Wednesday, June 20, 2012

மூன்று கவிதைகள்



வீட்டுக் கனவு

பத்தாண்டுகள்
பணி கடந்தும்
இன்னும் எனக்கொரு
சொந்த வீடு இல்லையென்று
கவலை என் தந்தைக்கு

மூன்றாம் வகுப்பிலேயே
மூன்றுமணி நேரம்
வீட்டுப் பாடம் எழுதும்
என் மகன்
இன்னமும் ஒருமுறை கூட
வீடு கட்டவில்லை என்ற
கவலை எனக்கு

அடுக்குக் குடியிருப்பின் முன்
நான்கு மாதங்களாய்க்
கிடக்கத்தான் செய்கிறது மணல்.


மூளைச் சலவை

பள்ளி விட்டு
வீடு திரும்புகையில்
புரியாமல் ஒப்பித்தலின் அழுக்கைக்
கழுவிச் செல்கிறார்கள்
பிள்ளைகள்
குச்சி ஐஸ் கொண்டு.


மழை வாசம்
        
ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
கட்டிய பள்ளியின்
வெளிர் காவிக் காரைச் சுவற்றின்
ஈர நைப்பு என்
நாசி துளைத்த மதியநேரம்

ஆற்றுப் படுகையின்
ஓரச் சாலையில்
மூங்கில் இலைகள்
தெளித்த துளிகளில்
ஸ்பரிசம் மலர்ந்த
அரை மயக்க மாலை

ஏனென்றும்
எப்படியென்றும்
அறியேன்...

இறந்த காலத்தின்
ஏதேனுமொரு நிகழ்காலத்தில்
நிற்க வைத்துவிடுகிறது
ஒவ்வொரு போதும்
மழையின் வாசம்.

No comments:

Post a Comment