தும்ரி
பாணியும் கஜல் பாணியும் கலந்த கவிதைகளை சிஷ்தியா சூஃபிகள் எழுதினார்கள். காதிரிய்யா
தரீக்காவின் முன்னோடியான முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) மற்றும் சிஷ்தியாவின்
இந்திய முன்னோடியான ஃக்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) ஆகியோர் மீதும் அத்தகைய பாடல்கள்
எழுதப்பட்டன.
”மோரி
அரஜ் சுனோ தஸ்தகீர் பீர்” (என் கோரிக்கையைக் கேளுங்கள், குருநாதரே கைகொடுப்பவரே)
“அரஜ்
சுன்லோ மோரி முயீனுத்தீன்” (என் கோரிக்கையைக் கேளுங்கள் முயீனுத்தீனே!)
“ஏரீ
சகீ மோரா ஃக்வாஜா கர் ஆயே” (தோழியே! என் ஃக்வாஜா வீடு வந்தார்)
“கிர்பா
கரோ மஹராஜ் முயீனுத்தீன்” (கிருபை செய்யுங்கள் மாமன்னரே முயீனுத்தீன்)
(இந்தப்
பாடல்களைக் காலகாலமாக கவ்வாலிப் பாடகர்களும் ஹிந்துஸ்தானிப் பாடகர்களும் பாடி வருகிறார்கள்.
உஸ்தாத் ராஷித் ஃகான் பாடியிருக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள்: http://www.youtube.com/watch?v=0NmRheqQOao)
பீர் நசீருத்தீன் நசீர்
இன்றும்
தொடரும் இந்த சூஃபிக் கவிமரபில் கவிதை எழுதுபவர்கள் வெறும் கவிஞர்கள் அல்லர். பல்லாயிரம்
சீடர்களுக்கு ஆன்மிக வழிகாட்டும் குருமகான்களின் கவிதைகள் இசையுடன் பாடப்பட்டு சிலாகிக்கப்
படுகின்றன. உதாரணமாக, பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய ‘உன்கே அந்தாஸே
கரம் உன் பெ வொ ஆனா தில் கா’ என்னும் கஜல் நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகானின் இசையில் மிகவும்
பிரபலமானது. (கேட்க: http://www.youtube.com/watch?v=RmbF8mfdoNQ )
”அந்தப்
பேரன்பின் வெளிப்பாடுகள்…
அன்பின்
மீது இதயம் பொங்கும் அந்த நிலை…
ஹா, இதயத்தின்
அந்தப் பொழுதுகள்,
அந்த
உரையாடல்கள், அந்தக் காலம்…”
இது ஒரு
தோராயமான மொழிபெயர்ப்புத்தான். உருதுவின் இலக்கணம் தரும் வசதியைத் தமிழ் அனுமதிக்கவில்லை.
‘உன்கே’ என்பதை அவளின்/ அவனின்/ அவரின் என்று விளங்க முடியும். அதேபோல் ’வொ’ என்பது
அவள்/ அவன்/ அவர்/ அது என்று எப்படியும் பொருள்படும். உன்கே அந்தாஸே கரம் என்பதை ‘அவளின்
அந்தப் பேரன்பின் வெளிப்பாடு’ என்று காதலியைப் பாடுவதாக எடுத்துக்கொள்ளலாம். இறைவனைப்
பாடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம், இறைத்தூதரைப் பாடுவதாகவும் விளங்கலாம். ‘அவள்’ என்று
வைத்து மொழிபெயர்ப்பதானால் அப்பாடல் இப்படித் தொடரும்:
“என்
உள்ளத்தின் கதையை அவள்
முகம்கொடுத்துக்
கேட்கவும் இல்லை
ஆயுள்
கழிந்துவிட்டது
ஆனால்
இதயத்தின் வலி நீங்கவில்லை
காதல்
விளையாட்டுக்கள் இதயத்தில் சேர்ந்து
கரைத்து
விடுகின்றன காதலனை
இறைவா!
என் எதிரியின் இதயத்திலும்கூட
காதல்
நோய் வந்துவிட வேண்டாம்!
அவளும்
எனதாகவில்லை
இதயமும்
கையை விட்டுப் போனது
இந்த
நிலை ஆவதை விடவும் நல்லது
இதயத்தில்
அன்பில்லாமல் இருப்பது!
அவள்
புன்னகையின் மீது ஆணையாக, நஸீர்,
அவளின்
சபையில் நான் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டேன்
என் இதயம்
என் கைநழுவிப் போவதை”
இன்னொரு
உதாரணம், ஹழ்ரத் ஷாஹ் முஹம்மது தகீ அஜீஸ் மியான் ராஸ் நியாஜி (ரஹ்) அவர்கள் எழுதிய
‘பான்கே பியா சே மோரீ லட் கயீ நஜரியா’ (காதலனின் பார்வை மீது மோதியது என் பார்வை)
(உஸ்தாத் ராஷித் கான் இப்பாடலை மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். கேட்க: http://www.youtube.com/watch?v=XJzcv5HYPtg )
அபூ முஹம்மத் & பரீத் அயாஜ்
இன்னொரு
உதாரணம், மேற்சொன்ன அதே சூஃபி ஞானி எழுதிய ‘இஷ்க் மே(ன்) தேரே கோஹெ கம்’ (உன் காதலில்
துன்பத்தின் மலையை...) என்று தொடங்கும் கஜல். (ஃபரீத் அயாஜ், அபூ முஹம்மத் மற்றும்
குழுவினர் இதனை கவ்வாலியாகப் பாடியுள்ளதைக் கேட்க: http://www.youtube.com/watch?v=OKfjdA2FxO8 ) ஃபரீத்
அயாஜின் இடைப்பேச்சுக்களுடன் இந்த கஜலில் அவர் பாடாமல் விட்ட வரிகளையும் சேர்த்து முடிந்தபடிக்கு
மொழிபெயர்க்கிறேன்:
“தெய்வீகத்தின் நறுமணம் உள்ளது காதலில்
இறைவனின் மீது காதல் கொண்டவருக்கு.
இது அனைவருக்குமான விளையாட்டல்ல!
உன் காதலில்
துன்பத்தின் மலையை
என் தலைமீது
ஏற்றேன், ஆவது ஆகட்டும்
வாழ்வின்
இன்பங்களையும் வசதிகளையும்
விட்டுவிடேன்,
ஆவது ஆகட்டும்.
விளையாட்டாகப்
பற்றவைத்த காதல் தீயில்
பஞ்சினைப்
போல் எரிந்து போய்விட்டது இதயம்
உடல்
உள்ளம் உயிர் எதுவும் மிச்சமில்லை
எனில்
ஆவது ஆகட்டும்.
என் போன்ற
நோயாளியின் மீது
மருத்துவரே!
கை வைக்க வேண்டாம்
இதனை
இறைவனிடம் விட்டுவிடுங்கள்
இறைவனுக்காக,
ஆவது ஆகட்டும்.
பகுத்தறிவின்
பள்ளியில் இருந்து எழு
காதலின்
மதுக்கூடத்திற்கு வா
இந்தப் பேச்சுக்கள் பகுத்தறிவாளருக்கு ஒருபோதும்
புரிவதில்லை
பகுத்தறிவுவாதி ஒருபோதும் காதலிக்கவும் முடியாது!
தன்னை
இழத்தலின் கோப்பையைப் பருகு
இப்போது,
ஆவது ஆகட்டும்.
பிரிவின்
வேதனைகளை அவள் முன் எடுத்துச் சொன்னேன்
அலட்சியமாகப்
புன்னகைத்துச் சொன்னாள் ‘ஆவது ஆகட்டும்’
இருத்தலின்
இந்தக் கானலில்
இரவின்
மேல் இரவாக இருக்கின்றது
இல்லாமையின்
விடியல் தென்பட்டது
காலடி
எடுத்தேன், ஆவது ஆகட்டும்.
உலகின்
நேக்குப் போக்குகளுடன், நியாஸ்
எனக்கெதுவும்
வேலை இல்லை
எது வெளிப்பட்டதோ
அதைச் செய்தேன்
ஆவது
ஆகட்டும்.”
கலையைப்
பொருத்தவரை இந்தப் பண்பாட்டியல் இணைவின் இனிமையான முதல் கனி ஹழ்ரத் அமீர் ஃகுஸ்ரோ
(ரஹ்). அவருடைய பாடல்கள் எளிமையான ஹிந்தியிலும் தெளிவான ஃபார்சியிலும் அமைந்துள்ளன.
நபிகள் நாயகத்தின் மீதும் தன் குருநாதரான ஹழ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களின்
மீதும் அமீர் ஃகுஸ்ரோ எழுதியுள்ள பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ’தோத்தாயே ஹிந்த்’
– இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படும் இவரின் பாடல்களைப் பாடாத ஒரு கவ்வாலிப் பாடகர்
இருக்கவே முடியாது. அவருடைய புகழ் மிக்க பாடல்களில் சில:
“ஆஜ்
ரங் ஏரீ மா ரங் ஹே” (இன்று வண்ணமயம் அம்மாவே! வண்ணமயம்…)
”நமீ
தானம் ச்செ மன்ஸில் பூத்” (நாம் அறியோம் எந்த இடத்தை அடைந்தோம் என்று)
“ஸிஹாலே
மிஸ்கீன் மகுன் தகாஃபுல்” (இந்த இரவலனின் நிலையை மறந்துவிடாதீர்கள்)
”ஏரீ
சஃகீ மோரே ஃக்வாஜா கர் ஆயே” (தோழியே! என் தலைவர் இன்று வீடு வந்தார்)
”மெய்(ன்)
நிஜாம் சே நய்னா லகா ஆயி ரே” (குருவுடன் நான் கண்கள் சந்தித்து வந்தேன்)
“ஃகப்ரம்
ரசீத் இம்ஷப் கெ நிகார் ஃக்வாஹி ஆமத்” (சேதி கிடைத்துள்ளது நான் விரும்புபவன் இன்றிரவு
வருவான் என்று)
”மோஹே
அப்னே ஹி ரங் மே(ன்) ரங் தே” (உங்கள் வண்ணத்தில் எனக்கு வண்ணம் கொடுங்கள்)
“ச்சாப்
திலக் சப் ச்சீனி ரே மோசே நய்னா மிலை கே” (என் உள்ளம் என் உயிர் அனைத்தையும் பரித்துக்கொண்டார்
கண்களால் தொட்டு)
இந்த
வரிசையில் அமீர் ஃகுஸ்ரோ எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே கொஞ்சம் அலசிப் பார்க்க ஆசை.
“பொஹொத் கடின் ஹே டகர் பங்கட் கி” (கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது)
என்று தொடங்குகிறது அந்தப் பாடல். ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் தர்கா
உள்ள இடம் ராஜஸ்தானின் அஜ்மீர். அந்த மாநிலத்தின் பின்னணியில்தான் இப்பாடல் எழுதப்பட்டிருக்க
வேண்டும் என்று நினைக்கிறேன், அமீரும் அவரின் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவும்
தில்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட. இளம்பெண் ஒருத்தி பாடுவதாக இப்பாடலை அமீர்
ஃகுஸ்ரோ எழுதியிருக்கிறார்.
இப்பாடலையும் பலரும் பல மெட்டுக்களில் பாடியிருக்கிறார்கள்.
ஹரிஹரன் இதனை அவருக்கே உரிய கஜல் பாணியில் பாடியிருக்கிறார், LAHORE KE RANG HARI
KE SANG என்னும் ஆல்பத்தில். (கேட்க: http://www.youtube.com/watch?v=V1iuripdbMI )
முன்ஷி
ரஸியுத்தீனும் அவருடைய மகன்களான ஃபரீத் அயாஜ், அபூ முஹம்மத் ஆகியோரும் சேர்ந்து இப்பாடலைக்
கவ்வாலியாகப் பாடியுள்ளனர். (கேட்க: http://www.youtube.com/watch?v=gozs3kR5Zjo ) முன்ஷி
தரும் விளக்கங்களுடன் இப்பாடலை முடிந்தபடி மொழிபெயர்த்துத் தருகிறேன்:
”காதலனே! இது மட்டும் நினைக்காதே
உன் பிரிவில் நான் நிம்மதியாய் இருக்கிறேன்
என்று.
விளக்கு இரவில் மட்டும்தான் எரியும்
நான் எரிகின்றேன் இரவும் பகலும்.
நயவஞ்சகர்களே! எச்சரிக்கை!
இப்பாதையில் ஒருபோதும் காலடி வைக்காதீர்,
இது காதலின் வீதி,
அனைவருக்குமான பாதை அல்ல.
கிணற்றுக்குச்
செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி
நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?
பதில் சொல்லுங்கள், குருவே நிஜாமுத்தீனே!
.................. ………………….. ……………….
அறியா மருத்துவனே! அப்பால் போ,
காதலரின் மதத்தில் நிம்மதி என்பது வேறு
இந்த மதுவின் போதை என்பது வேறு
பாடசாலையில் திரட்டிய அறிவு என்பது ஒன்று
காதலின் அடையப்படும் அறிவு என்பது வேறு
…………… ……………… ………...........
கிணற்றுக்குச்
செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி
நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?
(பொஹத் கடின் ஹே டகர் பங்கட் கி/ கெய்சே மே(ன்)
பர் லாவூன் மத்வா சே மட்கி)
கேட்டவுடனே
தெரிந்துவிடுகிறது, இப்பாடல் தியானத்தைப் பற்றிப் பேசுகிறது. இதயத்தைத் தூய்மை ஆக்குதல்
(தஸ்கிய்யதுன் நஃப்ஸ்) என்னும் பயிற்சியைப்
பற்றிப் பேசுகிறது. மண்பானை என்று இங்கே சொல்லப் பட்டிருப்பது சூஃபியின் மனத்தைக் குறிக்கிறது.
எளிதாக உடைந்து விடக்கூடிய ஒரு பாத்திரம்!
இந்து
ஞான மரபிலும் பானை இப்படிக் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. கோபிகைகளின் மனம் பானையாக
உருவகப் படுத்தப்பட்டது. அதில் அவர்கள் எடுத்துச் செல்லும் வெண்ணெய் சிறுகச் சிறுகத்
திரட்டிய புண்ணியங்கள்தான். ஆனால் அது ஒரு தன்முனைப்பாக உருவெடுக்கும்போது பாரமாகிறது.
அதைக் கண்ணன் உடைத்துத் தள்ளுகிறான். பிறகு மீண்டும் தன்முனைப்பின் உருவாக்கம், நான்
இவ்வளவு புண்ணியங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று. அல்லது, அந்த வெண்ணெயை அவன்
திருடி உண்கிறான். அதாவது நாம் செய்தவை என்று சொல்லப்படுவதெல்லாம் பரம்பொருளின் ரகசியத்தில்
மறைந்து விடுகின்றன என்னும் கருத்தை இப்படிச் சுட்டியிருக்கிறார்கள்.
ஒரு சூஃபிக்குத்
தன் மனம் சார்ந்து இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று, அதைத் தூய்மை செய்வது. அதாவது, பாத்திரத்தை
சுத்தமாக வைத்திருப்பதைப் போல். மற்றொன்று, அதில் இறையொளியை/ இறைநம்பிக்கையை/ இறைதியானத்தை
நிரப்புவது. அதாவது, அப்பாத்திரத்தில் தேவையான பொருளை நிரப்பி வைப்பதைப் போல். இந்தக்
காரியம் மிகவும் கடினமானது என்கிறார் அமீர் ஃகுஸ்ரோ.
பாலைவனத்தில்
நீர் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. வரண்ட பூமியில் எங்கோ ஒரு சில இடங்களில்தான்
நீரூற்றுக்கள்/ கிணறுகள் இருக்கும். அங்கு வரை நடந்து சென்று நீர் சேந்தி வரவேண்டும்.
அதுபோல் உலகில் இறையருளின் ஊற்றாக இருக்கும் இறைநேசர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள்.
அவர்களின் இதயத்திலிருந்து நம் இதயத்திற்கு இறையொளியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீர்
என்பதற்கு அரபியில் அமன் என்றொரு சொல் உண்டு. அதே வேரிலிருந்து வரும் சொல்தான் ஈமான்
(இறைநம்பிக்கை). எனவே இப்பாடலில் நீர் என்பதற்கு இறை நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம்.
வெறும்
பானையை வைத்துக்கொண்டு தாகம் தணிக்கவோ சமையல் செய்யவோ முடியாது, அது எவ்வளவு தூய்மையாக
இருந்தாலும்கூட. பானைக்குள் நீர் நிரப்பப் பட்டிருக்க வேண்டும். அதுபோல் தூய்மையாக
இருந்தாலும் மனதில் நிம்மதி வர வேண்டும் என்றால் அதில் இறைதியானம் இருக்க வேண்டும்.
எனவே இப்பாடலில் நீர் நிரப்புதல் என்பது இதயத்தில் இறைதியானம் நிரம்புவதைக் குறிக்கும்.
”அறிக,
அல்லாஹ்வின் தியானத்தைக் கொண்டே
இதயங்கள்
நிம்மதி அடைகின்றன”
(அலா பிதிக்ரில்லாஹி தத்மஇன்னுல் குலூப் –
13:28)
இன்னும்
எத்தனை நாளைக்குத்தான் காலிப் பானையை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கப் போகிறோம். “போய்
நீர் அள்ளி வா” என்று அனுப்பப்பட்டுள்ளோம். பானையும் உடைந்து விடக்கூடாது, வெறும் பானையையும்
கொண்டுவர முடியாது.
பகரப்
பணமும் கொடுக்க முடியாது, பிள்ளையைக் கவனித்துக் கொண்டிருந்துவிட்டேன் என்று சாக்குப்
போக்கும் சொல்ல முடியாது.
“அந்நாளில்
செல்வமோ பிள்ளைகளோ
பலனளிக்க
மாட்டார்கள்
எவன்
அல்லாஹ்விடம்
நிறைவான
இதயத்துடன் வந்தானோ
அவனைத்
தவிர”
(யவ்ம லா யன்ஃபஉ மாலுன் வ லா பனூன் /
இல்லா மன் அதல்லாஹ பிகல்பின் சலீம் –
26:88,89)
மிக்க நன்றி சகோதரர்.
ReplyDelete