Tuesday, October 23, 2018

இளையராஜா – 75



















”யாமறிந்த இசைஞரிலே
இளையராஜா போல்
பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை
உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை”

      இளையராஜா அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் குதூகலத்துடன் கொண்டாடும் தருணமிது. தமிழர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க ஓர் உலக ஆளுமை இளையராஜா என்றுரைத்தால் ஒருபோதும் பிழைபடாது.

      அவரது பாடல்களைத் தமது நினைவுகளின் அடுக்குகளில் உணர்ந்துணர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் தீவிர ரசிகருள் நானும் ஒருவன். அவரது நூற்களையும் வாசித்தவன்.

      அடியேன் ஓர் எழுத்தாளன் என்னும் பிம்பம் எப்படியோ உருவாகி அதை நானே கூட அவ்வப்போது நம்பிவிடுகிறேன் என்பதால் இசைஞானியைப் பற்றி இப்போது ஏதாவது நான் எழுதிப் பதிய வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தால் அது நியாயம்தான். ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாதிருந்தது. நான்கு நாட்களுக்கு முன் வளரிளம் எழுத்தாளரும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நாவலருமான – பதினேழாண்டுகால நண்பர் – மானசீகன் (முகமது ரபீக்)-உடன் உரையாடியபோது இசைஞானி பற்றி எழுதத் தூண்டலுற்றேன். அப்போது தோன்றியதுதான் ”யாமறிந்த...” என்று பாரதியின் வாக்கினை வரித்துக்கொண்டு இளையராஜாவை ஏத்தும் வரிகள். மேலும் சில சிந்தனைகள் ஓடின. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

      தமிழில் பொதுவாக இசைக்கான மூன்று தலைமுறை மூர்த்தியர் என்பது போல் குறிப்பிடப்படுபவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா மற்றும் அ.ர.ரஹ்மான் (அல்லாஹ் ரக்கா என்பது ஆங்கிலத்தில் A.R, தமிழில் அ.ர). எம்.எஸ்.வி-யின் இசை தமிழில் வேர் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அவரது இசையின் கிளைகள் உலக இசையின் திசைகள் நோக்கி அவ்வளவு உயரமாக நீளவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் எனக்குள்ள ஏமாற்றம், உலகெலாம் நீளும் அவர்து இசை தமிழ் மண்ணில் வேர் கொண்டிருக்கவில்லை. தமிழ் மண்ணின் தன்மை அவரது இசையில் மிகவும் சொற்பமே. இளையராஜாவின் இசையோ தமிழில் ஆழ வேர் ஊன்றியிருக்கும் அதே வேளை உலக இசை வெளியில் மிகப் பரந்தும் உயர்ந்தும் தனது கிளைகளை விரித்துள்ளது என்னும் மனச்சித்திரம் எனக்குண்டு. அதனால்தான் அவரது இசை எனது மனக்கினிய வைப்பாக இருக்கின்றது.

      ”இளையராஜா ஆஸ்கார் விருது வாங்கவில்லையே; ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிவிட்டாரே” என்றெல்லாம் சாமர்த்தியமாகக் கேட்பதாக எண்ணிக்கொண்டு அபத்தமாகப் பேசுபவர்களுண்டு. அவ்விருதினை வென்று திரும்பியபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எடுக்கப்பட்ட விழாவில் இளையராஜா அவர்கள் பேசியதில்கூட தனக்குக் கிடைக்கவில்லையே என்னும் ஆற்றாமையாலும் பொறாமையாலும் உளம் சாம்பி அவர் ஏதேதோ சம்பந்தமின்றிப் பிதற்றினார் எனப் பொருட்பட சாரு நிவேதிதா விமர்சித்திருந்தார். அவ்வாறே நிகழ்ந்திருப்பினும் அந்த ஆற்றாமை நியாயமானதுதான். அது கொஞ்ச காலம் இருந்திருக்கலாம், ஓர் இடைநிலை மயக்கமாக. இசையின் பயன் இறைவனே அன்றி வேறில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் அவர். எனவே, அந்நிலையிலிருந்து மிக விரைவாகவே அவர் மீண்டிருப்பார்.

      முக நூலிலோ எங்கோ ஒரு பதிவு அண்மையில் வாசித்தேன், இளையராஜா இசையமைக்க வந்த காலத்தில்கூட அதுவரை இருந்த இசையின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பது கண்டு பலரும் நொந்து வசை பாடியிருப்பார்கள் என்று அப்பதிவு கூறிற்று. அப்படிச் சிலர் இப்போதும் சொல்கிறார்கள். நேரடியாகவே கேட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களின் வரிகளை (கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி) மேற்கோள் காட்டி, ”பாட்டுன்னா இதுதாங்க… எப்பன்னாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். என்னவொரு கருத்து பாத்தீங்களா?” என்று சொல்வார்கள். அவர்கள் ரசிப்பது பாடல் வரிகளின் கருத்துக்களையே அன்றி இசையை அல்ல என்பது அவர்களுக்கே தெரியாது. இளையராஜா வந்த பிறகு அவரது காலத்துப் பாடல்களில் கருத்துப் பிரச்சாரத்தின் தேவை இருக்கவில்லை. அரசியல் இயக்கத்தினரின் வளர்ச்சிக்கான கருவியாகத் திரைப்படம் இல்லை. எனவே வரிகள் மேற்கோள் காட்டத் தோதானவையாய் இல்லை. அவர் இசையமைத்த பாடல் வரிகளை நீங்கள் மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசவியலாது. அப்படிப்பட்டவர்கள்தான் இளையராஜாவின் வருகையை மிகச் சலிப்புடன் எதிர் கொண்டிருப்பார்கள்.


     













 இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழகத்தில் நிலவும் சாதியச் சூழலில் இளையராஜா அடைந்திருக்கும் இடமும் அதன் மீதான எதிர்வினைகளும் பற்றித் தனியாக அலசப்பட வேண்டும். நான் மாணவப் பருவத்திலிருந்தபோது எம் தூரத்து உறவினர் ஒருவர், சாதியைச் சொல்லி இளையராஜாவை வசைந்ததைப் பார்த்திருக்கிறேன். பாட்டென்றால் தியாகராஜ பாகவதரும் சின்னப்பாவும்தான் என்பது அவரது கணக்கு. “பாட்டுப் போடுறானாம், குயிலு மயிலுன்னுக்கிட்டு” என்று தூற்றினார் அவர். இது ஒரு முரணாகவே இருந்தது எனக்கு. சாதிய அமைப்புக்கு எதிரானதுதானே இஸ்லாம்? பின் எப்படி ஒரு முஸ்லிம் இளையராஜாவை அவரது சாதியைச் சொல்லித் தூற்றமுடியும்? ஆனால் அப்படித்தான் நடந்தது. இன்னொரு உறவினர். அவர் இளையராஜா ரசிகர். அப்படித்தான் என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இளையராஜாவின் குரலில் வெளிவந்த பாடல்களின் குறுந்தகடு ஒன்றையும் எனக்குப் பரிசளித்தார். ஆனால் அவ்வப்போது “இசைச் சாணி” என்பார், வேண்டுமென்றே! முஸ்லிம்களிலேயே இப்படி இரண்டு பேரைப் பார்த்துவிட்டேன். எனில், இளையராஜாவை ஆதிக்கச் சாதியுணர்வினர் எவ்விதம் உள்வாங்குவார்கள் என்னும் கேள்வியும் எனக்குண்டு.
      
 அண்மையில் தி இந்து தமிழ் நாளிதழில் தோப்பில் முகமது மீரானின் பேட்டி வந்திருக்கிறது. சாதியச் சூழலின் காரணமாக இன்றைய காலத்தில் தமிழகத்தில் ஓர் உலக இலக்கியம் தோன்றவே முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இசையில் ஓர் உலக ஆளுமை இளையராஜா. அவர் தோன்றியிருக்கிறார். ஆனால் அந்த ஆளுமையைக் கொண்டாடுவதற்குத் தமிழன் அருகதை பெற இன்னும் அவன் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது என்றுதான் படுகிறது.

      இளையராஜாவின் இசைக் கோர்வைகள், திரைப்பாடல் வடிவத்திலேயேகூட, அவர் இசையமைக்க வந்த காலந்தொட்டே கர்நாடக இசையுலகினரை வியப்பில் ஆழ்த்தி வந்திருக்கிறது. அவர்கள் அவரை ஆறத்தழுவி ஏற்றிருக்கிறார்கள் என்பதை அவரது இசை வாழ்வின் நெடும்பயண நிகழ்வுகள் காட்டுகின்றன. இசைஞானி என்று இளையராஜாவுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அளித்த பட்டத்தைக் கர்நாடக இசையுலகின் பிதாமகர் எனத்தக்க செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் சரியென ஒப்பிப் போற்றினார்.

















கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மரபுகளில் வித்வமுள்ள டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இளையராஜாவின் மேதைமையை வியந்துரைக்கும் காணொலி யூடியூபில் இருக்கின்றது. நாட்டுப்புறப் பாடலுக்கான இசையமைப்பில் இளையராஜா கொடுக்கும் கர்நாடக இசை நுட்பங்களை, சங்கதிகளை எண்ணி எண்ணி வியக்கிறார் அவர். சரிதான், கர்நாடக சங்கீதம் என்பதே தொல் தமிழிசையினை வரித்துக்கொண்டு அமைக்கப்பட்டதுதான் என்றே இசை அறிஞர்கள் இயம்புகின்றனர். அது உண்மை எனில், இளையராஜாவின் இசை போதம் என்பது தொல் தமிழிசை மரபின் சாட்சியாக நிற்கும் ஒரு வரலாற்று அதிசயம். அதை நாம் ஆழமாக விளங்கியாக வேண்டும். கர்நாடக சங்கீதம் அவருக்கு அத்தனை இலகுவாக அத்துப்பிடி ஆகிறது என்றால் அவரது நினைவிலி மனம் என்பது தொல் தமிழரின் கூட்டு மனவெளியில் திறந்து கொண்ட ஒரு கதவு என்பதாகத்தான் இருக்க முடியும். மட்டுமன்று, மேற்கத்திய செவ்வியலிசையும் அவருக்கு இலகுவாகக் கைவசமானது என்பதை ஓர்ந்தால், தமிழ்த் தொல்லிசை என்பதே உலக இசைகளுக்கான மூல வடிவமாக இருந்திருக்க வேண்டும் என்பதாகவும் கருதலாம். அப்படி எனில், கர்நாடக ராகங்களைத் தனது பாடல்களில், தமிழ்ப் பாடல்களில்,  இளையராஜா மிக நேர்த்தியாகவும் அதிசயத்தக்கப் படைப்புத் தன்மையிலும் கொண்டு வருகிறார் என்பது உண்மையில் இசையினை அதன் மூல முகவரிக்குத் திருப்புகிறார் என்பதுதான்.

“பண்ணைப் புரத்தான் வந்து – தமிழ்ப்
பண்ணைப் புரந்தான் இன்று”
என்று சொன்னால் அது மிகை அன்று.
      
 இளையராஜாவின் இசை மேதைமையை விளங்கிக் கொள்ள இன்று வேறெங்கும் போக வேண்டியதில்லை, யூடியூபில் அவரது ஒவ்வொரு பாடலுக்கும் பின்னூட்டமாக ரசிகர்கள் தரும் அலசல்களைப் பார்த்தாலே போதும் போலும்.
     
 சாருலதா மணி என்றொரு கர்நாடக இசைக் கலைஞர். ஒவ்வொரு ராகமாக எடுத்துக்கொண்டு அதில் இயற்றப்பெற்ற கீர்த்தனைகளைச் சொல்லிப் பின் திரைப்பாடல்களுக்கும் வருகிறார். நளினகாந்தி என்றோரு கர்நாடக சங்கீத ராகம். பெயருக்கேற்ப மிக மென்மையும் நறுமணமும் கொண்ட ராகம்தான். தியாகராஜர் அந்த ராகத்தில் இயற்றிய “மனவ்யாளகிஞ்ச ராதடே” என்னும் கீர்த்தனை இசையுலகில் ஸுப்ரசித்தம். அந்தக் கீர்த்தனையுடன் அதே ராகத்தில் இளையராஜா உருவாக்கிய “எந்தன் நெஞ்சில் நீங்காத...” என்னும் பாடலினை ஒப்பிட்டு சாருலதா திறனாய்வதைக் காண்க. “உனக்கெனப் பிறந்தவள் நானா... பநிசக ரிமகரி சரிநி சகரிம கரிக… என்னவொரு அழகு! பநிசக... கனிமானவாவதாருடை... அந்த இடத்தைப் பிடிச்சிருக்கார் இளையராஜா. அந்த நளினகாந்தியை… a step by step exploration. Hats off to this Nalinakanthi piece. என்னைப் பொருத்த வரை, ஒரு ப்யூர் நளினகாந்தின்னா திரைப்பட உலகத்துல திகழ்ற ஒரு நளினகாந்தி ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’தான். Hats off to this composition.” என்கிறார் அவர். இளையராஜாவைக் கர்நாடக இசையுலகம் எவ்விடத்தில் வைத்துப் போற்றுகிறது என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக இதனைக் கொள்க.
    
  மதுர சுதா என்றொரு கர்நாடக இசையறிஞர். யூடியூபில் தொடர்ந்து இளையராஜாவின் இசைக்கோர்வைகளைக் கர்நாடக இசையின் அடியாக ஆராய்ந்து அவரது மேதைமையைத் துலக்கிச் சொல்லி வருகிறார். ”Ilayaraja sir… a quantitative analysis of his musical history" என்றெல்லாம் தலைப்பிட்டு அமர்க்களப்படுத்துகிறார். கல்யாணி, ஹம்சத்வனி, கௌளை என்று ஒவ்வொரு ராக வாரியாக அவரின் இசைக் கோர்வைகளைப் பிரித்து மேய்கிறார். இளையராஜாவைக் குறிப்பிடும் போதெல்லாம் “பிரபஞ்ச இசை மையம் இளையராஜா” என்றே சொல்கின்ற அதி தீவிர ரசிகர். ஆனால் இந்த அபிமானம் வெறுமனே குருட்டு ரசனையால் உருவானதல்ல. இசை பற்றிய ஆழ்ந்த அறிவுடைமையால் விளைந்த ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும். இவர் போல் நூற்றுக்கணக்கான இசை அறிஞர்கள் இளையராஜாவைத் திறனாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
     
 இங்கே ஒரு விமரிசனம் நினைவுக்கு வருகிறது. கர்நாடக இசையுலகம் என்பது மேட்டுக்குடியினருக்கானது என்றும் குறிப்பாக பிராமணர்களின் உடைமை என்றும் ஒரு பார்வையுண்டு. அது பெரிதும் உண்மையும் கூட. திருவையாற்றில், பதினைந்து ஆண்டுகள் தியாகையரின் மகோத்ஸவத்தை நேரில் கண்டு வளர்ந்தவன் என்னும் சாட்சியத்தின் அடிப்படையில் இதனை நான் நன்கறிவேன். இளையராஜாவின் மீதான ஒரு விமர்சனம் யாதெனில் அவர் சனாதன மயமாகிவிட்டார் என்பதாம். தமிழிசை அறிஞர் ந.மம்மது அவர்களும்கூட அவ்வாறு வருத்தப்பட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் ஒரு கலை வடிவத்தை அதன் நுட்பமான தளங்கள் வரை வளர்த்தெடுத்துப் பாதுகாத்து வருகிறது, அதனைப் பாதுகாக்கும் வகையிலேயே ஒரு வாழ்முறையை அமைத்துக்கொண்டுள்ளது என்றால் ஆராய்ந்துதான் தன்னுள் பிறரை அனுமதிக்கும் என்பதில் தவறு என்ன? தனது வாழ்முறையை ஏற்றுக்கொண்டோரை உள்ளே வர அனுமதிக்கிறது என்பதில் நியாயமுள்ளதாகவே எனக்குப் படுகிறது. கூடவே, தமிழிசையை வரித்துக்கொண்ட கர்நாடக இசைமரபு இப்படிப் பரிணமித்து வளர்ந்திருக்கிறது எனும்போது அந்த மூலத் தமிழிசை மரபினைத் தமிழர்கள் ஏன் பரிணமிக்கச் செய்யவில்லை என்னும் கேள்வியும் எழுகிறது. அக்கடமையைச் செய்ய மறந்துவிட்டு வரித்தவன் வளர்ந்ததைக் குறை சொல்வது நியாயமன்று அல்லவா?
    
  இதனெதிர், இன்னொரு வகையான விமர்சனமும் கேட்கிறது. அதாவது, இளையராஜா பிராமணராக மாறிவிட்டார், அவர் தான் பிறந்த வர்க்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார். இனி அவர் தாரை தப்பட்டை போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. (ஏன் மேற்கத்திய பாணியில் சிம்ஃபனி அமைத்தார்? ஏன் அவர் ஒரு நூறு பறைகளை வைத்து சிம்ஃபனி செய்யவில்லை? என்னும் கேள்வியை மம்மது எழுப்பியிருந்தார். நல்ல ஆலோசனைதான். ஆனால் மேற்கத்திய பாணியில் சிம்ஃபனி செய்ததைக் குறை சொல்லல் நன்றன்று). இப்படி, இளையராஜாவிடமிருந்து தமிழக நாட்டுப்புற இசையைப் பறித்துவிடவும் முடியாது. அந்த இசையும் அவரது உயிரில் கலந்து கிடக்கிறது என்பதையே அவரின் இசைக்கோர்வைகள் காட்டுகின்றன. உதாரணமாக, “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்னும் பாடல் (”விருமாண்டி”). அப்பாடல் பற்றி விவேக் கோபாலகிருஷ்ணன் என்னும் ரசிகர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பின்னூட்டத்தினை இங்கே தமிழில் தருகிறேன்.

“இளையராஜா ஏன் மெட்ராஸின் மொஸார்ட் அல்லர்?

’கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ என்னும் பாடலினைப் பற்றிப் பேசி இதனை நான் விளக்குகிறேன். மிக அற்புதமான இசைக்கோர்வை இது. ஒருவகையில், தாளக்கட்டுகளால் ஆனதொரு சிம்ஃபனி இது (சிம்ஃபனி என்பது பல்வித பாவனைகளின் அசைவுகளும் வழிகளும் கொண்டதொரு இசைச்சித்திரம்) வயலின், குழல், வீணை போன்ற மெல்லிசைக் கருவிகள் எதுவுமின்றி வெறுமனே தாளக்கருவிகளை மட்டுமே வைத்து அவர் மணியான பாடல்கள் பல செய்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஒரு பாடல் முழுவதிலும் (’வள்ளி’யிலிருந்து ”என்னுள்ளே…” போல) தாளக்கருவி எதனையும் பயன்படுத்தாமல் கிதாரையும் வயலினையும் மாத்திரமே பின்னணியாகக் கொண்டு அமைத்த பாடல்களுமுண்டு.

‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ என்னுமிது ஒரு துலக்கமான நாட்டுப்புறப் பாடல். எனவேதான், நாட்டுப்புறக் கலையில் பயன்படுத்தப்படும் தாளக்கருவிகளை மட்டுமே வைத்து இயலபாக ஒலிக்க விடுவது என்று அவர் முடிவு செய்திருக்க வேண்டும். அவர் இதில் 12 நடைகளை (தாளக்கட்டு / யாப்பு) அமைத்திருக்கிறார், இந்த ஒரு பாடலிலேயே. இது பிரமிப்பாக இல்லையா? என் அறிவிற்கெட்டிய வரை, இதில் ஏழு விதமான தாளக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அவை பறை, தண்டோரா, உருமி, மத்தளங்கள், உடுக்கை, தபலா மற்றும் தவில். தமிழ் நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் முதன்மையான கருவிகளிவை. கதைப்பாடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நடையையும் அதற்கான இசைக்கருவிகளின் அணியையும் இவரின் மேதைமை பயன்படுத்தியுள்ளது. இவற்றுள், ‘மொட்ட கோபுரம் போல...’ எனத் தொடங்கும் பகுதி, கதாநாயகன் குதிரையோட்டிச் செல்லும் இடம் மிகவும் சிறப்பானது. அதில், பறையும் மத்தளமும் தண்டோராவும் ஒலிக்கும் தாளக்கட்டே குதிரையின் ஓட்டத்தினை உணர்த்துவதாகிறது. தூய மேதைமை! நம்ப வேண்டுமெனில் கேட்டுப் பாருங்கள். … … … அதனால்தான், இளையராஜா வேறு எவருடைய நிழலும் அல்லர். இசையின் ராஜா அவர். தனித்த ஒருவர்!”

தாளக்கட்டுக்களில் இளையராஜா அவ்வளவு வகைமைகள் காட்டியதில்லை என்றொருவர் முன்னம் பிதற்றிக் கேட்டிருக்கிறேன். தாளங்களைப் பற்றி அவ்வளவு ஈடுபாடு எனக்கிருப்பதில்லை. ராகங்களில் கரைவதிலேயே நிறைவு காணும் இயல்பு உடையவன் நான். எனினும், விவேக் கோபாலகிருஷ்ணனின் இந்தப் பதிவைப் படித்த பின் தாளக்கட்டுக்களைக் கூர்ந்து கவனிக்கும் தனிச்செவி திறந்தவன் ஆனேன்.

இசைஞானியைப் பற்றிக் கொஞ்சம் எழுதியாயிற்று, அவரது 75வது பிறந்த நாளுக்கான பதிவு என்று வைத்துக்கொள்ள. இத்துடன் அமைகிறேன்.

No comments:

Post a Comment