Tuesday, October 30, 2018

கைவசமாகிறாய்...



    


















  இசைஞானி இளையராஜாவின் நெடிய இசைப்பயணம் தமிழிசை வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அனைவரும் அதனை அட்டியின்றி ஒப்புவர். அந்நெடும் பயணத்தில் சுவையான தருணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றை இளையராஜாவே அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்லி வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அன்னனம் அவர் நினைந்து சொன்னார், அவரது இசைத்தொழில் வாழ்வில் மருத்துவமனையில் படுத்திருந்தபடி பேசக்கூட இயலாமல் சீழ்கையொலியால் மெட்டமைத்துத் தந்து அதற்குக் கவிஞர் பாடலெழுதி அவர் இல்லாமலே கூடத்தில் பதிவான பாடல் “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” என்னும் பாடல்தானாம்.

அப்பாடல் வெளிவந்தபோது நான் பள்ளிப்பருவத்துச் சிறுவன். எனினும், அதன் சரணத்தில் வருகின்ற ஒரு முரண் அணியழகு கொண்ட வரியொன்று எனக்கு விசித்திரமாகப் பட்டு மனதில் ஒட்டிக்கொண்டது.

”என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்”

என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஞானிகள் ’சின்மயம்’ என்று சொல்கிறார்களே, அது போன்றதொரு போதம் இவ்வரிகளில் இருப்பதாக உணர்கிறேன்.

      பின்னாளில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தபோது காதலுக்கு அவர் சொன்னதொரு வரையறை என் மனத்தில் அப்படியே கல்வெட்டுப் போல் பதிந்து போயிற்று. வைரமுத்துவின் வரிக்கான மூலமாக அது இருக்க வாய்ப்புளது. தாகூர் சொல்கிறார், “Love is self-realization in the other” (காதல் என்பது மற்றவரில் தன்னுணர்தல்).

      இருத்தலியல் குறித்துச் சிந்தனைக் களத்தில் ஆழ உழுதிருக்கும் ஃபிரெஞ்சு தத்துவ வித்தகர் ழீன் பால் சார்த்தர் உரைத்த புகழ் பெற்றதொரு வாசகம் உண்டு: “Hell is other people” (மற்றவரே நரகம்). உள்ளத்தில் அன்பின் ஊற்று திறவாத மனிதர்க்கு இது உண்மையாகலாம். ஆனால் அன்புடையார்க்கு மற்றவரே சொர்க்கம் (The other is paradise). தாகூரின் ஞானப் பார்வை அதனையே நமக்கு உணர்த்துகிறது.

      ”என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்” என்று ஆண்-பெண் காதலில் பாடப்படும்போது அதில் ஒரு கவித்துவ அழகு இருக்கிறது. அது ஒருவகை ”மெய் மயக்கம்” எனலாம்; மெய்ஞானம் அல்ல.

      ஒரு மெய்ஞ்ஞானி இது போல் பாடுவாரா? சூஃபி ஞானி பீர் கவ்ஸி ஷாஹ் (ரஹ்) அவர்களின் உருதுக் கவிதைத் தொகுதியான “தய்யிபாத்தே கவ்ஸி” என்னும் நூலினைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு கவிதையில், “மேன் ஃகுத் கோ டூண்ட்த்தா ஹூன் / ஓ ஹாத் ஆ ரஹா ஹே” என்று தனக்கும் இறைவனுக்குமான தொடர்பினைப் பற்றி அந்த மெய்ஞ்ஞானி பாடியிருத்தல் கண்டேன்.

      ”நான் என்னைத் தேடுகின்றேன்
      அவன் கைவசமாகி வருகின்றான்”

      இவ்வரிகளின் பின்னணியில் இருத்தலியல் பற்றிய சூஃபித் தத்துவம் இருக்கிறது. உள்ளமை என்பது இறைவனுக்கே சொந்தம். அவனே இருக்கின்றான். மற்றதெல்லாம் அவனது உள்ளமையில் அவன் தோற்றுகின்ற நாம ரூபங்களே என்கிறது சூஃபித்துவம். இருப்பதுதானே கிடைக்கும்? எனவே, தன்னைத் தேடிப் பார்த்தால் இறைவனே கைவசமாகி வருகின்றான் என்கிறார் அந்த மகான். அவரது கருத்தை இசைஞானியின் மெட்டுக்கேற்ப தகவமைத்து நான் இப்படிப் பாடிக் கொண்டேன்:

      ”என்னை நான் தேடித் தேடி
      உன்னையே கண்டு கொண்டேன்”.

No comments:

Post a Comment