத்து அவன் கையில் குத்தினார். (அன்று ஒரு நாள் பார்த்தேன், பயானில் மெய்மறந்து போயிருந்த ஒருவர் அனிச்சையாக மிஸ்வாக் குச்சியால் தொடைக்கு அருகில் சொறிந்து கொண்டிருந்தார். இப்போது ஒருவர் அதைத் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். என்ன இருந்தாலும் நாம் நாம்தானே? ரசூலுல்லாஹ் சொல்லித் தந்த மிஸ்வாக் குச்சி நம் கையில் மல்டி-பர்போஸ் குச்சியாகிவிடுகிறது!)

அமீர்சாப் வலியில் துடித்தார். பைத்தியத்தின் பிடி என்றால் இவ்வளவு உறுதியாகவா இருக்கும்? சிக்கந்தர் அவருடைய நீண்ட தாடியைத் தடவிப் பார்த்தான், “என்னங்க அமீர்ஜி, இம்புட்டுப் பெரிய தாடி? புரட்சிக் கலைஞர் படத்துல தீவிரவாதி ரோல் எதுவும் பண்றீங்களா?” 

அவர் பரிதாபமாக கமர்பாயைப் பார்த்து “ஈ இப்லீஸ் கா பச்சா க்யா கெஹ்தா?” என்றார். இதைக் கேட்டவுடன் சிக்கந்தர் உற்சாகமடைந்தான்.

“அமீர்ஜி, ஹிந்திப் பக்கம் போய்ட்டீங்களா? என்னையும் சேத்துக்கங்க. நான் ஓரளவு ஹிந்தி பேசுவேன். த்ரீ இடியட்ஸ். ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்? ரங் தே பஸந்தீ…”

அமீர்சாபுக்கு முகம் வெளிறிப் போனது. “ஷப் குஜாரி கூ புலானா ஆயே…” என்று அவர் பீதியில் ஏதோ சொன்னார்.

“ஷப் குஜாரி. படத்தோட பேரே ரொம்ப குஜாலா இருக்கே! ஷப்குஜாரி…குல்ஷன் பஜாரி... ஆகா, இதையே பல்லவியா போட்டு ஏயார் ரகுமான்ட்ட ஒரு கலக்கல் பாட்டு வாங்குங்க. ஷாருக்கான வச்சுப் படம் எடுங்க. சூப்பர் ஹிட் ஆகும். என்னை அசிஸ்டெண்ட்டா சேத்துக்கங்க அமீர்ஜி…”

சிக்கந்தர் கள் குடித்தவன் உளறுவது போல் பேசிக்கொண்டே இருந்தான். கமர்பாய் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், “அம்மா, வந்து ஒங்க புள்ளகிட்ட சொல்லுங்க.”

”ம்க்கும், ஒழுங்கா இருந்த எம்புள்ளய கெடுத்துக் குட்டிச்சுவராக்கியாச்சு. ஏதோ உசிரு பொழச்சு வூடு வந்து சேந்திருக்கான்னு சந்தோசப் படலாம்னா நசீபு இல்லியே…. இப்பிடி லூசுப் பயலாக்கிட்டீங்களே எல்லாருமா சேந்து” என்று உள்ளே இருந்து அந்தம்மா பிலாக்கணம் வைத்தது. கமர்பாய்க்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. வந்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவர் வெகு நேரமாக முக்கிக்கொண்டே இருந்தார். அவர் கடைசியில் ஒரு பெருவெடிப்பை நிகழ்த்தி குஸூசி முலாக்காத்திற்கு ஒரு புதிய அர்த்த பாவத்தைக் காற்றில் எழுதினார். “பொஹுத் அர்ஜண்ட் ஹே பாய், பைஃகானா ஜாத்தா ஹூன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே ஓடினார். நெய் குஸ்கா, புளிச்ச தால்ச்சா, இருபது டீ, வெண்ணப்புட்டு ஹல்வா, ஹலீம், சுரைக்காய் கஜூர்,  இத்தியாதி இத்தியாதி வஸ்துக்களின் கலவரமான ரசவாதத்தின் வாயு அனைவரின் குடலையும் பிறட்டியது. சிக்கந்தர் அமீர்சாபின் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினான். விடுதலையை சுவாசிக்க ஜமாத் சட்டென்று வெளியேறியது.

டீயை மெல்ல உறிஞ்சிக் குடித்துக் கொண்டே இச்சம்பவத்தைக் கமர்பாய் என்னிடம் சொன்னார். அவருக்குத் தொண்டை கமறிக் கமறிக் கண்கள் கலங்கிவிட்டன.

“எல்லாத்துக்கும் நான்தான் காரணம் சூஃபிஜி. என்னாலதான் இதெல்லாம் நடந்திச்சு”
”அப்படியெல்லாம் மனச போட்டு அலட்டிக்காதீங்க மௌலானா. அல்லாவோட நாட்டம். நாம என்னா செய்யமுடியும்?”

“இல்லங்க. எல்லாம் என்னாலதான். நான் அந்தப் பையன சரியாக்காம விடப் போறதில்ல. அதுவரைக்கும் சில்லா கில்லான்னு கெளம்புறதில்லன்னு முடிவு பண்ணீருக்கேன். துவா செய்யிங்க.”



என் மனதில் அப்போது ஒரு சிந்தனை சட்டென்று விரிந்தது. இந்த இடத்தில் ஒரு பச்சை அவ்லியா தோன்றி சிக்கந்தரின் மீது பவர்ஃபுல்லாக ஒரே ஒரு ‘நஜர்.’ அவன் இன்ஸ்டன்ட்டாக ஆளே மாறி ஒரு ‘வலி’ ஆகிவிடுகிறான்! ப்செ, நப்பாசைதான். மனம் எதைத்தான் நடக்குற காரியமா நெனைக்குது சொல்லுங்க. 

கைலாகு கொடுத்துவிட்டு கமர்பாய் தளர்வாக நடையைக் கட்டினார். எல்லாம் தன்னால்தான் என்கிறார் அவர். நம்ம சிந்தனையே வேறு. நம்மால எதுவும் செய்யமுடியாது. ஆண்டவன் விட்ட வழி. நாம கேக்குறோம், அவன்தான் செய்யணும். மக்ரிப் தொழுது துவாவிற்குக் கையேந்தினேன். கமர்பாய்க்காகவும் சிக்கந்தருக்காகவும் என் கண்கள் கலங்கின.



Monday, August 29, 2011

குழந்தைகளின் பிரார்த்தனை


பத்து வருடங்களுக்கு முன் நடந்தது. என் குருநாதர் உரையாற்றிய ஒரு சபையில் அமர்ந்திருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் தங்களுக்கு வசதியான இடத்தை அந்த ஹாலில் தேடி இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு இடத்தை நானும் பிடித்து, சாய்வதற்கு வசதியாக சுவரின் அருகில் அமர்ந்திருந்தேன். தரையில் வெகு நேரம் சப்பளமிட்டு அமரும் பழக்கம் இல்லாதவன் என்பதால் முன்னெச்சரிக்கையாக அப்படிச் செய்தேன். என் பின்னால் பழுத்த முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். என் தோளை மெல்லத் தொட்டு “தம்பீ, அப்படி முன்னாடி போய் உட்காருங்க” என்றார். “நீங்க பெரியவங்க, நீங்கதான் முன்னாடி உட்காரணும்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே பின்வரும் அற்புதமான விளக்கத்தைச் சொன்னார்:

”தம்பீ, நான் வயசுல பெரியவன்கிறது உண்மைதான். ஆனால் அதை மட்டுமே ஒரு தகுதின்னு நான் நெனக்கல. ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு வியாபாரி இருந்தார். அடிக்கடி வெளியூருக்குப் போய் சரக்கு கொள்முதல் பண்ண வேண்டி இருந்தது. சரக்கு சரியில்லைன்னா வியாபாரத்துல பெரிய நஷ்டம் வந்து நொடிச்சுப் போற அபாயம் இருந்திச்சு. அது அவரு மனச வாட்டிக்கிட்டே இருக்கும். அதுனால அவரு ஒரு உபாயத்தக் கையாண்டாரு. கெளம்புறப்ப தன்னோட மூனு வயதுக் குழந்தையைக் கூப்பிட்டு முன்னாடி நிறுத்தி, ’அத்தா வியாபாரத்துக்குப் போறேன்ம்மா கண்ணு. காரியம் வெற்றியாகுந்தானே?’ன்னு கேப்பாரு. அந்தப் புள்ள, ‘கவலப்படாம போய்ட்டு வாங்க அத்தா. அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான்’னு சொல்லும். புள்ளைய முத்தங் கொஞ்சிட்டு அவரு புறப்பட்டுப் போவாரு. இப்படியே ஒவ்வொரு முறையும் நடந்துக்கிட்டிருந்திச்சு. இத கவனிச்ச அவரோட நண்பர் காரணம் கேட்டாரு. அதுக்கு இவரு சொன்னாரு, ‘அது வந்துப்பா, நானும் அல்லாகிட்ட துவா செய்யிறேந்தான். ஆனால் நான் ஒரு பாவி. அல்லாஹ் என் துவாவ ஏத்துக்காமலும் போயிடலாம். அனால் என் புள்ள பச்ச மண்ணு. அது மனசுல சூது வாது கெட்ட எண்ணம் எதுவும் கெடயாது. அந்தப் புள்ளயோட வார்த்தைய அல்லாஹ் பொய்யாக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை.’ பாத்தீங்களா தம்பி, இதுல ஒரு விசயத்த கவனிக்கணும். பெரியவங்க சிறியவங்களப் பாக்கும்போது ‘நம்ம வயசுக்கு நாம நெறயா பாவம் பண்ணீட்டம். இவுங்கள்லாம் நம்மளவிட பாவம் கம்மியா உள்ளவுங்க. அதனால நம்மள விட மேலானவுங்க’ன்னு நெனக்கணும். சிறியவங்க பெரியவங்களப் பாக்கும்போது, ‘இவங்க வயசுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள செஞ்சிருப்பாங்க. நம்மள காட்டிலும் அதிகமான புண்ணியம் உள்ளவங்க’ன்னு நெனக்கணும்.”



பிரார்த்தனைக்கு எது எதுவெல்லாம் முக்கியமோ இல்லையோ, அகத்தூய்மை –இஃக்லாஸ் என்பது மிகவும் முக்கியமானது. உணர்ச்சி – இஹ்சாஸ் என்பது அதன் அடையாளம் என்று நான் விளங்கி வைத்திருக்கிறேன். வார்த்தைக் கோர்வைகள், தெளிவான உச்சரிப்புக்கள் என்பதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான் என்பது என் புரிதல். முன்னது இல்லாமல் பின்னது இருந்து பயனில்லை என்பதுதான் எப்போதும் என் அபிப்பிராயமாக இருந்து வந்துள்ளது.

”பிரார்த்தனை என்பது அடிமைத்தனத்தின் சாரம் – அத்துஆ முஃக்குல் இபாதத்” என்று நபி(ஸல்) அவர்கள் அருளியிருக்கிறார்கள். அதனால்தான் பாருங்கள் திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்திலேயே “உனக்கே அடிமை செய்கிறோம், உன்னிடமே உதவி வேட்கிறோம் – இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” (1:4) என்று நம் அடிமைத்தனத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து உடனே “எம்மை நேர்வழியில் ஆற்றுப்படுத்துக - இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்” (1:5) என்று பிரார்த்தனை வந்துள்ளது. தொடர்ந்து அதன் விளக்கமும் பிரார்த்தனையாக வந்துள்ளது. அந்த மூன்று திருவசனங்களும் அடியார்களுக்கே உரியவை என்று ’ஹதீஸ் குத்சி’யில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். 

’அல்ஹம்துலில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே’ (1:1) என்று அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். ( ‘இஹ்மதுல்லாஹ – அல்லாஹ்வை புகழுங்கள் என்று அடியார்களிடம் அவன் கட்டளையிடவில்லை. மாறாக அல்ஹம்துலில்லாஹ் என்று தன் புகழைத் தானே துவக்கிவிட்டான். அடியார்களின் ஞாபகத்தை அதில் அவன் கொண்டுவரவே இல்லை. உள்ளமையில் இல்லாதிருந்து புதிதாக உருவான படைப்புக்களிடத்தில் தேவை ஏதும் இல்லாத அல்லாஹ் புகழைக் கேட்பானா என்ன?’ என்று சூஃபி ஞானி அலீமி ஷாஹ் ஆமிரி (ரஹ்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் விளக்கம் தந்தார்கள்.)

‘அர்ரஹ்மானிர்ரஹீம் – அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
மாலிக்கி யவ்மித்தீன் – தீர்ப்பு நாளின் அதிபதி’ (1:2,3) என்று அவன் தன்னைத் தானே அறிமுகம் (தஃரீஃப்) செய்து கொண்டான். வேறு ஒன்று தன்னை அறிமுகம் செய்யும் நிலையில் திருமறையை அவன் திறக்கவில்லை.

எனவே, தன் ஹம்த், தஃரீஃப் ஆகியவற்றில் படைப்புக்களைச் சேர்க்காமல் துவங்கிய அல்லாஹ், அவற்றைத் தன்னுடையவை என்று ஹதீஸ் குத்சியில் குறிப்பிட்ட அல்லாஹ், அடிமைத்தனத்தையும் தேவைகளையும் பிரார்த்தனையையும் மனிதர்களுக்கு உரியவை என்று சொல்லிவிட்டான்.



பிரார்த்தனை செய்வதற்கு அறிவும் ஞானமும் அவசியம்தான். “நபிமார்கள் கோர்வை செய்ததைப் போன்ற துஆ வாசகங்களை வேறு யாருமே கோர்வை செய்ய முடியாது” என்று ஒருமுறை சூஃபி மகான் ஹகீமி ஷாஹ் ஃபைஜி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். சொல்லிவிட்டு யூனுஸ் (அலை) நபியின் பிரார்த்தனையை எடுத்து வைத்து விளக்க ஆரம்பித்தார்கள். நான் வியப்பில் வாய் அங்காந்து கேட்டிருந்தேன்!

ஆனால் அத்தகைய உச்சகட்ட ஞானம் இல்லாதவர்கள், என்னைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது? ஒரே வழி உணர்ச்சிப் பெருக்கு மட்டுமே. இவ்விடத்தில் ’மஸ்னவீ’ காவியத்தில் மௌலானா ரூமி (ரஹ்) சொல்லியுள்ள ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது:

“நபி மூசா (அலை) வனந்தாந்திரத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஓர் இடையன் தன் ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு பாறையின் நிழலில் ஒதுங்கி அமர்ந்து கணகளை மூடி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். அவன் மெய் மறந்து பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்துலவி மூசா நபியின் காதில் விழுந்தன. அவர்கள் அவனருகில் சென்று நின்று கேட்டார்கள். அவன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தான்: ‘என் இறைவா! என் எஜமானே! நீ என்னை உன் அடிமையாக, வேலைக்காரனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாயா? நான் உனக்கு விசுவாசமாக இருப்பேன். உன் ஆடுகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன். உனக்குத் தாகம் எடுத்தால் ஆட்டில் பால் கறந்து உனக்குக் கொடுப்பேன். என் இறைவா! நீ உறங்குவதற்கு உன் படுக்கையைத் துப்புறவாக்கி வைப்பேன். நீ தூங்கும்போது உனக்குக் கால் அமுக்கி விடுவேன். என் இறைவா! உன் கூந்தலுக்குப் பேன் பார்த்து எண்ணெய் தடவிச் சிக்கெடுத்துச் சீவி விடுவேன்… என் எஜமானே! நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?...’

இந்த வார்த்தைகள் மூசா நபிக்கு ஆத்திரத்தைத் தூண்டின. ‘இவன் இடையனா இல்லை மடையனா? நான் போதித்துக் கொண்டிருக்கும் ஏகத்துவத்துக்கு இதோ இங்கே ஒருவன் உட்கார்ந்து வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று எண்ணி அவனை ஒரு அதட்டு போட்டார்கள். அவன் அலறிக்கொண்டு எழுந்தான்.
‘நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்?’

‘இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’

’உன் பிரார்த்தனையைப் பார்த்தால் ஏதோ உன் மாமனிடம் அரட்டை அடிப்பது போல் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு எங்கிருந்து கை கால்கள் முளைத்தன? அல்லாஹ்வுக்கு ஏது கூந்தல்? அதில் பேன் வேறு! சரி, நீ தஷ்பீஹ் (குறியீடு) முறையில் பேசுகிறாய் என்று சொன்னாலும் அல்லாஹ்வுக்குப் பசி தூக்கம் ஏது? இதெல்லாம் என்ன அபத்தமான உளறல்?’ என்று கூறிய மூசா நபி அந்த இடையனின் பிடறியில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள்.

அவன் அழுதுகொண்டே பாலை வனத்தில் தாறுமாறாக நடந்து சென்றான். அவன் உள்ளத்தை இறைக்காதல் எரித்துக் கொண்டிருந்தது. சரியாகப் பிரார்த்தனை செய்யத் தெரியாததால் எங்கே இறைவன் தன்னை ஏற்காமல் போய்விடுவானோ என்ற ஏக்கம் அவனை அணு அணுவாகத் தின்று கொண்டிருந்தது.

அந்நேரத்தில் மூசா நபியிடம் அல்லாஹ் பேசினான்:
“என் நபியே! என் பிரியமான பக்தனை ஏன் அப்படி அடித்து விரட்டினீர்கள்? அவன் செய்த பிரார்த்தனையில் நான் அப்படியே சொக்கிப்போய் அதை ரசித்துக் கொண்டிருந்தேனே! நீங்கள் ஏன் அவன் பேசிய ‘வார்த்தைகளை’ கவனித்தீர்கள்? அவன் மனநிலையை ஏன் கவனிக்கவில்லை? அதில் எனக்காகக் கொந்தளித்துக் கொண்டிருந்த காதலை ஏன் நீங்கள் பார்க்கவில்லை? என் நபியே! கிப்லாவின் சட்டம் கஃபாவிற்கு வெளியே மட்டுமே. கஃபாவின் உள்ளே வந்துவிட்டால் திசை ஏது? அவன் என் உள்ளே வந்துவிட்டவன் அல்லவா? அவனை ஏன் தண்டித்தீர்கள்? வெள்ளத்தால் பாழான கிராமத்தின் மீது வரி விதிக்கப் படுவதில்லை. அவன் என் காதல் வெள்ளத்தில் மூழ்கியவன் அல்லவா?
என் நபியே! நீங்கள் அடியானை என்னுடன் இணைக்க வந்தவர் அல்லவா? அடியானை என்னை விட்டுப் பிரிக்க வந்தவர் அல்லவே?
(தூ பராயே வஸ்ல் கர்தன் ஆமதீ
ந பராயே ஃபஸ்ல் கர்தன் ஆமதீ)

பிரார்த்தனை உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பிரார்த்தனை என் மனதைக் கவர்வதில்லை என்பது என் அனுபவம். ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பிரார்த்தனை ஓதப்பட்டது. ஓதியவர் தொண்டை பெருத்து மண்டை பாழான ஒரு பிரபல மார்க்கப் பேச்சாளி. துஆவை சிம்மக் குரலில் கர்ஜித்துக் கொண்டிருந்தார். கழக நெடி வீசிய அந்த அடித்தொண்டைப் பிரார்த்தனையை ஒவ்வொரு வரி முடிந்ததும் செந்தமிழில் மொழிபெயர்த்தும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தூக்கியிருந்த கையை நான் சட்டென்று கீழே போட்டுவிட்டேன். பெரும்பான்மை தீனோருக்கு அது புளகாங்கிதமாக இருந்ததோ என்னவோ? 



கைக்குழந்தையின் அழுகை இறைவனைப் புகழ்வதாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது என்னும் கருத்து ஒரு நபிமொழியில் வந்துள்ளது. பாருங்கள், கைக்குழந்தைக்கு மொழியே தெரியாது. ஆனால் அதன் சுத்தமான உணர்ச்சியே பிரார்த்தனையாக அங்கீகரிக்கப் படுகிறது. உடனே இறைவனின் கருணை தாயின் முலைகளில் பாலாகச் சுரக்கிறது, கரங்களில் அரவணைப்பாய் மலர்கிறது. ஒரு குழந்தையைப் போல் பிரார்த்தித்தாலே வாழ்க்கையில் ஈடேற்றம் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.

”குழந்தைகளின் பிரார்த்தனை” (பச்சே கீ துஆ) என்னும் ஓர் அருமையான பிரார்த்தனையை மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) எழுதியுள்ளார்கள். அதன் தமிழாக்கம் இது:
”பிரார்த்தனை ஆகி என் உதட்டில் வருகிறது
என் ஆர்வம், என் ஏக்கம்.
என் இறைவா! என் வாழ்க்கை
ஒரு மெழுகுவத்தி போல் ஆகட்டும்.
என் மூச்சில் என் தாய்நாடு
பொலிவு பெறட்டும்
பூவைக் கொண்டு ஒரு
பூங்கா பொலிவது போல்.
என் ரட்சகனே! என் வாழ்க்கை
ஒரு விட்டில் பூச்சி போல் ஆகட்டும்.
அறிவு எனும் விளக்கின் மீது
எனக்கு நேசம் உண்டாகட்டும்.
ஏழைகளின் சேவையே என் பணி ஆகட்டும்
வேதனைப் படுவோரையும்
வலிமை இழந்தோரையும்
அது நேசிப்பதாகட்டும்.
என் அல்லாஹ்வே!
தீமைகளை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!
நேர்வழி எதுவோ
அவ்வழியில் என்னை நடத்துவாயாக!





(இந்தப் பிரார்த்தனையை ஜக்ஜித் சிங் அவர்கள் உருக்கமான பாடலாக மெட்டமைத்து சிஸா ராய் என்னும் சிறுமியைப் பாட வைத்து “CRY FOR CRY” என்னும் ஆல்பத்தில் இடம்பெறச் செய்தார். கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=yvBd_F-Fn3w









Saturday, August 27, 2011

அந்த நூல்


என் கையில் ஒரு நூல் இருக்கிறது. திருக்குர்ஆன். அதை ஒருவரிடம் காட்டி ‘இது என்ன?’ என்று கேட்கிறேன். அவர் அந்த நூலின் அட்டையைப் பார்த்துவிட்டு ‘குர்ஆன்’ என்று பதில் சொல்கிறார். இப்போது அவர் யார்? அவர் ஒரு பழமைவாதி!

என் கையில் உள்ள நூலை வேறொருவரிடம் காட்டி அதே கேள்வியைக் கேட்கிறேன். அவரும் நூலின் அட்டையைப் பார்த்துவிட்டு “இது குர்ஆனின் ஒரு படி (COPY). இதில் குர்ஆனின் பிரதி (TEXT) இருக்கிறது. பிரதியை நாம் கட்டுடைப்புச் செய்தால் அதன் உப-பிரதியை (SUB-TEXT) கண்டறியலாம்” என்று பதில் சொல்கிறார். அடடே! ஒரு எளிமையான கேள்விக்கு இவ்வளவு சிக்கலான விடையைச் செப்புகிறாரே? இவர் யாராக்கும்? என்று நீங்கள் வியக்கலாம். இவர்தான் பின்-நவீனத்துவவாதி! திருக்குர்ஆன் இருக்கட்டும், ரேஷன் அட்டையைக்கூட அவர் மறுவாசிப்புதான் செய்வார். 



ஆனால் மேற்படி பின்–நவீனத்துவவாதி கூறிய பதிலில் நாம் சிந்திப்பதற்கு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அதாவது குர்ஆன் என்பது ஒன்றுதான். பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கில் குர்ஆன்-மஜீத் நூற்கள், அதாவது அதன் படிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையுமே நாம் பேச்சு வசதியில் குர்ஆன் என்றே அழைப்போம். அவை குர்ஆன் பிரதிகள் என்று பார்ப்போமேயானால் நம் சிந்தனை மேற்கொண்டு நகர்வதற்கான பாதை திறக்கிறது.

’பிரதி’ என்ற சொல்லின் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம். ’பிரதி’ என்பது என்ன? அல்லது எது? ஒன்றை இன்னொன்று உள்ளது உள்ளபடி காட்டுமேயானால் அதற்கு இது பிரதி ஆகும். ‘பிரதிபலிப்பு’ என்ற சொல்லை ஞாபகம் செய்யுங்கள். கண்ணாடி தன் முன் நிற்பவரின் உருவத்தைப் பிரதிபலிக்கிறது. இப்போது பிரதி என்பது கண்ணாடியில் உள்ள பிம்பம். கண்ணாடி என்பது பிரதியைத் தாங்கி நிற்கும் சாதனம், பிரதிக்கான இடம். பிரதியின் ’மூலம்’ கண்ணாடியின் முன் நிற்பவர்தான். மூலத்தில் என்ன உள்ளதோ அதுவேதான் பிரதியில் துல்லியமாக வெளிப்படுகிறது. ஆனால் சாதனத்தில் உள்ள குறை பிரதியைக் குலைத்துவிடக் கூடும். 

திருக்குர்ஆன் என்னும் பெயரில் பல படிகளாகப் பல அளவுகளில், பல வண்ணங்களில், பல எழுத்துரு வடிவங்களில் அச்சிடப்பட்டு கடைகளில், பள்ளிகளில், வீடுகளில் நூலகங்களில் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பவை திருக்குர்ஆன் பிரதிகள். தாள்களால் ஆன நூலமைப்பு அந்தப் பிரதியைத் தாங்கி நிற்கும் சாதனம்.

பிரதியும் அதைத் தாங்கும் சாதனமும் இங்கே. மூலம் எங்கே? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி. மூலம் எங்கே? என்ற கேள்விக்கு விடை காண நாம் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட (நுஸூல்) முறையைப் பார்க்க வேண்டும்.



திருக்குர்ஆன் புனித ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பது அதிலேயே சொல்லப்பட்டுள்ளது: “ரமலான் மாதம் எத்தகையது எனில் அதில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது – ஷஹ்ரு ரமலானல்லதீ உன்ஸில ஃபீஹில் குர்ஆன் (2:185)”

ரமலான் மாதத்திலும் குறிப்பாக லைலத்துல் கத்ர் என்னும் ‘கண்ணியமிக்க இரவில்’ இறக்கப்பட்டது என்றும் சொல்கிறது: “நிச்சயமாக நாம் அதை கண்ணியமிக்க இரவில் இறக்கினோம் – இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தில் கத்ர் (97:1)” 

இன்னொரு திருவசனமும் இதனைச் சுட்டுகிறது: “நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் – இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்திம் முபாரக்கத்தின்… (44:3)” 

எப்போது இறக்கப்பட்டது என்பதற்கான விடை கிடைத்துவிட்டது. எங்கிருந்து இறக்கப்பட்டது? எங்கே இறக்கப்பட்டது? என்பதை இனி பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆன் இறக்கப்பட்டதைக் குறிக்க ‘இன்ஸால்’ மற்றும் ‘தன்ஸீல்’ ஆகிய இரண்டு சொற்கள் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் பின்வரும் இரு முறைகளில் இறக்கப்பட்டது என்பதை இவ்வார்த்தைகள் தெரிவிக்கின்றன: 

# இன்ஸால் – ஒரே நேரத்தில் ஒரே தடவையில் முழுமையாகத் திருக்குர்ஆன் இறக்கப்படுவது. “நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் – இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்திம் முபாரக்கத்தின்… (44:3)” என்பதில் இவ்வாறு வந்துள்ளது.

# தன்ஸீல் – கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக இறக்கப்படுவது. இக்கருத்தில் இவ்வார்த்தையும் திருக்குர்ஆனில் வந்துள்ளது:
      ”யாவரையும் மிகைத்தோனாகிய கிருபையாளனால் இறக்கியருளப்பட்டது – தன்ஸீலல் அஸீஸிர் ரஹீம் (36:5)”
      ”நாம் அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம் – வ நஸ்ஸல்னாஹு தன்ஸீலா (17:106)”

இந்த இரு முறைகளில் இறக்கப்பட்ட திருக்குர்ஆன் எங்கிருந்து எங்கே இறக்கப்பட்டது என்பதற்கான விடைகளை நாம் இனி காண்போம். இது தொடர்பாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மூன்று நபிமொழிகள் ஹாகிம், பைஹகீ, நஸாயீ, திப்ரானீ மற்றும் பஸ்ஸார் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவற்றிலிருந்து பின்வரும் இரண்டு நிலைகளில் திருக்குர்ஆன் ‘இன்ஸால்’ மற்றும் ‘தன்ஸீல்’ ஆகிய இரண்டு விதங்களில் இறக்கப்பட்டது என்று அறிய முடிகிறது:

# லவ்ஹுல் மஹ்ஃபூழ் என்னும் பாதுகாக்கப்பட்ட பலகையில் இருந்து முதல் வானத்தில் அதாவது கீழ் வானத்தில் உள்ள பைத்தல் இஸ்ஸா (கண்ணியமிக்க வீடு) என்பதற்கு இன்ஸால் முறையில் இறக்கப்பட்டது. (இதனை பைத்துல் மஃமூர் என்றும் அழைக்கப்படுகிறது).

# முதல் வானத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது அகவை தொட்டு 23 ஆண்டுகள் தன்ஸீல் முறையில் இறக்கப்பட்டது.
இந்த விவரங்களில் திருக்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட தலங்களாக நாம் அறிபவை மூன்றாகும்:

1.   1. ’லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும் பாதுகாக்கப்பட்ட பலகை.
2.   2. ’பைத்தல் இஸ்ஸா’ என்னும் முதல்வான வீடு.
3.   3. திருநபி (ஸல்)

இந்த பைத்தல் இஸ்ஸா என்பது என்ன? இது பற்றி மார்க்க அறிஞர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அது கஃபா ஆலயத்திற்கு நேர் மேலாக முதல் வானத்தில் உள்ள ஓர் ஆலயம் என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். (எனில் அது பூமி சுற்றும்தோறும் அதன் விசைக்குத் தோதாக தானும் முதல் வானில் ஒரு பெரிய வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும், ஜியோ-சின்க்ரோனஸ் செயறகைக் கோள் போல! அப்போதுதான் அது எப்போதும் கஃபாவுக்கு நேர் மேலாக இருக்க முடியும். அல்லது அது முதல் வானம் முழுவதும் பரவியதாக இருக்க வேண்டும்.)

சூஃபிகளிடம் இதற்கு வேறு ஒரு விளக்கம் உள்ளது. பைத்தல் இஸ்ஸா என்பது நபி(ஸல்) அவர்களின் புனித இதயம் என்று அவர்கள் சொல்கின்றனர். எனில் ‘இன்ஸால்’ மற்றும் ‘தன்ஸீல்’ ஆகிய இரண்டுமே அவர்களுக்கு உரியதாகிவிடுகிறது!

மகாகவி இக்பால் (ரஹ்) அவர்கள் மேலும் ஆழமான ஒரு கருத்தை, நபி(ஸல்) அவர்களின் அகமியம் (ஹகீகத்) தொடர்பான ஒரு நுட்பத்தை இவ்வாறு பாடுகிறார்கள்:

“விதிப்பலகையும் நீங்களே! எழுதுகோலும் நீங்களே!
உங்கள் உள்ளமையே புனித வேதம்!
இந்த நீல வண்ண விதான வானம்
உங்களின் விசாலத்தில் ஒரு சின்ன நீர்க்குமிழ்!”
(லவ்ஹ் பி தூ கலம் பி தூ தேரா உஜூது அல்-கிதாப்
 கும்பதே ஆப்கீனா ரங்க் தேரே முஹீத் மேன் ஹபாப்)

மேற்சொல்லப்பட்ட மூன்றும் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட தலங்கள்தான். எங்கிருந்து இறக்கப்பட்டதோ அதுதான் திருக்குர்ஆனின் மூலஸ்தானம். அது எங்கிருந்து?

திருக்குர்ஆனைத் தானே இறக்கியதாக அல்லாஹ் சொல்கிறான், இன்ஸால் ஆனாலும் சரி, தன்ஸீல் ஆனாலும் சரி. அது தொடர்பாக உள்ள இன்னொரு திருவசனத்தைக் கவனியுங்கள்:

“இன்னும் முற்றிலும் சத்தியத்துடனே நாம் இதனை இறக்கி வைத்தோம் – வபில் ஹக்கி அன்ஸல்னாஹு – முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது – வ பில் ஹக்கி நஸல. – நாம் உம்மை நன்மாராயம் நவில்பவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை – வ மா அர்சல்னாக்க இல்லா முபஷ்ஷிரன் வ நதீரா (17: 105)

திருக்குர்ஆனையும் நபியையும் பற்றி ஒரே வசனத்தில் இங்கே பேசப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் விஷயத்தில் இன்ஸால் மற்றும் நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் ரிசாலத் என்பதாக.

மேற்குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து மூலமும் இலக்குகளும் தெளிவாகின்றன:

# திருக்குர்ஆன் இறைவனால் அவனிடமிருந்தே இறக்கப்பட்டது. அது அவனது பேச்சாகும் (கலாமுல்லாஹ்). எனவே அவனது பண்பாகும் (சிஃபத்துல்லாஹ்).

# அது லவ்ஹுல் மஹ்ஃபூழ், பைத்தல் இஸ்ஸா மற்றும் நபி (ஸல்) ஆகிய மூவிடங்களில் இறக்கப்பட்டது.



திருக்குர்ஆனை இறக்கி அருளிய அல்லாஹ் அதைத் தானே பாதுகாப்பதாகச் சொல்கிறான்:
“நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம் – இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர – மேலும் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாக இருக்கின்றோம் – வ இன்னா லஹூ லஹாஃபிழூன் (15:9)”

இந்த வசனத்தில் கொஞ்சம் ஆழமான கவனத்தைச் செலுத்துங்கள். திருக்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு (கலாம்). அதாவது அவனது ஒரு பண்பு (சிஃபாத்). பண்பு என்பது உள்ளமையில் (ஜாத்) தரிப்பட்டிருப்பது. உள்ளமையை விட்டுப் பிரியாதது. அப்படிப் பிரியும் எனில் அது உள்ளமையின் குறைபாடாகிவிடும். அப்படி பிரியும் எனில் பிரிந்த நிலையில் இப்போது அது எதைக் கொண்டு தரிப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழும். இறைப் பண்பு ஒன்று இறைவனை விட்டுப் பிரிந்து வந்து அவன் அல்லாத ஒன்றில், அதாவது படைப்பில், அந்தப் படைப்பைக் கொண்டு தரிப்பட்டு நிற்கிறது என்றால் அது படைப்பை இறைவனுக்கு இணை வைத்ததாகிவிடும். இறைப்பண்பு தரிப்பட்டு நிற்க இறைவனின் உள்ளமை தேவையில்லை என்றும் அவனல்லாத படைப்பிலும் அது தரிப்பட்டு நிற்கும் என்றும் ஆகிவிடும். இத்தகைய நிலை ஒருபோதும் சாத்தியம் இல்லாததாகும் (முஹால்). இத்தகைய நிலையை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். இறைப்பண்பு எப்போதும் இறைவனின் உள்ளமையைக் கொண்டே தரிப்பட்டுள்ளது. அது எங்கே இருப்பதாகத் தோன்றினும் சரியே.

திருக்குர்ஆன் என்பது கலாமுல்லாஹ் என்னும் இறைப்பண்பு ஆதலால் அது அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டுதான் தரிப்பட்டுள்ளது.
அது லவ்ஹுல் மஹ்ஃபூழ் – விதிப்பலகை என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது.
அது பைத்தல் இஸ்ஸா என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது.
அது நபி(ஸல்) என்னும் படைப்பில் இருந்தாலும் இறை உள்ளமையில்தான் தரிப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூழில் இறக்கப்பட்டவுடன் அல்லாஹ்வில் இல்லாமல் ஆகிவிடவில்லை.
பைத்தல் இஸ்ஸாவில் இறக்கப்பட்டவுடன் லவ்ஹுல் மஹ்ஃபூழில் இல்லாமல் ஆகிவிடவில்லை.
நபி (ஸல்) அவர்களில் இறக்கப்பட்டவுடன் பைத்தல் இஸ்ஸாவில் இல்லாமல் ஆகிவிடவில்லை.

இறக்கப்பட்ட தலம் ஒவ்வொன்றிலும் அது அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுகிறது. அது முதன் முதலில் இறங்கியது லவ்ஹ் என்னும் விதிப் பலகை என்பதால் அந்தப் பலகை ‘மஹ்ஃபூழ்’ – ’பாதுகாக்கப்பட்டது’ என்று இறைவனாலேயே அழைக்கப் படுகிறது:

“அல்ல, இஃது பெருமைமிகு குர்ஆன் – பல் ஹுவ குர்ஆனும் மஜீத்
பாதுகாக்கப்பட்ட பலகையில் உள்ளது – ஃபீ லவ்ஹிம் மஹ்ஃபூழ் (85: 21,22)”

எந்த விஷயத்தைச் சொல்வதற்காக இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேனோ, அந்த விஷயத்திற்கு இப்போது வருகிறேன். ஆமாம், இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்வதற்கான முன்னுரையாகத்தான்.

திருக்குர்ஆனின் இருபத்தொன்பது அத்தியாயங்கள் ‘ஹுரூஃப் அல்-முகத்தஆத்’ என்னும் தனியெழுத்துக்களைக் கொண்டு தொடங்குகின்றன. திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான ”சூறத்துல் பகரா” பின்வரும் தனி எழுத்துக்களையே முதல் வசனமாகக் கொண்டு தொடங்குகிறது:
“அலிஃப் லாம்-மீம்” (2:1)



”ஜோதி” என்னும் நூலில் அல்லாமா கரீம் கனி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு அற்புதமான விளக்கம் ஒன்றை வரைந்துள்ளார்கள். அதன் சாராம்சமான ஒரு பகுதியைப் பாருங்கள்:
“அலிப் லாம் மீம்! இவற்றுள் அலிப் தனியாக இருப்பதையும், லாமும் மீமும் சேர்ந்திருப்பதையும் கவனியுங்கள். ‘லாம்’ என்பது ‘லௌஹ்’ என்பதன் முதல் எழுத்து, ‘மீம்’ என்பது ‘மஹ்பூல்’ என்பதன் முதல் எழுத்து. விதிவசம் எழுதப்பட்டுள்ள பட்டோலை என வர்ணிக்கப்பட்ட ‘தக்தீர்’ மட்டும் இல்லை; இதே தக்தீரை நிர்ணயித்த இறைவன், நாடும் பட்சத்தில் எழுதியவற்றை அழித்து விடும் சக்தியும், எழுதியவற்றை அதிகப்படுத்தக் கூடிய சக்தியும் உள்ளவன். அவனுடைய இந்தச் சக்தியை – லௌஹுல் மஹ்பூல் எனும் ஏட்டின் உற்பத்தி பீடம் என்று ’உம்முல் கிதாப்’ என்று குர்ஆனில் வர்ணிக்கப் பட்டிருக்கிறது. ‘உம்முல் கிதாப்’ எனும் பதத்தின் முதல் எழுத்து ‘அலிப்’ அல்லவா?” (பக். 26,27)

அலிஃப் என்பது அல்லாஹ் என்னும் திருநாமத்தின் முதல் எழுத்தும் ஆகும். ’உம்முல் கிதாப்’ என்பதன் முதல் எழுத்தும் ஆகும். உம்முல் கிதாப் என்பது மூல கிரந்தம் என்று பொருள்படும். அதாவது லவ்ஹுல் மஹ்ஃபூழில் இறக்கப்பட்ட வேதத்தின் மூலம். அது அல்லாஹ்வின் ஞானமேதான். இக்கருத்தை ’உம்முல் கிதாப்’ என்னும் பதம் வந்துள்ள திருமறை வசனங்கள் இரண்டும் சுட்டிக்காட்டுகின்றன:

“அவனிடத்திலேயே மூல நூல் உள்ளது – வ இந்தஹூ உம்முல் கிதாப் (13:39)”

“நீங்கள் அறிவதற்காக இதனை நாம் அரபிக் குர்ஆனாக ஆக்கியுள்ளோம் – இன்னா ஜஅல்னாஹு குர்ஆனன் அரபிய்யல் லஅல்லகும் த’கிலூன் – இன்னும் நிச்சயமாக இது நம்மிடத்தில் உள்ள மூலநூலில் உள்ளது, மிக்க உயர்வானதும் ஞானம் மிக்கதுமாகும் -  இன்னஹு ஃபீ உம்மில் கிதாபி லதைனா லஅலிய்யுன் ஹகீம் (43:3,4)”

’சூறத்துல் பகரா’வின் இரண்டாம் வசனம் இப்போது கவனத்திற்குரியது:
“அந்த நூல், அதில் யாதொரு சந்தேகமும் இல்லை - தாலிகல் கிதாபு லா ரைப ஃபீஹி – இறையச்சமுள்ளோர்க்கு வழிகாட்டி – ஹுதல்லில் முத்தக்கீன் (2:2)”

இங்கே கவனிக்கப்பட வேண்டிய வார்த்தை ‘தாலிகல் கிதாப்’- ’அந்த நூல்’ என்பதுதான். ’அலிஃப் லாம்-மீம்’ என்று சொன்னதைத் தொடர்ந்து ’தாலிகல் கிதாப்’ – அந்த நூல் என்று சொல்லப்படுவதால் அந்த நூல் என்பது அலிஃப் லாம்-மீம் என்னும் எழுத்துக்கள் சுட்டிக்காட்டுவதாக அல்லாமா கரீம் கனி (ரஹ்) அவர்கள் விளக்கும் ‘உம்முல் கிதாப்’ மற்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ ஆகியவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.

தாலிகல் கிதாப் (அந்த நூல்) என்றுதான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி ஹாதல் கிதாப் – இந்த நூல் என்று சொல்லப்படவில்லை என்பதைக் கவனித்து அவர்கள் சொல்கிறார்கள்:
“முத்தகீன் என்று வர்ணிக்கப் பட்டிருப்பவர்களின் பிறப்புரிமை எத்தைகைய விசேஷமானது என்பதைக் கவனியுங்கள். இந்தக் கிதாபு கொண்டு, அந்தக் கிதாபில் உள்ளவற்றை அறிந்து ஆவன செய்யக்கூடியவர்கள் அவர்கள்; குர்ஆன் என்னும் புத்தக வழியாக லௌஹுல் மஹ்பூல் எனும் புத்தகத்தையும், விதிவசத்தையும் ஆண்டவன் (துஆவுக்கு) பிரார்த்தனைக்கு இரங்கி மாற்று உத்தரவுகள் செய்தால் அவற்றையும் வாசிக்கக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.” (பக். 27,28)
தாளில் அச்சிடப்படுக் கையில் நாம் வைத்திருக்கும் குர்ஆன் ‘இந்த நூல்’.
அல்லாஹ்வின் ஞானத்தில் பூர்வீகமாக (கதீம்) உள்ள உம்முல் கிதாப் ‘அந்த நூல்’.

இந்த நூல் என்பது அந்த நூலின் உள்ளபடியான பிரதிதான். எனினும் ’ஹாதல் கிதாப்’ - இந்த நூல் என்று சொல்லாமல் ’தாலிகல் கிதாப்’ – அந்த நூல் என்று சொல்லப் பட்டுள்ளது ஏன்?

புறக் கண்ணால் இந்த நூலை எவர் வேண்டுமானாலும் காணமுடியும். ஆனால் அகக் கண்ணால் அந்த நூலைக் காணும் பேற்றை இறைவன் யாருக்குத் தருகிறானோ அவருக்குத்தான் மனதில் சந்தேகங்கள் நீங்கி உண்மை விளங்கும் என்பதற்காகத்தானே!



அந்த நூல்.
அதில் யாதொரு சந்தேகமும் இல்லை”
(தாலிகல் கிதாப் லா ரைப ஃபீஹி) (2:2)

இறைவா! இந்த நூலில் அந்த நூலைக் காணும் பார்வையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! ஆமீன்.