(சூஃபி ஞானி ஃபக்ருத்தீன் இராக்கீ (ரஹ்) அவர்களின்
‘லமஆத்’ (ஞான ஒளிச்சுடர்கள்) (ஆங்கிலத்தில் DIVINE FLASHES, மொழிபெயர்ப்பு:
WILLIAM.C,CHITTICK & PETER LAMBORN WILSON) படித்துக் கொண்டிருந்த போது இந்தக்
குட்டிச்சுவரின் மனதில் பளிச்சிட்டவை இந்தக் கீற்றுக்கள்.)
உன்னை
அறிந்ததில் இருந்து
இப்படி
ஆகிவிட்டேன்
உன்னை
அறியாத எவரும்
அறியமுடிவதில்லை
என்னை!
உன் கைகளை
நினைக்கையில்
யாழாகிறேன்
உன் உதடுகளை
நினைக்கையில்
குழலாகிறேன்
உன் கண்களை
நினைக்கும்
போதெல்லாம்
மௌனமாகிறேன்
உன் காதலில்
நான்
எழுதும் கவிதைகள்
எனக்குச்
சொந்தமில்லை…
மழை ஓய்ந்தபின்
இலைகளில்
சொட்டும் துளிகள்
இலைகளுக்குச்
சொந்தமில்லை
என்னை
நீ பார்ப்பதேயில்லை
என்பதைப்
போல் தோன்றலாம்
உன் மீதான
என் பார்வையை விட
என் மீதான
உன் பார்வை
அதிகம்
என்பதை அறிவேன் நான்.
உன்னை
நீ மட்டும்தான்
பார்க்கமுடியும்
என்பதை
முன்பு அறிந்திருந்தேன்...
என்னையும்
நீ மட்டும்தான்
பார்க்கமுடியும்
என்று
அறிய வைத்தாய்.
என்னுள்
ஒளிந்திருந்த
உன்னைக்
கண்டுபிடித்தபின்
உன்னுள்
என்னை
ஒளிக்கலானேன்...
நிச்சயமாக
இது
சிறுவர்களின்
விளையாட்டல்ல!
தனிமையில்
உன்
தோட்டத்தினுள்
நுழைந்தேன்…
முள்
தைத்தபோது
ரோஜாவாய்
மலர்ந்தேன்
உன் முகத்திரை
விலகுவதால்
ஆகப்போவது
என்ன,
குருடர்களின்
கண்கள் மீது
குருட்டுத்தன்மையே
திரையாக
இருக்கும்போது?
‘திரை
விலகியபோது
என்ன
கண்டாய்?’ என்றேன்
‘நெற்றி
புருவம் கண்கள்
கன்னம்
மூக்கு வாய்’
என்றார்
தத்துவஞானி…
‘முகம்’
என்றான்
காதலன்.
உன்னை
அடைந்ததும்
தொடங்குகிறது
உன்னுடன்
செல்வது...
’எங்கே
போகிறோம்?’
என்பதற்கு
ஒரே விடை
நீதான்
உன்னை
அடைந்த பின்போ
பயணம்
மட்டும் உள்ளது
எங்கே
என்பது இல்லை.
கைகோர்த்து
நடக்க
காதலி
அழைக்கும்போது
எங்கென்று
கேட்பவன்
காதலன்
அல்ல
உன் பெயரை
உச்சரிக்கும்
போதெல்லாம்
உன் முகத்திரையை
முத்தமிடுகிறேன்.
No comments:
Post a Comment