Sunday, February 17, 2019

நிறமெனத் தெரிவதெல்லாம்



     











நாள்தோறும் முகநூலில் வாட்ஸப்பில் இதர சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிப் பதிவுகள் வந்து சேர்கின்றன. அவற்றில் பத்து விழுக்காடாவது பார்க்கிறேனா என்பதே ஐயம்தான். சொல்லிடுகைகளின் நிலையும் அஃதே.

      பெருவணிக அலுவலங்களில் பிரதி மாதமும் ‘விழுத்தொண்டு ஆற்றினார்’ ஒருவரைத் தேர்ந்து ”இம்மாதத்தின் சிறந்த பணியாளர்” எனப் பாராட்டுகிறார்கள் அல்லவா? அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள்? சிலிகான் உலகின் சித்த புருஷரே! என்னை மன்னியும். தங்கள் துய்யச் சேவடிகள் படத்தகும் இடம் இதுவன்று.

      13-ஜனவரி-2019-ல் நான் கண்டு முகநூலில் பகிர்ந்த காணொளி ஒன்று இன்னமும் நினைக்குந் தோறும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தனது அறுபத்தாறாவது பிறந்த நாளில் தன் மகளிடமிருந்து தந்தை ஒருவர் கிஃப்ட் பெறுகிறார். எங்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான். ஆனால், இங்கே அந்தத் தந்தையும் வித்தியாசமானவர். அவர் பெற்ற அன்பளிப்பும் வித்தியாசமானது.


     









 பிறந்தபோதே நிறக்குருடு (Color Blindness / deuteranomaly / protanomaly) என்னும் குறைபாட்டுடன் இவ்வுலகுக்கு வந்தவர் அவர். எல்லாக் குழந்தைகளுமே முதல் சில வாரங்களுக்கு நிறங்கள் எதையும் பார்ப்பதில்லை. கண்களிலிருந்து பன்னிரண்டு இன்ச்சுகள் தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே காண்கின்றன. அவற்றையும் கறுப்பு வெள்ளையாகவும் சாம்பல் நிற அடர்த்திகளாகவும் மட்டுமே காண்கின்றன. பொருட்களின் வடிவங்களை மட்டுமே அவை கிரகித்துக் கொள்கின்றன. நான்கு மாதங்களைத் தாண்டும் போது அவற்றின் கண்களில் நரம்பமைப்புகள் வலுப்படும்போதுதான் முதன் முதலாக நிறத்தைக் காண்கின்றன. ஒரு குழந்தை காணும் முதல் நிறம் சிவப்பு. பிற நிறங்களை ஐந்தாம் மாதத்திலிருந்து காணத் தொடங்குகிறது என்று கண்ணறிவியல் கூறுகிறது.

      ஆனால், அரிதின் அரிதாகச் சில குழந்தைகளுக்குக் கண்ணின் உள்ளே நரம்புகளின் வளர்ச்சி குறைபட்டு அப்படியே அமைந்துவிடுகிறது. எனவே அவர்களால் வாழ்நாள் முழுதும் வண்ண வண்ண நிறங்களைக் காண இயலாதாகிறது. அவர்களின் உலகம் வெறும் கறுப்பு வெள்ளை மட்டுமே. பிறர் வண்ணங்களைக் கண்டு பரவசமுற்று அவற்றின் பெயர்களைச் சொல்லிக் கூவும்போதெல்லாம் இவர்கள் கறுப்பு வெள்ளையின் பிரிகைகளையே அப்படிப் பெயரிட்டு ‘நாம்’ அழைப்பதாக எண்ணி அவர்களும் கூவி மகிழக்கூடும். நாம் பார்க்கும் நிறங்களை அவர்கள் பார்ப்பதில்லை என்பதை நாம் அவர்களுக்கோ அல்லது அவர்கள் நமக்கோ நிரூபித்துக் காட்ட எவ்வழியுமில்லை. அவர்கள் நிறங்களைப் பார்க்கும் ஆற்றலைப் பெறுவது ஒன்றுதான் வழி.

அவ்வழியை நெடுங்கால ஆராய்ச்சியின், பரிசோதனைகளின் விளைவாக மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. நிறக்குருடு அல்லது நிறக்குறைபாடு உள்ளோர்க்கு நிறங்களை ஈடுகட்டிக் காண நல்கும் கண்ணாடிகள். அவற்றை அணிந்து கொண்டால் எல்லோரும் இப்பருவுலகை வண்ணமயமாகக் காண்பது போலவே அவர்களும் காணலாம்.

      அந்த தந்தைக்கு அது அறுபத்தாறாவது பிறந்த நாள். அன்று அதிகாலை அவர் வீட்டின் வாசலில் அவரது மகளும் நண்பர்களும் நிற்கிறார்கள். அவர் அழைக்கப்படுகிறார். காஷுவலாக டி-ஷர்ட்டும் ட்ரவுசரும் அணிந்தவராக அவர் வெளியே வருகிறார். ஹேப்பி பர்த்டே என்று எல்லோரும் கூச்சலிட்டு வாழ்த்துகிறார்கள். மகிழ்ச்சிப் புன்னகை அவர் முகத்தில் மலர்கிறது. கிஃப்ட் பை அவரிடம் வழங்கப்படுகிறது. பிறந்த நாள் பரிசை எடுத்துப் பார்க்கும்படி அவரைத் தூண்டுகிறார்கள். அதிகாலையின் பொன் இள வெயில் கீற்றுகள் முகத்தில் விழும்படியாக வீட்டின் முற்றத்தில் நின்றபடி பைக்குள்ளிருந்து ஒரு காகித டப்பாவை எடுக்கிறார். பரிசு என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முயல்கிறார். சற்றே குழம்புகிறார். தன் மகளின் மற்றும் நண்பர்களின் கண்களில் என்றுமில்லாத ஒரு புதுவித ஆர்வம் ததும்பதை அவரின் உள்மனம் உய்த்துணர்ந்திருக்க வேண்டும். இது வழமையான பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல என்பதை அவர் பிரக்ஞை கண்டுபிடித்துவிட்டது. அதன் புதிரவிழ்தல் அந்த அட்டை டப்பாவினுள் உள்ளது. அதனைத் திறந்து பரிசை வெளியே எடுக்கிறார்.



       


















வெயிற் கண்ணாடி? (சன் –க்ளாஸஸ்? கூளிங் கிளாஸ்?) இதற்கு முன்பும் அவர் எத்தனையோ வடிவங்களில் கூளிங் கிளாஸ் அணிந்திருக்கிறார். பலவித பிரபலமான பிராண்டுகள். (பல்வேறு வண்ணங்களில் அந்தக் கூளிங் கிளாஸ்கள் இருந்திருக்கலாம், பச்சை நீலம் ஆரஞ்சு என. எனினும், அந்த நிறங்களை அவரால் இதுவரை பார்க்க முடிந்ததில்லையே! தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறம்கூட அவருக்குத் தெரியாது!) இன்னொரு கூளிங் கண்ணாடிதான் பரிசா? அதற்கா இவ்வளவு ஆரவாரம்? என்றெண்ணி அவர் மனம் குழம்புகிறது.

      ”அணிந்து பார் குழந்தாய்!” என்கிறார்கள் சூழ்ந்து நிற்பவர்கள், “இவை சாதாரண கண்ணாடி அல்ல”

       அவர் மெல்ல அந்தக் கண்ணாடியை அணிகிறார். ஓடிக்கொண்டிருக்கும் கால நதி ஒரு கணம் அப்படியே நின்று விட்டதாக உணர்கிறார். ஒருவேளை, அவரின் இதயமும் ஒரு துடிப்பைத் தவற விட்டிருக்கலாம். தாயின் கருவறையுலகம் வெளிச்சம் மற்றும் இருள்களால் ஆனது. இமைகளை மூடியே வைத்திருப்பினும் கருக் குழவியால் வெளிச்சத்தையும் இருளையும் வேறுபடுத்தி அறிய முடியும். அங்கே வடிவங்கள் உருவங்கள் ஏதுமில்லை. அத்தகைய ஓர் உலகிலிருந்து வெளியேறி இப்பருவுலகில் வந்து விழுந்து கண் விழித்ததும் குழந்தை வடிவங்களைக் காண்கிறது. பிறப்பு அதனை ஒரு புதிய உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.

        அதுபோல், அறுபத்தாறு ஆண்டு காலம் வண்ணங்களையே பார்க்காமல் வளர்ந்து வாழ்ந்து வந்திருக்கும் அவர் முதன் முதலாக வண்ணங்களைக் காணும் அத்தருணம் அவரைப் புதியதொரு உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிறப்புதான் அல்லவா? வண்ணமற்ற உலகைப் பொருந்த வரை அவருக்கு அது அறுபத்தாறாவது பிறந்தநாள். ஆனால், நிறங்கள் நிறைந்த உலகைப் பொருத்த வரை அவருக்கு அதுவே பிறக்கும் நாள் அல்லவா?


     














 அதிர்ச்சியில் அவர் அழ ஆரம்பிக்கிறார். ஆம், உணர்ச்சிக் கொந்தளிப்பில் விம்மிக்கொண்டு அவர் அழுகிறார். முகத்தில் கண்ணீர் வழிகிறது. வண்ணங்களை இன்னும் துல்லியமாகப் பார்ப்பதற்காக அவரின் கண்கள் தம்மைத் தாமே கழுவித் தூய்மை அடைகின்றனவா? அந்தக் கண்ணீர், வண்ணங்களின் திருக்காட்சிக்காக விழிகள் நிகழ்த்தும் ஞான ஸ்நானமா? 

      ”என்ன தெரிகிறது பேபி? அதோ பலூன்களைப் பார்” என்கிறார் ஒருவர். அவர் திரும்பிக்கொண்டு பலூன்களைப் பார்க்கிறார், ஒன்றரை வயதுக் குழந்தையைப் போல! மேலும் கீழும் பல பொருட்களைப் பார்க்கிறார். பொருட்களையா? அல்ல அவை முதன் முதலாக இன்றுதான் காட்டும் வண்ணங்களை. ’இதை நீலம் என்பார்களே? நானும் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்தேனே? இதுதான் நீலமா? அதை சிவப்பு என்பார்களே? நானும்கூட அப்பெயரைப் பலமுறை சொன்னதுண்டே? இதுதான் சிவப்பா? இப்பொது அறிவேன், இப்போதுதான் அறிவேன், இதுதான் பச்சை, இதுதான் ஊதா, இதுதான் மஞ்சள்…” அவருக்குள் இப்படித்தான் எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று ஊகம் செய்துதானே நம்மால் எழுதிப் பார்க்க முடியும்?

      அவர் தன் கைகளை அசைத்து ஒன்றுடன் ஒன்று குத்துகிறார். கைகளை வீசுகிறார். தடுமாறுகிறார். இப்போது அவர் பிம்பம் பெரிதாக்கப்பட்ட ஓர் இரண்டு வயதுக் குழந்தைதான். தன் மகளை அழைக்கிறார். அழுதபடி அணைத்துக் கொள்கிறார். அவரது வாழ்நாளின் சிறந்த அன்பளிப்பை அவர் பெற்றுவிட்டார். இத்துடன் அக்காணொளி முடிகிறது. சில நிமிடங்களே ஓடும் அக்காணொளியை இதுகாறும் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அது என் உள்ளத்தை உருக்கத் தவறவில்லை.

      சிறு வயதிலிருந்தே வண்ணங்களின் மீது எனக்கு ஒரு தனித்த ஆர்வம் உள்ளது. பொதுவாகவே குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். அதனால்தான் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்ட பாட நூற்களிலிருந்து அவர்களின் கல்வியைத் தொடங்குகிறோம். கோட்டோவியங்கள் கொடுத்து அதில் வண்ணம் தீட்டச் சொல்கிறோம். பிள்ளைகள் மிக உற்சாகமாக அவற்றிற்கு வண்ணங்கள் தீட்டுகிறார்கள். அது அவர்களுக்கு ஓர் அலகிலா விளையாட்டு.


    












  எழுத்தல்லாத கலை வடிவங்களில் ஓவியத்தின் மீதுதான் என் மனம் ஈடுபாடு கொள்கிறது. உருவமற்ற வண்ணங்களின் கலந்துறவாடலான சூக்கும ஓவியங்கள் (Abstract Paintings) ஒரு கனவுலகமாக என் நினைவுகளில் விரிகின்றன. ஓவியத்திலிருந்துதான் நான் எழுத்துக்கு வந்து சேர்ந்தேன்.

      ”தென்றல் வந்து தீண்டும்போது
      என்ன வண்ணமோ மனசுல?...
      திங்கள் வந்து காயும்போது
      என்ன எண்ணமோ நெனப்புல?...
      வந்து வந்து போகுதம்மா
      எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
      எண்ணங்களுக்கேத்தபடி
      வண்ணமெல்லாம் மாறுமம்மா...
      உண்மையில உள்ளது என்ன? என்ன?
      வண்ணங்கள் என்ன? என்ன?”
     
      கவிஞர் வாலி எழுதிய வரிகள், அக எழுச்சி நல்கும் அற்புத இசையுடன் அடிக்கடி நான் நினைவில் ஒலிக்கவிட்டு அனுபவிக்கும் பாடல். “உண்மையில் வண்ணங்கள் உள்ளனவா?” என்னுமோர் மெய்யியல் தேடலின் வாசலை இந்த வரிகள் திறக்கின்றன.

பேசுவோம்...

Sunday, February 10, 2019

விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா


      மூன்று வகுப்புக்களிலிருந்து வந்த விடைத்தாள் கட்டுகள் என் மேசை மீது கிடந்தன. அக மதிப்பீட்டுத் தேர்வுகள் தொடங்கி இது நான்காம் நாள். ஒவ்வொரு துறையிலும் அவரவர் ”கோர்” பாடங்களில் தேர்வெழுதிக் கொண்டிருப்பார்கள். வகுப்புகள் இல்லை. இவற்றைத் திருத்த ஆரம்பிக்கலாம் என்று அமர்ந்தேன். வினாத் தாளையும் விடைக் குறிப்புக்களையும் ஓரிரு முறை பார்த்துவிட்டு ஒரு கட்டைப் பிரித்தேன். தாள்களை ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யத் தொடங்கினேன். 

      ஒருகட்டத்தில் துறையில் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்! பி.எச்.டி ஆய்வாளர் வந்தார் என்று இரண்டு பேராசிரியர்கள் அவருடன் போய்விட்டார்கள். பொது ஸ்டாஃப் ரூமுக்குச் சிலர் சென்றிருக்கக்கூடும். எப்படியோ, நான் மட்டுமே அமர்ந்து ஒரு ’ஜின்’னைப் போல் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பதை உணர்ந்த தருணத்தில் சற்றே திகிலாக இருந்தது. வாசலில் ஒரு நிழலாட்டம் அசையக் கண்டு ஏறிட்டுப் பார்த்தேன். (’அணங்குகொல்?’... இல்லை). நெட்டென வளர்ந்த மாணவன் ஒருவன் வந்தான். செல்வம் சாரிடம் நேற்று வாங்கிய ஐந்நூறு ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் என்றான். (சார் சார் என்று நாம் அழைப்பது ஆங்கிலம் என்றா நினைத்தீர்கள்? நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் என்னும் தத்துவத்தைக் குறிக்கும் அர்த்தமுள்ள தூய தமிழ் வார்த்தை ஐயா அது!). கொடுத்து விடுவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டேன். மீண்டும் பகுதி-1 – தமிழ் - தாள்-4 விடைத் தாள்கள் என்னும் சுழலுக்குள் மூழ்கினேன். ஒரு முப்பது தாள்களைத் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா ‘ஆட்டோமேட்டிக்’ மோடில் இயங்கத் தொடங்கியிருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் இருபது. ’டிக்’ போடுவதாகச் சாய்மானக் கோடுகள் இருபது இழுக்க வேண்டும், அசுர வேகத்தில். ஏறத்தாழ எல்லோருமே இதில் இருபதுக்கு இருபது. (’இத மட்டும் எப்படி நல்லாப் படிக்கிறானுங்கன்னு தெரியல’). நேர்க்கோடுகளின் எல்லை முடிந்தது. அடுத்து ஆரம்பமாகும் பகுதி-ஆ பகுதி-இ நெடுகிலும் சுழிகள்.

      வெளியே சென்றிருந்த செல்வம் சார் வந்துவிட்டார். எம்மே வகுப்பிலிருந்தார்.  அவரிடம் பணத்தை ஒப்படைத்துவிடலாம் என்றெண்ணி எழுந்து சென்றேன். 

      ”ஒரு பையன் வந்தான. ஐந்தூரு ருபய தந்தனா” என்றேன்.

      கலவரமாக என் முகத்தைப் பார்த்தார். நான் பேசியது அவருக்குச் சட்டென்று புரியவில்லை. தலையை உதறிக்கொண்டு நான் திரும்பவும் சொன்னேன்: “ஒரு பையன் வந்தான். ஐநூறு ரூபாய் தந்தான். காலைலேர்ந்து பேப்பர் திருத்தறேனா, பயலுக எழுதியிருக்க மாதிரியே பேசிட்டேன். தமிழே மறந்துரும் போலிருக்கு சார்”

      நினைத்துப் பாருங்கள். பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு ஒரு பிரதி முழுக்க இப்படியே சிதைவுத் தமிழாகப் போய்க்கொண்டிருந்தால் நீங்கள் படிப்பீர்களா? அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் எல்லா வினாக்களையும் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தின் ஐந்து அலகிலிருந்தும் குறிப்புக்கள் எடுத்து ஒரு விடையை உருவாக்கி ‘இந்தாப் பிடி’ என்று தந்தால்?  உதாரணத்துக்கு ஒரு பத்தி காட்டவா?

      ”பதினென் கனக்கு நுல்கள் மிகவும் தமிழுக்குப் புலவார்கள் சிரப்புடன் எளுதிய ஓன்றாகும். அவர்கலின் கர்ப்பனை நயம் இலக்காண நுல்களும் இளக்கிய வலங்களும் தமிழர்கள் பெறுமை கொல்ல வேண்டிய வந்தன. புகழேந்தி நடாகம் எழுதியவர் யார் கவி காமு ஷரிப் நல்ல நடாகம் ஆசிரியோர். பண்டிய நட்டில்  கலாம்பாகம் பேட்டி நடத்தன. செல்பேன் குறித்து சுவபீ கூறுவன மூன்றாம் உலாகப் பேர் விவசாயம் அலிவின் பிடியில் உளாது. முன் தேன்றி மூத்த குடி கட்டுரை கூர்வன யாவை. வாளையாபாதி, குண்டாலகோசி, மணிமோகலை ஆகிய கப்பியங்கள் படைக்கப் பாட்டன. இலக்கிய வராலாராறு சொல்வது என்ன பகுதி-ஆ 14-அ உரைப்பன யாவை என்பாது தமிழுக்குத் தெண்டு செய்த்தான் சாவதில்லை. பறநானூரு புலேவர்கள் இயம்பும் கருத்து அவர்கள் யவாரும் அரசரிடம் பாரிசு பொற படினோர்கள். அரசன் நடுஞ்சுழியன் அவர்கலுக்கு யானை, குதுறை, புனை, நய் ஜுவ்லரி பொன்றா நிரையா பரிசுகள் கெடுத்தான். சுபவெ, வீ.இரையன்பு கருத்துக்கள் நல்லா எளுதி நட்டு மக்காள்க்கு புதிய சிந்தானை சொன்னோர்கள். இணையம் என்பாது தமிழுக்கு பெறிய்ய வளார்ச்சி சொய்துள்ளது. கிகா பைட் மெகா பைட் வசாதிகள் உளாது. அதில் தமிழர்கள் மலோசிய கனட வெலினாடு இருந்து தமிழுக்கு நிரையா கனிப்பொறி ஊளே ஏட்ரினார்கள். செம்முழியான தமிழ் மொலியாம் நிராயா பன்புகாள் உள்ளான. வலைப்பூக்கள் என்பாதும் உள்ளன. நாம் தாய் மொளியாம் தமிழுக்கு தொன்று செய்த்தான் சவாதில்லை...”

      இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்? என்ற பேருவகை நிலையை அனுபவிக்காமல் எப்படி ஐயா நான் இந்தப் பிரதியை அணுக இயலும்? படித்துப் பார்க்காமல் திருத்தலாம் என்றாலும் பழக்கமில்லையே என் செய்வேன்? (நோமென் நெஞ்சே! முறை அறிக: இதுக்கு ஒரு டிக்கு. ஐந்துக்கு இரண்டரை மதிப்பெண். அவனுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. கபாலிக்கும் மகிழ்ச்சி. மேலாண்மையில் இதனை வின்–வின் ஸ்ட்ரேட்டஜி என்கிறார்கள். அதவாது ”இருவீர் வேறல்”.)

இப்படியே எல்லோருக்கும் பேசாமல் ’பாஸ் போடுங்க சகோ. அப்புறம் பாருங்க… அடடே! பேப்பர் கடைசியில பாத்தீங்களா? ’தமிழ் வல்க’ன்னு வேற எழுதீருக்கானே? மொழிப்பற்று உள்ளவன் போல. போனஸ் மார்க் குடுங்க சகோ.

விளையாடாதீங்க. இப்படியே போச்சுன்னா ‘மெல்லத் தமிழினி சாகும்ங்கறது பேதையின் வார்த்தை அல்ல மேதையின் வார்த்தைன்னு ஆயிடும் போல.

இப்ப என்ன ஆயிடுச்சுன்னு நொந்துக்கிட்டிருக்குறீங்க? தமிழ்லதானே எழுதீருக்கான்? அதப் பாராட்டனுமா இல்லியா? நாவல்ல சிறுகதைகள்ல பேசுறாப்லயே எழுதுனா வட்டார வழக்கு – அட்டகாசமா எழுதீருக்காரு ஆகா ஓகோன்னு பாராட்டறீங்க?

இது வட்டார வழக்கு இல்லிங்க. தமிழ்ச்சிதைவு.

நீங்க ஏன் இத தமிழ்ச்சிதைவுன்னு பாக்குறீங்க? அதுனாலதானே மண்ட காயுது? கொஞ்சம் மாத்தி யோசிச்சுப் பாருங்க சகோ. சிதைவுத் தமிழ். அப்பிடிப் பாருங்களேன். இப்ப இது ஒரு இலக்கியப் பிரதி ஆயிடுதுல்ல. ரசிச்சுப் படிக்கலாமில்ல.

என்னது? இலக்கியப் பிரதியா? இதுவா?

ஆமா. இப்ப என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க நீங்க? நம்ம உரையாடல ஒரு சிறுகதையா எழுதிக்கிட்டிருக்கீங்க. அழகியலான தலைப்பு சகோ, ‘விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா’. கவித்துவமா இருக்கு. உங்க சிறுகதைக்கான கருவே பையன் எழுதியிருக்கிற இந்த ஆன்சர்ஸ்தானே? அத நீங்க மேற்கோள் காட்டுறீங்கள்ல. அது இல்லாட்டி இந்தச் சிறுகதையே இல்ல. அப்டீன்னா, இதுவும் ஒரு இலக்கியப் பிரதி ஆயிட்டுதுல்ல?

இது வெறும் மேற்கோள்தானே? அதுவும் தப்புந் தவறுமா எழுதீருக்கான்னு காட்டுறதுக்குத்தான் கோட் பண்றேன். இதுவே எப்படி இலக்கியப் பிரதி ஆகும்?

அப்படியில்ல. சரியின் பிரதி சரியான தமிழில் இருக்கும். தவறின் பிரதி தவறான தமிழில்தானே இருக்கும்?

அது இலக்கியம் ஆகுமா?

ஏன் ஆகக் கூடாது? சரியின் இலக்கியங்கள் இருக்குறப்ப தவறின் இலக்கியங்களும் இருக்கலாம்ல? இரண்டுக்குமே பிரபஞ்சத்துல இடம் உண்டுல்ல?

இருந்தாலும். இது மாதிரியான தமிழ்ச்சிதைவ..

இல்ல சகோ. உங்க பண்டித அகம்பாவத்துல பேசாதீங்க. திரும்பத் திரும்பத் தமிழ்ச்சிதைவுன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க. அது சிதைவுத் தமிழ்.

சரி, சரி. இது மாதிரி சிதைவுத் தமிழ வச்சு முழுசா ஒரு சிறுகதையோ நாவலோ எழுதினா படிக்க முடியுமா சொல்லுங்க?

ஏன் முடியாது? அதுவும் ஒரு இலக்கியப் படைப்பாத்தான் இருக்கும். அப்படி ஒத்துக்கலன்னா நீங்க எப்பவோ தேங்கிப் போயிட்டீங்கன்னு அர்த்தம். மொதமொதல்ல வட்டார வழக்குன்னு தமிழ்ல எழுதப்பட்டப்ப எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாவல் சிறுகதைங்கற பேர்ல கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்த தமிழறிஞர்கள் கோபப்பட்டாங்க. ஆனா இன்னிக்கு அவங்களோட இலக்கிய முக்கியத்துவம்னு ஏதாவது இருக்கா? மதுரத் தமிழ், கொங்கு தமிழ், தூத்துக்குடி தமிழ், நாஞ்சி நாட்டுத் தமிழ், சென்னைத் தமிழ்னு வட்டார வழக்குகள் இருக்கு. பிராமணத் தமிழ் மாதிரியான சமூகத் தமிழுங்களும் இருக்கு. அதையெல்லாம் வச்சு முழுசாவே கதைகள் எழுதுறாங்க இப்ப. இமையம் எழுதுனார்ல ‘எங் கத’ன்னு. பிரதி முழுசுமே வட்டார வழக்குதான். அதையே அம்பது வருசத்துக்கு மின்னாடி மூவா எழுதீருந்தார்னா ’என் கதை’ன்னு எழுதீருப்பாரு. படிக்க முடியுமா சொல்லுங்க? நீங்களே ஒருதடவை சொன்னீங்க, மூவா சரியான மொக்க ப்ளேடுன்னு.

ம்ஹும். நீங்க சொல்றத என்னால முழுசா ஏத்துக்கற முடியல. வட்டார வழக்குங்கறது நாடக வழக்குன்னு தொல்காப்பியரே சொன்னது. வட்டார வழக்குக்கு அகராதியெல்லாம் வந்திருச்சு. அத ஒவ்வொரு பகுதீலயும் மக்கள் பேசுறாங்க. அதுவும் இதுவும் ஒன்னாயிடுமா? இந்த மாணவன் இப்படிப் பேச மாட்டான். ஆனா இப்படி எழுதுறான். அதுவும் சுயாதீனமா இப்படி எழுதல. தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லைன்னு படிச்சத, அப்படி எழுதறதா நெனச்சிக்கிட்டுதான் தமிழுக்கு தெண்டு செய்த்தான் சவாதில்லைன்னு எழுதறான்…

பாத்தீங்களா, அதச் சொல்றப்பவே நமக்குச் சிரிப்புப் பொங்குது. இப்படிக் குலுங்கறீங்க. இத இலக்கியப் பிரதி இல்லேன்னு சொன்னா எப்படி? இது ஒரு வகைல மொழியைக் கையாள்றதுல உள்ள மனச்சிதைவின் வெளிப்பாடுன்னு பாக்கலாம். அதுவே மொழியைச் சிதைத்து ஒருவகைச் சிதைவு மொழியா வெளிப்படுது. எனவே இது சிதைவுத் தமிழ் ஆகுது. கொலாஜ் ஓவியம்னு ஒரு வகை இருக்குல்ல, அது மாதிரி. இது மொழியால் அமைந்த கொலாஜ் ஓவியம். ஓவியத் துறைல அத ஒரு ஜானரா ஏத்துக்கிட்டாங்க. இலக்கியத்துலயும் அப்படி நாம ஏத்துக்கலாம். சிதைவுத் தமிழ்ங்கறது ஒரு புது ஜானர்.

ஆனா, இது சுயாதீனமா எழுதப்படல… வட்டார வழக்கு மாதிரி பல பேர் ஒன்னா பேசுற பாணி இல்ல இது.

அதுதாங்க இதோட சிறப்பே. இது ஒருவகைல சர்ரியலிச வெளிப்பாடு. மீ-மெய்ம்மியல் பிரதி இது. இன்டிவிஜுவாலிட்டி இருக்குப் பாருங்க. இவன் எழுதற மாதிரி இன்னோருத்தன் எழுத மாட்டான். இது நகல் இல்ல. இப்ப, இவனுக்கு நீங்க எவ்ளோ மார்க் போட்டிருக்கீங்க? பதினஞ்சா? சரி. அதிக மார்க் வாங்குனவன் எவ்ளவு?

அறுபத்தொன்னு.

அவ்ளோ மார்க் எதுனால போட்டீங்க. செந்தமிழ்ல செப்பீருக்கான்னு. இல்லியா? நடூல நடூல செய்யுள் வரிகள அடி பிறழாம எழுதீருப்பான். உங்களுக்கு அப்டியே உச்சி குளுந்துருக்கும். பத்துக்கு ஒம்போது குடுப்பீங்க. அறுபது எழுபதுன்னு வாங்குவான். சரி இருக்கட்டும். காலைலேர்ந்து பேப்பர் கரெக்‌ஷன் பண்றீங்க. அப்பப்ப ஒருத்தருக்கொருத்தர் அதுல சிலத படிச்சுக்காட்டிப்பீங்கள்ல? எந்த மாதிரி பேப்பர்ஸ படிச்சுக் காட்டுவீங்க?

இது மாதிரிதான். தப்புந் தவறுமா எழுதுறானுங்களே, அந்தப் பேப்பர்கள.

எல்லோரும் சிரிப்பீங்கள்ல?

வாஸ்த்தவந்தான்

நல்லா எழுதீருக்கிற பேப்பர படிச்சுக்காட்ட மாட்டீங்க. பேசாம டிக்கடிச்சு மார்க் போட்டு சத்தமில்லாம வச்சுருவீங்க. ஏன்னு யோசிச்சீங்களா?

ஏன்னு நீங்களே சொல்லுங்க.

ஏன்னா அது ஒரு செத்தப் பிரதி! அலங்காரமான மம்மிஃபிகேஷன். அது ஒரிஜினல் இல்ல, நகலு. மூளைய ஜெராக்ஸ் மெஷினாக்கி வச்சிருக்குற ஒருத்தன் வெளித்தள்ளுனது. அது இலக்கியப் பிரதி அல்ல. அதை நாம கொண்டாட முடியாது. அது ஒரு பிணம். சீக்கிறமாப் பொதைக்குற வழியத்தான் பாப்போம்! உரிய மரியாதையோட, அறுபது எழுபதுன்னு மார்க் போட்டு. ஆனா இந்த சிதைவுத் தமிழ்ப் பிரதி இருக்கே, இது ஊனமா இருந்தாலும் உசிரோட இருக்கு. ஆனா, உங்கள்ட்ட உசிருக்கு மரியாதை இல்ல. வெறும் ஏழெட்டு மார்க்தான் குடுப்பீங்க. அவன முட்டாள்னு நாலு பேர்க்கு மின்னாடி நிறுத்துவீங்க. அவ்வளவு வித்யா கர்வம் உங்களுக்கெல்லாம். அறுபது மார்க் வாங்குனவன் தமிழுக்குச் செய்ற பங்களிப்பு என்னா சகோ? ஒன்னுமேயில்ல. ஆனா இவன் இருக்கானே, தமிழிலக்கியத்துக்கு ஒரு புது வகைய, ஜானர தந்திருக்கான். தமிழின் எல்லைகள விஸ்தாரமாக்குறான். இவன நீங்க பாராட்ட வேணாமா? இன்னோன்னையும் கவனிங்க. இப்ப செம்மொழின்னு சொன்னா அதுக்குன்னு சில தன்மைகள் இருக்கணும்னு ஒரு பட்டியல் இருக்குல்ல?

ஆமாம். அதுவும்தான் சிலபஸ்ல வச்சிருக்கம். கலைஞர் சொன்னது, பாவாணர் சொன்னதுன்னு ஐநா சப சொன்னதுன்னு சில பட்டியலுங்க இருக்கு. அதையும் கேட்டிருக்கம் எக்ஸாம்ல. தொன்மை மென்மைன்னு எதுகையா சில பண்புகளுண்டு. ஒருத்தன் ’பொன்மை’ன்னு எழுதீருக்கான். தங்கப் பஸ்பம் போல்ருக்கு. ஸ்வர்ணாஞ்சனம்.

யெஹ்ஹே… பகடீ..? ம்ம்? செம்மொழிப் பண்புகள்ல தாய்மைன்னு ஒன்னு இருக்குல்ல. அது தமிழுக்கு எப்டி பொருந்துது?

என்ன, மலையாளம் துளு தெலுங்கு கன்னடம், இது மாதிரி திராவிட மொழிகள்லாம் தமிழ்லேர்ந்து பொறந்துச்சு. தமிழ்தான் அதுக்கெல்லாம் தாயி. அதனால தாய்மைப் பண்பு பொருந்துது.

அதெல்லாம் பொறந்து ஆயிரம் வருஷமாச்சே. இப்பத் தமிழுக்குத் தாய்மைப் பண்பு இருக்கா இல்லையா? இப்ப ஒரு புது மொழி அதுலேர்ந்து உருவாகணும்ல? இந்தா உருவாயிக்கிட்டிருக்குல்ல, இவன் எழுதுறதுல.

ஆனால் இது டார்வினோட கூர்தலறக் கோட்பாடு தலகீழாவுற மாதிரி. ஒரு தமிழ்க்குரங்கு உருவாகிக் கொண்டிருக்கு.

பொசுக்குன்னு கோபப்படுறீங்க பேராசிரியர். உடம்புக்கு ஆகாது பாத்துக்கங்க. குரங்கோ இல்ல அரவிந்தர் சொன்னாப்ல சூப்பர்மேனோ, இப்ப ஆரம்ப நிலையிலயே அத நீங்க முடிவு செய்ய முடியாது. மலையாளமோ துளுவோ கன்னடமோகூட ஆரம்பத்துல தப்புகளின் அபத்தத் தொகுதியாதான் இருந்திருக்கும். அதுவே வலுப்பட்டுக் காலப்போக்குல புது மொழியாயிடுது. அதாவது தமிழோட பிள்ளையாகி வளந்து நின்னு பேர் சொல்லுது. இந்தச் சிதைவுத் தமிழும் ஒரு காலத்துல அப்டி வளரலாம்ல? அதுக்கான சாத்தியம் இருக்கு. இப்ப இப்படி எழுதுறவன் ஒவ்வொரு வகுப்புலயும் ஐந்தாறு பேரு இருப்பானா? இது கொஞ்சம் கொஞ்சமா கலெக்டிவ் அன்காஷியஸ்ல பரவி அங்கிருந்து கலெக்டிவ் கான்ஷியஸுக்கு வந்து பிறகு ஒரு புது மொழியாகவே வெளிப்படலாம். அப்ப அதுல பண்டிதர்ங்க அறிஞர்ங்க எழுத்தாளர்ங்க கவிஞர்ங்கள்லாம் உருவாவாங்க. பேராசிரியர்களும் வருவாங்க. அப்பவும் அந்த மொழிய செதச்சு ஒருத்தன் எழுதுவான். ‘தமிழுக்கு தெண்டு செய்த்தான் சவாத்தில்லை’ என்று எழுதியவனுக்கு அறுபத்தஞ்சு மார்க்கு கொடுப்பீங்க அப்ப. தப்பா எழுதப்பட்ட பிரதிய சிவப்பு மைப் பேனா சுழியிடும். யாரு கண்டா, தப்புன்னு சுழிச்ச அந்த வரி ‘தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை’ன்னுகூட இருக்கலாம்!

உஸ்ஸ்... சிதைவுத் தமிழ் வால்க, வெழ்க!... போதுமா சகோ? அதிருக்கட்டும். சங்க இலக்கியம் பத்திக் கேட்டா அதுல சினிமா பாட்டெல்லாம் எழுதி வய்க்கிறானுங்களே, அதுவும் இலக்கியப் பிரதிதானா?

அப்டியா? வெரி இன்ட்ரெஸ்டிங். இப்ப கைவசம் அப்டி ஏதாவ்து பேப்பர்ஸ் இருந்தா காட்டுங்களேன் பாப்பம்.

ம்ம்… இந்தக் கட்டுலன்னு நெனக்கிறேன்… இளங்கலை இரண்டாம் ஆண்டு... பிஎஸ்சி.. இந்தா இருக்குப் பாருங்க, கடசீல ரெண்டு கேள்விக்கு என்னா எழுதீருக்கான் பாருங்க.

29) தமிழில் இணைய தளம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் என்ற படம் மூலம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்விச் சோலை, தினகரன், தினமணி போன்ற நாளிதழ் கள் இணையத ளத்தில் தமிழில் உள்ளது. கொள்ளையில தான் அடி காச்சிறுக்கு தென்னமரம் கள்ளு இருக்கு அது போத தருமா ஒத்தையில தான் அடி காச்சிறுக்கு நெல்லுமரம் கிள்ளிப் பரிச்சா அது போத கண்ணீர் விடுமா? வாழப்பழம் பழுத்திருக்கு ஒருபக்கம் சாஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுவிடும் தாங்கி கொள்ளடா ஆலமரம் விழுதிருக்கு ஆடி காத்து பொழுதிருக்கு – ஒன்ன தொடத்தான்.

மின்னஞ்சல் என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை அல்ல. 1990-களில் உருவாக்கப்பட்டது…

ம்ம்...ரைட்டு. இந்தப் பாட்ட நீங்க சுழிச்சு வச்சிருக்கீங்க. நல்லாத்தானே எழுதீருக்கான். குறிப்பா, நாளிதழ் கள் இணையத ளத்தில்-ங்கற பகுதி எனக்கு ரொம்ப ஈர்ப்பா இருக்கு சகோ. செய்தித்தாள்கள் ஒருவித அஞ்ஞான போதையத்தான் மக்களுக்கு ஊட்டுதுங்கற விஷயத்த நாளிதழ் கள்-ன்னு தனியாப் பிரிச்செழுதி உணர்த்தீருக்கான். இது கட்டுடைப்பு – டீ கன்ஸ்ட்ரக்‌ஷன் – உத்தி இல்லையா? அப்புறம் இணையத ளத்தில்-ன்னு வர்ற பகுதியிருக்கே, அதோட சின்ட்டாக்ஸ கவனிச்சீங்களா? ஒரு செய்யுளடியின் நறுக்கு மாதிரி இல்ல? இத எப்பிடி சகோ உங்களால ரசிக்காம இருக்க முடியுது? ஆச்சரியம்தான். அப்புறம், ’நெல்லுமரம்’ ஒரு சொல்லாடல் பாருங்க. இலக்கண ரீதியா நெல்லுங்கறது புல்லு வகதான். ஆனால், புல்லு வகயான தென்னைய மரம்னு சொல்றது வழக்கம்தானே. அதுமாதிரின் நெல்லுமரம்னு சொல்றான். இதுல ஒரு நாட்டுப்புறத் தொனி இருக்கு. சூப்பர். இது சினிமாப் பாட்டா?

தெரியல. அடுத்த கேள்விய பாருங்க. அதுல மெர்சல் படப் பாட்டு எழுதீருக்கான்.

26) புறநானூறு பாடல்கள் தமிழ் பெருமைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல் வாழ்வியலையும் எடுத்துரைக்கிறது. மேலும் தமிழின் பெருமையை இப்பாடல் கூறுகிறது. ஆளப் போறான் தமிழன் உலகம் எல்லாமே. வெற்றி மகன் வழிதான் இனிமே எல்லாமே. வீரன்நா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா பாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான். நெஞ்சில் அள்ளி காத்தில் நல்ல தேன் தமிழ் தெளிப்பான். இன்னும் உலகம் எழ சங்கத் தமிழ்ப் பாட பச்சத் தமிழ் உச்சப்புகழ் ஏர், சீர் வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம். வாராயோ வாராய் நீ வம்பா வந்த சுளுக்கெடுப்போம். தமிழன் தா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோடு கலந்தாலும் அது நாம அடையாளம்.

மேலும் புறநானூற்று பாடல் சாதியை ஒழிக்க வேண்டும் எனவும்...

அப்பா... எப்படி மனப்பாடம் ஆயிருக்கு பாத்தீங்களா சகோ? இதுதான் சினிமாப் பாட்டோட பவர்ங்கறது. ஊடக ஆற்றல். மல்டி மீடியா இல்லியா? ஒரு தடவ கேட்டான்னாலே பச்சுன்னு மனுசுல அப்பிக்கிரும். ஏயார் ரகுமான் மியூசிக்தானே?

இதையும் ஒரு இலக்கியப் பிரதின்னு சொல்வீங்களா, புறநானூற்றுக்குள்ள மெர்சல் பாட்டு வர்றத?

இல்லையா பின்ன? இரண்டு வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கியப் பிரதிகளை ஊடாட விடும்போது மூன்றாவதாக ஒரு இலக்கியப் பிரதி கிடைக்கும்னு உங்களுக்குத் தெரியாதா? அதுவும் கால வித்தியாசம் எவ்ளவுக்கு எவ்ளவு அதிகமா இருக்கோ சிறப்பான இலக்கியப் பிரதி உருவாகும். இதை நான் அப்டித்தான் பாக்குறேன். சரி, நீங்க கரெக்‌ஷன தொடருங்க. நான் கெளம்புறேன்.

சகோ சென்றபிறகும் வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். மேற்கொண்டு திருத்தப் பணி ஆற்ற மனநிலை இல்லை. தாள்களை மடித்து லப்பர்பேண்ட் மாட்டி மேசை மீது வைத்தேன். பெரிதாகக் கொட்டாவி வந்தது. கைகளை முறுக்கிக்கொண்டு ஆசுவாசமானேன். கண்ணைக் கட்டியது. லேசாகக் கண்களை மூடித் தலையைப் பின்னுக்குச் சாய்த்தேன். நினைவுப் புலத்தில் அகவுலக மாணவர்கள் எழுதிய தேர்வுத் தாள்கள் படபடத்தன…

கன்னகியும் கேவலனும் திருமணம் நடந்தது. ஊர் பூம்புகார் என்பதில். அவர்கள் குடும்பம் பெரியா பணக்காரர்கள். தடபுடலாக திருமாணம் நடந்தது. யானை மீது ஊர்வலம் போனான் கோவலன். கன்னாகி உடம்பு பூரா நகை நட்டுகள் ஒட்டியானம் காசுமாலை வைரம் வைட்டூர்யம் முத்து பவலம் எல்லாம் நகயும் போட்டிருந்தாள். அவள் அழகு தேவதை போல் காச்சி அழித்தாள். அவளை வர்ணிக்க தமிழில் வார்த்தயே இல்லை என்று கம்பர் கூறுகிறார். திருமண விருந்தில் அரசர் முதல் ஆண்டி வரை ஊரில் உல்லோர்கள் மக்காள் எல்லாரும் வந்தன. எட்டுப்பட்டி ஜமீன்களும் வந்தானர். வெல்லைக்காரர்கள் அமெரிக்க அதிபர்கள் எல்லாரும் வந்தானர். அவ்வளவு சிறப்பாக கல்யானம் நடந்தது. அன்று இரவு கோவலனும் கன்னகியும் முதலிரவு என்றா. ஏழு மாடிக்கு மேலே மேகம் மிதக்கும் இடத்திலே அவார்கள் இருந்தன. அப்போது கன்னாகி மிகவும் அளகாக இருந்தால். வெட்கத்தால் அவளின் முகம் சிவப்பாக மாரியது. பல் முத்து போல் ஜொலித்தது. அவலைக் கோவாலன் காதல் ரசம் சொட்ட சொட்ட வர்னித்தான். ‘நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம். அலகாய் உடைந்தேன் நீயே அர்தம். யே என் தலக்கேருற பொன் தடம் போடுற என் உயிர் ஆடுற என்னாடி மாயாவி நீ.  ஏ கோலி சோடவே, என் கரிக் கொழம்பே, உன் பப்பி குட்டினான் டேக்மீ டேக்மீ...

ஒவ்வொரு வார்த்தையின் மீதும் சிவப்பு மைப் பேனா சுழித்துக் கொண்டே போகிறது. இதற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பது? ஜீ சொன்னதுதான் கரெக்ட். ஒரு டிக் போடுவோம். பத்துக்கு ஆறு. கபாலிக்கு மகிழ்ச்சி. மாரிக்கு டபுள் மகிழ்ச்சி. ச்செ.. தலையை உதறிக்கொண்டு எழுந்தேன். ஜிப்பைத் திறந்து, பையிலிருந்து வாட்டர் ஃப்ளாஸ்க்கை எடுத்தேன். தொண்டைக்குள்ளே தண்ணீர் குளுமையாக இறங்கிச் சென்று வயிற்றில் விழுவதை துல்லியமாக உணர முடிந்தது. நீரருந்தி மூன்று மணிநேரம் ஆகிவிட்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.  வீட்டுக்குக் கிளம்பலாமா என்று யோசித்தபடியே மீண்டும் கண்கள் அயரச் சாய்ந்தேன். அடுத்த பத்து மதிப்பெண் கேள்விக்கான விடையைத் திருத்தத் தொடங்கினேன்.

தலை விரி கோலமாக கண்ணகி அரண்மனைக்குள் நுழைந்தாள். அவள் பத்திரக்காளி போல் தோன்றினாள். கோபமாக நோக்கினாள். மன்னன் கோட்டான் ‘நீர்வார் கண் நோய், யாரையோ நீ மடக்கொடியே’. கன்னகி சினம் கொன்றாள். ‘நான்தான் கண்ணாகி. என்னை தெரியவில்லையா?’ என்றாள். மன்னன் அஞ்சி நடுங்கினான். கன்ணகி கேட்டாள் என் கள்வனையா நீ கணவன் என்றாய்? தேரா மன்னா என்றாள். கல்வனைக் கேறல் கடுங்கோல் இன்று அது நியாயம்தான் என்றான் அரசன். கண்ணாகி கோப வெறி ஏறியது. ஒரு கையில் சிலம்பை ஏந்தினாள். ‘மல்லிகை மலர்ந்தே தீரும் மல்லிகை மலர்ந்தே தீரும்’ என்று கர்ஜித்தாள். அன்று அவள் சூல் உரைத்தது இன்று நடந்துவிட்டாது. மதுரை மல்லிகை மிகவும் பேமஸ் ஆகிவிட்டது… 

Friday, February 8, 2019

ஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்











 கபீர் ஹெல்மின்ஸ்கி
      பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியுமான மௌலானா ரூமி அவர்களின் வழியே தொடரும் சூஃபி மரபு “மௌலவியா தரீக்கா” எனப்படுகிறது. அதன் ஒரு கிளை அமெரிக்காவில் நீண்டுள்ளது. அமெரிக்காவின் முதல் மௌலவியா ஷைஃகு (ஆன்மிகப் பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட குரு) என்னும் நற்சான்றுக்குரியவர் கபீர் எட்மண்ட் ஹெல்மின்ஸ்கி. “த்ரெஷோல்டு சொசைட்டி” என்னும் ஆன்மிக ஆய்வகம் மற்றும் பதிப்பகத்தின் நிறுவனர். பல சூஃபி நூற்களின் ஆசிரியர். அவர் எழுதியதொரு சிறு ஆன்மிகக் குறிப்பு இது. அமெரிக்காவில் அவர் கற்பிக்கும் மௌலவியா தரீக்காவின் தியானப் பயிற்சிகள் பற்றியதொரு அறிமுகத்தை நல்குகிறது.












1.இறை பிரசன்னத்திற்கு வருதல்
      வழி: சுதாரிப்புடன் சுவாசித்தல்
      பயன்: காலக் கட்டுப்பாடு, “தரிசனம் / காட்சி”
      அடையப்பெறும் தன்மை: உள்ளமை
      மதிப்புகள்: ஹுளூர் (பிரசன்னம்), உடனடித்தன்மை, இப்னுல் வக்த் (”இக்கணத்தின் மகன்” – son of the moment), தக்வா (பயபக்தி), சுயாதீனம்.

பிரசன்னம் (Presence) என்பது உள்ளார்ந்த சுதாரிப்பு நிலையை விழிப்படையச் செய்வதாகும். அது ஒரே சமயத்தில் எல்லா தளங்களிலும், எல்லா திசைகளிலும் வரவேற்புடன் இருப்பதாகும். காலத்தால் தளைப்படாமல் அதனை சாட்சி பாவனையுடன் கண்டிருப்பதாகும். அது, ஆன்மா அதிகாரம் பெற்றிருப்பதாகும். வாழ்வின் பின்னணியை அறிந்திருக்கும் நிலையே பிரசன்னம். ஒரே நேரத்தில் உங்களின் எண்ணம், உணர்வு, புலன்களின் பதிவு, நடத்தை ஆகியவற்றை உங்களால் கவனிக்க முடிந்தால் நீங்கள் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். “தரிசித்தல்” – ”பார்த்தல்” என்பதற்கான அசாதரணமான ஆற்றலில் பிரச்ன்னம் முழுமை அடைகிறது. பொதுவாக மனிதர்கள் சமகால வாழ்வில் எப்படி ரோபோக்களாக இயங்குகிறார்கள், எப்படி மனிதர்கள் எந்திரங்களாகச் செயற்படுகிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தீங்கும் இழைக்கிறார்கள். அவர்களால் “பார்க்க” முடிந்தால் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

      பயிற்சி: உன் மூச்சு, உன் பருவுடல், இக்கணத்தில உதிக்கும் உன் எண்ணங்கள், உன் உணர்ச்சி நிலை ஆகிவற்றின் மீது விழிப்புடன் இரு. இந்நிலையில் “ஹூ” என்னும் இறை நாமத்தை இணை.  













2.முனைப்பை விழிப்பூட்டுதல்
       வழி: சிந்தனை
      பயன்: கவனச்சிதறலை வெல்லுதல், முனைப்பையும் நோக்கத்தையும் பாதுகாத்தல்.
      அடையப்பெறும் தன்மை: ஈடுபாடு
      மதிப்புகள்: நிய்யத் (முனைப்பு / திட்டம்), நேர்மை, ஹிம்மத் (உறுதிப்பாடு)

      சிலர் மட்டுமே முனைப்புடன் வாழ்கின்றனர். மேலும் சிலரே முனைப்புடன் கூடிய தன்னலமற்ற பணிபுரியும் வாழ்க்கையை வாழ்கின்றனர். பலருடைய வாழ்க்கை ஈர்ப்பையும் தவிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமது முனைப்பு இறை ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே முனைப்புள்ள வாழ்க்கை சத்தியம் மற்றும் ஈடேற்றத்தின் பாதையில் விசையுறுத்தும். அதாவது, நிதர்சனமான, புறநிலை ஆன்மிக விதிகளை (objective spiritual laws) அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மனதின் இயக்கங்களைப் போதிய அளவு கண்காணித்த பிறகு, அனுபவத்தில் கற்ற பிறகு, இதயத்தில் விழிப்படையும் அறிவு சில முடிவுகளை எடுக்கிறது, சில கோட்பாடுகளை வகுக்கிறது, செயல்முறையை முடிவு செய்கிறது. அறிவாற்றல் இதயத்தின் வழிகாட்டுதலில் தன்னை மொழியின் வழியாக வெளிப்படுத்தும்போது நன்கு தேர்ந்த சில சொற்களில், கச்சிதமான சொற்றொடர்களில் பேசுகிறது. எண்ணத்தை ஆற்றல் தொடர்கிறது. முனைப்பு, உயர் தளத்தில் உண்டாகி, எதார்த்தத்தை வடிவமைக்கிறது. ஒவ்வொரு மாதமும் த்ரெஷோல்டு உங்களுக்கொரு அடிக்கருத்தைத் தருகிறது. அதன் பயிற்சியால் உங்கள் முனைப்பையும் நியாபகத்தையும் நீங்கள் பேணலாம்.

      பயிற்சி: உனக்கொரு முனைப்பை உருவாக்கு. அதனை எழுதி வை. நி அடிக்கடி அதைப் பார்க்கும்படி ஓரிடத்தில் வை. ஒவ்வொரு காலையிலும், நீ எழுந்தவுடன், அதனை நினைவுகொள். அதேபோல், ஒவ்வோர் இரவும் நீ உறங்கச் செல்கையில் உனது முனைப்பை நியாபகம் செய்து, அன்று அதன் மீது நீ எவ்வளவு செயற்பட்டாய் என்பதைக் கணக்கெடு.


















3.விழிப்புணர்வைத் தக்கவைத்தல்
      வழி: ஒவ்வொரு கணமும் ஓர்மையான கவனம்
      பயன்: அகப் பேச்சு, பகற்கனவு முதலியன குறைதல்.
      அடையப்பெறும் தன்மை: தக்கவைக்கப்பட்ட, பொறுமையான கவனம்.
      மதிப்புகள்: ஸப்ரு (பொறுமை), தவக்குல் (ஒப்படைவு), ஒவ்வொரு கணத்திலும் சமனிலை மற்றும் திறந்த நிலை.

      விழிப்புணர்வு தக்கவைக்கப் படும்போது நம் வாழ்வின் தன்மை மாறுகிறது. ஒரு எண்ணத்திலிருந்து இன்னொரு எண்ணத்திற்கும், ஒரு உணர்வு நிலையிலிருந்து இன்னொரு உணர்வு நிலைக்கும், ஒரு பொருளின் மீதான கவனத்திலிருந்து இன்னொரு பொருளின் மீதான கவனத்திற்கும் தாவுவது நின்றுவிடுகிறது. அப்போது, விழிப்புற்ற ஆன்மா மேலோட்டாமான விஷயங்களுக்கு அப்பால் நகர்ந்து மெய்ம்மையின் ஆன்மிக இயல்பை அனுபவிக்கிறது. மனதின் பேச்சுக்களாலும் முரண்பட்ட ஆசைகளாலும் கற்பனையான அச்சங்களாலும் அது ஆளப்படுவதில்லை. ஒவ்வொரு செயலுக்குள்ளும் அர்த்தத்தையும் கருணையையும் உன் அவசியமான சுயம் அடைகிறது.

     










 பயிற்சி-1: தியான மணிமாலையை வைத்து ஓர் இறைநாமத்தைச் சொல். ஒவ்வொரு முறை அதனை உச்சரிக்கும்போதும் சுதாரிப்புடன் சொல். மறதிக்குள் நீ விழுந்துவிட்டதை உணர்ந்த கணத்திலேயே மீண்டும் முதலிலிருந்து தொடங்கு! உன்னால் முடிந்தவரை ஓர் அளவைத் தேர்ந்துகொள் (33 / 66 / 99...). அந்த அளவு முழுவதும் உனது சுதாரிப்பான விழிப்புணர்வைத் தக்கவைக்க முனைப்பு கொள்.    

      பயிற்சி-2: நடை போகும்போது பதினொரு முறை “ஹூ” என்னும் நாமத்தை மூச்சுவிடு. படிப்படியாக உன் அளவை 33-ஆக உயர்த்து. எப்போதும் கவனமிருக்கட்டும், இவை வெறும் ஓசைகள் அல்ல, ஆனால் இறைவனின் பெயர்களாகும்.













4.சுயநலத்தைத் தாண்டுதல்
      வழி: புலனுணர்வில் உறுதியடைதல்
      பயன்: பொய்யான சுயத்தின் ஏமாற்று மற்றும் தளைகளிலிருந்து விடுதலை
      அடையப்பெறும் தன்மை: பணிவு
      மதிப்புகள்: ஃபனா (பொய்யான சுயம் அழிதல்), தர்வேஷியத் (பற்றற்ற நிலை), அடக்கம்.

      சுயத்தின் நிறபேதங்களைக் கற்பனை செய்: ஒரு எல்லையில் சுய-மையம் உள்ளது, மறு எல்லையில் சுயமின்மை. அதன் ஒரு எல்லையில், மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே கவலைப்படுகிறான், எதையும் தன்னை வைத்தே தொடர்புப் படுத்திப் பார்க்கிறான். மறு எல்லையில், வருணிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு நிலை உள்ளது, திறந்த இலகுவான விழிப்பு நிலையாக அது இருந்தபோதும் பிரக்ஞையுடன் தேர்வு செய்து தீர்க்கமான முடிவெடுக்கின்றது. சுய-மைய நிலைக்கு அருகில், எப்போதும் நம்மைப் பற்றியும் நம் ஆசைகளைப் பற்றியுமே சிந்திப்பவர்களாக நம்மை நாம் இருக்கக் கண்டால், மூச்சில் கவனம் வைத்து நம் புலனுணர்வுகளில் உறுதிப்படுவதன் மூலம் நாம் நம்மை அந்தக் குழப்பமான ஆசைகள் நிரம்பிய நிலையை விட்டும் விடுவித்துக்கொள்ள முடியும். தெளிந்த உணர்ச்சியும் சுதாரிப்பான சுவாசமும் கொண்டு நாம் மேலும் மேலும் சமனம் அடைய முடியும். தெளிவுணர்வு என்பது மோசமான உணர்ச்சி மற்றும் மனத் தாறுமாறு நிலைக்கான நன்மருந்து. ஒளூ என்னும் அங்கசுத்தி (ablution) செய்வதன் மூலம் நாம் சமனிலையை மீட்கலாம், சுயத்தின் பழக்கக் குறைபாடுகளை அகற்றலாம். முடிவாக, ஆதாரமான ஆன்மிக வழிகாட்டுதலின் ஒளியில் நம்மை கவனிப்பதும் அறிவதும் மேலும் மேலும் நம்மைப் பணிவு, நேர்மை மற்றும் சுய-மையத்திலிருந்து விடுதலை ஆகியவற்றை நோக்கிச் செலுத்தும். 

      பயிற்சி: ”நான் இல்லா நான்” என்னும் உணர்வை உள்மூச்சு ஆக்கவும். உங்கள் உடலின் ஏதேனுமொரு பகுதியில் (உள்ளங்கை, பாதம், நெஞ்சு...) குறிப்பாக உணர்வை கவனித்தபடி மூச்சை வெளிவிடவும்.













5.தியானத்தில் மூழ்குதல்
      வழி: அசைவின்மையில் ஆழ்தல்
      பயன்: அசட்டை நிலையை மாற்றுதல்
      பெறப்படும் தன்மை: இறைக்காதல்
      மதிப்புகள்: இஷ்க் (ஆழ்ந்த காதல்), நெருக்கம், நம்பகம்.

      தியானம் என்பதே உச்சமான ஆன்மிகப் பயிற்சி. ஆழ்நிலை தியானத்தின் மூலம் நாம் நமக்குள் ஓர் அசைவற்ற புள்ளியைக் கண்டடைகிறோம். அந்நிலையில் இறைவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். மௌலானா ரூமி சொல்கிறார்கள்: “உன் வேரின் வேருக்கு வா”. அந்தச் சலனமற்ற புள்ளியின் கோணத்திலிருந்து நம்மையே நோக்கும்போது நாம் அசட்டையாக இருந்தபோது, உண்மையிலேயே அவசியமானதும் மதிப்புடையதும் எது என்பதை நாம் மறந்தவர்களாக என்ன நிலையில் இருந்தோம் என்பது தெரியவருகிறது. அந்த அசைவற்ற புள்ளியிலிருந்து பார்க்கும்போது தன்முனைப்பு எப்படி நம்மை ஆட்டி வைக்கிறது என்பதையும் மெய்மையை எப்படி அது திரித்துக் காட்டுகிறது என்பதையும் நாம் காண்கிறோம். இவற்றினும் மிக முக்கியமாக, நாம் அந்த நிலைத்த புள்ளியில் இருக்கும்போது ஓர் உள்ளார்ந்த அழகையும் அமைதியையும் அனுபவிக்கிறோம். அந்த அசைவற்ற நிலையில்தான் இறைவன் கிடைக்கிறான். அப்போதுதான், நாம் இறைவனைப் பிரிந்தவர்களாக இல்லை என்னும் சத்தியத்தையும், எதுவெல்லாம் இறைவனை விட்டும் நம்மைப் பிரிக்குமோ அல்லது தொலைவாக்குமோ (அதாவது, அப்படி எண்ணச் செய்யுமோ) அதுவெல்லாம் பொய்மை என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

      பயிற்சி: நம்முள் இருக்கும் ”திசைகளற்ற புள்ளி”யில் நம்மைப் பொருத்தும் நீண்ட தியானங்கள்.  










 6.நன்றியும் வியப்பும் தெரிவித்தல்
      வழி: புனித நாதம்
      பயன்: அச்சமும் சுயநலமும் அறுதல்
      பெறப்படும் தன்மை: படைப்பூக்கம், ஆன்ம விடுதலை
      மதிப்புகள்: பகா (இறைவனில் நிலைத்தல்), வியப்பு, புகழ்ச்சி, படைப்பூக்கம்.

      நன்றியறிதல் என்பது இறைதியானத்தில் கிடைத்த அருளைச் செயலில் வெளிப்படுத்துவதாகும். அதுவும் தியானத்தை வளர்ப்பதற்கு ஒரு வழி. ஆனால், நாம் மையப்புள்ளியை ருசித்திருந்தால் (”ஃதவ்க்”) மட்டுமே உண்மையில் நாம் இறைவனைப் புகழ்ந்தேத்த முடியும். புகழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சிப் பரவச நிலை அல்ல, சில நேரங்களில் அது மிகைப் பரவச களிப்பாகக் காட்சி தந்தாலும்கூட. புகழ்ச்சி எனப்து வெறுமையானதொரு மையத்திலிருந்து பொங்கிப் பாய்கிறது. சூஃபி மடமான தைக்காவில் ஒலிக்கப்படுவது போன்ற இசையானது புகழ்ச்சிக்கான படிவமாகிறது. தைக்காவின் கலாச்சாரம் வழியே நாம் நமக்கு முன்னே சென்றோரின் காலடித் தடங்களைப் பின்பற்றுகிறோம். போகப்போக, அந்தப் படைப்பூக்க வெளிப்பாடே நமது இயல்பான இருத்தலாகிறது. 

      பயிற்சி: இது மிக மிக எளிமையான ஒன்றுதான். எந்தவொரு இறை நாமத்தையும் நேர்மையாக, சுதாரிப்பாக மீண்டும் மீண்டும் உச்சரிக்கவும். உதாரணமாக “அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்”.
 









7.அருட்பரவல்
      வழி: நிபந்தனையற்ற அன்பு
      பயன்: காழ்ப்பு மற்றும் எதிர்மறையிலிருந்து விடுதலை
      பெறப்படும் தன்மை: தூய்மை
      மதிப்புகள்: ரஹ்மத் (அருள்), வள்ளன்மை, தூய்மை

      மேலே சொல்லப்பட்ட நிலைகளில் பயணித்த பின், உள்ளே நாம் எப்படிக் கலங்கலாக இருக்கிறோம் என்பதைக் கண்ட பின், சிலநேரங்களில் அன்பும் அமைதியும் அல்லது இறை நெருக்கத்தையும் அனுபவிப்பதும் வேறு சில நேரங்களில் ஐயம் மேலிட்டுத் தவறான முடிவுகள் எடுத்துப் பச்சாதாபப்படுவதும் என்றிருந்த நிலை மாறி, மிக இலகுவாக அருளை அதிர்வலைகள் போல் பரவவிடுதல் என்பதன் அழகையும் இன்பத்தையும் நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். நம் எண்ணத்தில்கூட எதிர்மறைத் தன்மை நுழையாது. ஒரு மனிதனுக்கு இதனினும் மேலான நிலை என்ன இருக்கிறது? இந்த வாய்ப்பு எப்போதும் நம் முன்னே இருக்கின்றது, நாம் சுதாரிப்பாக இருந்தால், நாம் விழிப்புடன் நினைவு கூர்ந்தால். அருளைப் பரவவிடும் ஒருவன் இறைவனில் வெறுமையாய் இருப்பவன். அவன் பொய்யான சுயம் மற்றும் அதன் கவலைப்பாடுகளை விட்டும் விடுதலை அடைந்தவன்.


     










 பயிற்சி:  மேலிருந்து ஒளி உனக்குள் நுழைவதாக கவனித்து மூச்சை உள்ளிழுக்கவும். உள்மூச்சை உன் இதயம் வரை நுழைய வைக்கவும். அந்த ஒளி உன் இதயத்திலிருந்து வெளியே பரவுவதாகக் காணவும்.

நினைவூட்டல்கள்:
பிரசன்னத்தின் கதவு வழியே செல்லவும்
முனைப்பின் ஆற்றலை விழிப்பூட்டவும்
கவனச்சிதறலை நீக்கி கவனத்தைப் பேணவும்
பொய்ச் சுயத்தின் சிறையிலிருந்து தப்பிவிடு
தியானத்தின் கடலுக்குள் நுழை
நன்றியையும் வியப்பையும் வெளிப்படுத்து
அருளைப் பரவவிடு.

வழிமுறைகள்:
சுதாரிப்பான சுவாசம்
முனைப்பான சிந்தனை
இடையறாத கவனம்
புலனுணர்வில் உறுதிப்பாடு
சலனமற்ற நிலைக்குள் ஆழ்தல்
புனித நாதம்
நிபந்தனையற்ற அன்பு.