(23-11-2014 அன்று இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து மறுவுலகப் பயணம் சென்றுவிட்ட இறைநேசர் ஞானி மகான் சய்யிதுனா கலீமி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் நாற்பதாம் நாள் நினைவு நிகழ்ச்சி இன்று. அன்னாரின் நினைவில் 'கலீமி' இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.)
சய்யிதினா பீர் முஹம்மத் உமர் ஆமிர் கலீமி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹ
சிர்ரஹுல் அஸீஸ்)...
லட்சோப லட்சம் இதயங்களில்
இறைஞானத்தின் பேரொளியை ஏற்றி வைத்து மண்ணறைக்குள் மலர்ந்ததொரு சொர்க்கப் பூங்காவில்
இன்று மணாளராக மகிழ்ந்திருக்கும் மகான் அவர்களின் பெயரைச் சொன்னால் போதும், முரீதீன்களின்
மூச்சுக்கள் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்னும் திக்ரை ஓதும். இதன் பொருள் என்ன?
”எவரைக் கண்டால்
அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வருகின்றதோ அவரே வலியுல்லாஹ்” என்னும் ஹதீஸிற்கேற்ப
இம்மண்ணில் காட்சி தந்த கருணைக் குருநாதர் எங்கள் காமில் வலீ கலீமி நாயகம் (ரலியல்லாஹு
அன்ஹு).
’ஹதீஸெ கதீர் ஃகும்’
என்னும் நபிமொழியை இவ்விடம் நினைவு கூர்தல் வேண்டும். அதன்படிக்கு, ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்கள் தமது உம்மத்திற்கு ஹிதாயத்திற்காக தந்து
சென்ற இருபெரும் விஷயங்கள் (ஸகலைன்) ஆவன: அல்-குர்ஆன் மற்றும் அஹ்லெ பைத் என்னும் நபிக்குடும்பத்தார்
ஆவர். மறுமையில் ஹவ்ளுல் கவ்தரில் ரசூலெ கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி
வ சல்லம்) அவர்களை உம்மத்தினர் சந்திக்கும் வரை இவ்விரண்டும் ஒன்றை விட்டும் மற்றொன்று
பிரியாது. (நூற்கள்: சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத், அல்-முஃஜமுல் கபீர்
அத்-தப்ரானீ, கன்ஸுல் உம்மால்)
ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் முபாரக்கான இதயத்தில் உள்ள ஏகத்துவ மெய்ஞ்ஞானப்
பேரொளி அவர்களது உம்மத்தினருக்கு இந்நாள் வரை தொடர்ந்து கிடைத்து வரும் ஆன்மிக வரலாற்றைக்
கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புலனாகும். அதாவது, இஸ்லாமிய ஆன்மிகச்
சுடரை உம்மத்தினரின் உள்ளங்களில் ஏற்றி வைக்கும் அரும்பணியை அவனியில் ஆற்றிவரும் தரீக்காக்களின்
மாபெரும் ஆரிஃபீன்கள் அவ்லியாக்கள் முர்ஷீதீன்கள் காமிலீன்களில் பெரும்பான்மையோர் சாதாத்மார்களாக
– அஹ்லெ பைத்தின் வமிசத்தார்களாக இருக்கின்றார்கள். அன்னவர்களைக் கொண்டே அல்லாஹு தஆலா
தனது திருமறையின் அகமிய ஞானங்களை உம்மத்தினரிடம் சேர்ப்பித்து ஹிதாயத்தில் நடத்திச்
செல்கிறான்.
அதாவது, “விலாயத்”
என்னும் இறைநேசம் அருளப்படுவதற்கு ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி
வ சல்லம்) அவர்களின் புனித வமிசம் ஃகாஸ்ஸான காரணமாக உள்ளது. இதர முஸ்லிம்களில் ’விலாயத்’
என்னும் இறைநேசம் அருளப்படுவது அந்தப் புனித நபிவமிச இறைநேசச் செல்வர்களை உரிய முறையில்
மதித்துக் கொண்டாடுவதைக் கொண்டே அமையும்.
அஃலா ஹழ்றத் அஹ்மத் ரஸா ஃகான் பரேலவி (அலைஹிர்
ரஹ்மா) அவர்கள் சொல்வதுதான் எத்தனை நிதரிசனமானது:
”தேரீ நஸ்லெ பாக் மே(ன்) ஹே பச்சா பச்சா நூர்
கா
தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா”
இந்த வரிகளுக்கு வாழும் உதாரணமாக நபிவம்சத் தோன்றலான கலீமி நாயகம்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரிசுத்தக் குடும்பம் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக்
காண்கிறோம்.
கலீமி நாயகம் (ரலியல்லாஹு
அன்ஹு) அவர்கள் ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின்
புனித வமிசத் தோன்றலாக – ஹஸனியுல் ஹுஸைனியாக - இருக்கின்றார்கள் என்பது மட்டுமன்று,
இறைமறையாம் திருக்குர்ஆனின் விளக்கங்கள் பொங்கும் இதயம் அருளப்பட்ட மாபெரும் முஃபஸ்ஸிராகவும்
இருந்தார்கள். அவர்களுடைய ஆரிஃபானா தஃப்ஸீர் லட்சக்கணக்கானோரின் அகக்கண்களைத் திறந்து
வைத்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.
பேச்சுத் திறமை
என்பது ஆலிம்கள் பலரிடமும் இருக்கலாம். ஆனால் ஆரிஃப் பில்லாஹ்வாகிய கலீமிஷாஹ் சர்கார்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்தக் காலகட்டத்தின் முதகல்லிம்களின் ஷாஹ்வாக – பேச்சாளர்க்ளின்
பேரசரராக விளங்கியதற்குக் காரணம் கலாமுல்லாஹ்வை விளக்கித் தரும் கலீமாக அல்லாஹ் அவர்களை
ஆக்கி வைத்தான் என்பதுதான்.
அந்தச் சிறப்பான
மகாமை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பதும் கவனத்திற்குரியது.
சய்யிதுனா இஸ்மாயீல் (அலைஹிஸ் சலாம்) அவர்கள்
’தஹீபுல்லாஹ்’ என்னும் அந்தஸ்த்தினை அடைவதற்குக் காரணம் யாது? மதறஸாவில் ஓதிப் பெற்ற
பக்குவம் அல்ல. அன்னாரின் தந்தையும் முர்ஷிதுமான சய்யிதுனா இப்றாஹீம் (அலைஹிஸ் சலாம்)
அவர்களின் அகப்பார்வையின் அருளே அந்த நிலைக்கு அவர்களை தர்பிய்யத் செய்து உயர்த்தியது
என்கிறார்கள் அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா):
”யெ ஃபைஸானெ நழர் தா யா கெ மக்தப் கி கராமத்
தீ
கிஸ்னே சிகாயா இஸ்மயீல்
கோ ஆதாபெ ஃபர்ஸந்தீ”
ஆன்மிக அருள்கள்
அகத்தில் பொங்க வேண்டும் எனில் ஷைகெ காமில் என்னும் இறைநேசச் செல்வரின் தொடர்பு அவசியமாகும்.
இதனை வலியுறுத்தவே மாபெரும் வலிமார்கள் எல்லாம், அவர்களில் பலரும் நபிவமிசத்தின் நஸ்ல்
காரணமாக பிறப்பிலேயே விலாயத் அருளப் பெற்றவர்களாய் இருந்தபோதும் தமக்கொரு முர்ஷிதைத்
தேடி அடைந்து அவர்களிடம் தம்மை ஒப்படைத்தார்கள்.
அவ்வகையில் கலீமி
நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்மை எந்த முர்ஷிதே காமிலிடம் ஒப்படைத்தார்களோ
அந்த ஞானப் பேரொளியான நூருல் மஷாஇஃக் சய்யிதுனா நூரிஷாஹ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்)
அவர்களும் நபிவமிசத் தோன்றலாக, கௌதுல் அஃழம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருப்பேரராக
விளங்குகிறார்கள். அத்தகைய நூருல் மஷாஇஃகின் புனித தாத்தில் தன்னை ஃபனா ஆக்கிக் கொண்டவர்களாக
கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) இருக்கின்றார்கள்.
மௌலானா ரூமி (அலைஹிர்
ரஹ்மா) அவர்களின் நினைவு இங்கே வருகின்றது. ஏனெனில், கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்கள் முஃபஸ்ஸிருல் குர்ஆன்-ஆகப் பிராகசித்ததோடு ஷாரிஹே மஸ்னவியாகவும் திகழ்ந்தார்கள்.
அன்னாரின் புனிதப் பிள்ளையாகிய அலீமிஷாஹ் நாயகம் (தாமத் பரகாத்துஹும்) அவர்களையும்
ஷாரிஹெ மஸ்னவியாக நமக்குத் தந்திருக்கிறார்கள். தமது திக்ரு மஜ்லிஸில் மவ்லானா ரூமி
(அலைஹிர் ரஹ்மா) இயற்றிய மஸ்னவி ஷரீஃபின் பைத்துக்களைப் பாடித் தொடங்கவும் விரும்பியிருக்கிறார்கள்.
இவற்றை நோக்கும்போது மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல்
அஸீஸ்) அவர்களுக்கும் கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் இடையே ஆழமான ஒப்புமைகளை
அடியேன் காண்கிறேன்.
மௌலானா ரூமி (அலைஹிர்
ரஹ்மா) அவர்களின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள்.
ஷம்ஸுத்தீன் என்றால் ‘மார்க்கத்தின் சூரியன்’ என்று பொருள் அல்லவா? சூரியன் என்பது
இங்கே அதன் தன்மைக்கு ஆகுபெயராய் நின்று ‘நூர்’ என்னும் ஒளியைக் குறிக்கின்றது அல்லவா?
அன்று மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களுக்கு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (ரஹ்மத்துல்லாஹி
அலைஹி) என்னும் நூர் – ஒளி கிடைத்ததைப் போன்றே நமது கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல்
அஸீஸ்) அவர்களின் குருநாதராக சய்யிதுனா நூரீஷாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்னும் நூர் குருநாதராக
அமைந்தார்கள்.
ஷம்ஸுத்தீன் தப்ரேஸி
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தம்மை ஒப்படைக்காத வரை விலாயத்தின் வாசல் தனக்குத் திறக்கவில்லை
என்பதை மௌலானா ரூமி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதற்கு
முன் அவர்கள் மதறாவில் மார்க்கக் கல்வியைக் கற்ற மாபெரும் ஆலிமாக, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு
உஸ்தாதாக இருந்தார்கள். ஆனால், ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் ’ரூம்’ என்று
அழைக்கப்பட்ட அக்காலத்துப் பாரசீகப் பரப்பில் வாழ்ந்த பாமரர்களின் உள்ளங்களில் எல்லாம்
இறைக்காதலின் நெருப்பைப் பற்ற வைக்கும் வலியுல்லாஹ்வாக அவர்கள் ஆனது ஷம்ஸுத்தீன் தப்ரேஸி
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆன்மிகத் தொடர்பினாலேயே ஆனது.
”மௌலவி ஹர்கிஸ் மௌலாயே ரூம் ந ஷுத்
தா குலாமே ஷம்ஸி
தப்ரேஸ் ந ஷுத்”
கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களும்
இவ்வாறே தம்மை நூருல் மஷாஇஃக் அவர்களிடம் ஒப்படைத்ததால் ‘ஷம்ஸுல் முஃபஸ்ஸிரீன்’ என்னும்
உயரிய அந்தஸ்த்தினை அடைந்தார்கள். ரசூலே கரீம் ((ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி
வ சல்லம்) அவர்களின் அகமியமான விளக்கங்களைத் தனது முபாரக்கான இதயத்தில் பெற்றுக்கொண்டார்கள்.
அன்னார் இதனைச் சொல்கிறார்கள்:
”ஆமிர் ந முஃபஸ்ஸிர் தா ஆலிம் தா ந ஆரிஃப் தா
நூரீ சே படீ உஸ்னே
தஃப்சீர் முஹம்மத் கீ”
சய்யிதுனா நூரீஷாஹ்
(கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களுக்குப் பின் அமைந்த ’மௌலாயே ஹிந்த்’-ஆக அவர்களை
நாம் காண்கிறோம். இந்தியா நெடுகிலும் அன்னாரின் பெயரால் ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகள் நடைபெற்று
வருவதும் லட்சக்கணக்கான முரீதீன்கள் இருப்பதும் இதற்குக் கட்டியம் சொல்லும்.
இக்காலத்தில் ஆன்மிக ஞானமும் பேரின்பமும் நலிந்து
வரும் நிலையை நாம் பார்க்கிறோம். ஹிஜாஸின் காற்றில் இஷ்க்கே ரசூலின் நறுமணம் இன்று
இருக்கிறதா? நஜ்தில் உதித்த கர்னுஷ் ஷைத்தானின் வஹ்ஹாபிசக் கொம்போசையில் உம்மத்தினரின்
அகச்செவிகள் செவிடாகி விட்டனவா? ஒரு நூற்றாண்டிற்கு முன்பே ஓர் இதயம் இந்த இழிநிலை
கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தது. என்ன செய்ய வேண்டும் எனப்தையும் சுட்டிக் காட்டியது.
ஆம், அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா) சொல்கிறார்கள்:
”வக்தஸ்த் கெ பக்ஷாயம் மைஃகானாயெ ரூமி பாஸ்
பீரானே ஹரம் தீதம் தர் சஹ்னெ கலீசா மஸ்த்”
(காலம் வந்துவிட்டது, ரூமியின் பேரின்பக் கூடத்தை
மீண்டும் திறக்க
அறபு நாட்டின் மதத்தலைவர்கள்
கிறித்துவத்தின் போதையில் கிடக்கிறார்கள்)
தமிழ்நாட்டில், தலைநகர் மதறாஸில், ’மைஃகானாயெ ரூமி’யைத் திறந்து
’கஷ்ஃபெ இர்ஃபான்’ என்னும் பேரின்பப் பானம் ஊட்டப்படுவதை ஆரம்பித்து வைத்தவர்கள் நமது
கலீமி நாயகம் (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களாவர். இந்த இறைக்காதலின் போதை என்பது
உஜூதே முத்லக்கின் ஷுஹூதில் லயித்திருக்கும் சுஜூதினால் உண்டாகும் ஹால் ஆகும். இதனையே
நமது கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘மஹ்வெ சுஜூத்’ என்பதாக நமக்கு அருளியிருக்கிறார்கள்.
காமில் வலீ சய்யிதுனா
முஹம்மத் உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரி (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் வசீலாவைக்
கொண்டு அன்னாரின் பரிசுத்த தாத் அடைந்து கொண்ட பாக்கியத்தின் ஃபைஸானை அல்லாஹு தஆலா
நம் அனைவருக்கும் காயிம் தாயிமாக அருள்வானாக.
(ஓய்வு நேரம் எங்கே? வேலை இன்னும் இருக்கின்றது
தவ்ஹீதின்
ஒளி முழுமை பெற வேலை இன்னும் இருக்கின்றது
-அல்லாமா
இக்பால் (ரஹ்))
யா அல்லாஹ்! உனது வலீயே காமில் சய்யிதுனா கலீமிஷாஹ் நூரீ (கத்தஸல்லாஹ
சிர்ரஹுல் அஸீஸ்) ஆன்மிகப் பணியை ஊழிப் பரியந்தம் ஆழ்ந்தும் பரந்தும் இவ்வுலகெங்கும்
செழிக்கச் செய்து ஆன்மிகப் பிரகாசத்தை அடியவர்களின் உள்ளங்களில் எல்லாம் இலங்கச் செய்வாயாக!
பிஜாஹி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ சஹ்பிஹி வ சல்லம்).
மாஷா அல்லாஹ்.
ReplyDeleteநீண்ட நாள் கழித்து தங்களின் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுதுங்களேன் ஜீ ...
ReplyDeleteஅழகான நீரோடை போன்ற பதிவு
ReplyDelete