Sunday, June 15, 2025

நழர் பர் கதம் (காலடியைக் கண்காணித்தல்)

(நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகளில் இரண்டாவது கோட்பாடு பற்றிய விளக்கங்கள்.)












இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் தனித்தன்மை ஆனவன். படைப்புக்களின் உச்சம் அவன். இறைவனுக்கும் ஏனைய படைப்புக்களுக்கும் நடுவில் அவன் இருக்கிறான். ”மனிதன் ஒரு பாலம்” என்று சொல்லப்படுவது உண்டு. இறைவனின் திருப்தியை அடையும்படி அவன் வாழ்வதற்கே தீன் என்னும் வாழ்க்கை நெறியை இறைவன் தன் தூதர்களின் வழியாக மனித இனத்துக்கு அருளியுள்ளான். அதில்தான் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நிம்மதியும் அமைதியும் இருக்கிறது என்பதால் அதற்கு “தீனுல் இஸ்லாம்” என்று பெயர் உள்ளது.

தீன் என்பதை ஆங்கிலத்தில் religion என்று சொல்கிறார்கள். தமிழில் சமயம், மதம், மார்க்கம் என்றெல்லாம் சொல்கிறோம். மார்க்கம், நெறி ஆகிய சொற்கள் ’பாதை’ என்று பொருட்படும். தீனுல் இஸ்லாம் நேர்வழியாக, இறைவனை அடைவதற்கான பாதையாக உருவகிக்கப்படுகிறது:

“எம்மை நேர்வழியில் நடத்துவாயாக” (அல்-குர்’ஆன் 1:5)

இப்பாதை, “இறைவனால் அருள் செய்யப்பட்டோர்” நடந்த பாதை என்று திருமறையின் அடுத்த வசனம் சொல்கிறது (ஸிராத்தல்லதீன அன்’அம்த அலைஹிம் – 1:6)

இறைவனால் அருள் செய்யப்பட்டோர் நான்கு வகையினர் என்றும் குர்’ஆன் சொல்கிறது: ”எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த இறைத்தூதர்கள், சத்தியவான்கள், உயிர்த் தியாகியர், மற்றும் நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்கள்தாம் மிக அழகிய தோழர்கள்” (வ மன்ய் யுதி’இல்லாஹ வர்-ரசூல ஃப’உலாஇக்க ம’அல்லதீன அன்’அமல்லாஹு அலைஹிம் மினந் நபிய்யீன வஸ்-ஸித்தீக்கீன வஷ்-ஷுஹதாஇ வஸ்-ஸாலிஹீன்; வ ஹசுன உலா’இக்க ரஃபீக்கா – 4:69)

            இந்த படித்தரங்களில் உள்ளோர் நடந்த ”நேர்வழி” என்பது ஸ்தூலமான பாதை அல்ல. அது இதயம் நடக்கும் பாதையாகும். எனவே நடப்போரின் தன்மைக்கு ஏற்ப இதில் பல அம்சங்கள் உள்ளன.



           









ஸூஃபிகள் இதனை ஷரீஅத், தரீக்கத், ஹகீக்கத், மஃரிஃபத், மற்றும் வஹ்தத் ஆகிய ஐந்து பாதைகளாகச் சொல்லியுள்ளனர். இவை ஐந்தும் ஒரே பாதையின் ஐந்து அம்சங்கள் ஆகும். இவற்றுக்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்வதே இவற்றில் நடப்பதாகும். இவை ஐந்தும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தவை அல்ல. நடப்பவனின் கவனத்திற்குத் தக புலப்படுபவை ஆகும். “இறைவனை அடைய நாடுபவர் ஏக காலத்தில் இந்த ஐந்து பாதைகளிலும் நடக்க வேண்டும்” என்று ஸூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) சொல்லியுள்ளார்கள்.

            இந்த நேர்வழி நடப்பதையே நக்‌ஷ்பந்திய்யா நெறியில் “நழர் பர் கதம்” என்னும் கோட்பாடாகச் சொல்லியுள்ளனர்.

கதம் என்பதன் நேரடிப் பொருள் ‘பாதம்’ என்பதாகும். எனவே, ‘நழர் பர் கதம்’ என்பதன் நேரடி அர்த்தம் “பாதத்தில் பார்வை வைத்தல்” அல்லது “காலடியைக் கண்காணித்தல்” என்பதாகும்.

            கதம் என்பதன் குறிப்புப் பொருள் நடவடிக்கை, செயல்கள் என்பதாகும். உதாரணமாக, ஆங்கிலத்தில் steps என்னும் சொல் நடக்கும்போது எடுத்து வைக்கும் காலடிகளைக் குறிக்கும். எனினும், “to take necessary steps” என்றால் தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் என்று பொருட்படும். “my steps are measured” என்றால் என் நடவடிக்கைகள் எச்சரிக்கையுடன் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என்று பொருளாகும்.

            ஸூஃபி நெறியில் இந்தக் கோட்பாடு நேரடியான பொருளிலும் குறிப்புப் பொருளிலும் செயல்படுத்தப் படுகிறது. இரண்டிற்கும் உரிய பங்களிப்பு இருக்கிறது. இரண்டையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.









நழர் பர் கதம் – நேரடிப் பொருளில்

             முதலில், நழர் பர் கதம் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக் கொண்டு அதற்கான ஸூஃபித்துவ விளக்கங்களைக் காண்போம்.

            ஆன்மிகத்தில் ஈடுபடும் சாதகனிடம் உண்டாக வேண்டிய முதல் மாற்றம் “தஸ்க்கியத்துந் நஃப்ஸ்” (உளத்தூய்மை, அகத்தூய்மை) என்பதாகும். மனம் என்பதை ஒரு கலம் (பாத்திரம், vessel) என்று உருவகம் செய்து கொள்ளுங்கள். பாத்திரம் சுத்தமாக இருந்தால்தான் அதில் பாலை ஊற்ற முடியும். அழுக்கான கலத்தில் தூய பாலை ஊற்றினால் பால் கெட்டுவிடும். அதுபோல், அழுக்கான மனத்தில் இறை ஞானத்தைப் புகட்டினால் அந்த ஞானம் திரிந்துபோய் வழிகேடு ஆகிவிடும். எனவே மனத்தைத் தூய்மை செய்தலே ஸூஃபிப் பயிற்சிகளின் முதல் நிலையாக உள்ளது.

முன்பு நாம் கண்ட முதல் கோட்பாடான “ஹோஷ் தர் தம்” (மூச்சில் விழிப்புடன் இருத்தல்) என்பதில் மூச்சுக்கும் மனத்துக்கும் இடையே உள்ள தொடர்பைப் பார்த்தோம். மூச்சை ஒழுங்குபடுத்தினாலே மனம் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அது ஒரு பாத்திரத்தை ஆட்டாமல் அசைக்காமல் நிலையாகப் பிடித்து வைப்பதைப் போன்றதாகும். அப்போதுதான் பால் ஊற்றும்போது சிந்தாது, கொட்டாது.

ஆனால், பாத்திரம் அசைவு ஆட்டம் இல்லாமல் ஸ்திரமாக பிடிக்கப்பட்டால் மட்டும் போதாது, அது அழுக்கில்லாமல் சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஊற்றப்படும் பால் கெடாது.

மனம் செம்மை ஆவதற்கு ஸ்திரம் மற்றும் தூய்மை இரண்டுமே வேண்டும். மனம் தூய்மை ஆவதற்கான பயிற்சியாக முதல் கோட்பாட்டுடன் இந்த இரண்டாம் கோட்பாடான “நழர் பர் கதம்” என்பதும் சேர்க்கப்படுகிறது.

மனம் என்பது ஐந்து புலன்களின் வழியாகச் செயற்படுகிறது. அவை ஸ்பரிசம் (தொடுவுணர்ச்சி), சுவைத்தல், முகர்தல், பார்த்தல், மற்றும் கேட்டல். இந்த ஐம்புலனும் நிகழ ஐம்பொறிகள் கருவிகளாக உள்ளன. அவை உடல், நாக்கு, மூக்கு, கண், மற்றும் காது. இந்த ஐந்து பொறிகளின் வழியாகவே உலகத்திலிருந்து மனத்திற்கு உள்ளீடுகள் வருகின்றன.

ஐம்புலன்களில் பார்வை என்பதே மிகவும் ஆற்றலுள்ளதாக இருக்கிறது. அதன் வழியாக மனத்தில் தொடர்ந்து பிம்பங்கள், உருவங்கள் பதிவாகின்றன. மனம் சதா அந்த உருவங்களைச் சலித்துக் கொண்டே இருக்கிறது. பார்வை உலகைத் துழாவிக் கொண்டே இருந்தால் ஆகுமான காட்சிகள் மட்டுமல்லாது ஆகாத, தகாத காட்சிகளும் அதில் பதிவாகின்றன. அதன் காரணமாக மனம் கெட்டுப் போகிறது. தீமையைத் தூண்டும் மனமாக – நஃப்ஸுன் அம்மாரத்துன் பிஸ்-ஸூஇ – ஆகிவிடுகிறது.

இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி இருக்கிறது. கண்கள் தேவையான விடயங்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்வையைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒருவர் தன் பார்வையைத் தன் பாதத்தில் வைத்தவராக இருக்க வேண்டும் என்று ஸூஃபி மகான்கள் வலியுறுத்துகின்றனர்.

“(நபியே!) விசுவாசிகளிடம் கூறுவீராக,

அவர்கள் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளட்டும்.

(24:30)

என்னும் திருவசனத்தின்படி இந்தப் பயிற்சி இறைக்கட்டளையாக உள்ளது.

பார்வையைத் தாழ்த்தாமல், கட்டுப்படுத்தாமல் அதனை எல்லாத் திசைகளிலும் அவிழ்த்துவிடுவது என்பது ஹராமான – இறைவனால் தடுக்கப்பட்ட – தகாத காட்சிகளைக் காணவும் அதன் பிம்பங்கள் மனத்தை அழுக்காக்கவும் வழியாகிவிடும்.

நபி (ஸல்) சொன்னார்கள்: “அலீயே! (அந்நியப் பெண் மீது) ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடர வேண்டாம். நிச்சயமாக, முதலாவது உன்னுடையது, இரண்டாவது உன்னுடையதல்ல (யா அலிய்யு! லா துத்பி’இந்-நழ்ரத்தந்-நழ்ரத்த ஃப’இன்ன லகல் ஊலா வ லைச லகல் ஆஃகிரா).”  (அறிவிப்பாளர்: புரைதா (ரலி); நூல்: சுனன் திர்மிதி #2777).

அதாவது, எதார்த்தமாக அனிச்சையாக படுகின்ற முதல் பார்வை மன்னிக்கப் பட்டுவிடுகிறது. தெரிந்த பின்னரும் திருப்பிக் கொள்ளாமல் தொடர்ந்து பார்க்கும் பார்வை ஷைத்தானுடையது ஆகிறது. அப்போது நழர் (பார்வை) ஷைத்தானைப் பின் தொடர்வதாகி விடுகிறது.

எனவே ஜஹ்வர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ சொல்கிறார்: “இன்றைய காலத்தில் இணையம், சமூக வலைத்தளம் போன்றவை நட்புப் பட்டியலில் பெண்கள் பலரைக் கொண்டு வந்துவிடுகிறது. அவர்கள் ஆபாசமான படங்களைக்கூட அதில் பதிவேற்றி விடுகின்றனர். அல்லது, ஹிஜாப் (முகத்திரை) இல்லாமல், இஸ்லாமிய கண்ணியம் இல்லாமல் படங்கள் போடுகின்றனர். அவற்றை நீங்கள் நீக்கி விடுங்கள். அல்லது, அத்தகையோரின் தொடர்பைத் துண்டித்து விடுங்கள். எனவே, இன்றைய காலத்தில் நழர் பர் கதம் – காலடியை கவனித்தல் என்னும் சொற்றொடருக்கு விரிவான கண்ணோட்டம் உள்ளது. நீங்கள் கஸ்டமர் கேருக்கு அழைத்துப் பேசும்போது தொலைபேசியில் ஒரு பெண் பேசக்கூடும், அல்லது விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் அல்லது வியாபாரத்தில் ஒரு பெண் முகவர் உங்களை அணுகிப் பேசுகிறார். அத்தகைய நிலையில், உன் பார்வையை உன் உள்ளத்தின் பாதத்தில் வை! இதன் பொருள் நீங்கள் எல்லோரிடமும் கடுகடுப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. அனைவரிடமும் கனிவாகவும் பரிவாகவும் இருங்கள். அது வேறு.”









24-11-2002 ஞாயிற்றுக் கிழமை இரவு ரமலான் 19-ஆம் பிறையில் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நான் என் குருநாதர் சய்யிதுனா பிலாலி ஷாஹ் ஜுஹூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்களின் திருக்கரங்களில் பைஅத் செய்து அன்னாரின் சீடன் ஆனேன். அன்று அவர்கள் முரீதீன்களுக்கு ஆற்றிய உரையில் மேற்குறிப்பிட்ட ஹதீஸை மேற்கோள் காட்டிப் பேசினார்கள் என்பது பசுமையாக நினைவில் உள்ளது. அந்த ஹதீஸின் மீது இப்படி ஒரு விளக்கத்தையும் சொன்னார்கள்: “முதல் பார்வை உன்னுடையது. இரண்டாம் பார்வை ஷைத்தானுடையது. ஆனால், முதல் பார்வை அனிச்சையாக விழுந்ததும் அந்நியப் பெண்ணை விட்டும் நீ சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டால் அந்தப் பார்வை யாருடையது? நீ யார் சொன்னதைப் பின்பற்றி உன் பார்வையை விலக்கினாய்? நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் பின்பற்றித்தானே விலக்கினாய்? எனவே அப்போது உன் பார்வை நபியில் ஃபனா ஆகிவிட்டது. அது நபி (ஸல்) அவர்களின் பார்வை ஆகும்! அதற்கான நற்கூலியை அல்லாஹ் உனக்கு அளிப்பான்.”

மேலும் என், குருநாதர் சொல்கிறார்கள்: “நீ ஒரு கடை வைத்திருக்கிறாய் என்றால் அங்கே பெண்களும் பொருள் வாங்க வருவார்கள். அவர்களிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது. அப்படி நிர்ப்பந்தமாக அவசியம் கருதி அந்நியப் பெண்ணைப் பார்க்க வேண்டி இருந்தால் என்ன செய்வாய்? உன்னை விட மிகவும் வயதில் மூத்தவராக இருந்தால் உன் அம்மாவாகப் பார், சற்று மூத்தவர் என்றால் உன் அக்காவாகப் பார், உன்னை விட இளைய பெண் என்றால் உன் தங்கையாகப் பார், மிகவும் இளைய பெண் என்றால் உன் மகளாகப் பார். இவர்களை நீ இச்சையோடு பார்க்க மாட்டாய் அல்லவா? அப்படிப் பார். இச்சையோடு மனைவியாகப் பார்க்காதே.”

”நழர் பர் கதம்” என்னும் பயிற்சிக்கு வெளிப்படையான அர்த்தத்தின்படி இன்னொரு விளக்கத்தையும் காண்போம். அது பின்வரும் ஹதீஸ்படி நபிவழியாகவும் இருக்கிறது:

            [சய்யிதுனா அல்-ஹசன் இப்னு அலீ (ரலி) அவர்கள் தன் தாய்மாமன் (ஃகால்) ஆன ஹிந்திப்னு அபீ ஹாலா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வருணிப்பை (ஹில்யா) வினவியபோது அவர் சொன்ன விரிவான வருணிப்பிலிருந்து ஒரு பகுதி]: ”நபி (ஸல்) நடக்கும்போது மலையில் இருந்து இறங்குவது மாதிரி நடப்பாரகள். அவர்கள் கண்ணியமான முறையிலும் இலகுவாகவும் நடப்பார்கள். அவர்கள் துரிதமாக நடப்பார்கள். அவர்கள் நடக்கும்போது சரிவில் இறங்குவது போல் இருக்கும். அவர்கள் எவரிடமேனும் பேசுவது என்றால் தன் முழு உடலாலும் அவரின் பக்கம் திரும்பி நின்று பேசுவார்கள். நபி (ஸல்) தன் பார்வையைத் தாழ்த்தி இருப்பார்கள். மேலே பார்ப்பதைவிட அதிகமாகக் கீழே பார்ப்பார்கள். நபி (ஸல்) தன் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தன் தோழர்களிடம் முதலில் அவர்களே பேசுவார்கள். தான் சந்திக்கும் எவருக்கும் முந்தி சலாம் சொல்வார்கள்.” (காழி இயாள் (ரஹ்) அவர்களின் அஷ்-ஷிஃபா, அத்தியாயம்: 2: பகுதி: 25).

            மேட்டில் இருந்து கீழே இறங்குபவர் பார்வையைத் தன் பாதத்தில்தான் வைத்திருப்பார். அவர் மேலே பார்த்தபடி இறங்க மாட்டார், கீழேதான் பார்ப்பார். எனவே, நபி (ஸல்) அவர்களின் நடையைப் பின்பற்ற ’நழர் பர் கதம்’ என்னும் பயிற்சி வழி செய்கிறது. அப்படி நடப்பது பணிவின் அடையாளமாக இருப்பதையும் மகான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

”அருளாளனின் அடியார்கள் – அவர்கள்தாம்

பூமியில் பணிவுடன் நடப்பார்கள்” (25:63)

என்றும்,

“பூமியில் கர்வமாக நடக்காதீர்” (17:37)

என்றும் இறைவன் கட்டளையிடுவதற்கு ஏற்ப நல்லடியார்களான ஆன்மிக சாதகர்கள் நடப்பதற்கும் இந்த “நழர் பர் கதம்” என்னும் பயிற்சி வழி கோலுகிறது.

 

நழர் பர் கதம் – குறிப்புப் பொருளில்

            காலடியை கவனித்தல் என்பது அதன் நேரடியான வெளிப்படையான பொருளில் கருதப்படும்போது சாதகன் தன் பார்வையை அலையவிடாமல், தகாத காட்சிகளில் படவிடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைக் கண்டோம். அதே சமயம், ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கவே கூடாது என்பது அதன் அர்த்தமன்று. அப்படி ஒருவர் புற உலகத்தைப் பார்க்கமாலேயே இருப்பதும் குர்’ஆனுக்கு மாற்றம் ஆகும். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள இறை அத்தாட்சிகளை நோக்கும்படி அல்லாஹ் ஆணை இடுகிறான் என்பதை ஜஹ்வர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ சுட்டிக் காட்டுகிறார். ஓர் உதாரணம்:

            அவனே விண்ணிலிருந்து மழையை இறக்கினான்.

            அதனைக் கொண்டு யாம்

அனைத்து வகை தாவரங்களையும் வெளியாக்கினோம்,

அதிலிருந்து பசுமைகளை வெளிப்படுத்தினோம்,

அதிலிருந்து அடர்த்தியான கதிர்களாக வித்துக்களை வெளியாக்கினோம்.

பேரீச்சம் மரப் பாளையில் இருந்து

வளைந்து தொங்கும் பழக்குலைகளும் உள்ளன;

திராட்சைத் தோட்டங்களையும்,

ஒன்று போலவும் வெவ்வேறாகவும் உள்ள

மாதுளை, ஆலிவ் ஆகியவற்றையும் (வெளிப்படுத்தினோம்).

அவை காய்ப்பதையும் பின்பு கனிந்து பழமாவதையும்

நீவிர் உற்று நோக்குவீராக!

இறைநம்பிக்கை கொள்வோருக்கு

நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் உள்ளன.

(குர்’ஆன் 6:99)

            இவ்வாறு வானங்களையும் பூமியையும் உற்று நோக்கி இறை அத்தாட்சிகளை விளங்கும்படி இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதை எல்லாம் நாம் பார்க்கத்தான் வேண்டும். எனவே, நழர் பர் கதம் என்பது குறியீட்டு ரீதியில் உட்பொருள் காண வேண்டிய ஒரு கோட்பாடு என்றும் கருத இடம் உண்டாகிறது.

நக்‌ஷ்பந்திய்யா தரீக்காவின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்: “கதம் அல்லது காலடிகள் என்பது நாட்டம் (இராதத்) என்பதைக் குறிக்கும். நமது நாட்டம் நம் ஷைஃகின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது நபி (ஸல்) அவர்களின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது இறைவனின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்:

இறை விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்,

இறைத்தூதருக்கு அடிபணியுங்கள், மேலும் உங்களில் இருந்து

அதிகாரமுள்ளோருக்கு அடிபணியுங்கள்.’ (4:59)”

இமாமுர் ரப்பானீ அஹ்மத் அல்-ஃபாரூக்கி (ரஹ்) அவர்கள் தனது ’மக்தூபாத்’ என்னும் கடிதத் தொகுப்பின் 295-ஆம் கடிதத்தில் இப்பயிற்சியின் அகமியம் குறித்துப் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

            ”பார்வை காலடியை முந்துகிறது. காலடி பார்வையைத் தொடர்கிறது. மேலான படித்தரத்திற்கு உயர்வது முதலில் பார்வையாலும் அடுத்துக் காலடியாலும் ஆகும். பார்வை உயர்ந்து சென்ற இடத்தைக் காலடி அடைந்தவுடன் பார்வை அதனினும் மேலான படித்தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. காலடி அதனை மீண்டும் பின் தொடர்கிறது. அப்படியாக பார்வை செம்மை நிலையை நோக்கி உயர்ந்து அந்த நிலைக்குக் காலடியை இழுக்கிறது. நாம் சொல்கிறோம், ‘பார்வையைக் காலடி தொடரும்போது நபி (ஸல்) அவர்களின் காலடியை அணுக ஆயத்தம் ஆகும் நிலையை முரீது எட்டிவிட்டான். எனவே, நபி (ஸல்) அவர்களின் காலடிகளே அனைத்துக் காலடிகளுக்கும் மூலம் என்று சொல்லப்படுகிறது.’”

            இறைவனுக்கும் அவன் திருத்தூதருக்கும் அதிகாரிகளுக்கும் நாம் அடிபணிய வேண்டும் என்று குர்’ஆன் சொல்கிறது. இங்கே ஆன்மிக ரீதியாக அதிகாரம் உள்ளோரை இவ்வசனம் குறிப்பதாகக் கொள்வது இவ்வுலக ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்களையும், உறவு ரீதியாக அதிகாரம் உள்ள பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் ஆகியோரைக் குறிக்கும் என்று கொள்வதை விட அதிகம் பொருத்தமானது ஆகும். அதே சமயம் ஷைத்தான், ஹவா (நஃப்ஸின் இச்சை) ஆகியவற்றைப் பின்பற்றக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. பின்வரும் திருவசனங்கள் இதனைத் தெளிவாக்கும்:

“இறை விசுவாசிகளே! ஷைத்தானின் காலடிகளைப் பின்பற்றாதீர்” (24:21)

”இறை விசுவாசிகளே! நீவிர் இஸ்லாமில் முழுமையாக நுழைந்துவிடுவீராக!

ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர். நிச்சயமாக,

அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.” (2:208)

“(நபியே!) தன் இச்சையை தெய்வமாக எடுத்துக்கொண்டோனை நீவிர் பார்த்தீரா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்;

மேலும், அவனின் செவியின் மீதும் இதயத்தின் மீதும் முத்திரை இட்டுவிட்டான்;

மேலும், அவனின் பார்வை மீது திரையிட்டுவிட்டான்;

எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாவன்?

நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?” (45:23)

            நாம் யாரைப் பின்பற்ற வேண்டும், யாரைப் பின்பற்றக் கூடாது என்று மேற்காணும் திருவசனங்கள் தெளிவாக்குகின்றன. இவற்றின் வெளிச்சத்தில் நழர் பர் கதம் என்னும் கோட்பாட்டை ஜவ்ஹர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ இவ்வாறு விளக்குகிறார்:

            ”நக்‌ஷ்பந்திய்யா நெறியில் காலடியைக் கவனித்தல் என்பது ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதையும் எல்லா நேரங்களிலும் அதை நேராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதையும் குறிக்கும். உன் காலடிகளையும் அசைவுகளையும் நீ கவனிக்கவில்லை என்றால் நீ ஷைத்தானைப் பின் தொடர்கிறாய் என்பதற்கான சாத்தியம் உண்டு! எனவே நழர் பர் கதம் என்பது அல்லாஹ்வின் சட்ட எல்லைகளுக்குள் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைக் குறிக்கும்.”

            இஸ்லாமை ஏற்று அதில் நக்‌ஷ்பந்திய்யா ஞான நெறியிலும் தன்னை இணைத்துக் கொண்டவரான ரென்ஸ் நூனிஸ் என்பார் நழர் பர் கதம் என்பதற்கு மூன்று விதமான வியாக்கியானங்கள் உள்ளன என்று சுட்டுகிறார்:

            ”சாதகன் தன் இறைவனைத் தவிர வேறு எதையும் முன்னோக்காமல் இருப்பது பயபக்தியின் அடையாளம் ஆகும். ஓர் இலக்கை அடைய நினைப்பவரைப் போல் அல்லாஹ்வின் தெய்வீக பிரசன்னத்தைத் தேடுபவரும் அதனை நோக்கி விரைந்து செல்கிறார்,

            ”நம் காலடியை கவனித்தல் என்பது சூழ்நிலைகளை கவனிப்பதையும் குறிக்கும். அதாவது செயல்படுவதற்கும் சும்மா இருப்பதற்குமான சூழ்நிலைகளை உணர்தல். எப்போது செயல்பட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரிவது. நழர் பர் கதம் என்பது ஒருவரின் இயற்கையான சுபாவத்தில் (ஃபித்ரத்) பொதிந்துள்ள ஞானம் என்றும் அதனை அவர் கண்டடைவதே நழர் பர் கதம் ஆகும் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஷைஃகு ஃபக்ருத்தீன் அலீ இப்னு ஹுசைன் அஸ்-ஸஃபீ வாஇழ் காஷிஃபி (கத்தஸல்லாஹு சிர்ரஹு) அவர்கள் சொல்கிறார்கள்: ’நழர் பர் கதம் என்பது உள்ளமையின் படித்தரங்களில் கடந்து போகின்றவரும் சுயேச்சையைத் துறப்பவரும் ஆன சாதகருக்கு உரியதாகும்.’

            ”இந்த மூன்று வியாக்கியானங்களில் முதலாவது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களையும், இரண்டாவது நடுவழியில் உள்ளோரையும், மூன்றாவது இலக்கை அடைந்தோரையும் குறிக்கும் என்று கருதலாம்.”

            நழர் பர் கதம் என்பதற்கு உட்பொருள் நோக்கில் இப்படிப் பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை இறைஞானியர் ஒவ்வொருவருக்கும் இறைவன் திறந்து தந்த உள்ளுதிப்பான விளக்கங்கள் ஆகும். முத்தாய்ப்பாக, நூருல் மஷாஇஃக் (குருமார்களின் பேரொளி) என்று போற்றப்படும் சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அறபியில் காஃப்-தால்-மீம் ஆகிய மூன்று எழுத்துக்களை ஒரு சொல்லாக ஒலிக்குறியீடுகள் இன்றி எழுதும்போது அதனை கதம் என்றும் வாசிக்கலாம், கிதம் என்றும் வாசிக்கலாம்.

            இதனை ‘கதம்’ என்று வாசித்தால் பாதம் என்று பொருட்படும். கிதம் என்று வாசித்தால் “பூர்வீகம்” என்று பொருட்படும். பூர்வீகம் என்பது தனக்கொரு ஆரம்பம் இல்லாத ஆதி (அவ்வல் பிலா இப்திதாஃ’) ஆகும். அது இறைவனைக் குறிக்கும். படைப்புக்களின் சுயங்கள் (ஜாத்) புதுமையானவை (ஹாதிஸ்) ஆகும், மேலும் சுய உள்ளமை அற்றவை (அதம்) ஆகும். இறைவனின் சுயம் (ஜாத்) பூர்வீகமானது (கிதம்) ஆகும்.

எனவே, நழர் பர் கதம் எனறால் ”காலடியை கவனித்தல்” என்பதாகும். சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் அதனை நழர் பர் கிதம் என்று குறிப்பிட்டு “உன் அகப்பார்வையை எப்போதும் பூர்வீகனான (கதீம்) அல்லாஹ்வின் மீதே வை” என்று சொன்னார்கள்.


Thursday, June 12, 2025

அவரவர் ரூமி!

 



           






தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவரான ஈரோடு தமிழன்பன் அவர்கள் உருதுக் கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்திதான். அவரின் ”கஜல் பிறைகள்” நூல் அதற்கான ஒரு சான்று.

            அவருக்கு ஸூஃபி ஞானியர் மீது ஈடுபாடு இருக்கிறது போலும். குறிப்பாக மவ்லானா ரூமி மீது. அதன் விளைவாக அவர் “ரூமியும் நானும்” என்று அழகான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

            அந்நூலுக்கு என் அருமை நண்பர் நாகூர் ரூமி அவர்கள் முன்னுரை வரைந்திருக்கிறார். அதைப் பற்றி 11-02-2021 அன்று “மௌலானா ரூமிக்கு தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை” என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை மீண்டும் நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த கவிதை ஒன்றைப் பற்றி ஆற அமர சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இது:

            செருப்புகளைத் தலைக்கு வைத்துப்

படுத்துக்கொண்டிருந்தார் ரூமி.

தலையணையைக் கால்களுக்கு வைத்திருந்தார்

கேட்டேன்

ஏன் கால்கள் மட்டமானவையா?

என்றார்.

            அழகான ஒரு கவிதைதான். அது உணர்த்தும் தத்துவத்தையும் நாகூர் ரூமி எழுதியுள்ளார்: “வாழ்வின் தத்துவச் சாரம் கூட இதுதான். உயர்வு தாழ்வு மேன்மை தாழ்மை மேலே கீழே – இவையெல்லாம் ஒரு கோணத்தில் தெரியும் உண்மையின் ஒரு வடிவம்தான். சார்பு நிலைத் தோற்றங்கள் என்று சொல்லலாம். உண்மையை உண்மையாக மட்டுமே பார்த்தால் அதில் உயர்வானது, மட்டமானது என்று எதுவுமே இல்லை.”

            மவ்லானா ரூமி தன் சீடர்களுக்கு இப்படியான ஞானங்களை போதித்திருப்பார் என்பது உண்மைதான். ஆனால், வஹ்தத்துல் உஜூது (ஏக உள்ளமை) என்னும் படித்தரத்தில் (மர்த்தபாவில்) புரிந்துகொள்ள வேண்டிய ஞானத்தை உலகியல் என்னும் படித்தரத்தில் கொண்டு வந்து அவர் நிறுத்தியிருக்க மாட்டார் என்பதும் நிச்சயம். அதாவது, மஃரி’ஃபத் என்னும் இறைஞானப் படித்தரத்தில் உள்ளதை ஷரீஅத் என்னும் லௌகீகத் தளத்தில் கொண்டு வந்து புழங்க முடியாது. இது மவ்லானா ரூமியே வலியுறுத்தும் ஒரு கருத்துதான்!



           







ஈரோடு தமிழன்பன் ஐயாவின் கற்பனையில் மவ்லானா ரூமி செருப்புகளைத் தலைக்கும் தலையணையைக் கால்களுக்கும் வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். நிஜத்தில் அவர் அப்படிச் செய்யவே மாட்டார். அதற்கான காரணங்கள் உண்டு. (அதன்படி, நான் மவ்லானா ரூமியைக் கற்பனையில் கண்டால் அதிலும் இப்படி அவர் செய்யவே மாட்டார்.)

            மவ்லானா ரூமியின் கொள்கையைச் சொல்லும் முக்கியமான ஒரு கவிதை: ”நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் குர்’ஆனுக்குக் கட்டுப்பட்டவன் நான் / சுயவிருப்புள்ள முஹம்மதின் பாதையில் ஒரு தூசு நான் / நான் சொன்னதில் இருந்து இதற்கு முரணாக யாரேனும் மேற்கோள் காட்டினால் / அவன் மீதும் அவன் சொல்வதன் மீதும் வெறுப்படைகிறேன்”  (மன் பந்தாயே குர்’ஆனம் அகர் ஜான்தாரம் / மன் ஃகாக்கே ராஹே முஹம்மதே முஃக்தாரம் / ஹர் நக்லு குனத் ஜுஸீன் கஸ் அஸ் குஃப்தாரம் / பேஜாரம் அஸூ வஸீன் சுஃகன் பேஜாரம்) (”தீவானே ஷம்ஸ்” ருபாயியாத் #735)

            இந்தக் கவிதை அவரே விதித்திருக்கும் அளவு கோல். எனவே, இதை வைத்துத்தான் அவரைப் பற்றிய வியாக்கியானங்களை நாம் அணுக வேண்டும். அந்த ரீதியில் நான் ஈரோடு தமிழன்பனாரின் கவிதையைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

            ஒரு தத்துவத்தை உணர்த்துவதற்காக மவ்லானா ரூமி தலையணைக்கும் செருப்புக்கும் அநீதம் செய்வாரா? என்று ஒரு வினா எழுந்தது.

            ”என்னது, அநீதமா? இதுவா?” என்று கேட்கிறீர்களா? ஆம். இதனை விளங்கிக் கொள்ள சற்று பொறுமையாக மேற்கொண்டு வாசியுங்கள்.

            பாவங்கள் / குற்றங்கள் பல்விதம் ஆகும். அவை ஒவ்வொன்றுக்கும் வரையறை உண்டு. பாவங்களின் வகைகளில் ஒன்று ”ழுல்ம்” என்பது. அது ”அநீதம் / அநீதி / அநியாயம் / injustice” என்பதாகும். அதன் அடிப்படை “படித்தரங்களை மாற்றிப் புழங்குதல் / சார்த்துதல்” என்பதாகும்.

            பாவங்களில் மிகப் பெரிய பாவமாக, இறைவன் மன்னிக்காத பாவமாக, ஷிர்க் (இணை வைத்தல்) என்பதை இஸ்லாம் சுட்டுகிறது. அதனை, “நிச்சயமாக இணைவைப்பு மிகப் பெரிய அநீதம்” (இன்னஷ் ஷிர்க்க ல-ழுல்முன் அழீம் – குர்’ஆன் 31:13).

            ஷிர்க் (இணை வைப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதையும் இந்த வசனத்தைக் கொண்டு விளங்க முடியும். இறைவனுக்கு உரியதை அவனின் படைப்புக்களுக்குச் சார்த்தும்போதும், படைப்புக்களுக்கு உரியதை இறைவன் மீது சார்த்தும்போதும் இணை வைப்பு ஏற்படுகிறது. அது மிகப் பெரிய அநியாயம் (ழுல்ம்) என்பது இப்படிப் படித்தரங்களைப் பேணாமல் போவதால்தான். (உ-ம்: இறைவன் உண்பான், உறங்குவான், அவனுக்கு மனைவி மக்கள் உண்டு என்றெல்லாம் கற்பனை பண்ணுவது. அவனோ இவற்றை விட்டும் பரிசுத்தமானவன், மேலானவன். அதேபோல், படைப்புக்களை வணக்கத்திற்கு உரியவை என்று கற்பனை செய்வது. இதெல்லாம் படித்தரங்கள் பேணப்படாத அநீதமும் இணைவைப்பும் ஆகும்.)

            படித்தரங்களைப் பேணுவது என்பது நம் அன்றாட வாழ்வில் இருந்தே, சிறு சிறு பொருட்களை நாம் புழங்குவதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அந்தப் பயிற்சி ஷரீஅத்தின் படித்தரத்திலான பேணுதலாகும். அதில் மாற்றிச் செய்வது அநீதம் (ழுல்ம்) ஆகும். அது புழங்கு பொருட்களின் உரிமையை நாம் மீறுவதாகவும் அவற்றுக்கு நாம் செய்யும் அநீதமாகவும் முடியும். அதற்கும் நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளோம் என்று இஸ்லாம் சொல்கிறது.



            








இறைஞானி ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தாமத் பரக்காத்துஹும்) அவர்கள் என்னிடம் ஒருமுறை ”ழுல்ம் (அநீதம்) என்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டுவிட்டு பின்வருமாறு விளக்கம் தந்தார்கள்:

            ”ஒரு பொருளுக்கு நீங்கள் செய்யும் அநீதம் மூன்று விதங்களில் நிகழக்கூடும்:

1.      அப்பொருளை அது படைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக வேறொரு வேலையில் பயன்படுத்துவது. (உ.ம். பேனாவைக் கொண்டு காது குடைவது.)

2.      ஒரு பொருளை அதைப் பயன்படுத்த வேண்டிய அளவுக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்துவது. (உ.ம் ஒரு இயந்திரத்தை அதிக நேரம் ஓட்டிப் பழுதாக்குவது; கால்நடைகள் மீது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றுவது போன்றவை.)

3.      ஒரு பொருளை பயன்படுத்தாமல் போட்டு வைத்து வீணாக்குவது (உ.ம்: மாத்திரை மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தாமல் போட்டு வைத்து அவற்றைக் காலாவதி ஆக்குவது; பழங்கள், காய்களை வாங்கிப் போட்டு வைத்து அவை அழுகிப் போகச் செய்வது போன்றவை.)”

எனவே, செருப்பைத் தலைக்கும் தலையணையைக் காலுக்கும் வைத்துப் படுப்பது அவற்றுக்குச் செய்யும் அநீதம் ஆகிறது. அதை மவ்லானா ரூமி ஒருபோதும் செய்ய மாட்டார் அல்லவா? (மருத்துவர் ஆலோசனைப்படி காலுக்குத் தலையணை வைத்துப் படுக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். அப்போது அநீதம் ஆகாது. ஆனால், எந்த மருத்துவரும் செருப்பைத் தலைக்கு வைத்துப் படுக்கச் சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்!)

கால்கள் மட்டமானவை அல்ல என்பதற்கு வேறு விதத்தில் விளக்கம் உண்டு. பெரியோர்களின் பாதங்களை முத்தமிடுவது நபிவழி ஆகும்! அந்த வகையில் மவ்லானா ரூமி அவர்கள் தன் குருநாதரான ஷம்ஸுத்தீன் தப்ரீஸ் (ரஹ்) அவர்களின் பாதங்களைப் பல முறை முத்தமிட்டிருப்பார்கள். தன் தலையை விடத் தன் குருவின் பாதம் மேலானது என்றே ஓர் உண்மைச் சீடன் எண்ணுவான். தன் பாதமும் தன் குருவின் பாதமும் சமம் என்று எண்ணுவது இருக்கட்டும், தன் தலையும் தன் குருவின் பாதமும் சமம் என்று அவன் எண்ணுவதுமே கூட அநீதமாகிவிடும்!

இன்னொன்றும் நியாபகம் வருகிறது. “லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவை நாவால் மொழிந்து தன் உள்ளத்தால் மெய்ப்படுத்துபவரிடம் அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நன்மாராயம் சொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அதற்கு அடையாளமாக நபி (ஸல்) தனது காலணிகளை (நஃ’லைன் ஷரீஃப்) அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்; ரியாளுஸ் ஸாலிஹீன் #709). நபியின் பாத ரட்சைகளைக் கைகளில் ஏந்தி நெஞ்சில் அணைத்தபடிதான் அபூ ஹுரைரா (ரலி) சென்றிருப்பார்களே அன்றி அதைத் தன் பாதத்தில் அவர்கள் அணிவார்களா என்ன? அது நபிக்குச் செய்யும் மரியாதைக் குறைவு ஆகிவிடும் அல்லவா? நபியின் காலணிகளுக்கான மரியாதை அதை நெஞ்சிலும் தலையிலும் நாம் தாங்க வேண்டும் என்பதாகும்.

அதே போல், வானவர்கள் மரப் பேழை ஒன்றைச் சுமந்து வந்தது பற்றியும் அதில் மூசா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) ஆகிய இறைத்தூதர்களின் சந்ததியர் விட்டுச் சென்ற பொருட்கள் இருந்தன என்றும்  குர்’ஆன் (2:248) பேசுகிறது. அந்தப் பேழைக்குள் இறைத்தூதர்களின் காலணிகளும் இருந்தன விரிவுரைகள் இயம்புகின்றன. வானவர்களின் தலைக்கு மேல் இறைத்தூதர்களின் காலணிகள் இடம் பெறலாம். அதுதான் இறைத்தூதர்களுக்கான மரியாதை, கண்ணியம். அதைச் செய்யாவிட்டால் ழுல்ம் என்னும் அநீதம் ஆகிவிடும்.

இவை எல்லாம் பெரியோர்களின் பாதங்களும், காலணிகளும் சிறியோர் மதிக்கத் தக்க அளவில் மேலானவையே என்று காட்டுவதாகும். ஆனால், பொதுவில் நோக்கும்போது, ஒருவர் தன் செருப்பைத் தலைக்கு வைத்துக் கொள்வதும் தலையணையைக் காலுக்கு வைத்துக் கொள்வதும் ழுல்ம் என்னும் அநீதம் ஆகும். அதை ஸூஃபி ஞானி ஒருவர் செய்ய மாட்டார்.












நாகூர் ரூமி எழுதியுள்ள முன்னுரையில் பெரியவர் நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்களின் சாதனையைச் சுட்டிக் காட்டியுள்ளார். மவ்லானா ரூமியின் ”மஸ்னவி ஷரீஃப்” என்னும் பெருநூலினை அவர் மூல வரிகளுடனும் ஒலிபெயர்ப்பும் நல்கி தமிழாக்கம் செய்துள்ளார். மொத்தம் ஏழு பாகங்கள். அதன் முதல் பாகத்தில் மவ்லானா ரூமி பற்றி ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். அதில் ரூமியின் முக்கியமான மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறார்:

ஹர் மர்த்தபா அஸ் உஜூத் ஹுக்மே வாரித்

கர் ஃபர்கெ மராதிப் நகுனீ ஜிந்தீக்கி

பொருள்: ”உள்ளமையின் ஒவ்வொரு படித்தரத்திற்கும் ஒரு கட்டளையுண்டு; படித்தரங்களுக்கு உரிய வேறுபாட்டை நீ கவனிக்கவில்லை என்றால் நிச்சயம் நீ ஒரு நயவஞ்சகனே”  (ப.11)

ஜிந்தீக் என்றால் வழிகெட்டவன் என்று பொருள். படித்தரங்களுக்கு இடையே வேறுபாடுகளின் நியதிகளைப் பேணவில்லை எனில் ழுல்ம் உண்டாகி அவன் சத்தியப் பாதையில் இருந்து தவறிவிடுவான். அத்தகைய ழுல்ம் அதன் உச்சத்தில் ஷிர்க் என்னும் இணைவைப்பாக இருக்கும். எனவே ஷிர்க்கை விலக்கி ஏகத்துவத்தைப் பேண வேண்டும் எனில் படித்தரங்களின் வித்தியாசங்களை, அதில் உள்ள உயர்வு தாழ்வுகளைப் பேண வேண்டியதும் அவசியமாகும்.

இன்னோர் உதாரணம்: மூன்று தங்கக் கட்டிகள் உள்ளன. அவை பணிப்பொற் கட்டிகள். ஒவ்வொன்றும் 100 கிராம் எடை. எனவே தங்கத்தின் மதிப்பைக் கவனித்து அவை மூன்றும் சமம்தான். ஆனால், ஒன்றை வைத்து மாலையும் இன்னொன்றை வைத்து வளையலும், மற்றொன்றை வைத்து கொலுசும் செய்யப்படுகிறது. இப்போது மூன்றும் அவற்றின் உள்ளமைப் பொருளான பொன்னை கவனித்து சம மதிப்பில் இருந்தாலும் அவை சமமே என்று காட்டுவதற்காக கொலுசைக் கழுத்தில் போட முடியாது, மாலையைக் கையில் சுற்றிக் கொள்ள மாட்டார்கள், வளையலைக் காலில் அணிய மாட்டார்கள். இந்த அறிவு எல்லோருக்கும் இயல்பிலேயே உள்ள நியாய உணர்ச்சியாகும். இது ழுல்ம் செய்யக்கூடாது என்னும் விவஸ்த்தை ஆகும்.









ஈரோடு தமிழன்பன் தன் கவிதையின் வழி – அதாவது அவரின் கற்பனையில் வரும் மவ்லானா ரூமி அவருக்கு – சமத்துவத் தத்துவத்தைப் போதிக்கிறார் என்று நாகூர் ரூமி அவர்கள் இப்படி விளக்கி எழுதியுள்ளார்:

”கருப்பர்கள், அடிமைகள் என்பதால் நபித்தோழர்கள் பிலால், அம்மார் போன்றவர்களைத் தீயில் நிர்வாணமாகப் படுக்க வைத்து உடலை வதைத்தார்கள் குறைஷிகள். ஒரு கருப்பரின் கழுத்தில் தன் வெள்ளைத் தொடையை வைத்து நசுக்கி உயிர் பறிக்கும் வேலையைச் செய்கிறான் துப்பாக்கி ஏந்திய ஒரு வெள்ளை அமெரிக்கன் இன்று. சாத்தான்குளத்தில் துப்பாக்கி ஏந்திய சில சாத்தான்கள் ஒரு தந்தையையும் மகனையும் கொடுமையாக அடித்துக் கொல்கிறார்கள். ஒரு சின்னக் குழந்தையை அது முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள் சிரியாவில்.

இப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளன? ஒரு பக்கச் சார்புதான். சிலரை செருப்பாகவும் சிலரைத் தலையணையாகவும் நினைப்பதால்தான்.

இந்த உயர்வு தாழ்வு நிலைகள் உண்மையானவை அல்ல என்று இக்கவிதைகள் மிக அழகாகச் சொல்கின்றன. தலை என்றால் உயர்வு கால் என்றால் தாழ்வு என்ற நினைப்புதான் எல்லா வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காரணம். தலையால் மட்டுமே ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. தலையில்லாமலும் வாழமுடியாது. அதைப் போல கால்களால் மட்டுமே ஒருவர் வாழவும் முடியாது. தலையைக் காலும், காலைத் தலையும் சார்ந்துள்ளன என்று தலையும் காலும் புரிந்துகொள்ள வேண்டும்.”

ஒரு கோணத்தில் நாகூர் ரூமி அவர்களின் விளக்கம் நன்றாகவும் சரியாகவும் இருக்கிறது என்றாலும் அதற்கான எல்லைகளும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

சமத்துவம் என்று வந்தால் உடனே உணர்ச்சி வசப்பட்டுப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தலை உயர்வானது கால் தாழ்வானது என்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அதற்காகத் தொப்பியைக் காலுக்கும் காலுரையைத் தலைக்கும் அணிவிக்க முடியுமா? காலுரையைக் கைக்குக்கூட அணிவிக்க முடியாதே! ஏனெனில், ஒவ்வொன்றின் வடிவமைப்பும் வேறு.

கருப்பு வெள்ளை என்று நிறத்தை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாதுதான். அது அநீதம் ஆகும். இது குறித்துப் பிரபலமான ஹதீஸ் ஒன்றுண்டு. பொ.ஆ 623-இல் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளில் நபி (ஸல்) நிகழ்த்திய இறுதிப் பேருரையில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது: ”மனிதர்களே! நிச்சயமாக உங்களின் ரட்சகன் ஒருவனே, மேலும் உங்கள் தந்தையும் ஒருவரே (யா அய்யுஹன்னாஸு இன்ன றப்பக்கும் வாஹிதுன் வ இன்ன பாகும் வாஹிதுன்). அறபி ஒருவருக்கு அறபியல்லாதவர் மீது சிறப்பில்லை, அறபியல்லாத ஒருவருக்கு அறபியர் மீது சிறப்பில்லை, வெள்ளையர் ஒருவருக்கு கறுப்பரின் மீது சிறப்பில்லை, கறுப்பர் ஒருவருக்கு வெள்ளையர் மீது சிறப்பில்லை, பயபக்தியைக் கொண்டே தவிர  (அலா லா ஃபள்ல லி-அறபிய்யி அலா அஜமிய்யி வ லா லி-அஜமிய்யி அலா அறபிய்யி வலல் அஹ்மர அலா அஸ்வத வ லா அஸ்வத அலா அஹ்மர இல்லா பித்-தக்வா). இதைச் சொல்லிவிட்டு நபி (ஸல்) பின்வரும் குர்’ஆன் வசனத்தை ஓதினார்கள்: “நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் அதிக பயபக்தி உடையவரே (இன்ன அக்ரமக்கும் இந்தல்லாஹி அத்காக்கும் - 49:13)” (அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி); நூல்: சுஹைபுல் ஈமான் #4706)

இந்த ஹதீஸில் அடிக்கோடிட வேண்டிய விடயம் “இல்லா பித்-த்க்வா” – “பயபக்தியைக் கொண்டே தவிர” என்பதுதான். அதாவது ஃபள்லு (உயர்வு, மேன்மை, சிறப்பு) என்பது மனிதர்களுக்கு இடையே உண்டு. அதற்கான அளவுகோல் தக்வா (பயபக்தி) என்று இந்த ஹதீஸும் அதற்குச் சான்றாக நபி (ஸல்) ஓதிக்காட்டிய குர்’ஆன் திருவசனமும் வலியுறுத்துகின்றன. உயர்வு தாழ்வுக்கான அளவுகோல் இங்கே சுட்டப்படுகிறது. அதை நாம் மறுதலித்தால் ழுல்ம் என்னும் அநீதம் உண்டாகும்.

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதையும் இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது. மற்றபடி, இறைநம்பிக்கையின் அடிப்படையில் அதனை உடையவரும் இல்லாதவரும் சமமல்லர் என்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறது. இறை நம்பிக்கையாளரிலும் அவரவர் பயபக்தியின் நிலைகளுக்கு ஏற்ப உயர்வு தாழ்வு உண்டு என்றும் வலியுறுத்துகிறது. இதனால்தான் விசுவாசிகளுக்குப் பற்பல படித்தரங்கள் உண்டாகியுள்ளன.

”நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகிறோம்; கல்வியறிவுள்ள ஒவ்வொருவருக்கும் மேலான அறிஞன் ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (நர்ஃப’உ தரஜாத்தின் மன் நஷாஉ, வ ஃபவ்க்க குல்லி தீ-இல்மின் அலீம் – 12:76) என்று குர்’ஆன் சொல்வதன்படி அறிவு என்பது உயர்வு தாழ்வுக்கான அளவுகோல் ஆகிறது.

”அவனின் தூதர்களில் எவரையும் நாம் பிரித்து வேறுபடுத்த மாட்டோம்”  (லா நுஃபர்ரிக்கு பைன அஹதிம் மிர் ருசுலிஹி – 2:285) என்று சொல்லும் அதே குர்’ஆன் இப்படியும் சொல்கிறது: “அந்தத் திருத்தூதரகள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கியுள்ளோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியுள்ளான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியுள்ளான் (தில்கர் ருசுலு ஃபள்ளல்னா பஃ’ளஹும் அலா பஃ’ளின் மின்ஹும் மன் கல்லமல்லாஹு வ ரஃப’அ பஃ’ளஹும் தரஜாத்தின் – 2:253). இவ்விரண்டு திருவசனங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல. ஒவ்வொன்றுக்கும் அதை விளங்குவதற்கான புழங்குவதற்கான படித்தரம் இருக்கிறது.

”குருடரும் பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே இறைநம்பிக்கை கொண்டு நற்காரியம் ஆற்றுவோரும் தீயோரும் சமமாகார்” (குர்’ஆன் 40:58)

”மரணித்த ஒருவனை நாம் உயிர்ப்பித்தெழுப்பி அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதரிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக் கிடக்கிறான். அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது – இவ்விருவரும் சமமாவரா?” (குர்’ஆன் 6:122)

சமத்துவத்துக்கு ஒரு படித்தரம் இருக்கிறது. எல்லை இருக்கிறது. சமமின்மைக்கும் படித்தரம் இருக்கிறது! உயர்வு தாழ்வு என்பது அறவே கிடையாது என்று பேசப்படும் சமத்துவம் ’அதாலத்’ என்னும் நீதி பரிபாலணத்தைக் காவு கேட்கிறது! நீதியை பலி கொடுத்து சமத்துவம் பேச முடியாது.

அனைவருக்கும் கல்விக்கான வாய்ப்பு என்பது சமத்துவம். அதற்காக, நன்றாகப் படிக்கும் மாணவனையும் படிக்காத மாணவனையும் சமம் என்று ஒரே மதிப்பெண் வழங்க முடியாது. பின்னர் தேர்வுகள் எதற்கு? ஏற்றத் தாழ்வைக் காட்டத்தானே?

நல்லவரும் தீயவரும் எப்படிச் சமமாக முடியும்? எனில் நன்மையும் தீமையும் சமம் என்று ஆகிவிடாதா? நல்லவராக இருக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது. ஆனால் நல்லவர் உயர்வானவர், தீயவர் தாழ்வானவரே.

வாய்ப்புகளில் அனைவருக்கும் சமத்துவம்; அதன் விளைவுகளில் உயர்வு தாழ்வு. இதுதான் உலக நியதி. இவற்றில் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த விளக்கங்கள் போதும் என்று கருதுகிறேன்.

            மவ்லானா ரூமியின் கவிதைகளை அவரவர் தத்தமது அறிவு நிலைக்கேற்ப வாசிக்கின்றனர். அவரை நவீனப் படுத்தும் போக்கு என்று சொல்லிக்கொண்டு அவரது கவிதையின் அர்த்தங்களைத் திரித்துவிடுவோரும் உண்டு. அவரைத் தம் கற்பனைக்குள் இழுத்து தம் இஷ்டத்துக்கு மாற்றி வடிவமைத்துக் காட்டப்படுவதும் உண்டு. மவ்லானா ரூமியை எப்படி வாசிக்க வேண்டும் என்று நான் சமய ரீதியான குறிப்புகளைத் தருகிறேன் என்பதை எழுத்தாளர் வசுமித்ர ஒரு குற்றச் சாட்டாகவே வைத்தார். எனினும் நான் தொடர்ந்து என் பணியைச் செய்து கொண்டுதான் வருகிறேன்.

            மவ்லானா ரூமி ஒரு ஸூஃபி ஞானக் கவிஞர், இறைநேசர். அவரின் கவிதைகளை ஸூஃபி ஞான நெறியில் முறைப்படி – ஆம், முறைப்படி – பயிற்சி பெறுவோரால் மட்டுமே சரியாக விளங்க முடியும். ரூமி அன்பரான ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு அந்த நல்வாய்ப்புக் கிட்டட்டும்.

Monday, June 9, 2025

மணமகன் ஆகி வந்தார்

                அண்மையில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தபோது திருமண நிகழ்வு ஒன்றின் காணொளி என் கண்ணையும் காதையும் கருத்தையும் கவர்ந்தது. ஹைதரபாத் மாநகரில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்வு அது.

            நான் சார்ந்திருக்கும் ஆன்மிகப் பாதையின் மாபெரும் இறைநேசரான சய்யிதுனா நூரீ ஷாஹ் சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் பேரப் பிள்ளையும், சய்யிதுனா ஆரிஃபுத்தீன் ஜீலானீ சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் மகனுமான ஹஜ்ரத் மவ்லானா சய்யித் ஷம்சுத்தீன் ஜீலானீ அலீ பாஷா சாஹிப் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்களின் திருமணம் அது.

பூமாலையும் மகுடமும் சூடிய மணமகனை ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியில் இருந்து திருமண மேடையில் ஏறும் வரையிலான காட்சிகளை அந்தக் காணொளி காட்டிற்று. அதன் பின்னணியில் ஒலித்த கவ்வாலிதான் என் காதையும் கருத்தையும் கவர்ந்தது.

கடந்த முப்பது ஆண்டுகளாக கவ்வாலி கேட்டு வருகிறேன். ஆனால் இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முறையாகக் கேட்டேன். அது எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. எளிமையான மெட்டு, பாடகரின் குரலில் ஒரு பாமரத் தன்மை, மெருகின்மை. நுட்பமில்லாத தாளக் கட்டு. ஆனால், இவை எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை வேறொரு தளத்திற்குத் தூக்கிச் சென்றுவிட்ட அற்புதம் அதில் நிகழ்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருந்தது.




அந்தப் பாடல், திருமண நிகழ்வில் மணமகனை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஆனால் அது ஆன்மிகக் குறியீட்டுப் பாடலாகவும் அமைந்துள்ளது. இறைநேசர் ஆன தன் குருநாதரை சீடர்கள் கூடி வரவேற்பது போன்றும் அதனை அர்த்தப்படுத்த முடிகிறது. அப்படித்தான் கவிஞர் அதனை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். அதனை வார்ஸி பிரதர்ஸ் (நஜீர் அஹ்மத் ஃகான் வார்ஸி மற்றும் நஸீர் அஹ்மத் ஃகான் வார்ஸி) பாடியுள்ளனர். அதன் வரிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:

வந்து பார், என் தோழியே! - யார்

வந்துள்ளான் என்று நீயே பார்.

என் காதலன் வந்துள்ளான் பார் -என்

அழகு இளம் காதலன் வந்துள்ளான்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துள்ளான்!

 

தன் குலத்தின் செல்வன் வந்துள்ளான்

மணமகனாக இங்கே வந்துள்ளான் – முகத்தில்

பூத்திரை அணிந்து வந்துள்ளான்

சுவனக் கன்னியர் பாடுகின்றார் – மகிழ்ந்து

வானவரும் போற்றிப் பாடுகின்றார்!

 

தோற்றம் முஸ்தஃபாவின் தோற்றம்

பிரகாசம் முர்தழாவின் பிரகாசம்

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

 

கேட்க வேண்டும் என்று வந்தோர் – தம்

மனத்தின் நாட்டத்தை அடைந்துவிட்டார்!

இறைவா! இதெல்லாம் உன் அருளே!

உன் அருளே! இறைவா! உன் அருளே! – இதோ

என் அழகு இளம் காதலன் வந்துவிட்டான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்

எது வந்தாலும் அவனுக்காக ஏற்பேன்

இந்த நாள் இறைவன் உவந்த நாள் – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! - அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

கண்களில் அவன் இருக்கிறான் – இனி

கண்களைக் கவர்பவர் எவருமில்லை

இதயத்தில் அவன் இருக்கிறான் – இனி

இதயத்தை ஈர்ப்பவர் எவருமில்லை

என் குருநாதர் எனக்கு வாய்த்துவிட்டார் - நான்

அருந்திய மது வெளியே எங்கும் கிடைப்பதில்லை!

இப்படி ஓர் அழகு, இறைவன் மீது சத்தியமாக

வேறு எங்குமே இல்லை!

எனக்குக் கிடைத்த அழகுச் சிலை போல்

அவனியில் எங்குமே சிலை இல்லை!

இரு கண்களில் அள்ளிக் கொண்டேன் – அழகு

முகத்தை நானும் அடைந்து கொண்டேன்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

அவன் முகத்தில் பொங்கும் ஒளிச்சுடரில் - முழு

உலகமும் கொண்டாட்டம் காண்கிறதே! - பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!





தீஷான் ஜான்பாஸ் என்பவரால் தற்போது இயற்றி இயக்கப்பட்டு வரும் “தெக்கன் நைட்ஸ்” என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ஹைதரபாதின் பண்பாட்டு அம்சங்களைப் புலப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் இப்படத்தில் இப்பாடல் ஒரு திருமண நிகழ்வில் இடம் பெறுவதாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை எழுதியவர் யார் என்று தேடிப் பார்த்தபோது, இதற்கே ஒரு மூலப்பாடல் இருப்பதும் அதன் வரிகளைச் சற்றே மாற்றித்தான் கவ்வாலியில் பாடியுள்ளனர் என்றும் தெரிய வந்தது! அதனை எழுதியவர் ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) என்பவராவார். அவர் எழுதிய பாடல் நபி (ஸல்) அவர்களை வரவேற்பது போல் அமைந்திருக்கிறது.











பெயரை மட்டும் சொன்னால் அன்னாரின் ஆளுமை பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விடும். ஒரு சிறு அறிமுகமாவது தர வேண்டும். ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) (1871–1962) அவர்கள் ”பஹ்ருல் உலூம்” (கல்விப் பெருங்கடல்) என்று போற்றப்பட்டவர் ஆவார். இருபத்தெட்டு தலைமுறைகளுக்கு முன் அவரின் தந்தைத் தரப்பிலான குடும்பக் கொடிவழி ஹஜ்ரத் அபூபக்ரு அஸ்-ஸித்தீக் (ரலி) அவர்களுடன் இணைகிறது [அதனால்தான் ஸித்தீக்கி என்று பெயரில் குறிப்பிடப்படுகிறது]; அதுவே தாயின் தரப்பில் முப்பத்திரண்டாம் தலைமுறையில் சய்யிதுனா இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைந்து அவ்வழியில் அன்னாரின் பாட்டனாரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களில் இணைகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறபி மொழியில் மவ்லவி ஃபாஜில் பட்டமும் ஃபார்சி மொழியில் முன்ஷி ஃபாஜில் பட்டமும் பெற்று முதல் இடத்திற்கான தங்கப் பதக்கங்களும் பெற்றவர். பின்னர் சிறிது காலம் ஹைதராபாதில் “தாருல் உலூம் கல்லூரி”யில் பேராசிரியராகப் பணியாற்றினார். அது, முதலில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிப் பின்னர் உஸ்மானிய்யா பல்கலைக்கழகம் என்று ஆயிற்று. அப்படி அது தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஆனபோது இறையியல் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். இருபது ஆண்டுகள் அப்பதவியில் பணியாற்றிய பின்னர் 1932-இல் ஓய்வு பெற்றார்.

தன் தாய்மாமன் ஆன ஹஜ்ரத் சையத் ஃகாஜா முஹம்மத் ஸித்தீக் மஹ்பூபுல்லாஹ் (ரஹ்) அவர்களைத் தன் ஆன்மிக குருவாகக் கொண்டு ஸூஃபி நெறியில் பயணித்தவர். தன் குருவின் மறைவைத் தொடர்ந்து தன் இருபத்து நான்காம் வயதில் குருவாகப் பொறுப்பேற்று, அதன் பின்னரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு குருமார்களிடம் ஞானப் பயிற்சிகள் பெற்றுத் தன்னைச் செம்மை ஆக்கிக் கொண்டவர். இவரின் சீடர்களும் கொடிவழியினரும் தங்களை “கதீரி”கள் என்று அழைக்கின்றனர்.

குர்’ஆனுக்கு அவர் எழுதிய விரிவுரையான “தஃப்சீரே ஸித்தீக்கி” என்பது ஆறு பாகங்களாக அமைந்துள்ளது. இவை அன்றி அல்-தவ்ஹீத், ஹிக்மத்தே இஸ்லாமிய்யா, அல்-இர்ஃபான், தஃப்ஹீமாத்தே ஸித்தீக்கி, ஹகீக்கத்தே பைஅத், ஹகீக்கத்தே மிஃ’ராஜ், அல்-ம’ஆரிஃப், சமாஃ முதலிய ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவரின் கஜல் கவிதைகள் “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் தொகுப்பு நூலாக உள்ளது. 1962-இல் இறந்த இவரின் அடக்கத்தலம் ஹைதராதின் பஹதூர்புரா என்னும் பகுதியில் உள்ள “குல்ஷனே சித்தீக்கி” என்னுமிடத்தில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஷவ்வால் 17-ஆம் தேதி அன்னாரின் உரூஸ் என்னும் ஆண்டு வைபவம் நிகழ்த்தப் படுகிறது.












இவர் ”ஹஸ்ரத்” என்னும் புனை பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் கவ்வாலியாகப் பாடப்படும் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். இது ஹிந்தி மொழியில் எழுதப்பட்டதாகும். [1966-இல் (ஹிஜ்ரி 1386-இல்) ஜனாப் கர்னல் ஹபீப் அலீ ஸாஹிப் கதீரி என்பவரால் பதிப்பிக்கப்பட்ட “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் நூலில் ‘ஹிந்தி கலாம்’ என்னும் பகுதியில் இப்பாடல் 149-ஆம் பக்கத்தில் அமைந்துள்ளது]. இது தக்கணப் பகுதியில் மிகப் பிரபலமான ஒரு பாடலாக இன்றும் பாடப்பட்டு வருகிறது. தில்லி அரசியாக இருந்த ரஜியா சுல்தானாவின் கதை 1983-இல் இந்தியில் திரைப் படமாக எடுக்கப்பட்டபோது ”ஹரியாலா பன்னா ஆயா” என்னும் முதலடி மட்டும் பல்லவியாக எடுத்தாளப்பட்டு வேறொரு பாடல் எழுதப்பட்டு அப்படத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் எவ்வளவு பிரபலமான ஒன்று என்பதற்கு இது ஒரு சான்று.

 இனி, “ஹஸ்ரத்” எழுதிய “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலைக் காண்போம்.

”பசுமையான காதலர் வந்தார்

பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

(ஹரியாலா பன்னா தூம் கஜர் சே ஆயா)

என்று இப்பாடல் தொடங்குகிறது. ”கஜர்” என்பது விடியல் பொழுதில் உறங்கிக் கொண்டிருப்போரை எழுப்பும் பேரொலி ஆகும். காதலனின் வருகை உள்ளத்தின் உறக்கத்தைக் கலைத்து விழிப்பூட்டுவதாக இருக்கிறது. அதாவது, நபியின் வருகை மனித குலத்திற்கு அகக் கண்ணைத் திறப்பதாக உள்ளது.

            ”பெரும் ஆரவாரத்துடன் வந்தாரம்மா

             பசுமையான அழகுக் காதலர்!

             வெகு தூரத்திலிருந்து வந்தாரம்மா - அவர்

            விண்ணேற்றம் முடித்துத் திரும்பி வந்தார்!

                        (படீ தூம் சே ஆயா மா(ன்) ஹரியாலா பன்னா /

                               படீ தூர் சே ஆயா மா(ன்) மிஃராஜி பன்னா)

            நபியின் எதார்த்தம் (ஹகீக்கத்) இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகும். அது படிப்படியாக அனைத்து இறைத்தூதர்களிலும் வெளிப்பட்டு முழுமையான வெளிப்பாடாக முஹம்மத் (ஸல்) அவர்கள் இம்மண்ணில் மனிதராகப் பிறந்தார்கள். எனவேதான் அவர்கள் இறுதி இறைத்தூதராக வந்தார்கள். “தேர் ஆமத் கெ அஸ் தூர் ஆமத்” (தாமதமாக வந்தார்கள், ஏனெனில் வெகு தொலைவில் இருந்து வந்தார்கள்) என்று இதனைச் சொல்வதுண்டு. இவ்வரிகளில், நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்ணேற்றம் சென்று வந்த நிகழ்வைக் கவிஞர் பாடுகிறார். இறைவனை தரிசித்த பின் உம்மத் என்னும் தன் சமுதாயத்தின் மீது கொண்ட பாசத்தால் நபி (ஸல்) இம்மண்ணுலகிற்குத் திரும்பி வந்துவிட்டார்கள். இதைப் பற்றி மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்லும்போது, மாபெரும் ஸூஃபி கவிஞர்களுள் ஒருவரான அப்துல் குத்தூஸ் கங்கோஹி (ரஹ்) அவர்களை மேற்கோள் காட்டுகிறார்: “அறபியான முஹம்மத் (ஸல்) உச்சமான வானத்திற்குச் சென்று திரும்பி வந்துவிட்டார்கள்; இறைவனின் மீது சத்தியம்! அந்த இடத்திற்கு நான் சென்றிருந்தால் ஒருபோதும் திரும்பி வந்திருக்க மாட்டேன்!” இதனை அல்லாமா இக்பால் (ரஹ்) இப்படி விளக்குகிறார்கள்: “ஸூஃபி இலக்கியப் பரப்பு முழுவதிலும், இறைத்தூது (நுபுவ்வத்) மற்றும் இறைநேசம் (விலாயத்) ஆகியவற்றின் பிரக்ஞைகளுக்கு இடையிலான உளவியல் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இவ்வளவு கூர்மையான பார்வையைக் காண்பது அரிதாகும்.” (”Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam”, Lecture-V ‘The Spirit of Muslim Culture’, p.173, The Kapur Art, Lahore, 1930). நபி (ஸல்) அவர்களை, “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” (அகிலங்கள் அனைத்துக்கும் பேரருள்) என்று இறைவன் வருணிக்கிறான் (குர்’ஆன் 21:107). மிஃராஜ் பயணத்தில் இருந்து நபி (ஸல்) திரும்பி வந்த நிகழ்வும் அதனை உறுதிப்படுத்திவிட்டது. எனவே அது இறை விசுவாசிகள் கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வாகிவிட்டது.

            ”மக்களே! பாருங்கள் எத்தகைய ஆரவாரம்!

             இங்கே மத்தளம் இப்படி ஒலிப்பதும் ஏன்?

             பாருங்கள்! பாருங்கள்! யார் வந்துள்ளார் என்று;

             இறைநேசர்கள் ஜெய பேரிகை கொட்டுகிறார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (லோகோ! தேக் ஷோர் ஹே கெய்சா / க்யூன் பிகஹ்தா ஹே யான் நக்காரா // தேக்கோ தேக்கோ கோன் ஹே ஆயா / அலீ வலீ நே நஃ’ரா மாரா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”சத்திய இறைவனின் பிரியமான மன்னர் மணமகன்

             சமுதாயத் தலைவர், அனைவருக்கும் வழிகாட்டி,

             என் இதயக் கனி, என் இனிய எஜமான்!

             இறைவனின் அருநிழல், இன்னும் என்ன சொல்ல?

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஹக் கா ப்யாரா ராஜ் துலாரா / உம்மத் வாலா சப் கா சஹாரா // மேரா தாலீ மேரா ஆக்கா / க்யா கெஹ்னா ஹே ழில் ஃகுதா கா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”மகத்துவத்தின் மாட்சியாம், கண்ணியத்தின் இருப்பிடமாம்,

             வல்லமையின் ஊடககமாம், பேரருள் உடையவராம்,

             பேரொளியின் திருவுருவாம், நேசத்திற்குரிய நல்வாழ்வாம்,

             அனைவரினும் சிறந்தவராம், அனைவரினும் உயர்ந்தவராம்,

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஷானே அழ்மத் மர்கஸே இஜ்ஜத் / மழ்ஹரே குத்ரத் ஸாஹிபே ரஹ்மத் // நூர் கீ ஸூரத் ப்யாரீ சீரத் / சப் சே அஃப்ழல் சப் சே அஃ’லா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”நிச்சயமாக நான்… என்பதன் ஒளியைக் காட்டினார்

             அடியார் ஆகி வந்து இறைவனை நேசித்தார்

             அனைத்தையும் இழந்து அனைத்தையும் அடைந்தார்

             சமுதாயத்தின் தலைவர், அனைவரையும் ஏற்றுக்கொண்டார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (இன்னீ அனா கா ஜல்வா திகாயா / பந்தா பன் கர் ரப் கோ பாயா / சப் குச் கோ கர் சப் குச் பாயா / உம்மத் வாலா சப் கோ சுஹாயா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

             இந்தப் பாடல் நாயக நாயகி பாவனையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கிறது. அதுவும், வடநாட்டில் ஹிந்தி பேசும் ஒரு பெண்ணின் குரலில். அதனால்தான் இதில் ’கஜர்’ போன்ற சம்ஸ்கிருத மூலம் கொண்ட சொற்களும் எழுதப்பட்டுள்ளன. இப்படி நபி (ஸல்) அவர்களின் புகழைப் பாடுவதில் இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல் இந்தியாவுக்கே உரிய பக்தி மரபின் சுவையுடன் அனுபவமாகிறது.