Saturday, November 10, 2018

எம்-பதி

















பிறர் நலம் பேணுதல் என்பது அனைத்துச் சமயங்களும் சொல்லும் அறம்.

தனியுடைமை ஒழித்துப் பொதுவுடைமை ஆக்க விழையும் சித்தாந்தமும்கூட ‘சுயநலம் அறு, பொதுநலம் ஆற்று’ என்றே கூறுகிறது.

”எவ்வுயிர்க்கும் செந்தண்மை” என்னும் பார்வையை முன் வைக்கும் திருவள்ளுவர், “அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை?” (திருக்குறள்:315) என்று கேட்கிறார். இதனை ஆங்கிலத்தில் Empathy என்றுரைப்பர்.

பிறர் என்னும் சொல் முதலில் குறிப்பது அண்டை வீட்டாரை என்று கருதலாம். இறைவன் மனிதர்க்கு விதித்த கட்டளைகளுள் முதன்மையானவை எவை என்பது பற்றி பைபிள் சொல்வதைக் காண்க:

”ஆசானே! இறைச்சட்டத்தில் மிகவும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டான்.

ஏசு அவனிடம் கூறினார், ‘உன் ரட்சகனாகிய இறைவனை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும், உன் முழு மனதோடும் நேசிப்பாயாக. இதுவே முதலும் முதன்மையுமான கட்டளை. இரண்டாம் கட்டளை இது: ‘உன்னையே நீ நேசிப்பது போல் உன் அண்டைவீட்டாரை நேசிப்பாயாக’. இவ்விரு கட்டளைகளில் அனைத்து இறைச்சட்டமும் அனைத்து இறைத்தூதர்களின் போதனையும் அடங்கிவிட்டது” (மத்தேயு: 22:36-40).
      
 இஸ்லாம் என்பது என்ன? என்னும் கேள்விக்கு மிகச் சுருக்கமாக ஒரு விளக்கம் சொல்லப்படுவதுண்டு: “இறைவனை வணங்கி வாழ்வோம்; மனிதருடன் இணங்கி வாழ்வோம்”. இதனை அழகு தமிழில் இப்படி யார் கோர்வை செய்து சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வாசகம் பைபிள் சொல்லும் இரண்டு பிரதான இறைக்கட்டளைகளுடன் அப்படியே பொருந்திப் போகிறது.
     
 ஏசுநாதர் மூன்றாண்டுகளில் சுருங்கச் சொன்ன செய்திகளை எல்லாம் இருபத்தி மூன்றாண்டுகளில் விரித்துரைத்து வாழ்வியல் வடிவம் தந்த தேற்றவாளர் ஆன நபிகள் நாயகம் அவர்கள் அண்டை அயலார் மீது அன்பு செலுத்துதல் குறித்துப் பேசிய அருள்மொழிகள் உண்டு.
    
  ”தன் அண்டை வீட்டார் பசித்திருக்க தனது வயிறு நிறைய உண்பவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் அல்லன்” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்; நூல்: சஹீஹ் அதபல் முஃப்ரத்: 112) 

      ”இறைவனையும் தீர்ப்பு நாளையும் நம்புபவர் அண்டை வீட்டாரிடம் அன்பு கூர்க, விருந்தினரை கண்ணியம் செய்க, நன்மையே பேசுக அல்லது மௌனம் காக்க” என்று நபிகள் நாயகம் அருளினார்கள் (அறிவிப்பாளர்: அபூ ஷுரைஹ்; நூல்: சஹீஹ் முஸ்லிம்: 1:78).
      அபூதர் என்னும் தோழரிடம் நபிகள் நாயகம் சொன்னார்கள், “அபூதரே! நீ எப்போது வீட்டில் ஆனம் காய்ச்சினாலும் அதில் நீர் விட்டுக் கலந்து உன் அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து கொடுப்பீராக!” (நூல்: சஹீஹ் முஸ்லிம்: 6357). அபூதர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார் என்பதையும் இந்நபிமொழி காட்டுகிறது. அதனால்தான் நீர் விட்டுக் கலந்து பகிரும்படிச் சொன்னார்கள். வறுமையில் செம்மை என்பதற்கு இதுவுமொரு அடையாளம் அல்லவா?

      அக்காலத்தில், வீடுகள் ஒன்றை ஒன்று ஒட்டினாற்போல் பொதுச் சுவர் வைத்துக் கட்டப்படுவதுண்டு. எனவே, “உங்களில் எவரும் தனது அண்டை வீட்டார் உங்கள் சுவரில் மர உத்திரம் பொருத்துவதைத் தடுக்க வேண்டாம்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா; நூல்: சஹீஹ் புகாரி 43:643).

      அண்டை வீட்டார் நல்லவர்களாக இருந்துவிட்டால் அவர்களை நேசிப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. அவர்கள் நமக்குத் தீமை செய்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? என்றொரு கேள்வி எழுகிறது. அவரவர் மனப் பக்குவத்திற்கேற்பவே எதிர்வினை அமையும்.

      இறைவனால் நேசிக்கப்படும் மூவரில் ஒருவர், அவரது அண்டை வீட்டான் செய்யும் தீமைகளைச் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பவர் என்று நபிகள் நாயகம் அடையாளம் காட்டினார்கள் (அறிவிப்பாளர்: அபூதர்; நூற்கள்: அஹ்மத், திப்ரானி)

பிறர் உனக்குத் துன்பம் செய்து, அதற்காக அவரை நீ தண்டிக்க நாடினால், அவர் வெட்கப்படுமாறு அவருக்கு நயமாக நன்மை செய்துவிடு என்கிறார் திருவள்ளுவர்.

“பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்று பாரதியும் பாடக் கேட்கிறோம்.

அண்டை வீட்டாரை நேசிப்பதை இறைக்கட்டளை என்று நவின்ற ஏசுநாதர் பகைவர்களையும் நேசிக்கச் சொல்கிறார். ”’அண்டை வீட்டாரை நேசி; பகைவர்களை வெறுப்பாயாக’ என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ‘பகைவர்களை நேசிப்பீர்; உமக்குத் தீமை செய்வோருக்காகப் பிரார்த்திப்பீர்’” (மத்தேயு: 5:43)























தனது கவித்துவமான வரிகளால் ஆழமான ஞானங்களைத் தீட்டிய கலீல் ஜிப்ரான் எழுதிய அற்புதமான நூற்களுள் ஒன்று “Jesus – The Son of Man” (மனிதகுமாரன் ஏசு). அந்நூலில் பீட்டரின் வாய்மொழியாய் அமைந்ததொரு அத்தியாயத்தில் ஏசுநாதர் இப்படிப் பேசுகிறார்:

”உனது அண்டைவீட்டார் என்பவர் சுவருக்கு அப்பக்கம் வசிக்கும் உனது இன்னொரு சுயம்தான். இதை நீ விளங்கும்போது, பிரிக்கும் சுவர் விழுந்துபோகும்.

“உமது அண்டைவீட்டார் என்பவர் இன்னொரு தேகத்தை உடுத்திய உமது சிறந்த சுயமே என்பதை அறிபவர் யார்? உன்னை நீயே நேசிப்பது போல் அவரையும் நேசிப்பாயாக.

“அவரும் நீ அறியாத மேலான இறைவனின் மற்றொரு வெளிப்பாடே.”

இந்த நிலை மிகவும் மேலான ஞானம் கொண்டோரின் நிலையாகும். சராசரி மனிதர்களுக்கான வாழ்வியல் அறிவுரை அல்ல. எனினும், இத்தகு மேனிலைகளை எட்டுவதற்கான பயிற்சியே உண்மையான சமய வாழ்வு அல்லவா?





















கலீல் ஜிப்ரான் முன் வைக்கும் பார்வையிலிருந்து ஒரு படி மேலே ஏறி நின்று முத்தாய்ப்பாகப் பேசுகிறார் ரமண மகரிஷி. மின்னல் வெட்டுவது போல், சுருக்கமாகவும் வெளிச்சமாகவும் உள்ள ஞான தரிசனம் அது. அந்த உரையாடல் இது:
”பிறருடன் எப்படி நடந்துகொளவது?”
“பிறர் என்பதில்லை”.

No comments:

Post a Comment