Tuesday, October 5, 2010

மதப் பிரச்சார அராஜகம்!

எல்லாவற்றிலும் பிரச்சாரத் தன்மை தலைதூக்கியுள்ள காலமிது. "வியர்வை உலர்வதற்கு முன் கூலியைக் கொடுங்கள்" என்றார்கள் நபிகள் நாயகம். வியர்வை உலர்வதற்கு முன் சரக்கை விற்றுவிடுங்கள் என்பது இன்றைய வியாபார மந்திரமாக உள்ளது. பிரச்சாரத்திலும் விளம்பரத்தன்மை காட்டமாக ஏறியுள்ளது. முகத்தில் அறைவது போன்ற பிரச்சாரங்கள். மதங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. விளம்பரத் தன்மையை அவை அவசியம் என்று கருதுகின்றன.

எங்கள் கல்லூரியின் மீலாது விழாவிற்கு மவ்லவி.சம்சுதீன் காசிமியை அழைத்திருந்தோம். திருக்குரானின் அறிவியல் சிந்தனைகள், முஸ்லிம் விஞ்ஞானிகள் என்ற போக்கில் நகர்ந்த அவருடைய பேச்சில் மாணவர்களுக்கு அவர் ஒரு அறிவுரையை வழங்கினார். சென்னையில் அவருடைய வழிகாட்டுதலில் சில மாணவர்கள் அவ்வாறு "தாவா" - அழைப்புப் பணி ஆற்றி வருகிறார்களாம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பள்ளிவாசலில் இரண்டு விடுத்தம் தொழுதுவிட்டு மருத்துவமனைகள் நோக்கிச் செல்லவேண்டுமாம். அங்கே அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். அவர்கள் மீது ஓதி ஊத வேண்டுமாம். தலையைத் தடவிப் பரிவாக விசாரிக்க வேண்டுமாம். இப்படியெல்லாம் செய்தால் அவர்கள் மனம் நெகிழ்ந்து இஸ்லாத்தைத் தழுவுகின்ற வாய்ப்பு உள்ளதாம்! மேலும், 'ஒரு நோயாளியை நலம் விசாரிப்பதற்குச் செல்பவன் இறைவனின் பாதையில் அறப்போர் புரிபவனைப் போன்றவனாவான்.' என்னும் ஹதீதுக் கருத்தையும் கூறினார். சரிதான், அகப்போர் புறப்போர் சார்ந்த அறப்போர் பற்றிய தெளிவுகள் இன்றி வெறும் அக்கப்போர்கள் நடந்துவரும் இந்தக் காலத்தில் இவ்வாறு கூறிக்கொண்டு நீங்கள் மருத்துவமனைகளுக்குள் நுழைந்தால் நிச்சியமாகக் கம்பி எண்ணுவீர்கள்!

ஏற்கனவே கிறிஸ்துவ ஆஸ்பத்திரிகளில் பாதிரிகளோ சிஸ்டர்களோ வந்து பைபிள் படித்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். பொது மருத்துவமனைகளில் 'சமயப் பன்மியம்' நிலவவேண்டும் என்பதால் எல்லா மதத்தினரும் புகுந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் நிலைமை என்னாகும்? நோயாளிகள் ஒவ்வொரு மதத்தையும் பார்ட் டைமில் தழுவிக் கொண்டிருப்பார்களோ? பிறகு நாத்திகர்களும் உள்ளே புகுந்து "கடவுளாவது வெங்காயமாவது" என்று பிரச்சாரம் செய்வார்கள் அல்லவா?

மிஷனரித் தன்மை ஆன்மீகத்தில் புகுந்தவுடனே அது மத அரசியலை உருவாக்கிவிடும். சீக்கிரமே ஆன்மிகம் 'பரிசுத்த ஆவி' ஆகிக் காணாமல் போய்விடும். 'ஆள் பிடிக்கும் வேலை' என்பது ஒரு தரகுத் தனத்தையும் கொண்டுவந்துவிடும். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

இப்போதெல்லாம் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மதப் பிரச்சாரம் செய்கிறார்கள்! இது மதப் பரப்பியலுக்கு ஒரு கேளிக்கைத் தன்மையைக் கொடுத்திருக்கிறது. மாணவர்கள், குறிப்பாக வஹ்ஹாபிக் கொள்கையில் இருப்பவர்கள் இது போன்ற படங்களையும் சி.டிக்களையும் என்னிடம் அவ்வப்போது கொண்டுவந்து காட்டுகிறார்கள்.



"அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளபடி அவன் இத்தனைக் காலமாகப் பாதுகாத்து வரும் பிரவ்னின் உடலைக் கண்டுபிடித்துவிட்டோம்' என்று சொல்லி எகிப்து அருங்காட்சியகத்தில் உள்ள 'இரண்டாம் ரம்சேஸ்' என்பவனின் மம்மியின் படத்தைக் காட்டினார்கள்.



மேகத்தில் "அல்லாஹ்" என்று அரபியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டினார்கள். அதுவரை தொழுகைக்கு வாராமல் சினிமாவே கதி என்று சுற்றிக்கொண்டிருந்த ஒரு மாணவன் இந்தப் புகைப்பதத்தைப் பார்த்ததும் மனம் திருந்தி இப்போது ஒரு 'தாயி' (அழைப்பாளன்) ஆகிவிட்டான் என்றும் கூறினார்கள். 



அதேபோல் காட்டில் மரங்களின் அமைப்பு வரிசையில் "லா இலாஹா இல்லல்லாஹ்" என்று காட்சி தெரிகின்ற ஒரு புகைப்படம். அந்தக் குறிப்பிட்ட கோணத்தில் மட்டும்தான் அது அவ்வாறு தெரியும். வேறு கோணங்களில் அப்படித்தேரியாது. ஏன் அந்தக் கோணத்தை மட்டும் கணக்கில் எடுக்கிறீர்கள்? ஏனென்றால் உங்களுக்குக் கலிமாவைப் படிக்க முடியும் என்பதால். இது அரபி தெரியாத ஒருவனின் கண்ணிலோ, வேறு மதத்தைச் சேர்ந்தவனின் கண்ணிலோ பட்டிருந்தால் எந்தக் கவனத்தையும் ஏற்படுத்தியிருக்காது. இதே போல் ஒரு காட்டுக்குள் நுழைந்து ஒரு கிறிஸ்துவன் சிலுவைபோல் தோன்றும் மரக்கிளைகளைப் படமெடுக்க முடியும். 'தேடுங்கள் கிடைக்கும்' என்றுதான் ஏசுவும் சொல்லியிருக்கிறார்! அதே போல் ஒரு ஹிந்து காட்டுக்குள் சென்று பிள்ளையார் ருத்ரன் நீலி சூலி என்று பல படங்களை எதுத்து அது ஒரு ஹிந்துக்காடு ( 'ப்ருஹதாரன்யகம்') என்று கூறலாம். அவர் படமெடுக்கும் கோணங்களை, தன்  கண்ணில் பட்டாலும் ஒரு முஸ்லிம் கவனிக்க மாட்டான்.



ஒரு மரம் வளைந்துள்ளது. உடனே ஒரு 'தாயி' முஸ்லிமின் பார்வையில் அந்த மரம் 'ருகூ' என்னும் தொழுகை நிலையில் இருப்பதாகப் படுகிறது. அவருக்குப் புல்லரிக்கிறது. சரி, அந்த மரம் ஏன் சஜ்தா செய்யவில்லை? கொஞ்சநாள் கழித்துச் செய்யும்போலும்! மேலும், ருகூ செய்யும் இந்த மரம்தான் இறைபக்தியுள்ள மரம் என்றால் வளையாமல் இயல்பாக நிற்கும் மற்ற மரங்களெல்லாம் என்ன நாத்திக மரங்களா? அவைதான் மெஜாரிட்டியாக வேறு இருக்கின்றன! "வானம் பூமியில் உள்ள அனைத்தும் இறைவனை தியானிக்கின்றன" என்னும் திருமறையின் கருத்தின் படி எல்லா மரங்களுமே இறை வழிபாட்டில்தான் இருக்கின்றன. மனிதனுடைய தொழுகைக்குரிய ஒரு நிலையை அதன் மீது ஏற்றிப் பார்க்கவேண்டிய அவசியம் என்ன? 



இதே போல் ஒரு பாறை 'சஜ்தா' செய்யும் புகைப்படம் ஒன்று. இப்படி மனித நிலைகளை இயற்கையில் துருவிப் பார்ப்பதுதான் இயற்கையில் இறை அத்தாட்சிகளைக் காண்பது என்று சில மக்கட்டைகள் கருதுகின்றன போலும். ஆனால் திருக்குரானோ, வானத்திலும் பூமியிலும் இறை அத்தாட்சிகள் நிறைந்திருப்பதாகவே கூறுகிறது. இவை போன்று எப்போதாவது அரபி எழுத்துக்களாகத் தோன்றி ஜாலம் காட்டுபவை அல்ல. மேகம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இவைவனின் அத்தாட்சிதான். அது அரபி எழுத்து வடிவில் 'அல்லாஹ்' என்று தோன்றினால் மட்டும்தான் என்றில்லை. இதைப் புரிந்துகொண்டு அத்தாட்சிகளை நிறைவாகக் காண்பதுதான் ஞானம். ஆனால் இந்த வஹ்ஹாபி மண்டைகளோ வீடியோ கேம் விளையாடும் சிறுவனின் தரத்தில்தான் செயல்படுகின்றன.

இப்படியெல்லாம் வடிவங்களை எடுப்பதென்றால், முன்பு ஒரு முறை பத்திரிகைகளில் ஒரு படம் வந்திருந்தது, ஒரு மரத்தின் விளிம்பில் எம்.ஜி.ஆரின் முகம் தோன்றுவதாக! இதை என்னவகையான அத்தாட்சி என்று கூறுவார்கள்? ஏன் ஏக இறைவன் கேரட்டுப் பிள்ளையாரும் உருளைக்கிழங்குப் பிள்ளையாருமாகவே அடிக்கடி உருவாக்கிக் கொண்டிருக்கிறான்? இதையெல்லாம் ஆன்மிகம் என்று கூறுவது சரியல்ல. இந்த சிறுபிள்ளைத் தனத்தில் எல்லா மதத்தினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். ராமர் அல்லது புத்தரின் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் வரைந்திருப்பதைக் கிண்டல் செய்பவன் காபா மற்றும் மஸ்ஜிதுன் நபவியைச் சுற்றி ஒலிகள் கிளர்ந்தெழுவது போல் மெனக்கெட்டு கிராபிக்ஸ் போடுகிறான், வேறென்ன?

நாசா ஆராய்ச்சி மையம் பாழ்வெளியில் எடுத்துவந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி அதை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஆதாரம் என்று சொன்னார்கள். நாசா விண்வெளிக் கழகம் அதற்கு "CAT'S EYE NEBULA" - 'பூனைக்கண் நெபுலா' என்று பெயர் வைத்துள்ளது. பூனைக்கண்ணைப் போன்று தோன்றிய ஒரு நேபுலாவைத்தான் முதலில் கண்டுபிடித்தார்கள். பிறகு வேறு வடிவமுள்ளவையும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு நெபுலா ரோஜாப் பூவைப்போல் உள்ளது. அந்தப் படத்தைதான் வஹ்ஹாபி தாயிக்கள் திருக்குரானின் ஆதாரம் என்று கூறி "ரஹ்மான்" அத்தியாயத்தின் முப்பத்தேழாவது வசனத்தைக் காட்டுகிறார்கள்.



இந்த நெபுலா படம் திருக்குர்ஆன் வசனத்திற்கான ஆதாரம் அல்ல என்பது என் கருத்து. ஏனெனில், திருக்குரானின் வசனம் வானத்தைப் பற்றிப் பேசுகிறது. அரபி மூலத்தில் "சமா" என்னும் வார்த்தைதான் உள்ளது. அதற்கு வானம் என்றுதான் பொருள். இந்த வசனம் வானம் பிளக்கப்படுவதைப் பற்றிப் பேசுகிறது. "FALAK" என்னும் அரபி வார்த்தையும் வானத்தைக் குறிக்கும். அதிலும் குறிப்பாக அதிகாலையைக்  குறிக்கும். திருக்குரானின் 113 - வது அத்தியாயத்தின் முதல் வசனமே அல்லாஹ்வை "ரப்பில் பலக்" (அதிகாலையின் இரட்சகன்) என்று கூறக் காண்கிறோம்.மேலும், FALAKA என்னும் அரபி வேர்ச்சொல்லுக்குப் 'பிளத்தல்' என்பதே பொருள்.  இந்த வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும் வானம் பிளக்கப்படுவதைத்தான் சுட்டுகின்றன.
"When the sky is rent asunder, and it becomes red like ointment" ( translation by Yusuf Ali)
"And when the heaven splitteth asunder and becometh rosy like red hide" ( translation by Marmaduke Pikthall)
"And when the sky is rent asunder and becomes red like (burning) oil" ( translation by M.Asad)
வசனத்தில் உள்ள "வர்தத்" என்னும் சொல்தான் இவர்களைக் குழப்பியுள்ளது. ஆங்கிலத்தில் "ROSE" என்னும் சொல் பூவையும் குறிக்கும், நிறத்தையும் குறிக்கும். அதுபோல்தான் இந்த 'வர்தத்' என்பதையும் நிறமாகவும் எடுத்துக் கொள்ளலாம், ரோஜாப்பூ என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே வஹ்ஹாபிகள் நெபுலாவின் படம் ஒரு ரோஜாப்பூவைப் போல் இருப்பதைப் பார்த்ததும் அப்படியே இந்த வசனத்திற்குப் பொருள் வைக்கின்றனர். ஒரு ஆச்சர்யமான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்கின்றனர், அதுவும் நாசா எடுத்த புகைப்படத்திலேயே!

ஆனால் நெபுலா என்பது வானம் இல்லை! அது ஒரு நட்சத்திரம் அழிகின்றபோது வெடித்துச் சிதறுகின்ற வாயுக்கள் ( குறிப்பாக ஹீலியம்) , புழுதிகள் (ஸ்டார் டஸ்ட்!) ஆகியவற்றால் ஏற்படும் ஒரு தோற்றம். நெபுலா என்னும் லத்தீன் சொல்லுக்கு மேகம் என்று பொருள். அது பாழ்வெளியில் ஒரு விண்மீன் அழிவதால் உண்டாகும் மேகமூட்டம்தான்!

மேற்கூறிய வசனத்தின் முன் பின் வசனங்களுடன் இணைத்து அவற்றின் போக்கைக் காணும்போது  இந்த நிகழ்வு உலக முடிவு நாளைக் குறிக்கிறது என்பது தெளிவாகும். "கியாமத்" என்று  கூறப்படுகின்ற யுக முடிவு நாளின் அடையாளமாகத்தான் இதனைக் குரான் கூறுகின்றது. இனி நடக்கப்போகின்ற ஒரு நிகழ்வுக்கு ஏற்கனவே நடந்துவிட்ட, அதுவும் பூமியிலிருந்து பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்து முடிந்த ஒரு விண்மீன் அழிவை ஆதாரமாகக் காட்டுவது சுத்த மடத்தனம். ஆனால் வஹ்ஹாபிகளின் பார்வையில் இதுபோன்ற மடத்தனங்கள்தான் அறிவார்ந்த நிலையாகத் தெரிகின்றன.



இன்னொரு கிராபிக்ஸ் பிரச்சாரம் அரேபியாவில் இராட்சத எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாகும். இறைத்தூதர் ஹூது (அலை) அவர்கள் அனுப்பப்பட்ட ஆது சமூகத்தினரின் எலும்புக்கூடுகள் இவை என்று எவனோ மர கழண்ட பேர்வழி கிளப்பிவிட்ட இந்த கிராபிக்ஸ் மின்னஞ்சல் முஸ்லிம்களிடையே 'பப்பரபரப்பாகப்' பல ரவுண்டுகள் வந்தது. எனக்கே மீண்டும் மீண்டும் ஐந்தாறு முறைகள் வந்து எரிச்சலூட்டியது. அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்கிறார்கள்! இது ஆது சமூகத்தின் மிச்சம்தான் என்று அரேபியாவின் உலமாக்களும் நம்புவதாக அந்த மின்னஞ்சல் கூறிற்று. எனில், அவர்கள் "NIGHT AT THE MUSEUM" என்னும் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்! 


  

5 comments:

  1. அன்பிற்குரிய ரமீஸ் பிலாலி,
    திரு. ஜெயமோகன் அவர்களது பரிந்துரையின் பேரில் உங்கள் பதிவுகளை வாசித்தேன்.
    ஒரு பிரிவை சேர்ந்தவர்களை பற்றி தவறான கருத்துக்களே முன் வைக்கப்படுகின்ற காலகட்டத்தில், உங்கள் எழுத்துக்கள் மிகவும் நம்பிக்கையூட்டுகின்றன. சக மனிதர்களை நேசிப்பதே எல்லா மதங்களின் அடிப்படை நோக்கம் என்பது எல்லோருக்கும் புரிகிறவரை, இம்மாதிரி முயற்சிகள் அவசியமே.
    அன்புடன்
    கணேசன்

    ReplyDelete
  2. அன்பு ரமீஸ், அப்பா, என்ன எழுத்து, எவ்வளவு எள்ளல்! எவ்வளவு உண்மை! அருமை! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. When someone looks at a tree that is bent and gets excited thinking that it is in the position of "Rukh" it is fine..nothing wrong in that I think. When someone else looks at the diffused clouds in the form of the Arabic letter "Allah" and gets excited, it is still fine...nothing wrong in that as long as it does not impair his intellect and starts communication that these are divine signs. One should not forget that the Creator Himself has referred to many things as signs of His Omnipotence and Almightiness and we may not need to look any further signs I think.

    We should be careful in not letting our perceptions to influence our teachings or propaganda.

    ReplyDelete
  4. "அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளபடி அவன் இத்தனைக் காலமாகப் பாதுகாத்து வரும் பிரவ்னின் உடலைக்"

    I will be happy if u explain what is said in குர் ஆன் in this regard

    ReplyDelete
  5. போகட்டும் விட்டு விடுங்கள்! எல்லோரும் பேராசிரியர் அல்லவே!சாதாரண மக்களுக்கு இது போன்ற செய்திகள் தேவைப்படுகின்றன.

    இது இந்து சமுதாயத்தில் அதிகம்.அங்கேயும் உள்ளது என்பது, இஸ்லாத்திலும் சாதாரண மக்கள் உள்ளார்கள் என்று அறியத் தருகிறது.இந்தக் கவர்ச்சிகளில் இருந்து விடுபட்டு ஆன்மீகத்திற்கு ஒரு சிலராவது திரும்பினால் நல்லதுதானே.
    ஆரம்ப மன நிலை என்று கொண்டு அலட்சியப் படுத்துங்கள்.

    ReplyDelete