Wednesday, June 6, 2012

கிணற்றுப் பாதை




”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? –என்னை
விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பல”
கீச்சுக்குரலில் ஒரு பெண் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பழைய திரைப்பாடல் நியாபகம் வந்தது, நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்கள் ‘BANDIT QUEEN’ திரைப் படத்திற்காக இசையமைத்துப் பாடிய ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது. அந்தப் பாடலும் கணவனைப் பிரிந்த ஓர் இளம் மனைவியின் மனவேதனைகளை வெளிப்படுத்துகிறது. ’என் கணவனோ அயல் தேசம் சென்றான்” (மோரே சய்யான் தொ ஹே(ன்) பர்தேஸ்) என்று பல்லவி தொடங்கும் அந்தப் பாடலை ‘தேஸ்’ ராகத்தில் இசையமைத்துப் பாடியுள்ளார் நுஸ்ரத்!

”கார்காலம் வந்தது தூரலுடன்
காதலின் காலம் வந்துவிட்டது
அழகிய இளம்பெண்ணே!
கரிய மேகங்கள் வந்துவிட்டன
கிறுகிறுத்துத் திரண்டு வந்தன பார்
மந்தார நீல மேகங்கள்
என் ஆடைகளைப் படபடக்கச் செய்கிறது
குளிர்ந்த மழைக்காற்று இன்று
பூக்களின் திரை நனையும் இந்த இயற்கையில்
என் இதயம் எரிகின்றது...
என் கணவனோ அயல் தேசம் சென்றான்
இந்த மழைப் பருவத்தை என்ன செய்வேன் நான்?
காதலன் இல்லாது வெறுமையாகிவிட்டது உலகம்
நான் அவனையே தேடிக்கொண்டிருப்பேன்”

இப்பாடல் வெளிப்படுத்தும் உணர்வின் வேர் மிகவும் தொன்மையானது. முதன்மையான இலக்கியங்கள் என்று இந்திய மொழிகளில் கிடைக்கும் பாடல்களில் அந்த வேர் உயிர்த்துடிப்புடன் இருப்பதைக் காணலாம். தமிழில் அது ஈராயிரம் ஆண்டுகள் தொன்மையான சங்க இலக்கியமாக நம்மிடம் உள்ளது. இப்பாடலின் வரிகள் குறுந்தொகைப் பாடலைப் போலவே ஒலிக்கின்றன. கணவனின் வரவிற்காகக் காத்திருக்கும் இளம் மனைவியின் ஏக்கத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் நூற்றூக் கணக்கில் சங்க நூல்களில் உள்ளன. ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருள் சார்ந்த அந்தப் பாடல்கள், முல்லை நிலத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட அந்த அகச்சித்திரங்கள், கார்காலத்தையே தலைவனின் வருகைக்கான காலமாகச் சொல்கின்றன. அதே கார்காலத்தைத்தான் நுஸ்ரத்தின் பாடலும் பின்னணியாகக் கொண்டிருக்கிறது.

நுஸ்ரத் பாடியுள்ள இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. கதீல் ஷிஃபாயி இதே வரியில் தொடங்குவதாக எழுதியுள்ள வேறு ஒரு பாடலும் உள்ளது. அவ்வாறு புகழ்பெற்ற ஒரு வரியை வைத்துத் தொடங்கி எழுதுவது ஒருவித கவிமரபு. பாபா புல்லே ஷாஹ் எழுதிய “ராஞ்சா ராஞ்சா கர்தி ஹூன் மெய்(ன்)” என்னும் சூஃபிப் பாடலின் வரியை வைத்துத் தொடங்கி குல்ஸார் சமீபத்தில் ஒரு பாடல் எழுதினார் ‘ராவன்’ திரைப்படத்தில்! நுஸ்ரத் பாடியுள்ள இப்பாடலும் மரபான ஒரு பாடலாகவே இருக்கவேண்டும்.

ஆண்-பெண் காதலை அடிப்படையாக வைத்து இவ்வாறு பல்லாயிரம் பாடல்கள் இந்த மண்ணிலே எழுதப்பட்டுள்ளன. அவை ஏன் எழுதப்படுகின்றன? அவற்றின் தேவை என்ன? மனித உணர்வுகளில் மிகவும் ஆழமான ஓர் உணர்வை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்பதில் எதை அடைகின்றன? மனித உணர்வுகளின் ரகசியம் என்ன என்பதை அறிந்துவிடத் துடிக்கும் மனங்கள்தான் இப்பாடல்களை எழுதியிருக்கின்றன. தெய்வீகத்தின் சுவை இந்த உணர்வில் இருப்பதை அனுபவிக்கும் பேறு அருளப்பட்ட மனங்கள்தான் இவற்றை மீண்டும் மீண்டும் சிலாகித்து வருகின்றன.

ஆரம்ப காலங்களில் பெயர் குறிப்பிடாமல்தான் இந்த அகப்பாடல்கள் எழுதப் பட்டுள்ளன. ஒரு காதலன் ஒரு காதலி / ஒரு கணவன் ஒரு மனைவி, அவ்வளவுதான். அவற்றை எழுதியவர்களும் மனித உணர்வுகளை வியப்பவர்களாக, கொண்டாடுபவர்களாக இருந்திருக்கிறார்களே தவிர ஆன்மிகப் பார்வை கொண்டவர்கள் அல்ல. ஆனால் இறைக்காதலைச் சொல்லும் ஒரு கருவியாக இந்த மனிதக் காதலை ஆன்மிகம் எடுத்துக் கொண்டபோது அதற்கென்று முன்மாதிரிக் காதலர்கள் (PROTOTYPE LOVERS) உருவாக்கப் பட்டார்கள். இந்தியாவில் அப்படி உருவாகி வந்த மிகப் பழமையான காதலர்கள் கண்ணன்-ராதை ஜோடிதான். கவிதையும் இசையும் கலந்து மீண்டும் மீண்டும் இந்த இணையைப் பாடிப் பரவசமடைந்துள்ளன. “மோரே சய்யா(ன்) தொ ஹே(ன்) பர்தேஸ்” என்னும் இப்பாடலும் கண்ணன் – ராதை ஜோடியை வைத்து எழுதப்பட்டதாக இருக்கக்கூடும்.

கணவனைக் குறிக்கும் சொற்களான சய்யா(ன்), பாலம், சான்வரியா, சஜன், பியா போன்றவை இப்பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. கோயல் (குயில்), மோர் (மயில்), தோத்தா (கிளி) போன்ற பறவைகளின் பெயர்களும் வசந்த காலம் மற்றும் கார்காலத்தைக் குறிக்கும் சாவன், பஸந்த் போன்ற பெயர்களும், பெண்ணின் அணிகலன்களையும் ஆடையையும் குறிக்கும் பாயல், ஆன்ச்சல், கூங்கட் போன்ற சொற்களும் இப்பாடல்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம் ஒன்றில் நிகழ்வது போன்ற உணர்வை எழுப்புகின்றன.

இதே பாணியில் அமைந்த இன்னொரு மரபுப் பாடல்: ‘சாவன் பீதோ ஜாயே பிஹர்வா’ (கார்காலம் கடந்து போகிறது, கணவனே!). இப்பாடலும் பல்வேறு கலைஞர்களால் பாடப்பட்டு வந்துள்ளது. TABEER என்னும் ஆல்பத்தில் ஷஃபகத் அமானத் அலீ இப்பாடலை ஃகமாஜ் என்னும் ராகத்தில் பாடியிருக்கிறார். (கேட்க: http://www.youtube.com/watch?v=PQm7-m0vqNk )

”கார்காலம் கடந்து போகின்றது, கணவனே!
என் மனம் அஞ்சுகிறது...
இப்படி என்னை விட்டுச் சென்றாய் அயல்தேசம்
நிம்மதி கூடவில்லை ஒருபோதும்
என் அன்பன் பேசவில்லை என்னுடன்
நான் ஆயிரம் தந்திரங்கள் செய்து தோற்றேன்
நீ இல்லை எனில், நேசனே!
நான் ஆளற்ற அறை போல் ஆனேன்
பாதை பார்த்து உறைந்திருக்கும் விழிகளில்
கண்ணீர் தளும்ப வைக்காதே
என் நேசத்தின் ஆழம் என்ன என்று
ஒருபோதும் நீ அறியமாட்டாய் போலும்
அன்பனே! நான் இல்லாமல் போகும்போது…
அப்போதுதான் வருவாயோ, சொல்?”

இது போன்ற பாடல்கள் என்ன ஆன்மிகக் கருத்துக்களைச் சொல்கின்றன? இப்பாடலில் தத்துவச் சொல்லாடல்கள் எதுவுமே இல்லையே? என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதுபோன்ற சூஃபிப் பாடல்கள் ஏராளம் உள்ளன. இப்பாடல் பிரிவைப் பற்றிப் பாடுகிறது என்று பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது. பிரிவு (ஹிஜ்ர்) உண்டாக்கும் மனவேதனையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. இறைவனின் ஒளிச்சுடர்கள் பாய்வது தடைப்பட்ட நிலையில் மனம் சுருங்கி, சுணங்கிக் கிடப்பதை சூஃபிகள் ’கப்ள்’ என்று கூறுவார்கள். இதற்கு எதிரான நிலை, இறைவனின் உள்ளுதிப்புக்கள் இதயத்தில் நிறைந்து விரிவடையும் மனநிலை ‘பஸ்த்’ எனப்படும். இந்த இரண்டு மனநிலைகளுமே இறைவனால்தான் உண்டாகிறது.
“அல்லாஹ்தான் சுருங்கச் செய்கின்றான்
மற்றும் விரிவாக்குகின்றான்”
(அல்லாஹு யக்பிளு வ யப்சுத் – 2:245)

”கார்காலம் கடந்து போகின்றது, கணவனே!
என் மனம் அஞ்சுகிறது...
(சாவன் பீதோ ஜாயே பிஹர்வா மன் மோரா கப்ராயே)
பல விஷயங்களில், உலகின் பராக்குகளில் ஆயுள் காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஞானம்/ முக்தி – விலாயத் கைகூடவில்லை. தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தை போல் இறையொளியின் சுடர்கள் ஊட்டப்படாமல் இதயம் தவிக்கின்றது.

இப்படி என்னை விட்டுச் சென்றாய் அயல்தேசம்
நிம்மதி கூடவில்லை ஒருபோதும்
(ஏசோ கயே பர்தேஸ் பியா தும்/ ச்செய்ன் ஹமே(ன்) நஹி ஆயே)
இறைத் தொடர்பின் உணர்வு தடைப்பட்டுவிட்டது. உண்மையில் மனம்தான் உலகத்தின் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. படைப்புக்கள் தெரிகின்றன, படைத்தவனின் அகதரிசனம் மறைந்துவிட்டது. இந்த நிலையில் நிம்மதி என்பதே இல்லை.

என் அன்பன் பேசவில்லை என்னுடன்
நான் ஆயிரம் தந்திரங்கள் செய்து தோற்றேன்
(மோரே சய்யா(ன்) மோசே போலே நா / மெய்(ன்) லாக் ஜதன் கர் ஹாரி)
உறவாடல் என் வசத்தில் இல்லை. அது அவன் இஷ்டத்தில் இருக்கிறது. அவன் நாடினால்தான் எல்லாம் நடக்கும். நாமாக அவனை அடைய இயலாது. அவன் உறவைப் பெறும் விஷயத்தில் அறிவு ஆயிரமாயிரம் தந்திரங்கள் செய்து தோற்றுப் போய்விட்டது. அவன் பகுத்தறிவின் எல்லைகளுக்குள் பிடிபடாமல் அப்பால் இருக்கிறான்.

நீ இல்லை எனில், நேசனே!
நான் ஆளற்ற அறை போல் ஆனேன்
(தூ ஜோ நஹி தொ எய்சா பியா ஹம்/ ஜெய்சே சூனா ஆங்கனா)
சரணாகதி! அறிவு தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டபின் பணிவு உருவாகிவிட்டது. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் – இறைவனைக் கொண்டே தவிர ஆற்றலும் இல்லை சக்தியும் இல்லை. இறைவா! உனக்குத் தேவைகள் ஏதுமில்லை (அல்லாஹுஸ் ஸமது) உனக்கு நான் தேவையில்லை, ஆனால், எனக்கு முழுமுதல் தேவையே நீதான். நீ இல்லாத நான் ஆள் இல்லாத காலி அறைதான். அது விரைவில் பாழடைவது திண்ணம். அறை இருக்கிறதே என்று மகிழ முடியாது. அதில் யாரும் குடியில்லை என்றால் அந்த அறை இருப்பதில் அர்த்தமில்லை. பின் எதற்காக அது கட்டப்பட்டது? அதுபோல், நான் இருக்கிறேன் என்று நான் மகிழ முடியாது. என்னில் நீ இல்லை என்றால் நான் இருப்பதற்கு அர்த்தம் ஏது? பின் எதற்காக நான் படைக்கப்பட்டேன்?

பாதை பார்த்து உறைந்திருக்கும் விழிகளில்
கண்ணீர் தளும்ப வைக்காதே
(நய்ன் திஹாரி ராஹ் நிஹாரே / நய்னன் கோ தர்சாவோ நா)
பாதை (சிராத்/ தரீக்கா) இருப்பதில் மட்டும் நான் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்? எல்லோரும் இங்கே மகிழ்ச்சியாக அதில் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த பாதை இருப்பது தாங்கள் நடப்பதற்குத்தான் என்று நினைக்கிறார்கள். இந்தப் பாதையில் நீனும் நானும் கைகோர்த்து நடந்திருந்ததை நான் எப்படி மறப்பேன்? பாதையில் என் பார்வை நிலைகுத்தி நிற்கிறது. பாதையில் உன்னைக் கண்டால்தான் நான் மகிழ்ச்சி அடைய முடியும். அன் தஃபுதல்லாஹ கஅன்னக தராஹு – ’அல்லாஹ்வை வணங்கு நீ அவனைப் பார்ப்பதைப் போல்’ என்று நபி(ஸல்) சொன்ன இஹ்சான் என்னும் நிலையை எனக்குக் கொடு. நிராசயில் என் கண்கள் அழும்படிச் செய்துவிடாதே. புன்னகை மலரச் செய். ஏனெனில் அழ வைப்பதும் சிரிக்க வைப்பதும் நீயே!
”திண்ணமாக அவனே
சிரிக்கவும் அழவும் வைக்கின்றான்”
(வ அன்னஹூ ஹுவ அள்ஹக வ அப்கா – 53:43) 


என் நேசத்தின் ஆழம் என்ன என்று
ஒருபோதும் நீ அறியமாட்டாய் போலும்
அன்பனே! நான் இல்லாமல் போகும்போது…
அப்போதுதான் வருவாயோ, சொல்?”
(ப்யார் துமே கித்னா கர்தே ஹே(ன்)/ தும் எ சமஜ் நஹி பாவோகே
ஜப் ஹம் ந ஹோங்கே தொ பிஹர்வா/ போலோ க்யா தப் ஆவோகே)
விஷயம் பிடிபட்டுவிட்டது. நீ ஏன் தாமதம் செய்கிறாய் என்று தெரிந்துவிட்டது. இறுதியாக நான் ஒரு தந்திரம் செய்கிறேன். உன்னை மிகவும் ஆழமாக நேசிப்பதாகச் சொல்கிறேன். உனக்காக ஈருலகையும் துறந்து விட்டதாகச் சொல்கிறேன். இதெல்லாம் நீ அறியாததா என்ன? நீ சொல்கிறாய், ‘இந்தப் பித்தலாட்டம் எல்லாம் என்னிடம் செல்லாது. நீ எனக்காகத் துறந்தவை நீ அல்ல. எனக்காக உன்னையே எப்போது துறக்கப் போகிறாய்.’ உன் கொள்கை அதுதான். நீ இருக்கவேண்டும், என்னை இல்லாமல் ஆக்க வேண்டும்.

மௌலானா ரூமியின் அற்புதமான வரி ஒன்று இங்கே நினைவில் எழுகின்றது:
“சூரியனைக் காதலித்த நிழல் அது வரும்போது நிற்குமா?”

இப்பாடல்களின் இன்னொரு முக்கியமான அம்சம் இவற்றின் மொழி. உருதுவோ ஹிந்தியோகூட அல்ல, இவை ப்ரிஜ்பாஷா என்னும் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஹிந்திக்கு முன்னோடியான மொழிகளில் மிக முக்கியமானது ப்ரிஜ்பாஷா. சம்ஸ்க்ருதம் தத்துவச் செழுமை கொண்ட மொழியாக இருந்தது என்றால் ப்ரிஜ்பாஷா எளிய கிராமிய வாழ்வின் மொழியாக இருந்தது. எனவே தத்துவச் சுமை இல்லாமல் நேரடியாக மனதைப் பிசையும் காதல் சுவையை வெளிப்படுத்தும் பாடல்களை எழுதுவதற்கு இம்மொழி தேர்ந்த கருவியாகிவிட்டது. தும்ரி, ஃகயால், தாத்ரா, கஜ்ரி, பிலூ போன்ற ஹிந்துஸ்தானி இசைவடிவங்களில் அவை வெளிப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களுமாக இசைக்கலைஞர்கள் பண்டிட் என்றும் உஸ்தாத் என்றும் முறையே அழைக்கப்படுபவர்கள் இந்த மரபை பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்தார்கள். அக்பரின் அவையில் ஒரு ரத்தினமாக ஜொலித்த மியான் தான்சேன் இந்த நெடிய மரபில் வந்த ஒரு விழுது மட்டுமே. ஆனால் அவரிலிருந்து இந்த மரபிற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு வரலாறு கிடைத்திருக்கிறது.

அவ்வழியில் வந்த பல பாடல்கள் என் நெஞ்சில் அலையடிக்கின்றன:
‘ஆனந்த முக சந்த்’ (மகிழ்ச்சியான நிலா முகம்), ‘மன் ஹரன் ச்சலே நந்தராஜு’, ‘பான்சுரி பாஜ் ரஹீ துன் மதுர் கண்ஹையா’ (குழலில் இனிய கானம் இசைக்கிறான் கண்ணன்), ’போலோ ரே பபீஹா’ (சொல் என் செல்லக் கிளியே!) – மியான் தான்சேன் இசையமைத்தவை என்று அவரின் பரம்பரையில் வந்த சரோத் கலைஞர் உஸ்தாத் அலீ அக்பர் ஃகான் மீட்டுக் கொடுத்தவை. இவற்றை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். (ஆல்பம்: LEGACY)

”நயன் கி மத் மாரோ தல்வரியா” (விழிகளின் வாள் வீசாதே), ’திவானா கியே ஷாம் கியா ஜாதூ டாலா’ (என்னவொரு மாயம் செய்துவிட்டான் கரிய கண்ணன்!), ’மத் சே பரே தோரே நய்ன்’ (மயக்கம் நிறைந்த உன் கண்கள்), ’ஏ மா பியா நஹி ஆயே காலி பதரியா பர்சே’ (அம்மாவே! கணவன் வரவில்லை, கார்மேகங்கள் பொழிந்தன), ’ஆவோ பியா மோரே ஆவோ ஜீ நா ஜாவோ ரத்தியா’ (வா துணைவனே வா, இந்த இரவு வாழ்க!) - கிரிஜா தேவியின் குரலில் ’தும்ரி’கள்.

‘கா கரூ(ன்) சஜ்னி ஆயே ந பாலம்’ (என்ன செய்வேன் தோழி, கணவன் வரவில்லையே?) – உஸ்தாத் படே குலாம் அலீ ஃகான் இயற்றி இசையமைத்துப் பாடிய உலகப் புகழ் பெற்ற பாடல். ‘ஸ்வாமி’ என்னும் படத்தில் இப்பாடலை ஜேசுதாஸ் பாடினார், அவருடைய தேன் குரலில். ஆனால் அதில் படே சாஹிபின் பாணி இல்லை. படே சாஹிபின் இசைமரபில் வந்த பண்டிட் அஜய் சக்ரபொர்த்தி  இதே பாடலை அவரது இசைப்பள்ளிக்கு அடையாளமான வேகமான பிர்க்காக்களுடன் அற்புதமாகப் பாடியிருக்கிறார். (’ஹே ராம்’ படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலில் இவரின் திறமையை நீங்கள் உணரலாம்.)

’சூஃபி இசையின் சிகரம்’ என்று சொல்லத்தகும் உஸ்தாத் நுஸ்ரத் ஃப்தேஹ் அலீ ஃகான் அவர்கள் கவ்வாலி பாணியிலும், நவீன பாடல்களின் பாணியிலும் இத்தகைய பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
“வியாகுல் ஜியரா ச்செய்ன் பாயே நா” (வியாகூலம் பெருகும் என் நெஞ்சம் நிம்மதி அடையவில்லை)
“பியா ரே பியா ரே தேரே பினா லாகே நாஹி மோரா ஜியாரே” (அன்பனே! அன்பனே! உன் பிரிவில் என் நெஞ்சம் நிலைகொள்ளவில்லை)
“சான்வரே தோரே பின் ஜியா ஜாயே நா” (நேசரே! நீங்களன்றி உயிரில் உறுதியில்லை)
”பாலம் கர் நஹி ஆயே”, “மோஹெ பியா பின் கர் நஹி ஆயே” (கணவன் இல்லம் வரவில்லை)
“மேரா பியா கர் ஆயா ஓ லால்னி” (என் கணவன் வீடு வந்தான், தோழியே!)

கலை மற்றும் ஆன்மிக ரீதியாக இன்னொரு வரலாற்றுக் கோணமும் இங்கே கவனிக்கத்தக்கது. இஸ்லாம் வடக்கே இந்தியாவிற்குள் வந்தபோது ஏற்பட்ட ஒரு மலர்ச்சி அது. இஸ்லாத்தை இங்கே எடுத்து வந்தவர்கள் சூஃபிகள். குறிப்பாக சிஷ்தியா தரீக்காவினர். அஜ்மீரில் ஆன்மிக அரசோச்சும் ஹழ்ரத் ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் வாயிலாகவே அந்த வருகை நிகழ்ந்தது. சிஷ்தியா ஆன்மிகப் பள்ளியில் இசையை இறைதியானத்திற்குப் பயன்படுத்துவது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏற்கனவே ஆன்மிக ரீதியாக இங்கே இசை கனிந்திருந்த நிலையில் அந்த இசை மரபை இலகுவாகவே சிஷ்தியா தரீக்கா தழுவிக்கொண்டது. அவர்கள் அரபி – பாரசீக மரபில் இருந்து கஜல் வடிவத்தைக் கொண்டுவந்தார்கள். இசைக்கருவிகளில் இங்கே ’பக்கவாஜ்’ இருந்தது. பாரசீக மரபிலிருந்து தப்லா கிடைத்தது. இங்கே வீணை இருந்தது. பாரசீக மரபிலிருந்து ரபாப் உருமாறி சரோத் கிடைத்தது. இங்கே பஜன் இருந்தது. சிஷ்தியாக்களின் வருகையில் அது உருமாறி ’கவ்வாலி’ பிறந்தது. ப்ரிஜ்பாஷா, சிந்தி, போஜ்பூரி, ராஜஸ்தானி, பஞ்சாபி போன்ற மொழிகளுடன் ஃபார்சியும் அரபியும் கலந்ததில் உருது பிறந்தது. (உருது என்றால் ’படை மொழி’ அல்லது ’சந்தை மொழி’ என்று பொருள்.) உருதுவில் ஒரு சொலவடை உண்டு:
ஜப் தோ தல்வாரேன் டக்ராத்தே ஹே(ன்)
தோ தெஹ்ஸீப் மில்தீ ஹைன்
(இரண்டு வாள்கள் மோதும்போது இரண்டு பண்பாடுகள் சந்திக்கின்றன!).

(தொடரும்...) 

No comments:

Post a Comment