Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 2

 


நோயடிக்ஸ் துறையின் பல்வேறு கோட்பாடுகளை கேத்தரின் விளக்குவதாக இந்த நாவல் நெடுகிலும் பல்வேறு இடங்கள் வருகின்றன. அவை அறிதலுக்கு விருந்தாக அமைபவை. Prague Castle என்னுமிடத்தில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத் தொடர்ச் சொற்பொழிவு நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூடிய சபையில் கேத்தரின் உரையாற்றும்போது தான் ஏன் பொருள்முதல்வாதியாக இல்லை என்பதை விளக்குமிடத்தில் மனித மூளை பற்றிச் சொல்லும் பகுதியை அப்படியே இங்கே தமிழாக்கித் தருகிறேன்:

“’இந்த மொத்தைக் குமிழ் உங்கள் மூளை’ என்று அவள் சபையினரிடம் சொன்னாள். ‘ இது ஒரு அழைய ஹாம்பர்கர் மாவுருண்டை மாதிரி தெரிகிறது என்று எனக்குப் புரிகிறது. என்றாலும், இந்த உறுப்பைப் போல் வியப்பானது வேறில்லை என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். இதில் தோராயமாக எண்பத்தாறு பில்லியன் (அதாவது எட்டாயிரத்து அறுநூறு கோடி) நியூரான்கள் உள்ளன. அவை எல்லாம் சேர்ந்து நூறு டிரில்லியனுக்கும் (அதாவது நூறு லட்சம் கோடிக்கும்) அதிகமான சினாப்டிக் இணைப்புகளை உருவாக்குகின்றன. அவை எவ்வளவு சிக்கலான தகவல் செயல்பாட்டையும் உடனடியாகச் செய்ய வல்லவை. மேலும், கால ஓட்டத்திற்கு ஏற்ப இந்த சினாப்டிக் இணைப்புகள் தம்மை மாற்றித் தகவமைத்துக் கொள்ளக் கூடியவை. இந்தச் செயற்பாடு நியூரோப்ளாஸ்டிசிட்டி எனப்படுகிறது. இதுதான் மூளை தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், கற்கவும், அடிபட்டால் குணம் பெறவும் ஏதுவாக்குகிறது.


“கேத்தரின் இன்னொரு புகைப்படத்தைத் திரையிட்டாள் – மேஜை ஒன்றில் ஒரு டிவிடி இருந்தது. ‘இது ஒரு சராசரியான டிவிடி  குறுந்தகடு. இதில் 4.7 கிகாபைட்ஸ் தகவல்களைப் பதிந்து வைக்க முடியும் என்பதே ஓர் ஆச்சரியம்தான். அதாவது இரண்டாயிரம் அதி துல்லியமான HD புகைப்படங்களை இதில் பதியலாம். ஆனால், சராசரியான மனித மூளையின் நினைவகத்தின் கொள்ளளவுக்கு நிகராகப் பதிவு செய்ய எத்தனை டிவிடிக்கள் வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு குறிப்புத் தருகிறேன்… அதற்குத் தேவையான அளவு டிவிடிக்களை நீங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினால்’ – அவள் தன் கையை உயர்த்தி வ்ளாடிஸ்லாவ் அரங்கத்தின் மேல் கூரையைச் சுட்டிக் காட்டினாள் – ‘இந்தக் கட்டடத்தின் உச்சிக்கு அப்பால் அவை போய்விடும். உண்மையில், அந்த அடுக்கு [பூமியின் சுற்றுவட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும்] இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை எட்டிவிடும்.’

“கேத்தரின் தன் மண்டையைத் தட்டிக் காட்டினாள். ‘நாம் ஒவ்வொருவரும் இங்கே மில்லியன் கணக்கான கிகாபைட்கள் தகவல்களைப் போட்டு வைத்துள்ளோம் – படங்கள், நினைவுகள், பல ஆண்டுகள் கற்ற கல்வி, திறன்கள், மொழிகள்… இவை எல்லாம் இந்தச் சிறிய இடத்தில் நேர்த்தியாக வகைப்படுத்தி ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம் இதற்கு நிகராக வரவேண்டும் என்றால் இன்னமும் அதற்கான தகவல் கிடங்கு உருவாக்கப்படவில்லை.’

”அவள் பவர் பாய்ண்ட்டை நூத்துவிட்டு மேடையின் முன் பகுதிக்கு வந்தாள். இத்தனை சிறிய உறுப்பு ஒன்று எப்படி இவ்வளவு பரவலான தகவல்களைத் தேக்கி வைக்க முடியும் என்று பொருள்முதல்வாத விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர். நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது ஓர் உடலியல் அசாத்தியமாகத்தான் தெரிகிறது… அதனால்தான் நான் ஒரு பொருள்முதல்வாதியாக இல்லை.’” (ப.100)

மூளையின் விந்தைகள் அல்லது பிரக்ஞையின் ஆச்சரியங்கள் என்று சொல்லத்தக்க செயல்பாடுகள் பல உள்ளன. அவை இந்த நாவலில் பேசப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்:

அ) Sudden Savant Syndrome (திடீர் அறிவாளி நோய்க்குறி) – இந்த நோய்க்குறிக்கான மருத்துவ வரையறை இது: “முன்பு இருந்திராத தனித்தன்மையான திறன் அல்லது அறிவு ஒரு மனித மனத்தில் திடீரென்று வெளிப்படுவதாகும்.” (’The abrupt manifestation in a human mind of a unique skill or knowledge that previously was nonexistent.’ P.122). இதை லாங்டனுக்கு கேத்தரின் எளிதாக இப்படி விளக்கிச் சொல்கிறாள், “அதாவது, உங்கள் மண்டையில் அடிபடுகிறது. நீங்கள் மயக்கம் தெளிந்து எழும்போது ஒரு வைலின் கலைஞராகவோ, சரளமாக போர்த்துகீசிய மொழி பேசுபவராகவோ, கணித மேதையாகவோ எழுகிறீர்கள். ஆனால் அதற்கு முன் இதில் உங்களுக்கு அரிச்சுவடி கூட தெரியாமல் இருந்தது.”

இந்த நோய்க்குறியால் உலகப் புகழ் பெற்ற சில சவாந்த்களை டான் ப்ரவ்ன் குறிப்பிடுகிறார்:

1.      ரியூபன் ந்செமோ – பதினாறு வயது அமெரிக்கன். கால்பந்து விளையாடும்போது மண்டையில் உதைக்கப்பட்டதில் கோமா நிலைக்குப் போய்விட்டான். பிரக்ஞை மீண்டு எழுந்தபோது சரளமாக எஸ்பஞோல் மொழி பேசினான்.

2.      டெரெக் அமாட்டோ – நடுத்தர வயது. குளம் ஒன்றில் குடைந்தாட குதித்தபோது மண்டையில் அடிபட்டு மயங்கிவிட்டார். தெளிந்து எழுந்தபோது இசை மேதையாக எழுந்தார். பியானோ வாசிப்பில் பிச்சு உதறினார்.

3.      ஓர்லாந்தோ எஸ். செர்ரல் – பத்து வயதுச் சிறுவன். பேஸ் பந்து தலையில் தாக்கியதில் திடீரென்று கணித மேதைமை வந்துவிட்டது. காலெண்டர் கணக்குகளில் வியக்கத்தக்க திறமை காட்டுகிறான்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு கேத்தரின் கூறுகிறாள்: “மிக எளிமையான ஒரு வினாவுக்கு நமக்கு விடை தெரியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: நம் எண்ணங்கள், திறமைகள், கருத்துக்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?” (ப.124)

ஆ) TLE – Temporal Lobe Epilepsy (பொட்டுமடல் கால்கை வலிப்பு) – உடலியல் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மூளைச் செயல்பாடாக இருந்தாலும் இந்த வலிப்பின் மனோரீதியான மாற்றங்கள் சுவாரஸ்யமானவை. கேத்தரின் சொல்கிறாள்: ”இது மனித பிரக்ஞையில் இயற்கையான ஏற்படும் “மாற்று நிலைகள்” (altered states)-இல் ஒன்றாக இருக்கிறது. இந்த வலிப்பு நிலையை MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சில போதைப் பொருட்கள், NDE (Near Death Experience – இறப்புக்கு நெருங்கிய நிலை), மற்றும் கலவியுச்சம் (orgasm) ஆகியவற்றை ஒத்த மின்பதிவைக் காட்டுகிறது. மனித குலத்தின் மகத்தான படைப்பாளுமைகளில் சிலர் இந்த பொட்டுமடல் வலிப்புக்காரர்களாக இருந்துள்ளனர் – வின்செண்ட் வான்கா, அகத்தா கிறிஸ்டி, சாக்ரடீஸ், மற்றும் ஃபியதோர் தஸ்தாயெவ்ஸ்கி” (ப.142).

இந்த டெம்பரல் லோப் எபிலெப்சி என்பது ஆன்மிகத்தின் பரவச நிலையுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிற்றின்பப் பரவசமும் பேரின்பப் பரவசமும் இந்தக் கால்கை வலிப்புக்குப் பின்னான (postictal) மனநிலையும் ஒன்றை ஒன்று ஒத்தவையாகத் தோன்றுகின்றன. மறுமலர்ச்சிக் காலத்து இத்தாலிய ஓவியர் ரஃபேல் சான்ஸியோ ‘தி டிரான்ஸ்ஃபிகரேஷன்’ (உருமாற்றம்) என்னும் ஓவியம் ஒன்றைத் தீட்டினார். அதில் ஏசுநாதர் சொர்க்கத்துக்கு உயர்ந்து செல்வதை வரைய வேண்டி இருந்தது. அவர் எபிலெப்டிக் சிறுவன் ஒருவன் வலிப்பு வந்த நிலையில் இருப்பதைப் போல் ஏசுநாதரை வரைந்து வைத்தார்! ஆன்மிக நிலைக்கு இந்த வலிப்பு நிலையைக் குறியீடாக அவர் கண்டாராம்! (ப.142)

இ) Asperger’s Syndrome / Autism (மதியிறுக்கம் / தன்னுழப்பல்) – இந்த மனநிலைக் குறைபாடு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் உச்சபட்ச திறமை கொண்டிருப்பர். ஆனால் இவர்களால் அன்றாட காரியங்களை இயல்பாகச் செய்ய முடியாது. இதை மிக இலகுவான ஓர் உவமை சொல்லி கேத்தரின் விளக்குகிறாள்: “அது கண்ணாடிக்கு பதிலாக பைனாகுலர் அணிந்துகொள்வது போன்றது. பிறரால் பார்க்க முடியாத தொலைவை நீங்கள் துல்லியமாகப் பார்ப்பீர்கள்… ஆனால் உங்களுக்குப் பக்கதில் உள்ளவை எல்லாம் மங்கலாகத் தெரியும்” (ப.267).

இந்த நாவலில் நாம் அறிந்து கொள்ளும் முக்கியமான இன்னொரு விஞ்ஞான செய்தி GABA (Gamma Aminobutyric Acid) பற்றியதாகும். அதுதான் மூளையின் செயல்பாட்டுக்கான பிரதான நியூரோ டிரான்ஸ்மிட்டர் ஆகும். அதுதான் தண்டு வடத்திலும் முதன்மையாகச் செயல்படுகிறது. [அதைத்தான் குண்டலினி சக்தி என்று சொல்லியிருப்பார்களோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.] இதன் அளவு உயரும்போது மனித மூளை பேரமைதி காண்கிறது. இதன் அளவு குறையும்போது மனித மூளை பதற்றம், கவனச் சிதறல், தூக்கமின்மை முதலிய நிலைகளை அடைகிறது. தியானம் செய்வோரின் மூளையில் இதன் அளவு அதிகரிப்பதால் அவர்களால் எந்தச் சூழலிலும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடிகிறது. இந்த அமிலம் மனிதப் பிரக்ஞை பிரபஞ்சப் பிரக்ஞையை அணுகும் நிலையிலும் மரணம் நிகழும்போதும் எப்படிச் செயல்படுகிறது என்று இந்த நாவலை வாசித்தால் அறிந்து கொள்ளலாம். நாவலின் இறுதிக் கால்பகுதியில் இது குறித்த விளக்கங்கள் கதையை முன்னகர்த்திச் செல்கின்றன. அந்தப் பகுதியில் சிந்தனையைத் தூண்டுகின்ற ஒரு விடயம் உயர் பிரக்ஞை நிலைகளை அடைவதற்காக போதைப் பொருட்கள் (hallucinogens) பயன்படுத்தப்படுவது பற்றிய விவாதங்களாகும். அவற்றைக் கொஞ்சம் கவனிப்பது பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ஆன்மிகப் பயிற்சிகள் பிரக்ஞையின் மாற்று நிலைகளை (alternate states) உருவாக்குகின்றன. அவை பலவிதமாக அமைகின்றன. அவற்றை உருவாக்குவதிலும் அவற்றினூடாக இயங்குவதிலும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இல்லை எனில் ஒரு நபர் மனிதரிடையான உறவுகள் (inter personal relationships), சமூக உறவாடல்கள் (social interactions) ஆகியவற்றில் இயல்பாகவும் சரியாகவும் இயங்க முடியாமல் போவதிலிருந்து அவரின் உயிருக்கே ஆபத்தாக முடிகின்ற நிலை வரை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வார். இதற்கு ஆன்மிக உலகில பல சான்றுகள் உண்டு. அப்படிப்பட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஆன்மிகப் பயிற்சிகளை ஒரு குருவின் வழிகாட்டுதலில் கட்டுப்பாட்டுடனும் பத்தியத்துடனும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இதிலிருந்தே உண்டாகிறது. அப்படிப் பேணுதலாக இருந்தவர்களில் கூட சறுகிப் போய் மனநிலை பேதலித்தவர்கள் உண்டு. எதார்த்தம் இப்படி இருக்கும்போது பிரக்ஞையின் மாற்று நிலைகளை, அதாவது உயர் நிலைகளை உருவாக்குவதற்கு லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துவோரின் நிலை மிக மிக அபாயமானதாகும் என்பதில் ஐயமில்லை. எனினும், உலகில் ஆன்மிகத்தின் பேரால் லாகிரி வஸ்துக்களைச் சோதனை செய்து பார்க்கின்ற குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. டான் ப்ரவ்ன் தன் நாவலில் இத்தகையோர் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மெஸ்கலைன், எல்.எஸ்.டி, சிலோசைபின் போன்ற சைக்கடெலிக்ஸ் (உணர்ச்சி மீக்குறுதல் மற்றும் தெளி கற்பனைகளைத் தூண்டும் லாகிரி வஸ்துகள்) உட்கொண்டோரின் மூளையில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்ப்பது கேத்தரீனின் ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அத்தகைய போதை நிலைகள் OBE (Out-of-Body Experience, மீவுடலனுபவங்கள்) நிலையை ஒத்திருக்கின்றன. அவை GABA அளவுகளை மூளையில் மாற்றுவது பற்றி லாங்டனிடம் கேத்தரின் விளக்குகிறாள்: ”நீங்கள் அனுமானிப்பது போல் போதைப் பொருட்கள் உங்கள் நியூரான்களைத் தூண்டுவதில்லை. அதற்கு நேர் எதிரான செயலைச் செய்கின்றன. அந்தப் போதை வஸ்துக்கள் மூளையின் இயல்பான தொடர்பு நிலையில் சிக்கலான தொடர்வினைகளால் உங்களின் GABA அளவை மிகத் தீவிரமாகக் குறைத்துவிடுகின்றன. அதாவது, அவை உங்கள் பிரக்ஞையின் வடிகட்டிகளை (filters) விலக்கிவிட்டு எதார்த்தத்தின் விரிவான காட்சி உள்ளே பாய்வதற்கு வழி செய்கின்றன. அதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் மாயக்காட்சியுறவில்லை (you are not hallucating), உண்மையில் நீங்கள் எதார்த்தத்தை அதிகமாக தரிசிக்கிறீர்கள்.” (ப.350) இன்றைய காலத்தில் ஆரோக்கிய வல்லுநர்கள் கூட சிறிய அளவில் (microdosing) இவற்றைப் பரிந்துரைக்கிறார்கள்; சிலோசைபினை மனப்பதற்றம், கவலை, மனச்சோர்வு, மற்றும் கவனச் சிதறல் ஆகியவற்றுக்கான சர்வநிவாரணியாக (panacea) முன் வைக்கிறார்கள் என்றும் கேத்தரீன் சொல்கிறாள் (ப.350). இந்தப் போக்குகள் இன்று நேற்று உண்டானவை அல்ல. மனித குலம் தொல்காலம் தொட்டு இதில் பரிசோதனைகள் பண்ணிக்கொண்டு வருகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. “ரிக் வேதத்தின் தொல் பிரதிகள் மற்றும் எலூசினியன் மர்மங்கள் ஆகியவற்றில் இருந்து ஹக்ஸ்லி 1954-இல் எழுதிய ’தி டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்’ என்னும் செவ்வியல் நூல் வரை மாபெரும் எழுத்தாளர்கள் பலரும் மனித பிரக்ஞையை விரிவுபடுத்தி எதார்த்தத்தின் வடிகட்டப்படாத தரிசனத்தை அடைவதற்கு போதைப் பொருட்களை பரிந்துரைத்துள்ளனர்” (பக்.416-417). கிரேக்க நாட்டில் டெல்ஃபியின் ஆரக்கிள் [கணியர்] பர்னாஸ்ஸஸ் மலையின் பிளவு ஒன்றின் வழியாக வெளியாகும் வாயுக்களை ஆழ்ந்து சுவாசித்து ’எதிர்கால’த்தை தரிசித்துள்ளனர்; [மெஸ்கலைன் உள்ளிட்ட பல ரசாயனங்களைக் கொண்ட] பெயோட் என்னும் கள்ளித் தாவரத்தை உட்கொண்ட நிலையில் அஸ்டெக் பழங்குடியினர் எதிர்கால ஆன்மாக்களிடம் உரையாடியுள்ளனர்; பழங்கால எகிப்திய கணியன்மார் தூதாயீம் கனிகள் என்னும் மாண்ட்ரேக் கிழங்குகளையும் நீலத்தாமரையையும் உட்கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கண்டு சொல்லியுள்ளனர் என்கிற செய்திகளையும் டான் ப்ரவ்ன் பதிவு செய்கிறார் (ப.418) (“அந்த பார்ட்டியில் சிஐஏ சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்துள்ளது” (ப.417) என்னும் பகடி வேறு!). ஆனந்த நிலை அடைய மனித குலம் முழுவதற்கும் லாகிரி வஸ்து ஒன்று ஊட்டப்படும் ஓர் எதிர்காலத்தை ஆல்டுவஸ் ஹக்ஸ்லி கற்பனை செய்தார். அந்த போதைப் பொருளை அவர் ’சோமா’ என்றழைத்தார் [அதாவது, சோம பானம்] (ப.350).

இந்தச் செய்திகளைத் தாண்டியும் டான் ப்ரவ்ன் சில தகவல்களைச் சொல்கிறார். ஒருவரின் பிரக்ஞை அவரின் உடலுக்கு வெளியே வந்துவிடுவது போன்ற நிலையை உண்டாக்கும் போதைப் பொருட்களை “dissociatives” என்று வகைப்படுத்துகின்றனர். இவற்றை வைத்து ரகசியமான ஆராய்ச்சிகள் செய்ததில் சிஐஏவுக்கு நீண்ட வரலாறு உண்டு. [1953-இல் தொடங்கி 1973-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட MKUltra என்னும் மனிதப் பரிசோதனை உலகெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கிய ஒன்றாகும்.] இத்தகைய சோதனைகள் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலும் தேர்ந்த மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளன. அதன் உளவியலாளரான டிமோத்தி ஃப்ரான்சிஸ் லியரி என்பவர் “ஹார்வார்ட் சிலோசைபின் செயற்திட்டம்” என்ற ஒன்றை நிகழ்த்தியதற்காகத் தண்டிக்கப்பட்டவர் [அமெரிக்க கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்கால் “அமெரிக்க பிரக்ஞையின் கதாநாயகன்” என்று பாராட்டப்பட்ட இவர் நியூயார்க் நகரில் “லீக் ஃபார் ஸ்பிரிச்சுவல் டிஸ்கவரி” என்னும் சமய நிறுவனத்தைத் தொடங்கியவர் ஆவார்.]

இத்தகைய தகவல்கள் இந்த நாவலில் சொல்லப்படுவதை வைத்து டான் ப்ரவ்ன் போதை வஸ்துக்களின் பயன்பாட்டை ஆதரிக்கிறார் என்று அவசர முடிவுக்கு வரவேண்டாம். அவற்றின் பாதகங்களைப் பற்றி அவர் அடுத்துப் பேசுகிறார். கேத்தரீன் தானே இந்த போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியிருக்கிறாளா என்று லேங்டன் கேட்கிறார். இல்லை என்று சொல்லும் அவள் காரணத்தை விளக்குகிறாள்:

 ”ராபர்ட், நிஜம்மா?! மூளை என்பது கற்பனைக்கு எட்டாத நளினத்துடன் இயங்குவது. போதை வஸ்துக்களை வைத்து அதை மாற்றி அமைக்க முயற்சிப்பது, விலைமதிக்க முடியாத ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை சம்மட்டியால் பழுது பார்ப்பது போன்றது! போதைப் பொருட்கள் சீரற்ற தொடர் எதிர்வினைகளால் மாற்ற நிலைகளைத் தூண்டுகின்றன. இந்த மூளையியல் எசகுபிசகுகள் நிரந்தரமான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அந்த சுருக்க நேர அனுபவம் உங்களுக்கு ஞானமடைந்தது போல் தோன்றலாம். உங்கள் நரம்பிணைப்பு ஒருமைப்பாட்டுக்கும் நரம்பியக்கடத்தியின் சமநிலைக்கும் உரிய நீண்ட ஆயுளை நீங்கள் பணயம் வைக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். பெரும்பான்மையான போதைப் பொருட்கள் தமது தாக்கத்தை உண்டாக்கும் முதன்மையான செயல்பாடு என்ன என்றால் [மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் இயற்கையாக் காணப்படும் ஒரு வேதிப்பொருளும் நரம்பு சமிக்ஞை கடத்தியுமான] செரோடோனின் என்பதன் ஒழுங்கமைவைக் குலைத்துவிடுவதுதான். இது சரி என்று எண்ணுவது எவ்வளவு தீய எண்ணம்! இது மிக எளிதாக புலனறிவுக் குறைபாடுகள், உணர்ச்சித் தடுமாற்றம், மற்றும் நீடித்த மனநோய் நிலைகள் ஆகியவற்றுக்குத் தள்ளிவிடும்… போதைப் பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று இளைஞர்கள் ஊகிப்பதைப் பார்க்கும்போது நான் மிகவும் பதற்றமுறுகிறேன். அது அப்படி அல்ல” (ப.417).

 நவீன யுகத்தில் இளைஞர்களின் கையில் மிக எளிதாகக் கிடைத்துவிடும் தீய பொருட்கள் இரண்டு: போதை வஸ்துக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் மாய மெய்ம்மை (Virtual Reality). இவ்விரண்டையும் ஒன்றிணைத்து இளைஞர்கள் அனுபவிக்கும்போது மூளையில் ஏற்படும் சிதைவுகள் நியூரோ விஞ்ஞானிகளையே திடுக்கிட வைக்கின்றன என்ற செய்தியையும் டான் ப்ரவ்ன் பதிவு செய்கிறார் (ப.474).

அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் தலை விரித்தாடிய காலத்தில் இந்த போதைப் பொருள் பரிசோதனைகளும் உச்சத்தில் இருந்துள்ளன. ஹிப்பிகள் பலரும் போதைப் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர் என்பது உலகறிந்த செய்தி. உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியரான பாவ்லோ கொய்லோ அப்படி ஒரு ஹிப்பியாக அலைந்திருக்கிறார். அந்த அனுபவங்களை “ஹிப்பி” (2018) என்னும் நாவலாக எழுதினார். போதை அனுபவத்தை எப்படி இந்த இளைஞர்கள் ஆன்மிகத்துடன் குழப்பிக் கொண்டனர் என்பதை இதில் ஓரிரு இடங்களில் (குறிப்பாக அத்தியாயம்#18) சொல்லியுள்ளார். ஊசி மூலம் தன் ரத்த நாளத்தில் போதைப் பொருளைச் செலுத்திக் கொள்ளும் ஒருவனைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “அவன் அந்த திரவத்தை உள்ளே செலுத்தினான். அவன் கண்களில் இருந்த கவலையான பார்வை மாறிவிட்டது. அவை தேவதையின் கண்கள் போல் ஆகிவிட்டன. அப்புறம் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து அவற்றின் பிரகாசம் மங்கிவிட்டது. அது எங்கோ வேறு ஒரு இடவெளிக்குப் போய்விட்டது – அவன் சொல்வதை நம்பினால் – புத்தர், கிருஷ்ணர், மற்றும் ஏசுநாதர் ஆகியோர் மிதந்து கொண்டிருக்கும் இடவெளி அது” (ப.102)

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான் நூலை நினைவு கூர்கிறேன். அதே காலகட்டத்தில், 25-10-1970 அன்று பம்பாயில் ஓஷோவை ஒருவர் நேர்காணல் நிகழ்த்தியதன் பதிவு, 1971-இல் ஒரு சிறு புத்தகமாக வெளியானது. புத்தகத்தின் தலைப்பு “LSD: A Short Cut to False Samadhi” (எல்.எஸ்.டி : போலி சமாதிக்கான குறுக்குவழி). ஓஷோவை நேர்காணல் செய்தவர் அமெரிக்கா நியூயார்கின் சிவானந்தா ஆஸ்ரமத்தின் நடத்துநரான மா ஆனந்த பிரேம் என்பவர். அவர் சில காலம் கட்டுப்படுத்தப்பட்ட எல்.எஸ்.டி சோதனைகளில் ஈடுபட்டவர். தான் அதில் சமாதி நிலையை அடைந்ததாக அவர் விளக்கிச் சொல்லி அது உண்மையில் சமாதிதானா என்று ஓஷோவிடம் கேட்கிறார். அதற்கு ஓஷோவின் நீண்ட பதில் இப்படி ஆரம்பிக்கிறது:

“அது உண்மையானது அல்ல. அது சமாதி அல்ல. ஆனால் அது ஒரு வேதியியல் மாற்றம். தான் எதை முன்னிறுத்த விரும்புகிறதோ அதை முன்னிறுத்த மனதால் முடியும் – சமாதிக்கான சுயாதீனமற்ற ஆசையைக் கூட! எனவே சமாதி பற்றி உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, நீ என்னவெல்லாம் படித்திருக்கிறாயோ, அதெல்லாம் எல்.எஸ்.டியின் ரசாயன உதவியால் முன்னிறுத்தப் பட்டுவிடும்… … … குண்டலினி பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது என்றால் எல்.எஸ்.டி வழியாக அதை நீ உணர்வது சாத்தியமில்லை. அச்சத்தால் (ஃபோபியா) பீடிக்கப்பட்ட ஒருவன் தன் அச்சத்தைதான் அதைக் கொண்டு முன்னிறுத்துவான். அச்சத்தை அடக்கி வைத்திருக்கும் ஒருவன் அது நிஜத்தில் நிகழ்வது போல் காண்பான். எனவே எல்.எஸ்.டி என்பது பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு அனுபவங்களைக் கொண்டு வரும்.” (ப.9) இது ஒரு போலி ஆன்மிக அனுபவம் என்பதை ஓஷோ மேலும் விரிவாகச் சொல்லிப் போகிறார்.

போதைப் பொருட்கள் என்பது எல்லை மீறிய ஒரு பயன்பாடு. ஆனால் ஆன்மிகத்திற்குத் துணையாக, தூண்டுதலாக புறப்பொருட்களைப் பயனபடுத்துவதில் எல்லாச் சமயங்களும் குறிப்பிட்ட சில பொருட்களுக்குப் பொதுவாக அனுமதி வழங்கியுள்ளன. சாம்பிராணி, ஊதுவத்தி, தசாங்கம், அத்தர் போன்ற நறுமணப் பொருட்கள் அதில் முக்கியமானவை. இவை மனித மனத்தில் மாற்றம் ஏற்படுத்த வல்லவை. ஒரு குறிப்பிட்ட அத்தரைப் பயன்படுத்தினால் தனக்கு அதிகமாக மன ஓர்மை கிடைக்கிறது என்று சொல்வோரை நான் பார்த்திருக்கிறேன். எல்லா அத்தர்களும் மனத்தில் ஒரே விதமான தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதையும் நான் அறிவேன். இங்கே அது பற்றி விரிவாகப் பேச இடமில்லை என்பதால் இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன்.

(to be continued... and ends in the next part.)

ரகசியங்களின் ரகசியம் - 1

 


டான் ப்ரவ்ன் எழுதிய நாவலான “தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ்” (ரகசியங்களின் ரகசியம்)-ஐ  மூன்று நாட்களாக வாசித்து இன்று (30-10-2025) காலை பதினோரு மணிக்கு முடித்தேன். இது அவரின் ஒன்பதாம் நாவல் என்பதால் 9-9-2025 அன்று வெளியீடு என்று திட்டமிட்டு அப்படியே வெளியானது.  என் பிறந்த நாளுக்கான ’அட்வான்ஸ்’ பரிசாக 14-தேதி சுடச் சுட பானுவிடமிருந்து கிடைத்தது.

            டான் ப்ரவ்ன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாவல் எழுத்தாளர்தான். அவரின் நாவல்கள் 57 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன என்கிறார்கள். தமிழிலிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் எழுத்துக்களை நான் விரும்புவதால் ஆங்கிலத்தில்தான் படிக்கிறேன். 



            டான் ப்ரவ்ன் இதுகாறும் ஒன்பது நாவல்களும் ஒரு சிறார் நூலும் எழுதியுள்ளார். நான் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். வெளியான கால வரிசைப்படி அவர் எழுதிய நூல்களின் பட்டியல் இது:

1.      டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் (1998)

2.      ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் (2000)

3.      டிசெப்ஷன் பாய்ண்ட் (2001)

4.      தி டா வின்சி கோட் (2003)

5.      தி லாஸ்ட் சிம்பல் (2009)

6.      இன்ஃபர்னோ (2013)

7.      ஆரிஜின் (2017)

8.      வைல்டு சிம்ஃபனி (2020)

9.      தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் (2025)


 

இந்த ஒன்பது நூற்களில் ’வைல்டு சிம்ஃபனி’ என்பது சிறுவர்களுக்கான நூல். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட் ஆகியவை ‘தனித்த’ நாவல்கள் (Stand alone novels). ஏனைய ஆறு நாவல்களும் “ராபர்ட் லாங்டன்” (Robert Langdon Series) என்று அடையாளம் பெறுகின்றன. “குறியியலாளர்” (symbologist) ஆன, ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் இந்த நாவல்களின் கதாநாயகன்.

இதில் சில நாவல்கள் பற்றியும், வைல்டு சிம்ஃபனி நூல் பற்றியும் ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். “டான் ப்ரவ்ன் பற்றி தமிழில் பரவலாக அறியக் கிடைக்கவில்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே கண்ணில் பட்டன. நீங்கள் அவரின் எல்லா நூல்களையும் வாசித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி நீங்கள் ஒரு நூல் எழுத வேண்டும்” என்று எழுத்தாளரும் பேராசிரியருமான நண்பர் அதங்கோடு அனிஷ்குமார் சென்ற மாதம் என்னிடம் வலியுறுத்தினார். இன்று மாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது கைப்பேசியில் அழைத்து ‘இப்போ என்ன படிச்சுக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்டார். இன்றுதான் TSOS முடித்தேன் என்று சொன்னதும் மீண்டும் வலியுறுத்தினார்: “டான் ப்ரவ்னை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பது பற்றி எழுதுங்கள்.”

டான் ப்ரவ்ன் பற்றி ஒரு தனி நூலெல்லாம் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஏன் வாசிக்கிறேன்? ஒரு நூலை அல்லது எழுத்தாளுமையை நாம் தொடர்ந்து வாசிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ’தி டா வின்சி கோட்’ வெளியான நாளில் இருந்து கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக நான் டான் ப்ரவ்ன் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். ஆனால் அவரின் எந்த நாவலையும் மீண்டும் மீண்டும் வாசித்தது கிடையாது. இதில்தான், அவரைப் பற்றி ஒரு நூல் எழுதும் எண்ணமெல்லாம் தோன்றவில்லை என்பதற்கான பதில் இருக்கிறது. டான் ப்ரவ்ன் என் மதிப்பீட்டில் ஒரு சுவாரஸ்யமான எழுத்தாளர். ‘பிரதி தரும் இன்பம்’ (Pleasure of the text) என்பது அவரின் நூல்களில் நிச்சயம் (எனக்குக்) கிடைக்கிறது. முதன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால், பரவலாக வாசிக்கப்படும் எல்லோருடைய நூல்களிலும் இந்த அம்சம் இருக்கத்தானே செய்யும்? சேட்டன் பகத்தின் நாவல்களில் இருக்காதா? ஜான் கிரீனின் நாவல்களில் இருக்காதா? என் மகள் சுவாரஸ்யத்துடன் வாசிக்கும் இந்த எழுத்தாளிகளை எனக்குக் கையில் எடுத்துப் பார்க்கவும் தோன்றவில்லை.

டான் ப்ரவ்ன் நாவல்களை வாசிப்பதற்கான வேறு காரணங்களில் ஒன்று அவரின் நாவல்களில் கையாளப்படும் குறியீட்டியல். குறிப்பாக, ஐரோப்பிய கிறித்துவ வரலாற்றின் உள்மடிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும் குறியீடுகளை அவரின் பிரதிகள் கண்ணழித்துக் காட்டுகின்றன. அடுத்து, அவரின் கதைகளில் ஆன்மிகமும் நவீன அறிவியலும் சந்திக்கும் புள்ளிகள் பேசப்படுகின்றன. அடுத்து, அவரின் கதாநாயகன் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் என்னும் பாத்திரம்.

டான் பரவ்னின் நாவல்களில் சமயக் குறியீடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதால் அவை தொடர்பான ஆளுமைகளையும் நூல்களையும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, அவற்றை வாசிக்கவும் தூண்டப்பட்டு நான் வாங்கி வாசித்த நூற்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. அவற்றில் சில நூற்களைக் கடைசியில் சொல்கிறேன்.

            டான் ப்ரவ்னின் நாவல்களில் இருந்து ’கருத்து மேற்கோள்கள்’ சமூக ஊடகங்களில் அவரின் வாசகர்களால் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றன. அவரே அப்படிப்பட்ட கருத்துக்களை எழுதியிருக்கிறார் என்பதுடன் கலை, சமயம், அறிவியல், அரசியல் முதலிய துறைகளின் ஆளுமைகள் சொன்ன கருத்துக்களையும் தன் நாவல்களில் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாவலை எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட்டுப் பரவலாகவும் ஆழமாகவும் வாசிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.


            
TSOS நாவலும் அப்படியான ஒரு மேற்கோளுடன்தான் ஆரம்பமாகிறது. அது நவீன விஞ்ஞான உலகின் ’ராட்சஸ’ மேதையான நிக்கோலா டெஸ்லாவின் கருத்து: ”விஞ்ஞானம் மீப்பொருளியல் நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கும் நாளில் அது முந்தைய நூற்றாண்டுகள் அனைத்திலும் அடைந்ததை விட அதிக முன்னேற்றத்தை அடையும்.”

            அப்படியான ஒரு மீப்பொருளியல் ஆய்வைப் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறது. ஆனால், இது கொலைகளும் சண்டைகளும் தப்பித்து ஓடுதலும் என்று விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு த்ரில்லர் நாவல்! டான் ப்ரவ்னின் தனித்தன்மையான பாணியே இதுதான். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷென் பாய்ண்ட் ஆகியவற்றில் நவீன விஞ்ஞானத் துறைகளில் நிகழும் conspiracies கதைச் சிக்கலாக அமையும். இதற்கு முன் அவர் எழுதியுள்ள ராபர்ட் லாங்டன் வரிசையின் முதல் மூன்று நாவல்களில் கிறித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இல்லுமினாட்டி, ஓபஸ் டெய், ஃப்ரீமேசன்ஸ் ஆகிய ரகசிய அமைப்புகளும் அவை சார்ந்த குறியீட்டுச் சிக்கல்களும் கதையை முன்னகர்த்திச் சென்றன. இன்ஃபெர்னோ மற்றும் ஆரிஜின் ஆகிய நாவல்களில் நவீன விஞ்ஞானத்திற்கும் சமயத் தொன்மத்திற்குமான மோதலே கதையின் முரணியக்கமாக அமைந்தது. அந்த வரிசையில் தி சீக்ரெட் ஆஃப் சீக்ரட்ஸ் நாவலை மூன்றாவதாக வைத்துப் பார்க்க முடிகிறது.

            டான் ப்ரவ்ன் தன் நாவல்களில் சமயம், கலை, மற்றும் விஞ்ஞானம் சார்ந்த பல்வேறு அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் சில ரகசியமாக இயங்குபவை, அல்லது ரகசிய முகமும் உள்ளவை ஆகும். இந்த நாவலில் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு ரகசியத் திட்டத்தைச் செயற்படுத்துவதாகக் காட்டியுள்ளார். அது மனிதனின் மூளை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறை ஆய்வு. அந்த ஆய்வு வெற்றி பெறும் பட்சத்தில் அதை அமெரிக்க ராணுவத்திற்கான ஆயுதமாகக் கையாளலாம் என்பது சிஐஏ-வின் திட்டம்.

            அப்படியெல்லாம் சிஐஏ-வை எதிர்மறையாகக் காட்டி அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நாவல் எழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. எனவே, டான் ப்ரவ்ன் ஒரு திருகு வைக்கிறார். சிஐஏ என்னவோ நல்ல திட்டம்தான் தீட்டிற்று. அதில் நேர்ந்த முறைகேடுகள் அதன் தலைமைக்குத் தெரியாமல் மறைவாக அதன் ஓர் அதிகாரி செய்தவை ஆகும். பாவம், அந்த அமைப்புக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது! டான் ப்ரவ்னுக்கும் இப்படியான ஒரு டிபிக்கல் அமெரிக்கன் டிப்ளமஸி தேவைப்படுகிறது. நாவலிலேயே ஓரிடத்தில் செக் குடியரசுக்கான அமெரிக்கத் தூதரான ஹெய்டெல் நெகல் இப்படிச் சொல்கிறார்: “மனித பிரக்ஞையின் முழுத்திறனைக் கையாள்வதில் நாம் முதல் ஆளாக இருப்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலமே இருக்கிறது என்று சிஐஏ-வின் இயக்குநர் தீவிரமாக நம்புகிறார். அணுவுக்குள் பொதிந்திருக்கும் அபரிதமான சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் முதன்முதலில் அனுமானித்தபோது அமெரிக்க அரசு ரகசியமான இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தது, அதனால்தான் நாம் அணுக்குண்டை வைத்து எல்லோரையும் தோற்கடித்தோம் என்று எனக்கு நினைவூட்ட அவர் வெட்கப்படவில்லை. ஒருவேளை நாம் அதைச் செய்யாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ரஷ்யாவிடம் மட்டுமே குண்டு இருந்திருந்தால்? அல்லது ஜெர்மனியிடம்? அல்லது ஜப்பானிடம்?”

            ஆம், வேறு நாடுகளிடம் நவீன ஆயுதங்கள் இருந்தால் அது உலகத்துக்கே அச்சுறுத்தல் ஆகிவிடும். அமெரிக்காவிடம் இருந்தால்தான் அது உலகத்தையே காப்பாற்றும். ஏனெனில் அமெரிக்காதான் உலக அமைதிக்காகப் பாடுபடும் ஒரே நாடு. உலகத்துக்கான கதாநாயகன் அந்த நாடுதான், அல்லது அந்நாட்டின் அதிபர்தான். இந்த அடிக்கருத்து டான் ப்ரவ்னின் நாவல்களிலும் இருக்கிறது என்பது இந்த நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுதான் இந்த நாவலில் நான் உணர்ந்த மிகப் பெரிய குறை.

            மற்றபடி, நாவலில் டான் ப்ரவ்ன் பல்வேறு உளவியல் மருத்துவக் கோட்பாடுகளை அறிமுகம் செய்து விளக்கும்போது வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இந்த நாவலின் 110-ஆம் அத்தியாயத்தில் கதாநாயகி கேத்தரின் அடைந்த மனநிலை பற்றி ஒரு வரி எழுதுகிறார்: “A collage of concepts now flooded her mind.” நாவலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிப் போடுவோம் என்று யோசித்த வேளையில் என் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. பட்டியல் கொடுத்தாலே மூச்சு முட்டும் போலுள்ளது.

            நாவலின் கதைப்பின்னலில் டான் ப்ரவ்ன் ஆழமான பல உளவியல் கோட்பாடுகள் பற்றிப் பேசுகிறார். மரணத்திற்கு நெருக்கமான அனுபவம் (NDE – Near Death Experience),  தேகாதீத / உடற்கடந்த / மீவுடல் அனுபவம் (OBE – Out of Body Experience), திடீர் வலிப்புத்தாக்கம் (epileptic seizure), பின்-வலிப்பு நிலை (Postictal State), ஒத்திசைவு (synchronization), இடைநிலை நினைவாற்றல் குறைபாடு (Interictal Memory Impairment)  ஆகியவை அவற்றில் சில. இது பற்றி அவர் தரும் சுவாரஸ்யமான விளக்கங்களைக் கட்டாயம் சொல்கிறேன்.

            இன்னொரு பட்டியல் தரலாம். இந்த நாவலில் டான் ப்ரவ்ன் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருக்கும் நூல்கள். அவற்றில் சில நூல்களை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று வாசகர்கள் தூண்டப்படுவார்கள் என்பது திண்ணம். பட்டியல் இதோ:

1.      ”ஃப்யூட்டிலிட்டி” (நாவல், 1898) – மார்கன் ராபர்ட்ஸன்.

2.      “கோடக்ஸ் கிகாஸ்” – ஒரு கிறித்துவத் துறவி.

3.      “தி ஸ்ட்ரக்ச்சர் ஆஃப் சைன்டிஃபிக் ரெவல்யூஷன்ஸ்” (1962) – தாமஸ் குஹ்ன்.

4.      ”லைஃப் ஆஃப்டர் லைஃப்” (1975) – ரேமண்ட் மூடி.

5.      “ஃபீலிங் தி ஃப்யூச்சர்” (கட்டுரை, 2011) – டேரில் பெம்.

6.      ”தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மாரீ” (1896) – ஹெச்.ஜி. வெல்ஸ்.

7.      “தி த்ரீ ஃபேசஸ் ஆஃப் ஈவ்” (1967) – கார்பெட் ஹெச். திக்பென், மற்றும் ஹெர்வே எம். க்ளெக்லி.

8.      “ஸ்டேஞ்சர்ஸ் இன் மை பாடி” (1958) – ஈவ்லின் லான்சஸ்டர் மற்றும் ஜேம்ஸ் பாலிங்.

9.      “சிபில்” (1973) – ஃப்ளோரா ரெட்டா ஷ்ரைபர்.

10.   “தி ஸ்ட்ரேஞ் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட்” (1886) – ராபர்ட் லூயில் ஸ்டீவன்ஸன்.

மேற்சொன்ன பட்டியலே தவிர 85-ஆம் அத்தியாயத்தில் உள்ள இந்தப் பத்தியிலும் மீவுளவியல் தொடர்பான அறிஞர்களையும் நூல்களையும் சுட்டிக் காட்டுகிறார்: “ஹரால்ட் புத்தாஃப், ரஸ்ஸல் டார்க், எட்வின் மே, டீன் ராடின், ப்ரெண்டா டன், ராபர்ட் மாரிஸ், ஜூலியா மாஸ்ப்ரிஜ், ராபர்ட் ஜாஹ்ன் மற்றும் பல மதிப்புமிக்க அறிவாளுமைகள் ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், பிரக்ஞை மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க கண்டறிதல்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் எழுதிய பிரபலமான நூல்களுக்கு லிமிட்லெஸ் மைண்ட், ரிமோட் பெர்சப்ஷன்ஸ், தி செவென்த் சென்ஸ், அனோமலஸ் காக்னிஷன், மற்றும் ரியல் மேஜிக் போன்ற தலைப்புகள் இடப்பட்டுள்ளன.”

இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களில் டீன் ராடின் என்னும் பெயரை நான் கரிக்கோலால் அடிக்கோடு இட்டு வைத்தேன். அவரின் “தி நோயட்டிக் யூனிவர்ஸ்” (2009) மற்றும் “சூப்பர்நார்மல்” (2013) ஆகிய இரண்டு நூல்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர். அவர் கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் நோயட்டிக் சைன்சஸ் என்னும் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் மீவுளவியலாளர் ஆவார். ரியல் மேஜிக் என்பது அவர் எழுதிய இன்னொரு நூல்.

தி நோயட்டிக் யூனிவர்ஸ் என்னும் அவரின் நூலினை நான் வாங்கி வாசிக்கத் தூண்டுதலாக இருந்தது டாக்டர் ருத்ரன் எழுதிய “தேடாதே” என்னும் சிறிய நூல். அந்த நூல் உருவாக மூல காரணம் ஓஷோவின் “தி செர்ச்” என்னும் நூல்! அது ஜென் ஆன்மிக மரபில் உள்ள “ஜென்னின் பத்து எருதுகள்” என்னும் குறியீட்டுப் படத்தின் விளக்கவுரை ஆகும். ஒவ்வொரு எருதும் மனிதப் பிரக்ஞையின் ஒரு நிலையைச் சுட்டுகின்றது. அதில் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிக்கா ஆகிய இரண்டும் சூப்பர் கான்சியஸ்னெஸ் என்னும் உயர் பிரக்ஞை நிலைகளாகும் [ஓஷோவின் மேலும் இரண்டு நூல்கள் நினைவுக்கு வருகின்றன. ஸூஃபி ஞானி ஹகீம் சனாயி எழுதிய ஹதீக்காவின் சில கவிதைகளை விளக்கி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ’யூனியோ மிஸ்டிக்கா’, மற்றும் இந்தியச் சமூக்த்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை அக்காலத்தில் உண்டாக்கி அவரை எல்லோரும் காமச் சாமியார் என்று அழைக்கக் காரணமாய் இருந்த ‘செக்ஸ் டூ சூப்பர் கான்ஷியஸ்னெஸ்’ (தமிழில் ஸ்வாமி மோகன் பாரதி இதற்கு ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்று தலைப்புக் கொடுத்தார்.) டான் ப்ரவ்னின் நாவலில் ஓரிடத்தில் ராபர்ட் லாங்டனிடம் கேத்தரின் சொல்கிறாள்: “மீவுடல் அனுபவங்கள் பற்றிய நோயட்டிக் பார்வையுடன் பாலுறவு மிக நெருக்கமாக ஒத்துப் போகிறது” (‘sex is closely related to the noetic view of out-of-body experiences.’ P.419.)].

மேலே உள்ள பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ”ஃப்யூட்டிலிட்டி” என்னும் நாவல் பற்றிய செய்தி சுவாரஸ்யமானது. அதனை மார்கன் ராபர்ட்ஸன் 1898-ஆம் ஆண்டில் எழுதினார். அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காகப் பயணிக்கும் பெரிய கப்பல் ஒன்று பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாவதுதான் நாவலின் கதை. இந்த நாவல் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டைட்டானிக் கப்பல் அதே பெருங்கடலில் அதே விதத்தில் விபத்துக்கு உள்ளானது. நாவலில் மார்கன் கப்பலுக்கு டைட்டன் என்று பெயர் சூட்டியிருந்தார்! நவீன மீவுளவியல் இதனை Precognition (முன்னறிதல்) என்றும் Titanic Premonition என்றும் கூறுகிறது.

தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் என்னும் இந்த நாவலின் அடிப்படையாக அமைவது பொருள் முதல் வாதத்துக்கும் கருத்து முதல் வாதத்துக்குமான முரணியக்கம் அல்லது மோதல் என்று சொல்லலாம். இதன் அடிப்படையிலான விவாதமும் இந்த நாவலில் பரவலாக உண்டு. இந்த இரண்டு தரப்புக்கான பிரதிநிதிகளாக இரண்டு கதைமாந்தரை டான் ப்ரவ்ன் உருவாக்கிக் கொள்கிறார்: டாக்டர் ப்ரிகிட்டா கெஸ்னர் (பொருள்முதல்வாதி), மற்றும் டாக்டர் கேத்தரின் சாலமன் (கருத்துமுதல்வாதி; நோயட்டிக் விஞ்ஞானி.) இந்த இரண்டு பெண்களுக்கு இடைநிலையில் இருப்பவர் ப்ரொஃபஸ்ஸர் ராபர்ட் லாங்டன் என்னும் குறியியலாளர்.

மனிதப் பிரக்ஞையை இந்த இரண்டு தரப்புகளும் விளக்கும் போக்குகளின் முரண்பாடு இந்த நாவலில் “Materialism versus Noetics” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மனிதப் பிரக்ஞையும்  அதில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும், அது மீவியற்கையான மீவியற்பியலான நிகழ்வுகளாக இருந்தாலும் சரியே, முழுக்க முழுக்கப் பருப்பொருளியல் நோக்கிலேயே விளக்கப்பட்டுவிட முடியும் என்றும் அவை அனைத்தும் மூளையில் இருக்கும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் உண்டாகுபவை மட்டுமே என்றும் பொருள்முதல்வாதம் கருதுகிறது. இதற்கு எதிராக நோயட்டிக்ஸ் துறையினர் தம் கருத்தை முன்வைக்கின்றனர்.  பிரக்ஞை என்பது மூளைச் செயற்பாடுகளால் உண்டாகும் ஒன்றல்ல. அது இடவெளி, காலம், மற்றும் சக்தி என்பது போல் பிரபஞ்சத்தின் அடிப்படையான ஓர் அம்சமாகும். மேலும், அது உடலுக்குள் கட்டுப்பட்டதுமன்று என்பது அவர்களின் பார்வை.

சிந்தனை அல்லது பிரக்ஞையே பருப்பொருளை உருவாக்குகிறது என்பது கருத்துமுதல்வாதம் அல்லது ஆன்மிகத்தின் பார்வை. இது மிகவும் பழமையான ஒன்றுதான். டான் ப்ரவ்ன் அதற்கான உதாரணங்களை ஓரிடத்தில் தருகிறார்:

“இந்தக் கருத்து – எண்ணங்களே எதார்த்தத்தை உருவாக்குகின்றன என்னும் கோட்பாடு – பெரும்பான்மையான ஆன்மிக போதனைகளின் மையக் கருவாக அமைந்திருக்கிறது.

புத்தர்: நம் எண்ணங்களால் உலகை உருவாக்குகிறோம்.

ஏசுநாதர்: பிரார்த்தனையில் நீ கேட்பது எதுவாயினும் அது உனதாகும்.

ஹிந்துயிசம்: இறையாற்றல் உள்ளவன் நீ.

இந்தக் கோட்பாடு நவீன முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் கலையுலக மேதைகளாலும் எதிரொலிக்கப்படும் ஒன்றுதான் என்பது லாங்டனுக்குத் தெரியும். வணிக குரு ராபின் ஷர்மா பறைசாற்றினார்: ஒவ்வொன்றும் இரண்டு முறை படைக்கப்படுகிறது; முதலில் மனத்தில், அடுத்து எதார்த்தத்தில். பாப்லோ பிக்காசோவின் மிகப் பிரபலமான மேற்கோள்: நீ கற்பனை செய்ய முடிந்த அனைத்தும் நிஜம்.” (ப.49)


இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்னும் வினாவுக்கு சமயங்கள் சொல்லி வந்த விடையையே நோயடிக் அறிவியல் தன் கோட்பாடாக முன் வைக்கிறது. அது பற்றி இந்நாவலில் கேத்தரின் சொல்கிறாள்: “இந்தக் கோட்பாடு Non-local Consciousness எனப்படுகிறது. ’பிரக்ஞை என்பது உங்கள் மூளையில் குறிப்பாக அமைந்திருக்கவில்லை (not localized in your brain)… ஆனால் அது எங்குமிருக்கிறது’ என்பதே அதன் கருதுகோள். அதாவது, பிரக்ஞை என்பது பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளது.” (ப.262).

அப்படியானால் மனித மூளையில் பிரக்ஞையே இல்லையா? என்று கேட்க வேண்டாம். டான் ப்ரவ்ன் அப்படிச் சொல்லவில்லை. மனித மூளை என்பது Clouds computing முறையில் இயங்கும் ஒரு செல்ஃபோன் மாதிரி என்று அவர் உவமை கூறி விளக்குகிறார். பிரபஞ்சமளாவிய பிரக்ஞை என்னும் மேகத்தில் (cloud) இருந்து அது தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறது. (ப.265)

இந்த பிரபஞ்சமளாவிய பிரக்ஞையை தொல் ஆன்மிக மரபுகள் பல்வேறு பெயரிட்டு அழைத்து வந்துள்ளன என்பதை லாங்டன் நினைவு கூர்கிறார்: ஆகாசவெளி [இதனைக் கடுவெளி என்று ஒரு சித்தர் பாடியுள்ளார். அவருக்குப் பெயரே கடுவெளிச் சித்தர்.], பிரபஞ்ச மனம், பிரபஞ்ச பிரக்ஞை, விண்ணுணர்வு [உணர்வு என்பது conscience, உணர்ச்சி என்பது emotion என்பார் தி.ந.ராமச்சந்திரன்.], மற்றும் கடவுளின் ராஜியம். (ப.265)

பிரபஞ்ச பிரக்ஞையில் இருந்து மனித மூளை தனக்கான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது என்பதற்கு டான் ப்ரவ்ன் தரும் இன்னொரு உதாரணம் வானொலிப் பெட்டி. பல்வேறு ஒலிபரப்பு நிலையங்களின் ரேடியோ அலைகள் இடவெளியெங்கும் விரவியுள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைக்கு வானொலிப்பெட்டி சுருதி (டியூன்) சேர்கிறது. அந்த ஒத்திசைந்த அதிர்வலை மட்டும் வானொலிப்பெட்டிக்குள் நுழைகிறது. அதைத்தான் வானொலிப் பெட்டி ஒலியாக மாற்றி வெளியிடுகிறது. மனித மூளை இந்த வானொலிப் பெட்டியைப் போல் இருக்கிறது. “மூளை ஒரு ரிசீவர் (அலைவாங்கி)… பிரக்ஞை உள்நோக்கிப் பாய்கிறது, வெளிநோக்கி அல்ல (The brain is a receiver... and consciousness flows in, not out.)” (ப.281)

                "Man with a Halo" - painting by Jean Michael Basquiat

  அறிவர், ஞானியர், இறைத்தூதர் போன்றோரைச் சித்திரிக்கும் ஓவியங்களில் அவர்களின் தலைக்கு மேல் வரையப்படும் ஒளிவட்டம் (halo) வரையப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில ஒளிவட்டங்கள் அதிலிருந்து எட்டுத் திசையிலும் பரவும் ஒளிச்சுடர்களையும் கொண்டிருக்கும். ஒளிவட்டம் குறித்து லாங்டனுக்கு கேத்தரீன் விளக்குகிறாள்: ”பொதுவாக ஒளிவட்டங்கள் என்பது ஞானியின் தலையிலிருந்து பிரக்ஞை வெளியே பாய்வதாக விளங்கப்படுகிறது. நாம் ஒளிவட்டத்தை நேர்மாறாக அர்த்தப்படுத்தி வருகிறோம். அந்த ஒளிச்சுடர்கள் பிரக்ஞையின் சுடர்களைக் குறிக்கின்றன… உள்நோக்கிப் பாய்பவை… வெளிநோக்கி அல்ல. ஒருவருக்கு ஞானமடைந்த மனம் இருக்கிறது என்று சொல்வதன் பொருள் அவருக்கு ‘சிறப்பான ரிசீவர்’ இருக்கிறது என்பதுதான்.” (ப.280)

இதை லாங்டன் சமயங்கள் கூறும் இறைத்தூதர்கள் பற்றிய செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுகிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ரிசீவர்கள்தாம் (ப.280). இந்த விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர் ஒப்புக் கொள்கிறார்.

ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், மற்றும் பிரக்ஞை மானுடவியல் முதலிய நவீன அறிவியல் துறைகள் இந்தக் கருத்துக்களை மெல்ல மெல்ல நிரூபித்து வருகின்றன. சூப்பர் பொசிஷன் என்னும் கோட்பாடு சொல்கிறது: “எல்லாப் பொருட்களும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருந்து வருகின்றன” (ப.266).

இந்நாவலில் கருத்துமுதல் வாதம் பேசப்படும் மேலும் சில இடங்கள்:

1.”உன் பிரக்ஞை உன் மூளையால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. வாஸ்தவத்தில், உன் பிரக்ஞை உன் தலைக்குள் அமைந்த ஒன்றுமல்ல.” (ப.16)

2. லாங்டன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி மரச்செறிவை நோக்கி நின்றார். அப்போது பறவைகளின் பெருங்கூட்டம் ஒன்று ஏக காலத்தில் அப்படியே கொத்தாக எழுந்து ஒன்றாகப் பறந்து வட்டமடித்தன. பறவைகளால் ஆன இன்ன வடிவமென்றில்லாத முகில் ஒன்று வானத்தின் குறுக்காக நகர்வதைக் கண்ட லாங்டன் ‘பிரபஞ்சம் என்னைப் பரிகாசம் பண்ணுகிறது’ என்று எண்ணினார். சென்ற ஆண்டு ஜோன்ஸுடன் பேசிக் கொண்டிருக்கையில், சிட்டுக் குருவிகளின் கூட்டம் ஒன்றைத் திரையில் காட்டி கேத்தரின் சொன்னது நினைவு வந்தது: “பிரிவு என்பது ஒரு மாயை. இந்தச் செயற்பாடு நடத்தை ஒத்திசைவு (behavioral synchronization) எனப்படுகிறது. இது இயற்கை முழுவதிலும் இருக்கிறது.” (ப.235). மேலும், கேத்தரின் சொன்னாள்: “குருவிகள் ஒன்றாக அசைகின்றன, ஏனெனில் அவை ஒன்றுதான்… உள்ளிணைந்த ஓர் அமைப்பு. பிரிவே இல்லை.” (ப.236)

3. பிரிவு என்பது நம் பகிர்மாயை (Seperation is our shared delusion.) (ப.236)

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்: “நாம் பிரபஞ்சம் என்று அழைக்கின்ற ஒன்றின் ஒரு பகுதியே மனிதன்… அவன் தன்னையும் தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றையும் ஏனையவற்றிடம் இருந்து பிரிந்தவையாக அனுபவம் கொள்கிறான். இது அவனின் பிரக்ஞையில் உண்டாகியுள்ள ஒருவிதத் தோற்ற மயக்கம் (optical delusion). இந்த மயக்கம் நமக்கு ஒருவிதமான சிறை.”

[ஒப்பீடு: அ) “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?” – மகாகவி பாரதியார். ஆ) “சொந்தச் சிறைகள்” – கவிக்கோ அப்துல் ரகுமான்.] (பக்.236-237).

            5.”உலகில் நாம் தனித்திருக்கிறோம் என்று நினைத்தது மனிதகுலத்தின் மிகப்பெரிய பகிர்மாயை என்பதை நாம் ஒருநாள் காணத்தான் போகிறோம்.” (ப.237)

(to be continued...)


Sunday, November 2, 2025

வாசிப்பு வடிகட்டி


என் வீட்டு நூலகத்தைப் பார்த்துவிட்டு இத்தனை நூல்களா என்று வியந்தவர்கள் உண்டு. ‘இவ்வளவு நூல்களையும் படித்திருக்கிறீர்களா?’ என்று ஒருவர் கேட்டிருக்கிறார். உண்மையில் என் வீட்டு நூலகம் அத்தனை பெரியது கிடையாது. இரண்டாயிரம் நூல்கள் இருக்கலாம். இடத்தை அடைக்கிறதே என்று முன்பு ஒருமுறை பல நூல்களை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். எனக்குத் தேவைப்படும் என்று நினைத்த நூல்களை மட்டும் வைத்திருக்கிறேன். ஆனால், அது முற்றுப் பெற்ற சேகரம் அல்ல. அறிவுத் தேடல் உள்ள ஒருவரின் நூலகம் ஒருபோதும் முற்றுப் பெற முடியாது. அது எப்போதும் வளர்ந்து கொண்டே போகும். என் சேகரமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

            இதுவரை நான் வாசித்த நூல்களின் எண்ணிக்கையை நான் கணக்கு வைக்கவில்லை. பெரிய எண்ணிக்கை ஒன்றைச் சொல்லுவதில் பெருமிதமும் இருக்க முடியாது. “நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்” என்று திருவள்ளுவர் குட்டு வைக்கிறார். உன்னதமான ஒரே ஒரு நூலை மட்டும் கசடறக் கற்பது நிச்சயமாக ஒரு பெரிய சாதனைதான். அப்படிக் கற்றவர்கள் இருக்கிறார்கள். அந்தரிகி வந்தனமு (salutations to them all).


            ஒருமுறை, ”இவ்வளவு நூல்களைப் படித்தால் மண்டை குழம்பிவிடாதா?” என்று என்னிடம் மாணவன் ஒருவன் கேட்டான். “அது ஒருவரின் brain capacity - மூளைத் திறனைப் பொறுத்தது. பத்து நூல்கள் படித்து மண்டை குழம்பிப் போகிறவனும் உண்டு. பத்தாயிரம் நூல்கள் படித்தாலும் இயல்பாக இருப்பவனும் உண்டு” என்று சொன்னேன். வாசித்ததை எல்லாம் நினைவில் வைக்க வேண்டும் என்று கவல்பவன் நிச்சயமாக வாசிப்பால் மனப் பிறழ்வே அடைவான்.

            வாசிப்புப் பழக்கமும் இசைத்திறனும் உள்ள தாவரவியல் பேராசிரியரான என் நண்பர் அஸ்லம் ஒருமுறை தொடர் புத்தக வாசிப்புப் பற்றி மாணவர்களிடம் இப்படிச் சொன்னார்: “Cruising through knowledge.” இந்த வாசகம் எனக்கொரு உவமையைச் சிந்திக்கத் தருகிறது. கடலில் செல்லும் மீன்பிடிப் படகு. திருலோக சீதாராமின் நூல் தலைப்பும் நினைவுக்கு வருகிறது: “இலக்கியப் படகு.”



            பாத்திரக் கடல், ஜவுளிக் கடல் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே, அது போல் நூல்களின் சேகரத்தை புத்தகக் கடல் என்று கற்பனை செய்யலாம். மனம் என்னும் படகை வாசகன் அந்தக் கடலில் செலுத்துகிறான். மீனவர் கடலுக்கு தினமும் செல்வது போல் அன்றாட வாசிப்பு.

மீனவர் கடல் நீரை அள்ளி படகுக்குள் நிரப்ப மாட்டார். அது போல் வாசிக்கும் எல்லாச் சொற்களையும் நம் மனதிற்குள் நிரப்புவது இல்லை.

மீனவர் கடலின் விளைச்சலான மீன்களை வலை வீசிப் பிடிக்கிறார். வாசகன் அது போல் தன் ரசனை அல்லது சிந்தனை என்னும் வலையை வீசி ஒரு நூல் தருகின்ற முக்கியமான கருத்துக்களை மட்டும் பிடித்துக் கொள்கிறான்.

மீனவர் தான் பிடித்த எல்லா மீன்களையும் தானே சாப்பிடுவதில்லை. வாசகன் தான் அள்ளி வந்த எல்லாக் கருத்துக்களையும் செரித்துக் கொள்வதில்லை. சில நூற்கள் ருசிக்கத் தக்கவை, வெகு சில நூற்களே செரிக்கத்தக்கவை என்பர். அப்படிச் செரிக்கின்ற கருத்துக்கள்தாம் ஒருவரின் ஆளுமையை உருவாக்குகிறது.

”தி புக் லெகாஸி” என்னும் முகநூல் வாய்க்காலில் நேற்று வாசிப்புக் குறித்து ஒரு சிறிய நீதிக் கதையைப் படித்தேன். அதை இங்கே தமிழாக்கித் தருகிறேன்:

 ஆர்வமுள்ள சீடன் ஒருவன் தன் ஆசானிடம் கேட்கிறான், “நான் ஏகப்பட்ட நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நூல்கள் மறந்து போய்விட்டன. படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?”

ஆசான் அவனை மௌனமாகப் பார்த்தார். அவன் வினாவுக்கு அவர் விடை ஏதும் சொல்லவில்லை.

சில நாட்கள் கழிந்தன. அவர்கள் ஆற்றங்கரை ஒன்றில் அமர்ந்திருந்தனர். திடீரென்று அந்த முதிய ஆசான் அவனிடம் சொன்னார்: “எனக்கு தாகமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. ஆனால், அங்கே தரையில் கிடக்கும் பழைய வடிகட்டியில் அள்ளி வா.”

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஓட்டைகளால் ஆன வடிகட்டியை வைத்து எப்படி நீரை அள்ள முடியும்?” என்று மனதில் எண்ணினான். ஆனால் ஆசானிடம் வாதாடும் தைரியமும் இல்லை. அவன் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். அவர் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். வேறு வழியின்றி துரு ஏறிக் கிடந்த அந்தப் பழைய வடிகட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றில் நீர் சேந்தச் சென்றான்.

ஒருமுறை, இருமுறை, பலமுறை அவன் நீர் அள்ள முயன்றபோதும் ஒரு சொட்டு நீரைக் கூட அள்ள முடியவில்லை. எப்படி முடியும்? தன் உள்ளங்கையால் ஓட்டைகளை அடைத்துக்கொண்டு அள்ளிப் பார்த்தான். அப்போதும் தண்ணீர் வழிந்து போனது.

களைத்தும் வெறுத்தும் அவன் ஆசானிடம் திரும்பி வந்தான். “மன்னியுங்கள் ஆசானே! என்னால் நீர் அள்ளி வர முடியவில்லை. அதற்குச் சாத்தியமே இல்லை” என்றான்.

ஆசான் அவனைக் கனிவாகப் பார்த்துச் சொன்னார், ”பரவாயில்லை. உன் மீது குற்றம் ஏதுமில்லை. வடிகட்டியை வைத்து நீர் அள்ள முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்போது உன் வடிகட்டியைப் பார்.”

அப்போதுதான் அவன் தன் கையில் வைத்திருக்கும் வடிகட்டியை கவனித்துப் பார்த்தான். துருவேறிய பழைய வடிகட்டி இப்போது புத்தம் புதுசு போல் பளபளத்தது. அதில் தண்ணீர் தங்கவே இல்லை என்றாலும் நீரோட்டம் அதைக் கழுவி சுத்தமாக்கி விட்டிருந்தது.

ஆசான் அவனிடம் சொன்னார்: “வாசிப்பு இதைத்தான் செய்கிறது. ஒவ்வொரு தகவலையும் நீ நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வடிகட்டியில் நீர் போவது போல் நீ வாசிப்பதெல்லாம் நழுவிப் போகிறது என்றாலும் கவலை இல்லை. ஏனெனில், நீ வாசிக்கும்போது உன் மனம் புத்துயிர் பெறுகிறது. உன் ஆன்மா புதிதாகிறது. உன் சிந்தனைகளில் உயிர்வளி ஏறுகிறது. அதை நீ அப்போது கவனிக்காமல் இருந்தாலும் ஒவ்வொரு கணமும் நீ உள்ளும் புறமும் மாற்றப்பட்டு வருகிறாய்.”

அதுதான் வாசிப்பின் உண்மையான நோக்கம். உன் நினைவை நிரப்பிக் கொள்வது அல்ல; உன் மனம் மாசில்லாமல் தூய்மை அடைவது!

மேற்சொன்ன கதை நன்றாகத்தான் இருக்கிறது. நூறு சதவிகித உண்மை என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். ஆனால், என்னால் அப்படி ஏற்க முடியவில்லை. என் வாசிப்பும் அனுபவமும் வேறு விதமாகச் சொல்கிறது.

எல்லா நூல்களும் மனதைச் செம்மைப்படுத்தி விடாது. மனதைக் கெடுக்கக் கூடிய நூல்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, மனதைத் தூய்மை ஆக்கக் கூடிய நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப் படித்தால்தான் உண்டு. அப்படிப் படித்தாலும் ஒருவரின் மனம் தூய்மை ஆகிவிடும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. வேதத்தையே படித்தாலும் மனக் கசடு நீங்காதார் உண்டு. ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று ஒரு சொலவம் இருக்கிறதே!

நிறைய நூல்களை வாசித்து நான் கண்டு கொண்ட உண்மைகளில் ஒன்று, வாசிப்பதால் மனம் தூய்மை அடையாது என்பதுதான். ’வித்யா கர்வம்’ என்னும் படித்த ஆணவம் வேண்டுமானால் உண்டாகும், நிறைய பேருக்கு அப்படி உண்டாகி விடுகிறது. வெகு சிலரே அதிலிருந்து தப்பிக்கின்றனர். அதற்கு ஆன்மிகப் பயிற்சி வேண்டும்.

தன்னார்வமாக வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்பவர்களுக்கே இந்த நிலை என்றால், கல்விப் புலம் சார்ந்து பட்டங்களைச் சேகரிப்பவர்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள்தாம் படித்த முட்டாள்களாக உருவாகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பட்டங்கள் பெற்றவர், எண்பது வயதில் தன் பிஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவர் என்கிற ரீதியில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது அவர்கள் மீது பரிதாபம்தான் தோன்றுகிறது. எப்படிப்பட்ட வடிகட்டிய முட்டாள்கள். இந்தப் பட்டங்களால் சமூகத்தில் தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் இவர்கள். முறைசார் கல்வி என்பது ஓர் அரசியல் பெருமிதம். அதைப் பற்றி அறிவுலக மேதைகள் எவ்வளவு ஒவ்வாமையுடன் சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சற்று சிந்தித்தால் போதும், அது எவ்வளவு போலித்தனமானது என்பது விளங்கும்:



”மனிதர்கள் அறிவிலிகளாகப் பிறக்கின்றனர், முட்டாள்களாக அல்ல. கல்விதான் அவர்களை முட்டாள்கள் ஆக்குகிறது!” (“Men are born ignorant, not stupid. They are made stupid by education”) என்கிறார் பெட்ரண்ட் ரஸ்ஸல்.

“கல்வியையும் நுண்ணறிவையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஒரு பிஎச்டி (முனைவர்) பட்டம் இருக்கும் நிலையில் நீ ஒரு முட்டாளாக இருக்கலாம்” (“Never confuse education with intelligence. You can have a PhD and still be an idiot”) என்கிறார் விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்.

           “படிப்பு என்பது வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச் சம்பளத்துக்கு வழிதேடிக் கொள்ளும் முயற்சி” என்கிறார் சிந்தனையாளரும் இலக்கிய மேதையுமான ஜெயகாந்தன்.

            இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்றால், உண்மையான கல்வி எது? உண்மையான அறிவு எது? நூல்களை வாசிப்பதால் பெறப்படும் அறிவுக்கு எல்லை இருக்கிறது. அதற்கு அப்பால்தான் மெய்யறிவு உள்ளது என்று உணர்வதே அதன் ஆரம்பம் ஆகும். அந்த மெய்யறிவை அடைவதற்கான பயிற்சி முறையே ஆன்மிகம். அதுவே உண்மையான கல்வி.

           ”நான் இன்னும் மெய்யறிவில் செம்மை நிலையை அடையவில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் எனக்கு இன்னமும் நூல்களை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது” என்று ஸூஃபி மகான் ஹக்கீமி ஷாஹ் ஃபைஜி அவர்கள் என்னிடம் ஒருமுறை சொன்னார்கள். மெய்யறிதலின் புலத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவர்க்கு நூல்கள் தேவைப்படாது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் நூல்களே வாசிக்க மாட்டார்கள் என்பது இதன் அர்த்தமன்று. தனக்குத் தேவைப்படாத நிலையிலும் தன்னால் வழிகாட்டப்படும் சாதகர்களின் தேவை கருதி ஓர் ஆசான் நூல்களின் வாசிப்பைத் தொடர்பவராக இருக்கலாம். மகான் அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சொன்னது என் நிலையை எனக்கு உணர்த்துவதற்கான வழிகாட்டல் என்றும் நான் புரிந்துகொண்டேன்.

        நூல்கள் வாசிக்கும் ஆர்வம் எனக்கு இன்னமும் தொடர்கிறது; அகத்தைத் தூய்மையாக்கும் ஆன்மிகப் பயிற்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.