Thursday, July 18, 2024

இத்ரீஸ் ஷாஹ்…?

 


            அண்மையில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அதைப் பற்றிய குறுஞ்ச் செய்தி ஒன்றை சகோதரர் உவைஸ் எனக்கு அனுப்பியிருந்தார்.



            அந்த நூலின் பெயர் “Empire’s Son, Empire’s Orphan”; எழுதியவரின் பெயர் நைல் கிரீன். இந்த நூல் எதனைப் பற்றியது? “The Fantastical Lives of Ikbal and Idries Shah” என்று அதன் அட்டையிலேயே ஒற்றை-வரியம் (one-liner) குறிப்பிடப்பட்டுள்ளது. ஈண்டு இக்பால் என்று குறிப்பிடப்படுபவர் அல்லாமா இக்பால் அல்லர்; இவர் இத்ரீஸ் ஷாவின் தந்தையான சர்தார் அக்பர் அலீ ஷாஹ் (1894-1969) என்பவராவார். இதனை கவனம் கொண்டு மேற்செல்க.

            இக்பால் அலீ ஷாஹ் மற்றும் இத்ரீஸ் ஷாஹ் ஆகியோரின் குற்றங் குறைகளை இந்நூல் விவரிக்கிறது. தந்தையும் தனையனும் தம் சிந்தை சித்தரித்த கற்பனைக் கதைகளால் ஐரொப்பிய அறிவுலகை மயக்கிவிட்டனர் என்பது குற்றச்சாட்டின் சாரம்.



            நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் அன்னிமேரி ஷிம்மெல் சொல்கிறார்: “இத்ரீஸ் ஷாஹ்வையும், தி ஸூஃபீஸ் உள்ளிட்ட அவரின் நூற்ளையும் ’சீரியஸ்’ஆன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.” பீட்டர் லம்பான் வில்சன் என்பாருக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் மேலும் சொல்கிறார்: “அவருக்கு கல்விப்புலப் பின்னணி இல்லை. அவரின் விட்டேற்றியான எழுத்துக்கள் இயைபு படுத்த முடியாத விடயங்களால் நிரம்பியுள்ளன. வரலாற்று ஈடுபாடோ சுழியம். துல்லியம் துக்குனியூண்டு மட்டுமே… ஓர் அறிஞராக இல்லாவிடினும் ஆழமான ஆத்மானுபவம் கொண்ட ஒருவரை, அவரால் தன்னை ‘கல்விப்புல’ பாணியில் வெளிப்படுத்திக் கொள்ள முடியாவிடினும், அவரின் சொற்களில் உண்மையும் நேர்மையும் சுடர்விடும் எனில், ஸூஃபி என்று ஏற்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அது ஒரு பிரச்சனை அன்று. ஆனால், வெறும் பாசாங்குகளை முன் வைக்கும் இத்ரீஸ் ஷாஹ்வை என்னால் ஏற்க முடியாது.”



            சகோதரர் உவைஸ் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியை வாசித்துவிட்டு வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ”நான் நேசித்த நூற்கள்” என்னும் நூலில் இத்ரீஸ் ஷாஹ் பற்றி ஓஷோ சொல்லியிருக்கும் கருத்தையும் நினைவு கூர்ந்தேன்: “இந்த மனிதனின் ஒவ்வொரு நூலையும் நான் பரிந்துரைக்கிறேன். பயப்பட வேண்டாம், நான் இன்னமும் பைத்தியமாகத்தான் இருக்கிறேன்! என்னை எதுவும் தெளிய வைக்க முடியாது. ஆனால், இத்ரீஸ் ஷாஹ்வின் ஒரு நூல் ஏனைய நூற்கள் அனைத்துக்கும் மேலே உயர்ந்து நிற்கிறது. எல்லாமே அழகான நூற்கள்தாம். அவை அனைத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் தி ஸூஃபீஸ் (ஸூஃபிமார்) என்னும் இந்த நூல் ஒரு வைரம். தி ஸூஃபீஸில் அவர் செய்திருக்கும் பணியின் மதிப்பு அளவிட முடியாதது. பேசுவது எனக்கு எளிதான ஒன்றுதான். தூங்கும்போதுகூட என்னால் பேச முடியும், அதுவும் தர்க்க பூர்வமாக! நல்லது. இது போன்ற ஒன்றை எப்போது நான் அடையாளம் கண்டாலும் அதை நான் பாராட்டுவேன். இது மிகவும் அழகானது – இத்ரீஸ் ஷாஹ்வின் தி ஸூஃபீஸை நீங்கள் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்வீர்கள். அவர்தான் மேற்குக்கு முல்லா நஸ்ருத்தீனை அறிமுகப்படுத்தியவர். அதன் மூலம் அவர் மகத்தான பணி செய்துள்ளார். அவருக்குக் கைம்மாறு அளிக்க இயலாது. மேற்கு என்றென்றைக்குமாக அவருக்குக் கடன்பட்டே இருக்க வேண்டியதுதான். எளிய சிறிய நஸ்ருத்தீன் கதைகளை இத்ரீஸ் ஷாஹ் மேலும் அழகாக்கிவிட்டார். அந்த குறுங்கதைகளைத் துல்லியமாக மொழிபெயர்ப்பது மட்டுமன்று, அவற்றை அழகு படுத்தவும், அவற்றை மேலும் சிந்தனையுடையதாக்கவும், கூர்மையாக்கவும் அவரால் இயன்றுள்ளது. நான் அவரின் நூற்கள் அனைத்தையும் (என் பட்டியலில்) சேர்க்கிறேன்.”

            அன்னிமேரி ஷிம்மெல் கூறுவதில் நான் ஏற்கும் கருத்தும் இருக்கிறது, மறுக்கும் கருத்தும் இருக்கிறது. அதே போல் ஓஷோ கூறுவதிலும்.



            இத்ரீஸ் ஷாஹ்வின் பெருநூல் என்று கருதப்படும் தி ஸூஃபீஸ் என்னும் நூலினை நான் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது ஓர் அருமையான நூல் என்றே இன்றளவும் கருதுகிறேன். பின்னர், மௌலானா ரூம்யின் வாழ்வில் நூறு கதைகள், தர்வேஷ்களின் கதைகள், முல்லா நஸ்ருத்தீன் கதைகள் 1-5 பாகங்கள் என்று அவரின் ஏழு நூற்களைத் தமிழாக்கமும் செய்துவிட்டேன். உண்மையில் என் கருத்தில் இத்ரீஸ் ஷாஹ் பற்றிய மதிப்பீடு என்ன?

            இத்ரீஸ் ஷாஹ்வை ஒருபோதும் நான் ஒரு ஸூஃபி மகான் என்றோ இறை நேசர் அல்லது இறை ஞானி என்றோ கருதியதில்லை. ஆனால் அவர் ஸூஃபித்துவம் பற்றி பரக்க எழுதிய ஓர் ’அறிஞர்’ என்றே கருதுகிறேன்.

            சிக்கல் எங்கே வருகிறதென்றால், அன்னிமேரி ஷிம்மெல் சொல்வது போல் அவர் ’ஆதார’பூர்வமாக எழுதவில்லை, புனைவுகளைக் கலந்து எழுதியிருக்கிறார் என்னும்போது அவரை எவ்விதத்தில் அறிஞர் என்று ஏற்க முடியும் என்பதில்தான். அகாடெமிக் ரீதியில் அவர் ஓர் அறிஞர் என்றும்கூட ஏற்கப்பட முடியாதவர் என்று அன்னிமேரி கருதுகிறார். அதனால்தான், “சீரியஸ்” மாணவர்கள் அவரின் நூற்களைத் தவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால், நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்த சீரியஸ் மாணவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? அவர்களால் ஸூஃபித்துவத்தில் ஈடுபட முடியுமா? ஸூஃபித்துவம் வெறுமனே அகாடெமிக் ஆராய்ச்சியன்று. சொல்லப்போனால், சீரியஸ் மாணவர்கள் அதில் நடைபோட முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில் அது பகுத்தறிவுப் புலம் அன்று. உன் அறிவைக் கழற்றி வைத்துவிட்டு வா என்பதே அத்துறையில் முதல் நிபந்தனையாக இருக்கும். நாகூர் ரூமி எழுதிய “திராட்சைகளின் இதயம்” நாவலை வாசித்துப் பாருங்கள், நான் சொல்வது புரியும். ஸூஃபித்துவத்துக்கு ’சீரியஸ்’ மாணவர்கள் தேவையில்லை, ’சின்சியர்’ சீடர்கள்தாம் தேவை.

            புத்தகங்களை வாசிப்பதால் ஒருவர் ஸூஃபியாகிவிட முடியாது என்பதை ஸூஃபி மகான்கள் காலந்தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். இதில் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி நூற்களை ஸூஃபி மகான்கள் பெரிதாகவே கருத மாட்டார்கள் என்பதற்கான நியாயங்கள் உண்டு. அத்தகு நூற்கள் ஸூஃபித்துவத்தின் உள்ளுணர்வுப் புலனை விட்டும் வெகு தொலைவிலானவை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

            இத்ரீஸ் ஷாஹ் பற்றிய ஓஷோவின் மேற்கோளை மீண்டும் படித்துப் பாருங்கள். கல்விப் புலம் சார்ந்த இறுக்கமான தர்க்க ரீதியான சிந்தனை முறை அமைந்த ஒருவருக்கு அது பித்தனின் பிதற்றல் போன்றுதான் ஒலிக்கும். இத்ரீஸ் ஷாஹ்வின் நூற்களும் பல இடங்களில் அது மாதிரிதான் எதிர்பாராத திருப்பங்களைக் காட்டிக் கொண்டே இருக்கும். ஸுஃபித்துவம் என்பதற்கு “ஃகிலாஃபே ஆதத்” – பழக்கங்களுக்கு முரண்படுதல் என்று ஒரு வரையறை உண்டு!

            இத்ரீஸ் ஷாஹ் ஒரு சூஃபி நெறியின் குருவாகவோ பிரதிநிதியாகவோ அறியப்பட்டவர் அல்லர். அவர் இன்ன ’சில்சிலா’ என்னும் குருவழித் தொடரைச் சேர்ந்தவர் என்று நான் எங்குமே வாசித்ததில்லை. தான் அனைத்து சூஃபி நெறியிலும் வல்லவர் என்பது போல் அவரின் எழுத்துக்களில் தொனிக்கலாம். அதைத்தான் அன்னிமேரி ஷிம்மெல் சாடுகிறார் எனில் அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

            ஆனால், ஸூஃபிப் பள்ளிகளின், குறிப்பாக நவீன கல்விப் போக்கிற்கு இயைந்து செல்பவற்றின் ‘சின்சியர்’ சீடர்களுக்கு ‘சமிக்ஞைகள்’ வழங்குகின்றவை என்று அவரின் நூற்களைக் கருதுகிறேன். அவ்வகையில் அவை முக்கியமானவை என்றே சொல்ல வேண்டும்.   

Saturday, July 13, 2024

தெள்ளத் தெளிந்தார்க்கு…

 


”தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” என்கிறார் திருமூலர்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவர் சீவனைச் சிவன் என்று சொல்லவில்லை, சிவலிங்கம் என்றே குறிப்பிடுகிறார். ஜீவான்மாவே பரமான்மா என்பதைச் சைவ சித்தாந்தம் ஒப்பாது.

பசுவே பதி ஆகிவிடாது. பசு பதியைச் சேரும். அப்போது, ஞானம் என்னும் பால் பொங்கி வழியும். ‘பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ப் பொழியுமே’ என்கிறார் திருமூலர். அந்நிலையிலும் பசு பசுதான், பதி பதிதான். உயிர் உயிர்தான், இறைவன் இறைவன்தான். 

’லிங்கம்’ என்னும் சொல்லுக்குக் ’குறி’ என்று பொருள். ’குறி’ என்றால் ’அடையாளம்’ (sign) என்று அர்த்தம். மனித உடலிலும் பாலினம் காட்டும் அடையாளம் உண்டு. எனவே, அவ்வுறுப்பைக் குறி என்று கூறப்படும். அவ்வளவில் அமைந்து நேர்ப்படச் சிந்தித்தால் தத்துவம் புரியும். [ஆனால், சித்த சேட்டை கொண்டோர்க்கு அனர்த்தம் உறும். அவர் அல்லர் யாம் கருதும் வாசகர்.]


நவீன மொழியியல் கோட்பாட்டாளர் ழாக் லகான் சொல்லும் ‘sign – signifier – signified’ என்னும் மும்மையை “குறி – குறிப்பான் – குறிப்பீடு” என்றே தமிழ் செய்கிறோம். [இதனை Observance – Observer – Observed (கவனம் – கவனிப்பான் – கவனிக்கப்படுபவன்) என்னும் மும்மையாகவும் காணலாம். “The Observer is the Observed” (கவனிப்பவனே கவனிக்கப்படுவோன்) என்கிறார் நவீன தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. திக்ரு – தாகிர்- மத்கூர் (தியானம் – தியானிப்பவன் – தியானிக்கப்படுவோன்) என்னும் மும்மையை ஸூஃபிகள் விளக்கும்போது, ‘தியானிப்பவனே தியானிக்கபடுவோன் ஆகிவிடும் நிலை’ என்பதைச் சுட்டுகின்றனர்.]

குறி என்பது எதற்காக? அறிவதற்காக. எனவே அறிதற் பொருட்டு காட்டப்படும் குறிகளை அறிகுறிகள் என்று சொல்கிறோம்.

பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் அடையாளங்கள் (அத்தாட்சிகள் – ‘ஆயாத்’) நிரம்பியிருப்பதாக குர்’ஆன் மீண்டும் மீண்டும் சொல்கிறது. அந்த அத்தாட்சிகளை எல்லோரும் காண்பதில்லை. சித்தம் தெளிந்தார்க்கே அந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த அடையாளங்கள், அத்தாட்சிகள், அறிகுறிகள் எதில் உள்ளன? முகத்தின் அடையாளம் முகத்தில்தானே இருக்கும்?

“நீவிர் எத்திசை திரும்பினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115) என்கிறது குர்’ஆன்.

  அந்த அடையாளங்கள் அனைத்தும் ஒரு தரத்தன அல்ல. இறைவனின் ஆகப் பெரும் அடையாளமாக உயிரே உரைக்கப்படுகிறது.



            பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த ஸூஃபி ஞானி முஹம்மது காசிம் மரைக்காயர் என்பவர் ”அஸ்ராருல் ஆலம்” (பிரபஞ்ச ரகசியம்) என்றொரு நூல் எழுதினார். அந்நூல் குருவுக்கும் சீடனுக்குமான உரையாடலாக அமைந்துள்ளது. அதன் முதல் வினா விடையே உயிர் பற்றியதுதான். “அல்லாஹுத் த’ஆலாவுக்குப் பத்து விஷயங்களில் நமது உயிரை உவமை காட்டலாம்” என்று குரு குறிப்பிடுகிறார். அந்தப் பத்து விஷயங்களை இங்கே சுருக்கமாத் தருகிறேன்.

1.      கண்ணுக்குத் தெரியாத உயிர்தான் உடலின் அங்கங்கள் அனைத்தையும் இயங்கச் செய்கிறது. உயிர் இல்லாவிடில் உடல் பிணம்தான். அதுபோல், பார்வைக்குப் படாத இறைவன்தான் அகில உலகங்களையும் நடத்துகிறான். அவன் இல்லை என்றால் எதுவுமில்லை.

2.      உடலின் உறுப்புகள் பல என்றாலும் அவை அனைத்தையும் இயக்கும் உயிர் ஒன்றே. அதுபோல், உலகங்கள் பல, ஆனால் அவற்றைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே.

3.      உடல் செய்யும் நன்மைகளும் தீமைகளும் உயிரின் நாட்டத்தால் அமைகிறது. பிரபஞ்ச காரியங்கள் அனைத்தும் இறைவனின் நாட்டத்தால் நிகழ்வன.

4.      உடலில் எது நேர்ந்தாலும் உயிருக்குத் தெரியாமல் போவதில்லை; அதுபோல், பிரபஞ்சத்தில் எது நிகழ்ந்தாலும் இறைவன் அறியாமல் நிகழ்வதில்லை.

5.      உடலில் எதையும்விட உயிரே அருகிலிருக்கிறது; அதுபோல், அனைத்து வஸ்துக்களுக்கும் இறைவனே மிக நெருக்கமாக இருக்கிறான்.

6.      உடல் உண்டாகும் முன்பே உயிர் இருந்தது, உடல் அழிந்த பின்னரும் உயிர் இருக்கும். அதுபோல், பிரபஞ்சம் உண்டாகும் முன்பே இறைவன் இருந்தான், பிரபஞ்சம் அழிந்த பின்னரும் அவன் இருப்பான்.

7.      உடலில் இன்ன இடத்தில்தான் உயிர் இருக்கிறது என்று மட்டுப்படுத்த முடியாது. அது எங்கும் விரவி இருக்கிறது. அதுபோல், பிரபஞ்சத்தில் இறைவன் இல்லாத இடமே இல்லை.

8.      உயிர் உடலில் இருப்பது தெரிகிறது. ஆனால் அதன் தன்மை என்ன என்று நாம் அறிய முடிவதில்லை. அதுபோல், பிரபஞ்சமெங்கும் இறைவன் இருக்கிறான் என்பது தெரிகிறது. ஆனால், அவனின் தன்மையை நாம் அறிய முடிவதில்லை.

9.      உயிர் உடலில் இருந்தாலும் உடலின் எந்த உறுப்புடனும் அதனை ஒப்பிட்டுக் கூற முடியாது. அதுபோல், இறைவன் பிரபஞ்சத்தில் இருந்தாலும் அவனுடன் எதையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.

10.   உயிரை ஐம்புலன்கள் எட்ட முடிவதில்லை; அதுபோல், இறைவனை ஐம்புலன்கள் எட்டுவதில்லை.

இப்படிப் பத்துப் பொருத்தங்களைப் பார்த்து மயங்கித்தான் சிலர் சீவனே சிவன் என்று பிழையாகக் கருதிவிட்டனர் போலும். 

இந்த தத்துவத்தைச் சொல்ல வந்த வைணவம் ‘சரீர சரீரி பாவனை’ என்னும் கோட்பாட்டை வகுத்துள்ளது. அதாவது, உடலும் உயிரும்போல பிரபஞ்சமும் இறைவனும் என்பதே அதன் விளக்கம். “திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை / படர் பொருள் முழுவதுமாய்  அவை அவை தொறும் / உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன் / சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே” (திருவாய்மொழி-7) என்கிறார் நம்மாழ்வார்.

இன்னனம், உயிரை இறைவனின் அத்தாட்சியாக – அடையாளமாக – அறிகுறியாகக் கண்டு சித்தம் தெளிந்தாரையே நாம் ‘என் உயிரே! என் ஆருயிரே! என் உயிரின் உயிரே!’ என்றெல்லாம் விளிக்கத் தகும். அவ்வுணர்வு பேரின்பக் காதல் ஆகும்.

Friday, June 28, 2024

இந்தக் காலம் அதுபோல…

 

       "Flow of Time" - Bruce Rollf

            ’புத்தி வந்தால் பத்தி போய்விடும்; பத்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்றொரு கோட்பாடு உண்டு. இது ஒரு மூட நம்பிக்கை. [தமிழ்க் குறிப்பு: பக்தி என்பதைத் தமிழில் பத்தி என்று எழுதலாம். ’முத்தி நெறி அறியாத மூர்க்கரோடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம்’ என்று மாணிக்கவாசகர் பாடுதல் பார்மின் (திருவாசகம் / அச்சோப் பதிகம்)]

            புத்தி என்பது அறிவு சார்ந்தது; பத்தி என்பது உணர்ச்சி சார்ந்தது. எனினும், இரண்டுமே உணர்வு சார்ந்தது (மீண்டும் ஒரு தமிழ்க் குறிப்பு: உணர்ச்சி என்பது emotion; உணர்வு என்பது பிரக்ஞை, conscience என்று சுட்டிக் காட்டினார் முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள்.)

            உணர்ச்சிக்கு இடம் தராத தனி அறிவு என்றோ, அறிவுக்கு இடம் தராத தனி உணர்வு என்றோ கிடையாது. இதில் அதுவும் அதில் இதுவும் இடம் பெறும், தாக்கம் செலுத்தும். இரண்டும் ஒரே பிரக்ஞையில்தான் நிகழ்கின்றன.

            அறிவியலாளர்கள் என்றால் உணர்ச்சிமயமாக இருக்க மாட்டார்கள், அதற்கு மாறாக கண்டிப்பான வரட்டுத் தனத்துடன் இருப்பார்கள் என்று எண்ணுவதும், கவிஞர்கள் என்றால் அறிவுபூர்வமாக இருக்கமாட்டார்கள், அதற்கு மாறாக அசட்டுத்தனமான மிகையுணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று எண்ணுவதும் பொதுப் புத்தியில் உள்ள ஒரு புரிதல். என்ன செய்வது, அது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் இருக்கும் சிலர் தம்மை விஞ்ஞானிகள் என்றும் கவிஞர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும்போது அப்படி ஒரு புரிதல் இருக்கத்தானே செய்யும்? ஆனால், அந்தப் புரிதல் மேலோட்டமானது, பிழையானது.

            அறிவின் உச்சத்துக்குச் செல்லும் விஞ்ஞானிகள் சட்டென்று கவித்துவமாகி உணர்ச்சியின் சிகரத்தைத் தொட்டுவிடுவதுண்டு; அதேபோல், உணர்ச்சியின் உச்சத்திற்கு ஏகும் கவிஞர்கள் சட்டென்று அறிவின் சிகரத்தில் ஏறி நிற்பதுண்டு.

            ”காலம் என்னும் கற்பனைக்கே பெரும் மயல் ஆகி…” என்று பாடுகிறார் திருலோக சீதாராம். காலம் எப்படி மனிதப் பிரக்ஞையால் கற்பனிக்கப்படுகிறது என்று ஐன்ஸ்டீன் பரக்கப் பேசியிருக்கிறார், அறிவியல் மொழியில். காலத்தின் எதார்த்தம் என்ன என்று காண முனைவது அறிவியலில் ஒரு தனி ஆராய்ச்சித் துறையாகத் தீவிரப்பட்டு வந்துள்ளது. அத்துறையில் எனக்கு ஆர்வம் உண்டு.


                       அண்மையில், கார்லோ ரோவல்லி என்பார் எழுதிய “The Order of Time” (கால ஒழுக்கு) என்னும் அறிவியல் நூலினை வாசித்தேன். ரோவல்லி இத்தாலியர். அவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். இத்தாலி, அமெரிக்கா, பிரான்சு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.


            கார்லோ ரோவல்லியின் நூலை வாங்கும்படி என்னைத் தூண்டியது அவரது நூலில் அட்டையில் அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஒற்றை வரிக் குறிப்பு: “Physics has found its poet” (இயற்பியல் தன் கவிஞனைக் கண்டடைந்துவிட்டது.) இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நூலை வாசித்தால் ஏற்றுக் கொள்வோம். [ரோவல்லி தன் தாய்மொழியான இத்தாலியில்தான் எழுதுகிறார். அவரின் இந்நூலை எரிகா செக்ரே மற்றும் சைமன் கார்னெல் ஆகியோர் மிக நேர்த்தியான அழகான ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர்.]

            கவிதையைத் தன் அறிவியல் தேடலுக்கான கருவிகளில் ஒன்று என்று ரோவல்லி காண்கிறார். ”உண்மையில், கவிதை என்பது அறிவியலின் ஆழமான வேர்களில் ஒன்று: புலன்களுக்கு அப்பால் காணும் ஓர் ஆற்றல் அது” [’The Order of Time’, ப.21] என்று அவர் சொல்கிறார். ‘ரவி பார்க்காததைக் கவி பார்ப்பான்’ என்றொரு முதுசொல் இங்கு உண்டு.

            நூலில் உள்ள அத்தியாயங்களின் தலைப்புகளில் சில எனக்கு மிக அற்புதமான ஆப்த வாசகங்களாகத் தெரிகின்றன. அவற்றை வரிசை கூட்டிப் பார்த்தாலே ஓர் அற்புதமான ஞானக் கவிதை போல் தோன்றுகிறது:

            ஆம், காலம்தான் மாபெரும் மர்மம்.

            காலம் பொடிப் பொடி ஆதல் / காலத்தின் நொறுங்கல்

            உலகம் நிகழ்வுகளால் ஆகியுள்ளது, பொருட்களால் அன்று.

            காலம் என்பது அறியாமை.

            உறக்கத்தின் சகோதரி.

            இந்தத் தலைப்புகள் மிகச் சிறந்த கவித் தீற்றல்கள் என்று சொன்னால் மறுக்க முடியுமா?

            ”காலம் பொடிப் பொடி ஆதல்” / ”காலத்தின் நொறுங்கல்” என்னும் வரியை வாசிக்கையில் பாரதி எழுதிய ‘ஊழிக் கூத்து’ ஞாபகம் வரவில்லையா?

            எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் – தானே

            எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!

என்னும் வரி, குறிப்பாக.

            உறக்கத்தின் சகோதரி என்று இங்கே குறிப்பிடப்படுவது மரணம். இது சிம்ஃபொனி இசையின் பேராளுமைகளில் ஒருவரான பாக் சொன்ன வாசகம்.

            ’பாக்’கிற்கு நதி மூலம் ஒரு நபிமொழி: “உறக்கம் என்பது மரணத்தின் சகோதரன்.”

            இனி, காலம் எத்தகைய உணர்ச்சிகளை எல்லாம் தூண்டி நடத்துகிறது என்று பார்க்க, கார்லோ ரோவல்லி எழுதிய நூலின் ஒரு சிறு பகுதியை வாசிக்கலாம்:

            ”நம் நிகழில் நம் கடந்த காலத்தின் தடயங்கள் மொய்க்கின்றன. நாம் நமது வரலாறுகளாய் இருக்கிறோம். கதையாடல்கள். நான் என்பது சோஃபாவில் சாய்ந்தபடி மடிக்கணியில் ‘அ’ என்னும் எழுத்தினைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த கணநேரச் சதைக் குவியல் இல்லை. நான் எழுதிக் கொண்டிருக்கும் சொற்றொடர்களின் ரேகைகள் நிரம்பிய எண்ணங்கள் நான். நான் என் அம்மாவின் அரவணைப்புகள்; என்னை வழிநடத்த என் தந்தை என் மீது காட்டிய அமைதியான அன்பு நான். நான் என் விடலைப் பருவப் பயணங்கள்; என் வாசிப்பு என் சிந்தையின் அடுக்குகளில் படிய வைத்திருக்கும் உள்ளடக்கம் நான். நான் என் காதல்கள்; என் விரக்தியின் கணங்கள்; என் நட்புகள்; நான் எழுதியவை, நான் கேட்டவை; என் நினைவுப் புலத்தில் செதுக்கப்பட்டுள்ள முகங்கள். நான், எல்லாவற்றுக்கும் மேல், ஒரு நிமிடத்திற்கு முன் தனக்காக ஒரு கோப்பைத் தேநீர் தயாரித்துக் கொண்ட ஒருவன்; ஒரு கணத்திற்கு முன் தனது கணினியில் ‘நினைவு’ என்னும் சொல்லைத் தட்டச்சு செய்த ஒருவன். இப்போது நான் நிறைவு செய்யும் சொற்றொடரை இப்போது கோர்வை பண்ணிய ஒருவன். இதெல்லாம் மறைந்துவிட்டால், அப்போதும் நான் இருப்பேனா? நான் இந்த நீளமான, எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல். அது என் வாழ்வின் உள்ளடக்கம்.

”நினைவுதான், காலத்தின் ஊடாகச் சிதறிக் கிடக்கின்ற, எதனால் நாம் உருவாகியுள்ளோமோ அந்த நிகழ்வுகளை ஒன்றாகப் பற்றவைக்கிறது. இந்த நோக்கின்படி, நாம் காலத்தில் இருக்கிறோம். இந்தக் காரணத்திற்குதான், நான் நேற்று இருந்த அதே நபராக இன்றும் இருக்கிறேன். நம்மைப் புரிந்து கொள்வது என்பது காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. ஆனால், காலத்தைப் புரிந்து கொள்ள நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.” [‘The Order of Time’, பக்.154-155.]


இன்னும் கொஞ்சம் காட்டுதும். “உறக்கத்தின் சகோதரி” என்னும் இறுதி அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள சில பத்திகளை வாசிப்போம்:

“இந்தியாவின் பெருங்காவியமான மகாபாரதத்தின் மூன்றாம் பாகத்தில், யக்‌ஷா என்னும் வலிய ஆன்மா, பாண்டவர்களில் மூத்தவரும் அதிக ஞானம் உள்ளவரும் ஆன யுதிஷ்டிரனிடம், மர்மங்களில் எல்லாம் மிகப் பெரிய மர்மம் எது? என்று கேட்கிறான். அவர் சொன்ன விடை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் எதிரொலிக்கிறது: ‘ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்கள் சாகின்றனர். ஆனாலும், உயிருடன் இருப்போர் தாம் அமரர்கள் என்பது போல் வாழ்கின்றனர்.’

”நான், நான் ஓர் அமரன் என்பது போல் வாழ விரும்ப மாட்டேன். நான் மரணத்தை அஞ்சவில்லை. நான் வேதனையை அஞ்சுகிறேன். நான் இப்போது என் தந்தையின் அமைதியான மற்றும் சுகமான முதிய வயதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் நான் முதுமையை அஞ்சுகிறேன். நான் பலவீனத்தை அஞ்சுகிறேன், காதல் இன்மையை அஞ்சுகிறேன். ஆனால் மரணம் எனக்கு அச்சம் தருவதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது அது எனக்கு பயம் தரவில்லை; அது வெகு தொலைவில் இருக்கிறது என்று நான் அப்போது கருதினேன் என்பதே காரணமாக இருக்கலாம். ஆனால், இப்போதும், என் அறுபது வயதிலும், அது இன்னும் உண்டாகவில்லை. நான் வாழ்வை நேசிக்கிறேன். ஆனால், வாழ்க்கை என்பது போராட்டம், துயரம், வேதனை ஆகியவையும்தான். மரணம் என்பது நன்கு சம்பாதிக்கப்பட்ட ஓர் ஓய்வு என்றே நான் கருதுகிறேன். பாக் தனது அற்புதமான கன்டாடா BWV 56-இல் அதனை உறக்கத்தின் சகோதரி என்று அழைக்கிறார். அன்பான சகோதரி. என் இமைகளை மூடி என் தலையை வருடிக் கொடுக்க விரைவில் வருவாள்.

“தான் ’நாட்கள் நிரம்பியவனாய்’ இருக்கும் நிலையில் யோபு மரித்தான். இது ஒரு அற்புதமான வெளிப்பாடு. ‘நாட்கள் நிரம்பி’யதை உணரும் தருணத்தை அடைய வேண்டும் என்றும் நம் வாழ்க்கை என்னும் சிறு வட்டத்தை முழுமைப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் நானும்கூட விரும்புகிறேன். இப்போதும், அதில் நான் திளைக்க முடிகிறது, ஆம்; கடலில் பிரதிபலிக்கும் நிலா, நான் காதலிக்கும் பெண்ணின் முத்தங்கள், அனைத்துக்கும் அர்த்தம் தரும் அவளின் உடனிருப்பு ஆகியவற்றை இப்போதும் அனுபவிக்கிறேன்; முன்பு போல் என் வீட்டில் மழைக்காலத்தின் பிற்பகல்களை, சோஃபாவில் சாய்ந்தபடி குறியீடுகளாலும் சூத்திரங்களாலும் காதிதங்களை நிரப்புவதை, நம்மைச் சுற்றிலும் நிரம்பியிருக்கும் ஆயிரமாயிரம் ரகசியங்களில் இருந்து ஒரு சிறு ரகசியத்தைக் கைப்பற்றுவதாகக் கனவு காண்பதை இப்போதும் சுகிக்கிறேன்…  மென்மையாகவும் அதே சமயம் மூர்க்கமாகவும், தெளிவாகவும் அதே சமயம் பூடகமாகவும் புதிராகவும் இருக்கின்ற உயிரோட்டமான வாழ்க்கையை இந்தப் பொற் கிண்ணத்தில் இருந்து மேலும் பருக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்தக் கோப்பை தரும் கசப்பான அமுதத்தை ஏற்கனவே நான் ஆழ்ந்து பருகிவிட்டேன். இக்கணமே வானவர் ஒருவர், “கார்லோ, நேரமாகி விட்டது,” என்று சொல்லிக்கொண்டு என் முன் வந்து நின்றால், இந்த வாக்கியத்தை முடிக்கும் வரை அவகாசம் தாருங்கள் என்று கூட கேட்க மாட்டேன். அவரைப் பார்த்து புன்னகை செய்தபடி கிளம்பிவிடுவேன்.”


ஏறத்தாழ இருநூறு பக்கங்கள் நீளும் நூலில் குவாண்டம் அறிவியலின் கோட்பாடுகள் மற்றும் சொல்லாடல்களின் வழியாக ‘காலம்’ என்பதை ஆராய்ந்து செல்லும் கார்லோ ரோவல்லி இந்த நூலை முடிக்கும்போது மீண்டும் ஒரு கவிஞராகவே காட்சி அளிக்கிறார். இம்முறை கவிதைகூட தோற்றுவிடுகிறது. காலம் என்பதை ஆழமாக உணர்த்த இசையே கருவியாகிறது. நூலின் இறுதி இரண்டு பத்திளை வாசித்து அமைவோம்:

“அப்புறம், அகஸ்டின் அவதானிப்பது போல், இசை என்பது கால போதம் (அதாவது, காலம் பற்றிய உணர்வு (அதாவது, பிரக்ஞை)). அதுவே காலம்தான். காலம் மலர்தலாக இருக்கும் வேத துதிகளே அது (ராபர்டோ கலாஸ்ஸோ சொன்ன கருத்து.) பீத்தோவனின் மிஸ்ஸா சாலெம்னிஸ் என்னும் கோர்வையின் பெனடிக்டஸ் (துதி / பிரார்த்தனை)யில் வைலின் இசை என்பது தூய அழகும் தூய துயரும், தூய ஆனந்தமும் கலந்த ஒன்றாக இருக்கிறது. இதுதான் அர்த்தத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று ஓர் மர்ம உணர்வுடன் நாம் மூச்சடைத்து அந்தரத்தில் மிதக்கிறோம். இதுதான் காலத்தின் நதிமூலம் என்று உணர்கிறோம்.

“அப்படியே, அந்தப் பாடல் தேய்ந்து மறைகிறது. ‘வெள்ளிச் சரடு அறுந்தது, பொன் விளக்கு நொறுங்கிற்று, நீர்ச்சுனையில் தாழி உடைந்து, வாளி கைநழுவி கிணற்றுக்குள் விழுந்து, புழுதி மண்ணுக்கு மீள்கிறது’ (பிரசங்கி 12:6-7) இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. நாம் நம் கண்களை மூடி ஓய்வு பெறலாம். இதெல்லாம் எனக்கு இனிதாகவும் அழகாகவும் படுகிறது. இதுதான் காலம்.”

ஓ! காலம் கருதினும் கைகூடும்!

Wednesday, January 10, 2024

2024 - முதல் ஐந்து நூற்கள்

 இந்த ஆண்டுக்கு (உண்மையில் திசம்பர் 2023 பதிப்பு) எழுதிய நூல்கள் மொத்தம் 12. அச்சகத்தில் இருந்து சென்னை புத்தகத் திருவிழாவில் சீர்மை அரங்கிற்கு இதுவரை வந்து சேர்ந்திருப்பவை ஐந்து நூற்கள். முகநூலில் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே அறிமுகம் எழுதினேன். அவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

1. ரூமியின் ருபாயியாத்


உலகெங்கும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அதிகமான அளவில் மொழிபெயர்க்கப்படும் கவிஞர் யார்? ஐயமின்றி, மவ்லானா ரூமி என்று சொல்லலாம். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானியின் கவிதைகள் எப்படி நவீன மொழிபுகளாக வெளிப்பட்டு உள்ளங்களை ஈர்க்கிறது என்று பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
எனது எழுத்துப் பணியின் நூல் வடிவம் கூட மவ்லானா ரூமியின் மொழிபெயர்ப்பைக் கொண்டே தொடங்கிற்று. ஏ.ஜே.ஆர்பெர்ரி செய்த ஆங்கில ஆக்கத்தைத் துணை கொண்டு ஃபார்சி மொழியிலான மூலத்தையும் பயின்று ஏறத்தாழ எழுபது ருபாயியாத் (நான்கு அடிகளால் ஆன கவிதை)களைத் தமிழாக்கம் செய்து ஒலிக்குறிப்புகளுடனும் மூல ஃபார்சியுடனும் பிரதி ஒன்றை உருவாக்கினேன். அதனை பேராசிரியர் ஷே.நாகூர் கனி அண்ணன் 2007-இல் நூலாக வெளியிட்டார். அதன் தலைப்பு “ரகசிய ரோஜா.”
எனது அந்த நூல் தனிச்சுற்றுக்கு என்பது போல் சூஃபித்துவ ஆர்வம் கொண்ட மற்றும் அவ்வழியில் ஈடுபட்டுப் பயிற்சி எடுக்கின்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ரூமியின் சிந்தனைச் சுடர்களை இரண்டு மூன்று வரிகளே கொண்ட கவிதைகள் போல் எழுதிய தொகுப்பு “ரூமியின் வைரங்கள்” வெளியானது (பேராசிரியர் மு.சாதிக் பாட்சா அவர்களின் ‘ராஜா பப்ளிகேஷன்ஸ்’) அதனைப் பின்னர் இலங்கையில் நண்பர் முஹம்மது சாப்ரி அவர்கள் “கஜல்” பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார்.
என்.சத்தியமூர்த்தியின் ”தாகம் கொண்ட மீன் ஒன்று” (ஆங்கிலத்தில் கோல்மன் பார்க்ஸ் மொழிபெயர்த்த தொகுப்பான “The Essential Rumi" என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கம்) மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. அண்மையில் க. மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் “இதயங்களின் உதவியாளர்” என்னும் நூல் வெளிவந்து பெருங்கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில்தான் எனது மொழிபெயர்ப்பிலான “ரூமியின் ருபாயியாத்” நூலினை இப்போது சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலைப் பற்றி கவிஞர் நிஷா மன்சூர் இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய தனது முகநூல் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:
"இதுவரை தமிழில் வெளிவந்த ரூமி மெளலானா மொழிபெயர்ப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பு எதுவென நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டார்கள்.
சர்வ நிச்சயமாக ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் வெளியான "ரூமியின் வைரங்கள்"தான் தமிழின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும்."
அவர் அப்படி உணர்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டிய ஒரு பெருநூலை “ரூமியின் ருபாயியாத்” என்னும் தலைப்பில் இப்போது தந்திருக்கிறேன் (323 பக்கங்கள்) இதில் 410 ருபாயியாத் கவிதைகள் இருக்கின்றன. (இவற்றின் மூல ஃபார்சி வரிகளின் ஒலிபெயர்ப்பையும் (transliteration) இணைப்பாகத் தந்திருக்கிறேன். தேவையான இடங்களில், பாடல்களை விளங்கிக் கொள்வதற்கான அடிக்குறிப்புகளும் தந்திருக்கிறேன்.
ரூமியின் நூல் என்றாலே அதனை மிக அழகான வடிவமைப்பில் பதிப்பிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. “தாகம் கொண்ட மீன் ஒன்று” மற்றும் “இதயங்களின் உதவியாளர்” ஆகிய நூற்களின் அச்சாக்கம் மிகுந்த அழகியல் உணர்வுடன் செய்யப்பட்டிருந்தன. (எனது “ரகசிய ரோஜா”, “ரூமியின் வைரங்கள்”, நாகூர் ரூமி எழுதிய “பாரசீகக் கவிஞானி மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்” ஆகிய நூற்களின் அச்சாக்கத்தை விட பன்மடங்கு அழகாக என்று சொல்வேன்.)
இப்போது சீர்மை வெளியிட்டிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” அச்சாக்கத்தில் அந்தத் தரநிலையை எட்டியிருக்கிறது. இறையருளால் சீர்மை மேலும் பல புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

2. ரூமியின் ஞானப் பேருரைகள்


உலகின் பெரும் சிந்தனையாளர்கள் தாமே ஒரு சிந்தனைப் பள்ளியாகத் திகழும் ஆளுமையாக இருப்பார்கள். எனவே அவர்களின் சிந்தனை முறையை அவர்களின் பெயராலேயே அழைக்கும் மரபும் இருக்கிறது.
உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிந்தனைகளை “காந்தியம்” என்று சொல்கிறோம். அதே போல் பெரியாரியம், அம்பேத்கரியம் என்றெல்லாம் சொல்லாடல்கள் உள்ளன.
இது சிறந்த கவிஞர்களுக்கும் பொருந்தும்.
மகாகவி பாரதியின் சிந்தனைகளை “பாரதியம்” என்று சொல்கிறோம்.
உருதுவின் மகாகவியான அல்லாமா இக்பாலின் சிந்தனைகளை “இக்பாலிய்யத்” (அதாவது, இக்பாலியம்) என்றே அழைக்கிறார்கள்.
அதுபோல், ஃபார்சி மொழியின் மகாகவியான மவ்லானா ரூமியின் சிந்தனைகளை “ரூமித்துவம்” அல்லது “ரூமியியம்” என்று நாம் குறிப்பிடலாம்.
மவ்லானா ரூமி தொடர்பில் நான் இதுவரை எழுதியுள்ள நூற்களைப் பட்டியலிட்டு அவற்றை “ரூமித்துவ நூற்கள்” என்றே சீர்மை பதிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.
எலிஃப் ஷஃபாக் எழுதி நான் தமிழில் மொழிபெயர்த்த “காதலின் நாற்பது விதிகள்” என்னும் நாவல், இத்ரீஸ் ஷாஹ்வின் “ரூமியின் வாழ்வில் நூறு கதைகள்” ஆகிய நூற்கள் ரூமியின் சரிதை நிகழ்வுகளை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.
இப்போது வெளியாகியிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” என்னும் நூல் மவ்லானா ரூமியின் 410 குறுங்கவிதைகளைத் தமிழில் தருகிறது. (விளக்கக் குறிப்புகளும் ஒலிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளன.)
எனினும், ஒரு மகாகவியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் எத்தகைய சிந்தனை முறைமையில் இருந்து எழுதுகிறார், அவரின் சிந்தை எத்தகைய கருத்தியல்களைக் கொண்டு இயங்குகிறது என்பதை நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு உதவி செய்யும் வகையில் அந்தக் கவிஞரைப் பற்றிய ஆய்வு நூற்கள் எழுதப்படுவது உண்டு.
ஆனால், அந்தக் கவிஞரே தனது சிந்தனைகளை உரைநடையில் பேசியோ எழுதியோ வைத்திருந்தால் அது அவரைப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த கருவியாகும்.
மவ்லானா ரூமி அப்படி ஓர் அற்புதமான உரைநடை நூலை நமக்குத் தந்திருக்கிறார். அது, அவர் தனது சீடர்களுக்கு ஆற்றிய ஞான உரைகளின் தொகுப்பு நூலான “ஃபீஹி மா ஃபீஹி” என்பதாகும். இந்நூலை மூல மொழியான ஃபார்சியில் வாசித்து, அதன் உருது மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் துணை கொண்டு, தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். “ஃபீஹி மா ஃபீஹி - ரூமியின் ஞானப் பேருரைகள்” என்னும் தலைப்பில் அதனை சீர்மை தற்போது வெளியிட்டுள்ளது.
’ரூமித்துவம்’ பற்றி அறிய விரும்புவோர்க்கு இது ஓர் இன்றியமையாத நூல்.விசி

3. விசித்திரர்களின் புத்தகம் (ஸூஃபி நாவல்)


தமிழ் நாவல்களில் மெய்யியல் சிந்தனைகள் எப்படியெல்லாம் இடம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சி நிகழ்த்த கவிஞர் ஜார்ஜ் ஜோசஃபுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஸூஃபித்துவப் பின்னணியில் போதிய நாவல்கள் இல்லை என்பதைக் கண்டோம். தமிழிலேயே எழுதப்பட்ட ஸூஃபி நாவல் என்று நாகூர் ரூமியின் ”திராட்சைகளின் இதயம்” மட்டுமே கிடைத்தது.
இந்த நிலை மாற வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பில் சீர்மை பதிப்பகம் ஸூஃபி நாவல்களைத் தமிழில் கொண்டு வரத் தொடங்கிற்று. அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றேன். அதன்படி, இதுவரை வெளியாகியுள்ள ஸூஃபித்துவ நாவல்கள் நான்கு:
1. காதலின் நாற்பது விதிகள் (எலிஃப் ஷஃபாக்)
2. ஜின்களின் ஆசான் (இர்விங் கர்ஷ்மார்)
3. அஹில்லா (முஅதஸ் மத்தர்)
4. விசித்திரர்களின் புத்தகம் (அயான் தல்லாஸ்)
இவற்றுள், தற்போது வெளி வந்திருக்கும் நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” முந்தைய மூன்று நாவல்களில் இருந்து சில அம்சங்களில் வேறுபடுகிறது.
முதலில், இது ஒரு நிஜக் கதை. அயான் தல்லாஸ் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து ஒரு நடிகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்தார். அவர் பின்னாளில் மொரோக்கோ நாட்டிற்கு வந்து இஸ்லாமை ஏற்று ஸூஃபித்துவ நெறியில் இணைந்து அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி என்று ஆகி, தன் வாழ்வின் கனிந்த காலத்தில் ஒரு ஸூஃபி குருவாகப் பரிணமித்தார். இந்த வாழ்க்கை வரலாற்றின் முதற்கட்டத்தை கொஞ்சம் புனைவு கலந்து அவரே ஒரு நாவலாக எழுதியிருக்கும் கதைதான் “விசித்திரர்களின் புத்தகம்” (The Book of Strangers) என்னும் நாவல்.
மெய்யறிவுக்கான தேடல் ஒரு நபரை எந்த அளவுக்கு கால இட எல்லைகளைக் கடந்து செல்ல வைக்கும் என்பதற்கு இந்தக் கதை ஓர் ஆவணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

4. சிவப்புக் கந்தகம் (ஸூஃபி கோட்பாட்டியல் நூல்)


ஸூஃபித்துவம் குறித்த கவனம் உலக அளவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைப் பற்றிய சரியான நூற்கள் வெளிவர வேண்டிய தேவை மிக முக்கியமானது. அந்தத் தேவை தமிழில் அதிகம் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். அவ்வகையில் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாக்கவி, நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், ஆர்.பி.எம்.கனி, டி.எம். மூசா கான் காதிரி, மகான் ஆரணி பாவா முதலியோரை நான் நினைவு கூர்கிறேன். இவர்களுள், முதல் மூவரின் நூற்கள் அனைத்து மதத்தினரும் எளிதில் வாசிக்கும் நடையில் அமைந்தவை.
இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியில் ”சூஃபி வழி” என்னும் பெருநூலையும், “மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்”, “நாகூர் நாயகம் அற்புத வரலாறு” , “ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்” முதலிய நூற்களை எழுதிய நாகூர் ரூமி அவர்களைக் குறிப்பிட வேண்டும். எனினும் இந்தப் பணி ஒற்றை ஆளால் முடியும் ஒன்றல்ல.
என்னால் இயன்ற அளவு ஸூஃபித்துவம் சார்ந்த, ஆழமும் அழுத்தமும் கொண்ட செவ்வியல் நூற்களை மொழிபெயர்த்து வருகிறேன்.
எந்த ஓர் அறிவுத் துறையையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனில் அந்தத் துறை சார்ந்த சொல்லாடல்களையும் அடிக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான நூற்களை நாம் வாசிக்க வேண்டும். ஸூஃபித்துவத்துவமும் இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.
எனவே, ஸூஃபித்துவக் கருத்தியல் தொடர்பான ஆதார நூற்களை மொழிபெயர்க்கும் வரிசையில், ஏற்கனவே இமாம் அல்-குஷைரியின் “ரிசாலத்துல் குஷைரிய்யா - சூஃபிக் கோட்பாடுகள்” நூலும், மவ்லானா ரூமியின் ”ஃபீஹி மா ஃபீஹி ரூமியின் ஞானப் பேருரைகள்” ஆகியவற்றைத் தமிழுக்குத் தந்திருக்கும் நிலையில், அப்துல்லாஹ் இப்னு அபீபக்ரு அல்ஐதறூஸ் அவர்கள் எழுதிய “கிப்ரீத்துல் அஹ்மர்” என்னும் ஸூஃபிக் கோட்பாட்டு நூலின் தமிழாக்கம் ”சிவப்புக் கந்தகம்” என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகம் அளவால் சிறியது; சிந்தனையால் பெரியது. ஸூஃபி வழியின் படிநிலைகளை விவரிக்கும் நூல் இது. ஸூஃபித்துவத்தில் ஒரு குருவின் கீழ் பயிற்சி பெறும் ஆன்மிகச் சாதகர்கள் அடையும் அனுபவங்களின் படிநிலைகளை வரைபடம் போல் சித்திரத்திக்கும் கட்டமைப்புக் கொண்ட அற்புதமான நூல் இது. ஸூஃபித்துவம் சார்ந்த நூற்றுக்கணக்கான அறபுச் சொல்லாடல்கள் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. ஸூஃபித்துவம் பற்றி ஆழமாக அறிய விரும்புவோருக்கு இந்நூல் அடுத்த கட்டத்துக்க்கான முன்னகர்வை நல்கும் என்று நம்புகிறேன்.

5. மலை முகட்டில் ஒரு குடில்
(குர்ஆனிய ஞானக் கட்டுரைகள்)


சீர்மை பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கும் எனது கட்டுரை நூல் “மலை முகட்டில் ஒரு குடில்”. இதில் 17 கட்டுரைகள் உள்ளன. இவை குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து ஆன்மிக நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். எனவே இவற்றில் ஸூஃபித்துவச் சுவை இருக்கும்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் அளவால் சிறியவைதான், சில பக்கங்கள் வருபவைதான். நீளமான கட்டுரைகள் அல்ல.
நூலின் முன்னுரையில் இருந்து சில பகுதிகள்:
”ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகின்றது. மழைக் காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளி ஆகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வானவில் போல் இந்த நூல் ஒரு ஞானவில்!
”இவை 2007 முதல் 2018 வரையிலான காலத்தில் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டவை.”
”இக்கட்டுரைகளில் மூன்று வித மொழிநடை அமைந்திருப்பதை இப்போது அவதானிக்கிறேன். முதல் ஒன்பது கட்டுரைகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது மொழிநடையைப் பின்பற்றி எழுதப்பட்டன. ஏனைய கட்டுரைகள் தர்க்கம் என்னும் கருவி கொண்டு சிந்தனையை முன்னகர்த்தி வளர்ந்து செல்பவை.”
”இக்கட்டுரைகள் அனைத்தையும் இணைக்கும் மைய இழை மாமறையாம் குர்ஆன் மட்டுமே. எனினும், இக்கட்டுரைகளில் பல்சமய மற்றும் பல்தத்துவ ஒப்பாய்வுப் பார்வைகள் ஆங்காங்கே இருக்கின்றன. ஞானம் என்னும் நமது தொலைந்த ஒட்டகம் சீனாவில் மேய்ந்து கொண்டிருந்தாலும் அதனைப் பிடித்துக் கொண்டு வரத்தான் வேண்டும் அல்லவா?”





புத்தகத் திருவிழா 2024

சென்னையில் நடைபெற்று வரும் 2024-ற்கான புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சீர்மை பதிப்பகம் நான் மொழிபெயர்த்த மற்றும் எழுதிய நூற்களைக் கொண்டு வருகிறது. இதுவரை ஐந்து நூற்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும் ஏழு நூற்கள் அச்சில் இருக்கின்றன. பொங்கலுக்குள் வந்துவிடும் என்று நண்பர் உவைஸ் அஹ்மத் சொன்னார். 

கடந்த ஆறாம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒருநாள் பயணமாக மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்குக் கிளம்பினேன். முந்தைய நாள்தான் நண்பர் கொள்ளு நதீமிடமும் உவைஸ் அஹ்மதிடமும் தகவல் சொன்னேன். உடனடியாக என் வருகையை அறிவித்து ஒரு போஸ்டரை முகநூலில் ஏற்றிவிட்டார்கள். 




உவைஸ் அஹ்மத், சாளை பஷீர், இஸ்மாயில் சேட் அன்ஸாரி, அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் உள்ளிட்ட சீர்மைக்குழுவினரைச் சந்தித்தேன் (சீர்மை அரங்க எண்- 318). பின்னர், மதிய உணவுக்கு முன் ஆறாம் “bay" வரை உள்ள கடைகளை அலசிச் சில நூற்களை வாங்கினேன். 

             திரு.பாலா பாரதி


இடையில் ஓரிடத்தில், யாரோ என்னைப் பேர் சொல்லி அழைக்க, திரும்பினால் பாலா பாரதி நின்றுகொண்டிருந்தார். “காக்கைக் கூடு” அரங்கிற்கு அழைத்தார். அவர் எழுதி வெளியாகியிருக்கும் “பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் - தொகுதி 1” நூலை வாங்கினேன். மானுடவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் தமிழுக்கு அது மிக முக்கியமான ஒரு நூல். 


      நண்பன் சதீஷ் குமாருடன்.


மதிய உணவுக்கு நந்தனம் புகாரியில் அமர்ந்திருந்தபோது அலைபேசியில் என் கல்லூரிப் பருவத்து நண்பன் சதீஷ் குமார் அழைத்தான். சொன்னபடி முக்கால் மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்துவிட்டான். எனது நூல்களை எல்லாம் பார்த்துவிட்டு “மலை முகட்டில் ஒரு குடில்” வாங்கியவன் ’ஆட்டோகிராஃப் போடு’ என்று சட்டென்று நீட்டியபோது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆட்டோகிராஃப் போடும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. அதுவும், நண்பனுக்கா போடுவது? என்று தயங்கினேன். ஊரிலிருந்து புறப்படும்போதே (என்+)அவள் பார்க்கர் பேனாவை எடுத்து வைத்திருந்தாள். இதை அவள் எதிர்பார்த்திருக்கிறாள்! அது நிறைவேற என் நண்பனே வந்திருக்கிறான். ஆட்டோகிராஃப் இட்ட காட்சியை மகன் நதீம் கைப்பேசியில் சுட்டுவிட்டான். ஆக, வரலாற்றைப் பதிவு செய்துவிட்டார்கள். ”என்னய்யா நடக்குது இங்யெ?” என்னும் மூமண்ட்டாக இருந்த கணங்கள் எனக்கு. பொதுவாக நான் கணக்கில் ரொம்ப வீக். இதுவோ ஆண்டவன் கணக்கின் படிகளில் ஒன்று!


அரங்கிற்கு வரும் வாசகர்கள் என் புத்தகங்களை எடுக்கிறார்களா என்று பார்ப்பதே சுவாரஸ்யமாக இருந்தது. வாங்கியும் செல்கிறார்கள் என்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. அரங்குக்குள் நுழைந்த தம்பதியர் இருவர் எனது எல்லா நூற்களையும் எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தனர். கடைசியில் நான் மொழிபெயர்த்த நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” (அயான் தல்லாஸ்) நூலையும் “ஹிஜாப்” என்னும் நூலையும் வாங்கினார்கள். அந்த இணையர் சீர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளைத் தொடர்ந்து வாங்கி வருபவர்கள் என்றும் அந்தக் கணவரின் பெயர் ஆத்தூர் கலைச்செல்வன் என்றும் பின்னர் சீர்மை பதிப்பகம் இட்ட முகநூல் இடுகை வழி அறிந்தேன்.


மதியம் சீர்மை அரங்குக்கு மூத்த எழுத்தாளர் பாவண்ணன் வந்தார். நண்பர் சாளை பஷீர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்று. நான் மொழிபெயர்த்த சில நூற்களை அவரிடம் காட்டினேன். “காதலின் நாற்பது விதிகள்” நாவலைப் பற்றி ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருந்தது.

“பேராசிரியராக இருந்து கொண்டு இதெல்லாம் எழுதுறதுக்கு நேரம் இருக்கா?” என்று கேட்டார்.

“இதுக்கெல்லாம் நேரம் தருகிற வேலையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் பேராசிரியராகவே ஆனேன்” என்று பதில் சொன்னபோது சிரித்துவிட்டார்.

என் பெருமிதமிகு மாணவரும் கவிஞரும் புனைகதையாளருமான ஜார்ஜ் ஜோசஃப் எழுதிய “எமரால்ட்” சிறுகதைத் தொகுப்பை அவர் ஸ்டாலிலேயே வெளியிட்டார்.


மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சிராஜ் மஷ்ஹூர் வந்தார். அவருடனான சுவாரஸ்யமான உரையாடலில் என் உறவினரும் இலங்கையில் “இளம்பிறை” என்னும் இலக்கிய இதழின் வழி ஆளுமைகள் பலரையும் அறிமுகப் படுத்தியவருமான எம்.ஏ.றஹ்மான் அவர்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அறிவுப் புலத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வரும் உள்ளங்களின் சகவாசம் தந்த புத்துணர்ச்சியுடன் திருச்சிக்கு வீடு திரும்பியபோது நள்ளிரவு மணி ஒன்றரை ஆகியிருந்தது. சென்னையிலிருந்து திருச்சி வரை நெடுகிலும் ஓயாத மழை.





Thursday, November 16, 2023

”அடி” தந்த ஒளி

 தி ஜானகிராமன் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுதிய குறுநாவலான “அடி”யை நேற்று வாசித்து முடித்தேன். அதில் சில வரிகளை அசை போட்டபோது தோன்றிய கருத்துக்களை இங்கே இரண்டு சின்னஞ் சிறு கட்டுரைகளாக வரைந்துள்ளேன். 



நாயின் குரைப்பில்…

            சூஃபி ஞானிகளின் பரவச மொழிகள் பற்றி ஆராய்ச்சிப் பண்ணி ஒரு புத்தகம்: Words of Ecstasy in Sufism (சூஃபிசத்தில் பரவச மொழிபுகள்). வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆராய்ச்சித் துறைப் பேராசிரியர் கார்ல் டபிள்யூ ஏன்ஸ்ட் எழுதியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வாசித்த அந்த நூலைப் பின்னர் சூஃபி ஞானி ஒருவருக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டேன்.

            அதில் சூஃபி ஞானிகளின் வித்தியாசமான பரவச அனுபவங்களைப் பற்றிய செய்திகள் இருந்தன. அதில் சில என் மனத்தில் அடிக்கடி நினைவுக்கு வரும். சில நடுநிசிகளில் தெரு நாய்கள் குரைத்து இரவின் நிசப்தத்தைக் குலைக்கும்போது, ’செ, இப்படிக் கிடந்து கத்தி தூக்கத்தைக் கெடுக்குதே’ என்று எரிச்சல் கிளம்பும் கணத்தில் அந்த நூலில் படித்த ஒரு சேதி ஞாபகம் வரும்.

            ”இயற்கையில் இறைவனின் இருப்பை உணர்வதன் அதீதமான உணர்வெழுச்சி” என்னும் வகையான பரவச அனுபவத்திற்கு உதாரணமாக அதை ஏன்ஸ்ட் குறிப்பிடுகிறார். அபுல் ஹசன் நூரி என்னும் சூஃபி ஞானி ஒருமுறை நாய் ஒன்று குரைப்பதைக் கேட்டார். அந்தக் கணமே பரவசம் மேலிட்டு “லப்பைக்” (இதோ இருக்கிறேன் / செவி சாய்த்தேன் / அடிபணிந்தேன்)  என்று உரைத்தார்.

            அதே போல் இன்னொரு நிகழ்வு. இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்காக (பலியிடுவதற்காக) அல்-முஹாசிபி ஆடு ஒன்றை ஆயத்தப்படுத்தினார். அது கனைத்தது. அதைக் கேட்ட சூஃபி ஞானி அபூ ஹம்ஸா அல்-இஸ்ஃபஹானி உடனே ”லப்பைக்” என்று உரக்கச் சொன்னார்.

            விலங்குகளின் சப்தங்களைக் கேட்டதற்கே அவர்கள் எவ்வளவு ஆழமாகப் போய்விடுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இதை வாசித்த அனுபவமே அந்தப் பரவசத்தின் ருசியைச் சற்று நல்கத்தான் செய்தது.

            தி.ஜானகிராமன் எழுதிய “அடி” என்னும் குறுநாவலைப் படித்தபோது, அதன் முடிவில் அவர் எழுதியிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பரவசத்தை மீண்டும் உணர்ந்தேன். ’மேலே முழுமதி, கீழே வயல்கள்’ என்னும் சூழலில் செல்லப்பாவை வெளியே அழைத்துக் கொண்டு போய் அதுதான் பரதேவதையின் அழகின் பிரதிபலிப்பு என்று காட்டுகிறார் அம்பாகடாட்சம் என்னும் ஞானி. அது நாவலின் இறுதிக் காட்சி. அதை இப்படி முடிக்கிறார் தி.ஜா:

            எங்கோ நாய் இரண்டு குரைப்பது கேட்டது.

            ”பேஷ் பேஷ்” என்றார் அம்பாகடாட்சம். “இதைவிட எப்படி அழகா அம்பாளைப் பார்த்துப் பாட முடியும்?” என்று புன்னகையுடன் குரைப்பில் லயித்துவிட்டது போல் நின்றார் அம்பாகடாட்சம்.

            சூஃபியின் நிகழ்வு நாயின் குரைப்பில் அவர் இறைவனை உணர்ந்ததைக் காட்டிற்று என்றால், தி.ஜா., நாய்கள் இறைமையை உணரும் விதத்தைக் காட்டிவிட்டார்.



 இசைக்கேடு

பல்லாயிரம் பல்லாயிரம் சொலவடைகள் செழித்த தமிழ் மொழியில் ”இசைக்கேடு” என்றும் ஒரு சொலவம். மிகச் சாதாரணமாக பேச்சு வழக்கில் பாமரரும் புழங்கும் ஒன்றுதான்.

உதாரணமாக, தி.ஜானகிராமனின் “அடி” என்னும் குறுநாவலில் இரண்டு இடங்களில் இச்சொல் வருகிறது. இரண்டு இடத்திலுமே இதைப் பேசுபவள் மங்களத்தம்மாள். கணவனிடம் ஓரிடத்தில் பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிச் சொல்கிறாள்: “அவா ஊர்ல யாரும் தினமும் குளிக்கிறதில்லையாம். இங்கியும் அப்படியேதான் இருக்கா. நெறைய பவுடர், செண்ட் எல்லாம் போட்டுண்டு வந்துடறா. அதுக்குப் பதிலாக தப்பித்தவறி கிட்டப்போய் எங்கியாவது இசைக்கேடா நின்னா மூத்ர நெடி அடிக்கிறது!”

இன்னொரு இடம், மங்களத்தம்மாள் பட்டுவை விசாரணை பண்ணுமிடம். அப்போது அவளிடம் சொல்கிறாள்: “நீயும் மாமாவாலெதான் இப்படி உசந்துட்டோம்னு நன்னி விசுவாசத்தினாலெ இசைக்கேடா நடந்துக்கலாம். நடந்துக்க சம்மதிக்கலாம்னு நினைக்கிலாமோல்லியோ?”

இசைக்கேடு என்னும் சொல் இசை (music) என்னும் கலைத் துறை சார்ந்த சொல்லன்று. இது மனித வாழ்க்கை சார்ந்த ஒரு ஞானச் சொல்லாகும்.

வாழ்க்கையே ஒரு இசைதான் என்று பார்க்கும் ஞான தரிசனம் இச்சொல்லில் இருக்கிறது. எனவே, வாழ்வில் அசந்தர்ப்பம் என்றோ இங்கிதம் தவறியோ, இடம் பொருள் ஏவல் என்பவற்றுக்குப் பொருந்தாமலோ, பிசகாகவோ, தவறாகவோ, குற்றமாகவோ ஏதேனும் நடந்தால் அது இசைக்கேடு.

இசை என்பது என்ன? ஏழு ஸ்வரங்கள் தம்முள் இயல்பாக இணங்கி ஒத்துழைத்து நகர்வது. அதாவது ஓசைகளின் ஒத்திசைவு (harmony).

மனிதர்களும் உறவை ஒட்டி வாழும்போது, இணங்கி வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. இயற்கையுடன் இயைந்து வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. பிரபஞ்ச நியதிகளுக்கு முரண்படாமல் வாழும்போது அந்த வாழ்க்கை இசையாகிறது. அந்த ஒத்திசைவு குலைவதே இசைக்கேடு.

இது தொடர்பாகத் தமிழில் இன்னொரு சொல்லும் இருக்கிறது: இசைப்பாட்டு. பேச்சு வழக்கில் எசப்பாட்டு என்று சொல்லப்படும். இது இன்னும் ஆழமான ஞானச் சொல்லாகப் படுகிறது.

எசப்பாட்டு என்பது எதிர்ப்பாட்டுதான். “யார்றா அது, என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்?” என்றால், எதிர்ப்பாட்டு பாடுகிறான் என்று பொருள். எதிராகப் பாடுவதை ஏன் இசைப்பாட்டு என்றார்கள்? அதில்தான் தமிழின் ஞானம் இருக்கிறது.

எசப்பாட்டு என்பது கருத்து நிலையில் எதிர்ப்பாக இருக்கும். அதாவது, ஒருவர் பாடும் கருத்தை மறுத்துப் பிறர் பாடுவதாக அமையும். ஆனால் அது முன்னவர் பாடிய அதே பண்ணில் அமைந்திருக்கும்! எனவே, கருத்துப்படி பார்த்தால் அது எதிர்ப்பாட்டு; பண்ணின்படி பார்த்தால் அது உடன்படுகின்ற, ஒத்திசைகின்ற பாட்டு. எனவே அது எசப்பாட்டு.

உருதுவில் கவ்வாலி என்று பாடப்படும் வகையில் இரண்டு அணிகள் அமர்ந்து இசையிலேயே வாதாடுவது உண்டு. அது இசையால் அமைந்த வழக்காடு மன்றம் என்று சொல்லலாம். ஒருவரின் கருத்தை இன்னொருவர் மறுத்துப் பாடுவார். ஆனால் மெட்டு அதேதான்.

எனவே, எசப்பாட்டு என்னும் சொல் இவ்வகையில் வாழ்க்கை பற்றிய ஓர்  உண்மையை உணர்த்துகிறது. எதிரெதிரான, முரண்பாடான இரண்டு கருத்துக்கள் ஒரே மெட்டு என்னும் முழுமைக்குள் இயங்குகின்றன. தாவோயிசம் சொல்லும் opposites are complementaries, இரண்டும் இணைந்துதான் வட்டம் முழுமை அடைகிறது, இது அதனைச் சார்ந்துள்ளது, அது இதனைச் சார்ந்துள்ளது என்னும் தத்துவத்தை எசப்பாட்டு என்னும் ஒற்றைச் சொல் குறிக்கிறது.

வாழ்க்கை என்பது dialectics என்னும் முரணியக்கம் ஆகும் என்னும் தரிசனத்தை எசப்பாட்டு என்னும் சொல்லே தந்துவிடுகிறது.