கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள்
மரணத்தைப் புன்முறுவலுடன் வரவேற்றார்கள். இறைவனின் விதிப்புக்குத் தன்னை ஒப்படைத்துக்
கொள்வதில் அத்தனை தெளிவும் உறுதியும் இன்பமும் இறைத் தூதர்களுக்கும் இறை நேசர்களுக்கும்
மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் உடல் பகைவரின் அம்புகளால் துளைக்கப் பட்டிருக்கலாம்.
ஆன்மாவோ மிக ஆனந்தத்துடன் அல்லாஹ்வின் சந்நிதிக்குச் சென்றுவிட்டது. 
            (மறுமை
நாளில் நல்லடியார்களிடம் சொல்லப்படும்)
            நிம்மதியடைந்த
ஆத்மாவே!
            நீ
உன் இறைவனிடம் மீளுவாயாக,
            அவன்
திருப்தியுற்ற நிலையிலும்
            அவன்
உன் மீது திருப்தியுற்ற நிலையிலும்.
            நீ
என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக
            என்
சொர்க்கத்திலும் நுழைந்துவிடுவாயாக!
            (யா அய்யுஹன் நஃப்சுல் முத்ம’இன்னா,
             இர்ஜி’ஈ இலா றப்பிக்கி ராளியத்தம் மர்ளிய்யா
             ஃபத்ஃகுலீ ஃபீ இபாதீ, வத்ஃகுலீ ஜன்னத்தீ –
89:27-30)
            இந்தத் திருவசனத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக
இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள் என்று இறைநேசர்கள் உணர்ந்துள்ளனர். அந்த
விளக்கத்தின் அடிப்படையில் முஹ்சின் நக்வி பாடுகிறார்:
            ’சாந்தியடைந்த
ஆன்மாவே!’ என்று
            குர்’ஆன்
எவரை அழைத்ததோ,
            இறைவனின்
பார்வையில் அந்தப் படித்தரம்
            இமாம்
ஹுசைனுக்கு உரியதாகும்!
            (குர்’ஆன் நே புகாரா ஜிசே நஃப்சே முத்ம’ஈன்
              ஃகாலிக் கீ நழர் மேன் ஹே யெ தரஜா ஹுசைன் கா)
            குர்’ஆன் என்னும் திருமறையை ஓதுவோர் பலர்.
ஆனால், குர்’ஆன் நபியை ஓதுகிறது, நபியின் குடும்பத்தாரை ஓதுகிறது. இந்த விளக்கங்கள்
எத்தனை பேருக்கு எட்டுகிறது? முஹ்சின் நக்வி சொல்கிறார்:
            கடைவீதியின்
கும்பலிடம் சொல்லுங்கள்
            வாய்
மூடி மௌனமாய் இருப்பீராக;
            இதோ
ஹுசைனை ஓதுகிறது குர்’ஆன்!
            (பஜார் கெ ஹுஜூம் செ கெஹ் தோ கெ ச்சுப்
ரஹே
             குர்’ஆன் கர் ரஹா ஹே திலாவத் ஹுசைன் கீ)
            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள்
தன் உயிரை நீத்து ஏகத்துவ உணர்வுக்கு உயிரூட்டினார்கள். கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்திற்கு
அடிபணிவது என்பதும் ஒருவகையான சிலை வணக்கம்தான் என்று அவர்கள் கண்டார்கள். எனவே அதை
எதிர்த்து நின்றார்கள். முஹ்சின் நக்வி சொல்கிறார்:
            வாழ்க்கைக்கு
ஒரு நம்பிக்கை வராமல் போயிருக்கும்,
            சிலை
வழிபாடு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும்,
            ஹுசைன்
இப்னு அலீ தன் தலையைத் தந்திருக்காவிடில்
            இந்த
உலகம் முழுவதும் யஜீதாக மாறியிருக்கும்.
            (ஜிந்தகீ ந உம்மீத் ஹோ ஜாத்தீ
             புத் பரஸ்த்தி ஜதீத்
ஹோ ஜாத்தீ
              சர்
ந தேத்தே ஹுசைன் இப்னே அலீ அகர்
              சாரி துன்யா யஜீத் ஹோ
ஜாத்தீ)
            இன்றும் யஜீதுகள் இருக்கின்றனர். உலக ஆதாயத்துக்காக
மார்க்கத்தை விற்கும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அநீதம் புரியும் ஒவ்வொருவனும் ஒரு
யஜீதுதான். அவர்களுக்கு எதிராக தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு ஹுசைன்தான்.
முஹ்சின் நக்வி சொல்கிறார்:
            அசத்தியத்தின்
முன் ஒருவர் சிரம் பணியவில்லை என்றால்,
            புரிந்துகொள்,
அவரது அறிவின் எஜமான் ஹுசைன் ஆவார்!
            (பாத்தில்
கே சாம்னே ந ஜுகாயே ஜோ அப்னா சர்
             சம்ஜோ
கே உஸ்கே ஸெஹன் கா மாலிக் ஹுசைன் ஹே)
            ஹுசைனின் நியாபகம் வந்தால் 
            கண்கள் கலங்கி விடுகின்றன;
            ஓ! இப்போதும் ஹுசைனின் மீது
            நீருக்கு எவ்வளவு நேசம்!
            (திக்ரே ஹுசைன் ஆயா தோ ஆன்ஃகேன் ச்சலக்
படீ
             பானீ
கோ கித்னா பியார் ஹே அப் பீ ஹுசைன் சே)
            மருதாணி
இலையைப் பார்த்தால்
            எனக்கு
நிம்மதியே வருவதில்லை;
            அதன்
வெளிரங்கம் ஹசனின் நியாபகம்
            அதன்
அந்தரங்கம் ஹுசைனின் நியாபகம்.
             (பர்கே
ஹினா கோ தேக் கர் ஆத்தா நஹீன் ஹே ச்சைன்
              ழாஹிர் யாதே ஹசன் தொ பாத்தின் யாதே ஹுசைன்)
            இந்தக் கவிதையை விளங்கிக் கொள்வதற்கான
குறிப்புகளைத் தருகிறேன். நபிகள் நாயகத்தின் பேரப் பிள்ளைகளான இமாம் ஹசன் (ரலி) மற்றும்
இமாம் ஹுசைன் (ரலி) இருவரும் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இமாம் ஹசன் (ரலி)
அவர்கள் உணவில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார். இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா
களத்தில் அம்புகள், ஈட்டிகள், வாட்கள் ஆகிய கருவிகளால் தாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த
நிலையில் உயிர் நீத்தார். மருதாணி இலை பச்சை நிறமாக உள்ளது. அது நஞ்சின் நிறம். மருதாணியை
அரைத்துப் பூசினால் சிவப்பு நிறம் தருகிறது. அது ரத்தத்தின் நிறம். இப்போது மீண்டும்
கவிதையை வாசித்துப் பாருங்கள். கவிஞர் எத்தனை ஆழமான அவதானத்தோடு அதை எழுதியிருக்கிறார்
என்பது புரியும்.
            இப்படி பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம்
கவிஞர்களின் பல்லாயிரம் சிந்தனைகளை இந்த தியாக வரலாறு மீட்டிக் கொண்டே இருக்கிறது.
இஸ்லாமிற்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் கர்பலா வரலாறு ஏகத்துவத்தின்
ஒளியைப் பாய்ச்சும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இறைஞான ரகசியங்கள் பலவற்றைத்
தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இந்த வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி முத்தாய்ப்பாகச்
சொல்ல வேண்டும் எனில் மவ்லானா முஹம்மத் அலீ ஜவ்ஹர் (ரஹ்) அவர்களின் வரிகளைத்தான் மேற்கோள்
காட்ட வேண்டும்:
            ஹுசைனின்
படுகொலை
            எதார்த்தத்தில்
            யஜீதின்
மரணமே ஆகும்;
            இஸ்லாம்
புத்துயிர் பெறுகிறது
            ஒவ்வொரு
கர்பலாவுக்குப் பிறகும்!
            (கத்லே ஹுசைன் அஸ்ல் மேன் மர்கே யஜீத்
ஹே
             இஸ்லாம் ஜிந்தா ஹோத்தா ஹே ஹர் கர்பலா கே பஅத்)




 
அல்ஹம்துலில்லாஹ்🥺
ReplyDeleteஇன்னும் அறிய ஆவலாக இருக்கிறது.
இமாமவர்களை கொலை செய்தவர்கள் வேண்டுமென்றால் ஒப்பாரி வைக்கட்டும்
ReplyDeleteஉயிரோடு இருப்பவர்களுக்காக நாங்கள் ஒப்பாரி வைப்பதில்லை.
- அல்லாமா இக்பால்