Monday, September 23, 2013

நிலவும் நபியும்


அற்றைத் திங்கள்
அவ்வெண்ணிலவில்
முற்றத்தில் இருந்தார்
முஹம்மது

’என்னைக் கண்டோர்
இறைவனைக் கண்டார்’
என்னும் ரகசியக்
கணம் அது

அகிலங்களின்
அருட்கொடை அருகில்
அமர்ந்திருந்தார்
அனஸ்.

ஒரு கணம் மதியை
மறு கணம் நபியை
ஒப்பிட்டது
அவர் மனஸ்.

’நபியின் அழகு
நித்தியம் சத்தியம்
நிலவின் அழகோ
நிழலழகு மட்டும்
அஃது எங்ஙனம்
அசல் அழகை எட்டும்?’

தோழரின் உள்ளத்தில்
தெளிந்தது ஞானம்

அகவிழி திறந்து
காணக் காண
அண்ணலின் அழகில்
ஒளிர்ந்தது ஞாலம்

சூரியனின் கண்ணாடி
இரு துண்டானது
சூரியனின் சூரியன்
சுட்டியபோது

சூரியனும் என்ன?
நபியின் ஒளியில்
சுடரும் பனித்துளி!

வெளிப்பாட்டின்
சுடர்களைத் தாளாது
வெடித்திடும் மலையோ
வாழ்வின் பரவசம் கண்டது
புனித வேதம்
மனித வடிவில்
நடந்தபோது

பரம்பொருள் தந்த
பிரகாச விளக்கு
பிலிற்றும் வெளிச்சத்தில்
பிறங்குகின்றது
பிரபஞ்சம்

இல்லா உவமையால்
அல்லாஹ் வருணித்த
மாடவிளக்கில்
மனம் லயிப்பதே
வீடுபேற்றின் வசந்தம்!

விண்ணிலும்
மண்ணிலும்
இறைவனின் உவமைக்கு
உவமை ஏதுமில்லை
என்பதில்
ஒளியின் மேல் ஒளியை
ஓர்ந்திரு

பார்வை அடையும்
பரவச ஞானத்தில்
அனஸுடன் நீயும்
சேர்ந்திரு

‘உமக்காக
உயர்த்தினோம்
உம் நினைவை’
என்பதன்
உட்பொருளை
உயிரில் திறந்திடு.

முத்திரை ஆன
முஹம்மத்
படைப்புத்தான் எனினும்
படைப்புக்களின் மூலம்!
படைத்தவனின் அத்தாட்சி!

அல்லாஹ்வை அன்றி
இறைவன் இல்லை – இது
அல்லாஹ்வின் புகழ்.

முஹம்மத் இறைவனல்ல – இது
முஹம்மதின் புகழ்!

Wednesday, September 18, 2013

முழு நிலா



இதயம்போல் யாருக்காக
இரண்டு துண்டாய் உடைந்தாயோ
அவரின் முகம் போல்
அழகாய் ஒளிர்கின்றாய் நீ.

உன் பேரின்பத்தின் மீது
படர்ந்துள்ளது
பூமியின் மீதான கவலை.

முழுமையாய் நீ
முகம் காட்டும் நாள் இது

நாளை முதல் தேய்வாய்
நாளும் நாளும்
வெவ்வேறு வடிவங்கள்
காட்டியபடி

அவரின் நெற்றியைப் போல்
அவரின் போர்வாளினைப் போல்
அவரின் புன்னகையைப் போல்

அதன் பின்
யாரும் காணாமல்
மறைந்திடுவாய் நீ

இறைவனுடன்
அவருக்கே உள்ள
அந்தரங்க நேரம் போல்.



Wednesday, September 11, 2013

கவிதைச் சதுரங்கம்


”எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல்
காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்”

வைரமுத்து எழுதிய பாடலொன்றில் வரும் இந்த வரிகளைப் பலமுறை வகுப்புக்களில் சொல்லிக் காட்டி மாணவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறேன். “இயற்கையைப் பற்றிக் கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்” என்றுதான் எல்லோரும் சொக்கிப் போய் சொல்வார்கள்.

“இல்லை. இந்தக் கவிதையை நான் எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன். வைரமுத்து நாத்திகர் (முல்ஹித்). எனவே ’இயற்கையை வியக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். நான் ஏகத்துவன் (முவஹ்ஹித்). எனவே நான் எழுதியிருந்தால் ‘இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்’ என்று எழுதியிருப்பேன்” – கவிதைச் சதுரங்கத்தில் நான் நகர்த்துவது குதிரையா? ராணியா? ராஜாவா? என்று கவனிப்பார்கள் மாணவர்கள்.

“இறைவன் மனிதனுக்குத் தந்துள்ள படித்தரம் மிக உயர்வானது. நிலவை எட்டிப் பிடித்து அதில் காலடி பதித்துவிட்டான் மனிதன். காற்றைச் சிக்க வைத்து அதில் சிக்கெடுத்து ஆக்ஸிஜனை சிலிண்டருக்குள் அடைத்துவிட்டான் மனிதன். அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை மாட்டிக் கொண்டுதானே காற்றில்லாத நிலவில் உலவி வந்தான்! எனவே மனிதன் இப்படிப் பாடலாம்:

எட்டாத நிலவினிலே
என்னை நடக்க வைத்தான்
சிக்காத காற்றினையும்
சிமிழில் அடைக்க வைத்தான்
இதை எண்ணி எண்ணி
இறைவனை வியக்கிறேன்”

அதே மெட்டில் என் இதயத்தின் வரிகள் இழையோடும்.

இப்படிக் கவிதைச் சதுரங்கம் ஆடுவது கவியுலகில் ஒன்றும் புதிதல்ல. எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடுவது எப்போதுமே வசப்பாட்டாய் இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல. அதில் சில நேரங்களில் அற்புதமான தரிசனங்கள் வசப்பட்டு வரலாம். உருதுக் கவியுலகில் இருந்து உதாரணம் ஒன்று தருகிறேன். அது ஐந்து பேர் விளையாடிய சதுரங்கம்!

இந்தக் கவிதைச் சதுரங்கத்தைத் தொடங்கி வைத்தவர் உருதுக் கவியுலகின் சிகரங்களில் ஒருவரான மீர்ஸா காலிப். அவர் ஆத்திகர்தான் ஆனால் மதவாதி அல்ல. பழக்கத்திலோ அவர் ஒரு மதுவாதி. அதில் மிதவாதி அல்ல! ‘மிதப்பில்’ அவர் ஒரு தத்துவக் கவிதை சொல்கிறார்:

“மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு
மது அருந்த விடு
இல்லையேல் சொல் எனக்கு
இறைவன் இல்லாத இடம் எது?”
(ஷராப் பீனே தே மஸ்ஜித் மேன் பேட் கர்
யா ஓ ஜகா பதா ஜஹான் ஃகுதா நஹீன்)

இந்தக் கவிதைக்கு மகாகவி இக்பால் இப்படி பதில் சொல்கிறார்:

“மஸ்ஜித் இறைவனின் இல்லம்
குடிக்கும் இடம் அல்ல அது
நிராகரிப்பாளனின் இதயத்திற்குள் போ
அங்கே இறைவன் இல்லை”
(மஸ்ஜித் ஃகுதா கா கர் ஹே பீனே கீ ஜகா நஹீன்
காஃபிர் கெ தில் மேன் ஜா வஹான் ஃகுதா நஹீன்)

இக்பாலின் இந்தக் கவிதைக்குப் பதில் சொல்ல இன்னொரு கவிஞர் வந்தார். அவரும் காலிபைப் போலவே ஒரு மதுவாதிதான். அஹ்மத் ஃபராஸ் சொல்கிறார்:

”நிராகரிப்பாளனின் இதயத்திலிருந்து வருகின்றேன்
நான் இதைப் பார்த்துவிட்டு
அங்கும் இருக்கிறான் இறைவன்
ஆனால் அவனுக்கது தெரியவில்லை”
(காஃபிர் கெ தில் சே ஆயா ஹூன் மெய்ன் யெ தேக் கர்
ஃகுதா மவ்ஜூத் ஹே வஹான் பர் உஸே பதா நஹீன்)

ஃபராஸைத் தொடர்ந்து வந்தார் ஒரு கவிஞர்: வஸீ ஷாஹ். அவர் சொல்லும் கவிதை இக்பாலின் குரல் போல் ஒலிக்கின்றது:

“உலகில் ஒவ்வொரு இடத்திலும்
இருக்கத்தான் செய்கிறான் இறைவன்
நீ சொர்க்கத்திற்குச் செல் அங்கே
மது அருந்தத் தடை இல்லை”
(ஃகுதா தொ மவ்ஜூத் துன்யா மேன் ஹர் ஜகா
தூ ஜன்னத் மேன் ஜா வஹான் பீனா மனஃ நஹீன்)

இது முத்தாய்ப்பாக இருக்கிறதே. ஆட்டத்தை முடித்துவிடலாமே என்று நினைக்கும் போது அதிரடியாக அடுத்த கவிதையுடன் ஆஜர் ஆகிவிட்டார் சாகீ. அவர் சொல்கிறார்:

“உலகின் துன்பங்களை மறப்பதற்காகவே
மது அருந்துகின்றேன் சாகீ!
சொர்க்கத்தில் எவ்வகையான துன்பம் உள்ளது?
அங்கே அருந்துவதில் ஏதும் இன்பம் இல்லை!”
(பீதா ஹூன் கமே துன்யா புலானே கே லியே சாகீ
ஜன்னத் மேன் கோன்ஸா கம் ஹே வஹான் பீனே மேன் மஸா நஹீன்)

கவிதைச் சதுரங்கத்தில் இது ஒரு ’செக்மேட்’ நகர்வு என்றே சொல்ல வேண்டும். இந்த சாகீ என்பவர் மதுவாதிகளின் சார்பில் தெளிவான ஒரு வாதத்தை வைத்திருக்கிறார். அதற்கு அடியேன் பதில் கூற எத்தனிக்கிறேன்.

இதயம் எனது கோப்பை.
இறையொளி எனது மது.
ஞானம் எனது போதை.
இறைக் காதல் எனது பாதை.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் சூஃபி நிலை பற்றி சுல்தான் வலத் சொன்னார், “அவர் அருந்தியது திராட்சை-மது அல்ல. இறைவனின் ஒளி-மது. அதனைக் கொண்டே அவரின் ஞான போதை அமைந்திருந்தது. சூஃபிகளின் மது அதுவே”

ஒளி மதுவே எனது பழ-மது (ஷராபெ கதீம்).

இதோ சதுரங்கத்தில் என் நகர்வுக் கவிதை:

”வேண்டாம் என்று நீ சொன்னால்
வேண்டாம் மது எனக்கு.
துன்பமே நீ தரும் கோப்பை எனில்
வேண்டும் அது எனக்கு.
நீயே எனக்கு எல்லாம்
இங்காகட்டும் அங்காகட்டும்,
மதுவாவது கோப்பையாவது
தேவை வேறு எது எனக்கு?”