Thursday, June 14, 2012

தனிமை இனிமை”தனிமையிலே இனிமை காண முடியுமா?”
பழைய திரைப்பாடல் ஒன்றில் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்ட கேள்வி. தனிமை என்பது பிரிவு நிலையாக இருக்குமேயானால் இனிமை காண முடியாதுதான்.

“தனிமை கண்டதுண்டு, அதிலே சாரம் இருக்குதம்மா”

இது, தனிமையில் இனிமை கண்ட பாரதியாரின் வாக்கு. இந்தத் தனிமை ஆன்மிகத்தில் சொல்லப்படுவது. இது காதலர்கள் சொல்லும் பிரிவுத் தனிமை அல்ல.

மனிதர்கள் புரிந்து கொள்ளாத அற்புதமான விஷயங்களில் ஒன்று தனிமை. தன்னுள் மூழ்கும் தருணங்களைத் தவிர்ப்பதே மனிதர்களின் பழக்கமாகிவிட்டது. எனவே தனிமையை அவர்கள் இனிமையாக நினைப்பதில்லை.

தனிமை என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பலரிடமும் தவறான பதிலே இருக்கிறது. நம்முடன் யாரும் இல்லாத நிலை என்று அதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டும் வேறு வேறு என்கிறார்கள் கவிஞர்களும் ஞானிகளும்.

“தனிமையில் இங்கே வாழ்வதென்பது வேறு விஷயம்
உன்னுடன் யாருமே இல்லை என்பது வேறு விஷயம்”
என்கிறார் பாடலாசிரியர் மெஹ்பூப்.

ஓஷோவும் இந்த வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தி ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். LONELINESS என்பது வேறு, ALONENESS என்பது வேறு என்று விளக்கும் அவர் ALONENESS என்பது வேறு ஒருவரின் உடனிருத்தல் உங்களுக்குத் தேவைப்படாத நிலையில் உங்களின் சுயத்தில் நீங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலை என்றும் அது ஒரு முக்கியமான ஆன்மிகப் பண்பு என்றும் கூறுகிறார்.

தனிமையில்தான் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நம் சுயத்தின் முகம் நமக்கே தரிசனமாகும் கண்ணாடியாகத் தனிமை இருக்கிறது. கூட்டத்தில் பெரும்பாலும் நாம் நம் சுயத்தை மிக எளிதாக இழந்து விடுகிறோம்.

“இரவெல்லாம் தனிமையில் இருந்தேன்
பகலெல்லாம் நான் மட்டும் இருந்தேன்
நகரத்தின் மக்கள் கூட்டத்தில்
என்னைப் போல் நான் இருந்தேன்”
என்கிறார் கஜல் கவிஞர்.

சில அனுபவங்கள் நம் சுயத்தை நமக்குத் திறந்து காட்டிவிடுகின்றன. காதலும் ஞானமும் அவற்றில் முதன்மையானவை. எனவே காதலர்களும் ஞானிகளும் தனிமையை நாடுபவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் உடன் இருப்பதும் கூட அப்போது பெரிய சுமையாகிவிடுகிறது. தனிமையில் இருந்து நினைவுகளில் திளைப்பதே இனிமையாகப் படுகிறது.

”யாரை வேண்டுமானாலும் பாருங்கள்
அவரவரில் மூழ்கி இருக்கிறார்கள்.
மொழி கிடைத்திருக்கிறது நமக்கு
உரையாடுபவர்கள் கிடைப்பதில்லை”
(ஜிசே பி தேக்கியே வொ அப்னே ஆப் மே(ன்) கும் ஹே
 ஸபான் மிலீ ஹே மகர் ஹம் ஸபான் நஹீ(ன்) மில்தா)
என்று ஒரு கஜல் கவிஞர் சொல்கிறார். ஏனெனில் உரையாடல் என்பது வாய்க்கும் செவிக்கும் இடையில் நடப்பதல்ல. இதயத்திற்கும் இதயத்திற்கும் இடையில் நடப்பது.

”மனம் மீண்டும் ஆசிக்கிறது
ஓய்வான அந்த இரவு பகல்
காதலியின் நினைவுகளில் மூழ்கி
அமர்ந்திருக்க நாடுகிறது”
என்கிறார் மீர்ஸா காலிப்.

சூஃபிகளின் காதலி இறைவன்தான். எனவே அவர்களுக்குத் தனிமை என்பது உண்மையில் இறைவனுடன் தனித்திருப்பதாகிறது. ஏனெனில் இறைவன் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிவதில்லை.
“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்” (54:4)

சூஃபி ஞானி ஒருவரின் சீடர் ஒருவர் வேளாண் துறையில் பணியில் இருந்தார். மலைப் பிரதேசத்தில் ’ஆள் இல்லாத காட்டுக்கு’ அவரை மாற்றினார்கள். குடும்பத்தை அங்கே அழைத்துச் செல்ல முடியாத நிலையில் அவர் மட்டும் சென்று தங்கினார். பெரும்பாலும் தனிமைதான். சில நாட்களில் நொந்து போய்விட்டது. தன்  குருநாதருக்கு ஃபோன் செய்து பேசினார். ”இப்படி நிலைமை, நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினார். குரு வேறு கோணத்தில் இதைப் பார்க்க வைத்தார், “எவ்வளவு அருமையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! அல்லாஹ் உங்களுடன் இருப்பதை உணர்வதற்கு அவனே ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு அல்லவா இது? இதைத் தவற விட்டுவிடாதீர்கள். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவனே உங்கள் மீது பிரியம் கொண்டு உங்களுக்குத் தந்திருக்கும் வாய்ப்பு இது. அதற்காக மகிழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் உங்களுடன் இருப்பதையே கவனித்துக் கொண்டிருங்கள்.” (நான் சார்ந்திருக்கும் சூஃபிப் பள்ளியில் இப்போது அந்த சீடர் இறைநேசராக, குருமகானாக இருக்கிறார்கள். அவரே சொல்ல இதை நான் கேட்டேன்.)

இறைவனின் உடனிருத்தலை சதா உணர்ந்துகொண்டே இருப்பது என்பது சூஃபித்துவத்தின் அடிப்படையான பயிற்சிகளில் ஒன்று. அதில் மூழ்க மூழ்க தனிமை என்பது மிகவும் இனிமையாக மாறிவிடுகிறது. சிலருக்கு இறைநினைவு எந்த அளவு லயித்துவிடுகிறது என்றால் அதன் வாடையே இல்லாத மக்களின் சகவாசத்தை அவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. அவர்கள் மக்கள் சகவாசத்தை விட்டு ஓடுகிறார்கள்.

“ஊர் ஊராகத் திரிகின்றேன்
தனிமையைச் சுமந்துகொண்டு
உன் பரிச்சயத்திற்கு
என்ன பெயர் தருவேன் நான்?”
(ஷெஹர் தர் ஷெஹர் லியே பிர்த்தா ஹூ(ன்) தன்ஹாயி கோ
கோன்ஸா நாம் தூ(ன்) மெய்(ன்) தேரீ ஷனாஸாயி கோ)
என்கிறார் ராஷித். (ஹரிஹரன் இந்த கஜலை அருமையாகப் பாடியிருக்கிறார். கேட்க: http://www.youtube.com/watch?v=dEPOLtlN4IA )

அதாவது, அவருடைய பெயரும்கூட இப்போது அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட தனிமையாம்!
“நிழலும்கூட நீங்கிப் போய்விடுமே
அப்படியொரு தனிமை
அழ நினைத்தாலும் கண்ணீர் வரவில்லை
அப்படியொரு தனிமை”
என்று பாடுகிறார் நுஸ்ரத்.
நிழலும் நீங்கிவிடும் அந்தத் தனிமை நல்லதுதான். அதில் நாம் நிஜத்தை அறிந்துகொள்ளலாம். நிழல் பொய் என்பதால் அது நீங்கிப் போய்விடக் கூடும். ஆனால் நிஜம் (ஹக்) ஒருபோதும் நம்மை விட்டு நீங்குவதில்லை.

”என் பெயரையே மறக்கச் செய்துவிட்ட உன் பெயருக்கு என்ன பெயர் தருவேன் நான்?” மஜ்னூனின் முற்றிய காதல் பித்தம் பற்றி அப்துல் ரகுமான் இப்படி எழுதினார்: “உன் பெயர் என்ன?” என்று ஒருவர் கேட்கிறார். மஜ்னூன் சொல்கிறான் “லைலா”!

“என்னை விடவும் என்னை
நெருங்கி இருக்கின்றாய் நீ
யாரேனும் என் பெயரைக் கேட்டால்
உன் பெயரைச் சொல்வதே
சரியாகப் படுகிறது.”

’மனம் சதா பேசிக்கொண்டே இருக்கிறது, என்ன செய்வது?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர். ’நெருப்பு ஏன் சுடுகிறது என்று கேட்டால் என்ன சொல்வது?’ என்றேன் நான். மனம் பேசிக்கொண்டே இருக்கிறது என்றால் அதன் படைப்பமைப்பே அப்படி. சிந்தனை அற்ற மனம் என்று ஒன்று இல்லை. வேண்டுமானால் வார்த்தைகள் அற்ற நிலை என்று சொல்லலாம். சிந்தனை என்பது பிரக்ஞைதான். வார்த்தைகளை அது போர்த்திக் கொள்கிறது. ‘சிந்தனையே இல்லை என்ற சிந்தனை ஒன்று இருக்கத்தான் செய்யும்’ என்றார்கள் மகான் ஃபைஜி ஷாஹ் (ரஹ்).

மனம் சதா பேசுகிறது என்பது சரிதான். ஆனால் அது யாரிடம் பேசுகிறது? பேசிக்கொண்டே இருப்பது போல் அது படைக்கப்பட்டது ஏன்?
“நிச்சயமாக நாமே மனிதனைப் படைத்தோம்
அவனுடைய மனம் அவனிடம் பேசுபவற்றை நாம் அறிவோம்
நாம் அவனது பிடரி நரம்பைவிட
அவனுக்கு நெருக்கமாக இருக்கின்றோம்” (50:16)
என்று இறைவன் கூறுகின்றான்.

உன் மனம் உன்னிடம் திரும்பியிருக்கிறது. எனவே அது தெளிவில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறது. உன் மனத்தை இறைவனிடம் திருப்பு. அது அவனுடன் பேசிக்கொண்டிருப்பதற்காகப் படைக்கப் பட்டது. “தொழுபவன் தன் ரட்சகனுடன் உரையாடுகிறான்” என்று நபி(ஸல்) சொல்வதை சிந்தித்துப் பார். ஐவேளை மட்டுமல்ல, உன் உள்மனம் இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் நீ அந்தரங்கத் தொழுகையில் இருக்கிறாய். அப்போது நெருப்பு பூஞ்சோலையாக மாறிவிடும்!

மனம் பேசும் நிலையை நீ சரியாகப் புரிந்து கொண்டால் மௌனம் என்னும் நிலையும் எளிதாகப் புரிந்துவிடும். தனிமை (ஃகல்வத்) என்பதன் இனிமை (ஹல்வத்) என்ன என்பதை நீ சுவைத்து அறிந்து கொள்வாய். சூஃபிகளின் தனிமைப் பயிற்சி (ஃகல்வத்) என்பது இறைவனுடன் தனித்திருப்பதுதான். மற்றபடி நீ மட்டுமே தனியாக இருக்கும் நிலை என்பது கிடையாது. எனவேதான், “நம் சிந்தனைப் பள்ளியில் தனிமை என்பதே இல்லை” (ஹமாரி சில்சிலா மே(ன்) தன்ஹாயிபன் நஹீ(ன்) ஹே) என்று சூஃபி அலீமிஷாஹ் ஆமிரி சொன்னார்கள்.

ஞானியின் பேச்சும் மௌனமும் இறைவனுடனாகவே இருக்கும். காதலர்கள் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையும் உண்டு; உரையாடல் தேவைப்படாத நிலையும் உண்டு!


No comments:

Post a Comment