Wednesday, July 15, 2015

ரமலான்’2015 part-2


இறைவன் சங்கை (கரீம்) ஆனவன்:
’யா அய்யுஹல் இன்சானு மா கர்ர(க்)க பிரப்பி(க்)கல் கரீம்” – “மனிதனே! சங்கையான உன் ரட்சகனை விட்டும் உன்னை மருட்டியது எது?” (82:6)
(எனவே மாயை (குரூர்) விலகும் போது இறை பிரக்ஞை (தக்வா) தோன்றுகிறது)

சங்கையான இறைவன் அருளிய வேதமும் சங்கை (கரீம்) ஆனது:
”இன்னஹு லகுர்ஆனுன் கரீம்” – “நிச்சயமாக இது சங்கை மிக்க குர்ஆன்” (56:77)

அந்த வேதம் அருளப்பட்ட மாதம் ரமலான். அதுவும் சங்கை (கரீம்) ஆனது:
”ஷஹ்ரு ரமலானல்லதீ உன்ஸில ஃபீஹில் குர்ஆன்” – “ரமலான் எத்தகைய மாதம் எனில் அதில் குர் ஆன் இறக்கப்பட்டது” (2:185)

ரமலானில் கடமை ஆக்கப்பட்டுள்ள நோன்பின் நோக்கம் தக்வா. அதனை அடைந்தவர்களும் சங்கை (கரீம்) ஆவார்கள்:
“இன்ன அக்ரம(க்)கும் இந்தல்லாஹி அத்கா(க்)கும்” – நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிகவும் சங்கையானவர் உங்களில் தக்வா உள்ளவரே” (49:1)
l

நாம் இங்கே நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருக்கிறோம். இது ஏதோ விருந்து என்பது போல் ஆக்கப்பட்டு விட்டது. சிறப்பு இஃப்தார் விருந்துகள் என்னும் பெயரில் அரசியல் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. அதற்கும் நோன்பின் நோக்கத்திற்கும் எள் முனை அளவும் தொடர்பு இல்லை. ஆன்மிக விருந்தாக இருக்க வேண்டிய ஒன்று அரசியல் விருந்தாக மலிந்துவிட்டது.

’இஃப்தார்’ என்னும் சொல்லின் ரகசியங்களை அறியாமல் நாம் அதை ஆன்மிக விருந்தாக்க இயலாது. இஃப்தார் என்றால் திறப்பு என்னு பொருள். எனவேதான் தமிழில் நாம் இதனை ‘நோன்பு திறத்தல்’ என்று சொல்கிறோம். இந்தச் சொல்லின் உட்பொருள்கள் நமக்குத் திறந்தாக வேண்டும்! இல்லை எனில் நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்ற இயலாமல் போய்விடும்.

”ஃபாத்திஹா” என்றாலும் திறப்பு என்றுதான் பொருள். அதன் வேர்ச்சொல் ‘ஃபதஹ’ என்பது. திறத்தல், வெற்றி பெறல் என்பது அதன் அர்த்தங்கள். ஃபத்ஹ் என்றால் வெற்றி. 

ஃபலாஹ் என்றாலும் வெற்றி. தொழுகைக்கு அப்படி ஒரு பெயர் உண்டு. ஃபலாஹ் என்னும் தொழுகையில் ஃபாத்திஹா என்னும் திறப்பே வெற்றியின் வாசல் ஆகிறது.

இஃப்தார் என்னும் திறப்பு கொஞ்சம் வித்தியாசமானது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பது. உடைத்துத் திறத்தல் என்பது இதன் பொருள். எனவேதான் நோன்பு திறத்தல் என்பதை ஆங்கிலத்தில் ‘break fast’ என்று சொல்கிறோம்.

’ஃபலக’ என்றாலும் உடைத்துத் திறத்தல் என்று பொருள் உண்டு. “ஃபலக்” என்றால் வைகறை, விடியல். அதனை ஆங்கிலத்தில் ‘day break’ என்று சொல்கிறோம்.

மூடியிருக்கும் கதவுகளைத் திறப்பதற்கும் அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

இஃப்தார் என்னும் திறப்பு அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பது போல. இன்னும் பொருத்தமாகச் சொல்வதெனில் தட்டித் திறப்பது. இது முட்டையின் ஓட்டினை உடைப்பது போன்றதல்ல. அது வெறும் உடைத்தல், திறத்தல் அல்ல.

ஃபலக, ஃபதஹ, ஃபதர என்னும் இம்மூன்று வேர்ச் சொற்களில் இருந்தும் இறைவனைக் குறிக்கும் மூன்று திருநாமங்கள் உண்டு: அல்-ஃபாலிக், அல்-ஃபத்தாஹ், அல்-ஃபாத்திர்.

”இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வன்-நவா” – “நிச்சயமாக அல்லாஹ்வே விதைகளையும் கொட்டைகளையும் பிளப்பவன்” (6:95)

”ஹுவல் ஃபத்தாஹுல் அலீம்” – “அவனே திறப்பாளன் அறிவாளன்” (34:26)

அல்ஹம்துலில்லாஹி ஃபாத்திருஸ் ஸமாவாத்தி வல் அர்ள்” – “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” (35:1)

இம்மூன்று பெயர்களுக்கும் ஒன்றுடன் ஒன்று ஆழமான அர்த்தத் தொடர்புகள் உண்டு.
விதைகளைப் பிளந்து திறத்தலைக் குறிப்பிடும் வசனத்தில் இறைவனுக்கு “ஃபாலிக்” என்னும் பெயர் சொல்லப் பட்டுள்ளது. விதை பிளப்பதற்கு அறபியில் ’ஃபலாஹ்’ என்னும் சொல்லும் உண்டு. அதற்கு ’வெற்றி’ என்று அர்த்தம். பாலை மணலில் பேரீத்தம் விதை பிளந்து முளை விடுவது என்பது உண்மையில் மாபெரும் வெற்றி அல்லவா? ஃபதஹ் என்றாலும் வெற்றி.

ஃபலக் என்றால் விடியல். இறைவன் தானொரு மறைந்த பொக்கிஷமாக இருந்த நிலை, படைப்புக்கள் வெளிப்படாமல் இருந்த நிலை, அவை அதமிய்யத் non-existence என்பதாக இருந்த நிலை, பேரிருள் என்று உருவகம் பெறும். எனவே படைப்பு வெளிப்படத் தொடங்கிய நிலை விடியல் ஆகும். ஃபாலிக் என்னும் சொல் விதைகளைப் பிளப்பவன் எனில், படைப்புக்களின் முதல் விடியலும் பிரபஞ்ச விதையின் பிளப்பிலிருந்து வந்ததே. அந்தப் பிரபஞ்ச விதை “முஹம்மதின் ஒளி” (நூரே முஹம்மதி) எனப்படுகிறது.
இனி இஃப்தார் என்பதன் பக்கம் கவனம் செலுத்துவோம்.

இஃப்தார் என்றால் திறத்தல். ஆனால் திறப்பவன் யார்?

அல்லாஹ்வின் பெயர் “அல்-ஃபாத்திர்”. அதாவது அல்லாஹ்வே ஃபாத்திர் (திறப்பவன்). அவனை அன்றித் திறப்பவன் வேறு யாரும் இல்லை. லா ஃபாத்திர இல்லா ஹுவ.  

என்னில் நோன்பைத் திறப்பவன் அவனே. ஏனெனில், என்னில் நோன்பை வைத்தவனும் அவனே. வைத்தவன்தானே திறக்கவும் வேண்டும்!

”அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி” – “நோன்பு எனது. அதற்கு நானே நற்கூலி தருகிறேன்” (புகாரி, முஸ்லிம், மாலிக், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா).

நோன்பு அவனது என்னும் போது அதனை அவன் அன்றி வேறு எவர் திறக்க முடியும்?

”வல்லதீ ஹுவ யுத்-இமுனீ வ யஸ்கீனி” – ”அவனே எனக்கு உணவூட்டுகிறான், அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்” (26:79)

உணவும் பானமும் அடியானுடன் தொடர்பு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் உணவும் பானமும் அடியானின் தேவைகள். பசியும் தாகமும் அடியானின் நிலைகள். 
இறைவனுக்கு அந்நிலைகள் இல்லை. அவனுக்கு உணவு பானம் தேவை இல்லை.

உணவையும் பானத்தையும் அடியானுடன் தொடர்பு படுத்தி, ஊட்டுதல் குடிப்பாட்டுதல் ஆகிய செயல்களை இறைவனுடன் அடையாளப்படுத்த வேண்டும். இந்த அகப்பார்வையே ’தக்வா’. அடியானின் உண்ணுதல் பருகுதலில், அந்த அடியானுக்கு ஊட்டுபவனாக, அந்த அடியானிலேயே அல்லாஹ்வை நோட்டமிடுவது தக்வா என்னும் நிலை ஆகும்.

இஃப்தார் என்பதன் வேர்ச்சொல்லான ஃபதர என்பதில் இருந்து ஃபித்ரத் என்னும் சொல் கிளைக்கிறது. ஃபித்ரத் என்றால் இயல்பு இயற்கை என்று பொருள். பசியும் தாகமும் நமது ஃபித்ரத். ”நோன்பு எனது” (அஸ்ஸவ்மு லீ) என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் என்ன? உணவும் பானமும் இணைவிழைச்சும் தேவை இல்லாத நிலை என்பது இறைவனின் இயல்பு. அவன் நம்மில் தனது இயல்பை வெளிப்படுத்திப் பார்ப்பதே நோன்பு. நோன்பாளி தன்னில் அவனையே நோட்டமிட வேண்டும். அதுவே தக்வா என்னும் இறைப் பிரக்ஞை ஆகும்.

இஃப்தார் என்பது நோன்பைத் திறப்பது எனில், திறந்து காணும் பொருள் யாது? அவனேதான்!

“வ அனா அஜ்ஸீ பிஹி” – “அவனுக்கு நானே நற்கூலி தருகிறேன்” என்பதன் உட்பொருள் என்ன? “அவனுக்கு நானே நற்கூலி” என்பதுதான். இறைவன் அடியானுக்குத் தன்னையே தருகிறான் என்பதன் பொருள், அடியானுடன் அவன் எப்போதும் இருக்கிறான் என்னும் உணர்வை அனுபவத்தை அந்த அனுபவத்தின் பரவசத்தைத் தருகிறான். தன் இருப்பின் பிரக்ஞையை அடியானுக்கு அருள்கிறான். அந்தப் பிரக்ஞை நோன்பு திறந்த பின்னும் அடியானில் தொடர்ந்து வரும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் பெருநாளும் ”ஈதுல் ஃபித்ரு” என்பதாகவே பெயர் பெறுகிறது. ரமலான் முழுவதும் ஒரு நோன்பு நிலையாகப் பார்க்கப் பட்டால், பெருநாள் அந்த நோன்பின் இஃப்தார் ஆகிறது!

நாம் மீண்டும் நமது இயல்புக்குத் திரும்பி விடுகிறோம் என்பது மட்டுமல்ல ஈதுல் ஃபித்ரு. ரமலான் மாதத்தில், ஒவ்வொரு நாளும் இஃப்தாரில் அடையப் பெற்ற தக்வா என்னும் இறை ப்ரக்ஞையைப் பேணியபடி இனி வாழப்போகிறோம் என்பதே அதன் தாத்பரியம்.
l

நாம் இங்கே இஃப்தாருக்காக அமர்ந்திருக்கிறோம். நம் முன் பல வகையான உணவுகளும் பானங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் தக்வா செய்ய வேண்டிய பயிற்சியே இந்த இஃப்தார்.

நோன்பாளியான என்னில் மட்டுமா அல்லாஹ் இருக்கிறான்? இந்த உணவுகளிலும் பானங்களிலும் அவனே பிரசன்னமாகி இருக்கிறான். இதை உணர்ந்து கொள்ளவே இஃப்தார்.

என்னில் நோன்பைப் பேணியதும் அவனே; என்னில் நோன்பைத் திறப்பதும் அவனே.
நோன்பாளிக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நேரம்.

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: “லிஸ்ஸியாமி ஃபர்ஹ(த்)தானி யஃப்ரஹுஹுமா இதா அஃப்தர ஃபரிஹ வ இதா ல(க்)கிய ரப்பஹு ஃபரிஹ பிஸவ்மிஹி” – “நோன்பாளிக்கு இரண்டு பேரின்பங்கள் உண்டு. ஒன்று இஃப்தாரில். மற்றொன்று அவன் தனது ரட்சகனைச் சந்திக்கும்போது, நோன்பின் காரணமாக.” (புகாரி: கிதாபுஸ் ஸவ்ம்: 1904)

இறைவனின் திருக்காட்சியால் அடையும் இன்பத்துடன் இஃப்தாரின் இன்பம் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது அந்த இன்பத்தின் மேன்மையைக் காட்டுகிறது.

பொதுவாக, எது ஒன்றிற்காக நாம் காத்திருக்கிறோமோ அதன் நினைவு நமக்கு அடிக்கடி வருவது மனித இயல்பு. எது ஒன்றின் தேவை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறதோ அதன் நினைவு அடிக்கடி வந்துகொண்டிருப்பது தவறு என்று சொல்ல முடியாது.

நோன்பு வைத்திருக்கும் நிலையில் மனதில் உணவு பானம் பற்றிய நினைவு, கற்பனை வந்து கொண்டே இருப்பது மனித இயல்புதான். நமது ஃபித்ரத் அது. ஆனால் நமது ஃபித்ரத்தில் அல்லாஹ்வின் ஃபித்ரத்தை நோட்டமிடவும் வேண்டும்.

மறுமையில் இறைவனின் லிகா (சந்திப்பு) என்பதுதான் பேரின்பம் எனில் இம்மை முழுவதும் அந்த தரிசன இஃப்தாருக்கான நோன்புதான். அந்த லிகாவின் நினைவிலேயே ஒருவன் மூழ்கி இருப்பது இபாதத் (வழிபாடு) அல்லவா?

அப்படியானால், நோன்பின் பேரின்பம் இஃப்தாரில் எனில் அந்த இஃப்தாரின் நினைவில் மனம் மூழ்கி இருப்பதும் இபாதத் (வழிபாடு)தானே? ஏனெனில், நோன்பாளியிடம் உணவு பானம் ஆகியவற்றின் கோலத்தில் சந்திக்க வருபவன் அந்த இறைவனே! இறைவன் எந்தக் கோலத்தில் (ஷகல்) என்னிடம் வரவிருக்கிறானோ அந்தக் கோலத்தின் நினைவு எதார்த்தத்தில் அவனின் நினைவே!

தக்வா இல்லை நீங்கள் ஷகலைப் பார்த்து ஏமாந்து போவீர்கள். (இறைப் பிரக்ஞை இல்லை எனில் நீங்கள் கோலத்தைப் பார்த்து ஏமாந்து போவீர்கள்).

ஷகலின் நிஸ்பத்தில் அவனது ஷுகலை அடையும் தருணமே இஃப்தார் (நோன்பு திறப்பு என்பது கோலத்தின் தொடர்பில் அவனது அனுபவத்தை அடையும் தருணமே ஆகும்).

மறுமையில் புறக்கண்களாலும் இறைவனை தரிசிக்கும் பேரின்பம் இருக்கிறது. 

இம்மையில், அகக்கண்களால் இறைவனை தரிசிக்கும் பேரின்பத்தை அடைவதற்கான பயிற்சியே இஃப்தார். எனவே இஃப்தாரின் இன்பம் இறைச் சந்திப்பின் இன்பத்துடன் சொல்லப்பட்டது. 

ரமலான்’2015 part-1

{இவ்வருடத்தின் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட சிந்தனைகள் பல. அவற்றில் இந்தப் பதிவுகள் சில.}


இரண்டு மாதங்களாக நாம் எதிர்பார்த்த புனித மாதமான ரமலான் வந்திருக்கிறது. இன்னொரு விதத்தில் இந்தப் புனித மாதத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

ரமலான் மாதம் நம்மை நோக்கி வந்ததா? நாம் ரமலான் மாதத்தை நோக்கி வந்தோமா? அதாவது, காலம் நம்மை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது நாம் காலத்தை நோக்கிப் பயணிக்கிறோமா? இது சிந்தனைக்கு உரியது. இரண்டு விதமாகவுமே பார்க்க முடியும்.

ரஜப் மாதத்தின் பிறை தோன்றி விட்டால் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்:

”அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான்” (நூற்கள்: தபரானி, அஹ்மத்)

”அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அபிவிருத்தி அருள்வாயாக! மேலும், ரமலான் மாதத்தை நாங்கள் அடையச் செய்வாயாக.”

இதில், ரமலானை நோக்கிய நமது நகர்வு சுட்டப்படுகிறது. காலத்தின் கட்டங்களுக்குள் நாம் பயணிக்கிறோம்.

ரமலான் மாதத்தை அடைந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தம் தோழர்களிடம் சொன்னார்கள்:

”அதா(க்)கும் ரமலானு ஷஹ்ருன் முபார(க்)குன்...” (நஸாயீ:2106)

“புனித மாதமான ரமலான் உங்களிடம் வந்துள்ளது...”

இதில், நம்மை நோக்கிய ரமலானின் நகர்வு சுட்டப்பட்டுள்ளது. காலம் நம்மில் பயணிக்கிறது!

நாம் காலத்தில் பயணிக்கிறோம்; காலம் நம்மில் பயணிக்கிறது.

கடலில் மீன் நீந்தித் திரிகிறது; கடலும் தன்னுள் பல நீரலைகளாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

நம்மில் காலம் வெளிப்படுகிறது; காலத்தில் நாம் வெளிப்படுகிறோம். ரமலானில் நாம், நம்மில் ரமலான் என்று ஆகிறோம்.

”ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர ஃபல்யஸும்ஹு” (2:185) என்று அல்லாஹ் சொல்வதைக் கவனியுங்கள். இத்திருவசனப் பகுதியில் உள்ள ஷஹித என்னும் சொல்லைக் கொண்டு பலவிதமான மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.


”எவர் அந்த மாதத்தை தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்கிறது sahih international மொ.பெ. ஷஹித என்னும் சொல்லை அது ‘sight’ என்று அர்த்தப் படுத்துகிறது. எனவே, ”எவர் அந்த மாதத்தை (அதில் பிறையை) தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்று அடைப்புக் குறியிட்டு, பிறை பார்த்தல் என்பதாக பாவிக்கிறது.

இன்னொரு மொழிபெயர்ப்பு: “உங்களில் எவர் அதில் பிரசன்னமாகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” (’And whosoever of you is present, let him fast the month’ tr. Muhammad Marmaduke Pikthall).

இதில் ஷஹித என்னும் சொல் பிரசன்னம் (presence) என்று பாவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் இந்த வசனப் பகுதி இவ்வாறு மொழிபெயர்க்கப் படுகிறது: “உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்”. (முஹம்மத் ஜான் ட்ரஸ்ட்)

இம்மூன்று அர்த்தங்களுமே ஒன்றுதான்: தரிசித்தல், இருத்தல், அடைதல். இந்த மூன்று பண்புகளும் இதயத்துடன் தொடர்புள்ளவை. இந்தப் பண்புகள் எந்த மனிதனின் இதயத்தில் உள்ளதோ அத்தகைய மனிதனே நோன்பின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். 

அதாவது, நோன்பின் நோக்கத்தை ஒருவன் அடைய வேண்டும் எனில் அவனிடம் இருக்க வேண்டிய தகுதிகள் இவை. அவனுடைய உள்ளம் அகப்பார்வை (பஸாரத்) கொண்டதாக, பிரசன்னம் (ஹள்ரத்) உள்ளதாக, அடைதல் (வஜ்த், ஷுகல்) உள்ளதாக இருக்க வேண்டும். மொத்தமாகச் சொல்வதெனில், அவன் ’ஷாஹித்’ (சாட்சியாளன், witness) ஆக இருக்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் என்ன? அதைப் பின்வரும் திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“யா அய்யுஹல்லதீன ஆமனூ குதிப அலைக்குமுஸ் ஸியாமு கமா குதிப அலல்லதீன மின் கப்லி(க்)கும் லஅல்ல(க்)கும் தத்தகூன்”

“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மீது நோன்பு கடமை ஆக்கப் பட்டிருக்கிறது, உங்களுக்கு முன் இருந்தோரின் மீது கடமை ஆக்கப் பட்டதைப் போலவே, நீங்கள் தக்வா அடைவதற்காக” (2:183)

நோன்பு கடமை ஆக்கப் பட்டதில் இந்த நோக்கத்தை வைத்துத்தான் முன் இருந்த சமூகங்களுக்கும் நமக்குமான நோன்பின் ஒப்புமை. அதாவது, அவர்களுக்கும் ரமலான் மாதம் முழுவதும் வைகறை முதல் அந்தி வரை என்னும் அமைப்பில் நோன்பு விதிக்கப் பட்டிருந்ததாக அர்த்தம் அல்ல. நோன்பின் அமைப்பு எப்படியாக இருந்தாலும் சரி, எல்லாச் சமூகங்களுக்கும் நோன்பின் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தக்வா. அதை அடைவதற்காகவே நோன்பு கடமை ஆக்கப்பட்டது.

நோன்பின் நோக்கம் ’தக்வா’ என்று இவ்வசனம் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் தக்வா என்பது என்ன என்பதில்தான் தெளிவு இல்லாமல் சமுதாயம் குழம்புகிறது!

மேற்சொன்ன திருவசனத்தில் ”ல-அல்ல(க்)கும் தத்தகூன்” – “நீங்கள் தக்வா அடைவதற்காக” என்னும் பகுதியை எவ்வாறு அர்த்தப் படுத்தி மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனிப்போம்.

”நீங்கள் நேர்மையாளர் ஆவதற்காக” - that you may become righteous என்கிறது சஹீஹ் இண்டர்னேஷனல் மொ.பெ.

”நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” – that ye may ward off (evil) என்கிறது பிக்தாலின் மொ.பெ.

”நீங்கள் சுயக் கட்டுப்பாடு கொள்வதற்காக” - that ye may (learn) self-restraint என்கிறது யூசுஃப் அலிய்யின் மொ.பெ.

இந்த மொழிபெயர்ப்புக்கள் எல்லாமே தோராயமாகவும் பூடகமாகவுமே உள்ளன. இவற்றின் அர்த்த நீட்சிகளை நாம் கண்டறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இல்லை எனில் தக்வா என்னும் கோட்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தக்வா என்பதோ மிகவும் முக்கியமான ஒன்றாக, நோன்பின் நோக்கமாக இருக்கிறது.

மேற்சொன்ன மூன்று மொழி பெயர்ப்புக்கள் தரும் அர்த்தங்கள் அனைத்துமே தக்வா என்னும் சொல் உணர்த்தும் பண்பின் பரிமாணங்களைக் காட்டுபவைதான். இம்மூன்றும் ஒன்று சேரும் புள்ளி தக்வா எனலாம். இவை எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை நாம் காண வேண்டும்.

நேர்மை, தவிர்தல், சுயக் கட்டுப்பாடு ஆகிய மூன்றும் எப்போது தக்வாவை உருவாக்கும்?
“இத்தகூ ஃபிராஸத்தல் முஃமின்” என்று ஒரு ஹதீஸில் வருகிறது. அதாவது, “இறை நம்பிக்கையாளனின் அகப்பார்வையைத் தவிர்த்துக் கொள்”.

மேற்சொன்ன மொ.பெயர்ப்புக்களில் “நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” என்று யூசுஃப் அலி அவர்கள் தரும் மொழி பெயர்ப்பு ’ஷரீஅத்’ என்னும் நிலையில் நின்று பேசுகிறது. ஆனால் தக்வா என்பதன் தத்துவ விளக்கம் அந்த நிலையோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதன் அந்தரங்க நிலைகளை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

திருக்குர்ஆனில் தக்வா என்பது இறைவனுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.

”ஃபத்த(க்)குல்லாஹ்” – “நிச்சயமாக அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (3:50; 3:123; 5:100; 8:1; 11:78; 26:108,110,126,131,144,150,163,179; 43:63; 64:16; 65:10)

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ வ கூனூ ம-அஸ் ஸாதி(க்)கீன்” -  ”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள். மேலும், சத்தியவான்களுடன் ஆகிவிடுங்கள்” (9:119)

”வத்த(க்)குல்லாஹ ரப்ப(க்)கும்” – “உங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (65:1)

இந்தத் திருவசனங்களில் எல்லாம் தக்வா என்பது “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” “fear Allah” என்பதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தக்வா என்றால் இறையச்சம் என்பதாகவே பரவலாகப் பொருள் செய்யப்படுகின்றது. அவாம் என்னும் பொது மக்களின் நிலையைப் பொருத்த வரை இந்த அர்த்தம் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகத்தில் இது ஆரம்ப நிலை மட்டுமே. இறையச்சம் என்பது ’தக்வா’வின் பிள்ளைப் பருவம். சிறு பிள்ளைகளிடம் வளர்ந்தவர்களும் அவர்களின் பாஷையிலேயே பேசவேண்டி இருக்கிறது. ஆனால், வளர்ந்தவர்களுக்கு ’தக்வா’வின் அடுத்தடுத்த கட்டங்கள் தேவையாகின்றன.  

உண்மையில் (இறை) அச்சம் என்பதைக் குறிக்க வேறு அறபிச் சொற்கள் இருக்கின்றன. ஃகவ்ஃப் மற்றும் ஃகஷ்யா.

”வ லிமன் ஃகாஃப மகாம றப்பிஹி ஜன்ன(த்)தான்” – “தன் ரட்சகனின் நிலையை அஞ்சியவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உண்டு” (55:46)

இன்னொரு திருவசனம் அச்சம் (ஃகஷ்யா) என்பதையும் தக்வா என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறது:

“வ ம(ன்)ய்யுதி-இல்லாஹ வ ரசூலஹு வ யஃக்‌ஷல்லாஹ வ யத்தக்ஹி ஃப-உலா-இக ஹுமுல் ஃபா-இஸூன்” – “எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வை அஞ்சி மேலும் அவனைத் தக்வா செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” (24:52)

இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று கவனிக்கத் தக்கது:

“And whoever obeys Allah and His Messenger and fears Allah and is conscious of Him - it is those who are the attainers.” (மொழிபெயர்ப்பு: Sahih International)

இங்கே தக்வா என்பது அல்லாஹ்வைப் பற்றிய பிரக்ஞை – God-consciousness என்பதாக அர்த்தம் செய்யப்பட்டுள்ளது. தக்வா என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுதான்.

தமிழில் இவ்வசனத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றில், ஃகஷ்யா மற்றும் தக்வா ஆகிய இரண்டையும் ஒற்றைச் சொல்லாக ’பயபக்தி’ என்று தந்திருக்கிறார்கள்:

“இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்” (ஹாஜி முஹம்மது ஜான் ட்ரஸ்ட்)

பயபக்தி என்பதில் பயம் என்பது ஃகஷ்யா, பக்தி என்பது தக்வா.

பக்தி என்றால் என்ன என்னும் கேள்விக்கு விளக்கம் ’ஒவ்வொரு கணமும் இறைவனைப் பற்றிய பிரக்ஞையுடன் இருப்பது’ – to be God-conscious every moment என்பதே.

இந்த இறைப் பிரக்ஞையை அடைவது எப்படி? அதற்கான முறைகளை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ ஹக்க து(க்)காத்திஹி” – “விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள், அவனது தக்வாவிற்கான முறைப்படி” (3:102)

அவனது தக்வாவிற்கான முறை, அவனது பிரக்ஞைக்கான முறை என்பது தனித்தன்மையான ஒன்று என்பதை இதனால் விளங்கலாம். அப்படித்தானே இருக்க முடியும்? படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞையும் படைத்தவனைப் பற்றிய பிரக்ஞையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்?

 படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞை மாயைகளால் உண்டாகிறது.

வ மல் ஹயாத்துத் துன்யா இல்லா ம(த்)தா-உல் குரூர்” - “இவ்வுலக வாழ்க்கை மாய சுகமே அன்றி வேறில்லை” (57:20)

படைத்தவனைப் பற்றிய பிரக்ஞை என்பது அந்த மாயைகளைக் களைவதால் உண்டாகும் ஒன்று. எனவே அதற்கான வழிமுறைகள் தனித்தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். சூஃபி ஆன்மிகப் பள்ளிகள் (தரீக்கா) அந்த வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன.

இறைவன் எங்கோ படைப்புக்களை விட்டும் தனித்து இருக்கிறான் என்றால் அவனைப் பிரக்ஞை கொள்வது என்பது ’இங்கே’ சாத்தியமில்லாமல் போய்விடும். பிரக்ஞை கொள்வது என்பது இருப்பை உணர்வது என்பதாகும்.


இங்கே இறைவனைப் பிரக்ஞை கொள்வது என்பதன் பொருள் இங்கே அவனது இருப்பை உணர்வதுதான். சிருஷ்டியில் இறைவனை அறிவதும் உணர்வதும் அடைவதும் தக்வா ஆகும்.

Monday, December 29, 2014

’மௌலாயே ஹிந்த்’ கலீமிஷாஹ் நூரி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்)

(23-11-2014 அன்று இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து மறுவுலகப் பயணம் சென்றுவிட்ட இறைநேசர் ஞானி மகான் சய்யிதுனா கலீமி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் நாற்பதாம் நாள் நினைவு நிகழ்ச்சி இன்று. அன்னாரின் நினைவில் 'கலீமி' இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.) 


சய்யிதினா பீர் முஹம்மத் உமர் ஆமிர் கலீமி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்)...

      லட்சோப லட்சம் இதயங்களில் இறைஞானத்தின் பேரொளியை ஏற்றி வைத்து மண்ணறைக்குள் மலர்ந்ததொரு சொர்க்கப் பூங்காவில் இன்று மணாளராக மகிழ்ந்திருக்கும் மகான் அவர்களின் பெயரைச் சொன்னால் போதும், முரீதீன்களின் மூச்சுக்கள் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்னும் திக்ரை ஓதும். இதன் பொருள் என்ன?

      ”எவரைக் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வருகின்றதோ அவரே வலியுல்லாஹ்” என்னும் ஹதீஸிற்கேற்ப இம்மண்ணில் காட்சி தந்த கருணைக் குருநாதர் எங்கள் காமில் வலீ கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு).

      ’ஹதீஸெ கதீர் ஃகும்’ என்னும் நபிமொழியை இவ்விடம் நினைவு கூர்தல் வேண்டும். அதன்படிக்கு, ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்கள் தமது உம்மத்திற்கு ஹிதாயத்திற்காக தந்து சென்ற இருபெரும் விஷயங்கள் (ஸகலைன்) ஆவன: அல்-குர்ஆன் மற்றும் அஹ்லெ பைத் என்னும் நபிக்குடும்பத்தார் ஆவர். மறுமையில் ஹவ்ளுல் கவ்தரில் ரசூலெ கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களை உம்மத்தினர் சந்திக்கும் வரை இவ்விரண்டும் ஒன்றை விட்டும் மற்றொன்று பிரியாது. (நூற்கள்: சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத், அல்-முஃஜமுல் கபீர் அத்-தப்ரானீ, கன்ஸுல் உம்மால்)

      ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் முபாரக்கான இதயத்தில் உள்ள ஏகத்துவ மெய்ஞ்ஞானப் பேரொளி அவர்களது உம்மத்தினருக்கு இந்நாள் வரை தொடர்ந்து கிடைத்து வரும் ஆன்மிக வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புலனாகும். அதாவது, இஸ்லாமிய ஆன்மிகச் சுடரை உம்மத்தினரின் உள்ளங்களில் ஏற்றி வைக்கும் அரும்பணியை அவனியில் ஆற்றிவரும் தரீக்காக்களின் மாபெரும் ஆரிஃபீன்கள் அவ்லியாக்கள் முர்ஷீதீன்கள் காமிலீன்களில் பெரும்பான்மையோர் சாதாத்மார்களாக – அஹ்லெ பைத்தின் வமிசத்தார்களாக இருக்கின்றார்கள். அன்னவர்களைக் கொண்டே அல்லாஹு தஆலா தனது திருமறையின் அகமிய ஞானங்களை உம்மத்தினரிடம் சேர்ப்பித்து ஹிதாயத்தில் நடத்திச் செல்கிறான்.

      அதாவது, “விலாயத்” என்னும் இறைநேசம் அருளப்படுவதற்கு ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் புனித வமிசம் ஃகாஸ்ஸான காரணமாக உள்ளது. இதர முஸ்லிம்களில் ’விலாயத்’ என்னும் இறைநேசம் அருளப்படுவது அந்தப் புனித நபிவமிச இறைநேசச் செல்வர்களை உரிய முறையில் மதித்துக் கொண்டாடுவதைக் கொண்டே அமையும்.

      அஃலா ஹழ்றத் அஹ்மத் ரஸா ஃகான் பரேலவி (அலைஹிர் ரஹ்மா) அவர்கள் சொல்வதுதான் எத்தனை நிதரிசனமானது:
      ”தேரீ நஸ்லெ பாக் மே(ன்) ஹே பச்சா பச்சா நூர் கா
      தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா”
இந்த வரிகளுக்கு வாழும் உதாரணமாக நபிவம்சத் தோன்றலான கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரிசுத்தக் குடும்பம் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.



      கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் புனித வமிசத் தோன்றலாக – ஹஸனியுல் ஹுஸைனியாக - இருக்கின்றார்கள் என்பது மட்டுமன்று, இறைமறையாம் திருக்குர்ஆனின் விளக்கங்கள் பொங்கும் இதயம் அருளப்பட்ட மாபெரும் முஃபஸ்ஸிராகவும் இருந்தார்கள். அவர்களுடைய ஆரிஃபானா தஃப்ஸீர் லட்சக்கணக்கானோரின் அகக்கண்களைத் திறந்து வைத்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

      பேச்சுத் திறமை என்பது ஆலிம்கள் பலரிடமும் இருக்கலாம். ஆனால் ஆரிஃப் பில்லாஹ்வாகிய கலீமிஷாஹ் சர்கார் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்தக் காலகட்டத்தின் முதகல்லிம்களின் ஷாஹ்வாக – பேச்சாளர்க்ளின் பேரசரராக விளங்கியதற்குக் காரணம் கலாமுல்லாஹ்வை விளக்கித் தரும் கலீமாக அல்லாஹ் அவர்களை ஆக்கி வைத்தான் என்பதுதான்.

      அந்தச் சிறப்பான மகாமை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பதும் கவனத்திற்குரியது.

      சய்யிதுனா இஸ்மாயீல் (அலைஹிஸ் சலாம்) அவர்கள் ’தஹீபுல்லாஹ்’ என்னும் அந்தஸ்த்தினை அடைவதற்குக் காரணம் யாது? மதறஸாவில் ஓதிப் பெற்ற பக்குவம் அல்ல. அன்னாரின் தந்தையும் முர்ஷிதுமான சய்யிதுனா இப்றாஹீம் (அலைஹிஸ் சலாம்) அவர்களின் அகப்பார்வையின் அருளே அந்த நிலைக்கு அவர்களை தர்பிய்யத் செய்து உயர்த்தியது என்கிறார்கள் அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா):
      ”யெ ஃபைஸானெ நழர் தா யா கெ மக்தப் கி கராமத் தீ
      கிஸ்னே சிகாயா இஸ்மயீல் கோ ஆதாபெ ஃபர்ஸந்தீ”

      ஆன்மிக அருள்கள் அகத்தில் பொங்க வேண்டும் எனில் ஷைகெ காமில் என்னும் இறைநேசச் செல்வரின் தொடர்பு அவசியமாகும். இதனை வலியுறுத்தவே மாபெரும் வலிமார்கள் எல்லாம், அவர்களில் பலரும் நபிவமிசத்தின் நஸ்ல் காரணமாக பிறப்பிலேயே விலாயத் அருளப் பெற்றவர்களாய் இருந்தபோதும் தமக்கொரு முர்ஷிதைத் தேடி அடைந்து அவர்களிடம் தம்மை ஒப்படைத்தார்கள்.

      அவ்வகையில் கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்மை எந்த முர்ஷிதே காமிலிடம் ஒப்படைத்தார்களோ அந்த ஞானப் பேரொளியான நூருல் மஷாஇஃக் சய்யிதுனா நூரிஷாஹ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களும் நபிவமிசத் தோன்றலாக, கௌதுல் அஃழம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருப்பேரராக விளங்குகிறார்கள். அத்தகைய நூருல் மஷாஇஃகின் புனித தாத்தில் தன்னை ஃபனா ஆக்கிக் கொண்டவர்களாக கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) இருக்கின்றார்கள்.

      மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களின் நினைவு இங்கே வருகின்றது. ஏனெனில், கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஃபஸ்ஸிருல் குர்ஆன்-ஆகப் பிராகசித்ததோடு ஷாரிஹே மஸ்னவியாகவும் திகழ்ந்தார்கள். அன்னாரின் புனிதப் பிள்ளையாகிய அலீமிஷாஹ் நாயகம் (தாமத் பரகாத்துஹும்) அவர்களையும் ஷாரிஹெ மஸ்னவியாக நமக்குத் தந்திருக்கிறார்கள். தமது திக்ரு மஜ்லிஸில் மவ்லானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) இயற்றிய மஸ்னவி ஷரீஃபின் பைத்துக்களைப் பாடித் தொடங்கவும் விரும்பியிருக்கிறார்கள்.

      இவற்றை நோக்கும்போது  மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களுக்கும் கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் இடையே ஆழமான ஒப்புமைகளை அடியேன் காண்கிறேன்.

      மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள். ஷம்ஸுத்தீன் என்றால் ‘மார்க்கத்தின் சூரியன்’ என்று பொருள் அல்லவா? சூரியன் என்பது இங்கே அதன் தன்மைக்கு ஆகுபெயராய் நின்று ‘நூர்’ என்னும் ஒளியைக் குறிக்கின்றது அல்லவா? அன்று மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களுக்கு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்னும் நூர் – ஒளி கிடைத்ததைப் போன்றே நமது கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் குருநாதராக சய்யிதுனா நூரீஷாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்னும் நூர் குருநாதராக அமைந்தார்கள்.

      ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தம்மை ஒப்படைக்காத வரை விலாயத்தின் வாசல் தனக்குத் திறக்கவில்லை என்பதை மௌலானா ரூமி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதற்கு முன் அவர்கள் மதறாவில் மார்க்கக் கல்வியைக் கற்ற மாபெரும் ஆலிமாக, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உஸ்தாதாக இருந்தார்கள். ஆனால், ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் ’ரூம்’ என்று அழைக்கப்பட்ட அக்காலத்துப் பாரசீகப் பரப்பில் வாழ்ந்த பாமரர்களின் உள்ளங்களில் எல்லாம் இறைக்காதலின் நெருப்பைப் பற்ற வைக்கும் வலியுல்லாஹ்வாக அவர்கள் ஆனது ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆன்மிகத் தொடர்பினாலேயே ஆனது.
      ”மௌலவி ஹர்கிஸ் மௌலாயே ரூம் ந ஷுத்
      தா குலாமே ஷம்ஸி தப்ரேஸ் ந ஷுத்”

      கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களும் இவ்வாறே தம்மை நூருல் மஷாஇஃக் அவர்களிடம் ஒப்படைத்ததால் ‘ஷம்ஸுல் முஃபஸ்ஸிரீன்’ என்னும் உயரிய அந்தஸ்த்தினை அடைந்தார்கள். ரசூலே கரீம் ((ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் அகமியமான விளக்கங்களைத் தனது முபாரக்கான இதயத்தில் பெற்றுக்கொண்டார்கள். அன்னார் இதனைச் சொல்கிறார்கள்:
      ”ஆமிர் ந முஃபஸ்ஸிர் தா ஆலிம் தா ந ஆரிஃப் தா
      நூரீ சே படீ உஸ்னே தஃப்சீர் முஹம்மத் கீ”

      சய்யிதுனா நூரீஷாஹ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களுக்குப் பின் அமைந்த ’மௌலாயே ஹிந்த்’-ஆக அவர்களை நாம் காண்கிறோம். இந்தியா நெடுகிலும் அன்னாரின் பெயரால் ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகள் நடைபெற்று வருவதும் லட்சக்கணக்கான முரீதீன்கள் இருப்பதும் இதற்குக் கட்டியம் சொல்லும்.

      இக்காலத்தில் ஆன்மிக ஞானமும் பேரின்பமும் நலிந்து வரும் நிலையை நாம் பார்க்கிறோம். ஹிஜாஸின் காற்றில் இஷ்க்கே ரசூலின் நறுமணம் இன்று இருக்கிறதா? நஜ்தில் உதித்த கர்னுஷ் ஷைத்தானின் வஹ்ஹாபிசக் கொம்போசையில் உம்மத்தினரின் அகச்செவிகள் செவிடாகி விட்டனவா? ஒரு நூற்றாண்டிற்கு முன்பே ஓர் இதயம் இந்த இழிநிலை கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தது. என்ன செய்ய வேண்டும் எனப்தையும் சுட்டிக் காட்டியது. ஆம், அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா) சொல்கிறார்கள்:
      ”வக்தஸ்த் கெ பக்‌ஷாயம் மைஃகானாயெ ரூமி பாஸ்
      பீரானே ஹரம் தீதம் தர் சஹ்னெ கலீசா மஸ்த்”
      (காலம் வந்துவிட்டது, ரூமியின் பேரின்பக் கூடத்தை மீண்டும் திறக்க
      அறபு நாட்டின் மதத்தலைவர்கள் கிறித்துவத்தின் போதையில் கிடக்கிறார்கள்)

தமிழ்நாட்டில், தலைநகர் மதறாஸில், ’மைஃகானாயெ ரூமி’யைத் திறந்து ’கஷ்ஃபெ இர்ஃபான்’ என்னும் பேரின்பப் பானம் ஊட்டப்படுவதை ஆரம்பித்து வைத்தவர்கள் நமது கலீமி நாயகம் (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களாவர். இந்த இறைக்காதலின் போதை என்பது உஜூதே முத்லக்கின் ஷுஹூதில் லயித்திருக்கும் சுஜூதினால் உண்டாகும் ஹால் ஆகும். இதனையே நமது கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘மஹ்வெ சுஜூத்’ என்பதாக நமக்கு அருளியிருக்கிறார்கள்.

      காமில் வலீ சய்யிதுனா முஹம்மத் உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரி (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் வசீலாவைக் கொண்டு அன்னாரின் பரிசுத்த தாத் அடைந்து கொண்ட பாக்கியத்தின் ஃபைஸானை அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் காயிம் தாயிமாக அருள்வானாக.

     
      (ஓய்வு நேரம் எங்கே? வேலை இன்னும் இருக்கின்றது
       தவ்ஹீதின் ஒளி முழுமை பெற வேலை இன்னும் இருக்கின்றது
-அல்லாமா இக்பால் (ரஹ்))



யா அல்லாஹ்! உனது வலீயே காமில் சய்யிதுனா கலீமிஷாஹ் நூரீ (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) ஆன்மிகப் பணியை ஊழிப் பரியந்தம் ஆழ்ந்தும் பரந்தும் இவ்வுலகெங்கும் செழிக்கச் செய்து ஆன்மிகப் பிரகாசத்தை அடியவர்களின் உள்ளங்களில் எல்லாம் இலங்கச் செய்வாயாக! பிஜாஹி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ சஹ்பிஹி வ சல்லம்).

Wednesday, September 10, 2014

யாதும் ரோஜாவின் பெயரும் - part3

”ஷைகுல் அக்பர்” (மாபெரும் ஞானகுரு) என்று சூஃபி உலகில் போற்றப்படும் முஹய்யுத்தீன் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த “ஸ்பெய்ன்” நாட்டில் மூர்சியா என்னும் ஊரில் கி.பி.1165-ல் பிறந்தார். அரபு மொழியில் வியத்தகு புலமையும் மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடும் அருளப்பட்டவர். நூற்றுக்கணக்கில் நூற்கள் எழுதியிருந்தாலும் அவரின் மிக முக்கியமான நூற்களாக “ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா” (The Meccan Openings, மக்கத்துத் திறப்புக்கள்) மற்றும் “ஃபுஸூசுல் ஹிகம்” (The Bezels of Wisdom, மெய்ஞ்ஞான ஒளிச்சுடர்கள்) ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவ்விரண்டு நூற்களுடன் இன்னொரு நூலையும் அடியேன் இணைத்துக் கூற விரும்புகிறேன்: “தர்ஜுமானுல் அஷ்வாக்” (The Interpreter of Desires, ஆசைகளின் விளக்கவுரை). ஏனெனில், இந்நூல் இப்னு அரபியின் இளமைக் காலத்துடன் தொடர்புடையது. சிறு வயதிலேயே அவர் எத்தகைய இறைஞானியாக இருந்தார் என்பதற்குக் கட்டியம் கூறுவது. புரிந்து கொள்ள மிகவும் கடினமானது.
ஷைகுல் அக்பர் இப்னுல் அரபியின் தாக்கம் தாந்தேவின் மீது இருந்தது என்பது கிறித்துவ மற்றும் சூஃபி இலக்கியங்களில் பரிச்சயம் கொண்ட எவரும் உணரக்கூடிய ஒன்றே. அப்படி உணர்ந்து கொண்டவர்களுள் சிலரின் கருத்துக்களைத் தருகிறேன்.
இத்ரீஸ் ஷா: “தாந்தேவின் காவியமான ‘டிவைன் காமெடி’ போன்றவற்றின் மூலவூற்றுக்கள் சூஃபி இலக்கியங்களே என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனினும், ரசவாதிகளுக்கு அவரின் சூஃபித் தொடர்புகள் பற்றிய பரிச்சயம் எப்போதுமே இருந்திருக்கும்.” (Idries Shah, “The Sufis”, Anchor Books, New York, 1971, page228).
இஃது இறைவன் தன்னுடன் தானே ஆடிக்கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டின் ஒரு பகுதி என்று இந்து மற்றும் சூஃபி ஞானிகள் சொல்கிறார்கள். வாஸ்த்தவமாக, நம் இளம் ஞானி (இப்னுல் அரபி)யைப் போல் இதற்கொரு தத்துவத்தை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு எவரும் இல்லை. இறைக்காதல் பற்றிய அவரின் கோட்பாடுகள் அவரை இஸ்லாமிய உலகம் முழுவதிலும் பிரபலமாக்கியது. தாந்தேவுக்கு நூறு வருடங்கள் முன்பு பிறந்தவரான இப்னுல் அரபியின் கவிதைகளும் தத்துவங்களுமே பீட்ரிஸ் பற்றிய தாந்தேவின் கவிதைகளுக்குத் தூண்டுதலாகவும் வெளிச்சமாகவும் இருந்தன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.” (’wings of desire (a parable)” http://www.tangdynastytimes.com, )
இப்னுல் அரபி பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். ஸ்பெய்ன் நாட்டின் மூர்சியா நகரில் பிறந்த அவர் கி.பி.1240-ல் தனது எழுபத்தைந்தாம் வயதில் டமஸ்கஸ் நாட்டில் உள்ள ஜபல் காஸியூன் என்னும் ஊரில் இறந்தார். வட ஆஃப்ரிக்காவில் மொராக்கோ நாட்டில் உள்ள ’ஃபேஸ்’ என்னும் நகரில் குறிப்பிட்ட காலம் வசித்திருக்கிறார். அவ்வூரில் நடைபெறும் சூஃபி கலாச்சார விழா பற்றி எழுதும்போது ஃபிட்ஸ்ராய் மாரிஸ்ஸே சொல்கிறார்: “முதல் நாள் முழுவதும் சுற்றி அலைந்த பிறகு எங்களுக்கொன்று தெளிவானது. அதாவது நாங்கள் முன்பு நினைத்திருந்தது தவறு, இப்னுல் அரபி அவர்கள் ஃபேஸ் நகரில் அடக்கப் படவில்லை. ஆனால் இந்த ஊருடன் அவருக்கு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. இன்னும் திட்டமாகச் சொல்வதெனில், கி.பி.1195 முதல் 1199 வரை அவர் இவ்வூரில் வாழ்ந்திருந்த காலத்தில்தான் அவர் ஆன்மிக விண்ணேற்றத்தை விவரிக்கும் கிதாபல் இஸ்ராஃ என்னும் நூலினை எழுதினார். இந்நூலின் விவரணைகள் தாந்தேவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகின்றது. அவரின் பாரிய நூற்கள் எழுதப்படும் முன்பே இந்நூல் எழுதப்பட்டுவிட்டது என்பதை அறிய ஃபேஸில் அவரிருந்த நான்கு வருடங்களும் அவரது சிந்தனையின் உருவாக்கத்தில் இன்றியமையாத இடம் வகிப்பதை எண்ணி எமது பயணம் உத்வேகம் பெற்றது.” (Fitzroy Morrissey  , “Ibnul Arabi and the Fez Festival of Sufi Culture”,  http://fezsufifestival.tumblr.com).

பீர் ஜியா இனாயத் ஃகான்: “மேற்கின் சூஃபி ஞான கிரகிப்பைத் தடம் பார்ப்பது மிகவும் கடினமானது. காரணம், மேற்கின் நூற்களில் அவற்றின் கடன் வாங்கலைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இருப்பதில்லை. ரேமன் லல் தனது ‘Book of Lover and the Beloved” என்னும் நூலுக்கு எழுதிய அறிமுகம் ஒரு விதிவிலக்கு. காதல் பற்றிய தனது அகதரிசனங்களுக்கு சூஃபிகளே உள்ளுணர்வை நல்கினார்கள் என்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். …. … … … … தாந்தே ஒரு சுவையான உதாரணம். குய்டோ காவால்காண்டி உடன் சமகாலத்தில் அவர் கொண்டு வந்த ’இனிமையான புதிய பாணி’யை தீவானெ மஜ்னூன் போன்ற அரபி இலக்கியப் பிரதிகளுடனும் பாரசீக ஆன்மிகக் காதல் பள்ளியுடனும் இப்னு ஹஸ்ம் போன்ற அந்தலூசியக் கவிஞர்கள் மற்றும் அழகியல் அறிஞர்களின் உளவியலுடனும் ஒப்பிட்டுக் காணும்போது அது புதிய ஒன்றல்ல என்பதை உணரலாம். …… ….. ……. தாந்தேவின் வானவரியல் அல்-ஃபாராபி, இப்னு சீனா, அல்-கஸ்ஸாலி மற்றும் இப்னு ருஷ்த் ஆகியோரின் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மிகவும் தோய்ந்திருக்கிறது. டிவைன் காமெடியில் அவர் சித்தரிக்கும் விண்ணேற்றம் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணேற்றத்தை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எனவே, நரகத்தின் எட்டாவது வட்டத்தில் முஹம்மது நபி தனது நெஞ்சம் பிளக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தாந்தே எழுதியிருப்பது மிகவும் வஞ்சகமான முரணாகும். சூஃபி இலக்கியங்களுடனான தனது சாய்வை மறைப்பதற்காக தாந்தே இவ்வாறு எழுத வேண்டி இருந்தது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் போப்பாண்டவர்களையும் நரகில் தள்ளுவதற்கான துணிச்சல் அவருக்கிருந்தது.
முஹம்மத் (ஸல்) பற்றிய தாந்தேவின் சித்தரிப்பு திருக்குர்ஆனின் 94-வது அத்தியாயத்தின் முதல் வசனத்தை வைத்துக்கொண்டு தாந்தே செய்த வஞ்சகமான கற்பனை என்று எனது நண்பர் ஓமித் சஃபி தனது புதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ”இன்ஷிராஹ்” (விரிவாக்கம்) என்னும் அந்த அத்தியாயம் நபியின் நெஞ்சை இறைவன் திறந்து அன்னாரின் இதயத்தைப் பரிசுத்தம் செய்ததைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், மத்தியத் திரைக்கடல் பள்ளத்தாக்கில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உண்டான ஈர்ப்பு மற்றும் பகைமைக்கு தாந்தே சிறந்த உதாரணமாக இருக்கிறார்.” (http://www.sevenpillarshouse.org/article/on_prophecy_and_time).
  • இனி, ஷைகுல் அக்பர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்ததாக விவரிக்கும் அனுபவத்தைப் பார்ப்போம். இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த அபூ ஷஜா ழாஹிர் பின் ருஸ்தம் என்னும் சூஃபி குருநாதரின் மகளான நைஸாம் குறித்து அன்னார் கூறுகிறார்கள்: “இந்த குருவிற்கு ஒரு மகள் இருந்தாள். காண்போரின் பார்வையை ஸ்தம்பிக்க வைத்துவிடும் அழகு கொண்டவள். அவளின் இருப்பே எமது சபைக்கு அலங்காரமாகவும் ஆன்மிக ஒளிகொண்டு காணும் நபர்களை வியப்பில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. அவளின் பெயர் நைஸாம். “ஐனுஷ்ஷம்ஸ் வல் ஜமால்” (சூரியன் மற்றும் அழகின் கண்) என்பது அவளின் சிறப்புப் பெயர். கற்றவளாகவும் தூய குணம் கொண்டவளாகவும் ஆன்மிக அனுபவமும் பக்தி வாழ்வும் கொண்டவளாகவும் இருந்த அவள் புனித பூமி முழுவதின் தொன்மையும் நபிக்கு விசுவாசமான மாநகரின் அழகிய இளமையும் உருக்கொண்டவளாக இருந்தாள். அவளின் பார்வை, அவளது உரையாடலின் பாந்தம் ஆகியவை எத்தகைய காந்தம்! குழப்பமும் எதிர்ப்பும் செய்யும் மட்டமான மனங்கள் மட்டும் இல்லை எனில் நான் இங்கே அவளது ஆன்மாவினது போன்றே தேகத்தின் அழகுகள் பற்றியும் விளக்கிச் சொல்வேன். அது அருட்கொடைகளின் தோட்டம். அவள் எனது கவிதைகளுக்கான அகத்தூண்டுதலாக இருந்தாள். நான் அனுபவித்த மேன்மையான காதல் பற்றி, இந்த இளம்பெண்ணின் சகவாசம் என் இதயத்தில் ஏற்படுத்திய விழிப்பைப் பற்றி, என் ஆன்மா அனுபவித்த உணர்வு பற்றி எழுத இயலாதவனாக இருக்கிறேன். அவள் எனது தேடலின் பொருளாகவும் எனது நம்பிக்கையாகவும் மிகவும் தூய கன்னியாகவும் இருந்தாள்.

இந்நூலில் நான் எப்பெயர் சொல்லினும் அவளையே அது குறிக்கின்றது. எந்த வீட்டிற்கு நான் சரமம் பாடினும் அவளின் வீட்டையே எண்ணுகிறேன் நான். தெய்வீக உதிப்புக்கள், ஆன்மிகச் சந்திப்புகள், வானவருலகின் அறிவுகளுடனான இந்தப் பூவுலகின் இயைபுகள் ஆகியன பற்றிக் கூறுவதில் நான் ஒருபோதும் சுணங்குவதில்லை. இது ஏனெனில், இந்த உலகை விடவும் மறைவான உலகின் விஷயங்களே என்னை மிகவும் கவர்கின்றன. நான் எதைப் பற்றிக் கவிதை எழுதுகிறேன் என்பதை இந்த இளம்பெண் மிக நன்றாகவே அறிந்திருந்தாள்.”
இவ்வாறு இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் அறிமுகப்படுத்தும் நைஸாம் அன்னாரின் புனிதப் பயணத்தில் வேறொரு பரிமாணத்தில் அவர் முன் தோன்றுகிறாள். அவர் சொல்கிறார், “ஓர் இரவு நான் கஃபாவை இடஞ்சுற்றிக் கொண்டிருந்தேன். சட்டென்று சில கவிதை வரிகள் என் இதயத்தில் உதித்தன. கேட்கும் அளவு அவற்றை நான் சப்தமாகப் பாடினேன். அவற்றை முடிக்கும் முன், பட்டினும் மென்மையான கை ஒன்று என் தோளைத் தொடுவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் முன் இளம்பெண் ஒருத்தி நின்றிருக்கக் கண்டேன். ஈரானில் பிறந்தவள் அவள். கிரேக்கத்து இளவரசிகளில் ஒருத்தி அவள். புனித மக்காவில் வாழ்கிறாள். முகத்தின் அழகிலும், பேச்சின் மென்மையிலும், இதயத்தின் நுட்பத்திலும் அவளினும் மேம்பட்ட ஒரு பெண்ணை அதுவரை நான் கண்டிருக்கவில்லை.” இந்நிகழ்வு கி.பி.1201-ல் நடைபெற்றது.
இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் இந்த அனுபவங்களின் உள்ளே பொதிந்து கிடக்கும் ஞானத்தைக் காண்பதற்கு முன் இந்த நிகழ்ச்சி விவரணையின் தாக்கம் கலீல் ஜிப்ரானின் மீது எவ்வாறு இருந்தது என்பதை முறிந்த சிறகுகள் நாவலின் சில பகுதிகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். தாந்தேவிடம் காணப்படாததும் இப்னுல் அரபியிடம் காணப்படுவதுமான இந்தச் சரித நிகழ்வின் சாயலை நாம் கலீல் ஜிப்ரானிடம் பார்க்கிறோம். இந்தத் தாக்கத்தை, அடியேன் அறிந்த அளவில், இதுகாறும் எவரும் கண்டறிந்து எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. லெபனான் நாட்டின் மகாகவியான கலீல் ஜிப்ரான் அரபி மூல மொழியிலேயே இமாம் கஸ்ஸாலி, இப்னுல் அரபி, இப்னு சீனா போன்றோரின் நூற்களைப் படித்த கிறித்துவர் என்பதை இங்கே நினைவில் வைப்போம். இனி அவரது “முறிந்த சிறகுகள்” நாவலின் சில பகுதிகள்:

“சில நாட்களில் தனிமை என்னைப் பீடித்தது. நூற்களைப் பார்த்தாலே அலுப்பாக இருந்தது. வாடகைக்கு வண்டி எடுத்துக் கொண்டு ஃபாரிஸ் எஃப்பாண்டியின் இல்லத்திற்குக் கிளம்பினேன். மக்கள் சுற்றுலாவிற்கு வருகின்ற பைன் மரங்களை அடைந்த போது வண்டியின் ஓட்டுநர் சற்றே ஓய்வெடுக்க ஒதுங்கினார். இருபுறமும் வில்லோ மரங்கள் நிழலிட்டிருந்தன. அவற்றைக் கடந்த போது பசும்புல்லின் அழகு பரந்து கிடந்தது. அப்பால் திராட்சைத் தோட்டங்களும் வசந்த கால ஆரம்பத்தின் பல வண்ண மலர்களும் காட்சி அளித்தன.
சில நிமிடங்களில், அழகிய தோட்டம் ஒன்றின் நடுவில் தனித்து நின்ற ஒரு வீட்டின் முன்னால் வண்டி நின்றது. ரோஜா மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றில் நிறைந்திருந்தது. இறங்கி நான் அந்த விசாலமான தோட்டத்தில் நடந்த போது என்னை வரவேற்க ஃபாரிஸ் எஃப்பாண்டி வருவதைக் கண்டேன். இதயம் தோய்ந்த வரவேற்புடன் அவர் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்று என்னருகில் அமர்ந்து கொண்டார். தன் மகனைக் காணுமோர் அன்பான தந்தை போல் எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய திட்டங்களையும் எனது படிப்புப் பற்றியும் விசாரித்தார். என் குரலில் உற்சாகமும் தெம்பும் பொங்க நான் பதில் கூறினேன். ஏனெனில், அப்போது எனது செவிகளில் மகத்துவத்தின் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது, நான் நம்பிக்கையான கனவுகளின் கடலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, வெண்ணிறப் பட்டாடை அணிந்த ஓர் இளம்பெண் வெல்வெட் திரைகளின் ஊடாகத் தோன்றி என்னை நோக்கி நடந்து வந்தாள். நானும் ஃபாரிஸ் எஃப்பாண்டியும் எழுந்து நின்றோம்.
“இவள் என் மகள் சல்மா” என்று அந்த வயோதிகர் சொன்னார். என்னை அவளிடம் அறிமுகம் செய்துவைத்துச் சொன்னார், ”விதி இந்த மகனின் ரூபத்தில் எனது பழைய நண்பனை என்னிடம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.” சல்மா என்னை ஒருகணம் பார்த்தாள், அந்நியன் ஒருவன் தமது இல்லத்தினுள் எப்படி நுழைந்தான் என்று துணுக்குற்றது போல். அவளின் கை வெண்ணிற அல்லி மலர் போல் இருந்தது. அதை நான் தொட்டபோது ஒரு வினோத வலி என் இதயத்தைத் தைத்தது.” (”முறிந்த சிறகுகள்”, அத்தியாயம் #3: ‘ஆலயப் பிரவேசம்’).
சல்மாவின் சந்திப்பு அவரில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். சில பத்திகள்:
“ஒவ்வொரு சந்திப்பும் அவளின் அழகிற்கான புதிய அர்த்தத்தை எனக்குத் தந்து அவளின் இனிய ஆன்மாவின் மீதான அகப்பார்வையை நல்கிற்று. ஒவ்வொரு பக்கத்தையும் நான் புரிந்து கொண்டு அவளின் புகழ்களைப் பாடும்படியான, ஆனால் ஒருபோதும் நான் படித்து முடிக்க இயலாததான புத்தகமாக அவள் ஆனாள். தெய்வீக ஆட்சியால் ஆன்மாவிலும் உடலிலும் அழகு நல்கப்பட்ட ஒரு பெண் சத்தியம் ஆவாள். ஏகநேரத்தில் அவள் வெளிப்பாடாகவும் ரகசியமாகவும் இருக்கிறாள். காதலால் மட்டுமே அவளை நாம் புரிந்துகொள்ள முடியும், நற்பண்பால் மட்டுமே தொட இயலும். அத்தகைய ஒரு பெண்ணை நாம் விவரிக்க முயலும் போது அவள் நீராவி போல் மறைந்து விடுகிறாள்.”
“அதிகம் பேசுவதை விடவும் சல்மா மிக ஆழமாக சிந்தனை வயப்பட்டவளாக இருந்தாள். அவளின் மௌனம் ஒருவித இசையாக இருந்தது. அது ஒருவரை கனவுகளின் உலகிற்கு அழைத்துச் சென்று தமது இதயத்தின் துடிப்பைக் கேட்க வைப்பதாகவும் அவரது எண்ண ரூபங்களையும் தன் முன்னே நின்று கண்களுக்குள் பார்க்கும் உணர்வுகளையும் காண வைப்பதாகவும் இருந்தது.
அவள் தனது வாழ்க்கை நெடுகிலும் ஆழமான துக்கத்தின் ஆடையை அணிந்திருந்தாள். அது அவளின் அபூர்வ அழகையும் கண்ணியத்தையும் கூட்டுவதாக இருந்தது. பூத்த மரம் ஒன்று வைகறைப் பனித்திரையின் ஊடாகக் காணும்போது மேலும் அழகாகத் தெரிவதைப் போல்.”

(to be continued...)