Sunday, November 14, 2021

ராஜாளி ஆகு!

 [மீலாதுந் நபி (ஸல்) நிமித்தம் எழுதப்பட்ட கட்டுரை. அக்டோபர் மாதத்து “ஆமிர் கலீமி” மாத இதழில் வெளியானது.]



                                    கொசுச் சிறகை

                                    உதிர்த்துவிடு,

                                    விசும்பில் எழும்

                                    ராஜாளி ஆகு!

            இப்படி ஒரு கவிதைத் துளி சிந்தையில் எழுந்தது. எனக்காக என்னுள் எழுந்த அறிவுரைதான்.

            சூஃபி மரபின் பரிபாஷை அறிந்தோருக்கு இந்த வரிகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. எனினும், இந்த வரிகளில் இருந்து விரியும் அர்த்தங்களை இங்கே எழுத விரும்புகிறேன்.

            இந்தக் கவிதையின் முதல் வரியில் இருப்பது ’ஜுஹ்து’ என்னும் பற்றின்மை. கொசுவின் சிறகை உதிர்ப்பது என்பது உலகப் பற்றை விட்டுவிடுவது. கொசுவின் சிறகு என்பது இங்கே உலகைக் குறிக்கிறது.

            உண்மையில், இந்த உலகம் இறைவனின் பார்வையில் கொசுவின் சிறகுக்குக் கூட மதிப்பில் சமமாக இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்:

           


            ”அல்லாஹ்வின் பார்வையில் இவ்வுலகம் கொசுவின் சிறகுக்குச் சமமாக இருந்திருக்கும் எனில் நிராகரிப்பாளனுக்கு ஒரு துளியும் அவன் எப்போதுமே புகட்டியிருக்க மாட்டான்.” (அறிவிப்பாளர்: சஹ்லிப்னு சஃது (ரலி); நூல்: சுனன் இப்னு மாஜா: 37: கிதாபுஜ்ஜுஹ்து: 3: பாபு மஸலித் துன்யா: ஹதீஸ் எண்:11 (#4110); மேலும்: ஜாமிஉத் திர்மிதி.)

            உலகப் பற்றில் உழலும் மனிதன் ஒரு கொசுவைப் போன்றே இருக்கிறான். அது சாக்கடையில் பிறந்து வளர்ந்து வசிக்கிறது. யாரிடம் செல்கிறதோ அவரின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதுபோல் அவன் கீழ்மையான ஆட்களுடன் தோழமை கொள்கிறான். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அடுத்தவரை உறிஞ்சிப் பிழைக்கிறான்.

            கொசு ஒருபோதும் வானத்தின் உயரங்களை எட்டுவதில்லை. அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அதற்குச் சிந்தை இல்லை. இரண்டு சிறகுகள் இருந்தாலும், அவற்றை வைத்து அது பறந்தாலும், அது வெறும் பூச்சியே அன்றி அது ஒரு பறவை ஆகாது. வெளிப்படையில் ஆன்மிகக் கோலத்துடன் தோன்றினாலும் உள்ளத்தில் உலக இச்சைகள் நிரம்பியிருப்பவன் உண்மையில் ஆன்மிகவாதி ஆகிவிட மாட்டான்.

            எனவே, ’கொசுச் சிறகை உதிர்த்துவிடு’ என்பது உலகப்பற்றை நீக்கிவிடு என்று அர்த்தம் ஆகிறது.

            ”விசும்பில் எழும் ராஜாளி ஆகு”



            ராஜாளி என்பது சூஃபியைக் குறிக்கிறது. இறைக்காதலை இதயத்தில் தாங்கி இறைவனை நோக்கிச் செல்லும் சாதகனைக் குறிக்கிறது. “ஃப-ஃபிர்ரூ இலல்லாஹ்” (51:50) – “அல்லாஹ்விடம் தப்பி ஓடு” என்பதற்குச் செயல் புரிபவனைக் குறிக்கிறது. அவன் ஈருலகையும் விட்டுத் தப்பி இறைவனிடம் ஓடுபவன். அவனே ஆன்மிகத்தில் ராஜாளி (ஷாஹீன்) என்று பாராட்டப் படுகிறான்.

            ராஜாளி என்னும் இந்தக் குறியீடு மவ்லானா ரூமியிடமிருந்து வருகிறது:

            ”மயிலிடமும் குயிலிடமும்

             நேரத்தை வீணாக்காதே;

             ஒன்று வெறும் வண்ணம்,

             மற்றது வெறும் ஓசை;

             வேட்டைக்குப் புறப்படும்

              ராஜாளியாய் இரு!”

            இந்தக் குறியீடு ஷாஹீனிய்யத் – ராஜாளியம் என்று சொல்லத்தக்க அளவில் மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையால் வளர்க்கப்பட்டது. ஒவ்வொரு முஸ்லிமும் ஈருலகுக்கு அப்பால் பறக்கும் ராஜாளியாக – “தாஇரே லாஹூத்தீ”யாக, அதாவது, தெய்வீக உலகின் பறவையாக – இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். “தூ ஷாஹீன் ஹே” – “நீயொரு ராஜாளி” என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

            ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 139-ஆம் கவிதையில் சொல்கிறார்:


        ”இளைஞரின் இதயங்களில்

 ராஜாளியின் உயிர் விழிப்படையும்போது

 தம் இலக்கு அவற்றுக்கு

 வானங்களில் தென்படுகின்றது!”

                                


                                 ”உன் இருப்பிடம் உலக மன்னர்களின்

                                    அரண்மனை விதானத்தில் இல்லை

                                     நீ ஒரு ராஜாளி!

                                     மலை முகடுகளில் வாழப் பழகு!”

            ஆன்மிக உலகில் ஒரு ராஜாளியாக வாழ்வதற்கு அவர் காட்டும் முன் மாதிரி – உஸ்வத்துன் ஹசனா (’அழகிய முன்மாதிரி’) என்று இறைவனே சுட்டிக் காட்டிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களேதான். அவர்களின் வாழ்க்கையில் குறிப்பாக மிஃராஜ் என்னும் விண்ணேற்ற அற்புத நிகழ்வை அல்லாமா இக்பால் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு முஸ்லிமின் ஆன்மிக முன்னேற்றத்துக்கான அளவு கோல் என்று அவர் அதனைக் குறிப்பிடுகிறார்.

”பாங்கே தாரா” என்னும் நூலில் உள்ள ”ஷபே மிஃராஜ்” (நபிகள் நாயகத்தின் விண்ணேற்ற இரவு) என்னும் கவிதையில் சொல்கிறார்:

                        


”’ஆன்மிக விறலுக்கு ஒரு காலடி தூரம்தான்

 அர்ஷ் எனும் இறை விதானம்!’

 விண்ணேற்ற இரவு முஸ்லிம்களுக்கு

 விண்டுரைக்கும் சேதி இதுவே!”

            (குறிப்பு: ஹிம்மத் என்பதை இங்கே விறல் என்று தமிழாக்கியுள்ளேன். இது ஒரு பழந்தமிழ்ச் சொல். ஞானத்துடன் கூடிய துணிச்சல் என்று அர்த்தமாகும்.)

            குர்ஆனிய பிரபஞ்சவியலின்படி (Quranic Cosmology) அர்ஷு என்பது ஏழு வானங்களுக்கு அப்பால், ”சித்ரத்துல் முன்தஹா” என்னும் பிரபஞ்ச எல்லை மரத்துக்கு அப்பால் இருக்கின்றது. இது படைப்புக்களைக் கடந்த நிலை என்று ஞானிகள் விளக்கம் தருகின்றனர். அவ்வகையில் இது அனைத்து வகையான உலகங்களுக்கும் – ’ஆலமீன்’ அனைத்துக்கும் - அப்பால் இருக்கிறது. அங்கு சென்று இறைவனைச் சந்திப்பதே விண்ணேற்றம் ஆகிறது. இதை அல்லாமா இக்பால் நமக்கு நினைவூட்டுகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலில் 60-வது கவிதையில் சொல்கிறார்:



நீ ஒரு ராஜாளி!

 பறப்பதே உன் பணி!

 உன் முன்னே வானங்கள்

 இன்னும் இருக்கின்றன!”

            அந்த வானங்கள் எவை? ”ளர்பே கலீம்” என்னும் நூலின் 09-ஆம் கவிதையான “ஜமீனோ ஆஸ்மான்” (பூமியும் வானமும்) என்பதில் சொல்கிறார்:



உன் உலகின் வானம் என்று

 நீ கருதிக்கொண்டிருக்கும் இந்த ஒன்று

 உண்மையில், வேறோர் உலகத்தின்

 நிலமாக இருத்தல் கூடும்!”

இதற்கு முந்தைய கண்ணியில் (பைத்) அல்லாமா கூறுகிறார்: “ஏ சாலிகே ரஹ்! ஃபிக்ரு ந கர் ஸூதோ ஸியான் கா” -  ”ஆன்மிகப் பாதையின் சாதகனே! லாப நட்டம் பற்றிக் கவலைப் படாதே!” – இவ்வரிக்கான விளக்கக் குறிப்பு: ‘நான்கு நிலைகள் இருக்கின்றன: நாசூத், மலக்கூத், ஜபரூத் மற்றும் லாஹூத் (அதாவது, மண்ணுலகம் என்னும் மனிதவுலகம், விண்ணுலகம் என்னும் வானவருலகம், சக்தியுலகம் மற்றும் தெய்வீக உலகம்.) முழுமை நிலையை (காமில்) அடைந்து இறைவனுடன் பொருந்த வேண்டும் எனில் இந்த நான்கு உலகங்களையும் சாதகன் கடந்து போக வேண்டும்.  

            குர்ஆனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றதை விவரிக்கும் அற்புதமான அத்தியாயம் ”அந்நஜ்மு” (”விண்மீன்”; எண்:53). அதன் திருவசனங்களின் வெளிப்படையான அர்த்தங்களை தர்ஜுமா என்னும் மொழிபெயர்ப்பு நூற்களும் தஃப்சீர் என்னும் விரிவுரை நூற்களும் உரைக்கலாம். அவற்றைப் பயில்வோர் அறிஞர் ஆகலாம். ஆனால், ஒருவரின் ஆன்மாவிற்கு விண்ணேற்றம் நிகழ வேண்டும் எனில் அதன் அந்தரங்க ஞானங்கள் திறக்கப்பட வேண்டும். அவை ஏன் நமக்குத் திறப்பதில்லை? அல்லாமா இக்பால் அதற்கான காரணத்தை             ”ளர்பே கலீம்” என்னும் நூலில் உள்ள “மிஃராஜ்” (விண்ணேற்றம்) என்னும் கவிதையில் சொல்கிறார்:



”’வந்நஜ்மு’ என்பதன் உட்பொருள்

 உனக்கு வெளிப்படாததில் வியப்பென்ன?

 உன் கடலோதையின் தத்தளிப்புகள்

 இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன.”

            ”உன் கடலோதையின் தத்தளிப்புகள் – அலைகளின் கொந்தளிப்புகள் – இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன” என்பதற்கு ஓர் அறிஞர் விளக்கம் சொல்கிறார்: ”யஃனீ தூ அபீ தக் அனாசிரே அர்பஃ கீ கைது மேன் ஹே – அதாவது நீ இன்னமும் நிலம் நீர் தீ காற்று ஆகிய பொருட்களால் ஆன உலகத்தில் தளைப்பட்டிருக்கிறாய் – அவ்ர் ஜிந்தகீ கே ஹர் ஷஃபா மேன் மாதீ அஸ்பாப் கா முஹ்தாஜ் ஹே – வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீ காரண காரியமான பருப் பொருட்களின் யாசகனாக இருக்கிறாய்.”

            படைப்புக்களின் பக்கம் யாசகனாய் இருப்பவனுக்கு ஆன்மிக முன்னேற்றம் என்னும் விண்ணேற்றம் நிகழாது. ஏனெனில் அது படைப்பவனிடம் பறந்து செல்லும் பயணம். உலகப் பற்றில் உழல்வோருக்கு அது எப்படி வாய்க்கும்? “சாண் ஏறினால் முழம் சருக்கும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல், தூய உள்ளத்தினுள் தீய எண்ணங்கள் நுழையும்போது அதன் ஆன்மிக ஏற்றம் தடைப்படுகிறது, உயரத்தில் இருந்து அது கீழே விழுகிறது. உள்ளத்திற்கு உணவாக எதை ஊட்டுகிறோம் என்பதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி அல்லாமா இக்பால் நமக்கு அறிவுறுத்துகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 54-ஆம் கவிதையில் கூறுகிறார்:



”தெய்வீக உலகின் பறவையே!

எவ்வுணவால் நின் பறத்தலில்

சோர்வும் தடையும் உண்டாகுமோ

அவ்வுணவை விட மரணமே சிறந்தது!”

            ஆன்மிகம் என்னும் வானில் பறக்க இரண்டு சிறகுகள் வேண்டும். ஒன்று, ஐனிய்யத் என்னும் இறையிணக்கம் பற்றிய ஞானம்; மற்றொன்று, கைரிய்யத் என்னும் அன்மைநிலை குறித்த ஞானம். அல்லாஹ் நமக்கு வலிமையான சிறகுகளை அருள்வானாக. நம்மை அவனின் கையமரும் ராஜாளி ஆக்குவானாக!

3 comments:

  1. மாஷா அல்லாஹ்.
    அருமை மௌலா

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் மௌலானா

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கம்

    ReplyDelete