Sunday, November 14, 2021

ராஜாளி ஆகு!

 [மீலாதுந் நபி (ஸல்) நிமித்தம் எழுதப்பட்ட கட்டுரை. அக்டோபர் மாதத்து “ஆமிர் கலீமி” மாத இதழில் வெளியானது.]



                                    கொசுச் சிறகை

                                    உதிர்த்துவிடு,

                                    விசும்பில் எழும்

                                    ராஜாளி ஆகு!

            இப்படி ஒரு கவிதைத் துளி சிந்தையில் எழுந்தது. எனக்காக என்னுள் எழுந்த அறிவுரைதான்.

            சூஃபி மரபின் பரிபாஷை அறிந்தோருக்கு இந்த வரிகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. எனினும், இந்த வரிகளில் இருந்து விரியும் அர்த்தங்களை இங்கே எழுத விரும்புகிறேன்.

            இந்தக் கவிதையின் முதல் வரியில் இருப்பது ’ஜுஹ்து’ என்னும் பற்றின்மை. கொசுவின் சிறகை உதிர்ப்பது என்பது உலகப் பற்றை விட்டுவிடுவது. கொசுவின் சிறகு என்பது இங்கே உலகைக் குறிக்கிறது.

            உண்மையில், இந்த உலகம் இறைவனின் பார்வையில் கொசுவின் சிறகுக்குக் கூட மதிப்பில் சமமாக இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்:

           


            ”அல்லாஹ்வின் பார்வையில் இவ்வுலகம் கொசுவின் சிறகுக்குச் சமமாக இருந்திருக்கும் எனில் நிராகரிப்பாளனுக்கு ஒரு துளியும் அவன் எப்போதுமே புகட்டியிருக்க மாட்டான்.” (அறிவிப்பாளர்: சஹ்லிப்னு சஃது (ரலி); நூல்: சுனன் இப்னு மாஜா: 37: கிதாபுஜ்ஜுஹ்து: 3: பாபு மஸலித் துன்யா: ஹதீஸ் எண்:11 (#4110); மேலும்: ஜாமிஉத் திர்மிதி.)

            உலகப் பற்றில் உழலும் மனிதன் ஒரு கொசுவைப் போன்றே இருக்கிறான். அது சாக்கடையில் பிறந்து வளர்ந்து வசிக்கிறது. யாரிடம் செல்கிறதோ அவரின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதுபோல் அவன் கீழ்மையான ஆட்களுடன் தோழமை கொள்கிறான். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அடுத்தவரை உறிஞ்சிப் பிழைக்கிறான்.

            கொசு ஒருபோதும் வானத்தின் உயரங்களை எட்டுவதில்லை. அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அதற்குச் சிந்தை இல்லை. இரண்டு சிறகுகள் இருந்தாலும், அவற்றை வைத்து அது பறந்தாலும், அது வெறும் பூச்சியே அன்றி அது ஒரு பறவை ஆகாது. வெளிப்படையில் ஆன்மிகக் கோலத்துடன் தோன்றினாலும் உள்ளத்தில் உலக இச்சைகள் நிரம்பியிருப்பவன் உண்மையில் ஆன்மிகவாதி ஆகிவிட மாட்டான்.

            எனவே, ’கொசுச் சிறகை உதிர்த்துவிடு’ என்பது உலகப்பற்றை நீக்கிவிடு என்று அர்த்தம் ஆகிறது.

            ”விசும்பில் எழும் ராஜாளி ஆகு”



            ராஜாளி என்பது சூஃபியைக் குறிக்கிறது. இறைக்காதலை இதயத்தில் தாங்கி இறைவனை நோக்கிச் செல்லும் சாதகனைக் குறிக்கிறது. “ஃப-ஃபிர்ரூ இலல்லாஹ்” (51:50) – “அல்லாஹ்விடம் தப்பி ஓடு” என்பதற்குச் செயல் புரிபவனைக் குறிக்கிறது. அவன் ஈருலகையும் விட்டுத் தப்பி இறைவனிடம் ஓடுபவன். அவனே ஆன்மிகத்தில் ராஜாளி (ஷாஹீன்) என்று பாராட்டப் படுகிறான்.

            ராஜாளி என்னும் இந்தக் குறியீடு மவ்லானா ரூமியிடமிருந்து வருகிறது:

            ”மயிலிடமும் குயிலிடமும்

             நேரத்தை வீணாக்காதே;

             ஒன்று வெறும் வண்ணம்,

             மற்றது வெறும் ஓசை;

             வேட்டைக்குப் புறப்படும்

              ராஜாளியாய் இரு!”

            இந்தக் குறியீடு ஷாஹீனிய்யத் – ராஜாளியம் என்று சொல்லத்தக்க அளவில் மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையால் வளர்க்கப்பட்டது. ஒவ்வொரு முஸ்லிமும் ஈருலகுக்கு அப்பால் பறக்கும் ராஜாளியாக – “தாஇரே லாஹூத்தீ”யாக, அதாவது, தெய்வீக உலகின் பறவையாக – இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். “தூ ஷாஹீன் ஹே” – “நீயொரு ராஜாளி” என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

            ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 139-ஆம் கவிதையில் சொல்கிறார்:


        ”இளைஞரின் இதயங்களில்

 ராஜாளியின் உயிர் விழிப்படையும்போது

 தம் இலக்கு அவற்றுக்கு

 வானங்களில் தென்படுகின்றது!”

                                


                                 ”உன் இருப்பிடம் உலக மன்னர்களின்

                                    அரண்மனை விதானத்தில் இல்லை

                                     நீ ஒரு ராஜாளி!

                                     மலை முகடுகளில் வாழப் பழகு!”

            ஆன்மிக உலகில் ஒரு ராஜாளியாக வாழ்வதற்கு அவர் காட்டும் முன் மாதிரி – உஸ்வத்துன் ஹசனா (’அழகிய முன்மாதிரி’) என்று இறைவனே சுட்டிக் காட்டிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களேதான். அவர்களின் வாழ்க்கையில் குறிப்பாக மிஃராஜ் என்னும் விண்ணேற்ற அற்புத நிகழ்வை அல்லாமா இக்பால் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு முஸ்லிமின் ஆன்மிக முன்னேற்றத்துக்கான அளவு கோல் என்று அவர் அதனைக் குறிப்பிடுகிறார்.

”பாங்கே தாரா” என்னும் நூலில் உள்ள ”ஷபே மிஃராஜ்” (நபிகள் நாயகத்தின் விண்ணேற்ற இரவு) என்னும் கவிதையில் சொல்கிறார்:

                        


”’ஆன்மிக விறலுக்கு ஒரு காலடி தூரம்தான்

 அர்ஷ் எனும் இறை விதானம்!’

 விண்ணேற்ற இரவு முஸ்லிம்களுக்கு

 விண்டுரைக்கும் சேதி இதுவே!”

            (குறிப்பு: ஹிம்மத் என்பதை இங்கே விறல் என்று தமிழாக்கியுள்ளேன். இது ஒரு பழந்தமிழ்ச் சொல். ஞானத்துடன் கூடிய துணிச்சல் என்று அர்த்தமாகும்.)

            குர்ஆனிய பிரபஞ்சவியலின்படி (Quranic Cosmology) அர்ஷு என்பது ஏழு வானங்களுக்கு அப்பால், ”சித்ரத்துல் முன்தஹா” என்னும் பிரபஞ்ச எல்லை மரத்துக்கு அப்பால் இருக்கின்றது. இது படைப்புக்களைக் கடந்த நிலை என்று ஞானிகள் விளக்கம் தருகின்றனர். அவ்வகையில் இது அனைத்து வகையான உலகங்களுக்கும் – ’ஆலமீன்’ அனைத்துக்கும் - அப்பால் இருக்கிறது. அங்கு சென்று இறைவனைச் சந்திப்பதே விண்ணேற்றம் ஆகிறது. இதை அல்லாமா இக்பால் நமக்கு நினைவூட்டுகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலில் 60-வது கவிதையில் சொல்கிறார்:



நீ ஒரு ராஜாளி!

 பறப்பதே உன் பணி!

 உன் முன்னே வானங்கள்

 இன்னும் இருக்கின்றன!”

            அந்த வானங்கள் எவை? ”ளர்பே கலீம்” என்னும் நூலின் 09-ஆம் கவிதையான “ஜமீனோ ஆஸ்மான்” (பூமியும் வானமும்) என்பதில் சொல்கிறார்:



உன் உலகின் வானம் என்று

 நீ கருதிக்கொண்டிருக்கும் இந்த ஒன்று

 உண்மையில், வேறோர் உலகத்தின்

 நிலமாக இருத்தல் கூடும்!”

இதற்கு முந்தைய கண்ணியில் (பைத்) அல்லாமா கூறுகிறார்: “ஏ சாலிகே ரஹ்! ஃபிக்ரு ந கர் ஸூதோ ஸியான் கா” -  ”ஆன்மிகப் பாதையின் சாதகனே! லாப நட்டம் பற்றிக் கவலைப் படாதே!” – இவ்வரிக்கான விளக்கக் குறிப்பு: ‘நான்கு நிலைகள் இருக்கின்றன: நாசூத், மலக்கூத், ஜபரூத் மற்றும் லாஹூத் (அதாவது, மண்ணுலகம் என்னும் மனிதவுலகம், விண்ணுலகம் என்னும் வானவருலகம், சக்தியுலகம் மற்றும் தெய்வீக உலகம்.) முழுமை நிலையை (காமில்) அடைந்து இறைவனுடன் பொருந்த வேண்டும் எனில் இந்த நான்கு உலகங்களையும் சாதகன் கடந்து போக வேண்டும்.  

            குர்ஆனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றதை விவரிக்கும் அற்புதமான அத்தியாயம் ”அந்நஜ்மு” (”விண்மீன்”; எண்:53). அதன் திருவசனங்களின் வெளிப்படையான அர்த்தங்களை தர்ஜுமா என்னும் மொழிபெயர்ப்பு நூற்களும் தஃப்சீர் என்னும் விரிவுரை நூற்களும் உரைக்கலாம். அவற்றைப் பயில்வோர் அறிஞர் ஆகலாம். ஆனால், ஒருவரின் ஆன்மாவிற்கு விண்ணேற்றம் நிகழ வேண்டும் எனில் அதன் அந்தரங்க ஞானங்கள் திறக்கப்பட வேண்டும். அவை ஏன் நமக்குத் திறப்பதில்லை? அல்லாமா இக்பால் அதற்கான காரணத்தை             ”ளர்பே கலீம்” என்னும் நூலில் உள்ள “மிஃராஜ்” (விண்ணேற்றம்) என்னும் கவிதையில் சொல்கிறார்:



”’வந்நஜ்மு’ என்பதன் உட்பொருள்

 உனக்கு வெளிப்படாததில் வியப்பென்ன?

 உன் கடலோதையின் தத்தளிப்புகள்

 இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன.”

            ”உன் கடலோதையின் தத்தளிப்புகள் – அலைகளின் கொந்தளிப்புகள் – இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன” என்பதற்கு ஓர் அறிஞர் விளக்கம் சொல்கிறார்: ”யஃனீ தூ அபீ தக் அனாசிரே அர்பஃ கீ கைது மேன் ஹே – அதாவது நீ இன்னமும் நிலம் நீர் தீ காற்று ஆகிய பொருட்களால் ஆன உலகத்தில் தளைப்பட்டிருக்கிறாய் – அவ்ர் ஜிந்தகீ கே ஹர் ஷஃபா மேன் மாதீ அஸ்பாப் கா முஹ்தாஜ் ஹே – வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீ காரண காரியமான பருப் பொருட்களின் யாசகனாக இருக்கிறாய்.”

            படைப்புக்களின் பக்கம் யாசகனாய் இருப்பவனுக்கு ஆன்மிக முன்னேற்றம் என்னும் விண்ணேற்றம் நிகழாது. ஏனெனில் அது படைப்பவனிடம் பறந்து செல்லும் பயணம். உலகப் பற்றில் உழல்வோருக்கு அது எப்படி வாய்க்கும்? “சாண் ஏறினால் முழம் சருக்கும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல், தூய உள்ளத்தினுள் தீய எண்ணங்கள் நுழையும்போது அதன் ஆன்மிக ஏற்றம் தடைப்படுகிறது, உயரத்தில் இருந்து அது கீழே விழுகிறது. உள்ளத்திற்கு உணவாக எதை ஊட்டுகிறோம் என்பதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி அல்லாமா இக்பால் நமக்கு அறிவுறுத்துகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 54-ஆம் கவிதையில் கூறுகிறார்:



”தெய்வீக உலகின் பறவையே!

எவ்வுணவால் நின் பறத்தலில்

சோர்வும் தடையும் உண்டாகுமோ

அவ்வுணவை விட மரணமே சிறந்தது!”

            ஆன்மிகம் என்னும் வானில் பறக்க இரண்டு சிறகுகள் வேண்டும். ஒன்று, ஐனிய்யத் என்னும் இறையிணக்கம் பற்றிய ஞானம்; மற்றொன்று, கைரிய்யத் என்னும் அன்மைநிலை குறித்த ஞானம். அல்லாஹ் நமக்கு வலிமையான சிறகுகளை அருள்வானாக. நம்மை அவனின் கையமரும் ராஜாளி ஆக்குவானாக!

Sunday, August 1, 2021

... என்றார் தர்வேஷ் - 2

 

”சொர்க்கத்தில் நாம் இறைவனுடன் உரையாடுவோம் அல்லவா?” என்று கேட்டார்கள்.

            ”ஆம். இறைவனுடன் அவனின் மொழியில் பேசுவோம்” என்றார் தர்வேஷ்.

            ”அறபி மொழிதானே?” என்றார் ஹஜ்ரத்.

            ”மௌனமே இறைவனின் அறபி” என்றார் தர்வேஷ்.

d


            
இறைவனின் பேச்சு நமது மொழிகளைப் போன்றது அல்ல. நாம் பேசும் மொழிகள் படைக்கப்பட்டவை. செவியால் கேட்கப்படும் ஒலி வடிவமும், கண்களால் பார்க்கப்படும் வரி வடிவமும் கொண்டவை.

            இந்த மொழிகளை மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன, பார்க்கின்றன.

            உலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும். அஃது, அவரவர் தாய்மொழி. சிலருக்கு இரண்டு மொழிகள் தெரியலாம். மூன்று மொழி அறிந்தோர் இன்னும் குறைவு. பன்மொழி அறிந்தோர் மிகவும் சொற்பமே. உலகில் மொத்தம் 6500 – ஆறாயிரத்து ஐநூறு – மொழிகள் பேசப்படுகின்றன என்றும், ஏறத்தாழ 4000 – நாலாயிரம் – மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பான்மை மக்கள் ஒரு மொழி அறிந்தவர்கள் மட்டுமே.

            இதன் பொருள் என்ன? பெரிய பலகை ஒன்றில் நாலாயிரம் மொழிகளிலும் ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டால் உலகில் பெரும்பான்மை மனிதர்களால் அவற்றில் ஒரு மொழியில் எழுதப்பட்டதைத்தான் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 3999 – மூவாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொன்னூற்று ஒன்பது – எழுத்து வடிவங்களும் அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கிறுக்கல்கள் மட்டுமே. அங்கே ஒரு மாடு அல்லது கழுதை வந்து நின்றால் அந்த வாசகங்கள் அனைத்தையும் அதுவும் பார்க்கும்! நாலாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம்! இவ்வளவுதான் வேறுபாடு!

            எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சுருக்கெழுத்து (short-hand) பயின்ற ஒருவர் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் தான் எழுதிய ஏட்டைக் காட்டினார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வாசிக்க இயலவில்லை. அதாவது, எனக்குத் தெரிந்த ஒரு மொழியின் ஒரு எழுத்து வடிவத்தையே வேரு எழுத்து வடிவ முறையில் எழுதிக் காட்டியபோது, எனக்குத் தெரிந்த மொழியே எனக்குப் புரியவில்லை!

            நாம் பேசும் வார்த்தைகளை விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன. நமக்கு நாலாயிரம் மொழிகளில் ஒன்றோ இரண்டோ விளங்கும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நாலாயிரம் மொழிகளுமே புரியாது, அவ்வளவுதான்.

            மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கே உரிய மொழிகள் இருக்கின்றன; அவற்றின் பேச்சை நாம் விளங்குவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது. நம் மொழி அதற்குப் புரியவில்லை. அதன் மொழி நமக்குப் புரியவில்லை. சரி சமம் ஆகிவிட்டது!

            இறைவனின் பேச்சு எப்படிப்பட்டது? இது பற்றி சூஃபி குருமார்கள் ஆழமான விளக்கம் தருகிறார்கள்.

            இறைவனின் பேச்சு ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ என்று வருணிக்கப் படுகிறது. அதாவது, ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை.’

            அறபி என்னும் சொல்லை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. நாம் அதை உச்சரிப்பதைப் கருவியில் பதிவு செய்து பின்னர் வேகம் இன்றி மெது அசைவில் (ஸ்லோ மோஷன்) ஓடவிட்டால் ஒன்றை அவதானிக்கலாம்.

            ”அ” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது ‘றபி’ என்பது இல்லை. ”ற” என்னும் ஓசை உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அ-பி” என்பது இல்லை. “பி” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அற” என்பது இல்லை. இப்படியான முன் பின் நிலையில் ஓசைகள் தோன்றி மறைவது நம் மொழியின் தன்மை. இறைவனின் பேச்சு இப்படி முன் பின்னாகத் தோன்றுவதும் மறைவதும் அன்று. அஃது எப்போதும் இருப்பது. அவன் ஏகன். அவன் பேச்சும் ஏகமே.

            ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை’ என்றால் என்ன பொருள்? அது மௌனம் என்பதுதான். எல்லா மொழிகளும் தோன்றும் மூல நிலை அதுவே. அதற்கு நீங்கள் எந்த மொழியின் பெயரை இட்டு அழைத்தாலும் பொருந்தும். எந்த உயிரினத்தின் மொழியாக அதைக் குறிப்பிட்டாலும் பொருந்தும்.

            “அறபி” என்னும் சொல்லுக்கு ‘பேச்சு மொழி’ என்று பொருள். ஏனைய மொழிகளை அறபிகள் ‘அஜமி’ என்று அழைத்தனர். ‘அஜமி’ என்னும் சொல்லுக்கு ‘ஊமை மொழி’ என்று பொருள். இது பண்டைய அறபிகளின் மொழிச் செருக்கைக் காட்டுவதாகக் கருதலாம்.

            ஆனால், ஆன்மிகத்தில் அறபி என்பதன் அடையாளம் வேறு. ஞானிகளின் பேச்சு அறபி எனப்படும். அஞ்ஞானிகளின் பேச்சு ’அஜமி’ எனப்படும்.

அதாவது, நாக்கு உள்ளவர்கள் ஒலிப்பதை எல்லாம் பேச்சு என்று மதிக்க முடியாது, மொழி என்று ஏற்க முடியாது. வெளிப்படையில் அதுவும் மொழியாகத் தோன்றலாம், மனித உருவம் போல. ஆனால், எப்படி மனித உருவம் பெற்றிருப்பதலாயே ஒருவரை “மனிதன்” என்று நாம் மதிப்பிட்டுவிட முடியாதோ அதே போல், எழுத்துக்களின் ஓசை இருப்பதாலேயே ஒருவரின் பேச்சை மொழி என்று மதிப்பிட்டுவிட முடியாது.

இறைவனின் ’பேச்சு’ என்பது ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ – ஓசை இலது, எழுத்து இலது. அதாவது, மௌனம். அது வெறுமனே சப்தமின்மை அன்று. அப்படிப் புரிந்து கொண்டால் நீங்கள் மௌனத்தை அறியவில்லை, அதனைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.

மௌனம் நேர்மறையானது; சப்தமின்மை எதிர்மறையானது.

ஒன்றின் இன்மை அன்று மௌனம். அது இருப்பின் பண்புகளில் ஒன்று.

சப்தமின்மை என்பது ஓசை இழப்பு. எனவே, மொழி இழப்பு. மௌனமோ அனைத்து மொழிகளின் ஊற்றுக்கண்.



இறைவனின் பேச்சாகிய மௌனத்தை அடைந்தவர்கள், அறிந்தவர்கள் அதன் தொடர்பில் இருந்து பேசும்போது மொழி அர்த்தமுடையதாகிறது. அதற்கே ’அறபி’ என்று பெயர்.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, நபிகள் நாயகம் பேசியதும் அறபி, அவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்கர் பேசியதும் அறபி, அவர்களின் கடும் பகைவன் அபூஜஹல் பேசியதும் அறபி.

ஆனால், ஆன்மிக விளக்கத்தின்படி நோக்கும்போது, நபியும் அபூபக்கரும் பேசியது அறபி; அபூஜஹல் பேசியது அறபி அல்ல.

அபூஜஹல் பேசிய பேச்சு ஓசையின் கோலத்தில் அறபியாக இருந்தாலும் உண்மையில் அது ‘அஜமி’யே ஆகும். ஆனால், அபூபக்கரின் பேச்சு மட்டுமன்று,  மௌனமும்கூட ’அறபி’தான்.

நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பான பாங்கு ஒலித்தபோது அவரின் உச்சரிப்பு தவறாக இருந்தது பற்றி மதீனாவைச் சேர்ந்த நபித்தோழர்கள் சிலர் குறை பேசினர். ஆனால், அபிசீனியா (எத்தியோப்பியா) நாட்டினர் ஆன - ‘ஹபஷி’ ஆன - பிலாலின் பாங்கொலியை அல்லாஹ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஹஜ்ரத் பிலால் அவர்களின் ஆன்மிக உணர்வு அவ்வளவு உன்னதமாக, ஆழமாக இருந்தது. வெளிப்படையில் மொழி இலக்கணப்படி அவர்களின் உச்சரிப்பு பிழையாகத் தெரியலாம். ஆனால், அந்தப் பிழையான உச்சரிப்பையே இறைவன் சரியான அறபி என்று ஏற்றுக்கொண்டான். ஏனெனில் அது அழியும் உலகின் அறபி அன்று, நித்திய ஜீவனான இறைவனின் அறபியில் இருந்து எழுந்த ஒன்று.

உருது மகாகவி இக்பால் சொல்கிறார்: ”ரெஹ் கயீ ரஸ்மெ அதான், ரூஹே பிலாலி ந ரஹீ” (ஜவாபே ஷிகவா:16). அதாவது,

“பாங்கின் சடங்கு

பேணப்படுகிறது;

பிலாலின் உயிர்மை

அதனுள் இல்லை!”

’பிலாலின் உயிர்மை’ என்பது எது? ஏக இறைவனின் பேச்சில் அவரின் பேச்சு அர்ப்பணம் ஆகிவிட்டது.  ’உமரின் நாவிலும் இதயத்திலும் நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை அருளியுள்ளான்’ (’இன்னல்லாஹ ஜஅலல்-ஹக்க அலா லிசானில் உமர வ கல்பிஹி’ – நூல்: திர்மிதி; ஹதீஸ் எண்: 3682 / (49:78))  என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஆன்மிக நிலை அது.



”தொழுகையில் இருக்கும்போது ஒரு விசுவாசி நிச்சயமாகத் தனது ரட்சகனிடம் (அதாவது, இறைவனிடம் அந்தரங்கமாக) உரையாடுகிறான்” (இன்னல் முஃமின இதா கான ஃபிஸ் ஸலாத்தி ஃப-இன்னமா யுனாஜீ றப்பஹு – நூல்: சஹீஹ் புகாரீ:405; சஹீஹ் முஸ்லிம்: 547) என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்.

உரையாடல் என்றால் இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நிகழ வேண்டும். தொழுகையில் அடியான் இறைவனின் திருமறை வசனங்களைத்தான் ஓதுகிறான். அது இறைவன் அவனிடம் பேசுவதாகும். ஓசை கொண்ட மொழியால் பேசுவது “அக்வால்” எனப்படும். ஓசையும் எழுத்தும் இல்லாத பேச்சுடைய இறைவன் தனது பேச்சினை மனிதர்களின் மொழி வடிவத்தில் வெளிப்படுத்தினான். அதை ஓதும் அடியானின் உள்ளத்திலும் உயிரிலும் ஏற்படும் உணர்வு நிலைகளே அடியான் அவனிடம் உரையாடுவதாகும. அதற்கு “அஹ்வால்” என்று பெயர்.

ஓசை இல்லா பேச்சுள்ள இறைவன் திருமறையின் மூலம் “அக்வால்” கொண்டு தன் அடியானிடம் பேசுகிறான். ஓசையுள்ள பேச்சுள்ள அடியான் “அஹ்வால்” கொண்டு தன் இறைவனிடம் பேசுகிறான். இவை ’அறபி’யின் இரண்டு நிலைகள்.

Thursday, July 15, 2021

தங்காத தங்கம்

 

வாழ்க்கை நிரந்தரம் இல்லை, வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை என்னும் சிந்தனை எழாத மனிதன் இருக்க முடியாது. அதைப் பாடாத கவிஞனும் இருக்க முடியாது.

நிலையாமை பற்றி எத்தனையோ கவிதைகள் உள்ளன. அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை மிக எளிதில் எதிர்மறைத் தொனியைப் பெற்றுவிடலாம். அதில் ஒரு சோர்வும் சோகமும் சுலபமாகச் சேர்ந்துவிடும்.

நிலையாமை பற்றிப் பேசும் கவிதை ஒன்று தன் அழகால் நம்மை வசீகரிக்கிறது என்பது மிகவும் அரிதானது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் அத்தகைய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். “Nothing gold can stay” என்னும் கடைசி வரியே அதன் தலைப்பாக இடப்படுகிறது.

அது மிகவும் சிறிய கவிதை. எட்டு வரிகள் மட்டுமே. ஒவ்வொரு வரியும் மிக நிதானமாக நகரும் கவிதை அது. ஆம், அந்தக் கவிதையை நாம் அவசரமாக வாசிக்க முடியாது. அதன் அகத்திலேயே ஓர் உள்ளார்ந்த நிதானம் இருக்கின்றது.

நிலையாமை என்பது காலத்தால் உணரப்படும் ஒன்று. ’நேற்று இருந்தவன் இன்று இல்லை’ என்பதே இந்த உலகத்தின் பெருமை என்கிறார் திருவள்ளுவர்.

நிலையாமையைப் பேச வரும் ராபர்ட் ஃபிராஸ்ட் காலத்தையே கையில் எடுக்கிறார்:

            இயற்கையின் முதற்பசுமை

            தூய தங்கம்;

            தக்க வைக்கக் கடினமானது

            அவளின் இந்நிறம்.

விடியலில் எல்லாம் பொன்னிறமாகப் பொலிகின்றன. இயற்கையின் முதற் பசுமை மீது மஞ்சள் வெயில் விழுந்து அதைத் தங்கமாகப் பிரகாசிக்கச் செய்கிறது.

இயற்கை என்பது இங்கே வாழ்க்கை என்பதன் குறியீடு என்று விமர்சகர்கள் விளக்கம் தருகின்றனர். முதற்பசுமை என்பது இளமைப் பருவம். தங்கம் என்பது வாழ்வின் மதிப்பு. தங்கமே உலோகங்களில் மதிப்பு மிக்கது. அதுபோல் இளமைப் பருவமே வாழ்வில் மிகவும் மதிப்புடைய காலம்.

வைகறைப் பொழுதில் சேவல் கூவும் காட்சியை வருணிக்கும் வள்ளலார் “பொற்கோழி கூவிற்று” என்கிறார். கோழி என்பது சேவலைக் குறிக்கும் பொதுப் பெயர். அது என்ன பொற்கோழி? அதிகாலையில் பொன்னிற வெயில் தன் மேல் விழுவதால் சேவல் தங்கத்தால் ஆனது போல் தோன்றுகிறதாம். அதனால் அது பொற்கோழி!

இந்த வரியைத் தலைப்பாக வைத்து ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ள திருலோக சீதாராம் இதற்கு ஒரு நயமான விளக்கம் நவில்கிறார். பொன் என்பது பணத்தை, செல்வத்தைக் குறிக்கும். காலை விடிந்ததும் மனிதர்களில் பலரையும் எழுப்பிவிடுவது அவர்கள் மனத்தில் உள்ள பணம் சேர்க்கும் ஆசைதான். பொன் என்னும் கோழியே அவர்களின் உள்ளத்தில் கூவி எழுப்புகிறது என்கிறார் அவர்.

ஆனால், அதிகாலையின் அந்தப் பொன்னிறம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அதுபோல் இளமைப் பருவம் என்பதும் சீக்கிரமே போய்விடுகிறது.

இயற்கையின் வண்ணங்களிலேயே இந்த விடியற் பொழுதின் தங்க நிறம்தான் தக்க வைக்க மிகவும் கடினமானது என்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட். ஏன் இதைச் சொல்ல வேண்டும்? காரணம் உண்டு. தம் வாழ்வின் பருவங்களில் மனிதர்கள் தக்க வைக்க நினைப்பது இளமைப் பருவத்தையே. பிள்ளைப் பருவத்தில் இருக்கும்போது எப்போது வளர்ந்து வாலிபர் ஆவோம் என்று ஆசைப்படுகிறார்கள். முதுமை எட்டிப் பார்க்கும் வயதில் இளமையை இழுத்துப் பிடித்து வைக்க என்னென்ன வழிகள் என்று எண்ணுகிறார்கள்.

அடுத்து ஃபிராஸ்ட் சொல்கிறார்:

                    அவளின்


    கொழுந்து இலை


    ஒரு மலர்;


    ஆனால் அது

    சொற்ப நேரமே.

விடியலின் பொற்கதிர்கள் செய்யும் ஜாலத்தால் கொழுந்து இலையே ஒரு மலரைப் போல் காட்சி தருகிறது. எத்தனை அழகான காட்சிப் பிழை! புலன்களை ஏய்க்கும் மாய மயக்கு.

இளமைப் பருவம் என்பது எல்லாருக்குமே உண்மையான மலராக இருப்பதில்லை. இளமையில் எல்லாருக்குமே தம் வாழ்க்கை மலர்ந்து மணம் வீசப் போகிறது என்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. ஆனால், அரிதாக ஒரு சிலரின் வாழ்க்கை மட்டுமே மலர்கிறது. பலரின் வாழ்க்கை வெறும் இலையாகவே இருந்துவிடுகிறது.

            பிறகு

            இலையாகத் தணிகிறது

            இலை.

நான் பூ இல்லை, வெறும் இலைதான் என்று வாழ்க்கை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆ! எத்தனை வேதனையான ஒப்புதல்!

            அப்படித்தான்

            ஏதேன் தோட்டம்

            சோகத்தில் மூழ்கியது.

ஒவ்வொரு இளைஞனும் ஆதம், ஒவ்வொரு இளைஞியும் ஏவாள். இளமைப் பருவம் அவர்களுக்கு சொர்க்கத்தின் ருசியைக் காட்டுகிறது. அப்போது அவர்களின் வாழ்க்கை ஏதேன் தோட்டமாகவே இருக்கிறது. ஆனால் அது நிலைப்பதில்லை. வாழ்வின் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுகிறது. சொர்க்க இழப்பின் சோகம் கவிந்து விடுகிறது.

            அப்படித்தான்

            பகலாகி விடுகிறது

            விடியல் விரைவில்;

            நிலைப்பதில்லை

            பொன்னான எதுவும்.

என்று தன் கவிதையை முடிக்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட்.

நாள் என்பது வாழ்வின் குறியீடு என்றால், விடியல் என்பது இளமைப் பருவம், அந்தி என்பது மரணம். வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசியிருந்தால் அவர் அந்தி நேரத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார். இளமை நிலையாமை பற்றிப் பேசுவதால் விடியற் பொழுதைப் பாடுகிறார்.

ஒரு நாள் முடிவதில் இல்லாத சோகத்தை அதிகாலையின் பொன்னிற அழகு மாறிப்போவதில் உணர்கிறது கவியின் உள்ளம்.

 

 

Tuesday, January 26, 2021

தேநீர்க் கடையிலொரு ஆட்டுக்குட்டி

 


(’தட்டப்பாறை’ நாவல் பற்றி)

முஹம்மது யூசுஃப் அவர்களின் மூன்றாம் நாவலான “தட்டப்பாறை” நூலினை யாவரும் பதிப்பகத்தார் அனுப்பி வைத்திருந்தனர். 09 ஜனவரி 2021-இல் தூதஞ்சலில் வரப் பெற்றேன். நான்கு நாட்களில் சுடச்சுடப் படித்து முடித்து வாசிப்பனுபவத்தை எழுதியிருக்க வேண்டும். சூழல் இடம் தரவில்லை. இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

            ”தட்டப்பாறை”-யை எழுதிக் கொண்டிருக்கும்போதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார் யூசுஃப். தாய்த் தெய்வ வழிபாட்டு மரபு குறித்தும் கான் வாழ்வியல் பற்றியும் பரக்க வாசித்துக் கொண்டிருப்பதாக அவர் முகநூல் இடுகைகள் இட்டபோது நானும் அசட்டுத்தனமாக ஏதேதோ சொல்லி வைத்தேன். நாவலைப் படித்தபோது வாயடைத்துப் போய்விட்டது. அசுர முயற்சி இது.

            நாவல் வரப்பெற்ற அன்று ஆறாம் அத்தியாயம் வரை படித்தேன். அப்போதே யூசுஃபுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்: “72 பக்கங்கள் வாசித்திருக்கிறேன். உள்ளே இழுத்துக் கொண்டது. இதுதான் நீங்கள் எழுதிய மூன்றில் எனக்கு நம்பர் ஒன். ஏனெனில், இது என் மண், உடல், அகநிலம் பற்றியது.”

            ஆம். “வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம்” என்று முஹம்மது யூசுஃபும் கூறுகிறார்.

            காடு என்னும் பொருண்மையின் மீது எனக்குத் தனி ஈர்ப்பு எப்போதுமே உண்டு. குறிப்பாக மலைக்காடுகள். காடுகளைக் களமாக வைத்து புதினம் புனைவதாக யூசுஃப் சொன்னபோது ஜெயமோகன் எழுதிய ”காடு” நாவலை நான் சுட்டியிருந்தேன். ஆனால் இது வேறு என்று யூசுஃப் சொல்லிவிட்டார். உண்மைதான்.

            எவ்வளவோ நாவல்கள் வாசித்ததில் ‘காடு’ என் மனத்தில் ஒரு தனியிடம் பிடித்துக் கொண்ட ஒன்று. அதில் ஒருவித ’ரொமாண்டிசிசம்’ உண்டு. குறிஞ்சித் திணையின் பழங்குடிப் பெண்ணைக் காதலித்த சங்கக் கவிஞன் கபிலனின் மனநிலையை நம்மில் கொண்டு வந்துவிடும் மாய வித்தையை அந்நாவல் செய்யும். ஆனால், யூசுஃபின் “தட்டப்பாறை” தரும் கானகச் சித்திரம் வேறு.

            அது காட்டின் அக ஒளி. இது காட்டின் அக வலி.

            இந்த நாவல் உணர்த்தும் செய்தியைச் சுருக்கமாக எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தபோது ஒன்று தோன்றியது:

            காட்டு வேடனான, பழங்குடி இனக்குழுத் தலைவனான குகனை இரவிக் குலத் தோன்றல் இராமன் ஆரத் தழுவி அணைக்கும் இடத்தில் கம்பனின் கவி மேதைமை வரைந்த வரி இது:

            ”வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா”

            முஹம்மது யூசுஃபின் “தட்டப்பாறை” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது: “மானுடம் இன்னும் வெல்லவில்லை.”

            நாகரிகத்தின் பெயரால் வேறுள குழுக்கள் யாவும் ஆதி மானுடனான கானகனை அடிமை செய்ததில், செய்து வருவதில் மானுடம் தோற்கிறது.

            கம்பனின் கவியுளம் உணர்வெழுச்சியில் உரைத்த வரியாகலாம் அது. ஆனால் எதார்த்தத்தில் மானுடம் வெல்வதற்கு அது போதாது.

            வரலாற்றின் கசப்பை அந்தக் கற்கண்டின் சிறுதுண்டு மாற்றி விடாது.

            இன்று (25-01-2021) முகநூலில் முஹம்மது யூசுஃப் தன் இடுகையில் தான் எழுதிய மூன்று நாவல்களின் ஊற்றுக் கண்ணாக அமைந்த தருணங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “விமர்சனம் எழுதிய யாருமே இன்னமும் கதையைச் சொல்லலை” என்று அங்கலாய்த்திருக்கிறார். நியாயமே இல்லை!

            அப்படி ஒரு பத்துப் பத்திகளில் நாவலின் கதையைச் சொல்லிவிட முடியும் என்றால் அது எப்படி நாவலின் வெற்றியாகும்? ஐம்பது அறுபது பக்கங்களில் கூட இதன் கதையைச் சொல்ல முடியாது என்பதுதானே இதன் வெற்றியே? நாவலின் கதை என்ன என்று கேட்போர்க்கு ஒன்று சொல்வேன்: நாவலை வாசியுங்கள்.

            நாவல் நெடுகிலும் நம் சிந்தனையைத் தூண்டுகின்ற தகவல்கள் நிறைய உண்டு. அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

            இது என்ன வகையான நாவல்? என்னும் கேள்விக்கு டாக்கு ஃபிக்‌ஷன் (Docufiction) என்று பதில் தருகிறார் யூசுஃப். தமிழில் ’ஆவணப் புனைவு’ என்று சொல்லலாம். இக்கதையின் தலைமை மாந்தருள் ஒருவனான டானியல் இந்தியாவின்,  குறிப்பாகத் தென்னகத்தின் மலைவாழ் பழங்குடியினர் குறித்து ஆவணப் படம் எடுக்கும் பணியில் முயல்பவனாகவே வருகிறான். (இங்கே இன்னொன்றையும் சொல்லிவிடுதல் நலம். இந்நாவலை எழுதியவர் முஹம்மது யூசுஃப் என்னும் முஸ்லிம்தான். ஆனால் இது இஸ்லாமிய நாவல் அல்ல. அவர் எழுதிய முதலிரண்டு நாவல்களிலும் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் முஸ்லிம்களே. கதைப் பின்னணியும் சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் என்று அமைந்தன. ஆனால் இந்நாவலில் முஸ்லிம் சமூகப் பின்னணி கிடையாது. அபு என்றொரு கதாப்பாத்திரம். அவனிடமும் பெரிதாக இஸ்லாமியச் சமய வெளிப்பாடுகளை எதிர்பார்த்து இந்நாவலைக் கையில் தூக்க வேண்டாம். இதில் வரும் கதாப் பாத்திரங்களில் முதன்மை நிலை வகிக்கும் தேவசகாயமும் டானியலும் கிறித்துவர்கள். அவர்கள் இருவரும் கிறித்துவ மிஷனரியில் வளர்க்கப் பட்டவர்கள். நாவலின் திருப்புமுனையாக வரும் இருளன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். ஆனாலும், யூசுஃப் எழுதிய மூன்று நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது இதுதான். சஹ்ருதயர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம். சொல்லித் தெரிவதற்கில்லை.)



            இந்த நாவல் நம்மிடம் பல்துறை சார்ந்த கண்ணோட்டத்தைக் கோருகிறது. இந்நாவலை நீங்கள் புரிந்து கொள்ள சூழலியல் (Ecology), இனவரைவியல் (ethnography), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), இலக்கிய மானுடவியல் (Literature Anthropology), சமயத் தொன்மவியல் (Religious Mythology), மூல மொழியியல் (Nostratic Studies) ஆகிய துறைகளின் அறிவு என்பதினும் உணர்வு தேவைப்படும். ஆம், இவ்வத் துறைகள் சார்ந்த கணக்கெடுப்புகள், விவரச் சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் என்பதெல்லாம் மலையளவு கடலளவு நடைபெற்றே வந்திருக்கின்றன. அறிவு உள்ளது, உணர்வு (Consciousness) இல்லை என்பதுதான் குறை. என்ன உணர்வு தேவை? நாவல் கிடைத்தவுடன் அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கம் போல் என் பெயரையும், தேதியையும் கிழமையையும் எழுதி வைத்தேன். அத்துடன் இன்னொன்றும்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்.

            கணியன் பூங்குன்றன் என்பதுதான் அந்த மூதாதையின் பெயரா? கணியன் என்றால் கணித்துச் சொல்லும் சோதிடனா? அப்படியும் சொல்கிறார்கள். கணியன் என்பது பழங்குடிப் பெயர் என்றும் பகரலாம், புரிந்து கொள்ளலாம். பூங்குன்றம் என்பது அவன் வாழ்ந்த ஊரின் பெயர். (மகிபாலன்பட்டி?). ‘ஆர்’ என்று பின்னொட்டி அழைக்கிறோமே அதில் இருக்கிறது அந்தப் பழங்குடி மூதாதைக்கு நாம் தரும் மரியாதை. “உலகில் உள்ள இலங்கையைச் சார்ந்த மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கும், என் தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்” என்று எழுதியுள்ளார் முஹம்மது யூசுஃப்.

            இந்த நாவலின் ஒட்டு மொத்தச் செய்திகளையும் ஒரு புள்ளியில் குவித்துச் சுட்டிக்காட்ட முடியுமா? அப்படி ஏதாவது குறிப்பு இந்த நாவலுக்குள் இருக்கிறதா? என்று கேட்டால். முயலலாம். நாவலின் 31-ஆம் அத்தியாயத்தின் இறுதியில் (423-ஆம் பக்கத்தில்) கிடைக்கிறது விடை: “செப்புச் சாமானும் மரப்பாச்சி பொம்மைகளும் வரையாடும்.” இந்த மூன்றையும் தமிழகம் தொடங்கி உலகம் முழுவதும் நிலம் சார்ந்து விரித்துச் சென்றால் இந்த நாவலின் கதையாக மலரும் என்று படுகிறது. செம்பு என்பதுடன் மரகதமும் தங்கமும் வைரமும் இத்தியாதி உலோகச் செல்வங்களும் விரிவடையும். மரப்பாச்சி என்பதுடன் ஈத்தல், வன்னி, பனை என்று பற்பல மரங்கள் விரிவடையும். வரையாடு என்பதுடன் குறும்பாடு, கன்னி, கொடி, மோளை, பள்ளை, செம்போரை என்று ஆட்டின் பல்வேறு வகைகளும் விரிவடையும். இவற்றுடன் இந்த இயற்கை வளங்களுடன் இயைந்து வாழ்ந்த பல்வேறு பழங்குடிகள் வந்து நிற்பர். அவர்களை அடிமைகளாக்கிய ஆதிக்க அரசியல். அதை நிகழ்த்தியவர்களிடம் இருக்கும் சாதியம் என்னும் கட்டமைப்பு என்று விரிகின்றது இந்நாவலின் கதை.

            நாவலை வாசிக்கையில் மேலதிகமாக என் சிந்தனையில் பட்டவை, நான் எழுதி வைத்த குறிப்புகள் ஆகிய்வற்றில் சிலவற்றை சொல்ல நினைக்கிறேன்.

            இருளர் சமூகம் வாழ்ந்த பெருங்காடு கார்ப்பரேட் சாமியாரிடம் சிக்கிக் கொள்கிறது. இருளர்கள் வேறிடத்திற்குத் துரத்திவிடப் படுகின்றனர். அச்சூழலில், அழுகின்ற தன் குழந்தைக்குக் கதை சொல்கிறாள் பழங்குடித் தாய். அவ்விடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “அவளுக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் சொல்லத் தெரியாது. எட்டுத் திசையில இருந்து ஆளுங்க வந்தாங்கன்னு சொல்லுவா.” இப்படித்தான் அமெரிகாவில் கொலம்பசின் கப்பல் வந்து இறங்கியபோது அங்கிருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் உணர்ந்திருப்பார்கள். மெல் கிப்சன் இயக்கிய “அபோகேலிப்டோ” திரைப்படத்தில் வரும் இறுதிக் காட்சியை இவ்வரி எனக்கு நினைவூட்டிற்று. கொலம்பஸும் அவரது ஆட்களும் வந்திரங்கிய கப்பலைச் சுட்டிக்காட்டி அது என்ன என்று பழங்குடிப் பெண் தன் கணவனிடம் கேட்கிறாள். “அது என்னன்னு தெரியல. அது ஆட்களை இங்க கொண்டு வருது” என்று அவன் சொல்கிறான். உலகெங்கிலும் பழங்குடியினர் ஒன்றுதான்.


            
ஏரலுக்கு அருகில் இருக்கும் மொட்டச்சி குடியிருப்பு என்னும் கிராமத்தில் புல்லாங்குழல் செய்யும் கலைஞர் பற்றி ஆறாம் அத்தியாயத்தில் பேசுகிறார் யூசுஃப். தஞ்சாவூர்ப் பகுத்யிலும் புல்லாங்குழல் செய்கிறார்கள் என்பது என் பால்ய காலத்து நினைவு. சரி, ஒரு முக்கியமான குறிப்பு. “திருநெல்வேலிக்கு பழைய பேரு ’வேணுவனம்’-தான்.” இதனினும் பழைய பெயர் இருந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகிக்கிறேன். மூங்கில் வனம்? இருக்கலாம். வேணுவனம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பெயர்களே தம்முள் ஒரு நெடிய வரலாற்றை வைத்திருக்கின்றன. வேணுவனம் என்பது வேட்டுவப் பழங்குடி வாழ்ந்த காலத்துப் பெயராகவும் பிறகு அது மருதத் திணையின் நாகரிகம் ஏற்பட்டதும் நெல்லையூர் ஆகி அதன் பின் வருண வர்க்க கட்டமைப்புகள் இறுகிய நிலையில் திரு-நெல்-வேலி (திரு- பிராமணீயம் / புரோகிதம்; நெல் – வேளாளர் – விவசாயம்; வேலி – உரிமையாளர் – பண்ணையார்) என்றாகியிருக்க வேண்டும். அதேபோன்று, மான் கூட்டம் – மரை – மேய்ந்திருந்த இயற்கையான வனப்பகுதி ‘மரைக்காடு’ என்பது ‘மறைக்காடு’ என்றாகித் திரு என்பதும் இடப்பட்டுப் பின்னர் ‘திருமறைக்காடு’ என்பதும் வடமொழியில் பெயர்க்கப்பட்டு “வேதாரண்யம்” ஆகிவிட்டது. இதுபோல் எத்தனை எத்தனை ஊர்ப்பெயர்கள் மாறினவோ? அவை எல்லாம் பழங்குடியினரிடம் இருந்து நிலங்கள் ஆதிக்க சக்திகளின் கைக்கு சென்று சேர்ந்த வன்முறை வரலாற்றின் அடையாளங்கள்.

            செமித்தியச் சமயங்கள் என்று குறிப்பிடப்படும் யூதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மூதாதை இணையரையே சுட்டுகின்றன: ஆதம் – ஹவ்வா (ஆதாம் ஏவாள் – Adam and Eve.) சொர்க்கத்தில் இருந்து ஆதம் நபி இறக்கப்படட இடம் சிரந்தீப் என்று அழைக்கப்படும் இலங்கை (ஈழம்) என்று இஸ்லாமியச் சமய மரபு கூறுகிறது. எனில், உலகின் முதல் மாந்தர் தமிழராதல் வேண்டும் என்னும் கோட்பாட்டுடன் ஆதி மனிதன் குறித்த தேடல்களை நாம் நிகழ்த்துவதில் தமிழன் என்கிற முறையில் தனி ஈடுபாடு எனக்குண்டு. அந்த ஈடுபாடு முஹம்மது யூசுஃபுக்கும் இருப்பதை இந்த நாவல் நெடுகிலும் பார்க்க முடிகிறது. அந்தக் குறிப்புக்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்து பார்க்க வேண்டும்.

            உகாய் என்றொரு மரம். அதற்கு “உவா” என்றும் பெயருள்ளது. பிலு என்கிறது மகாபாரதம். அறபிகள் அதனை அராக், மிஸ்வாக் என்னும் பெயர்களால் அழைக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் அந்த மரம் அரேபியாவிலும் இருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்வியல் பதிவில் அந்த மரம் இடம் பெற்றுள்ளது (புகாரி: 3406) என்னும் செய்திகளை யூசுஃப் தருகிறார். “உவா” என்பது பாலை நில மரம். தமிழ் மரபில் பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை. எனில், உவா என்பது ஹவ்வா என்னும் முதற்பெண்ணைக் குறிப்பதாகலாம். ஹவ்வா என்பது அறபி உச்சரிப்பு. தமிழில் அது அவ்வை / அவ்வா. ஆங்கிலத்தில் Eve. ஆங்கிலத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு ஒலிபெயர்த்து ஏவாள் என்று ஆக்கியுள்ளார்கள். இது ஒரு தொடர்புத் துலக்கம். இப்படி பன்னூறு சொற்களுக்கு இடையிலான தொடர்புகள் ஒவ்வொன்றாகத் துலங்கி அவை யாவும் ஒரே சித்திரத்தை வரைந்து காட்டும்போது ஏற்படும் உணர்வு அற்புதமானது.

            ”ஆதம் – ஏவாள் – பாம்பு (சாத்தான்) – விலக்கப்பட்ட கனி” என்பது ஆதி மனித இணை குறித்த யூத கிறித்துவ இஸ்லாமியத் தொன்மக் கதையின் குறிப்புக்கள் (சாத்தான் பாம்புருவம் கொண்டிருந்ததாக இஸ்லாமியப் பிரதியில் குறிப்பில்லை.) இது பற்றி இன்னொரு இடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “Python வார்த்தைக்கு அரபி அர்த்தம் ‘அல் சஅபன்’. Sapan மருவி செர்பன் (லத்தீன்) ஆனது. பின் அது வழக்கில் serpent ஆனது. ஆக, மலையும் மலை சார்ந்த “பூமித்தாயின் முதல் கருவறை” என கருதும் இலங்கையில் ஆதம் மலை உள்ளது. ஊவா மாகாணமும் உள்ளது.” (ப.97). இலங்கையின் இந்தப் பகுதிகளில் அதிகமாக ”விளா” மரங்கள் உள்ளன. விளாம்பழத்தை ஆங்கிலத்தில் Wood Apple என்றே அழைக்கிறார்கள். “இனி மீதம் இருப்பது ஆப்பிள் மட்டுமே. நான் அந்த ஆதிக் கதைக்கு விளாம்பழத்தை (Wood Apple) சாட்சியாக முன்வைக்கிறேன் இப்படியும் இருக்கலாம் என்ற அதீத ஆசையில்.” (ப.97) என்கிறார் யூசுஃப்.

            நாவலின் பத்தாம் அத்தியாயத்திற்கு இலங்கையின் நுவரெலியா (அறபியில் நுவரா எலியா என்றால் ‘வசந்த காலத்தில் பூக்கும் முதல் பூ’ என்று அர்த்தமாம்) என்னும் பெருங்காடுதான் களம். அங்கே, ‘உலகப் பிரசித்திப் பெற்ற ஆதி அனாதை’ என்று யூசுஃப் குறிப்பிடும் ஏவாள் தன் முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். கருவுற்றது முதல் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவள் எதிர்கொள்வதும் பேறுவலி ஏற்பட்டு - ‘சுயப் பிரசவம்’ என்று ’கருவாச்சி காவிய’த்தில் வைரமுத்து சொல்வது போல் – பிள்ளை பெற்றெடுப்பதுமான காட்சிகள் அடிவயிற்றில் பந்துருள வைக்கின்றன. (பிரசவத்தின் போது ஆதி பிதா ஆதம் நபி அங்கே அருகில் இருக்கவில்லையா? என்று யோசிக்க வேண்டியுள்ளது.)

            உலகின் முதல் பெண் ஆப்ரிகாவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்தான் என்று மரபணு ஆய்வு ஒன்று கண்டறிந்திருப்பதாக நாளிதழில் வந்த செய்தி ஒன்றை முன்பு கண்டிருக்கிறேன். “மைட்டோகாண்ட்ரியா (Mitochondrial Eve) எனும் விஞ்ஞான கூற்றுப்படி அவள் ஒரு கறுப்பு நிறப் பெண். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அவள் நடந்து சென்று சேர்ந்த இடம் கிழக்கு ஆஃப்ரிக்காவின் பாலே மலைக்குன்றின் (Bale mountain – Harenna forest) ஹரென்னா காடு” (ப.140) என்று எழுதுகிறார் யூசுஃப். இது தொடர்பாக இன்னொரு முக்கியமான செய்தியையும் தருகிறார். ஃபிரான்ஸிஸ் புருட்டன் என்பவர் மரபணு அடிப்படையில் மனித குலப் பரவலை ஆராய்ந்து ஒன்று சொல்கிறார்: “ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை.” பின்னாளில், இத்தாலிய மரபணு ஆராய்ச்சியாளர் லூகாகவாலி சக்போர்ஸா ஆப்பிரிகாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஆராய்ந்த பின் தமிழகத்தில் தனது ஆராய்ச்சியை நிகழ்த்தினார். தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ’விருமாண்டி’ என்பவரை ஆய்வுக்குட்படுத்தினார். கச்சிதமாகப் பொருந்தியது. “ரிச்சர்ட் பிரான்ஸிஸ் புருட்டன் இன்று இருந்திருந்தால் அவர் எத்தியோப்பிய ஹராராவில் தங்கி இருந்ததற்குப் பதில் தமிழகத்தில் தேனியைச் சுற்றி அலைந்திருப்பார்.” (ப.178) என்கிறார் யூசுஃப். இது போன்ற ஆய்வுச் செய்திகளை எழுதுவதற்கு அவர் ஒரு பயோமெடிக்கல் இஞ்சினியர் என்பது கை கொடுக்கிறது. மொழி ஆய்வென்று இந்தியாவுக்கு வந்தவர்கள் வடநாட்டில் மட்டுமே கூடாரம் போட்டுவிட்டு இந்தியாவில் அனைத்துக்கும் மூல ஊற்று சமற்கிருதமே என்று முடிவு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தமிழகத்தின் மீது ஆய்வுப் பார்வை விழவும் உண்மை உலகுக்குச் சொல்லப்படவும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மானுடவியல் ஆய்விலும் இதுதான் நிலை.

            தமிழரின் தோற்றமும் பரவலும் என்று ஆய்வு செய்யப் புகுந்தால் நான்கைந்து கோட்பாடுகள் ஆதாரங்களின் பலத்துடன் நம் முன் வந்து நிற்கும். குமரிக்கண்டம் (லெமூரியா) என்னும் கோட்பாடு மிகப் பிரசித்த்மான ஒன்று. இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவியிருந்தனர், பின்னர் ஆரியரின் ‘வருகை’யால் கீழ் நோக்கி அடைபட்டனர் என்பதொரு பார்வை. அண்மையில் இரா.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்று நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் உறுதிப்படுத்துகிறது. துறைமுகப் பொறியாளர் பா.பிரபாகரன் அவர்கள் செய்திருக்கும் ஆய்வு (’குமரிக்கண்டமா?சுமேரியமா?) தமிழரின் ஆதிநிலம் சுமேரியா என்றும், மெசப்பொட்டோமியாவில் இருந்த யூஃப்ரேட்ஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள்தாம் பழந்தமிழிலக்கியம் குறிப்பிடும் குமரியாறும் பஃறுளியாறும் ஆகும் என்றும், கிரெட்டெ (Crete) தீவுகளில் தமிழர் வாழ்ந்த தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன என்றும், அதன் முன்பு ஆட்களே இல்லாத நிலையில் இந்தியாவிற்குள் முதன் முதலில் குடியேறியவர்கள் சுமேரியத்திலிருந்து வந்த தமிழரே என்றும் காட்டுகின்றது. இவையெல்லாம் இன்னும் தொகுத்து முடிக்கப்படாத பெருங்கதை ஒன்றின் சிறு சிறு பகுதிகள் என்றே கருதுகிறேன். அந்த ஒற்றைப் பெருங்கதையை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் வாசித்துப் பார்ப்பதற்கு வசதி நல்கும் நூல்களில் முஹம்மது யூசுஃபின் இந்த நாவலும் ஒன்றாகிறது.

            உலகில் மருதத் திணையின் விவசாய நாகரிகத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் தமிழர்களே என்று ஏற்றால், தமிழர்கள் பாரசீகப் பகுதிகளில் இருந்தனர் என்பதையும் ஏற்க வேண்டும். “வேட்டையாடி விவசாயகுடியா மாறுன நிலம் பாரசீகம்தான்.  … … … விவசாயம்னு வரலாற்றில் எதைத் தேடுனாலும் மெசபடோமியா, யூப்ரடிஸ், டைகிரிஸ்னு வளைகுடா மண்ணைத்தான் சாட்சியா காட்டும்” (ப.193) என்கிறார் யூசுஃப்.

            ஆதமுக்கும் ஏவாளுக்கும் வெவ்வேறு மரபுகளில் உள்ள வெவ்வேறு பெயர்கள் யாவை? இந்நாவலில் விடைகள் உள்ளன. அத்தகைய பெயர்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்யலாம். “உலகின் ஆதி அனாதையான ஆதமின் மனைவி சுசாவின் காலடி சுமக்கும் நினைவுத் துகள்கள்” (ப.204) என்று யூசுஃப் தரும் குறிப்பு ஓர் உதாரணம். ஆதிப் பெண்ணுக்குத் தமிழில் எத்தனைப் பெயர்eeகள் இருக்கலாம், மூதாதையின் மீதான மதிப்பு என்பது காலப்போக்கில் தெய்வமாக்குதல் (deification) என்னும் நிலையை எட்டி அதன் மீது தத்துவக் குறியீட்டாக்கங்களும் தொன்மங்களும் ஏற்றப்பட்ட பிறகு அது என்னென்னெ பரிணாமங்களை அடைந்திருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்யும்போது இலங்கை மற்றும் தமிழகத்து ஊர்ப்பெயர்களே ஆதன் என்னும் ஆதம் (திரிபு: ஆதாம்) மற்றும் அவரது மனைவியான அவ்வை என்னும் ஹவ்வா ஆகியோரின் அடையாளங்களை நமக்குச் சுட்டுவதைக் காணலாம். பாய் நெசவுக்குப் பெயர் போன பத்தமடை என்னும் ஊரினருகே இருக்கிறது ‘மூலச்சி’ என்னும் சிற்றூர். ‘மூலச்சி’ என்பதே முதற் பெண்ணைக் குறிக்கும் சொல் அல்லவா?

            மூலச்சி என்னும் ஊரைப் பற்றிப் புவிசார் குறிப்பு ஒன்றை யூசுஃப் தருகிறார்: “அகத்திய மலைக்கும் மாஞ்சோலைக்கும் இடையில் உள்ள ஊர் என்பதால் வாலில் வெண்ணிற பட்டை கொண்ட பெரிய செதில்களை உடைய பனை வீரியன் பாம்பு தலை தூக்கி செங்குத்து வாக்கில் கண் விழித்தபடி அவுரிக்காட்டின் வாசலில் இருந்து மூலச்சி ஊரையே பார்த்துக் கொண்டிருந்தது” (ப.241). இந்த வரிக்கு அருகில் நான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் இவை: ”அகத்தி – வீட்டுக்காரி (மனைவி) – அகத்திலிருந்து (விலா எலும்பிலிருந்து) வெளிப்பட்டவள் – ஹவ்வா (மூலச்சி – Eve) – அகத்தியன் = ஆதம் – மாஞ்சோலை = பெருஞ்சோலை (ஏதேன்) - பனை வீரியன் (பாம்பு – Serpent) – பனை (நுங்கு – Ice Apple) – மூலச்சி = மூத்தவள் = ஜித்தா (பாட்டி)”  சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆதம் நபி இலங்கையிலும் (ஆதம் மலை = சிவனடிபாத மலை) ஹவ்வா எனும் ஏவாள் ஜித்தாவிலும் இறக்கப் பட்டனர் என்பது இஸ்லாமியச் சமயம் தரும் செய்தி. அறபகத்தில் இன்று ஜித்தா என்றொரு நகரம் இருக்கிறது. ஜித்தா என்றால் மூதாட்டி (கிழவி, பாட்டி) என்று பொருள். இப்பொருள் ஹவ்வா என்னும் பெயரின் ஒலிக்கு அருகில் வர வேண்டுமெனில் தமிழில்தான் வரும். அவ்வா என்றால் பாட்டி என்று பொருள். மூலச்சி என்னும் ஊரே அவ்வா இறக்கப்பட்ட ஊராக ஏன் இருக்கக் கூடாது? அதனை அறபியில் ஜித்தா என்று குறிப்பிட்டிருக்கலாம். அதே பெயர் பின்னர் அறபகத்தில் உள்ள ஒரு ஊருக்கும் இடப்பட்டிருக்க வேண்டும். ஆதாமும் ஏவாளும் அருகருகில்தான் இறங்கியிருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரே இடத்தில் இறங்கினார்கள் என்று கருதுவதே பொருத்தம். ஆதம் மலைக்கும் மூலச்சி ஊருக்குமே கூட இடைவெளி அதிகம்தான்.  இதை இன்னும் ஆராய வேண்டும்.

            இந்தியாவில் 645 பழங்குடிகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது என்கிறார் யூசுஃப். அவற்றில் ஒரு நூறு பெயர்களையாவது இந்த நாவலில் சுட்டியிருப்பார் என்று கருதுகிறேன். அதே போல், பழங்குடியினர் வாழும் ஊர்ப்பெயர்கள் என்று குறைந்தது நூறு ஊர்களாவது இதில் சுட்டப்பட்டிருக்கலாம். அவை அனைத்தையும் இங்கே திரட்டி விமரிசனம் எழுதினால் அது ஒர் தனி நூலாக விரிந்துவிடும். அது ஒரு பேராய்வுக்கான களம். பழங்குடியினரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என்று எண்ணி மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி மற்றும் ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் நூற்களை எடுத்த்ப் புரட்டினால் தலை சுற்றுகிறது. ஓரிரு நாட்கள் படித்துவிட்டுச் சில பக்கங்களில் சொல்லி முடிக்க வேண்டிய செய்திகள் அல்ல.



            நாவலில் ஓரிடத்தில் ‘பைம்பொழில்’ என்னும் கிராமத்தில் ஒரு தேநீர்க்கடையில் வரையாட்டுக் குட்டி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அது டானியலுடன் கை குலுக்குகிறது. ஆடு என்பது ஆதி மனிதனின் வாழ்வியல் சாட்சியங்களில் ஒன்று. அதனைப் பொன்னிழையின் ஒரு முனையாகப் பிடித்துக் கொண்டு தேடலை நிகழ்த்தி உலகெங்கிலும் உள்ள ஆட்டு வகைகளில் வழியே மானுட வரலாற்றைப் பற்றிய புதிய திறப்புக்களை டானியல் கண்டடைகிறான். வாசிப்புச் சுகம் (Pleasure of the text) பொழுது போக்கு என்றெல்லாம் சொல்லித்தான் நீங்கள் நாவல் வாசிப்பீர்கள் எனில் இந்த நாவல் தேநீர்க் கடையில் உங்களுடன் கை குலுக்கும் வரையாட்டுக் குட்டி என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதன் வழியாக நீங்கள் அறியவும் உணரவும் வேண்டியவை இன்னும் ஏராளம்.

            ’மணல் பூத்த காடு’ குறித்து முன்பு நான் எழுதிய விமரிசனக் கட்டுரையை ஆய்விதழ் ஒன்றுக்காக ஆராய்ச்சிக் கட்டுரையாக மாற்றியமைத்தபோது அதன் முடிவுரையில் ஒரு கருத்தினை எழுதினேன். அதை இங்கே குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்:

            நவீனத் தமிழிலக்கிய உலகில் முஸ்லிம் புனைகதையாளர்கள் என்று போற்றப்படும் தோப்பில் முகம்மது மீரான், அர்ஷியா, மீரான் மைதீன் முதலியோரின் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் ஒன்றை முஹம்மது யூசுஃப் பெறுவார் என்னும் நம்பிக்கையை நல்குகிறது “மணல் பூத்த காடு” என்னும் அவரது முதல் நாவல். முதல் நாவலின் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போன எழுத்தாளர்கள் உண்டு. ஆனால், முஹம்மது யூசுஃப் தொடர்ந்து வெளியிட்ட “கடற் காகம்” மற்றும் “தட்டப்பாறை” ஆகிய நாவல்கள் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வைக்கின்றன. அதிலும், முஸ்லிம் சமூக வாழ்வியல் குறித்து இதுகாறும் சொல்லப்படாத கூறுகளைக் கையாளவதும் அதற்குத் தனது பரந்து பட்ட வாசிப்பின் பேருழைப்பை ஒரு துணைக் கருவியாகக் கொள்வதும் அவருக்குத் தனித்தன்மையை வழங்குகின்றன. அவ்வகையில், அவருக்கு முன்னோடி என்று சொல்லத் தக்கார் யாருமில்லை. அவர் ஒரு முதன்மையர் எனலாம்.