Thursday, October 7, 2010

மதப் பிரச்சார பஜார்!

"பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலி செய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது:
'இயேசு சீக்கிரம் வருகிறார்'
இன்னொன்று சொன்னது:
'hmt வாட்சுகள்
உங்கள் நேரத்தைச்
சரியாகக் காட்டும்"
                               - நாகூர் ரூமி ('நதியின் கால்கள்')

கிறித்துவ மிஷனரிகளின் பிரச்சார உத்திகளை எல்லாம் இப்போது வஹ்ஹாபி முஸ்லிம்களும் கைக்கொண்டு வருகிறார்கள் என்பதைக் காணமுடிகிறது. சுவர்களையும் இந்தப் பிரச்சார வேகம் விட்டுவைக்கவில்லை. பள்ளிகளின் சுவர்களில் (அதாவது கல்வி நிலையங்களின் சுவர்களில்) வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அரசு பள்ளிகள் என்றால் திருக்குறள் எழுதப் பட்டிருக்கும். கிறித்துவப் பள்ளிக்கூடச் சுவர்களில் பைபிள் வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். அந்த உத்தியை இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குக் கையில் எடுத்துள்ளார் எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வஹ்ஹாபி அழைப்பாளர்.

சில வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் முளைத்தது "காஜா நகர் தொண்டு நிறுவனம்." சில மாதங்கள் உறுப்பினர்கள் சேர்க்கும் தொண்டு நடந்தது. அதற்காக மீட்டிங்குகள் போட்டார்கள்.என்னையும் அழைத்தார்கள். எனக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி என்பதாலும், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதாலும் நாட்டின் நலன் கருதி இன்று வரை அதில் நான் இணையவில்லை. பிறகு சில மாதங்கள் சாக்கடை கட்டுதல், வேகத்தடைகள் போடுதல், மரம் நடுதல் போன்ற தொண்டுகளை இயக்கம் செய்துவந்தது. பின் மெல்ல மெல்ல தொண்டர்கள் ஒதுங்கிக் கொள்ள, இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான மேற்படி அழைப்பாளர் மட்டும் இப்போது ஒன் மேன் ஆர்மியாகத் தொண்டு செய்து வருகிறார். அவர் செய்யும் தொண்டு என்னவெனில் வீட்டுச்சுவர்களில் திருக்குர்ஆன் வசனங்களை எழுதிவைப்பதுதான். ஒவ்வொரு முஸ்லிம் வீட்டுச் சுவரும் இஸ்லாமியப் பிரச்சாரப் பலகையாகத் திகழ வேண்டும் என்னும் நோக்கில் அவர் செயல்படுவதாகப் படுகிறது.

திருக்குறளாவது இரண்டு அடிகள்தான். சர்ச்சுகளிலும் கிறித்துவப் பள்ளிகளிலும் எழுதப்பட்டுள்ள சுவர் வாசகங்கள்கூட ஓரிரு வரிகள்தான் இருக்கும், "நானே பாதையும் ஜீவனுமாய் இருக்கிறேன்" என்பதுபோல். சுவர் எப்படிப் பாதையாக முடியும் என்று கூட நான் அதைப் பார்க்கும்போதெல்லாம் சிந்திப்பதுண்டு! ஆனால் எங்கள் வீட்டுப் பகுதியில் மேற்படி வஹ்ஹாபி தாயி சுவர்களில் எழுதியிருக்கும் திருக்குர்ஆன் வசனங்களெல்லாம் பத்தி பத்தியாக உள்ளன. நடந்தோ வாகனத்திலோ போகும் போக்கில் அவற்றை முழுசாக யாரும் படித்துவிட முடியாது. சுவர் வாசகங்கள் சுருக்கமாக ஓரிரு வரிகளில்தான் இருக்க வேண்டும்."நோட்டீஸ் ஒட்டாதே", "சிறுநீர் கழிக்காதே" என்பவை எவ்வளவு கச்சிதமாக உள்ளன பாருங்கள். கிறித்துவ மிஷனரி உத்தியை நம் வஹ்ஹாபி தாயி இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று தெரிகிறது. வேகம் இருக்கும் அளவு அவரிடம் விவேகம் இல்லை, எல்லா வஹ்ஹாபிகளையும் போலவே! 'நீங்கள் ஏன் இதை அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாது?' என்று என்னை நீங்கள் கேட்கலாம். நான் மூக்கை நுழைத்தால் என் மூக்கில் பெய்ண்ட் அடித்துப் பிரச்சாரம் செய்துவிடுவார் என்று பயமாக இருக்கிறது. தொண்டு செய்வதில் அவ்வளவு வேகமாக இருக்கிறார்!

தங்கள் வீட்டுச் சுவர்களில் இப்படி எழுதுவதற்கு எப்படி அனுமதிக்கிறார்கள்? என்று கேட்கிறீர்களா? ஏன் அனுமதிக்க மாட்டார்கள்? தங்கள் வீட்டுச் சுவர்களில் "பூச்சொரிதல் விழா", "கண்ணீர் அஞ்சலி", "பூப்பு நீராட்டு விழா", "வாழும் வள்ளுவரே! வணங்குகிறோம்!" என்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்து நொந்து போகும் முஸ்லிம்கள், அதைவிடத் திருக்குரானின் வசனங்கள் தம் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்க விரும்புவார்கள் அல்லாவா? அதுவும் இது ஒரு மார்கத்தொண்டாக வேறு இருப்பதால் அவர்களுக்கு நன்மையையும் சேருமே! நன்மையைக் கொள்ளையடிப்பதில்தான் ஒவ்வொரு முஸ்லிமும் கஜினி முகமதுக்குப் பாட்டனாக இருக்கிறானே. இப்படிப் புதிய உத்திகளில் நன்மையைக் கொள்ளையடிப்பது நபித்தோழர்களும் அறியாத ஒன்றல்லவா?

தலைவர் என்பவர் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதால் மேற்படி தாயி தன் வீட்டிலும் இரண்டு சுவர்களில் இரண்டு பத்திகள் எழுதிவைத்துள்ளார். ஆனால் இதற்கெல்லாம் குரான்-ஹதீஸில் ஆதாரம் இல்லையே? என்று அவரிடம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. நான்தான் வஹ்ஹாபி இல்லையே? இப்படியாகப் பத்து பன்னிரண்டு வீட்டுச் சுவர்களில் திருக்குர்ஆன் வாசகங்கள் மிளிர்கின்றன. தெருவில் நடந்தால் ஏதோ மதப் பிரச்சார பஜாருக்குள் நடப்பதுபோல் தோன்றுகிறது!

நான் குடியிருக்கும் வீட்டின் பக்கச் சுவற்றிலும் பெய்ண்ட் அடித்து ஒரு வசனம் எழுதியுள்ளார். "அல்லாஹூவே எழுதக் கற்றுக் கொடுத்தான்" என்பதை "அல்லாஹீவே எழுதக் கற்றுக் கொடுத்தான்" என்று எழுதப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நான் தமிழ் விரிவுரையாளர். சரிபார்க்கும்படி என்னிடம் கேட்டிருக்கலாம். ஒரு வார்த்தை பேசவில்லை. இப்படிப் பல எழுத்துப் பிழைகள். அல்லாஹூவே இப்படித் தப்புத் தப்பாக எழுதக் கற்றுக்கொடுத்தான் என்று சொல்லவருகிறார் போலும்! போகட்டும். ஆனால் கருத்துப் பிழைகளும் உள்ளன. "உம்மைப் படைத்த இறைவனின் பெயரால் படிப்பீராக!" என்று முதன் முதலில் இறக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தைப் போட்டுள்ளார். அரபி மூலத்தில் "இக்ற'" என்ற பதம் உள்ளது. ஏவல் வினைச்சொல். "ஓதுவீராக" அல்லது "தொனிப்பீராக" என்றுதான் இது பொருள்படும். நபிகள் நாயகமும் எழுதப் படிக்கத் தெரியாத "உம்மீ" என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வஹ்ஹாபியின் மேற்படி மொழிபெயர்ப்பு இதற்கு முரண்படுகிறது. தன் வஹ்ஹாபியக் கருத்தை வலியுறுத்துவதற்காக வேண்டுமென்றே செய்த வினை இது. அதாவது, அவர்கள்தான் திருக்குரானைப் படித்துக் கிழிப்பவர்களாம்!

மேற்கு நாடுகளில் சுவர்களில் எழுதுவதை ஒரு கலையாகவே ஆக்கியுள்ளார்கள். "GRAFFITI " என்று அழைக்கப்படும் சுவர் ஓவியங்கள் அல்லது சுவரெழுத்துக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ரோம் நாட்டில் தோன்றிய ஒரு கலை வடிவமாகும். அரசியல் வாசகங்கள், போராட்ட முழக்கங்கள், கவிதைகள் போன்றவை அனைத்தும் இந்த சுவரோவியங்களில் ஒரு கலையாக உருவெடுக்கின்றன. அமெரிக்காவின் சாலைகளில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாபிஸ், ரூமி போன்றோரின் கவிதைகள்கூட இவ்வாறு எழுதப்படுகின்றன.



பாலஸ்தீன், இராக் போன்ற நாடுகளில் திருக்குர்ஆன் வசனங்கள் நவீன பாணியில் சுவரோவியங்களாக எழுதப்படுகின்றன.
திருக்குர்ஆன் வசனங்களைச் சித்திரவியல் எழுத்துக்களாக - CALLIGRAPHY - கட்டிடங்களில் எழுதிவைப்பது இராக், இரான், துருக்கி, அப்கானிஸ்தான் மற்றும் முகலாய இந்தியாவில் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கலையாகும்.



எங்கள் வீட்டுப் பகுதியில் உள்ள சுவர்களில் இது போன்ற கலையம்சமான எழுத்துக்களை உருவாக்கியிருந்தாலாவது ஒரு அழகியல் தோன்றியிருக்கும். ஆனால் மேற்படி அழைப்பாளருக்கும் அழகியலுக்கும் ரொம்ப தூரம். அவருக்குத் தேவை எல்லாம் பிரச்சாரம்தான், கலை அல்ல. 

இது புனிதங்கள் கவிழ்க்கப்படும் காலம் என்று கூறுகிறார்கள். கட்டமைப்புக்களைக் கலைத்துப்போடும் பின்-நவீன சிந்தனைகளின் தாக்கம் எல்லாத் துறைகளிலும் உள்ளது. எல்லா மதங்களிலும் தன் வேலையைக் காட்டுகிறது. இல்லையென்றால் வஹ்ஹாபியம் இத்தனை வலுவாக இருபதாம் நூற்றாண்டில் தலை தூக்கியிருக்க முடியாது. ஆனால் வஹ்ஹாபியம் என்பது ஹிப்பிகளைப் போன்ற ஒரு இயக்கம் அல்ல. அது இறுக்கமான அமைப்பியலைத் தகர்க்கிறேன் என்று சொல்லி மேலும் இறுக்கமான அமைப்பியலை முன்வைப்பது. திருக்குரானைப் பட்டுத்துணிகளில் சுற்றிப் பரண்மேல் வைத்துச் சாம்பிராணி போடுகிறார்கள் என்று பழமையைக் கிண்டல் செய்த வஹ்ஹாபியம்தான் திருக்குர்ஆன் வாசகங்களைச் சுவற்றில் எழுதமுடியும். "படிப்பீராக" என்பதுதான் அதனுடைய பிரச்சாரம் என்பதால் அரபியில் எழுதாமல் தமிழில் எழுதுகிறது. 

நவீன போக்கின் தாக்கங்களால் மதப்பிரச்சாரம் கையில் எடுத்திருக்கும் இன்னொரு உத்தி டீ-ஷர்ட் வாசகங்களாகும். பொதுவாக நடிகர்களின் படங்கள் அச்சடிக்கப்பட்ட பேன்சி பனியன்களை ரசிகர்கள் அணிந்து உலா வருவதைக் கண்டுள்ளோம். அல்லது அசட்டுத்தனமான வாசகங்கள் உள்ள பனியன்களை ஒரு அதிர்ச்சியூட்டும் உத்தியாக மூளையற்ற இளைஞர்கள் பயன்படுத்துவதைக் கண்டுள்ளோம். புரட்சியின் icon -களான சே குவாரா, காஸ்ட்ரோ போன்றோரின் படங்களை அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான கலாச்சாரத்தில் வளரும் இளைஞர்கள் ஒரு பேஷன் அடையாளமாக டீ-ஷர்ட்டுகளில் போட்டுக்கொள்ளும் நிலையம் உள்ளது.



கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த, அவர்களின் கலாச்சார அடையாளங்களை இசையில் பிரதிபலித்த பாப் மார்லியின் படம் போட்ட டீ-ஷர்ட்டுகளை வெள்ளை இளைஞர்கள் அணிந்துகொண்டு உலவுவதும் அந்த ஐக்கானை நீர்த்துப்போக வைக்கும் ஒரு எதிர்வினை என்றே கூறவேண்டும். 



இந்தப் பிரச்சார உத்தியை முஸ்லிம் வாலிபர்கள் பயன்படுத்துவது இன்று ஒரு பேஷன் ஆகியுள்ளது. தான் ஒரு முஸ்லிம் என்பதைப் பிறருக்குப் பெருமையுடன் காட்டுவதன்மூலம் ஒரு பிரச்சார நேர்வினையைத் தன் இருத்தலிலேயே செய்துவிட முடிகிறது. தொப்பி, தாடி, ஜுப்பா போன்ற கலாச்சார அடையாளங்கள் இல்லாத ஒரு முஸ்லிம் இளைஞனுக்குக் கிடைக்கும் எளிய அடையாளப்படுத்தும் உத்தி டீ-ஷர்ட்தான். இந்த அடையாளம் கழற்றி எறியவும் இலகுவானது!



முஸ்லிம் இளைஞர்களின் டீ-ஷர்ட் பிரச்சாரத்திற்கு எதிர்வினை ஆற்றுகின்ற பிரச்சாரங்களும் உண்டு. இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறும் டீ-ஷர்டுக்களை அணிந்துகொண்டு சுற்றுகின்ற கிறித்துவர்களையோ யூதர்களையோ மேற்கு நாடுகளில் காண்பது அரிதல்ல.



மதப்பிரச்சாரம் கையாளும் இன்னொரு மோசமான உத்தி இயற்கையைச் சீரழித்து அதில் மத வாசகங்களை எழுதிவைப்பது. எத்தனையோ ஊர்களில் எத்தனையோ பாறைகளின் இடுக்கில் சிலுவைகள் நட்டுக்கொண்டு நிற்பதையும், "இயேசு வருகிறார்" வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதையும் நாம் கண்டிருப்போம். பொன்வண்டு சோப்பு, வறுத்த சேமியா போன்ற பளிச் விளம்பரங்களுடன் கைகோர்த்துக்கொண்டு இயேசு விளம்பரங்கள் எழுதப்பட்டிருப்பதும் அதில் வரட்டி அடித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். மலைகளின் அழகில், சாரலில் நனைந்த பாறைகளின் தவக்கோலத்தில் இறைமையை உணர்ந்து கொள்ளமுடியாத சராசரி மனநிலை வேறு என்ன செய்யும்? அதன் மீது தன் மத அடையாளத்தைக் குத்திவைத்து மகிழ்வதுதான் அதற்குத் தெரிந்த ஒரே வழி. இந்த உத்தியையும் வஹ்ஹாபியம் விரைவில் கையிலெடுக்கும் என்று நம்பலாம். ஏக இறைவனின் திருப்பெயரால் இயற்கை கற்பழிக்கப்படுவதைக் காணலாம்!  

5 comments:

  1. நல்ல எழுத்துநடை உங்களுக்கு!

    நிறைய எழுதுங்க தல!

    ReplyDelete
  2. உங்கள் ப்ளாக் தான் நான் follow செய்கிற முதல் ப்ளாக். நிஜமாகவே உங்கள் எழுத்து நடை அருமை. கருத்துகளுக்கிடையில் மெலிதான நகைச்சுவை கடகட வென்று படித்துவிட்டு பழைய பதிவுகளையும் படிக்க தூண்டியது. நான் ஜெயமோகன் இணையதளத்தின் மூலமாகவே இங்கே வந்தேன்.நிறைய எழுதுங்களேன்.

    - செல்வகணபதி

    ReplyDelete
  3. very funny and well written, Rameez!

    ReplyDelete
  4. ///ஆனால் வஹ்ஹாபியம் என்பது ஹிப்பிகளைப் போன்ற ஒரு இயக்கம் அல்ல. அது இறுக்கமான அமைப்பியலைத் தகர்க்கிறேன் என்று சொல்லி மேலும் இறுக்கமான அமைப்பியலை முன்வைப்பது.///

    அப்படியா? சன்னி மார்க்கம் பாதையில் இருந்து விலகி விட்டதாகவும்
    நபிகள் நாய‌கம் ஸல் அவர்கள் கூறிய உண்மையான இஸ்லாத்தைத் தாங்கள்தான் கடைப்பிடிப்பதாகவும் கூடப் பணி செய்த முஸ்லிமா சொன்னார்.வஹ்ஹாபிக்குப் பாதை மாறியவர் அவர்.ஒரு மாற்றத்தை வெளிப்படையாகக் கண்டேன்.தலையை மட்டும் மறைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் அலுவலகம் வருவார்.வந்த பின்னர் அந்தத் தலை மறைப்பையும் எடுத்துவிட்டு எல்லோருடன் சகஜமாகப் பழகி வந்தார்.விகடன் கல்கி எல்லாம் வாசிப்பார்.

    வஹாபிக்கு மாறியவுடன் முழுவதும் உடலை மறைத்து கருப்பு அங்கியை அணிந்து கொண்டார். எப்போதும் திருகுரானை மேசை மீது வைத்துக்கொண்டு
    சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வாசிப்பார். அருகில் செல்பவர்களிடம் திருகுரானைப் புரட்டி ஏதாவது ஒரு வரியைப் படித்துக் காண்பிப்பார்.தன்னுடைய 10 வயது 8 வயது பெண்களையும் அங்கி மாட்ட வைத்துவிட்டார்.பெரும் செலவில் குடும்பத்தோடு ஹஜ் போய் வந்துவிட்டார்.

    ReplyDelete
  5. ஏக இறைவனின் திருப்பெயரால் இயற்கை கற்பழிக்கப்படுவதைக் காணலாம்!
    //சாட்டையடி சார் //

    ReplyDelete